💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 07
ராஜீவைக் கண்ட நொடி கண்களில் காதலும், கண்ணீரும் ஒருங்கே வழிய நின்றாள் ஜனனி.
இதழ் பிரித்துப் புன்னகை பூத்தான் அவன். இருவர் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
“ராஜீவ் அண்ணா” எனும் மகிஷாவின் குரலில் மோன நிலை கலைந்து, “ஹேய் மகி குட்டி” என்றழைத்தான் ஆடவன்.
“வர்றது தான் வந்தீங்க. எனக்குனு ஒரு ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? வெளியூர் பையனுக்காக நானும் எவ்வளவு காலம் வெயிட் பண்ணுறது?” அவள் பெருமூச்சு விட,
“வெயிட் பண்ணு. நேரம் வரும் போது காலமே உனக்காக ஒருத்தனைக் கொண்டு வந்து சேர்க்கும். அது வரை பொறுமை முக்கியம் டா” என ராஜீவ் சொல்ல, “நல்லா கேட்டுக்க. இல்லனா தினமும் கனவுக் காதலன் குதிரையேறி வருவான்னு கலர் கலரா கனவு கண்டுட்டு திரிவா” என்ற ஜனனி அவனை வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.
“வா ராஜ். வீட்டுல அப்பாம்மா எல்லாரும் சுகமா?” ஜெயந்தியின் கேள்விக்கு, “எஸ் ஆன்ட்டி. எல்லாரும் நல்லா இருக்காங்க” என்று பதிலுரைத்தான்.
சோஃபாவில் சோகமே உருவாய் அமர்ந்திருந்தாள் நந்திதா. அவளைப் பார்க்கும் அனைவருக்கும் கவலையாக இருந்தது.
“இரண்டாம் தாரம்னு இவ யோசிக்கிறா போல. எல்லாப் பெண்ணுக்கும் முதல் மனைவியா இருக்கனும்னு தானே ஆசைப்படுவாங்க” தனது ஆதங்கத்தை வெளியிட்டார் ஜெயந்தி.
“ம்மா! அவளுக்கு இந்த கல்யாணமே பிடிக்கலனு எனக்கு தோணுது. இதுல ரெண்டாவதா இருந்தா என்ன? நாலாவதா இருந்தா என்ன?” ஜனனியின் பார்வை அவளைத் தைத்தது.
“என்னவோ சொல்லுங்க. என்னால இதில் முழு மனசோட சம்மதிக்க முடியல” என சென்று விட்டார் அவர்.
“நந்திதா! ஜானு சொல்வது உண்மையா? அப்பா சொல்லுறதுக்காக விருப்பமில்லாம ஒத்துக்குறீங்களா?” ராஜீவ் அக்கறையாக வினவ,
“அதில் என்ன தப்பிருக்கு ராஜீவ்? அப்பா சொன்னதை மீறி என்னால அதுவும் செய்ய முடியாது தோணுது. அப்படி வேண்டாம், உங்க இஷ்டப்படி முடிவெடுங்கனு ஜானு சொல்லலாம். ஆனால் அதை நீங்க சொல்ல முடியாது” என்ற நந்திதாவின் வார்த்தை அவன் மனதைத் தைத்தது.
உண்மை தானே? தந்தை சொற்படி செய்ய வேண்டாம் என்று அவனால் சொல்ல முடியாது. ஏனெனில் அவனும் குடும்பத்திற்காக தனது காதலை துறக்க நினைத்து விட்டானே?!
“அக்கா! உன்னைப் பற்றி பேசுறோம். என்ன தான் பிரச்சினை உனக்கு? சம்மதம்னா சந்தோஷமா இரு. நீ இப்படி இருக்கிறதைப் பார்த்து நாங்க என்ன நினைக்கிறது?” என்றாள் மகிஷா.
“எதுவும் நினைக்க வேண்டாம். எல்லாம் என் தலையெழுத்துனு வெச்சுக்க” கோபமாக அறையினுள் புகுந்து கொண்டாள் நந்திதா.
ஜனனிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ராஜீவ்வைத் தவிப்புடன் பார்க்க, “ரிலாக்ஸ் ஜானு! எதுவும் நம்ம கையை மீறி நடக்காது. அப்படியே நடந்தாலும் சில விஷயங்கள் கடவுளோட முடிவு இது தான்னு ஏத்துக்கனும். வேற வழி இல்ல” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
“வந்ததில் களைப்பா இருப்ப. தூங்கி ரெஸ்ட் எடு கொஞ்சம். இன்னும் த்ரீ ஹவர்ஸ்ல மாப்பிள்ளை வீட்டுல வேற வர்றாங்க” என்றவாறு அவனுக்கு உணவு பரிமாறினாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே அவன் சாப்பிட, “என்ன?” வெட்கத்தோடு கேட்டாள் அவள்.
“நத்திங் டா” பார்வையை விலக்கிக் கொண்டவனுக்கு, அவளது அருகாமை ஏதோ செய்தது.
அவன் சாப்பிட்டு விட்டு உறங்கச் செல்ல, அவனையே பார்த்தவளுக்கு கண்கள் கலங்கின.
“அக்கா…!!” மகிஷா தோள் தொட, அவளை அணைத்துக் கொண்டாள்.
“ஏன் மகி வாழ்க்கை இப்படி இருக்கு? நான் அவனை எவ்ளோ லவ் பண்ணுறேன் தெரியுமா? அவன் கண்ணுலயும் காதல் இருக்கு. ஆனால் சேர முடியாத நிலமை” அவள் கண்களில் கண்ணீர்.
“ப்ச் அக்கா அழாத. எப்போவும் தைரியமான பொண்ணா இருப்ப. இப்போ இப்படி அழுறியே” மகிக்கு அவளைப் பார்க்க, மனம் கலங்கியது.
“இந்தக் காதலே இப்படித் தான் டி. நம்ம தைரியத்தை சுத்தமா உடைச்சிடுது. அவன் என்னை விட்டுப் போவான்னு நெனச்சா என்னால தாங்க முடியல மகி”
“எதுக்கு விட்டுப் போகனும்? ரெண்டு பேரும் சேர்ந்து போராடி இந்தக் காதலை ஒன்னு சேர்க்கலாம் தானே?” எனக் கேட்டாள் சின்னவள்.
“ராஜ் என்னைக் காதலிக்கிறது உண்மை. ஆனால் குடும்பம்னு வரும் போது பின் வாங்குறான். அப்படி இருக்கும் போது எப்படி போராட முடியும்? ரெண்டு பேரும் ஸ்ட்ராங்கா இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இப்போ அவனைப் பார்த்த அந்த நிமிஷம் எனக்கு கட்டிப் பிடிச்சிட்டு அழனும் போல இருந்துச்சு. ஆனால் அந்தளவு உரிமை எனக்கில்லனு இருந்துட்டேன். அப்போ எவ்ளோ வலிச்சுது தெரியுமா? சினிமால எல்லாம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காணுற நேரம் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரியும்ல? ஆனால் என் ஆசை சுத்தமா இல்லாம போச்சு. நானே அதைப் பண்ணியிருந்தாலும் அவன் அதை ஏத்துக்க மாட்டான்” அவள் கண்களில் கண்ணீர் மழை.
“எல்லாம் தெரிஞ்சும் ஏன் லவ் பண்ணுறக்கா?” மகி கேட்க, “எனக்கு தெரியல. அவன் கூட பேசாம இருக்க முடியல என்னால. என்ன பண்ணனும்னு எனக்கு தெரியல. இருந்தாலும் நான் அவனை காதலிக்கிறேன்” கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள் ஜனனி.
மகிஷாவுக்குப் புரிந்தும் புரியாத நிலை. இந்தக் காதலே இப்படித் தான். அந்தக் காதல் ஒருவருள் நிகழ்த்தும் மாயையை அவரைத் தவிர யாராலும் முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது.
