💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 52
அகி கேட்ட விடயத்தில் அதிர்ந்து தான் போனான் சத்ய ஜீவா. அவனிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
“என்னை கூட்டிட்டுப் போய் அந்த அநாதை ஆசிரமத்தில் விட்டுட்டு வர்றீங்களா?” என்று கேட்டிருந்தான் அகிலன்.
அதை சொன்னவனுக்கு வலித்ததோ இல்லையோ, கேட்டவனுக்கு இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்று வலித்தது.
ஜனனியும் அதிர்ந்து போய் “அகீஈஈ” என்று அவனைப் பார்த்து அலறினாள்.
“என்னை நீங்க இதுக்காகத் தானே அங்கு கூட்டிட்டு போனீங்க? என்னைப் பேசாம அங்கேயே விட்டிருக்கலாம். எதுக்காக இந்த கூட்டிட்டு வந்தீங்க? இப்போ யுகி அழுகிறான், கோபமா இருக்கான். இது எல்லாத்துக்கும் நான் தானே காரணம்?” என்று சத்யாவிடம் சொல்லி விட்டு ஜனனியை ஏறிட்டு “இனிமே நீங்க என் கிட்ட வராதீங்க” என்றான்.
“இல்ல அகி! அப்படி எல்லாம் பேசக் கூடாது. நான் உன் கிட்ட வருவேன். நீ என் பையன் அகி” என்று அவள் கூற, அகிலனின் பார்வை சத்யாவின் மீது படிந்தது.
அவனுக்கு பேசுவதற்கு ஒரு வார்த்தை வரவில்லை. ஓவெனக் கதறி அழ வேண்டும் போல் இருந்தது. அந்தப் பிஞ்சு மனதில் அவன் செய்த காரியம் இவ்வளவு ஆழமாக பதிந்து விட்டதே?
அதற்கு அவன் என்ன தான் செய்வது? நடந்ததை மாற்றவா முடியும்? ஆனால் அதனை அவன் மனதில் இருந்து அழித்து, தனது பாசத்தை அதனுள் விதைத்து, அவனை எவ்வாறு மீட்டுக் கொள்வது? தந்தை எனும் உறவை தன் அன்பு மகனின் உள்ளத்தில் எப்படி பதிப்பது என்று ஒன்றும் புரியாமல் தலை சுற்றிப் போனான்.
அவன் செய்த காரியத்தின் விளைவு இப்போது புரிந்தது. ஆழம் அறியாமல் காலை விடாதே என்பது எத்தனை நிதர்சனம்? ஆனால் அவன் ஆழம் அறிந்தும் காலை விட்டானே?
யுகிக்காக அவன் செய்தான். ஆனால் இப்போது யுகியும் சந்தோஷமாக இல்லை, அகியும் சந்தோஷமாக இல்லை. அகிலனின் மனதில் கரும்புள்ளியாக தான் செய்த காரியம் பதிந்து விட்டதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது போனது.
தான் அப்படிச் செய்ததற்கான காரணத்தையும் இந்தப் பாலகன் அறிந்து வைத்திருக்கின்றானே? அதனால் தானே இந்தக் குடும்பத்தில் அவனால் பிரச்சனை வேண்டாம் என்று அவனை விட்டு விடச் சொல்கிறான்? இப்படிப்பட்ட மனம் யாருக்கு வரும்?
மொத்த அன்பும் தனக்கே வேண்டும் என்று அவன் கேட்டான் இல்லை. இப்படிப்பட்ட ஒருவனை தான் வருத்தி விட்டோமே என்று அவனுக்கு வேதனையாக இருந்தது.
அகிலனை நெருங்கிய சத்யா “இல்ல அகி. நான் உன்னை இனிமே எங்கேயும் விட மாட்டேன். நீ என் பையன், இந்த வீட்டுப் பையன். யுகி எப்படியோ நீயும் அப்படித் தான்.
யுகிக்குக் கிடைக்கிற அன்பு உட்பட எல்லாம் உனக்கும் கிடைக்கும். அதை நீ மறுக்க முடியாது, விலகவும் முடியாது. நான் அப்படி விட மாட்டேன் அகி. இனிமே உன்னை நான் நல்லா பார்த்துப்பேன். அன்னிக்கு நான் செஞ்ச காரியத்தோட விளைவை உணர்ந்துட்டேன். இனி அதை சரி செய்ய வேண்டியது என்னோட பொறுப்பு” அவனை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தம் பதித்து விட்டு அறையை விட்டு வெளியேறினான்.
