14. விஷ்வ மித்ரன்

5
(3)

விஷ்வ மித்ரன் 

 

💙 அத்தியாயம் 14

 

ஹரிஷின் வரவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார் சிவகுமார். சிவப்பு நிற கார் போர்டிகோவில் கிறீச்சிட்டு வந்து நிற்க, அச்சத்தத்தில் அறையிலிருந்து ஓடி வந்தான் விஷ்வா.

 

முகம் எங்கும் புன்னகை தவழ காரில் இருந்து இறங்கிய ஹரிஷைக் கண்டு தானும் புன்னகைத்த சிவகுமார் “வா ஹரி” என அழைக்க, “டேய் சிவா” என்று தன் நண்பனைக் கட்டிக் கொண்டார் அவரும்.

 

இருவரும் விலக “என்ன கண்ணா! சோக கீதம் இசைச்சுட்டு இருக்கே?” என கையசைத்துக் கேட்டார் ஹரிஷ்.

 

அவரை முறைத்த விஷ்வா “போங்கப்பா. நீங்க ரெண்டு பேரும் மட்டும் கட்டி புடிச்சு சிரிச்சுட்டு இருக்கீங்க. ஆனா அவனை விட்டுட்டு வந்து இருக்கீங்கள்ள” என குற்றப்பத்திரிகை வாசிக்க,

 

“பொறாமைல பொங்காதடா. யாரு சொன்னா அவனை விட்டுட்டு வந்தேனு? கையோடு கூட்டிட்டு தான் வந்திருக்கேன். கொஞ்சம் அங்கே பார்” பின்னால் கை காட்ட, ஆனந்தம் துள்ளி விளையாட சடாரென திரும்பினான் விஷ்வா.

 

டாக் ப்ளூ கலர் டி ஷர்ட் ப்ளேசரில் இதழ்களில் விஷமப் புன்னகையை பூசிக் கண்ணடித்தான் மித்ரன். தன்னைத் தேடியவன் இப்பொழுது உயிருள்ள சிலை போல் இருப்பதைக் கண்டு லேசாக தலை சாய்த்தவன் ஓரெட்டில் தாவி அவனை தழுவிக்கொள்ள, இன்னமும் ஒரு அசைவைக் கூட காட்டினான் இல்லை நண்பன்.

 

“டேய் டேய்! போதும் டா உன் டிராமா. இவ்வளவு நேரமும் லவ்வர தேடறத விட ஆர்வமா கண்ணெல்லாம் மின்ன என்னைத் தேடிட்டு இப்போ வெட்டி ஆஃபீசர் மாதிரி விறைப்பா இருக்கியே” என காதினுள் கிசுகிசுத்தான் மித்து.

 

அவனை விட்டும் விலகி “போடா இடியட்” என செல்லமாக அவன் வயிற்றில் குத்தினான் விஷ்வா.

 

இருவரையும் பார்த்து கிளுக்கிச் சிரித்த சிவகுமார் “அடேங்கப்பா நீங்க லவ்வர்ஸ்ஸ கூட மிஞ்சிடுவீங்க போலயே. டேய் கண்ணா என் மாப்பிள்ளைக்கு குத்தாத. அவனுக்கு ஏதாச்சும் ஆயிருச்சுன்னா அக்ஷு நம்மள கொத்துக் கறி பண்ணிடுவா” என குறும்பு கொப்பளிக்க கூற,

 

“நாம ஒன்னா இருந்தா உங்களுக்கு மூக்கு வேர்த்துடுமே” என்று நொடித்துக் கொண்டவன், “ஓகே உள்ள வாங்கப்பா” என்னை ஹரிஷை அழைத்தான்.

 

அவ்விடத்திலேயே நின்ற மித்திரனைப் பார்த்து “உனக்கு மரியாதை எல்லாம் கிடைக்கும்னு எதிர்பார்க்காத. வாடா பன்னாடை” என இழுக்க, “உன்ன பத்தி தெரிஞ்சும் கொஞ்சூண்டு மரியாதையாவது கிடைக்கும்னு எதிர்பார்த்தது என் தப்பு தான்” என விஷ்வாவின் தோளில் கை போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

“வாங்கண்ணா வா மித்து” என அன்பு கனிய வரவேற்ற நீலவேணியைக் கண்டு விழிப் பிதுங்கிப் போய் விஷ்வா நின்றான் என்றால், உதட்டில் வெற்றிப் புன்னகை பரவத்தான் மகனை நோக்கினார் சிவகுமார்.

 

தந்தையைப் பார்த்த மகனுக்கு புரிந்து போனது இது நிச்சயம் இவரது வேலை தான் என்று!

 

முகமெங்கும் மகிழ்வில் பூரிக்க “அம்மா” என்று தாய்ப்பசுவிடம் ஓடும் கன்றாக தன்னை நோக்கி வந்த மித்திரனை கண்டு நொடி நேரத்தில் மாறியது நீலவேணியின் வதனம்.

 

அது விஷ்வாவின் கழுகுப் பார்வைக்கும் தப்பாமல் போய்ச் சேர, சிவகுமாரின் உக்கிரமான முறைப்பைப் பார்த்து போலியாக சிரிப்பை அணிந்து “வா ப்பா உட்காரு” என நாசூக்காக ஒதுங்கி சென்றார் அவர்.

