7. இதய வானில் உதய நிலவே!

4.8
(4)

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍

நிலவு 07

 

தன் முன்னால் நிற்பவனிடம் “உ… உதய்” என்று நம்ப முடியாத பார்வையை வீசினாள் பெண்ணவள்.

 

“எஸ்! உதய்! உதய வர்ஷனே தான், அதியநிலா” என்று குறு நகையை வழங்கினான்.

 

“ஏன் நீ டாக்டர்னு சொல்லல…??”

 

“நீங்க கேட்கல. நான் சொல்லல” தோளைக் குலுக்கினான் அவன்.

 

“அப்போ.. அப்போ அன்னைக்கு பீச்சுல இருந்து அர்ஜென்ட்டா போனது கூட இதனால தானா?” தடுமாற்றமாக வினவினாள்.

 

“எஸ்! ஒரு குட்டிப் பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகி அட்மிட் பண்ணி இருந்தாங்க. அவன் ஆசிரமத்துல வளர்றவன். நான் தான் வரணும்னு அழுததால போக வேண்டியதாச்சு. என்னை ரெண்டு நாளா அசைய விடல.

 

சின்ன வயசுல எனக்கு ஃபீவர் வந்தா மருந்து எடுத்து தந்து தூங்க சொல்லிடுவாங்க. அந்த டைமுக்கு என் மனசு பாசத்துக்காக ஏங்கி நிற்கும். அவ்ளோ வேதனையா இருக்கும். ஆனால் அழ மாட்டேன். யாரையும் கூப்பிடவும் மாட்டேன். உள்ளுக்குள்ள அழுதுட்டு இருந்திடுவேன். மெடிசின் கரெக்ட் டைம்க்கு எனக்கு எடுத்தியா என்று கேட்கக் கூட யாரும் வர மாட்டாங்க. அதனால இப்போ அந்த ஆசிரமத்துல யாருக்காவது ஃபீவர் வந்தாலோ ஏதாச்சும் ஆனாலோ ரெண்டு நாளைக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்க பக்கத்துல இருந்து பார்த்துப்பேன்” என்ற ஆடவனைக் காணும் போது ‘இவனுக்குத்தான் இவ்வளவு நல்ல மனம்’ என்று தோன்றியது அதிக்கு.

 

அதே சமயம் அவனது நிலை அறியாமல் அவனைத் திட்டியதில் குற்ற உணர்வாக இருந்தது. “நிலமை தெரியாம உன்னை கண்டபடி பேசிட்டேன் சாரி” என்று வருத்தமாகக் கூறினாள் அவள்.

 

“இட்ஸ் ஓகேங்க! ஆனா ஒரு விஷயம் சொல்லுறேன் கேட்டுக்கோங்க. நமக்கு யார் மேலாவது கோபம் வந்தாலும் வருத்தம் வந்தாலும் உடனே அவங்க கிட்ட அதை காட்டக்கூடாது. நம்ம நினைக்கிறது வேற, ஆனால் அவங்க சூழ்நிலை வேறயா இருக்கலாம். அதனால அவங்க பக்கம் நியாயத்தை எடுத்து சொல்ல சான்ஸ் கொடுங்க. அளவுக்கு அதிகமாக வார்த்தையை கொட்டிட்டா அது அள்ளவும் முடியாது அழிக்கவும் முடியாது. இட்ஸ் நொட் அட்வைஸ்! இட்ஸ் மை கைன்ட்லி ரிக்வெஸ்ட்” அன்பாக எடுத்துச் சொன்னான் அவன்.

 

“இட்ஸ் ட்ரூ! இனிமேல் நான் யார் கிட்டேயும் இதே தப்பை பண்ண மாட்டேன். பண்ணவே மாட்டேன் உதய்” வேகமாகத் தலையசைத்தாள்.

 

“பார்த்து. என் பொம்மையோட தலே கழன்று விழுந்துறப் போகுது” என்று கிண்டலடித்தான்.