…………….
காலையுணவு மேசையில் வைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடவும் மறந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனையில் மூழ்கியிருந்தனர்.
“சாப்பிடுங்க. சீக்கிரம் போகனும்ல?” என்ற மேகலையின் கண்கள் மூத்த மகன் மேல் நிலைத்தன.
இறுகிப் போன முகத்துடன், எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா.
“டாடி! பசிக்குது” அவனது கையைத் தட்டிய மகனைக் கூட கண்டு கொண்டான் இல்லை.
“சத்யா! யுகி கூப்பிடறான்” ரூபன் சற்று பலமாக அவனை உலுக்கியதும், சட்டென சிந்தை கலைந்து மகனைப் பார்த்தான்.
“என்ன யோசிக்கிறீங்க டாடி?” தன்னை அன்போடு நோக்கிய மகனை ஏறிட்டு, “நௌ அய்ம் ஓகே கண்ணா” அவனுக்கு ஊட்டி விட்டான்.
சிறு வயது முதல் அவனுக்கு ஊட்டிப் பழகி விட்டான். சத்யாவும் மகனுக்கு ஊட்டி விட்டே சாப்பிடுவான்.
மகனோடு பேசியவன் மறந்தும் மற்றவர் பக்கம் திரும்பவில்லை. அன்று திருமணத்திற்கு சம்மதம் வாங்கியது முதல் இப்போது வரை எவருடனும் முகங்கொடுத்துப் பேசவில்லை. யூ.எஸ் டிக்கட்டை கேன்சல் செய்து விட்டான்.
“சத்யா! இன்னும் கொஞ்சத்தில் நாம கிளம்புவோம். நீ போய் ட்ரெஸ் மாத்திக்கிட்டு வா” என மேகலை சொல்ல, “கல்யாணத்துக்கு ஓகே சொல்லியாச்சுல்ல. அதைத் தவிர எதுவும் என் கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க. அதனால என்ன நடந்தாலும் நீங்க தான் பொறுப்பு” என்று எழுந்து கொண்டான்.
“டேய் சத்யா” மேகலை அவரை அழைக்க, “எனக்கு இந்த கல்யாணத்தில் சுத்தமா விருப்பம் இல்லை. நீங்க கம்பிள் பண்ணி என்னை சம்மதிக்க வெச்சிருக்கீங்க. இதை நான் அந்தப் பொண்ணு கிட்ட சொல்லத் தான் போறேன். அதுக்கு அப்பறமும் அவ சம்மதிச்சா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று விட்டான் அவன்.
“இது செல்லாது சத்யா. நீ கல்யாணம் பண்ணிக்கனும் என்கிறது தான் என் சத்தியம். அதை நினைவில் வெச்சுக்க. இந்த பொண்ணு கூட நிச்சயம் பண்ணித் தான் ஆகனும்” என்றான் தேவா.
“நீ என்னடா நெனச்சிட்டு இருக்க? அந்தப் பொண்ணு எத்தனை ஆசைகளோட கல்யாணம் பண்ணிக்க வருமோ? ஒன்னும் சொல்லாம கல்யாணம் பண்ணி அந்தப் பொண்ணு சந்தோஷத்தை கெடுக்க சொல்லுறியா?” கோபமாகக் கேட்டான் அவன்.
“எனக்கும் தெரியும். ஒரு பொண்ணுக்கு பண்ணுற துரோகம் அதுன்னு எனக்கு தெரியாதா? நான் இந்த விஷயத்தைக் கூட அங்கே சொல்லித் தான் கல்யாணம் பேசினேன். அதுவும் உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லைங்கிற விஷயத்தை அந்த பொண்ணு கிட்ட தான் சொன்னேன். அது எதுவும் சொல்லாமல் ஓகே ஆன்ட்டினு சொல்லுச்சு. போகப் போக எல்லாம் சரியாகும்னு நான் சொல்லிட்டு வெச்சேன்” மேகலை அவ்வாறு சொன்னதைக் கேட்டு, மூவருக்கும் அதிர்ச்சியே.