 

சோபாவில் ஹரிஷும் சிவகுமாரும் எதிரெதிரே அமர்ந்திருக்க, அருகருகே அமர்ந்திருந்தனர் இளம் காளைகள் இருவரும்.

 

சிவா “என்னால நம்பவே முடியல ஹரி. இவங்க ரெண்டு பேரும் மூலமா பிரண்ட்ஸ் ஆன நாம இப்போ சம்மந்தியாக போறோம். உனக்கு இதுல முழு சம்மதமா?” என்று கேட்டார்.

 

“உனக்கு சம்பந்தியாக எனக்கு கசக்குமா சிவா? இதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். என் பொண்ணுக்கும் பையனுக்கும் எவ்வளவு தேடினாலும் இதை விட நல்ல இடம் அமைகிறது ரொம்ப கஷ்டம்” என்று தன் முடிவைக் கூறினார் ஹரிஷ்.

 

“ரொம்ப சந்தோஷம் டா! அப்புறம் உனக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு கேள்விப்பட்டேன். எவ்வளவு அருமையான விஷயம். எனக்கு அவளைப் பார்க்கணும் போல இருக்கு” என்று உணர்ச்சி ததும்பக் கூடியவருக்கு தன் மருமகளை காணும் ஆசை நெஞ்செல்லாம் நிறைந்திருந்தது.

 

ஹரிஷ் “அதுக்கு என்னடா? நேர்ல வந்தா பாத்துக்கலாம். இப்போ அவளோட போட்டோவ காட்டுறேன்” என்றவர் தன் அலைபேசியை உயிர்ப்பித்து வைஷ்ணவியின் ஃபோட்டோவைக் காட்ட, அவளின் பேரழகில் உள்ளம் குளிர்ந்தவருக்கு பார்க்கையில் அமைதியும் துறுதுறுப்பும் கொண்ட வைஷ்ணவி விஷ்வாவிற்கு பொருத்தமான ஜோடி என்றே தோன்றிற்று.

 

இவ்வளவு நேரமும் தந்தைமார் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த விஷ்வாவுக்கு எப்படியாவது வைஷ்ணவியின் போட்டோவைப் பார்த்து விட வேண்டும் என்று ஒவ்வொரு அணுவும் துடிக்கலாயிற்று. ஏனென்று தெரியாமல் அவளை காண தவித்தவனின் நிலை நண்பனுக்கு புரிந்தது போலும்!

 

“டாடி! ஃபோனை கொஞ்சம் கொடுங்க” என கையை நீட்ட, “இந்தா கண்ணா” என்று போனை கொடுத்தார் ஹரிஷும்.

 

அதைப் பெற்றுக் கொண்டவன் விஷ்வாவுக்கு காட்டாமல் தான் மட்டும் பார்க்க, யாருக்கும் தெரியாமல் மெல்லமாக எட்டிப் பார்த்தான் விஷ்வா. ஆனால் அவனுக்கு காட்டாமல் இன்னும் தூரமாக்கிக் கொண்டான் மித்ரன், அவனுடன் மேலும் விளையாடி பார்க்கும் ஆசையோடு.

 

மெல்லமாக அவன் புறம் தலை சரித்த மித்து “ஏன் விஷு புழு மாதிரி நெளியுறே? எனி பிராப்ளம்?” என்று அப்பாவியாக கேட்டவனைப் பார்த்து,

 

“என்னையே வம்பு இழுக்கிறியா? இருடா உன்னை வச்சிக்கிறேன். எனக்கும் ஒரு காலம் வரும் இல்ல? ராஸ்கல்” எனக் கருவிக் கொண்டான் அவன்.

 

‘எல்லாம் இவளால தான். அவளைப் பார்க்க துடிக்கிற இந்த மனசால தான் இந்த புள்ள பூச்சி கிட்டலாம் கெஞ்ச வேண்டியிருக்கு. உனக்கு இருக்கு டி’ எந்தக் குற்றமும் செய்யாத பாவப்பட்ட வைஷுவுக்கும் இலவசமாக வசவு விழுந்தது, அவளின் எதிர்கால கணவனிடமிருந்து.

 

பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு “அச்சச்சோ உன்னைப் பார்க்கப் பாவமா இருக்கு விஷு! இந்தா நீயும் என் தங்கச்சியை பார்த்துக்க” எனது பெரிய மனது பண்ணி காட்ட,

 

“அவ உன் தங்கச்சி மட்டும் இல்ல. என் வைஃப்பும் தான்” என அவன் இடையில் கிள்ளிவிட்டு போனை எடுத்துக் கொண்டான்.

 

“ஆஆ” என அலறிய மித்துவைப் பார்த்த சிவகுமார் “மித்து என்னாச்சு?” என பதற்றமாக வினவ,

 

“ஒன்னுல்ல பா. ஏதோ விஷப்பூச்சி ஒன்னு கடிச்சிடுச்சு” என இளித்துக் கொண்டு சொல்ல, சிதறி வெடித்த சிரிப்பை கடினப்பட்டு அடக்கிக் கொண்டான் தோழன்.

 

அலைபேசியின் மீது நிலை நாட்டிய விழிகளை சிறிதும் அகற்ற முடியாமல் தான் போயிற்று அவனுக்கு. இமைகள் படபடக்க, கருவிழிகள் அலைபாய, முடிக்கற்றைகள் நெற்றி தொட்டு விளையாட, சிவந்த இதழ்கள் விரிந்து மலராகப் பூக்க, அழகோவியமாய் தோன்றியவளைக் கண்டு இடம் மாறி துடிக்கலானது ஆடவனின் இளம் இதயமும்.