 

“நான் பொம்மையா உனக்கு?” என முறைப்புடன் கேட்டாள் அதி.

 

“யாஹ் யாஹ்! மை கியூட் பார்பி டால். எனக்காகவே உருவாக்கப்பட்ட பொம்மை” என இதழ் விரித்தவன் அவளருகில் வந்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.

 

“மை காட்! இவ்ளோ கொதிக்குது. நான் கொடுத்து டேப்லெட்டைப் போட்டு இருந்தால் கொஞ்சம் குறைஞ்சிருக்கும். நேற்று மழையில நனையும் போது எனக்கு பயமா இருந்துச்சுங்க” அந்த பயம் அவன் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

 

தலையைக் கவிழ்த்தவள் “சாரி நான் உங்க மேலே உள்ள கோபத்தில் அதை போடல” என இரு கைகளையும் பரபரவென தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

 

“பரவாயில்லை. இந்த மெடிசீனை கரக்ட் டைம்கு சாப்பிடுங்க” ஒரு மருத்துவராக அறிவுரைகள் பலவற்றைக் கூறி அனுப்பினான்.

 

தலையாட்டி விட்டு ஷாலுவை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள். உணவை ஆர்டர் செய்து அண்ணன் மகளுக்குக் கொடுத்தவளுக்கோ உணவைக் காணும் போதே குமட்டிக் கொண்டு வந்தது.

 

அப்படியே சோபாவில் சரிந்த அதியாவுக்கு உதய்யின் நினைவு வந்தது. “சின்ன பசங்களை பக்கத்துல இருந்து பார்த்துப்பனு சொன்னேல. என்னைப் பார்க்க வர மாட்டியா?” அவள் மனம் அவளவனைத் தேடியது.

 

பல்கோணியில் விளையாடிக் கொண்டிருந்த ஷாலு பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து “பேய் பேய். பயமாயிருக்கு அத்து” என்று அச்சத்துடன் மிரண்டு விழித்தாள்.

 

அவளிடம் “என்ன ஆச்சுடா?” எனக் கேட்டாள் சோர்ந்த குரலில்.

 

“அங்கே ஏதோ சத்தம் கேட்டுச்சு. பேய் இல்லனா திருடன் வரானோ தெரியல” கண்களை உருட்டினாள்.

 

“பேயா? திருடனா? என்னடி சொல்லுற” என எழுந்து செல்ல கைக்குட்டையால் முகத்தைக் கட்டிய ஒருவன் பல்கோணியிலிருந்து உள்ளே குதிக்க “வர்ஷு” அதியும் ஷாலுவும் கோரசாக அழைத்தனர்.

 

“எஸ்! இட்ஸ் மீ வர்ஷு” கைக்குட்டையை அகற்றினான் வர்ஷன்.

 

“நான் பயந்துட்டேன் அங்கிள்” என்று சொல்லித் தன்னிடம் வந்த சிறுமியைக் குனிந்து தூக்கிக் கொண்டான் உதய்.

 

“உங்க பெண்டாவுக்கு காய்ச்சல். உட்காரக் கூட முடியல பாவம்” இதழ் குவித்தாள் சோகமாக.

 

“குயிக்கா சரியாயிடும் செல்லம். அத்து சாப்பிட்டாங்களா?” என விசாரித்தான் வேங்கை.

 

“ஆமா” என அதி பட்டென சொல்ல, “அதி பொய் சொல்லுது. இதோ சாப்பாடு அப்படியே இருக்கு” என்று போட்டுக் கொடுத்தாள் குறும்பழகி.

 

“எனக்குத் தெரியுமே. அதான் வந்தேன்” என்று கூறி மேசையிலிருந்து உணவைத் தட்டில் போட்டு எடுத்து வந்தான்.

