சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 47
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சுந்தர் சுந்தரி இருவரிடமும் அன்னம்மா கொண்டு வந்த சீர் தட்டை நீட்டிய ரவிக்குமார் “வாங்கிக்கோங்கம்மா.. இந்த அப்பா இந்த பொண்ணுக்கு கொடுக்கிற சீர் இது..” என்று சொல்லி கொடுக்க சுந்தரும் சுந்தரியும் அதை வாங்க கை நீட்டிய வேளை ஒரு கை வேகமாய் வந்து அப்படியே அந்த தட்டை தட்டி தூர வீசியது.. அங்கே அவர்களுக்கு நடுவே வெறித்தனமான கோபத்தோடு ஷாலினி நின்றிருந்தாள்..
நால்வரும் ஷாலினியையே அவள் ஏற்படுத்திய அதிர்வோடு பார்த்திருக்க அவளோ “அ..ப்…பா..!! என்ன பண்றீங்க நீங்க..?! நிஜமாவே நான் நீங்க பெத்த பொண்ணு தானா..?” அவள் கேட்ட அந்த கேள்வியில் உடைந்தே போனார் ரவிக்குமார்..
“ஷாலினி.. நீ என்ன கேட்கிறேன்னு தெரிஞ்சுதான் கேக்குறியா? என்னை பார்த்து இப்படி கேட்டு நீ யாரை அசிங்க படுத்துறன்னு நினைச்சுகிட்டு இருக்கே..?”
கோபம் இருந்தது அவர் கேள்வியில்..
“நீங்க செய்ற வேலை.. அப்படித்தானப்பா இருக்கு.. எனக்கு துரோகம் பண்ணவன் சட்டைய புடிச்சு நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்கிறதை விட்டுட்டு அவன் பொண்டாட்டியை உங்க பொண்ணுன்னு சொல்லி சீர் கொடுத்தா அப்போ நான் வேற என்னப்பா கேட்கிறது? நிஜமாவே நீங்க என் அப்பா தானான்னு எனக்கு சந்தேகமா தான் பா இருக்கு..” என்றாள் அவளும் கோபத்தை விடாமல்..
“ஷாலினி அந்த பொண்ணு ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கா.. இப்படி எல்லாம் பேசி அவளை மேலே மேலே கஷ்டப்படுத்தாதே.. இப்பதான் சுந்தர் அவளை பத்தி எல்லா விஷயத்தையும் சொன்னாரு.. தெரிஞ்சோ தெரியாமலோ அந்த பொண்ணு இன்னைக்கு இந்த நிலைமையில் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம் ஆயிட்டார்.. அந்த நேரத்துல ஒரு உயிரை காப்பாத்துறதுக்காக சுந்தரியோட மானத்தை காப்பாத்தறதுக்காக அவர் செஞ்ச வேலை இது.. அப்ப போய் அவர் உன்னை பத்தி யோசிச்சிட்டு இருந்தா நாம இப்போ சுந்தரியை உயிரோடயே பார்த்திருக்க முடியாதும்மா.. ஒரு உயிர் போனா கூட பரவால்லன்னு அவர் வேடிக்கை பார்த்து இருந்தா அது ரொம்ப தப்பாயிருக்கும் ஷாலினி..”
ரவிக்குமார் சொல்ல “போனா போகட்டும்.. எவ செத்தா எனக்கு என்ன வந்தது.. இவளை மாதிரி ஒன்னும் இல்லாத ஆளெல்லாம் உயிரோட இருந்து அப்படி என்ன சாதனை நடக்க போகுது.. சோத்துக்கு கஷ்டப்படறவ ஒரேயடியா போய் சேர்ந்தா ஜனத்தொகைல ஒரு கவுன்ட் குறைய போகுது.. அவ்வளவு தானே?”
ஷாலினி சொன்ன அடுத்த நொடி ரவிக்குமாரின் கை ஷாலினியின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது..