 

“போதும் போதும்! கல்யாணத்துக்கு அப்புறம் ஆல் டைம் டியூட்டியா வைஷேவ சைட் அடிச்சுக்க. இப்போ செல்ல கொடுத்திடு. உன் பார்வையில அதுக்கே வெட்கம் வந்துடுச்சு போல” என மித்து கிண்டலடிக்க,

 

“நான் ஒன்னும் அவள சைட் அடிக்கல. சும்மா தான் பார்த்தேன்” என மழுப்பினான் அவன்.

 

விஷ்வாவின் மனதில் வைஷு இருப்பதை மித்ரன் உணர்ந்தாலும் வெட்டி வீராப்பின் காரணமாக அதை உணர வேண்டியவனே உணராமல் தான் போனான்.

 

“அவ்வளவு வாய் கிழிய பேசினவ ஒரு சாரி கூட கேட்கலையே” என்ற ஈகோ அவனைத் தடுக்க, “இனி நீயா பேசுற வரைக்கும் நான் உன்னை பார்க்கவோ பேசவோ மாட்டேன்” என நினைத்துக் கொண்டான் அவன்.

 

ஹரிஷ் “ஆமா சிவா! தங்கச்சியை காணவே இல்லையே. அவளுக்கும் இதில் விருப்பம் தானே?” என்று சிறு குழப்பத்துடன் கேட்க, “அவளுக்கு விருப்பம் ஹரி. நீலாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் உள்ள இருக்கா” என்று முதல் முறை பொய் சொன்னவருக்குள் குற்ற உணர்வு பெருகியது.

 

அவரது உணர்வைள் புரிந்து கொண்ட விஷ்வா கையைப் பிடித்து அழுத்தம் கொடுக்க, சிறிதே மனம் தெளிந்தார் அவரும்.

 

“நிச்சயதார்த்தத்தை வர வெள்ளிக்கிழமை வச்சுக்கிட்டா நல்லா இருக்கும்னு ஜோசியர் சொன்னாரு. நீ என்னடா சொல்லுற?” என்று கேட்ட ஹரிஷின் தோளைப் பற்றி, “அப்படியே வச்சுக்கலாம் டா. நம்ம வீட்டிலேயே வச்சுக்கலாம்” என்று பேசிக் கொண்டிருந்தனர்.

 

நிச்சயதார்த்தம் தேதி குறித்ததும் அக்ஷுவின் முகம் மனதினுள் உதிக்க, அவள் தென்படுகிறாளா என விழிகளால் துலாவத் துவங்கினான் மித்ரன்.

 

“என்ன சார்? கண்ணு பரதநாட்டியம் ஆடுது? யாரையாவது தேடுறியா” என்று இப்போது ரகசியமாகக் கிசுகிசுப்பது விஷ்வாவின் முறையாயிற்று.

 

“இல்லடா ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்ல. வீட்டுல ஏதாவது சேஞ்சஸ் இருக்கான்னு செக் பண்ணிட்டு இருக்கேன்” என்று மொத்தப் பல்லையும் காட்டி மித்ரன் இளிக்க, 

 

“சரி டா நீ தாராளமா செக் பண்ணிக்க. நான் கூட நீ அக்ஷுவ தான் தேடுறியோனு தப்பு கணக்கு போட்டுட்டேன். அப்படி தேடினா அவளைக் கண்ணுல காட்டலாம்னு கூட நினைச்சேன். பட் எனக்கு அந்த வேலையை வைக்காமலே போயிட்ட” என்க, காற்றுப் போன பலூனாக பொப்பென வெடித்தது அவன் முகம்.

 

“இல்ல விஷு! அக்ஷுவ தான் தேடினேன். அவ எங்கிருக்கானு சொல்லு ப்ளீஸ் ப்ளீஸ்” என கெஞ்ச, “இத அப்போவே கேட்டருக்க வேண்டியது. சும்மா எதுக்கு டா வெத்து கெத்து எல்லாம்?” என்று புருவம் உயர்த்தினான் அவன்.

 

மித்ரன் “என் இமேஜை நீ அடிக்கடி டேமேஜ் பண்ணுற. நான் இப்போ இந்த வீட்டு மாப்பிள்ளை” என்று இல்லாத காலரைத் தூக்கி விட,

 

“வீட்டுக்கு மாப்பிள்ளையோ இல்லையோ எப்போவுமே நீ எனக்கு பெஸ்டு ப்ரெண்டு தான் டா” பொய்யாக முறைத்த விஷ்வாவை நோக்கி, “யாஹ் யாஹ் அப்கோர்ஸ்” என சிரித்தான் மித்ரன்.

 

எழுந்து கொண்ட விஷ்வா “வா மித்து. மேலே போகலாம்” என்று கூப்பிட, அவன் பின்னே படக்கென எழுந்து படிகளில் தாவி ஏறினான் நண்பன்.

 

அம்முலுவைக் காண வேண்டுமென்ற அதீத ஆசை அவன் மனதில். அவனது வேகத்தைப் பார்த்து அடங்க மாட்டாது சில்லறைகளைச் சிதற விட்ட விஷு “பார்த்து டா மெதுவா” என்று சைகை செய்தவன், “நீ அக்ஷு கூட பேசிட்டு வா… ஐயா இங்கேயே வெயிட் பண்ணுறேன்” என்று அங்கிருந்த நாற்காலியில் தோப்பென உட்கார்ந்து கொண்டான்.