 

“எனக்கு வேண்டாம் ப்ளீஸ். என்னை சாப்பிட சொல்லாத” உடனடியாக மறுப்பை வெளியிட்டாள் காரிகை.

 

“கொஞ்சமாவது சாப்பிடுங்க நிலா. அப்போ தானே மாத்திரை போட முடியும்” அக்கறையில் குழைந்தது அவன் குரல்.

 

“அதைக் கண்டாலே வாமிட் வர மாதிரி இருக்கு” என்றதும் “இது தான் ப்ராப்ளமா?” என்று கேட்டு தனது கையில் இருந்த கைகுட்டையால் அவள் கண்களைக் கட்டி விட்டான் உதய்.

 

“டேய் என்ன பண்ணுறே?” சினங்கினாள் அவள்.

 

“என் பேபியை சாப்பிட வைக்கப் போறேன்”

 

“எப்படி சாப்பிடுறது?” அவனது அன்பில் உருகிய மனம் சாப்பிட நினைத்தது. 

 

“உங்க கண்ணைத் தான் கட்டி இருக்கேன். வாயைக் கட்டல. அதனால சமத்தா வாயைத் திறங்க” என்று சொன்னான் அவன்.

 

“எ…எதுக்கு? ஊட்டி விட வேண்டாம்” என தயங்கினாள் அதி.

 

“அன்னிக்கு நீங்க ஊட்டும் போது நான் மறுத்தேனா? இல்லையே அதே மாதிரி ஆ காட்டுங்க” என்று ஊட்ட,

 

“ஏதோ நான் வலுக்கட்டாயமா ஊட்டின மாதிரி பேச்சைப் பாரு” என்று நொடித்துக் கொண்டாலும் சாப்பிட்டாள்.

 

“அத்துக்கு தாத்தா தான் ஊட்டி விடுவாராம். நான் ஊட்டுவேன்னு சொன்னாலும் எனக்கு அழுகை வந்துரும் பாப்பா என்று சொல்லி சாப்பிடாது. இன்னைக்கு சாப்பிடுறா. உங்க கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு வர்ஷு. அதனால தான் எல்லோருக்கும் உங்களைப் பிடிக்குது. எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்” உதய்யின் தோளில் தொங்கினாள் ஷாலு.

 

உண்மையிலேயே இப்பொழுது அதியாவின் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. தந்தையின் நினைவும், இயலாமையும், இவனது கரை கடந்த அன்பும் அவள் கண்களையும் நெஞ்சையும் நனைத்தது.

 

‘உன் பாசத்தை நானே விலக்கினாலும் நீயா நெருங்கி நெருங்கி வந்துடுற. அன்பால குளிப்பாட்டுற. உனக்கு என்னைப் பிடிச்ச மாதிரி எனக்கு உன்னை பிடிக்கலையே. உன் மேல இருக்குற உணர்வுக்குப் பெயர் அன்பா காதலானு எனக்கே தெரியல உதய்’ அவனிடம் மனதால் பேசினாள் மாது.

 

ஊட்டி முடித்துவிட்டு கண்கட்டை அவிழ்த்து விட்டவன் நீரை சூடாக்கி மாத்திரையும் கொடுத்தான். ஷாலு தூங்கி விட “நீங்களும் தூங்குங்க இதயா. நான் போயிட்டு வரேன்” என்று எழுந்தவனைத் தடுத்து,

 

“எனக்கு தூக்கம் வரல. உன் கிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்று கேட்டாள்.

 

“இப்படி பர்மிசன் கேட்க தேவையே இல்லைங்க. உங்களுக்கு தோணுறதைக் கேளுங்க” அவளது முகத்தைப் பார்த்தான்.

 

“அது வந்து… நீ.. டாக்டர்?” என அதற்கு மேல் பேசாமல் நிறுத்தியவளுக்கு தான் இவ்வாறு கேட்பதால் அவனது மனம் காயப்படுமோ என்ற அச்சம் சூழ்ந்தது.

