உயிர் தொடும் உறவே -11

4.7
(7)

உயிர் -11

 

மீனாட்சி மற்றும் கோமதிக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அவர்களின் பரிதாபப் பார்வையை சிறிதும்‌ விரும்பாத ஈஸ்வரன் தன் அருகில் வந்தவளை பார்வையாலேயே தடுத்து நிறுத்தினான். எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டு வேலு அருகில் வந்தவன் , ” ஏன்யா

 நான் உனக்கு என்ன‌ பாவம் பண்ணினேன்…? அடுத்தவங்க வயித்துல அடிச்சு உனக்கு என்ன கிடைக்கப்‌போவுது….?கஷ்டப்பட்டு உழைச்சு சிறுக‌ச் சிறுக சேர்த்த பணத்தை இப்படி சுலுவா அடிச்சுட்டு போகப் பாத்தியே…இனி நீ எவன் கிட்டயும் வாலாட்டவே கூடாது…” என சாந்தமான குரலில் ஆரம்பித்து ஆக்ரோஷமாக அவனை அடித்துத் துவைத்து விட்டான் .

 

அவனோ ஏற்கனவே தனது அண்ணன் அடித்த அடியில் இரத்த காயத்துடன் இருந்தவன்‌ ஈஸ்வரனின் இரும்பு போன்ற கைகளால் விழுந்த அடி  அவனை நிலைகுலையச் செய்தது. உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதுமென்று  ஓடியே விட்டான்.

 

கையை உதறிக் கொண்டு நின்றான் ஈஸ்வரன்.

அவன் வேலுவை ‌அடித்த அடியை  வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் நேஹா.

 

சங்கரபாண்டியனோ, “அதான் இடம்‌ எங்களுக்கு

சொந்தம்னு தெரிஞ்சாச்சுல்ல… சாமன்‌ சட்டெல்லாம் எடுத்துட்டு கிளம்புறது…” என எகத்தாளமாக கூறினார்.

மீனாட்சி ஏதோ கூற‌ வர , அவளை கை நீட்டி தடுத்தவர் ,” அவன் என்னிக்காயிருந்தாலும் அன்னக்காவடி தான்..” என்று அவனது முகத்துக்கு நேரே கூறினார்.

 

சட்டென்று அவரது சட்டையை பிடித்தவன், “ அன்னக்காவடியாவே இருந்துட்டு போறேன். நீரு ரொம்ப யோக்கியமோ…?ஆரம்ப காலத்துல பொம்பளைங்க பின்னாடி சுத்திட்டு ,எங்க வூட்ல கஞ்சி குடிச்சவரு தானே…?” என்று கூறி அவரை உறுத்து விழித்தான்.

 

“ ஏய்….” என சங்கர பாண்டியன் உறும.

 

“ ஏய்…மாமா

சட்டையில் இருந்து கையை எடு…” என‌ ஆதி முன்னாடி வர .

“ நீ வரதே…” என்று அவனது மார்பில் கை நீட்டி தடுத்துவிட்டு அனலாக ஆதியை முறைத்தான்.

ஆதியின் விழிகள் வழக்கம்போல அலட்சியத்தை தத்தெடுத்தது.

முதல் முடிச்சு வெற்றிகரமாக அவனது நாடகத்திற்கு முடியப்பட்டது.

மெல்லிய சிரிப்புடன் திரும்பி நின்று கொண்டு தாடியை நீவி விட்டான்.

அவனின் நாடகத்தில் அனைவரின் தலைவிதியையும் தீர்மானிக்க தயாராகி விட்டான்.

 

ஈஸ்வரனோ மெதுவாக அவரது சட்டையில் இருந்து கையை எடுத்து அவரை ஆழ்ந்து பார்த்தான்.

பின் அவரது சட்டையை தனது கையால் நீவி விட்டு சரி செய்து விட்டு, “கொஞ்சமாவது பெரிய மனுசனா நடந்தக்கோங்க…இது உம்ம இடம்ன்னு தெரிஞ்சிருந்தா திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டேன்…” என கோபமாக கூறிவிட்டு தங்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு விறுவிறுவென நடக்கத் தொடங்கினான்.

 

அவனது மனதில் அவ்வளவு வேதனை. மறுபடியும் மறுபடியும் அவரிடமே அசிங்கப்படுவது அவனுக்கு அவ்வளவு வெறுப்பினை தந்தது.

இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் தான் துவண்டு விட்டால் தனது குடும்பமே கலங்கிவிடும் என்பதால் முடிந்தவரை வலியை வெளிக்காட்டாமல் நடந்தான்..

முத்துக்காளையால் சரியாக நடக்க முடியாத அவரை கைத்தாங்கலாக தாங்கிக்கொண்டு தங்கையும் தாயையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

 

அப்போதும் சங்கர‌ பாண்டியன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் ,  “எவ்வளவு நெஞ்சழுத்தம் பாத்தியா இந்த பரதேசிக்கு …?அப்பங்காரன் இப்படி இருக்குறப்பவே இவ்வளவு ஏத்தம்…எஞ்சட்டையை பிடிக்கிறான் பிச்சைக்காரப்‌பய…” என்றவுடன் திரும்பி நடந்துக் கொண்டிருந்தவன் வேகமாக வந்து அவரது கழுத்தை பிடித்துக் கொண்டு , “ ஏய்….. இன்னொரு வார்த்தை பேசின…கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்‌…ஜாக்கிரத…” என பல்லைக் கடித்தவாறே அவரை பிடித்து பின்னால் தள்ளினான்.

