💙 விஷ்வ மித்ரன் 💙
அத்தியாயம் 07
டிசர்ட் பொbட்டமில் ரெடியாகி வந்து “அக்ஷு! பூசணிக்கா” என கத்தினான் விஷ்வா.
அவனது கத்தலில் ஓடி வந்தவளோ “என்னண்ணா எதுக்கு கூப்பிட்ட?” என்று மூச்சு வாங்க நிற்க,
“ரெடியாகிட்டு வா.நாம வெளில போகலாம்” என்க, அவளோ விழி விரித்துப் பார்த்தவள் “அய்ய் செம்ம டா” துள்ளிக் குதித்து ஓடினாள்.
அக்ஷரா ரெடியாகிட்டு வர இருவரும் பைக்கில் ஏறிச் சென்றனர். விஷ்வாவின் இந்த மாற்றத்தில் உள்ளம் குளிர்ந்தது பெற்றோருக்கு.
“அண்ணா! எத்தனை நாளைக்கு பிறகு இப்படி வெளிய வந்திருக்கோம்? ஐய்ம் சோ ஹேப்பி” என்றவளின் சிரிப்பில் தானும் மகிழ்ந்து போனவன் பைக்கை பீச் அருகே நிறுத்தினான்.
அவள் கடலலைகளில் மழலையாய் மாறி விளையாடும் அழகை ரசித்தவனுக்கோ இத்தனை நாளாய் இந்த சந்தோஷத்தை தொலைத்து வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியத் தான் செய்தது.
தண்ணீரில் ஆட்டம் போட்டு விட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள்.
கால்களை நீட்டி முட்டி வரை உயர்த்தியிருந்த ஜீன்ஸை கீழே இழுத்து விட்டுக் கொண்டு “விஷு! எனக்கு ஒரு டவுட்” என அவன் கையைச் சுரண்டினாள்.
அவள் புறம் திரும்பி அமர்ந்து கொண்டவனோ “சொல்லு குட்டிம்மா” என்று அவளைப் பார்த்தான்.
“அருள் ஒரு பொண்ண காதலிக்கிறதா சொல்லி தானே நம்மள விட்டுப் போனான். இப்போ அந்த பொண்ண கல்யாணம் பண்ணியும் இருப்பான் இல்ல? அப்படி இருக்கும் போது எப்படி என் கூட சேர்த்து வைக்கிறேனு சொன்னே?” என்று புரியாமல் தான் கேட்கலானாள் அவள்.
அவள் மீது உணர்வற்ற ஒரு பார்வையை வீசியவனோ “எனக்கு என் மித்துவ பற்றி தெரியும் டி. அவன் அப்படி யாரையுமே காதலிக்கல. என்ட் அன்னிக்கு என் கிட்ட சொன்னான்ல. ‘நான் ஒரு பொண்ண லவ் பண்ணுறேன் விஷு! எனக்கு அவள் வேணும்னா உன் நட்ப தூக்கி எறிஞ்சுட்டு வர சொன்னா. நானும் போய் தான் ஆகனும். எனக்கு என் லவ் தான் முக்கியம். சோ நான் போறேன். என்னைத் தேடி வராத பை டா’ அப்டினு.
அதெல்லாமே சுத்தப் பொய்யினு எனக்கு நல்லாவே தெரியும். அவன் உயிர விட்டிருந்தா கூட விடுவானே தவிர, என்னை விட்டு போக மாட்டான் இந்த காதலுக்காக எல்லாம்” என்றவனை அமைதியாய் பார்த்தாள்.
“ஒரு சின்ன விசயத்த கூட என் கிட்ட மறைக்காத மித்து எப்படி லவ் பண்ணுறத மறைப்பான்? அவனுக்கு யார் மேலயும் காதலே இல்லை” என்க, அவள் கண்களோ அகல விரிந்தது.
“பொய்யினு அப்போவே தெரியும்னா யேன் அவனைத் தடுக்கல? தேடிப் போகல?” ஒற்றை வினா அக்ஷராவிடம் இருந்து புறப்பட்டது.
