💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 06
மாரிமுத்துவின் முன்னால் சரணடைந்திருந்தனர் மனைவியும், மூன்று பெண் மக்களும்.
“நந்திதாவுக்கு வரன் வந்திருக்கு. நான் முடிவு பண்ணலாம்னு இருக்கேன்” என்ற வார்த்தையில் அதிர்ச்சியடைந்தனர் நால்வரும்.
“யாருங்க? எந்த ஊர்?” ஜெயந்திக்கே இது புது தகவல்.
“பக்கத்து ஊர். பெயர் சத்யா. சாப்ட்வேர் இன்ஜினியர். கை நிறைய சம்பாதிக்கிறார். நல்ல குடும்பமும் கூட” என்று அவர் சொல்ல, “அக்கா கிட்ட கேளுங்க பா” என்றாள் ஜனனி.
“இது எனக்கும் என் மூத்த பொண்ணுக்குமான பேச்சுவார்த்தை. நீ இதில் தலையிடாத” முகத்திலடித்தாற் போல் சொல்லி விட்டார் மாரிமுத்து.
தந்தையின் பேச்சில் அவளுக்கு மனம் குமைந்தது. ஆனால் இதற்கு மேல் என்ன பேச முடியும்?
“உனக்குப் பிடிக்கலனா இல்லனு சொல்லிடு நந்து” என்று ஜனனி கூற, அமைதியாக இருந்தாள் நந்திதா.
“என் பொண்ணு அப்பா பேச்சுக்கு மறுப்பு சொல்ல மாட்டா. நான் கொடுந்த வாக்கை அவ காப்பாற்றுவா” பெருமையாகச் சொல்லி, போட்டோவை டீப்பாயில் வைத்து விட்டுச் சென்றார்.
அதைப் பிரித்துப் பார்த்த மகிஷாவுக்கு கண்கள் தெறித்து விடும்படியாக விரிந்தது.
“என்னடி ஆச்சு?” அதைப் பார்த்த ஜெயந்திக்கு என்னவோ போல் ஆனது.
ஜனனியின் விழிகள் அதில் நிலை பெற்றன. சத்யாவை அணைத்தவாறு நின்றிருந்தான் யுகன்.
“அப்படினா செகண்ட் மேரேஜா?” மகிஷா கேட்டதும், “என் பொண்ணு ரெண்டாம் தாரமா வாக்கப்பட்டுப் போகனுமா?” ஜெயந்திக்கு அந்த விடயம் கசப்பாக இருந்தது.
“முதல் தாரம்னா பரவாயில்லையா? அப்பா சொன்னா அதை கட்டிக்கவே வேணுமா? பொண்ணுங்க விருப்பம் முக்கியம் இல்லையா?” எனக் கேட்டாள் ஜனனி.
நந்திதா எதுவும் பேசவில்லை. அமைதியாக எங்கோ வெறித்திருந்தாள்.
“அக்கா! வாய் திறந்து பேசு. உன் மனசுல யாராவது இருக்காங்களா? சொல்லுக்கா. அப்பா மறுத்தாலும் நான் ஏதாவது பண்ணுறேன். நீ பேசுக்கா” ஜனனி அவளை உலுக்க, “இல்ல ஜானு! நான் அப்பா சொல்லுற மாதிரி அவரையே கட்டிக்கிறேன்” கண்ணீரைத் துடைத்து விட்டுச் சென்றாள் நந்திதா.
ஜெயந்தி யோசனையாக இருக்க, “நீ என்னம்மா யோசிக்கிற?” எனக் கேட்டாள் மகி.
“அந்த பையனோட மூத்த தாரம் எங்கேயோ? இவரு எல்லாம் விசாரிச்சாரா இல்லையா? எதுவுமே தெரியாம இருக்கும் போது என் பொண்ணை எப்படி கட்டிக் கொடுக்கிறது?” ஒரு தாயாக அவர் மனம் வேதனைப்பட்டது.
“நீங்க போய் கேளுங்கம்மா. அப்பா கிட்ட பேசுங்க. உங்க பொண்ணுக்காக பேசிப் பாருங்க. இப்படியே விட்டா சரி வராது” என்றவள் சத்யாவின் புகைப்படத்தைத் தனது அலைபேசியில் சேமித்துக் கொண்டாள்.
