53. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(6)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 53

 

அகிலனின் விழிகள் வாயிலை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தன. அங்குமிங்கும் உலவுவதும் வருவதுமாக இருந்தான்.

 

ஜனனி பாலர் பாடசாலை சென்றிருந்தாள். சத்யா வேலை விடயமாக வெளியில் சென்றிருந்தான். தேவனும் வீட்டில் இல்லை. 

 

மேகலை சமைத்துக் கொண்டிருக்க, மாடியில் இருந்து வந்த யுகனின் பார்வை அகி மீது படிந்தது.

 

“எங்க போயிட்டீங்க?” என்று அகி பேச, “யார் கூட பேசிட்டு இருக்க?” தனையறியாது கேட்டு விட்டான் யுகி.

 

அவனது குரலில் திரும்பிப் பார்த்தவன் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக நிற்க, “கேட்டா பதில் சொல்லு” என்றான் யுகன்.

 

“யாரும் இல்லையே” என்று அவன் தோளைக் குலுக்க, “நான் வரும் போது தனியா பேசிட்டு இருந்தியே. அங்கே பேய் எதுவும் இருக்கா?” என்று வாயிலை எட்டிப் பார்க்க,

 

“அய்யோ பேயா?” கத்தியவாறு வந்து யுகனை அணைத்துக் கொண்டான் அகி.

 

உடன் பிறந்தவனின் இந்த செயலை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீர் அணைப்பில் அவனது கைகள் தானாக அணைக்கச் சென்றன.

 

அதை உணர்ந்தவனாய் “தள்ளிப் போ. நான் சும்மா சொன்னேன். பேய்லாம் ஒன்னும் இல்ல” அவனை விலக்கப் பார்க்க,

 

“முடியாது. எனக்கு பயமா இருக்கு” இன்னும் இறுக்கமாக அவனைப் பிடித்துக் கொள்ள, அங்கு வந்த சத்யாவுக்கோ இருவரையும் பார்க்க அழகாக இருந்தது.

 

“பேய் பேய்” என்று யுகி சிரிக்க, “போக சொல்லு யுகி. பயமா இருக்கு” அவனை மேலும் இறுக்கிக் கொண்டான் அகி.

 

தனது தோளை ஒரு கரம் தொட, “அய்யோ பேய்” திடுக்கிட்டுத் திரும்பினான் சத்யா.

 

“பேய் இல்ல. அய்ம் ஜனனி” சுய அறிமுகம் செய்து கொண்டவளை ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளினான் அவன்.

 

“என்ன முறைப்பு?”

 

“அறிவில்லையா உனக்கு? திடுமுன்னு பின்னால வந்து கை வெச்சா பயம் வராதா மனுஷனுக்கு?” என்று கேட்க, “ஓஓ! நீங்களும் பேயின்னா பயமா? அகி அப்படியே உங்களைப் போல” என்று அவள் கூற,

 

“எனக்கு அதெல்லாம் பயம் இல்லை. யாரும் இல்லாம திடீர்னு தொட்டா ஒரு மாதிரி ஆகும்ல. அதான் இது” இன்னும் முறைப்போடு பார்த்தான்.

 

“உங்களுக்கு தான் அறிவில்ல. யுகியும் அகியும் கட்டிக்கிட்டு பார்க்க கியூட்டா இருக்காங்களே. அவங்களை ரசிச்சு பார்க்கனும்னு நினைக்கிறீங்களா? அதை விட்டுட்டு இத்துப்போன விஷயத்தை இழுத்துப் பிடிச்சு முறைச்சுட்டு இருக்கீங்க” அவளும் பதிலுக்கு முறைப்பை வழங்கினாள்.

 

“ஆமா! நீ வந்து கூத்து போட்டுட்டு என்னைச் சொல்லு” என்றவனோ மகன்கள் மீது பார்வையைச் செலுத்த, ஜனனி அவர்களைப் புகைப்படம் எடுத்தாள்.

 

“உன் ஜானு வந்துட்டாங்க. போய் பாரு” ஜனனியைக் கண்டதும் யுகன் சொல்ல, “நீ பொய் சொல்லுற. எனக்கு பயமா இருக்கு” கண்களைத் திறவாமல் நின்றான் அவன்.

 

“வந்து கூப்பிடுங்க” யுகி அவளை அழைக்க, உள்ளே நுழைந்தவளோ “அகி” என்றழைத்தாள்.

 

கண்களைத் திறந்து “ஜானூஊஊஊ” ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டான் அகிலன்.

 

யுகனின் பார்வை அவர்கள் மீது ஒரு நொடி படிந்து மீண்டது. மறு நொடி தன்னை நோக்கி கை விரித்த தந்தையிடம் ஓடிச் சென்று அவனது அணைப்பினுள் சரணடைந்தான்.

 

“என் செல்லமே” ஜனனி அகியின் தலை வருட, “ஏன் ரொம்ப நேரமாச்சு? நீங்க வரும் வரை பார்த்துட்டே இருந்தேன்” என்றவனின் அன்பில் உருகியது அவள் நெஞ்சம்.

 

“இன்னிக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு அகி. பசங்களுக்கு டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணுனோம். உங்களுக்கும் சொல்லித் தர்றேன்” என்று அவள் சொல்ல,

 

“ஜாலி ஜாலி” துள்ளிக் குதித்தான் அகிலன்.

 

“டாடி! நீங்க எனக்கு டான்ஸ் கத்து தாங்க” யுகி சொல்ல, “டாடிக்கு டான்ஸ் பண்ண வராது கண்ணா” நெஞ்சில் கை வைத்தான் சத்யா.

 

“அப்போ உங்க டாடிக்கும் சேர்த்து ஜானு சொல்லித் தருவாங்க. ஓகே தானே?” அகி கேட்டதும், பக்கென சிரித்து விட்டாள் ஜனனி.

 

“எனக்கு டான்ஸ்லாம் அத்துப்படி. அவன் கிட்டிருந்து தப்பிக்க சொன்னா நீ என்னை கலாய்க்கிறியா?” என்று சத்யா முறைக்க, “பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா டாடி? இன்னிக்கு நீங்க டான்ஸ் பண்ணி தான் ஆகனும்” என்று அவனை இழுத்துக் கொண்டு வந்தான் யுகன்.

 

“நோ! என்னால முடியாது டா. விட்று அகி” என்று அலறிய சத்யாவை இருவரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

 

“ஜானு பாட்டைப் போடுங்க” என்று அகி சொல்ல, ஒரு ‘அச்சோ அச்சோ அச்சச்சோ’ பாடலை ஒலிக்க விட்டு அமர்ந்து கொண்டாள் அவள்.

 

“நர்சரி பாட்டுனு சொல்லிட்டு இப்படி பண்ணுறீங்க? இதுக்கு எப்படி டான்ஸ் பண்ணுறது?” சத்யா உதட்டைப் பிதுக்க,

 

“அதெல்லாம் முடியும். லெட்ஸ் டான்ஸ் டாடி” என்று யுகி அவனை ஆட வைக்க, வேறு வழியின்றி இடுப்பில் கை வைத்து அவர்கள் சொன்னபடி ஆடிய சத்யாவைக் கண்டு ஜனனி சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டுத் தான் போனாள்.

 

ஆடி முடித்து வந்து, “ஏய் சிரிக்காத” என்றவனுக்கு அவளது சிரிப்பில் காண்டானது.

 

“சிரிக்காம இருக்க முடியுமா? அதுவா வருது. வந்தா சிரிச்சிடனும். நெஜமா எனக்கு இன்னிக்கு சிரிப்பு சிரிப்பா வருதுங்க. நான் என்ன பண்ணட்டும்?” அடக்கப்பட்ட சிரிப்போடு கேட்டவளின் காதைத் திருகி விட்டான் சத்யா.

 

“ஆவ்ச்சு” என்று முகம் சுருக்கி அலற, அப்போதே அவனுக்கு தான் செய்த காரியம் புரிந்தது.

 

“சாரி சாரி ஜானு. ஏதோ வேகத்தில் அப்படி பண்ணிட்டேன்” என்று சொல்ல, “வேணும்னே பண்ணிட்டு சாரி கேட்க வராதீங்க” இதழ் சுளித்தாள் மங்கை.

 

“ஜானுவை எதுக்கு அப்படி பண்ணுனீங்க. வலிக்கும்ல?” என்று அகி கேட்க, “தெரியாம பண்ணிட்டேன் அகி” தவறு செய்த குழந்தை போல் விழித்தான் தகப்பன்.

 

“அதெல்லாம் முடியாது. வலிச்சா என்ன பண்ணனும் தெரியுமா?” என்று அகிலன் கேட்க, “டாடி ஒன்னும் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. நீ சும்மா எதுவும் சொல்லாத” யுகி இடைபுகுந்தான்.

 

“யுகி கொஞ்சம் இரு. என்ன சொல்ல வர்றான்னு கேட்கலாம்ல?” யுகியை அடக்கியவன், “இப்போ நான் என்ன பண்ணனுமாம்? சாரி கேட்கனுமா? தோப்புக்கரணம் போடனுமா? உங்க ஜானுவோட காதுக்கு ஆயில் தேய்ச்சு விடனுமா?” என்று கேட்டவனுக்கோ அகியோடு சகஜமாகப் பேசுவது பெரும் மகிழ்வைக் கொடுத்தது.

 

“இல்ல! வலிச்ச இடத்துக்கு உம்மா கொடுக்கனும்” அவன் சொன்னதைக் கேட்ட சத்யா “எதேஏஏஏ…??” நெஞ்சில் கை வைத்த அதிர்ந்து போக, ஜனனியும் அதிர்ச்சி மாறாமல் நின்றாள்.

 

“உம்மாவா? என்ன அகி உப்புமா மாதிரி அசால்டா சொல்லுற?” 

 

“அதெல்லாம் கொடுக்க கூடாது. டாடி எனக்கு மட்டும் தான் கிஸ் பண்ணுவார். வேறு யாருக்கும் தர நான் விட மாட்டேன்” என்ற யுகி சத்யாவின் வாயைத் தன் கையால் மூடிக் கொள்ள, அவனோ விரிந்த விழி மூடாமல் ஜனனியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“இப்படி தான் பண்ணனும். அன்னைக்கு என் கால் வலிச்சப்போ ஜானு கால்ல முத்தம் கொடுத்தாங்க. உடனே சரியாயிடுச்சு. கையில காயம் வந்த நேரமும் அப்படி தான் செஞ்சாங்க. அதனால அவங்களோட காதுக்கு உம்மா கொடுத்தா எல்லாம் சரியாகிடும்” மழலை மாறாத மொழியில் உரைத்தான் அகிலன்.

 

“அகி! அப்படிலாம் வேணாம். எனக்கு வலிக்கவே இல்ல தங்கம்” என்று பயந்து போய் சொன்னாள் ஜனனி.

 

சத்யாவுக்கு அவளது பதற்றத்தைப் பார்க்க கிளுகிளுப்பாக இருந்தது. உடனே மூளையில் மின்னல் வெட்ட “ஆங் உம்மா கொடுக்கலாமே அகி” என்று அவன் சொன்னதும்,

 

“அய்யய்யோ வேண்டாம்” முட்டைக் கண்களை விரித்து வேண்டாம் என்பதாக தலையை ஆட்டினாள்.

 

“இப்போ எதுக்காக ஓகே சொன்னீங்க? மூளை கீளை கழண்டு போச்சா உங்களுக்கு?” அவனது காதை நெருங்கி ரகசிய குரலில் சீற,

 

“என்னை மட்டும் டான்ஸ் பண்ண வெச்சு வேடிக்கை பார்த்தல்ல, கெக்க பெக்கேனு சிரிக்கல? அதுக்கு நான் பழி வாங்க வேணாமா?” என்று கேட்டவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள்.

 

“அதுவும் இதுவும் ஒன்னா? என்ன விளையாடுறீங்களா?” முறைப்போடு கேட்டாலும், அவள் குரலில் ஒருவித தடுமாற்றம்.

 

“விளையாடல. அகிக்காக இதை பண்ணப் போறேன்” என்று அவன் சொல்ல, “அகிக்காகன்னா அகிக்கு அள்ளி அள்ளி முத்தம் கொடுங்க ஓகே. எனக்கு தர வேண்டாம்” என்றாள் முகத்தைத் திருப்பிக் கொண்டு.

 

“நான் ஒன்னும் ஆசையில் தரப் போகல. அவன் சொன்னானேனு செய்யப் போறேன்” அவளின் முகம் போன போக்கைக் கண்டு அவனுக்கு சிரிப்பு பொங்கியது.

 

“டாடி! நான் கிஸ் பண்ண விட மாட்டேன். நான் உங்க கூட பேசவே மாட்டேன்” யுகி அவனது கழுத்தைக் கட்டிக் கொள்ள,

 

“நான் உம்மா கொடுத்தா என் தாடி குத்தி ஜானுவோட காது இன்னும் வலிக்கும். பாவம்ல அவங்க?” சத்யா அகியிடம் சொல்ல, “ஆமால்ல. அப்போ வேண்டாம்” நல்ல பிள்ளை போல் தலையை ஆட்டினான் சின்னவன்.

 

“டாடி என்னைத் தவிர யாருக்கும் உம்மா கொடுக்க மாட்டார்னு சொன்னேன்ல. பார்த்தியா?” யுகி அகியிடம் பெருமையாக சொல்ல,

 

“நான் கொடுக்கலைனா நீ பதிலுக்கு நீ கொடுக்க வேண்டி வரும் கண்ணா” சத்யா சொன்னதைக் கேட்டு, “என்னால முடியாது. நான் உங்களுக்கு மட்டும் தான் தருவேன்” என்றவாறு உள்ளே சென்று விட்டான் யுகன்.

 

“அவனை ஏன் இப்படி பண்ணுறீங்க? பாவம்ல. கோவிச்சுக்கிட்டு போறான்” ஜனனி சொல்ல, “அவன் அப்படி தான். கொஞ்ச நேரத்தில் சரியாகி மறுபடி டாடினு வருவான்” சத்யாவின் இதழ்களில் இளநகை.

 

“மறுபடி ஜானு கூட சண்டை போட்டு காதைப் பிடிக்க கூடாது” சத்யாவை எச்சரித்து விட்டுச் சென்றான் அகி.

 

“அவனைப் பார்த்தீங்களா? செமயா மெரட்டிட்டு போறான். அவன் கிட்ட சொல்லியே உங்களை நல்லா வெச்சு செய்யனும்”

 

“உனக்கு ஏன்மா என் மேல அவ்ளோ வெறி?” பாவமாகப் பார்த்தவனோ, “அவன் சொன்னதில் இன்னிக்கு பயந்து போனது யாரு? நீ தானே?” புருவம் உயர்த்திட,

 

“இல்லயே. நான் பயப்படல” திமிராக சொன்னாள் ஜானு.

 

“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலனு சொல்லுற ரகம் நீ. அப்படினா பயம் இல்ல. மறுபடி ஒரு நாள் அகி முன்னாடி உன் கன்னத்தில் அடிக்கவா?” என்று கேட்டவனோ தன்னையறியாமல் இயல்பை மீறி அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

“அகி உம்மா கொடுக்க சொன்னாலும் யுகி கண்ணா விட மாட்டான். சோ அவ்ளோ யோசிக்காம சமத்தா சோலியை பாருங்க. வரட்டா மிஸ்டர் ஹிட்லர்?” நாக்கைக் காட்டி விட்டு நகர்ந்தவளின் இந்த பேச்சில் அவனுள் சுவாரசியம்.

 

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!