 

சரியென தலையாட்டியவனோ ஆர்வக்கோளாறில் ரூம் மாறி விஷ்வாவின் அறைக்குள் நுழைந்தவனுக்கு அப்போதே இது அக்ஷராவின் அறை இல்லை என்பது தோன்ற “இப்படி சொதப்புறியே மித்து” என தன்னைத் தானே திட்டிக் கொண்டு திடுமென வெளெயேறப் போனவன் ஓர் நொடி தாமதித்து நின்றான்.

 

ஆகாய நீலவண்ணம் பூசப்பட்ட சுவர்களை ஆராய்ந்தவனின் கண்கள் கலங்கிப் போயின. முன்பெல்லாம் விஷ்வ மித்ரன் இருவரின் போட்டக்கள் மட்டுமே நிறைந்திருக்கும் அவ்வறையில்.

 

ஆனால் இப்போதோ விஷ்வாவின் போட்டோக்கள் மாத்திரமே தொங்க அவன் இதயமும் அந்தரத்தில் தொங்கியது.

 

“இந்தளவுக்கு என்னை வெறுக்குறியா விஷு? ஆமால்ல நான் உனக்கு பண்ணது எப்படிப்பட்ட ஒரு துரோகம்? அப்படினா இப்போ கூட அக்ஷுக்காக தான் என் கூட பேசுறியா?” என உள்ளுக்குள் கதறித் தீர்த்தவன் விலுக்கென தலையை சிலுப்பிக் கொண்டான் மித்ரன்.

 

“நோ! என் மாப்ள அப்படி பண்ண மாட்டான். அவனுக்கு உள்ளுக்குள்ள ஒன்ன வச்சுட்டு வெளியில இன்னொரு மாதிரி நடிக்கத் தெரியாது. விஷுவ தப்பா நினைக்கிறது என்னை நானே தப்பா நினைக்கிறதுக்கு சமன். சாரி டா! இனிமே இப்படி நினைக்க மாட்டேன்” என மனதை தேற்றிக் கொண்டாலும் விஷுவின் இச்செய்கை மித்திரனுக்கு வலிக்கவே செய்தது.

 

தன்னை சுதாகரித்துக் கொண்டு தன்னவளின் அறையை நோக்கி நடந்தான்.

 

…………….

 

கட்டிலில் குப்புறப் படுத்து கால்களை ஆட்டியவாறு ஒரு நாவலை ரசித்துப் படித்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.

 

மெல்ல ஓசைப்படாமல் சென்று அவள் கண்களை பின்னிருந்து மூட “டேய் தடியா” என கத்தியவள் அவனுக்கு காலாலே ஒரு உதை விட, “அய்யோ ராட்சசி கொல்ல பாக்குறாளே” என்று அவன் கத்த, அலறியடித்துத் திரும்பி வாயில் கை வைத்து கண்களை விரித்து அதிர்ச்சியில் நின்றாள் அருள் மித்ரனின் அழகிய ராட்சசி.

 

அவள் நின்ற கோலத்தைக் கண்டு சிரித்த மித்ரன் “ஏண்டி! வருங்கால புருஷனை இப்படித்தான் அடிப்பியா? அம்மா என்னா உதை” என இடுப்பைப் பிடித்துக் கொண்டு சத்தமிட, “அச்சச்சோ நிஜமாலுமே வலிக்குதா” என பாவமாக கேட்டாள் பாவை.

 

“வலிக்குதாவா? யம்மா என் இடுப்பு போச்சே” என்று மேலும் முகம் சுருங்கினான்.

 

“சாரி அருள் நான் விஷுனு நினைச்சு தான் அடிச்சேன். சாரி சாரி” அவன் கைகளைப் பிடித்துக் கொள்ள, “அடிப்பாவி! என் விஷுக்கு நீ அடிப்பியா? இந்த பூசணிக்காய் அடிச்சு அடிச்சு தான் அவன் ஒல்லிக்குச்சி ஆகி போயிருக்கான் போல” என யோசிப்பது போல் நடித்தவாறே சொன்னான் மித்ரன்.

 

அவனது பேச்சில் பத்திரகாளியாய் அவதாரம் எடுத்தவள் “போடா எருமை. உன்னைப் பாவம்னு பாத்தா என்னைய பூசணிக்காய்னு சொல்றியா?” என்று அவனுக்கு அடிக்க,

 

“அம்மா என்னடி நீ? மரியாதை காத்துல பறக்குது. நான் உன் ஹஸ்பன்ட் அக்ஷு” என்று சொன்னான் மித்ரன்.

 

“இன்னும் ஹஸ்பண்ட் ஆகலல்ல? சோ நான் அடிப்பேன் உதைப்பேன் ஏன் கடிச்சு கூட வெப்பேன்” என்று கூற, “அய்யய்யோ தெரியாத்தனத்துல ரத்த காட்டேரி கிட்ட மாட்டிகிட்டேனே” என்று அவன் கூச்சலிட,

 

“நான் ரத்தக்காட்டேரியா? அது என்ன பண்ணும்னு காட்டவா?” என்றவள் அவனை நெருங்கி வர, “எதுவாக இருந்தாலும் தூரத்தில் இருந்தே பேசு. என் கற்புக்கு கேரண்டி இல்லாம போயிடும்” என கைகளால் அவளை தடுக்க,

 

“க்கும் ரொம்பத்தான்” என்று நொடித்துக் கொண்டவள் அப்படியே நிற்க, அவள் கைகளைப் பிடித்து இழுத்தான் மித்ரன்.

 

இழுத்த வேகத்தில் அவன் வலிய தேகத்தில் மலர்க்கொடியாக சரிந்தவள் கண்களை இறுக மூடி அவள் மார்பில் முகம் புதைத்தாள் காரிகை. தலை தாழ்த்தித் தன்னவளை நோக்கிய மித்திரனும் பௌர்ணமி நிலவாக ஜொலித்த அவள் பேரழிலில் தன் வசம் இழக்கலானான். தன்னவளின் இறுகிய அணைப்பில் அவன் இதயம் அழகாக தாளம் தப்ப, அவன் இதயத் துடிப்பின் ஓசையை இதமாகக் கேட்டு நின்றாள், அருளின் இதய அரசியானவள்.

 

அக்ஷராவின் கன்னங்களைத் தன் வலிய கரங்களால் ஏந்தி அவள் நெற்றியில் தன் முரட்டு இதழால் முத்திரை பதிக்க, உச்சி முதல் உள்ளங்கால் வரை புது வித உணர்வு ஊற்றெடுக்க சிலிர்த்துப் போய் தான் நின்றாள் செவ்வந்தி அவளும்.

 

மித்ரன் “இப்போ உன் டர்ன்” என அவள் காது அருகே ஹஸ்கி வாய்ஸில் சொல்ல, “என் டர்ன்னா?” ஒன்றும் புரியாத மழலையாய் திரு திருவென விழித்தாள் அக்ஷு.

 

உதடு குவித்து “இது தான்” ஓன்று மித்ரன் காட்ட, விழி விரித்து “வாட் கிஸ்ஸா?” என அதிர்ந்து போய் அவள் நிற்க,

 

“அதே தான்” என அவன் கூற, “என்னால முடியாது” எனத் தோளைக் குலுக்கினாள் அவள்.

 

அவன் அவளை நெருங்கிச் செல்ல “வேணா கிட்ட வராத அருள்” என்று எச்சரித்தபடி பின்னால் இருந்த சுவற்றில் மோதி நின்றாள்.

 

கைகளால் அணை கட்டி அவளை ஒரு இன்ச் கூட நகர வழியில்லாது செய்து, சிறு பயத்துடன் தன்னை பார்த்தவளைக் கண்டு வெண் முத்துக்கள் பளீரிட மந்தகாசமாய் நகைத்தான் மித்ரன்.

 

“நீ தரலனா என்ன? நானே என் ஸ்டைல்ல எடுத்துக்குவேன்” என்றவனின் பார்வை அவளது இதழ்களில் படிய, கூச்சம் தாளாது உதட்டை பற்களுக்கிடையில் சிறைப்படுத்திக் கொண்டு அவன் முகத்தருகே சென்றவள் மான் விழிகளால் மருண்டு விழிக்க,

 

நளினமாக இடது கண்ணை சிமிட்டி ஒற்றைப் புருவம் உயர்த்தினான் அவன். அவன் செய்கையில் மெல்லியவள் இதயமும் வழுக்கிச் செல்ல, அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் அக்ஷரா.

 

சிறு பிள்ளையாய் அடுத்த கன்னத்தைக் காட்டியவனைக் கண்டு தலையாட்டி சிரித்து அவன் கன்னத்தை அழுத்தமாகக் கடித்து வைத்தாள் அந்த ராட்சசி.

 

“போடி! இதெல்லாம் போங்காட்டம்” என்று அவன் சிணுங்க, “நீ தான் ரொம்பவே ஆட்டம் போடுற. உன் கொட்டத்த அடக்கிட்டு நல்ல பிள்ளையா இரு” என விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தாள் பெண்ணவள்.

 

 நீட்டிய ஆட்காட்டி விரலை மடக்கி ஒரு கையால் பிடித்து” என் ஆட்டத்தை இன்னும் ஆரம்பிக்கவே இல்ல டி. அதுக்குள்ள அடக்க பாக்குறது நல்லாவா இருக்கு?” என கேட்டவாறு முத்தம் கொடுக்க,

 

“ஓஹ்ஹோ சார்க்கு இந்த ஆசை வேற இருக்கோ?” என போலியாக முறைத்தாள்.

 

அவளைப் பார்த்த மித்ரன் “உன்ன பாத்தா ஆசையே ஆசை ஆசையா ஓடிட்டு வருதே டார்லிங்” என்று வசீகரமாக சிரித்துக்கொண்டு அருகில் வர, “கொழுப்பு டா உனக்கு. ஃபிராடு பயலே” என அவன் கைகளில் சிக்காமல் வெளியே ஓடியே விட்டாள்.

 

அவளைக் கண்டு தானும் தலை கோதி மயக்கும் புன்னகையை சிந்தினான் அக்ஷராவின் அருள்.

 

ஓடி வந்த அக்ஷராவை கண்டு “ஏய் என்னடி சின்னப் பிள்ளை மாதிரி துள்ளிக் குதிச்சு ஓடி வர? இனியாவது பொண்ணா அடக்க ஒடுக்கமா இருந்துக்க” என்று அவள் காதை வலிக்கத் திருகி விட்டான் விஷ்வா.

