கந்தல் ஆடை!!
சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
“இதையும் எம்ப்ராய்டரி போட்டு தச்சிட்டியா? அம்மா!! எப்பம்மா புது சட்டை புது பேன்ட் வாங்கித்தருவ?” என்று அம்மாவிடம் அழுதுக்கொண்டு இருந்தான் ரவி.
“உன் பொறந்த நாள் வருது இல்ல. அப்ப வாங்கித் தரேன் டா கண்ணு.” என்று அம்மா கூறினாள் இருமலுக்கு இடையே.
“பொறந்த நாளா.. அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே!! அதுக்குள்ள இந்த சட்டைலயும் பேண்ட்லயும் எம்ப்ராய்டரி போடக் கூட இடம் இருக்காது. ஃபுல்லா கிழிஞ்சிடும். பள்ளிக்கூடத்துல எல்லாரும் என்னை “எம்ப்ராய்டரி ரவி”, “எம்ப்ராய்டரி ரவி”ன்னு கூப்ட்டு கிண்டல் பண்றாங்க.” என்று அழுது புலம்பினான் அவன்..
“இந்த முறைப் போட்டுக்க ரவி. அடுத்த முறை நான் வேலை செய்யற வீட்டிலேருந்து….” மறுபடியும் இருமல்.
“போதும். போதும். நான் இதையே போட்டுட்டு போறேன். இருமல் ஆரம்பிச்சிடுச்சு பார்.. நீ பேசாதே.. நீ வேலைக்குப் போகவேண்டாம், நானே ஸ்கூல் போறதை நிறுத்திட்டு வேலைக்குப் போறேன்னு சொன்னாலும் கேக்கறதில்ல” என்றான் பதிமூன்று வயதே நிரம்பிய ரவி.
அம்மாவின் மீது அதீத பாசம் அவனுக்கு. அவள் வீட்டு வேலை செய்வதே பிடிக்கவில்லை அவனுக்கு… 10 வீட்டில் ஓயாமல் வேலை செய்து அவனை வளர்க்கிறாள்… ரவி தான் வேலைக்குச் சென்று கொஞ்சம் அம்மாவின் பாரத்தைக் குறைக்கவேண்டும் என்று நினைத்தான்… ஆனால் அம்மா அதற்கு ஒப்பு கொள்ளவே இல்லை… எப்போது கணக்கு வாத்தியார் அவன் அம்மாவிடம் வந்து அவன் மிக நன்றாக படிக்கிறான் என்றும் எந்த காரணத்தைக் கொண்டும் படிப்பை நிறுத்த வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு போனாரோ, அதிலிருந்து அம்மா அவன் வேலைக்கு போகக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறாள்…
“சாயங்காலம் கணேஷ் அண்ணா ஷெட்டில பார்ட் டைம் வேலைப் பார்க்கிறேன்” என்று அவன் சொன்னால் கூட “அதெல்லாம் வேண்டாம்.. நீ படிப்புல மட்டும் கவனம் செலுத்து… செலவெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்பாள் அம்மா…
அவளுக்கு படித்து அவன் பெரிய வேலையில் சேர்ந்தால் தன் வாழ்க்கை எப்படி போனாலும் ரவியின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நினைத்தாள்… தன்னை போல் தன் மகன் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்தாள் அவள்.. கல்வி இருந்தால் அவன் வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலையில் இருக்கலாம் என்பதால் அவன் முழு கவனமும் அதில் தான் இருக்க வேண்டும் என்றும் குடும்ப கஷ்டத்தை பற்றி அவன் கவலைபட கூடாது என்று எண்ணியே அவனிடம் தன் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாவதை கூட சொல்லாமல் மறைத்தாள்.. ஆனால் நாளுக்கு நாள் அவள் உடல்நிலை ரொம்பவும் கவலைக்கிடமாகிக்கொண்டே போனது.