 

“ஹே பெண்டா பேபி!நான் டாக்டர் ஆனது எப்படி? எப்படி படிச்சேன்னு கேக்குறியா?” என்று சாதாரணமாகத் தான் கேட்டான் ஆண்மகன்.

 

“ம்ம்” என தலையை மேலும் கீழுமாக ஆட்டியது அவனின் பெண்டா பேபி.

 

“இதைக் கேட்க இவ்ளோ தயங்க வேண்டுமா? என் கிட்ட கேள்வி கேட்குற முழு உரிமை உங்களுக்கு இருக்கு” என்று கூறியவன்,

 

“யாருமில்லாத அனாதையா, தனிமையில் எனக்குன்னு ஸ்பெஷலா பாசம் காட்ட யாரும் இல்லையான்னு தவிச்ச என்னோட தவிப்பைப் போக்க எனக்காகவே வந்தவர் என் ராவ் சார். அவர் ஊர் மெட்ராஸ். ஆசிரமத்துக்கு டொனேஷன் தர வந்தப்போ ஆறு வயசான என்னைப் பார்த்தார். என் முகத்தில் இருந்த சிரிப்பு அவருக்குப் பிடிச்சிருந்ததாம். என் கூட வந்து பேசினார். அவருக்கு என் மேல தனி பாசம் உருவாகிடுச்சு. வருஷத்துக்கு நான்கு தடவை என்னைப் பார்க்க வருவார்.

 

என் கிட்ட உனக்கு என்னவாகப் பிடிக்கும் கண்ணா என்று கேட்டார். நான் பெரிய டாக்டராக ஆகனும் அங்கிள் அப்படினு சொன்னேன். எனக்கான படிப்பு செலவை ஏத்துக்கிட்டு அவர் வீட்டுக்கு போக கூப்பிட்டார். அவரோட போனா அவர் பாசத்தை அவரோட பசங்க கிட்ட இருந்து நான் பங்கு போடுற மாதிரி இருக்கும்னு தோணுச்சு. அதனால போகல! அவர் என்ன படிக்க வச்சாரு. ஆசிரமத்தில் இருந்து வந்து பிளாட்டில் தங்கினேன். பாலைவனமா இருந்த என் வாழ்க்கையை அன்பால பூஞ்சோலையா மாத்துனவர் ராவ் அங்கிள். அவர் எப்போடா என்னைப் பார்க்க வருவார்னு அவ்ளோ ஆசையோட காத்துக்கிட்டு இருப்பேன்” கண்களில் அத்தனை அன்புடன் பேசினான் வர்ஷன் மேலும் தொடர்ந்தான்.

 

“எனக்கே எனக்குன்னு பாசம் காட்டுன முதல் உறவு ராவ் அங்கிள். அங்கிள்னு வெளிப்படையா கூப்பிட்டாலும் என் அப்பா, அம்மா, உயிரே அவர் தான். என்னோட சாமி ராவ் அங்கிள். இந்த உலகத்துல எனக்கு பிடிச்சது அவரைத்தான். அவருக்கு அப்புறமா உங்களைப் பிடிச்சது. ஏனோ உங்க முகத்தில நான் அங்கிளைப் பார்த்தேன்” முழுவதுமாகக் கூறி முடித்தான் அவன்.

 

“எனக்கும் அவரைப் பாக்க ஆசையா இருக்கு உதய். உங்க ராவ் அங்கிள் நிஜமாவே பெஸ்ட்” என்ற புன்னகைத்த அதி அவருக்கு மனதினுள் நன்றி கூறி அவருக்காக கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டாள்.

 

அடுத்த இரு நாட்களாக அவளை முடியும் போதெல்லாம் வந்து பார்த்துக் கொண்டான் உதய். அதியின் மனம் அவன் பால் சாய்ந்து கொண்டே வந்தது. ஆனால் அவள் அதற்குப் வைத்த பெயர் அன்பு!