“என்னமோ நடந்திருக்கு அக்ஷு. மித்து என்னை விட்டு போறான்னா அவன் மனசு ஹர்ட் ஆகி இருக்கு. அதையும் விட ஏதோ பெரிய ஒரு காரணம் இருக்கு. அவன் தேடி வர வேணானு சொன்ன ஒரே காரணத்துக்காக தான் போகல” என்றவனைப் பார்த்து ஓர் நொடி புருவம் சுருக்கினாள்.
“சரி! இவ்ளோ நாளும் நீயா போய் அவன கஷ்டப்படுத்த விரும்பலங்குறது ஓகே. இப்போ அவனா பேச வந்தும் காயப்படுத்தினா என்ன அர்த்தம்?” என்று கேட்க, அவனோ அதிர்ச்சியில் நின்றான்.
வார்த்தைகள் தடுமாற “மி…மித்து இங்க இருக்குறது, நான் அவனைத் திட்டினது உனக்கு எப்படி தெரியும்?” திக்கித் திணறினான் விஷ்வஜித்.
“எனக்கு எல்லாமே தெரியும் ணா. நீ அவனை துரோகினு சொன்னதுவும் தெரியும். எப்படினு பார்க்குறியா? நீ அன்னிக்கு குடிச்சிட்டு வந்தப்போ உன் ரூம்கு கொண்டு போய் விட்டேன். அப்போ தான் நீ அத சொல்லி வருத்தப்பட்ட” என்றவளைப் பார்க்க முடியாது தலையைக் குனித்துக் கொண்டான் அவன்.
நீண்ட நேர அமைதியைச் சீர்குலைக்க “உனக்கு மித்து மேல இன்னும் கோவம் இருக்கா?” என்று ஒலித்தது அக்ஷுவின் குரல்.
“இல்லடி கோவம்லாம் இல்லை. அவன் என்னை விட்டுப் போனதுல ஏதாவது நியாயமான ரீசன் இருக்கும். அவன் மேல எனக்கு என்றைக்குமே கோவப்பட முடியாது டி. ஆனாலும் நிறையவே வருத்தம். என்ன நடந்தாலும் எப்படி என்னைத் தனியா விட்டு போகலாம்?
அவன் என்னைப் பற்றி யோசிக்கவே இல்லையா? அவன் இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு தோணவே இல்லையா? என்ன ப்ராப்ளமா இருந்தாலும் அத என் கிட்ட சொல்லி ரெண்டு பேருமா சேர்ந்தே அத சால்வ் பண்ணிருக்கலாமே அப்படினு வருத்தம், ஆதங்கம் தான் ரொம்பவே இருக்கு” என்றவனை ஆச்சரியமாகத் தான் ஏறிட்டாள் காரிகை.
இவன் மித்து மேல் கொண்டுள்ள பாசமும், நட்பும் தான் எத்தனை உயர்ந்தது? தனது நட்பே வேண்டாம் என்றவனை இந்தளவு புரிந்து வைத்து அவன் மேல் அளவற்ற அன்பு பூண்டிருக்கின்றானே என வியந்தாள்.
அவன் மேல் கோபமே இல்லை என்றவன் எதற்காக துரோகி என்றான்? எனும் கேள்வி ஒன்று மட்டுமே அவளை யோசிக்க வைத்தது.
ஆனால் அவ்வினாவிற்கான விடையை அறிய நேரிடும் நேரத்தில் தான் பெரும் வேதனையுடன் கண்ணீர் வழிய இருக்கப்போவதை அவள் அறியாமல் தான் போனாள்!
அக்ஷரா “அப்படினா மித்து கூட போய் பேசலாம்ல?” எனக் கேட்டாள்.
“பேசக் கூடாதுன்னு தான் நெனச்சேன். ஆனாலும் இப்போ உனக்காக பேசி தான் ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன். என்ன இருந்தாலும் அவனோட பிரிவு எனக்குத் தந்த காயம் ஆறாத ரணமாத் தான் இருக்கு. அது எப்போ ஆறுதோ அப்போ தான் பழையபடி அவன் கூட பழகலாம்” எனப் பெருமூச்சு விட்டான் அவன்.