 

அவன் பிடியிலிருந்து விலகி “ஆஆ லூசு வலிக்குது டா” என முகம் சுருக்கியவள் பின்னால் வந்த தன்னவனைக் கண்டு “பாரு அருள் என் காதைக் கழற்றி எடுக்கப் போறான்” என குற்றப் பத்திரிகை வாசித்தாள்.

 

அதைக் கேட்டு நண்பனின் புறம் பார்வையை செலுத்தி “டேய் இப்படி பண்ணாத டா” என்று சொல்ல, “பார்த்தியா எனக்கு இருக்கிற சப்போர்ட்ட?” என விஷ்வாவுக்கு பழிப்புக் காட்டினாள் தங்கை.

 

அவளை நமட்டுச் சிரிப்புடன் ஏறிட்டு “இன்னும் வலிக்கவே என் பங்கையும் சேர்த்து திருகி வச்சிருக்கலாமே விஷு” என்று சொன்னவனுக்கு விஷ்வா ஹைஃபை போட்டு வெடித்துச் சிரிக்க,

 

“ச்சீட்டிங் ராஸ்கல்ஸ்” என்று காலை தரையில் உதைத்து இருவரையும் மூக்கு விடைக்க முறைத்துத் தள்ளினாள் அக்ஷரா.

 

……………..

 

ஊஞ்சலில் ஆடிக் கொண்டு சிந்தனையில் உழன்று கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

 

 ஹரிஷும், மித்ரனும் விஷ்வா வீட்டிற்கு சென்றிருக்க பூர்ணியும் ரோஹனை சந்திக்கப் போனதில் தனிமை வாட்ட நின்றவளின் மனக்கண் முன் இதழ் குவித்துச் சிரித்தான் வைஷ்ணவியின் குறும்புக் கண்ணன்.

 

“கனவுல கூட கிஸ் பண்ண தான் வராரு” என்று செல்லமாக திட்டியவளுக்கு அன்று அவன் இதழ்கள் கன்னத்தில் அழுத்தமாக புதைந்தது நினைவுக்கு வந்திட, செம்மையை அள்ளிப் பூசிக் கொண்டது அவள் வதனம்.

 

“எப்படியாவது அவர்கிட்ட சாரி கேட்டுடனும். இன்னும் என் மேல கோபத்தில் தான் இருக்காரோ?” என ஒரு மனம் கிடந்து தவிக்க, “அது எப்படி இல்லாம இருக்கும்? நீ பேசினதுக்கு செம்ம காண்டுல தான் இருப்பாங்க” என்று மறு மனம் குத்திக்காட்ட, முகம் வாடிப் போனாள் வைஷு.

 

அவனுடன் இப்போதே பேசி விட வேண்டும் என்ற உத்வேகத்துடன் படபடவென துடிக்கலானது அவள் மனம். இது என்ன புது அவஸ்தை என்று நினைத்தாலும் அவனுக்காக துடிப்பது கூட ஒரு புது உணர்வைத்தான் கொடுக்கலானது.

 

“பாப்பா! என் கப்போர்ட்ல மேல இருக்கிற டிராயர்ல விஷு நம்பர் இருக்கும் உனக்கு எப்போவாச்சும் தேவைப்பட்டா எடுத்துக்க” என்று மித்ரன் சொன்னது நினைவுக்கு வந்திட, அன்று சரி என வேண்டா வெறுப்பாக தலையசைத்தவள் இப்போது மித்ரனின் அறையை நோக்கி ஓடினாள்.

 

கதவை திறந்து முதன்முதலாக அவனது அறைக்குள் நுழைந்தாள் பெண்ணவள். அறை முழுவதும் பார்வையை பதித்தவள், கண்களை அகல விரித்தாள்.

 

 எங்கும் விஷ்வ மித்ரர்களின் போட்டோக்களே நிறைந்திருந்தன. மித்திரனின் தோளில் கை போட்டபடி விஷ்வா! ஒருவர் அணைப்பில் இன்னொருவராய் நண்பர்கள்!

 

முத்துப்பற்கள் விகசிக்க முகம் எங்கும் மகிழ்வு பூரிக்க ஸ்டைலாக தலையை கோதியபடி நின்றவர்களின் நட்பு புகைப்படத்திலும் கூட அவளை பூரிக்கத் தான் வைத்தது.

 

அனைத்துக்கும் நடுவே மிகப்பெரிய அளவில் வீற்றிருந்தது விஷ்வாவின் ஃபோட்டோ. பேன்ட், டி-ஷர்ட் அணிந்து அதற்கு மேலால் ப்ளேஷர் போட்டு வலக்கையால் இடது கைக்கு வாட்ச் கட்டியபடி போஸ் கொடுத்திருந்தான் அவன்.

 

அதை வருட தாமாக வேண்டி நீண்டன அவள் கைகள். அவனது கம்பீரமான அழகில் மயங்கிப் போன வைஷ்ணவி “நீங்க அண்ணா மேல வெச்சி இருக்குற பாசத்துல ஒரு துளி பாசம் எனக்கு கிடைச்சா கூட அதிர்ஷ்டமா நினைப்பேன் விஷ்வா. உங்களுக்கு என்னைப் பிடிக்குமா?” ஏக்கமாக அவனிடம் கேட்டாள் பாவையவள்.