அவள் சொன்னதை கேட்டு கோபப்பட்டு ஷாலினியை முறைத்துக் கொண்டே அவளை நோக்கி போன சுந்தரை கைபிடித்து தடுத்தாள் சுந்தரி..
“வேணாம் சுந்தர் சார் ப்ளீஸ்..” என்று சொல்லி அவனை நகர விடாமல் தன் கைக்குள் அவன் கையை இறுக்கமாய் பிடித்திருந்தாள் சுந்தரி..
“சீ… வாயை மூடு.. நான் உன்னை இப்படியா வளர்த்து இருக்கேன்..? அது என்ன? ஏழையா இருந்தா அவங்க உயிரோட வேல்யூ குறைஞ்சுடுமா? ஒரு பொண்ணு உயிர் போனாலும் பரவால்ல.. மானம் போனாலும் பரவால்ல.. உன் வாழ்க்கை.. உன் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்ன்னு நினைக்கிறே.. இது என்ன நினைப்பு ஷாலினி..?”
கத்திய ரவிக்குமார் ஷாலினியை மீண்டும் அடிக்க போக குறுக்கே வந்து அவர் கையை பிடித்தாள் சுந்தரி..
சுந்தரியின் தோளை பிடித்து தன் தந்தையிடம் இருந்து விலக்கி அவளை பின்னே தள்ளிய ஷாலினி “யாருக்கு யாருடி அப்பா..? அவர் என்னோட அப்பா.. எனக்கு மட்டும் தான் அப்பா.. அவரு என்னை அடிப்பாரு.. திட்டுவாரு.. கொஞ்சுவாரு.. என்ன வேணா பண்ணுவாரு.. இது எங்களுக்குள்ள இருக்குற விஷயம்.. இதுல அனாவசியமா உள்ள வந்து கருத்து சொல்றேன்னு சொல்லி தலையிட்ட உன்னை தொலைச்சுடுவேன்.. இந்த அப்பா பொண்ணு பாசம் நடிப்பு இதெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோ.. சுந்தரை ஏமாத்தின மாதிரி எங்க அப்பாவையும் நடிச்சு ஏமாத்தலாம்னு பார்த்தே அதுக்கு முன்னாடி உன் உயிர் உன் கிட்ட இருக்காது..” சுந்தரியை மிரட்டினாள் ஷாலினி..
சுந்தரோ தன் கோபத்தை அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான்.. ஷாலினியோ மேலும் ஆங்காரமாக பேசிக் கொண்டே போனாள்
“எனக்கு எதை விடவும் என் வாழ்க்கை தான் முக்கியம்.. இவளால இப்ப என் வாழ்க்கை போயிருச்சு.. நான் எவ்வளவு கனவு வச்சிருந்தேன் சுந்தரை நினைச்சு.. அத்தனை கனவையும் தூள் தூளாக்கிட்டாளே இந்த படுபாவி..” என்று சொன்னவளுக்கு மட்டும் தான் தெரியும் அவளும் மாதேஷும் இணைந்து கண்ட கனவைப் பற்றி தான் அவள் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று..
“எனக்கு துரோகம் பண்ணிட்டு எந்த காலத்திலயும் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்க முடியாது.. என் மனசு உடைஞ்ச மாதிரி உங்க வாழ்க்கையும் உடைஞ்சு தான் போகும்.. நீங்க ரெண்டு பேரும் எப்படி சந்தோஷமா வாழ்ந்துடறீங்கன்னு நானும் பாக்குறேன்.. நான் இருக்க வேண்டிய இடத்துல இந்த வேலைக்காரியை ஒருநாளும் வாழ விட மாட்டேன்..”