“அண்ணா! அவனுக்கு கல்யாணம் ஆகலைனு நீ உறுதியா சொல்லுற. அப்போ அன்னக்கி தாலியோட அவன் பக்கத்துல நின்ன பொண்ணு யாரா இருக்கும்?” என்றதும் ஐஸ்கிரீம் பார்லரில் பைக்கை நிறுத்தி,
“லூசு அது வேற யாராவதா இருக்கும்? நீ இரு. நான் போய் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்” என்று தலையிலடித்து கொண்டு செல்ல முற்பட பூர்ணியை கண்டு கொண்ட அக்ஷரா “விஷு” எனக் கத்தினாள்.
அவன் என்ன என்பது போல் பார்க்க, பூர்ணியின் பக்கம் கை காட்டி “இவ தான் நான் சொன்ன பொண்ணு” என்க,
“இவ பெயர் பூர்ணி! மித்துவோட அத்தை பொண்ணு. இவள் ரோஹன் என்குற பையன கல்யாணம் பண்ணிக்க போறதா அவன் சொன்னான்” என்று விட்டுச் சென்றான் விஷ்வா.
அக்ஷராவுக்கோ இதைக் கேட்டு மனம் மகிழ்வில் தாண்டவம் ஆடியது. “அய்ய் அப்படினா அருளுக்கு கல்யாணம் ஆகலயா? என் காதல் தோற்று போகல. அவன் எனக்கு கிடைச்சிருவான்” அளவில்லா ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தாள்.
…………..
“வைஷு! டக்குனு வாடி” என்று பூர்ணி சத்தமிட்டுக் கொண்டிருக்க, “இதோ வந்துட்டேன் பூரி” என்று துப்பட்டாவை சரி செய்து கொண்டு வந்தாள் வைஷ்ணவி.
சிவப்பு நிற சுடிதாரில் ரோஜாவாக இருந்தவளைப் பார்த்து கண்களை அகற்ற முடியாது தான் போனது அவளுக்கு.
அவள் தலையில் தட்டிய வைஷு “இவ்ளோ நேரமா என் பெயரை ஏலம் போட்டுட்டு இப்போ எதுக்கு பப்பரப்பானு நிக்கிறே?” என்று கேட்டாள்.
பூர்ணியோ “சூப்பரா ஏஞ்சல் மாதிரி இருக்க டி. எனக்கே உன்ன விட்டு கண்ண விலத்த முடியல. உன் ஆளு பார்த்தானா தடக்குனு விழுந்துடுவான்” என்றாள்.
அவளை முறைத்து விட்டு “ஆளும் கீளும். நமக்கு அதெல்லாம் வேணாம் பா” என்று விட்டு ஸ்கூட்டியில் ஏறிக் கொண்டாள் பெண்.
ஓயாது வள வளத்துக் கொண்டே வந்த பூர்ணியின் தோளில் தட்டிய வைஷு “நாம எங்கே போறோம்?” என்னு வினவ, “ஐஸ்கிரீம் பாஃர்லர் போகலாம்” என்றவள் அங்கு சென்று நின்றாள்.
அங்குமிங்கும் தடுமாறிக் கொண்டு நடந்த வைஷுவைப் பார்த்த பூர்ணி “எதுக்குடி டான்ஸ் ஆடிட்டு வர்றே?” என்று கேட்க, அவளை மூக்கு முட்ட முறைத்து விட்டு “ஆஹ் வேண்டுதல் பாரு டான்ஸ் பண்ணனும்னு. நான் தான் அப்போவே சொன்னேன்ல இந்த ஹீல்ஸ்லாம் செட் ஆகாதுன்னு. நீ தான் பழகிடும்னு போட சொன்ன. இப்போ எனக்கு நிக்க கூட முடியல” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள் வைஷ்ணவி.