தள்ளாடி கீழே விழப்போனவரை ஆதி வேகமாக வந்து பின்னால் தாங்கிக் கொண்டான்.

 

அனைவரும் பதறிபடி ஈஸ்வரன் அருகில் வர திமிறும் காளையாக சிலிர்த்துக் கொண்டு நின்றான்.

 

சங்கர பாண்டியனுக்கு கோபம் தலைக்கேறியது.

ஆத்திரம் கண்ணை மறைக்க ஊர்‌‌மக்களின் முன்பு‌ தன் மீது கையை வைத்த ஈஸ்வரன் மீது பெருங்கோபம் கொப்பளிக்க , அவமானத்தால் என்ன செய்கிறோம் என்று புரியாமல் அறிவிழந்து ஆதியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வேட்டியை மடித்துக் கொண்டு ஈஸ்வரனை நோக்கி ஓடி அவனது நெஞ்சில் ஓங்கி மிதித்தார்.

கீழே விழாமல் சமாளித்து கொண்டு நின்று அவரை அடிக்க கையை ஓங்கினான்.

மறுகையால் அவரது கையை பிடித்துக்கொண்டு நின்றான். பதிலுக்கு அவனது வெள்ளை நிற சட்டையை பிடித்துக்கொண்டு நின்றார் சங்கர பாண்டியன்.

இருவரும் எதிரும் புதிருமாக கனலை கக்கும் விழிகளோடு நின்றிருந்தனர்.

 

“அய்யோ…! என் புள்ளை..” என லட்சுமி அலறிக் கொண்டே ஓடி வர கல்  தடுக்கிக் கீழே விழப்போனவரை தாங்கினாள் நேஹா.

“ பாத்துங்க…” என்றவளை தீயாக முறைத்தவர் ,

” ஈஸ்வரா அவங்க கூட தகராறு வேணாம்‌பா..வந்துடு நாம‌ போயிடலாம்…” எனப் படபடத்தார்.

 

மீனாட்சியும் கோமதியும்‌ வேகமாக சங்கர‌பாண்டியனருகே சென்று அவரை பின்னுக்கிழுத்து , “பிரச்சினை வேண்டாங்க…எல்லாரும் பாக்குறாங்க. போலாம்…” என்றார் ‌கோமதி.

மெதுவாக ஈஸ்வரனை முறைத்துக் கொண்டே விலகினார்.

 

 தாயின் சொல் ஈஸ்வரனை  கட்டுப்படுத்தியது. ஓங்கிய கையை இறக்கிவிட்டு யாரையும் பாராமல் விறுவிறுவென நடந்து சென்றான்.

 

 ஆதியின் விழிகள் பளபளத்தது. அவனே எதிர்பாராத வகையில் கலகம் கைகலப்பாகியதில் அவனுக்கு பரம திருப்தி.

 

நேஹா அவனருகே வந்து மெல்லிய குரலில்,  “டேய்….உண்மைய சொல்லு… உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…?” எனக் கேட்டாள்.

 

ஈஸ்வரன் சென்ற பாதையை வெறித்துப் பார்த்துக் கொண்டே,  “இல்லை…” என அழுத்தமாகக் கூறினான் .

 

“நம்பிட்டேன் டா…” என‌ அவனை சந்தேகமாக  பார்த்தபடி நகர்ந்தாள். .

 

சங்கர பாண்டியன் மற்றும் ஆதி காரில் ஏறினர்.

மீனாட்சி மற்றும் கோமதி அங்கேயே நின்று‌ கொண்டிருந்ததால் கோபம் வந்தது அவருக்கு.

 

“ இப்ப‌ வீட்டுக்கு வரப்‌போறீகளா.‌‌…? இல்லை அந்த திமிர் பிடிச்சவன்‌ வீட்டுக்கே போறீகளா…?” என‌க் கத்தினார்.

 

இருவரும் சோர்ந்த முகத்தோடு ஆதியின் காரில் ஏறினார்கள்.

 

அமைதியாக வீடு வந்து சேர்ந்தனர். ஆதி மீனாட்சியின் களையிழந்து முகத்தை கண்ணாடியூடே பார்த்தான்.

அவளது‌ முகத்தில் காலையில் இருந்த மலர்ச்சி இப்போது காணாமல் போயிருந்தது.

சங்கர பாண்டியனுக்கு மனதே ஆறவில்லை. ஏதாவது அவனை செய்ய‌ வேண்டும்‌ என மனதில் நினைத்துக் கொண்டார்.

தேவையற்ற வரட்டு கௌரவத்தால் மனதில் வன்மம் பெருகியது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!