விருப்பமில்லாதவனைக் கல்யாணம் செய்ய ஒப்புக் கொண்டாள் என்றால் அப்படித் தானே இருக்கும்.
ஆம்! மேகலை அதை நந்திதாவுக்கு அழைத்துக் கூறினார். அவள் இருந்த மனநிலையில் அதுவெல்லாம் தலைக்கேறவில்லை.
“ஓகே ஆன்ட்டி. எனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம்” என்றதும் தான் அவருக்கு மூச்சே வந்தது.
“அப்படினா சொல்ல எதுவும் இல்லை” என்று விட்டான் சத்யா.
அவனுக்கு இன்னொரு திருமணத்தை நினைக்கவும் முடியவில்லை. முதல் திருமணத்தால் அவன் பெற்ற காயம் அப்படிப்பட்டது. மேகலை சொல்வது போல் அந்தக் காயம் இப்போது வரப் போகின்றவளால் ஆறப்போவதும் இல்லை என நினைத்துக் கொண்டான்.
“டாடி! நீங்க கல்யாணம் பண்ணியே ஆகனுமா?” என யுகன் வினவ, “பண்ணலனா என்னை உயிரோட விட மாட்டாங்க டா. பண்ணிக்க தான் வேணும்” என மகனைத் தூக்கிக் கொண்டு நடக்க, மேகலை தொய்ந்து போய் அமர்ந்தார்.
“எப்படி இருந்த நம்ம குடும்பம் இப்படி ஆகிருச்சே. நாம சந்தோஷமா மனசு விட்டு சிரிக்கிற காலம் எப்போ வரும்?” கண்ணீரோடு கேட்க,
“கூடிய சீக்கிரமே வரும்மா. எல்லாமே மாறும். வாழ்க்கை இன்ப துன்பங்களோட சுழற்சினு நீங்க சொல்லுவீங்களே. இப்போ கஷ்டமா இருக்கு. ஆனால் எல்லாம் மாறத் தான் போகுது. பார்த்துட்டே இருங்க” தாயின் கையைப் பற்றிக் கொண்டான் ரூபன்.
“ஆமாம்மா. இவ்ளோ நாள் சத்யா யூ.எஸ்ல நாம இங்கேனு இருந்தோம். இப்போ அவர் வந்து, கல்யாணம் கூட நிச்சயமாகிடுச்சு. இதை நல்ல சகுனமா நினைங்க. நாம யாருக்கும் கெடுதல் பண்ணலயே மா. சோ நல்லதே நடக்கும்” அவரது மறு பக்கத்தில் அமர்ந்து கொண்டான் தேவன்.
“என் தங்க கட்டிங்க. என்னை சிரிக்க வைக்க சொல்லுறீங்க. ஆனால் உங்க பேச்சு உண்மையாகட்டும். நானும் நம்புறேன். உங்கப்பா அடிக்கடி ஏதோ சொல்லுவாரே இங்கிளீஷ்ல அது என்ன? ஏதோ ஆழம் வெள்ளம்னு” நாடியில் விரல் தட்டி யோசிக்க,
“ம்மா! அது ஆல் இஸ் வெல்” சிரித்து விட்டனர் இருவரும்.
“அதே அதே தான். ஆல் இஸ் வெல். நான் போறேன். நீங்க கதவை மூடிக்கிட்டு வாங்க” என்றவாறு மேகலை செல்ல,
“நாம இழந்த சந்தோஷம் திரும்ப கிடைக்கனும் தேவ்” என ஏக்கத்துடன் கூறிய ரூபனுக்கு கண்களால் ஆறுதல் கூறி, அவனைக் கட்டிக் கொண்டான் உடன் பிறந்தவன்.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி
24-12-2024