“அதெல்லாம் பழகிடும் பேபி” என்றவள் எங்கோ எட்டிப் பார்த்து விட்டு, “வைஷு! என் காலேஜ் மேட் ஒருத்தி வந்திருக்கா. வா போய் பேசிட்டு வரலாம்” என்று அழைத்தாள்.
மறுப்பாக தலையாட்டியவள் “இல்ல பூரி நீ போய் பேசிட்டு வா. நான் இங்கேயே வைட் பண்ணுறேன்” என்றாள்.
“ம்ம் சரி. பட் வேற எங்கேயும் போயிடாத. அப்புறம் என் தங்கச்சிய எங்க கொண்டு போய் தொலைச்சனு உன் நொண்ணன் என்னை சாவடிச்சிடுவான்” என்று சிரித்து விட்டுச் சென்றாள்.
வைஷுவுக்கு கால் வலிக்க, அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொள்ளலாம் என நினைத்து நடக்கப் போனவள், யார் மேலோ மோதப் போனதில் சட்டென விலகி நின்றாள்.
விழப் போனதில் பயந்து போய் கண்களை மூடியவள் தன்னை சுதாகரித்துக் கொண்டு எழுந்து நின்ற நொடி அங்கு விஷ்வாவைக் கண்டு அதிர்ந்தும் தான் போனாள்.
“சாரி சார்” என்று விட்டு நகரப் போனவள், “ஏய் குடிகாரி” எனும் அழைப்பில் அப்படியே நின்று பின்னால் திரும்பினாள்.
அவன் வேறு யாரையோ அழைத்து இருப்பான் என்று நினைக்க, அதை மறுக்கும் விதமாக அவள் முன் சொடக்கிட்டு “ஹலோ மேடம்” என்றான் அவன்.
மூக்கு விடைக்க அவனை நோக்கியவள் “யாரப் பார்த்து டா குடிகாரினு சொன்ன?” கோவமாக கேட்க, “உன்னத் தான் சொன்னேன். இப்படி தான் குடிச்சிட்டு வந்து பப்ளிக்ல பிஹேவ் பண்ணுவியா? ஒரு மேனர்ஸ் இல்ல?” கடுமையாகத் தான் பேசினான் அவனும்.
அதில் வைஷ்ணவிக்கு சுர்ரென கோபம் ஏற “ஹலோ மைன்ட் யூவர் வேர்ட்ஸ்! உனக்கு தான் மேனர்ஸ் இல்ல. ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசனும்ன்னு தெரியாது. அப்பறம் நான் குடிச்சத நீ கண்டியா?” என்றாள்.
“நீ நாலு கால்ல டிஸ்கோ மாதிரி தள்ளாடி தள்ளாடி நடக்குறத பார்த்தாலே தெரியுதே. அந்தக் கருமத்த குடிக்கிறத வேற நான் பார்க்கனுமோ? பொண்ணுங்கனா அடக்க ஒடுக்கமா இருக்கனும். இது என்னடானா கூத்தடிச்சிட்டு திரியுற?” என்க, அவளுக்கோ பொறுமை தூரப் பறந்தது.
“டேய் மலைமாடு! நான் எப்படி இருந்தா உனக்கென்னடா? கூத்தடிச்சா என்ன? கூழ் குடிச்சா என்ன?! சாரி கேட்டா விட்டுட வேண்டியது தானே” என கத்த அவனுக்கு அவள் குடிக்கவில்லை என்பது புரிய தன்னை நொந்து கொண்டான்.
“அச்சோ சாரிங்க. நீங்க தடுமாறிட்டு வர்ரத பார்த்து தப்பா நெனச்சிட்டேன்.” என்று பாவமாக சொன்னவனை தீப்பார்வை பார்த்தாள் பெண்ணவள்.
‘எல்லாம் என் நேரம். அப்போவே அலர்ட் ஆகி இந்த கருமம் புடிச்ச ஹீல்ஸ போட்டிருக்க கூடாது. இதனால குடிகாரன் கிட்டயே குடிகாரின்னு பட்டம் வாங்க வேண்டியிருக்கு’ என மனதினுள் புலம்பித் தள்ள, அவளைப் பார்க்கையில் லேசான சிரிப்பொன்று அவன் இதழில் எட்டிப் பார்த்தது.