“அகி! உனக்கு புரிஞ்சதுல்ல. யுகிக்காக தானே அவர் அப்படி பண்ணுனார். அது உனக்கும் புரியுதுல்ல. அதுக்காக அவருக்கு உன் மேல பாசம் இல்லை என்று அர்த்தமில்லை.
யுகியைப் போலவே அகி மேலேயும் அவருக்கு ரொம்ப பாசம் இருக்கு. அவர் தான் உன் டாடி. என்னை மாதிரியே, இல்ல.. என்னை விடவும் அவர் உன் மேல பாசமா இருக்கார். இனிமேல் அப்படித்தான் இருப்பார்.
யுகியும் சீக்கிரமே சரியாகிடுவான். எல்லாமே சரியாகும். நீ இனிமே சந்தோஷமா இருக்கனும். இந்த வீட்டை விட்டுப் போகணும்னு நினைக்கவே கூடாது. எனக்கு ப்ராமிஸ் பண்ணு! இனிமே நீ இப்படி பேசக் கூடாது” என்ற ஜனனியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“சாரி ஜானு! நான் இனிமே அப்படி பேச மாட்டேன். அது உங்களுக்கு கஷ்டமா இருக்குல்ல. என்னால எல்லாரும் கஷ்டப்படுறாங்க என்று நான் அப்படி சொன்னேன். எனக்கு உங்களை விட்டுப் போக மனசே இல்ல. எனக்கு யுகிய ரொம்ப பிடிக்கும் ஜானு. அவனுக்கும் என்ன பிடிக்கும் இல்ல?” என்று கேட்க,
“எஸ் டா கண்டிப்பா. அவனுக்கு உன்னைப் பிடிக்கும். உன்னை அவன் சீக்கிரமே புரிஞ்சுப்பான். அது வரைக்கும் நீ இருக்கனும். அழக்கூடாது தங்கம். நீ அழுததால அவனும் அழுதானே. அதனால நீ இனிமே அழாத.
அவன் கோபப்படுவான் தான். ஆனாலும் அவனுக்கு எல்லார் மேலேயும் பாசம் இருக்கு. உன் மேல எல்லாரையும் விட ஒரு நாள் அவன் தான் பாசமா இருக்கப் போறான். அதுவரைக்கும் வெயிட் பண்ணு. லவ் யூ செல்லம்” அவனது கன்னத்தை வருட,
“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஜானு” பிஞ்சுக் கரங்களால் ஜனனியை இறுகப் பற்றிக் கொண்டான் அகி.
சத்யாவைத் தேடிச் சென்ற ஜனனிக்கு அவன் தலையில் கை வைத்து உட்கார்ந்து இருப்பதே காணக் கிடைத்தது. அவன் தலை தூக்கிப் பார்க்க, இருவரின் வலியோடு சேர்ந்த பார்வைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டன.
யுகனின் விலகல் ஜனனியை பாதித்தது என்றால், அகிலனின் விலகல் சத்யாவைப் பாதித்தது. கிட்டத்தட்ட இருவர் நிலையும் ஒன்று தானே? ஒரே மாதிரியான துன்பத்தில் இருப்பவருக்கு மற்றவர் மனநிலை நன்கு புரியும் அல்லவா?
இதுவும் அப்படித் தான் இருந்தது. ஜனனி தவிப்போடு அவனைப் பார்க்க, கண்களை மூடித் திறந்தவனோ “எல்லாமே மாறும்னு நம்புவோம் ஜானு” என்றான்.
அவனது அந்த வார்த்தை ஜனனிக்குப் போதுமாக இருக்க, அவனைப் பார்த்தவள் கண்களில் ஒருவித ஆறுதல் தெரிந்தது.
…………..
அஷோக்குடன் பைக்கில் வந்து இறங்கினாள் வினிதா. தேவனின் விழிகளோ அவளை விழித்தன.