அறையினுள் இருந்த நந்திதாவுக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது. இந்தக் கல்யாணத்தில் அவளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆனால் தந்தையின் பேச்சை மறுக்கவும் அவளுக்கு சக்தியில்லை.
தன்னிடம் வந்த ஜனனியை அணைத்துக் கொண்டாள். அவளுக்கு தமக்கையின் நிலை புரிந்தாலும், எதுவும் பேச இயலவில்லை.
“உன்னை மாதிரி நானும் தைரியமா இருந்து பழகி இருக்கனும் ஜானு. என் விருப்பத்தைக் கூட வாய் திறந்து சொல்ல முடியாம இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்கு டி” அழுதவாறு சொன்னாள் நந்திதா.
“அப்படிலாம் இல்லைக்கா. வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லிடுங்க. இல்லனா நீங்க என் கிட்ட சொல்லுங்க. நான் பார்த்துக்கிறேன். ஆனால் விருப்பம் இல்லாத கல்யாணத்து சம்மதிக்க வேண்டாம்.
கல்யாணத்தோட வாழ்க்கை முடியப் போறதில்லக்கா. அப்போ தான் ஒரு புது வாழ்க்கையோட கதவு திறக்குது. விருப்பம் இல்லாம பண்ணிட்டு பிறகு கஷ்டப்படுறதை விட, இப்போவே மறுத்துடு” அவளது தலையை வருடிக் கொடுத்தாள்.
“அக்கா! என் வாழ்க்கையும் இப்படித் தான் நடக்குமா? நானே விருப்பப்படாம எனக்கு கல்யாணம் நிச்சயிக்கப்படுமா? ஏன்க்கா இப்படி நடக்குது? நம்ம கிட்ட விருப்பமா இல்லையானு கேட்கவே மாட்டாங்களா?” எனக் கேட்டாள் மகிஷா.
“கேட்டா மட்டுமில்ல, கேட்கலனாலும் சொல்லலாம் மகி. ஏன்னா அது நம்ம வாழ்க்கை. எந்த பெத்தவங்களும் தம் பிள்ளைங்க கஷ்டப்படனும்னு கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டாங்க. நல்லவங்களா தான் தேடுவாங்க. அதையும் நாம புரிஞ்சுக்கனும். அப்படி அவங்க நல்ல அன்பான, பண்பான ஒருத்தரை தேடித் தந்தா நாம பயமில்லாமல் கட்டிக்கலாம்.
ஆனால் என்னோட ஆதங்கம் என்னனா இந்த பையன் யாரு எப்படினு அப்பா சொல்லவே இல்ல. என் விருப்பம் இது, நீ இவரைக் கட்டிக்க என்று அவரே முடிவு பண்ணுனாரே அது தான். அதை மாத்தனும்னு சொல்லுறேன். அதனால தான் அக்கா கிட்ட அமைதியா இருக்காமல் அவங்க ஒப்பீனியன வெளிப்படுத்த சொன்னேன்” என்றான் ஜனனி.
இன்று பல இடங்களில் நடைபெறுவது தான். பிள்ளையை கடைக்கு அழைத்துச் சென்று விருப்பமான உடையை தெரிவு செய்ய இடமளிக்கும் பெற்றோர், திருமணத்தில் விருப்பமா இல்லையா என்று கூட கேட்காமல் அனைத்தையும் முடிவு செய்து விடுகின்றனர்.
எம்மை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு இதை முடிவு செய்ய உரிமை உள்ளது தான்.
ஆனால் அதை விட, உனக்கு கல்யாணம் பேசப் போகிறேன் என்று தெரிவித்து விருப்பமா என்று கேட்டால் அந்தப் பிள்ளைகளும் நிர்ப்பந்த நிலை அல்லாமல், மகிழ்வோடு சம்மதிக்கக் கூடும்.
ஜெயந்தி மாரிமுத்துவிடம் கேட்டதற்கு, “இது நல்ல சம்பந்தம். நான் தீர விசாரிச்சுட்டேன். எந்தக் குழப்பமும் இல்லை. நந்திதா கூட சம்மதிச்சுட்டா. அவங்களை நாளைக்கு வரச் சொல்லியாச்சு. நந்திதாவைப் பார்க்க வருவாங்க. அப்படியே நிச்சயமும் நடக்கும்” என்று விட்டார்.
அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. எதிர்த்துப் பேசவும் முடியாமல் இருந்தது.
“ஏன்மா இப்படி பண்ணுறார்? நந்திதாவைப் பெத்தது நீ தானே மா. உன் கிட்ட கூட கலந்து ஆலோசிக்காம அவரா எப்படி முடிவு பண்ண முடியும்?” ஆத்திரம் தாங்கவில்லை ஜனனிக்கு.
“எப்போவும் அப்பாவைக் குறை சொல்லிட்டே இருக்காத ஜானு. என்ன பண்ணுறது அவர் குணம் அப்படி? நாம என்ன செஞ்சுட முடியும்? இது தான் வாழ்க்கைனு வாக்கப்பட்டுட்டேன். வாழ்ந்து தான் ஆகனும்” கவலையோடு அவர் கூற, “நான் எதுவும் சொல்லலம்மா. சாரி! நீ என் தங்க அம்மா” தாயைக் காயப்படுத்தி விட்டோமோ என நினைத்து, அவர் கன்னத்தில் முத்தமொன்று கொடுத்தாள்.
“இப்போ என்ன பண்ண போறக்கா? நாளைக்கு நிச்சயதார்த்தமாம்” என மகி கேட்க, “நான் அவரைப் பற்றி தேடிப் பார்க்கிறேன்” சத்யாவின் போட்டோவை அவனது ஊரில் வசிக்கும் ஒருத்திக்கு அனுப்பி வைத்தாள்.
மறுநொடியே சத்யாவின் அத்தனை தகவல்களும் ஜனனியின் முன்னே கண் சிமிட்டின.
மனைவி இனியா அவனை ஒரு பெண்ணோடு சேர்த்து வைத்து சந்தேகப்பட்டுப் பிரிந்து சென்றாள். சென்றவளைப் பற்றிய விபரமும் இருந்தது. அவள் வேறு திருமணம் செய்து விட்டாள் என்பதையும் அறிந்தாள்.
அனைத்திலும் மேலாக, ஜனனிக்கு வந்த அடுத்த தகவல் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இரவு நேரம், ராஜீவ்வுடன் மேசேஜ் பண்ணிக் கொண்டிருந்தாள் ஜனனி. அனைவரும் தூங்கியதை உறுதிப்படுத்திக் கொண்டு அவனுக்கு அழைப்பு எடுத்தாள்.
“ஹலோ”
நீண்ட நாட்களுக்குப் பின்னால் கேட்ட அவன் குரல் அவள் செவியில் தேன் பாய்ச்சியது.
“ராஜ்.. நீ எங்கே?” ஆவலுடன் வினவினாள் அவள்.
ஆம்! அவளது காதல் கண்ணாளன் நாளை அவளூர் வருகிறான். அவளது தூரத்து சொந்தம் என்பதால் அவள் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.
அவனை இதுவரை நேரில் கண்டதில்லை. முதல் முறை அவனை வெறும் கண்ணால் காணும் தருணத்திற்காக மனம் ஏங்கியது.
“வந்துட்டே இருக்கேன் டி. உன்னைப் பார்க்கனும். ரொம்ப எக்ஸைட்டட்டா இருக்கு ஜானு” அவன் குரலிலும் அத்தனை ஆவல்.
“லவ் யூ ராஜ்” ஆர்வ மிகுதியில் அவள் மொழிய, “ஜானு! ப்ளீஸ்” வேண்டாம் என்பதாக கண்டித்தான் ராஜீவ்.
“சாரி சாரி” கண்களில் துளிர்த்த நீரை சட்டென உள்ளிழுத்துக் கொண்டாள்.
அவளது காதல் இப்படிப்பட்டது தான்.
சேர மாட்டோம் என்று தெரிந்தாலும் பைத்தியமாக காதலிக்கிறாள் அவனை. அவளால் காதலிக்காமல் இருக்க முடிவதில்லை.
