சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 52
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
“நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாம்.. உடனே டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணலாம்”
சுந்தரி இடியை இறக்க சுந்தர் அப்படியே கையை ஓங்கி அவளை அடிக்கவே போய் விட்டான்..
“டிவோர்ஸ் கிவோர்ஸ்னு பேசினே.. அடிச்சு கொன்னுடுவேன் உன்னை.. நீ இல்லைன்னா செத்துருவேன்டி நானு.. கல்யாணம் ஆன அன்னைக்கு பேசற பேச்சாடீ இது..? காலையில கோவில்ல கல்யாணம் பண்ணி ரெஜிஸ்ட்ரேஷன் நடந்திருக்கு… சாயந்திரமே விவாகரத்து பத்தி பேசற ஒரே பொண்டாட்டி நீயா தான்டி இருக்க முடியும்..”
சுந்தர் அவள் தோள் இரண்டையும் இறுக்கமாக பிடித்தபடி கத்தினான்..
பிறகு தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொண்டவன்.. அவள் முகத்தை தன் கைகளுக்குள் ஏந்தி “சாரி சுந்தரி.. நான் உன்னை அப்படி கத்தியிருக்க கூடாது.. நீ இல்லன்னா என்னால தாங்கவே முடியாது.. தயவு செஞ்சு அவசரப்படாத.. கொஞ்சம் நிதானமா யோசிச்சு பேசி முடிவு எடுக்கலாம்.. வாழ போறது நம்ப ரெண்டு பேரும்.. யாரோ ஏதோ பேசுறாங்கன்னு நம்ம வாழ்க்கையை நாம கெடுத்துக்க வேண்டாம்.. கொஞ்சம் யோசிச்சு பாரு.. ப்ளீஸ்..”
அவள் கையை தன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு கெஞ்சினான் அவன்..
ரதியும் சுந்தரியிடம் “சுந்தரி.. சுந்தர் சொல்றது கரெக்ட்.. இன்னிக்கு இதை விட்டுடு… இப்ப உடனே முடிவு எடுக்காத.. கொஞ்சம் யோசிச்சு ரெண்டு நாள் ஆற போட்டு முடிவெடுக்கலாம்.. அவசரப்படாத.. சுந்தரி.. இது உன் வாழ்க்கை.. விளையாட்டு இல்ல.. சுந்தர் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளு..” என்றாள்..
மேகலா “சுந்தரி.. அந்த ஷாலினியை பத்தி உனக்கு ஏற்கனவே தெரியும்.. அவ எப்பவுமே இப்படித்தான் பேசுவா.. அவளுக்கு யாரைப் பத்தியும் கவலை கிடையாது.. ஆனா நீ கொஞ்சம் சுந்தரை பத்தி யோசிச்சு பாரும்மா.. அவன் உன் மேல உயிரையே வச்சிருக்கான்.. அங்க பாரு.. அவன் கண்ணுல நிக்காம தண்ணி கொட்டிக்கிட்டே இருக்கு.. நீ சொன்னதை கேட்டு அப்படியே பயந்து போய் இருக்கான்.. ஏற்கனவே அவன் எங்க உன்னை இழந்திடுவோமோங்கற பயத்திலதான் உனக்கு தாலியே கட்டினான்.. மறுபடியும் அவனுக்கு உன்னை இழக்கற மாதிரி நிலைமையை உருவாக்காதே.. அவனால அதை தாங்க முடியாது.. அவன் உடைஞ்சே போயிடுவான்மா..”
அவள் கன்னத்தில் கையை வைத்து அவள் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் மேகலா..
நடராஜன் “சுந்தரிம்மா.. நீ அந்த வீட்டை விட்டு போனதில இருந்தே அவன் ஒரு எந்திரம் மாதிரி சுத்திக்கிட்டு இருந்தான்.. திரும்பவும் உன்னை என்னிக்கு அந்த கடையில பார்த்தானோ அன்னைக்கு தான் அவன் முகத்தில ஒரு சிரிப்பே வந்தது.. மறுபடியும் அவனை விட்டு போறேன்னு சொல்லி அவன் வாழ்க்கையை நரகமாக்கிடாத.. யாரோ ஏதோ சொல்றாங்கன்னா அதை தூக்கிப் போட்டுட்டு நீ அவனுக்கு பலமா எப்பவும் கூடவே இருக்கணும்மா..” என்றார்..
“சுந்தரி எல்லாரும் சொல்றாங்க சுந்தரி.. எனக்காக வேண்டாம்.. அவங்கள்லாம் சொல்றதுக்காகவாது கொஞ்சம் யோசிச்சு பாரு சுந்தரி.. அவசரப்பட்டு என்னை விட்டுட்டு போயிடாத.. என்னால தாங்க முடியாதுடி..”
முட்டி போட்டு தரையில் அமர்ந்து அவள் மடியில் தலையை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான் சுந்தர்..