 

மித்ரன் கூறிய டிராயரை திறந்து அவனது நம்பரை தன் ஃபோனில் குறித்து பனைமரம் என சேவ் பண்ணிக் கொண்டாள்.

 

 “அப்பாடா எப்படியோ நம்பர் எடுத்தாச்சு. அதே மாதிரி அவர் கூட பேசி ஒரு சாரி கேட்டா தான் நிம்மதியா இருக்க முடியும்” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள் வைஷ்ணவி.

 

…………………

அந்த நவீன ரக பப் டிஜேயில் அதிர்ந்து மின்விளக்குகளில் ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.

 

இரு பக்கங்களிலும் மார்டன் மங்கைகள் இருவர் அமர்ந்திருக்க, கையில் வைன் கிளாசுடன் மது மற்றும் மாதுவுடன் உல்லாசமாக இருந்தான் தர்ஷன்.

 

“ஹேண்ட்ஸம் யூ ஆர் சோ ஹாட்” என ஒருத்தி அவன் கன்னத்தை வருட,

 

“யூ டூ பேப்ஸ்” அவளது வெற்றிடையில் வருடி பெரும் மயக்கத்துடன் மொழிந்தான் அவன்.

 

திடீரென அவன் அலைபேசி அலற, எழுந்து வெளியேறிட அவன் பின்னாலே ஓடினான் தர்ஷனின் வலக்கை மற்றும் இடக்கையான மானஸ்.

 

அழைப்பை ஏற்று காதில் வைத்த தர்ஷனின் முகமோ கோபத்தில் ஜிவ்வென சிவந்து போக “ஃபுல் ஷிட்” என கத்தியவன் ஃபோனை தூக்கி வீச அதுவோ சுக்கு நூறாக உடைந்து அவன் கோபத்துக்கு இரையாகிப் போனது.

 

மானஸ் “தர்ஷா வாட் ஹெப்பண்ட்?” அவனது கோபத்தில் புரியாமல் தான் கேட்டான்.

 

அவனைப் பார்த்து “போச்சு போச்சு! எல்லாமே போச்சு மானஸ்” என பிடரியை அழுத்த கோதிக் கொண்டு அங்கும் இங்கும் நடந்த அந்த தர்ஷன், பின் அவனே “நான் உன் கிட்ட சொன்னேன்ல செம கட்ட ஒன்னு சிக்கி இருக்குதுன்னு. அதான் அந்த திமிர் பிடிச்ச அக்ஷரா” என்று சொல்ல முதலில் புருவம் சுருக்கிய மானஸிற்கு பின்னர் புரிந்தது யாரைக் கூறுகிறான் என்று.

 

“ஆமா. உன் பரம எதிரி விஷ்வாவோட தங்கச்சினு சொன்ன. அவள பத்தி தான் நீ நைட் ஃபுல்லா சொல்லிட்டு இருந்தியே. அவளுக்கு என்னாச்சு?” என்று வினவ,

 

“அவளுக்கு நிச்சயதார்த்த தேதி பிக்ஸ் பண்ணிட்டாங்களாம்.அதுவும் என்னோட அடுத்த எனிமி மித்ரன் கூட! நான் இதை அக்செப்ட் பண்ணவே இல்ல” என கோபம் கொப்பளிக்க கத்தினான்.

 

அவன் தோளில் கை வைத்து அழுத்திய மானஸ்ஸோ “காம் டவுன் தர்ஷா! என்ன பண்றதுன்னு யோசிக்கலாம். நாம அவளை தூக்கிடலாமா?” என ஐடியா சொல்ல,

 

“நோ அதை விட நல்ல ஒரு ப்ளான் என் கிட்ட இருக்கு. தூக்கினா நம்ம யாருன்னு தெரிஞ்சிடும். இதுக்கு பின்னாடி நான் தான் இருக்கேன்னு காட்டிக்காம மறைஞ்சிருந்தே ஒரு ஆட்டத்தை ஆடப் போறேன். என்னிக்கா இருந்தாலும் அக்ஷரா எனக்குத் தான். நான் அவள அடைஞ்சே தீருவேன். அவளோட திமிர அடக்குவேன்” என்று வன்வமாக சொல்லி, “இட்ஸ் மை டர்ன் விஷு அண்ட் மித்து. மை கேம் ஸ்டார்ட் நௌ” எனக் கூறி சத்தமாக சிரித்தான் தர்ஷன்.

 

………………….

சர்ரென காற்றைக் கிழித்துக் கொண்டு வந்து நின்றது மித்ரனின் ராயல் என்பீல்ட். ஹெல்மெட்டைக் கழட்டி வைத்துவிட்டு இறங்கி அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்தான் அவன்.

 

சுற்றிச் சுழல விட்ட பார்வை வட்டத்தினுள் அவனது எதிர்பார்ப்புக்கு காரணமானவரும் விழுந்து விட “அம்மா” என அழைத்துக் கொண்டே சென்றவனின் குரலில் சட்டெனத் திரும்பினார் நிலவேணி.

 

“ஹ்ம் வந்துட்டியா” முகம் சுழித்துப் பேச, அதில் மனம் கசங்கினாலும் வெளிக்காட்டாது “ஆமா மா. என்ன விஷயம்? ஏதோ பேசணும் அவசரமா வான்னு கூப்பிட்டீங்க. ஏதாவது ஹெல்ப் வேணுமா?” எனக் கேட்டான் மித்ரன்.