அவள் சாபம் கொடுக்க தொடங்க ரவிக்குமார் “ஷாலினி.. வாயை மூடு.. அவங்களை வாழ்த்தலன்னா கூட பரவால்ல.. இப்படி சாபம் கொடுக்காத.. கல்யாண நாள் அதுவுமா மாலையும் கழுத்துமா இங்க வந்து நிற்கிறாங்க.. ஒத்துக்கிறேன்… உன் காதல் நிறைவேறல.. அதுல உனக்கு வருத்தம் இருக்கும்.. வலி இருக்கும்.. ஆனா அதுக்காக அவங்களுக்கு சாபம் குடுத்தா உன் வலி குறைஞ்சுருமா? இது விதி ஷாலினி.. யாரோட யார் சேரணும்னு கடவுள் போட்ட கணக்கை நாம எப்படி மாத்த முடியும்..?” என்று கேட்டார் ரவிக்குமார்..
“எனக்கு இந்த விதி தலையெழுத்து இதில எல்லாம் நம்பிக்கை இல்லை.. நீங்க சொல்ற மாதிரி ஃபிலாசஃபிக்கலா எல்லாம் என்னால யோசிக்க முடியாது.. நீங்க இந்த சுந்தரியை பத்தி சாதாரணமா நினைக்காதீங்க பா.. இவளை பத்தி இவங்க காலனில போய் கேட்டு பாருங்க.. அத்தனை பேரும் சொல்லுவாங்க.. இப்படி கருப்பா சுமாரா இருக்கும் போதே இவ சுந்தரை மயக்கி தன்னோட கைக்குள்ள போட்டுக்கிட்டாளே.. இவ இன்னும் என்னை மாதிரி எல்லாம் அழகா இருந்தா அவ்வளவுதான்.. ஊர்ல இருக்குற அத்தனை ஆம்பளைங்களும் இவ வீட்லதான் இருப்பாங்க..”
அவள் சொல்ல அடுத்த நொடி ரவிக்குமார் அவளை மறுபடியும் அறைந்திருந்தார்..
சுந்தரோ பல்லை கடித்துக் கொண்டு கைகளை இறுக்கி தன் கோபத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டிருந்தான்.. ஆனால் ஷாலினியோ அவன் பொறுமையை ரொம்பவும் சோதித்தாள்..
“ஷாலினி.. நீ லிமிட் தாண்டி போயிட்டு இருக்கே.. ஒரு பொண்ணை பத்தி ஒரு பொண்ணா இருந்துட்டு இவ்வளவு கேவலமா பேசுற.. சீ.. நீ எல்லாம் ஒரு பொண்ணா? உனக்கு மனசுல ஆயிரம் வேதனை இருக்கும்.. இல்லன்னு சொல்லல.. அதுக்காக இன்னொரு பொண்ணை எப்படி உன்னால இவ்வளவு கேவலமா பேச முடியுது? நீ முதல்ல உள்ள போ.. இதுக்கு மேல நீ இங்க நின்னா நானே உன்னை கொன்னு போட்டுடுவேன்..” என்றார் ரவிக்குமார்..
சுந்தரோ இத்தனை நேரமாய் கைகளை இறுக்கி வைத்துக் கொண்டு தன்னை அடக்கிக் கொண்டிருந்தவன் அவள் கடைசியாக சொன்ன விஷயத்தில் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் அவளை கொல்லும் அளவுக்கு வெறியோடு பார்த்திருந்தான்.. ஆனால் அதற்குள் ரவிக்குமார் அவளை அறைந்து விடவே அவன் அப்படியே அடங்கிப் போனான்..
ஷாலினி அவர்கள் இருவரையும் பார்த்தவள் “ரெண்டு பேரும் சேர்ந்து எங்க அப்பாவையே எனக்கு எதிரா பேச வெச்சிட்டீங்க இல்ல..? இதுவரைக்கும் அவர் என்னை திட்டினது கூட கிடையாது.. அவரையே என்னை அடிக்க வச்சுட்டீங்க இல்ல..? நீங்க எப்படி நல்லா வாழறீங்கன்னு நானும் பார்க்கறேன்.. சுந்தர்.. நீ என்னை கல்யாணம் பண்ணிக்காதது கூட எனக்கு பெரிய விஷயம் இல்ல.. ஆனா எனக்கு பதிலா போயும் போயும் உங்க வீட்ல வேலை செய்ற இந்த வேலைக்காரியை கல்யாணம் பண்ணி இருக்கியே.. சீய்.. நெனைக்கவே அருவருப்பா இருக்கு.. நீ எனக்கு பண்ண துரோகத்துக்கு நிச்சயமா..”