ராஜீவுக்கு சிறு வயதில் அவனது ஊரிலுள்ள மாமா மகளோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. அந்தப் பெண் மீது அவனுக்குக் காதல் எல்லாம் இல்லை.
அவன் மனதில் காதலாக அரும்பியவள் ஜனனி. அவளோடு பேச ஆரம்பிக்கும் போதே இந்த விஷயத்தைக் கூறி விட்டான். ஆனால் காதல் என்பது வேடிக்கை தானே?
அது இருவர் மனதையும் ஆட்டிப் படைத்து விட்டது.
“அவங்க வீட்டுல முடியாதுன்னு சொல்லிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிப்பானா?” எனும் நப்பாசையில் அவள் இன்னமும் ராஜ் மீது காதலை வளர்க்கிறாள்.
ஆனால் ஒவ்வொரு இரவும் நிலையில்லாத இந்தக் காதலை எண்ணி அழுது தீர்ப்பாள். அவனுக்குக் காதல் இல்லா விட்டாலும் பரவாயில்லை. அவனுக்கும் அவள் மீது காதலுண்டு. எனினும் குடும்பத்திற்காக அவளை மறுக்கிறான்.
“நாளை அக்காவுக்கு நிச்சயதார்த்தம்” என அவள் கூற, “என்னடி திடீர்னு?” அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு.
“ம்ம் அப்பா கேட்டதும் அக்கா ஓகே சொல்லிருச்சு. சொன்னாங்கனு இல்ல. அவங்க மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா எடுத்துக் கொள்ளப்பட்டுச்சு” பெருமூச்சு விட்டாள் ஜனனி.
இப்படியே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில், “எனக்கு ஏதாவது தந்துட்டு போறீங்களா?” என அவள் கேட்க, “எதுக்கு?” பதிலுக்கு வினவினான் அவன்.
“உன் ஞாபகமா வெச்சுக்கனும் ராஜ். உன்னைப் பார்க்க என் மனசு துடிச்சிட்டு இருக்கு. அவ்ளோ ஆசைய் இருக்கு” அவள் காதலோடு கூற, “அதான் வர்றேன்ல. என்னைப் பார்த்துக்கோ” என்றான் ராஜ்.
அவனது வருகைக்காக நேரங்களை எண்ணிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியவில்லை, விதி அவளுக்கு வேறு கணக்கை எண்ணிக் கொண்டிருக்கிறது என்று.
மறுநாளைய விடியல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மனநிலையைக் கொடுத்தது.
நந்திதா சிலை போல் அமர்ந்திருந்தாள். இன்று அவளுக்கு நிச்சயதார்த்தம். அவளுக்கு இது பிடித்திருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
“இப்போ கூட லேட் ஆகல நந்து. ப்ளீஸ்! வேண்டாம்னா சொல்லிடுக்கா”
“இல்ல டி வேண்டாம்” என்று விட, “இதற்கு மேல் நான் எதுவும் கேட்கல. எனக்கென்னவோ பிடிக்காத மாதிரி நெனச்சுக்க போறாங்க எல்லோரும். அவர் டீடேல்ஸ் எல்லாமும் சொல்லிட்டேன். இனி நீயாச்சு, இந்த வாழ்க்கையாச்சு. பட் ஒன்னு சொல்லுறேன். ரெண்டாம் கல்யாணம்கிறதுக்காக நான் இவ்ளோ கேட்கல. முதல் கல்யாணமாவே இருந்தாலும் கேட்டிருப்பேன். உன் மூஞ்சைப் பார்க்கும் போது விருப்பம் இல்லாம மாதிரி தோணுச்சு. இனி ஒன்னும் கேட்கல. பீ ஹேப்பி” அவள் கன்னம் கிள்ளி விட்டுச் சென்றாள் ஜனனி.
வாசலுக்குச் சென்ற போது இன்ப அதிர்ச்சியானாள் அவள். அங்கே, வந்து கொண்டிருந்தான் ராஜீவ்.
“ரா..ராஜ்” தூணில் சாய்ந்து அவனைப் பார்த்தவளுக்கு இருதயம் வேகமாகத் துடிக்கலானது.
அவனை முதல் முறை நேரில் கண்டவளுக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி
08-12-2024