“என்ன டா சிரிக்கிற? சொல்லுறத எல்லாம் சொல்லிட்டு சிரிப்பு வேறயா?”
“என்னோட வாய் நான் சிரிப்பேன். உனக்கென்ன வந்துச்சு? சும்மா தொன தொனன்னுக்கிட்டு” விஷ்வா சொல்ல,
அவனைக் கடுப்புடன் பார்த்து “எனக்கு வேண்டுதல் பாரு உன் கூடல்லாம் பேசனும்னு. போடா” வைஷு முகம் திருப்பினாள்.
அவனை டா” போட்டு பேசியதில் அவள் மேல் அவனுக்கு கோபம் வர “நீ போடி” என்றான்.
“போகாம உன்ன பார்க்கவா போறேன்?”
“ஹூம் சரியான லூசா இருப்ப போலிருக்கு. உன்னெல்லாம் யார் கட்டிக்க போறானோ?” என்க, அவளுக்கோ ஏகத்துக்கும் எகிறியது.
“என்ன கட்டிக்க மகாராஜா மாதிரி ஒருத்தன் வருவான். உனக்கெதுக்கு அதெல்லாம்” என கத்த,
“அவனுக்கு கண்ணு நொல்லையா தான் இருக்கும்”
“ச்சே உன் கூடல்லாம் மனுஷன் பேசுவானா? உன்னை இனிமேல் பார்க்கவே கூடாது” என்றாள் கோவமாக..
“நானும் தான்டி உன்ன பார்க்கவே கூடாதுன்னு வேண்டிக்க போறேன்” என சென்று விட்டான்.
……………
தனது தோழியுடன் உரையாடி விட்டு வைஷு இருக்கும் இடத்திற்கு செல்லப் போன பூர்ணி கால் தடுக்கி விழப் போக அவளைத் தாங்கிப் பிடித்தது ஒரு வலிய கரம்.
தான் விழாது போகவே மெல்லமாக கண்களைத் திறந்த பூர்ணியோ, தன்னைத் தாங்கியிருந்த ரோஹனைக் கண்டு அதிர்ந்தாள்.
அவனோ அவளின் இடையூடு கையிட்டுப் பிடித்து மறு கையால் அவளின் வலக்கையைப் பிடித்திருக்க, அவளது இடக்கரம் அவனது சர்ட்டை கெட்டியாகப் பற்றியிருந்தது.
ரோஹன் காதல் வழிய அவளை இமைக்காமல் பார்க்க, அவன் விழிகளில் ஓர் நொடி தானும் விழுந்து தான் போகலானாள் மெல்லியவள் அவளும்.
அவனோ தன்னையே ரசனைப் பார்வையால் வருடும் அவளைப் பார்த்தான். அவளுக்கு தன் மீதுள்ள காதல் இன்னும் அப்படியே தான் இருக்கின்றது என்பதை அறிந்து கொண்ட ஆடவனுக்கோ வானத்தில் பறப்பது போலிருந்தது.
பலரது பார்வைகளும் தம் மீது விழுவதை உணரந்த ரோஹன் மெல்லக் குனிந்து “ஹோய் பேபி! எவ்வளவு நேரமா இப்படியே இருக்க போற? எனக்குனா டபுள் ஓகே. பட் இது பப்ளிக்ல? நாம வேணா தனியா போய் ரொமான்ஸ் பண்ணலாமா?” என்று அவள் காதருகே கிசுகிசுத்தான்.
கன்னம் தீண்டும் அவன் மூச்சுக் காற்றில் சுய உணர்வு பெற்றவளோ தான் செய்யும் செயலை உணர்ந்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.
‘ச்சே! அவன் மேல இருக்குற கோவத்த மறந்து இப்படி மயங்கி நிக்கிறியே. பூர்ணி என்னடி நீ?’ என்று கேலி செய்த மனசாட்சியை நான்கு கொட்டு கொட்டி அடக்கினாள்.