“நான் போயிட்டு வர்றேன் பேபிமா” என்று அவன் சொல்ல, “சரி அஷோக்” கையசைத்து விடை கொடுத்தாள் அவள்.
தன் மீது பார்வையில் நெருப்பைக் கக்கிய தேவனை நோக்கி “என்ன பார்வை?” புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“அது ஒன்னும் இல்ல வினிதா! இன்னிக்காவது தனியா வருவியோனு நெனைச்சு பார்த்தேன்” என்று அவள் சொல்ல,
“நான் அஷோக் கூட வருவேன்னு உனக்கு தெரியும்ல. அப்பறம் என்ன நினைப்பு?” என்று வினவினாள்.
“ஓ அப்படியா? நான் நிரா கூட வந்தா மட்டும் நீ சண்டை பிடிப்ப. நீ பண்ணுனா அது வழக்கம். நல்லா இருக்குமா உன் நியாயம்”
“இப்போ என்ன உனக்கு? என் கூட சண்டை பிடிக்கனும்னு கிளம்பி வந்து இருக்கியா?” என்று அவள் முறைக்க, “உன்னைக் கேட்டா கோபம் பத்திக்கிட்டு வருதோ?” தேவன் பதிலுக்கு எகிற,
“எனக்கு சண்டை பிடிக்கிற மூட் இல்லவே இல்ல. ப்ளீஸ் தேவன் போயிடு”
“ஓஹ்ஹோ! தேவ் இப்போ தேவன் ஆகிட்டேனா? அந்த அளவுக்கு போயிடுச்சா?” என்று அவன் கேட்கவும், “உனக்கு என்ன தான் வேணும்?” கோபமாகக் கத்தி விட்டாள் வினிதா.
அவனுக்கு முகம் மாற அங்கிருந்து சென்று விட்டான். அவளுக்கும் முகம் வாடியது.
“அய்யோ! ஏன் தான் இப்படி பண்ணுறேனோ தெரியல” தலையில் கை வைத்துக் கொண்டவளோ ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
மாணவர்களுக்கு பாக்ஸிங் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த தேவனின் விழிகளோ அடிக்கடி வினிதாவைத் தான் நோக்கிக் கொண்டிருந்தன. அவள் சோர்வுடன் அமர்ந்திருந்தாள். அருகில் சென்று என்னவென்று கேட்கத் தோன்றினாலும், அதற்கும் பாய்ந்து விழுவாளோ என்று அமைதியாக இருந்தான்.
அவள் மீது எவ்வளவு கோபம் இருப்பினும், நேசமும் இருக்கின்றது அல்லவா? அதனை அவனால் மறுக்க முடியவில்லை.
வேலையை முடித்துக் கொண்டு அவள் அருகில் சென்றவனோ, “நீ வீட்டுக்கு போறியா?” என்று கேட்க, “ஏன்? உனக்கு என்ன பார்த்துட்டு இருக்க முடியலையா? அவ்ளோ எரிச்சலா இருக்கா என் மேல் உனக்கு?” என்று கேட்டவளின் விழிகள் கலங்கி இருந்தன.
“வா” என்று அவளது கையைப் பிடித்து பைக்கின் அருகே அழைத்துச் சென்றான்.
“என்னை எங்கே கூட்டிட்டு போற?” ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.
“சத்தம் போடாம வா வினி” என்று அவன் பைக்கில் அமர, அவனது கட்டளைக்கு அடிபணிந்தவளாய் பைக்கில் அமர்ந்தவள் மறு நொடி சட்டென இறங்கிக் கொண்டாள்.
“என்னாச்சு?”
“என்னால உன் கூட வர முடியாது தேவ்” என்றவளின் பதிலில் அவனுக்கு உள்ளுக்குள் எரிந்தது.
“அந்த அஷோக் கூட மட்டும் போற. என் கூட வர உனக்கு கசக்குதா?” அவன் கோபமாகக் கேட்க, “என் நிலமையைப் புரிஞ்சுக்க தேவ். என்னால உன் கூட வர முடியாது. அப்படி வந்தேனா இனிமே நான் இங்கே எப்போவும் வர முடியாது” என்று சொல்ல, அவனுக்கு ஏதோ மர்மமாக இருந்தது.