அவள் ஏதோ சொல்ல வர அவள் முடிக்கும் முன் சுந்தரி அவள் கையை பிடித்து கெஞ்ச ஆரம்பித்திருந்தாள்..
“ஷாலினி ப்ளீஸ்.. என்னை என்ன வேணும்னா சொல்லுங்க.. திட்டுங்க.. இது எல்லாத்துக்கும் காரணம் நான் தான்.. அவர் என்னை காப்பாத்தறதுக்காக தான் இந்த தப்பே பண்ணினார்.. தயவு செஞ்சு அவரை எதுவும் சொல்லாதீங்க.. ஏற்கனவே அவர் உங்களுக்கு இப்படி ஒரு தப்ப பண்ணறதுக்கு நான் காரணம் ஆயிட்டனேன்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு .. இன்னும் அவருக்கு நீங்க ஏதாவது பேசி காயப்படுத்திடாதீங்க.. அதுக்கப்பறம் என்னாலயே என்னை மன்னிக்க முடியாது..”
அவள் கெஞ்சி கேட்க ஷாலினியோ திமிராய் அவள் கன்னத்தில் அறைந்து அவள் தோளை பிடித்து அப்படியே பின்னே தள்ளி விட்டாள்..
“உனக்கெல்லாம் என் பக்கத்துல நிக்க கூட தகுதி கிடையாது.. என் அழகென்ன.. என் ஸ்டேட்டஸ் என்ன..? ச்சீய்.. போடி.. இங்கே இருந்து முதல்ல.. உன் கலரை பாரு.. தொட்டா அப்படியே எனக்கும் ஒட்டிக்கும் போல உன் கருப்பு..” என்று சொன்னவளின் முகச்சுளிப்பும் அருவருப்பான வார்த்தைகளும் சுந்தருக்கு ஏதோ புரிய வைத்தது போல் இருந்தது..
அந்நேரம் வரை கஷ்டப்பட்டு பொறுமையாக தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்த சுந்தரின் கை ஷாலினியின் கழுத்தை இப்போது இறுக்கி இருந்தது… கண்களில் இரத்த சிவப்பேறி கிடக்க அவளை கொன்று விடும் வெறியோடு பார்த்தான்..
“நீ இதுவரைக்கும் பேசின பேச்சுக்கே நான் உன்னை கொன்னு போட்டுருக்கணும்.. நான் தான் சொன்னேன் இல்ல..? எனக்கு என்ன வேணும்னா நீ தண்டனை கொடு.. என்னை அடி.. என்னை திட்டு.. என்ன வேணா பண்ணு.. ஆனா சுந்தரி மேல எப்படிடி நீ கை வெப்ப..? ஆமா.. அது என்ன சுந்தரியோட நெறத்தை அவ்ளோ கேவலமா பேசற? நானும் அதே நெறத்துல தானே இருக்கேன்.. அப்போ இத்தனை நாள் என்னை பிடிச்சிருக்கிறதா சொல்லி சுத்தி சுத்தி வந்தியே.. அதுக்கு என்ன மோட்டிவ்… ஹா.. என் பணம் ஸ்டேட்டஸ் சொத்து இதானா உன் மோட்டிவ்..? சீய்.. நீ இவ்வளவு தானா? நான் கூட உனக்கு துரோகம் பண்ணி இருக்கேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன்.. ஆனா..”
கேள்வியாய் சுந்தர் ஒரு ஆராய்ச்சி பார்வையோடு அவள் முகத்தை பார்க்க தன் குட்டு எங்கே அவனிடம் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து சட்டென விழிகளை தாழ்த்தி கொண்டாள் ஷாலினி..