சட்டென அவனிடமிருந்து விலகி நிற்க அவனோ நெருங்கி வந்து அவளை உரசுவது போல் நின்று கொண்டான்.
“எதுக்குடா இப்போ ஒட்டி ஒட்டி வர்றே?” என்று முறைக்க, “அப்படி வந்தாலாவது உனக்கு என் மேல இருக்கிற காதல் வெளிய வருதானு பார்க்குறேன்” என்று சொன்னான்.
“நீ என்ன ப்ளான் பண்ணாலும் நான் உன் கிட்ட வரவும் மாட்டேன். சேர்ந்து வாழவும் மாட்டேன். சோ இந்த மாதிரி பிடிக்கிற வேலை எல்லாம் வெச்சுக்க வேணாம்” விரல் நீட்டி எச்சரித்தாள் அவள்.
“மேடம்! ஒன்னு ஞாபகத்துல இருக்கட்டும். நான் ஒன்னும் ஆசையா வந்து பிடிக்கல. நீ விழப் போனதால தான் பிடிச்சேன்” என்றான் ரோஹன்.
“நீ எதுக்கு பிடிக்கனும்? நான் விழுந்தா என்ன செத்தா என்ன?” எனக் கூற, “பூர்ணி” என உச்சஸ்தாதியில் கத்தினான் அவன்.
அவனது கத்தலில் ஓர் நொடி பயந்தும் தான் போனாள் பூர்ணி.
“இங்க பார் பூர்ணி! எதுக்கு இப்படிலாம் பேசுற? செத்துடுவேன்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்லாதடி. நான் பண்ணது தப்பு தான் அதை நியாயப்படுத்த விரும்பல. ஆனாலும் தப்பு பண்ணவனுக்கு மன்னிப்பே கிடையாதா? தப்பு பண்ணவன் திருந்தவே கூடாதா?” கோபத்தில் தொடங்கி வருத்தத்தில் முடித்தான் ரோஹன்.
கண்களை மூடித் திறந்து விட்டு “தப்பு பண்ணவன் திருந்த கூடாதுன்னு சொல்லல. ஆனா என்னால முடியல டா. உன் மூஞ்ச பார்க்குற ஒவ்வொரு தடவையும் நீ என்னை சந்தேகமா பார்த்த அந்த பார்வை தான் ஞாபகத்திற்கு வருது. அதுக்கு பிறகு என்னால வேற எதையுமே யோசிக்க முடியாம போயிடுது. நான் என்ன பண்ணட்டும்? ப்ளீஸ் ரோஹன் என்ன நிம்மதியா இருக்க விடு” என்று கையெடுத்து கும்பிடவும் தான் சித்தமானாள் அவள்.
கூப்பிய கரங்களைப் பிரித்து விட்டவன் “பூ! என்னடி இப்படிலாம் பண்ணுற? போகுறதுக்கு முன்னாடி ஒன்னு கேக்குறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்றவனை குழப்பமாக ஏறிட்டாள் பூர்ணி.
“நான் இல்லனா நீ சந்தோஷமா இருப்பியா?” கேட்டவாறு அவளைக் கூர்ந்து பார்த்தான்.
அவள் முகமோ ஒரு நிமிடம் வாடியது. பின் தன்னைச் சரி செய்து கொண்டு “ம்ம்ம்” ஒற்றை வரியில் பதிலளித்தாள்.
“ஓகே நான் வரேன் பூ! நீ இந்த பதிலை என் கண்ண பார்த்து சொன்னா நான் ஏத்துப்பேன். அது வரைக்கும் உன் பின்னாடி வருவேன். இப்போ எனக்கு வேலைக்கு டைம் ஆகுது. பை” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வடிய, அதைத் துடைத்து விட்டு நிமிர்ந்த பூர்ணி கை கட்டி தன்னை ஆழ்ந்து பார்த்திருந்த வைஷ்ணவியைக் கண்டு அதிர்ந்தாள்.
நட்பு தொடரும்………!!
ஷம்லா பஸ்லி