பைக்கில் இருந்து இறங்கியவன் “சரி. உள்ளே வா” என்று அங்கிருந்த ஓய்வறைக்கு அவளை அழைத்துச் சென்றான்.
“இப்படி உட்கார்ந்துக்க. இன்னிக்கு உனக்கு உடம்பு சரியில்லைனு எனக்குப் புரியுது. இப்படி இருந்தா லீவ் எடுத்துக்க. நீ இங்கே வந்தாலும் உன்னால் ஒழுங்கா வேலை செய்ய முடியுமா? முடியாதுல்ல.
அப்படி இருக்கும் போது எதுக்கு வரனும்? வீட்ல இருந்து ரெஸ்ட் எடுக்கலாம்ல. வர முடியாதுன்னு ஒரு கால் பண்ணி சொன்னா போதும். இங்கே வந்து கஷ்டப்படத் தேவையில்லை. உன்னை இப்படி பார்க்க முடியல டி” அவன் முகத்தில் கடுமை இல்லை, மாறாக இறங்கி ஒலித்தது அவன் குரல்.
அவளுக்கு அவனது அன்பில் மனம் கசிந்தது. அவனையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்கு உடம்பு சரியில்லை என்பதை அவன் உணர்கிறானே என்பது இதமாக இருந்தது.
“எனக்காக ஒன்னே ஒன்னு செய்றியா?” அவள் சோர்வாகக் கேட்க” ஒன்றும் பேசாமல் அவளது அருகில் அமர்ந்து கொண்டான்.
அதனைத் தானே அவள் வேண்டியது? அவனது கையைப் பிடித்துக் கொண்டவளுக்கு கண்களில் கண்ணீர் கசிந்தது. தன் கையில் விழுந்த கண்ணீர்த் துளியை உணர்ந்தவனோ வெடுக்கென அவளைப் பார்க்க,
வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு “ஒன்னும் இல்ல தேவ்! உடம்பு சரியில்லைல்ல அதான்” என்று சொல்லியவளைக் கூர்ந்து பார்த்தான்.
“உனக்கு ஏதாவது பிரச்சினையா வினி?” அவளை ஆழ்ந்து பார்த்தவாறே வினவினான்.
மறுப்பாக தலையசைத்தவள் “நோ அய்ம் ஓகே! நீ இப்படி என் கிட்ட அன்பா பேசவும் எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. பழையது எல்லாம் நினைவு வந்துடுச்சு. மத்தபடி வேற ஒன்னும் இல்ல” என்று சொல்ல, அதனை அவன் மனம் நம்பத் தயாராக இல்லை .
ஆனால் இப்போது இருக்கும் நிலையில் எதையும் கேட்க வேண்டாம் என நினைத்து, “ஓகே” என்று தலையசைத்து, அவளது கை மீது தனது கையை வைத்தான்.
“ஒன்னும் யோசிக்காதே” அவளுக்கு ஆட்டோ பிடித்துக் கொடுக்கப் போக வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.
சரி என்றவனும் தனது அலைபேசியில் இருந்து அஷோக்கிற்கு அழைப்பு விடுத்தான். சற்று நேரத்தில் அவன் வந்து விட்டான்.
“என்னாச்சு வினி? ஏதாவது ப்ராப்ளமா?” என பதற்றமாகக் கேட்க, “உங்க ப்ரெண்டுக்கு உடம்பு சரியில்ல. அது கூட தெரியாம கூட்டிட்டு வருவீங்களா? அப்படி உடம்பு சரியில்லாமல் இனி ஒரு நாள் கூட்டிட்டு வந்தா அப்புறம் நடக்கிறதே வேற” என்று கோபமாக சொன்னான் தேவன்.
“அவளுக்கு என்னனு எனக்கு எப்படி தெரியும்? கூட்டிட்டு போக சொன்னதும் வந்தேன். என்னை எதுக்கு திட்டுறீங்க?” என்றபடி வினியை அழைத்துக் கொண்டு செல்ல, அவளின் பார்வை ஒருவித தவிப்போடு தேவனைத் தீண்டியது.
“டேக் கேர் வினி” என்று சொன்ன தேவனின் குரலில் தெறித்த அன்பு அவள் மனதை மயிலிறகால் வருடியது.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி