54. விஷ்வ மித்ரன்

0
(0)

விஷ்வ மித்ரன்

 

💙 நட்பு 54

 

“ஹேய் நவி!” தன்னவளை அழைத்தான் விஷ்வா.

 

முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள் மனைவி.

 

“ஓய்ய் ஹனி” அவள் முகத்தருகே கையை ஆட்டிட மௌனமாய் பார்வையை எங்கோ செலுத்தினாள் அக்கோபக்காரி.

 

பல்லைக் கடித்தவன் பொறுமை இழந்து, “பேய் நவி” என்க, சடாரெனத் திரும்பி அவனை முறைத்தாள்.

 

“நான் சும்மா சொன்னேன். இப்போ உன் பார்வையைப் பார்க்கும் போது நிஜ பேய் மாதிரி இருக்கு” 

 

“இருக்கும் டா இருக்கும். அந்த பொண்ணு தேவதையா தெரிஞ்சா நான் பேய் மாதிரி தான் தெரியுவேன்” எரிந்து விழுந்தாள் வைஷ்ணவி.

 

“நீ யாரைப் பற்றி சொல்லுற? ஆஹ் நான் சொன்னேனே ஏஞ்சல் அவளையா?” புருவம் சுருக்கினான் விஷு.

 

“அந்த ஊஞ்சலையே தான். என்ன தைரியம் இருந்தா என் கிட்டயே வந்து ஒரு பொண்ணு அழகா இருந்தா என்று சொல்லுவீங்க?” கடுகடுத்தவளைக் கண்டு கண்களில் பிரகாசம் ஏறத் துவங்கியது அவனுக்கு.

 

“அழகா இருந்ததால சொன்னேன். உன் கிட்ட சொல்லாமல் வேறு யார் கிட்ட சொல்லுவேன் டி?” கடினப்பட்டு இதழுக்குள் சிரிப்பை விழுங்கிக் கொண்டான்.

 

“அப்பாவோட அப்பத்தாவோட அப்பா கிட்ட சொல்லுங்க. என் கிட்ட எதுக்கு சொல்லுறீங்க?” பொரிந்து தள்ளினாள் வைஷு.

 

“ஹேய் டக்குனு சூடாகுறியே டி. ஆனால் இதுவும் செம கிக்கா இருக்கு” மென்சிரிப்பு அவன் இதழ்களில் மேலும் விரிந்தது.

 

“ஏன் இருக்காது? என்னை கடுப்பாக்குறது தானே உங்களோட ஆல்டைம் டியூட்டி. உங்களை முதலில் சந்தித்ததில் இருந்து அப்படித் தான் படாத பாடுபடுத்தினீங்க” அவனுடனான சந்திப்புகளை நினைத்துப் பார்த்தாள்.

 

“எப்போவும் சும்மா ஏதாவது சொல்வதும் அதை தலையாட்டிட்டே கேட்கிறதும் போரடிக்கும்ல? அதான் இப்படி கொஞ்சம் ஒருத்தரை ஒருத்தர் வம்பிழுத்து, கடுப்பாகி, அப்பறம் சமாதானப்படுத்தி, சிரிக்க வெச்சு அப்படினு இருந்தா இன்னும் நல்லா இருக்கும்ல” சுவாரசியமாக சொன்னவனை இமை சிமிட்டாமல் பார்த்தாள் பாவை.

 

“கோபம் போயிருச்சா?” அவள் பார்வை உணர்ந்து கேட்க, “இல்லை இல்லை. அப்படினு யார் சொன்னது? கோபம் இருக்கு எக்கச்சக்கமா” கைகளை விரித்துக் காட்டினாள் வைஷு.

 

“நைஸ்! எக்கச்சக்கமா என்ன கோடி கோடியா கூட இருக்கட்டும். இப்போ என்ன பண்ணுற அப்படியே மாமாவுக்கு ஸ்வீட்டா ஒன்னு தரப் போற சரியா?”

 

“எந்த மாமா?” புரியாது வினவினாள் அவள்.

 

“வேறு யாரு? உன் லவ்வலபிள் மாம்ஸ் விஷ்வஜித் இருக்கான்ல அவனுக்கு” தன்னை மிதப்பாகப் பார்த்துக் கூறினான்.

 

“நீங்களா அந்த மாமா? என்ன வேணுமாம் அந்த நோமாவுக்கு?” முறைப்புடன் கேட்டாள் நவி.

 

“தெரியாத மாதிரி நடிக்காதடி. இந்த பொண்ணுங்களே இப்படித் தான். எல்லாம் புரிஞ்சாலும் காட்டிக்காம என்னமா நடிப்பாளுங்க திருட்டுப் பூனைங்க” அவள் கன்னம் கிள்ளினான் அவன்.

 

“ஆமாமா சார் பொண்ணுங்களை பற்றி அணுஅணுவா தெரிஞ்சு வெச்சு இருக்கீங்கள்ல?” படுநக்கலாக பிறந்தது கேள்வி.

 

“பொண்ணுங்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ஒரே ஒரு பொண்ணைப் பற்றி மட்டும் முழுசா தெரியும்”

 

“முக்கால்வாசியா தெரியும்னு சொல்லிடுவீங்களோனு பயந்தேன். ஆனா பரவாயில்லை முழுசா தெரியும்னு உண்மையை ஒத்துக்கிட்டீங்க சார்” வாழ்த்துத் தெரிவிக்கும் தோரணையில் அவள்.

 

“படபட பட்டாசு மாதிரி வெடிக்கிறியே. அந்தப் பொண்ணு ஆரம்பத்தில் அப்பாவியா இருந்தா. ஆனால் வெளியில் தான் பூனை உள்ளுக்குள்ள புலி மாதிரி சீறுவா. மூக்கு மேல கோபம் வந்துரும். கோபத்தில் சிவக்கும் அந்த மூக்கு நுனியை வலிக்கவே கடிச்சு வைக்க தோணும்” ரசனையுடன் கூறினான் ஆடவன்.

 

அவளோ எதுவும் பேசாமல் உள்ளுக்குள் வெடித்துக் கொண்டிருக்க தன்னவளை நெருங்கி வந்தான் விஷு.

 

“என்ன? என்ன பண்ண போறீங்க?” விலகிச் சென்றவளின் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்து இடையை வளைத்துப் பிடித்தான்.

 

“என் செல்ல பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ண போறேன்” அவள் மூக்கைத் தன் மூக்கால் உரசினான் விஷ்வா.

 

“அதற்கு நான் விடனும்ல? என்னை காண்டாக்கிட்டு ரொமான்ஸ் கேட்குதா ஐயாவுக்கு?” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

 

“ஏய் என்னைப் பாருடி! உன்னோட இந்த அழகான கண்கள் என்னை மட்டுமே பார்க்கனும். உன் கண்களை நான் பார்க்கனும்” நாடி பிடித்து அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான்.

 

“இப்போ என் கண்ணைப் பார்த்தீங்க. அப்போ அந்த பெண்ணைப் பார்த்தீங்க. நான் கோபமா இருக்கேன்” இதழ் சுளித்தாள் செவ்வந்தியவள்.

 

“உன்னை கோபப்படுத்தி பார்க்கிறதுக்காக சொன்னேன் அந்த பொண்ணு அழகுன்னு. ஆனால் அப்படி அழகாகவே இருந்தாலும் என்னால உன்னைத் தவிர வேறு யாரையும் பார்க்க முடியாது ஹனி. என் கண்ணுக்கும் மனசுக்கும் நீ தான் டி அழகு” அவள் கன்னங்களைப் பற்றிக் கொஞ்சினான்.

 

“நிஜமாவா?” என்று கேட்டு அவன் மார்பில் வாகாகச் சாய்ந்து கொண்டாள் வைஷு.

 

“ஆம் நிஜம். கொஞ்சம் எதுவும் சொல்ல முடியாது. உடனே கோபம் வந்துருது” அவள் மூக்கில் செல்லக் கடி கடித்தான்.

 

“ஸ்ஸ்!” பூனைக் குட்டியாய் சிணுங்கலுடன் முகம் சுருக்க, “கொல்லுறியே டி என் ராட்சசியே” அவளை அணு அணுவாய் ரசித்தான் ஆடவன்.

 

“நான் ராட்சசியா? நீங்க தான் ராட்சசன். என்னைப் பதற விடுறீங்க எப்போவும்” அவன் மார்பில் குத்தினாள் காரிகை.

 

“இங்கே குத்தாத! என் இதய ராணிக்கு வலிக்கும்” நெஞ்சைத் தடவியவனைக் கண்டு அவளுள் ஆனந்தம்.

 

“உங்களுக்கு அந்த இதய ராணியை எவ்ளோ பிடிக்கும்?” விடையறிய ஆவல் மீதூற அவனை ஏறிட்டாள்.

 

“இவ்வளவு தான் பிடிக்கும் என்று வரையறுக்க முடியாது அளவுக்கு, சொல்லில் அடக்கிட முடியாத அளவுக்கு அவளை எனக்குப் பிடிக்கும்.

 

ஏன் விஷு லவ் பண்ண மாட்டேங்குற? லவ் பண்ணிப் பார். அது ஒரு தனி ஃபீல்’ அப்படினு என் காலேஜ் ப்ரெண்ட்ஸ் சொல்லுவாங்க. லவ் எல்லாம் சுத்த போர்னு அவனுங்க கிட்ட சொல்லிட்டு ஜாலியா சுத்துவேன். லவ் மேல எனக்கு இன்ட்ரஸ்டே இருந்தது கிடையாது.

 

ஆனால் அந்த எண்ணத்தை எனக்குள் வந்த மறு நொடி நீ மாத்திட்ட. அந்த அழகான உணர்வை வர்ணிக்க முடியல. காதலில் கோபங்களும் அழகு, தனிமையும் இனிமை, ஏக்கங்களும் சுகம்” காதலுக்கு விளக்கம் கொடுக்க முனைந்தான் அக்காதல் தேவன்.

 

“உங்ளை மாதிரி என்னால சொல்ல முடியாது. ஆனால் காதலைப் போல் அழகான உணர்வு எதுவுமே இல்லை ஜித்து” அவன் கைகளில் தன் கைகளைக் கோர்த்தாள் காரிகை.

 

“நமக்கு குழந்தை பிறந்தா சின்ன வயசுல இருந்தே காதலைப் பற்றி சொல்லிக் கொடுத்து வளர்ப்பேன். என்னை மாதிரி அவன் வாழ்க்கையை ரொம்ப நாள் வீணாக்காமல் தனக்கான துணையைத் தேடி காதலில் கரைந்து போய் சந்தோஷமா வாழனும்” தனது ஆசையைக் கூறினான் அவன்.

 

“எப்படி இருந்தாலும் நமக்கான சரியான துணை எப்போ கிடைக்குமோ அப்போ தான் காதலையும் உண்மையாக உணர்வு பூர்வமாக உணர முடியும். எனக்காக நீங்க கிடைத்த மாதிரி நம்ம பசங்களுக்கும் காதலை உணர்த்த அவங்களுக்காக ஒரு ஜீவன் வரும்” காதலுடன் அவன் நெற்றியில் முத்தமிட்டாள் வைஷ்ணவி.

 

“இப்படி சும்மா சொன்னா ஆச்சா?அதற்கு அடி போட வேணாமா?” என்று கேட்டவனை அடிநுனி புரியாமல் பார்த்தாள் மனைவி.

 

“எதுக்கு அடி போடனும்?”

 

“பசங்களுக்கு துணை தேடிக் கொடுக்கனும்னா முதல்ல அவங்க வரனும்ல?”

 

“ஆமா. அதற்கு என்ன?” என்று அவள் கேட்க,

 

“அடியே மண்டு! ஆமானு தலையாட்டினா எல்லாம் நடக்குமா? அதற்கு நீ மனசு வைக்கனுமே” அவளது தலையில் செல்லமாக கொட்டினான்.

 

அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்டு தலை குனிந்தவளைக் கண்டு, “ஹனிமா ரெடியா?” என்று கேட்டான் கிசுகிசுப்பாக.

 

“சீ போங்க” தனது மார்பில் முகம் புதைத்தவளை இறுக அணைத்துக் கொண்டான் கணவன்.

 

………………..

ஹரிஷ் ஹாஸ்பிடல் சென்றிருக்க, தன்னிடம் விடை பெற்று ஆபிஸ் கிளம்பிய தன்னவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.

 

என்ன தான் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அண்ணனின் பிரிவை மித்துவால் தாங்க முடியவில்லை என்பதை உணராமல் இல்லை அவள். ஆனால் இதைப் பற்றி பேசும் போது பிடி கொடுக்க மறுக்கும் சகோதரனின் மேல் கோபம் கோபமாக வந்தது தங்கைக்கு.

 

விஷ்வா தனது நண்பனைத் தவிக்க விடுவது தெரிந்தா? தெரியாமலா? இதற்கு ஏதாவது காரணம் இருக்குமா? எத்தனை காரணம் இருந்தாலும் அவன் ஒரு போதும் மித்துவைக் கஷ்டப்படுத்த மாட்டானே என்று புரிந்தவளுக்கு உள்ளுக்குள் குழப்பம்.

 

அவள் மனதில் சிறு வயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

தனது வீட்டிற்கு வந்த பத்து வயது குட்டி மித்ரனைக் கண்டு ஓடோடி வந்தாள் அக்ஷரா.

 

“மித்து…!!” என்று அழைத்தவளை, “வாடா அக்ஷு குட்டி” என தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் மித்ரன்.

 

“விஷு வரலையா இன்னும்? இரு அவனைக் கூட்டிட்டு வரேன்” என்று கூறி அண்ணனை சத்தமாக அழைத்தாள் அக்ஷரா.

 

அவனது சத்தமே இல்லாது போக நீலவேணியும் சிவகுமாரும் வந்து விட்டனர்.

“வாடா கண்ணா!” பாசமாக அவன் தலையைத் தடவினார் நீலா.

 

“விஷு எங்கே?” அவன் விழிகளோ நண்பனைத் தேடி அலைபாயலாயின.

 

“வெளியில் இறங்கி கோபமா போறதைப் பார்த்தேன் மித்து. எங்கே கிளம்பினான்னு தெரியலை” நெற்றியை நீவி விட்டுக் கொண்டார் சிவகுமார்.

 

அனைவரும் யோசனையுடன் நிற்க, விஷ்வாவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்தார் ஹரிஷ். அவன் கைகளில் இருந்த கட்டைக் கண்டு எல்லாருக்கும் பதற்றம் உண்டானது.

 

“விஷு! கையில் என்ன காயம்?” ஓடிச் சென்று அவனை உலுக்கினான் நண்பன்.

 

அவனோ எதுவும் பேசாமல் நிற்க பெற்றோரும் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட, அவர்களை அமைதிப்படுத்தி விட்டு சொல்லத் துவங்கினார்.

 

இன்று விஷ்வா வந்த பிறகு மித்து பாடசாலை விட்டு வரும் போது கல் ஒன்றிற்குத் தடுக்கி கீழே விழுந்து இருக்கிறான். அதைக் கண்ட ஒருவன் இந்த விடயத்தை விஷ்வாவிடம் சொல்லி விட்டான். அதைக் கேட்டவனோ கோபமாக மித்ரனை தடுக்க வைத்த கல்லிற்கு முன்னால் போய் நின்று விட்டான்.

 

“நீ தான் என் மித்துவை விழ வைத்ததா? அவனுக்கு வலிச்சு இருக்குமே. அவனைக் காயப்படுத்திட்டல்ல. உன்னை என்ன பண்ணுறேன் பார்” அந்தக் கல்லைக் காலால் உதைத்தான்.

 

சற்று யோசித்தவன், பக்கத்தில் இருந்த கோடாரியை எடுத்து வந்து அதனால் அடிக்க கல் உடைந்து போனது. 

“இது! இதே மாதிரி தான் அவனை அழ வைக்கிற எல்லாரையும் பண்ணுவேன். இனிமே யாரும் அவனுக்கு கஷ்டத்தை கொடுக்கக் கூடாது” என்றவன் கல்லின் உடைந்த துண்டை எடுத்து கோபமாகப் பார்த்தபடி கையால் இறுகப் பிடிக்க, அதன் கூரான பகுதி அவன் கையில் குத்தி இரத்தம் வழிந்தது.

 

அவ்வழியே வந்த ஹரிஷ் இதனைக் கண்டு பதை பதைக்க அவனைத் தூக்கி வந்து கைக்கு கட்டுப் போட்டு அழைத்து வந்தார்.

 

இதைக் கேட்டு சிலையாக சமைந்து நின்றிருந்தனர் அனைவரும். மித்ரன் மேல் வைத்திருக்கும் அளவில்லாத பாசத்தை எண்ணி ஒரு மனம் நெகிழ்ந்தது. ஆனால் அதே சமயம் மித்ரனின் விடயத்தில் இவன் எல்லை மீறிச் செயற்படுவது சிறு அச்சத்தையும் தோற்றுவித்தது.

 

“சாரி விஷு! என்னால தானே” அவனது கையில் இருந்த கட்டைத் தடவினான் அருள் மித்ரன்.

 

“உன்னால இல்லை! உனக்காக மித்து. உனக்கு யார் வலியைத் தர நினைத்தாலும் நான் சும்மா விட மாட்டேன்” அவனை அணைத்துக் கொண்டான் அந்தச் சிறு வயதிலேயே நட்பின் சிகரமாகத் திகழ்ந்த விஷ்வஜித்.

 

அன்று கண்கலங்கிய மித்து பக்குவமான பின்பு அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். எப்போதும் பொறுமையைக் கைக்கொள்ளும் நண்பனுக்கு தனது விடயத்தில் மட்டும் நிதானம் துளியும் இருக்காது என்பதை நன்றாக உணர்ந்தான்.

 

அதனால் எந்த வீணான பிரச்சனைகளுக்கும் செல்லக் கூடாது என்று உறுதி கொண்டான். காலேஜில் அவனை வம்பிழுக்கும் கூட்டம் ஒன்று இருந்தாலும் அவர்களின் கேலிகளை பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டான்.

 

நான் பதிலுக்கு ஏதாவது சொல்லப் போய் பிரச்சனை ஆகி விட்டால் அவர்களை விஷ்வா நிச்சயம் விட்டு வைக்க மாட்டான். தனக்காக அவர்களைத் துவம்சம் செய்யவும் துணிவான் என்பதால் தன்னை அவ்வாறு மாற்றிக் கொண்டான் மித்ரன்.

 

இதை மனதிற்குள் கொண்டு வந்து ஆராய்ந்து பார்த்த அக்ஷராவுக்கு விஷ்வாவின் தற்போதைய நடத்தை புதிராக இருந்தது. நண்பனை தடுக்க வைத்த சிறு கல்லைக் கூட சிதறடித்தவன், அவனே இன்று நண்பனை வதைக்கிறானே.

 

“உனக்கு என்ன தான் ஆச்சுணா? ஏன் இப்படிலாம் பண்ணுற. அவன் உடம்புல சின்ன கீறல் விழுந்தாலும் தாங்க மாட்டியே!? இப்போ அவனுக்கு மனசளவில் பெரிய வேதனையைக் கொடுத்தது ஏன்?” விடை தெரியாத பல வினாக்கள் அப்பேதையின் சிந்தையில் சுழன்றன.

 

………………..

ஆபிஸில் அனைவரும் எம்.டியின் முன்னால் ஆஜராகி இருந்தனர்.

அனைவரையும் கூர்ந்து பார்த்தவனின் விழிகள் மித்ரனில் சற்று அழுத்தமாக நிலை பெற்று மீண்டன.

 

அப்பார்வைக்கு சற்றும் சளைக்காத வீச்சுடன் நண்பனைப் பதிலுக்குப் பார்த்தான் மித்ரன்.

 

“தொலைந்து போன டாக்குமெண்ட் அன்ட் ரிசிப்ட் நமக்கு உடனே கிடைத்து ஆகனும். நாளைக்குள்ள அதைத் தேடிக் கண்டு பிடிக்கலைனா மொத்தமா போயிரும். எல்லா இடங்களிலும் ஒன்னு விடாம தேடினீங்களா?” எம்.டியின் தோரணையில் கேட்டான் விஷ்வா.

 

“எஸ் ஸார்!” அனைவரும் ஒற்றை வார்த்தையோடு மொழிய, அமைதியாக இருந்தான் மித்ரன்.

 

என்ன நடந்தது என்பது இன்று தான் அவனுக்குத் தெரிய வந்து இருந்தது. இவ்வளவு பெரிய விடயம் நடந்து இருக்கின்றது. இதை தன்னிடம் மறைக்க அவனுக்கு எப்படி மனம் வந்தது?

 

சொற்பளவு கவலை வந்தாலும் தன் தோள் சாய்ந்து அதைப் பற்றி பிதற்றி, குழம்பி, பின் சமாதானமாகித் தெளிந்து அழகாய்ப் புன்னகைப்பான். இன்று அவன் வித்தியாசமாக நடந்து கொள்வது தாங்கொணா துயரைக் கொடுத்திற்று.