இந்த நிலையில் தான் அவர் ஒரு நாள் தான் வேலை செய்யும் வீட்டில் மயக்கமாகி விழுந்து விட்டார்… அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் ரொம்பவும் இரக்க குணம் உள்ளவர்கள்… பெரிய வக்கீல்கள் இருவரும்… ரவியின் அம்மாவை ஹாஸ்பிடலில் சேர்த்து வைத்தியம் பார்த்தார்கள்…
அதன் பிறகு அவரை பரிசோதித்த டாக்டர், அவருக்கு உடனே இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும், அதற்கு இரண்டு லட்சம் செலவாகும் என்றும் கூறினார்…
ரவியின் அம்மாவின் எஜமானியான வக்கீலம்மா அந்தப் பணத்தை தான் கொடுப்பதாகவும், அவன் அம்மா குணமாகும் வரை ரவி அவர்கள் வீட்டில் தங்கி படிக்கலாம் என சொல்லி அவனை அவர்கள் வீட்டிலேயே தங்க வைத்தார்கள்… அவன் அம்மாவுக்கும் நல்ல சிகிச்சை அளித்து வந்தார்கள்…
தினமும் அவர்கள் சாப்பிடும்போது அவர்களோடு சேர்ந்து அவனையும் சாப்பிட சொல்வார்கள்.. அப்படி சாப்பிடும்போது ரவி நினைத்துக் கொள்வான்… இந்த மாதிரி வீட்டில பிறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்” என்று…
அப்போது ஒருநாள் அந்த வீட்டுக்காரர்கள் மறுநாள் அவர்களுடைய மகன் பிறந்த நாள் வருவதால் அதற்கு புதுத்துணி வாங்க கடைக்கு செல்லப் போவதாகவும், அவனுக்கும் துணிமணி வாங்கித் தருவதாகவும் சொல்லி அவனையும் கடைக்கு அழைத்துச் சென்றார்கள்…
அங்கே சென்றதும் அவ்வளவு பெரிய கடையைப் பார்த்து ரவி பிரமித்து போய் நின்றான்… அவர்கள் அவனுக்கு என்ன துணி வேண்டுமோ அதை எடுத்து கொள்ளச் சொன்னார்கள்… ஆனால் அவன் புதுத்துணி எடுத்து பழக்கம் இல்லாததால் அவர்களையே எடுத்து தருமாறு கேட்டுக்கொண்டான்…
தங்கள் மகனுக்கு எடுக்கும் துணி போலவே அவனுக்கும் எடுப்பதாக கூறினார்கள்… அவனும் கடையை ஆர்வமாக சுத்திப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவர்களின் மகன்( அவனுக்கும் பதிமூன்று வயதுதான்) ரவியிடம் ஒரு பையைத் தந்து ,” ரவி!! இந்தா.. எனக்கு வாங்கினா மாதிரி உனக்கும் ட்ரெஸ் எடுத்துவந்திருக்கோம்… அதோ அங்க ட்ரெஸ் மாத்தற ரூம் இருக்கு… போய் போட்டுப் பாரு.. உனக்கு பிடிச்சிருக்கா? ஸைஸ் சரியா இருக்கான்னு பாரு… நான் பக்கத்து ரூம்ல போய் என் ட்ரெஸ்ஸ ட்ரை பண்றேன்” என்றான்.
ரவி அந்தத் துணிகளை வாங்கி உடை மாற்றச் சென்றான்… இரண்டே நொடிகளில் வெளியே வந்து நேரே வக்கீலம்மாவிடம் சென்று, “அம்மா..நம்மளை இந்த கடையில் ஏமாத்திட்டாங்க!!” என்றான்.
“என்ன ஏமாத்திட்டாங்களா? இங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்களே!! ஏன் அப்படி சொல்றே?” என்று கேட்டாள் வக்கீலம்மா ஆச்சரியமாக .
“இங்க பாருங்க.. இந்த பேண்ட்டும் சட்டையும் கிழிஞ்சிருக்கு… கிழிஞ்ச துணிகளை நம்ம தலையில கட்டி நம்மள ஏமாத்த பார்க்கிறாங்க” என்றான் ரவி புகார் செய்யும் தொனியில்…
வக்கீலம்மாவும் வக்கீலய்யாவும் சிரித்தார்கள். “இது கிழியலை கண்ணா… இது ரிப்ட் ஜீன்ஸ்( ripped jeans ),ரிப்ட் ஷர்ட் ( ripped shirt).. இதோட டிஸைனே அப்படித்தான்… இப்ப இதுதான் ட்ரெண்டி ஃபேஷன்.. அங்க பார்… கார்த்திக்கோட ட்ரெஸ்ஸ… அவனுக்கு எவ்ளோ அழகா இருக்குல்ல?” என்றாள் புன்னகைத்தபடி.
அங்கே பார்த்தால் அவர்களின் மகன் அந்த கிழிந்த பேண்ட்டையும் சட்டையையும் போட்டு வந்து நின்றிருந்தான்… ரவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…
வீட்டிற்கு வந்ததும் அந்த புதுத்துணி என்ற பெயரில் அவர்கள் தந்த கந்தல் துணியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அவனுடைய அம்மா எம்ப்ராய்டரி போட்ட பழைய சட்டையையும் பேண்ட்டையும் எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்…
” அம்மா!! எவ்வளவு பணமிருந்தும் தன் பிள்ளைக்கு கந்தல் ஆடையைப் போட்டு சந்தோஷப்படுற அவங்க வீட்டில பிறக்காம என் ட்ரெஸ்ல சின்ன கிழிசல் இருந்தாலும் அதை எம்ப்ராய்டரி போட்டு மறைச்சு போட்டு அழகு பார்க்குற உன் மகனா பிறந்ததை நினைச்சுப் பெருமைப்படுறேன்மா” என்று வாய் விட்டுச் சொன்னான் ரவி…