 

ஷாலு கிட்ஸ் பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்க, அவளது சேட்டைகளை ரசித்துக் கொண்டிருந்தாள் நிலா.

 

அங்கே ஒருவனை கண்டவளின் முகமோ அதிர்ச்சியில் விரிந்தது. அது அவளது சித்தப்பா மகன் பிரகாஷ்! அவனது தோற்றமே மாறியிருந்தது. முன்பு தினம் தினம் புது ட்ரெஸ் கூலிங் கிளாஸ், கழுத்தில் வெள்ளி செயின் என்று ஹீரோ போல் இருப்பவன், இப்பொழுது தாடி வளர்த்து தொங்கும் டிசர்ட் அணிந்து முடியை வளர்த்து பார்க்கவே அலங்கோலமாக இருந்தான்.

 

பிரகாஷின் தோளில் கை போட்டு சினேகமாக உரையாடிக் கொண்டிருந்த இன்னொரு ஆணின் முதுகையை பார்த்தவளின் விழிகளோ, அவன் திரும்பியதும் உறைந்து நின்றன. அது வேறு யாரும் அல்ல உதய வர்ஷனே தான்.

 

பிரகாஷ் அவளைத் தாண்டிச் சென்று விட தன்னவளைக் கண்டு “ஓய் பெண்டா குட்டி” என்று அருகில் வந்தான் உதய்.

 

“அது யாரு?” தெரியாதது போல் வினவினாள் அவள்.

என்ன தான் சித்தப்பா மோகன் பணத்தாசை பிடித்தவராக இருந்தாலும் பிரகாஷ் அவளோடு வந்து நன்றாக பேசுவான். அவனிடத்தில் அலாதியான அன்பு எப்போதுமே அவளுக்கு உண்டு.

 

“என் காலேஜ் மேட் பிரகாஷ்! மெடிக்கல் அப்பார்ட்மெண்ட்ல என் கூட பழகுனவன். அவனோட பெரியப்பா பொண்ண லவ் பண்ணுனான். என் கிட்ட அம்மு அம்மு என்று சொல்லி காதுல ரத்தம் வர வெச்சிடுவான். அந்த பொண்ணுக்கு இவன் காதலைச் சொல்லி இருக்கான் அவளுக்கும் இவன் மேல ரொம்ப பாசம். அப்படி இருக்கும்போது அந்தப் பொண்ணு வேற பையன் கூட ஓடிப் போயிட்டாளாம். இவன் உடைஞ்சு போயிட்டான். அவளுக்காக தேவதாஸ் மாதிரி திரிஞ்சான். அவன் அப்பா கிட்ட உங்க உறவே வேண்டாம் என்று சொல்லிட்டு போயிருக்கா அந்தப் பொண்ணு” என்று கூறியவன் முகத்திலும் குரலிலும் நண்பனை நினைத்து கவலை இழையோடியது.

 

ஒரு நாளில் எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவது என்பது போல் நின்றாள் அதிய நிலா. முன்பொரு நாள் “உன்னை காதலிக்கிறேன் அம்மு. உனக்காக எத்தனை வருஷமானாலும் காத்துட்டு இருப்பேன். இல்லனா செத்துருவேன்” என்று பிரகாஷ் கூறியதும், அவள் கிண்டலாக வாய் விட்டுச் சிரித்ததும் நினைவுக்கு வந்தது.

 

அதன் பிறகு அவன் அந்த வார்த்தையை சொல்லவும் இல்லை. வழக்கம் போல பழகினான். ஏதோ விளையாட்டாக சொல்வதாக நினைத்து அதி மறந்து விட்டாள்.

 

“பிரகாஷ் விசயத்தில் அந்த பொண்ணு மேல என்ன தப்பு இருக்கு?” என்று புரியாதவளாக அவனை ஏறிட்டாள்.