 

“ம்ம். ஹெல்ப்னு நினைச்சுக்க இல்லனா சும்மா இருந்துக்க. இப்போ நான் சொல்லுறத நீ கேட்கணும்” என்றார் நீலவேணி.

 

ஏதோ பெரிதாகக் கேட்கப் போகிறார் என்று புரிந்து கொண்டவன் “சரி சொல்லுங்க மா” என சொல்லி, பதிலுக்காக காத்திருந்தான்.

 

அவனை நிதானமாக நோக்கி “நீ அக்ஷுவ கட்டிக்க சம்மதம் இல்லன்னு சொல்லணும் மித்ரன். உன் கூட அவளை சேர்த்து வைக்கிறதுல எனக்கு துளி கூட இஷ்டம் இல்ல” பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார் அவனது விஷுவின் தாய்.

 

வாயடைத்துப் போய் பேச்சிழந்து நிற்பவனை நக்கலாகப் பார்த்து “எனக்கு தெரியும் நீ எப்படியும் நான் சொல்லுறத கேட்பனு” என்று கூறியவரின் வார்த்தைகளில் மறைமுகமாக அதிகாரமும் வெளிப்பட்டது.

 

“நான் சொல்வதை கேட்கவே வேண்டும்” எனும் மிரட்டலும் உள்ளடங்கியிருந்தது.

 

கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு “கேட்க முடியாதுன்னா?” நேருக்கு நேர் பார்வையை நிலைநாட்டி கேள்வியாக அவர் முகம் பார்த்தான் மித்ரன்.

 

“என்னையே எதிர்த்துப் பேச துணிஞ்சிட்டியா?” என கோபமாகக் கேட்க,

 

“என் விஷுவோட சந்தோஷத்துக்காக உங்களை மட்டும் இல்லை, அந்தக் கடவுளே வந்தாலும் எதிர்த்து பேச தயங்க மாட்டேன். அவன் எவ்வளவு சந்தோஷமா இருக்கான்னு பார்த்தீங்க தானே? இத்தனை நாள் பறி போன சந்தோஷம் இப்போ அவன் முகத்தில் இருக்கு. அதுக்கு பாதிப்பு வர எந்த ஒரு விஷயத்தையும் செய்ய நினைத்துக் கூட பார்க்க மாட்டான் இந்த மித்து” என்று உறுதியாக கூறியவன் மீண்டும் தொடர்ந்தான்.

 

“அது மட்டும் இல்ல. அக்ஷு என்னை லவ் பண்றா. ஐ லவ் டூ அக்ஷு! அவளை நான் தான் கட்டிக்குவேன். நீங்க விரும்பினாலும் இல்லனாலும் நான் தான் உங்க வீட்டு மாப்பிள்ளை. என்ன சரியா மாமியாரே!?” ஒற்றை புருவம் உயர்த்தி வினவினான் அக்ஷுவின் கண்ணாளன்.

 

அவனின் புதிய பரிணாமத்தில் அதிர்ந்தவருக்கு ஆச்சரியம் இருந்தாலும் ஆச்சரியம் இருந்தாலும் ஆங்காரம் தலைக்கு மேல் ஏறிட “என்னடா திமிரா பேசுற? விஷு விஷுனு உருகுற? நீ தானே அவனை விட்டுப் போனே? அவன் மேலே பாசம் இருந்திருந்தால் நான் சொன்னேன்னு போய் இருப்பியா” என்று கேட்டார் நீலவேணி.

 

அன்றைய நிகழ்வுகள் மனிதினுள் குவிய ‘அவன் மேல பாசம் இருக்கிறதால தான் மா நீங்க சொன்ன உடனே போனேன்’ என்று தனக்குள்ளே கூறிக் கொண்டான் மித்ரன்.

 

அன்று எந்த அஸ்திரத்தை வைத்து மித்ரனை, விஷ்வாவை விட்டும் பிரிந்து போக வைத்தாரோ அதனை இப்போதும் பயன்படுத்த எண்ணி “நீ மட்டும் அக்ஷுவ கல்யாணம் பண்ணிக்கிட்டேனா அடுத்த நிமிஷம் என் பொணம் தான் கிடைக்கும். இதோ இந்த விஷத்த குடிச்சு உசுர விட்டுடுவேன்” என்று கையில் இருந்த விஷ போத்தலைக் காட்டினார்.

 

மித்ரன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

 

“அன்னைக்கு நான் இத காட்டின உடனே அப்படி பதறிட்டு ஊரை விட்டே ஓடினல்ல? இப்போ மட்டும் ஏன் கல்லு மாதிரி இருக்கே” என்று நீலவேணி முறைத்தபடி கேள்வி தொடுக்க,

 

பின்னால் இருந்து கேட்ட காலடி ஓசையில் திரும்பிய இருவரும் அதிர்ந்து போய் நின்றனர்.

 

“சபாஷ்! சபாஷ் மாம்” வெறுப்பு நிறைந்த குரலில் கூறி, கைகளைத் தட்டிக் கொண்டு அவர்களை நெருங்கி வந்தான், நீலவேணியின் பாசமிகு மைந்தன்!

மித்ரனின் ஆருயிர்த் தோழன்!

விஷ்வஜித்!

 

நட்பு தொடரும்………!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!