 

“நீங்களும் எங்க ஸ்டாப் தானே? எந்த கவலையும் பதற்றமும் இல்லாமல் இருக்கீங்களே மித்ரன்? உங்களை என்னால புரிஞ்சுக்க முடியலை” அவனை ஆழத் துளைத்தெடுத்தான் விஷு.

 

“எதுக்கு இவன் வீணா என்னை இழுத்து விடுறான்?” உள்ளுக்குள் தணலாய் வெந்தாலும் வெளியில் மௌனத்தையே பதிலாக வழங்கினான்.

 

“இதைப் பார்க்கும் போது எனக்கு டவுட்டா இருக்கு. நடப்பதை எல்லாம் வைத்துப் பார்க்குறப்போ ஒரு விஷயம் கொஞ்சம் தெளிவாகுது” என்றவன் சற்று நிறுத்தி பின்னர் நிதானமாக சொன்ன வார்த்தைகள் அவன் மீது அன்பு கொண்டவனின் இதயத்தைக் குத்திக் கிழிக்கத் தான் செய்தன.

 

“ஏன் அந்த டாக்குமென்ட்டை நீங்களே எடுத்திருக்க கூடாது? இன்னும் டூ ஹவர்ஸ் டைம் அதற்குள் மறைச்சு வைத்ததை கொண்டு வந்து தாங்க”

 

உள்ளுக்குள் அமிலமாக இறங்கிய வார்த்தைகளை ஜீரணிக்கவே வெகு சிரமப்பட்டுத் தான் போனான் மித்ரன்.

 

இன்னும் ஏதோ சொல்ல வந்தவனைக் கை உயர்த்தித் தடுத்து, “விஷ்வா போதும். இதற்கு மேல் எதுவும் சொல்லி உன் மரியாதையை நீயே குறைச்சுக்க வேணாம்” கசந்த முறுவலுடன் கூறினான்.

 

“வாட்? உண்மையை சொல்வதற்கு எதற்கு தயக்கம்? அப்படி சொன்னா மரியாதை குறையுமா? யாரோட மரியாதை குறையும்?! உண்மையைக் கண்டு பிடித்த என்னோட மரியாதையா? இல்லை உண்மையாக இருப்பது போல் நடிக்கும் உன் மரியாதையா?” உறுதியும் மிடுக்கும் கலந்திருந்தன அவனில்.

 

இதைப் பார்த்திருந்த மற்றவர்களுக்கு தாம் காண்பது கனவா என்றிருந்தது. மித்து மீது விஷ்வாவுக்கு உள்ள அளவில்லாத அன்பை அவர்களும் அறிவார்களே. அதனால் இவனது நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது.

 

மெல்ல எட்டுக்கள் வைத்து விஷ்வாவை நெருங்கியவன், “டேய்! ஓவரா சீன் போட்டுட்டு இருக்கே. இத்தோட முடிச்சுக்க. இல்ல கொன்றுவேன்” உள்ளுக்குள் பல்லைக் கடித்துக் கொண்டு வெளியில் புன்னகையுடன் சென்றான் அருள்.

 

தன்னையே கொட்ட கொட்ட விழித்தபடி பார்த்திருக்கும் மற்றவர்களை நோக்கி, “எதுக்கு பேயறைந்த மாதிரி இருக்கீங்க? ப்ரெண்டு ப்ரெண்டுனு உருகுறவன் இன்னிக்கு உல்டாவா நடந்துக்குறானேனு ஆச்சரியமா இருக்கா?

 

அவன் என் ப்ரெண்ட். பட் ஆபிஸ்னு வந்தா அதெல்லாம் செல்லுபடி ஆகாது. யார் தப்பு பண்ணுனாலும் தப்பு தப்பு தான்! போய் வேலையைப் பாருங்க” கோபத்துடன் தனது கேபினுக்குள் நுழைந்தான் விஷ்வா.

 

அவனது உள்ளமோ மித்ரன் மீதிருக்கும் கோபத்தில் எரிந்து கொண்டிருக்க, அவனது வார்த்தைகள் கொடுத்த காயங்களில் வெந்து போய் இருந்தான் சினேகிதன்.

 

நட்பு தொடரும்…….!!

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!