 

“ஆமா அதுவும் கரெக்ட் தான்! ஆனா இவன் தான் அவ மேல பைத்தியமாகி விஷம் குடிச்சுட்டான். ரொம்ப கஷ்டப்பட்டு காப்பாத்தினோம். அவனை உயிரா காதலித்த ரியாவால இப்போ கொஞ்சம் அதை மறந்துட்டு இருக்கான்.

 

ஆனால், என்ன இருந்தாலும் அந்த பொண்ணு செஞ்சது பிழை. பாசத்தை, உறவுகளை வேணானு ஒதுக்கி தள்ளிட்டு போயிட்டாங்க. அன்புக்காக ஏங்குற என்னைப் போல ஆட்களுக்குத் தான் அன்போட மதிப்பு தெரியும். எவ்வளவு பாசமா வளர்த்த உறவுகளை விட்டுட்டு போயிட்டா. எனக்கு இந்த விஷயத்தில் அவளை வெறுத்து போச்சு.  அப்படி என்ன உறவுகளை கூட மறக்குற அளவுக்கு பொல்லாத காதல்?” என்று கூறியவனின் கோபத்தை வாழ்வில் முதல் முறையாகக் காண்கிறாள். இன்றுதான் முகம் சிவக்க நின்றவனைக் கண்டு பயந்து போனாள் அவள்.

 

அவளது பயத்தைக் கண்டு அவனோ சட்டென தன்னைச் சரி செய்து கொள்ள, அந்தப் பெண் நான் தான் என்று கூற அவளுக்கு நா எழவில்லை.

 

எங்கே அவனுக்குத் தன்னை பிடிக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் அவளுக்கு. இதில் பிரகாஷ் மீது எந்தத் தவறும் இல்லை. மோகன் தான் மகனிடம் அவள் ஓடிப் போனதாக கதைக்கட்டி இருக்கிறார் என்பது புரிந்தது.

 

“நீங்க எதுக்கு ஒரு மாதிரி இருக்கீங்க? நான் எதையோ சொல்லி உங்க மைண்ட்டை அப்செட் பண்ணிட்டேனா” என மெதுவான குரலில் கேட்டான் உதய்.

 

“அப்படியில்லை” என தலையசைக்க புன்னகைத்தான் அவன்.

 

“அப்புறம் எப்போ என் லவ்வை ஏத்துப்பீங்க? நாட்கள் மின்னல் வேகத்தில் ஓடிக்கிட்டு இருக்கு. என் காதல் மட்டும் ஆமை வேகத்துல நகருது. மீ பாவம்” என்று உதவி பிதுக்கினான்.

 

அவனது முகபாவனைகளில் “சாருக்கு ரொம்பத் தான் கவலை” என்று சிரித்தாள் அவள்.

 

“இதயா! என் கூட ஒரு இடத்துக்கு வரணும்” என்று அவன் கூற, “எங்கே போறோம்? நான் ரெடி” என்று சிரிப்புடன் ஓடி வந்து உதய்யிடம் ஒட்டிக்கொண்டாள் ஷாலு.

 

“வாங்க நடந்துட்டே பேசலாம்” என்று கூறி ஷாலுவைத் தூக்கியவாறு  நடக்க அதியும் பின்னால் சென்றாள்.

 

ரோட்டுக் கடையில் நின்று “நீங்க இங்கே பிரியாணி சாப்பிட்டு இருக்கீங்களா? பாவா கடையில பிரியாணி செம்மையா இருக்கும்” என்று கூறியவனை இமைக்க மறந்து பார்த்தாள் தியா.

 

ரோட்டு கடையில் பிரியாணி சாப்பிடும் ஆசை அவளுக்கு சிறுவயதிலிருந்து இருந்தது. ஆனால் அவளது அம்மா வேண்டாம், அதுல என்னெல்லாம் இருக்கோ, சுத்தமா செய்றாங்களான்னு தெரியல, என்று பத்துக் காரணம் சொல்லி தடுத்து விட்டார். இன்று தனது கனவு நினைவாகுவது ஆனந்தமாக இருந்தது.