“நீ எதுக்கு என்னை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சியோ நான் உனக்கு துரோகம் பண்ணினதாகவே இருக்கட்டும்.. ஆனா சுந்தரி என்ன பண்ணினா உனக்கு.. அவளை பத்தி தப்பு தப்பா பேசறதுக்கு உனக்கு யாருடி உரிமை கொடுத்தா..? என்னவோ பெருசா அழகு அழகுன்னு பேசிட்டு இருக்கே.. என்ன..? அழகுங்கறது இதோ உன்னோட சிவப்பு தோல்லயும் நீ போட்டிருக்கிற இந்த காஸ்ட்லி மேக்கப்லயும் இந்த மாடர்ன் டிரஸ்லயும் இருக்குன்னு நினைச்சுகிட்டு இருக்கியா?”
தலையை இடவலமாய் ஆட்டியவன் அவள் முகத்தை சுட்டி காட்டி “இதோ நீ அழகுன்னு நெனச்சிட்டு இருக்க இதெல்லாம் இன்னொரு பத்து வருஷம் போனா ஒண்ணுமே இல்லாம போயிடும்.. ஆனா என்னை பொறுத்த வரைக்கும் அழகு எதுல இருக்கு தெரியுமா?” என்று கேட்டவன்
சுந்தரியின் தோளை பற்றி தன்னோடு இறுக்கியபடி அவளை காட்டி “தன்னை சேர்ந்தவங்களுக்கு ஒன்னுன்னா உடனே துடிச்சு போறா பாரு இந்த சுந்தரி.. அவளோட அந்த அக்கறைல இருக்குடி அழகு.. இவ்வளவு நேரம் நீ அவ்ளோ பேச்சு பேசினே சுந்தரியை பத்தி.. ஆனாலும் அதை பத்தி எல்லாம் யோசிக்காம எனக்காக உன் கிட்ட கெஞ்சி அழுதுகிட்டு இருக்கா பாரு.. அந்த அன்புல இருக்குடி அவ அழகு.. அவ எல்லார் மேலேயும் வெச்சிருக்கிற அன்பு தான் அவளுக்கு அழகை கொடுக்குது.. ஆனா நீ எவ்வளவு மேக்கப் போட்டாலும் எவ்வளவு டிரஸ் பண்ணிக்கிட்டாலும் இப்ப நீ காட்டுன பாரு ஒரு கோவம்.. இப்ப பேசின பாரு ஒரு பேச்சு.. அதுலையே உன் மனசு எவ்வளவு அழுக்கா இருக்குன்னு தெரிஞ்சு போச்சு..” என்றவன் ஒரு பெருமூச்சை விட்டு
“ஆக்சுவலா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலன்னு இப்ப எனக்கு ஒரு விதமா நிம்மதியா தான் இருக்கு…. உண்மையை சொல்லப்போனா சுந்தரி தான் உன்கிட்ட இருந்து என்னை காப்பாத்தி இருக்கா..”
தன் கையை அவள் கழுத்தில் இருந்து எடுத்தவன் “ரவிக்குமார் சார் முகத்துக்காக தான் உன்னை நான் இப்படியே விட்டுட்டு போறேன்.. இன்னொரு முறை என் சுந்தரியை பத்தி இன்னும் ஒரு வார்த்தை இந்த வாயிலிருந்து தப்பா வந்தது சாவடிச்சிடுவேன்டி உன்னை” என்றவன்
ரவிக்குமார் பக்கம் திரும்பி “என்னை மன்னிச்சிடுங்க சார்.. இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியல..” என்று சொன்னான் இரு கரம் குவித்து..
அவன் கைகளை தன் கைகளுக்குள் பிடித்தவர் “எனக்கு புரியுது சுந்தர்.. நானே இவ்வளவு நேரத்துக்கு இவளை அடிச்சு துவைச்சு போட்டு இருப்பேன்.. அவ்வளவு பேச்சு பேசிட்டா.. நீங்களா இருக்கவே தான் இவ்வளவு பொறுமையா ஹேண்டில் பண்ணி இருக்கீங்க.. என் பொண்ணுக்கு இப்படி ஒரு முகமும் இருக்குன்னு எனக்கே இப்பதான் தெரியும்.. அவளுக்கு செல்லம் கொடுத்து வளர்த்து நான் எவ்வளவு தப்பு பண்ணி இருக்கேன்னு எனக்கு இப்ப புரியுது.. இங்க நடந்தது எல்லாத்துக்கும் அவ சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்..” என்றார் ரவிக்குமார் தழைந்த குரலில்..
அவ்வளவு பணம் இருந்தும் அது அவர் குணத்தை மாற்றவில்லை… எல்லோருக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து பேசுபவர் அவர்.. யாரையுமே தனக்கு கீழாக எண்ணுபவர் இல்லை.. முக்கியமாக பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை கௌரவமாய் நடத்துபவர்.. ஆனால் அவர் பெற்ற மகளோ அவருக்கு நேர் எதிராய் இருந்தாள்.. பணத்தின் செழிப்பில் வளர்ந்த அவர் பெண் தவறாக வளர்ந்து விட்டாள் என்பது அவருக்கு இப்போதுதான் புரிந்தது..
“நாங்க கிளம்புறோம் சார்..” என்று சொல்லிய சுந்தர் சுந்தரியின் தோளில் கை வைத்து அவளை அணைத்தாற் போல் அழைத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே சென்றான்..
ஷாலினி தன் தந்தையை தீவிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்..
“ஷாலினி..!!” என்று அவர் அழைத்துக் கொண்டு அவள் அருகில் போக ” சே..” என்று முகத்தை வெடுக்கென திருப்பி வேகமாக மாடியில் இருந்த தன் அறைக்கு ஓடினாள் ஷாலினி..
வண்டிக்குள் சுந்தரியை ஏற சொன்ன சுந்தர் தானும் ஏறியவன் திரும்பி சுந்தரியின் கன்னங்களை தன் கைகளுக்குள் ஏந்தினான்..
அவள் கன்னத்தில் ஷாலினி அடித்த தடம் சிவந்து போய் காட்சியளிக்க அவனோ கவலையோடு அவள் கன்னத்தை தன் விரல்களால் வருடி “சாரி சுந்தரி.. என்னால தான் நீ இப்படி அந்த ஷாலினி கிட்ட அடி வாங்குற மாதிரி ஆயிடுச்சு.. ரொம்ப வலிக்குதாடா?”
அவன் மென்மையாக கேட்ட விதத்திலேயே அவள் வலியெல்லாம் எப்போதோ பறந்து போயிருந்தது..
அவளோ கன்னத்தில் இருந்த அவன் கைகளின் மேல் தன் கைகளை பதித்தவள் “இல்ல சுந்தர் சார்.. எனக்கு இது வலிக்கல.. என் உயிரை காப்பாத்த நீங்க எதோ செய்ய போயி இப்படி ஷாலினி முன்னாடியும் அவங்க அப்பா முன்னாடியும் குற்றவாளியா நிக்கற போல ஆயிருச்சு.. அதுதான் சுந்தர் சார் ரொம்ப வலிக்குது..” என்றாள்.. அவள் கண்களோ கலங்கி இருந்தது..
அவள் சொன்ன வார்த்தைகளில் நெகிழ்ந்து போனான் அவன்.. அவளை முன்னால் இழுத்து உச்சந்தலையில் ஆதூரமாய் தன் இதழை மெல்ல பதித்தவன்
“என்னை மன்னிச்சுடு சுந்தரி.. என்னால நீ இவ்ளோ பேச்சை கேக்க வேண்டியதா போச்சு.. எனக்காக நீ ஏன் போய் அவ கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க? அவ என்னை உண்மையா காதலிச்சு இருந்தா என் நிலைமை அவளுக்கு புரிஞ்சுருக்கும்.. நான் இப்படி ஏன் செஞ்சேன்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கும்.. அவ மனசு எப்படின்னு இன்னைக்கு முழுக்க முழுக்க எனக்கு தெரிஞ்சிருச்சு.. நிஜமா சொல்றேன் சுந்தரி.. அவளை கல்யாணம் பண்ணி இருந்தா நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன்..” என்று சொன்னான் அவன்..