 

“ஓகே சாப்பிடலாம். பட் ஒன் கன்டிஷன். இன்னிக்கு என் கையால தான் பணம் கொடுப்பேன் ஓகேவா?” என்று அவள் கேட்க முதலில் மறுத்தவன் அவளது பிடிவாதத்தின் பின்னர் சம்மதித்தான்.

 

பிரியாணியும் வந்தது. “சாப்பிடு கியூட்டி” என உதய் ஷாலுவுக்கு ஊட்டி விட்டான். அவளும் சிரிப்புடன் வர்ஷுவுக்கும் அத்துவுக்கும் ஊட்டி விட மகிழ்வுடன் சாப்பிட்டனர். மிகவும் சந்தோஷமாகவே அந்த நாள் முடிந்தது.

 

வீட்டுக்கு சென்றதும் ஷாலு களைப்பில் சட்டென உறங்கி விட்டாள். அதிக்கோ உறக்கம் எட்டாத தூரத்திற்கு சென்றது. பிரகாஷின் கவலை தோய்ந்த முகம் அவளை வருத்தம் கொள்ளச் செய்தது.

 

உதய்யின் கோபம் இதயத்தை உலுக்கிப் பார்த்தது. என்ன தான் அவள் தவறே செய்யா விட்டாலும் பிரகாஷ் காதலித்த பெண் அவள் தான் என்பதை அவளால் கூற முடியவில்லை. அவனது முகத்தில் அவளுக்காக ஒரு துளி கூட வெறுப்பு ஏற்படுவதை அவள் விரும்பவே இல்லை.

 

“ஓ நீங்கதான் அந்த பொண்ணா? ச்சே பிரகாஷோட இந்த நிலைக்கு காரணம் நீங்கனு நான் எதிர்பாரக்கவே இல்லை” என்று முகத்தில் வெறுப்பைத் தேக்கி அவன் கேட்பது போல் தோன்ற காதைப் பொத்திக் கொண்டாள் இதயா.

 

அடுத்த நாட்களிலும் இதுவே தொடர்ந்தது. அவளால் உதய் முகத்தைப் பார்த்து சகஜமாகப் பேச முடியவில்லை. ஒரு நாள் ஷாலுவுடன் வீதியைக் கடக்க இருந்தவளுக்கு உதய்யின் முகமும் பிரகாஷின் முகமும் மாறி மாறித் தோன்ற அவளால் நிலை கொள்ள முடியவில்லை.

 

தலையும் விண் விண்ணென்று வலிக்க தலையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். எதிர்ப் பக்கத்தில் உதய் இருப்பதைக் கண்ட ஷாலு அத்தையின் கையை விட்டுக் கொண்டு நடு வீதிக்கு சென்று விட்டதை அவள் கவனிக்கவில்லை.

 

அங்கிருந்தவர்களின் அலறலில் சட்டென தன்னிலை மீண்டு ஷாலினியின் நிலையைப் பார்த்து உச்சபட்ச அதிர்வுடன் நின்ற அதி “வர்ஷூஊஊ” எனக் கத்தும் போதே கண்கள் சொருக மயங்கிச் சரிந்தாள்.

 

தன்னவள் குரலில் திரும்பிய உதய், தன் மீது அன்பை வாரி இறைத்த இளம்பிஞ்சு நடுவீதியில் நிற்பதையும் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருப்பதையுக் கண்டான்.

 

முள்ளந்தண்டு சில்லிட ஓடி வந்து ஷாலுவின் கையை இழுத்தெடுத்து அவளைக் கைகள் நடுங்க இறுக்கி அணைத்துக் கொண்டான் அந்தக் கியூட்டியின் வர்ஷு.

 

நிலவு தோன்றும்….!!

 

 

✒️ ஷம்லா பஸ்லி❤️

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!