“இல்ல சுந்தர் சார்.. நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணலன்னா நீங்க என் கழுத்துல தாலியே கட்டி இருக்க மாட்டீங்க.. அதனால தானே நீங்க இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க.. இதெல்லாம் என்னால தான் நடந்தது.. என்னை மன்னிச்சிடுங்க சுந்தர் சார்.. என்னால முடிஞ்ச வரைக்கும் இதை எப்படியாவது சரி பண்றதுக்கு தான் ஷாலினி மேடமை கெஞ்சி கூத்தாடியாவது அவங்களை சமாதானப்படுத்தலாம்னு முயற்சி பண்ணேன்.. ஆனா அது இன்னும் நிலைமையை மோசமாக்கிடுச்சு”
அவள் வருத்தத்துடன் சொல்லவும் அவள் தலையை ஆதரவாக கோதிவிட்டான்..
“நீ என்ன செஞ்சு இருந்தாலும் ஷாலினி சமாதானமாகி இருக்க மாட்டா.. நல்ல வேளை.. நான் அவளை கல்யாணம் பண்ணிக்கலன்னு இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கேன்.. அவளை கல்யாணம் பண்ணி இருந்தேன்னா தெனம் தெனம் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்னு இன்னைக்கு ஒரு நாள்லயே எனக்கு புரிஞ்சு போச்சு.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது.. அவ காதலை மறந்தது.. இதெல்லாம் பெரிய விஷயம் தான்.. இல்லைன்னு சொல்லல.. அதுக்கு என்னை ரெண்டு அடி அடிச்சு சட்டைய பிடிச்சு அவ நியாயம் கேட்டு இருந்தா கூட அவ பக்கம் நியாயம் இருக்குன்னு நெனச்சு அதை கடந்திருப்பேன்.. ஆனா உன் மேல கை வைக்கிறதுக்கு அவளுக்கு என்ன உரிமை இருக்கு..? இத்தனைக்கும் நீ அவ கிட்ட அழுது கெஞ்சிகிட்டு இருந்தே.. அவல்லாம் மனுஷிதானான்னே இப்ப எனக்கு சந்தேகம் வந்துருச்சு.. அதனால இதைப் பத்தி இனிமே கவலைப்படாத சுந்தரி.. நம்ம இதை இங்கேயே மறந்திடுவோம்.. நம்மளை ரவிக்குமார் சார் புரிஞ்சுக்கிட்டார்.. எனக்கு அது போதும்.. இப்படியே மூஞ்சை உம்முன்னு வெச்சிக்கிட்டு இருக்காம இனிமே நம்ப வாழ்க்கைய ஹேப்பியா தொடங்குற வழியை பார்ப்போம்”
அவன் அவளை ஆழ்ந்து பார்த்து சொல்ல அவன் பார்வையில் அவளுக்கு ஏதோ மாற்றம் தெரிய அந்த குறும்பு பார்வை அவளுக்குள் என்னென்னவோ செய்தது..
சட்டென வெட்க புன்னகையோடு கூட அவள் கன்னங்களும் சிவப்பேறி போக அவனிடமிருந்து விலகி முகத்தை காருக்கு வெளி புறம் திருப்பி தன் கன்ன செவ்வாப்பையும் வெட்க புன்னகையையும் அவனிடமிருந்து மறைக்க பார்த்தாள் அவள்.. இந்த பக்கம் அதை கண்டு கொண்ட சுந்தரோ ஒரு மென்புன்னகையூடே..
“சரி..
அம்மா அப்பா காத்துட்டு இருப்பாங்க.. வா.. நம்ம வீட்டுக்கு போலாம்” என்று சொல்லி காரை கிளப்பினான்..