அத்தனை நாள் தன்னையும் அறியாமல் அவள் மீது வைத்திருந்த காதல் தான் அவள் உயிருக்கும் மானத்திற்கும் ஆபத்து வரும்போது அவள் கழுத்தில் தன்னை தாலி கட்ட வைத்திருந்தது..
அப்படி அவள் கழுத்தில் தாலி கட்டும் போது அவன் மனதில் ஷாலினி பற்றிய எந்த எண்ணமோ சிறு உறுத்தலோ கூட இல்லை.. திருமணம் முடிந்து வெகு நேரம் கழித்து கோவிலில் முறையாய் சுந்தரியை திருமணம் செய்யும்போது தான் ஷாலினியின் நினைவே வந்தது அவனுக்கு..
அன்று காலை ஷாலினி வீட்டில் இருந்து கிளம்பும் போது மனதில் இருந்த அந்த சிறு சஞ்சலமும் நீங்கி தெளிவாய் சுந்தரி தான் இனி தன் வாழ்க்கை என்று முழுமையாய் அவளை உள்ளத்தில் நிரப்பி இருந்தான்..
மதியம் அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு செல்லும்போது அவளின் மேல் தனக்குள் இருந்த தீராத ஆசையும் மோகமும் காதலும் ஒன்று சேர்ந்து அவனை ஆட்டுவிக்க அவளோடு வாழப்போகும் வாழ்க்கைக்கான முழு எதிர்பார்ப்போடும் கனவுகளோடும் மகிழ்ச்சியோடும் அவளுடனான ஒவ்வொரு நிமிடத்தையும் இதுவரை அணுஅணுவாய் ரசித்து அனுபவித்து கொண்டு இருந்தான்..
ஆனால் அவனுடைய அத்தனை கனவுகளையும் சுக்கு நூறாய் உடைப்பது போல் தன்னுடைய ஒரே வார்த்தையால் அவன் இதயத்தை உடைத்து இருந்தாள் சுந்தரி.. காதல் இதயத்தில் இவ்வளவு வலியை கொடுக்கும் என்று அவன் அறிந்திருக்கவே இல்லை இதுவரை.. ஒரே நிமிடத்தில் தளர்ந்து துவண்டு போனான் சுந்தர்..
ஆனால் சுந்தரி மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.. அவன் மனம் கொண்ட வலி அவள் இதயம் வரை சென்றடையவில்லையோ என்னவோ.. காதல் வலியை விட அவமானத்தின் வலி பெரிது என்று நினைத்து விட்டாள் பேதை அவள்..
“இல்ல சுந்தர் வேண்டாம்.. நம்ம கல்யாண ரிசப்ஷன் அன்னைக்கே உங்களுக்கு என்னால இவ்ளோ அவமானம்னா போக போக ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு ஃப்ரெண்டோ இல்ல உங்க வாழ்க்கைல இருந்த யாரோ ஒருத்தர்.. ஏன்.. அது நீங்க அன்னைக்கு பேட்டி கொடுத்தீங்களே அந்த டிவி காரங்களோ இல்ல உங்க பேட்டியை பார்த்த அத்தனை பேருல யாரோ ஒருத்தரோ ஒவ்வொரு நாளும் வந்து உங்களை இதே மாதிரி கேட்பாங்க.. ஒவ்வொரு முறையும் என்னால நீங்க அவமானப்பட வேண்டி இருக்கும்.. என்னால அதை தாங்க முடியாது சுந்தர்.. வேண்டாம்.. உங்களுக்கு இந்த நரக வாழ்க்கை வேண்டாம்.. நான் சொல்றது தான் சரி.. நம்ம பிரிஞ்சுடலாம்..” என்று சொன்னாள் சுந்தரி..
“ஐயோ சுந்தரி.. ப்ளீஸ்.. அப்படி சொல்லாத.. இதுக்கு முன்னாடி அந்த பேட்டி குடுக்கும்போது நான் ஒரு தப்பான அண்டர்ஸ்டாண்டிங்ல இருந்தேன்.. இப்ப எனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்சிடுச்சு.. மனசோட அழகை பாக்க தெரிஞ்சுகிட்டேன்.. சுந்தரி தயவு செஞ்சு என்னை விட்டுட்டு போயிடறேன்னு சொல்லாத சுந்தரி.. எனக்கு ரொம்ப வலிக்குதுடி.. நீ என்ன சொன்னாலும் சரி.. நான் உனக்கு டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன்.. உன் கழுத்துல நான் தாலி கட்டி இருக்கேன்.. உன்னை தவிர யாரும் எனக்கு பொண்டாட்டியா வர முடியாது.. அதனால நீ என் கூட சேர்ந்து வாழ்ந்து தான் ஆகணும்.. கிளம்பு வீட்டுக்கு போலாம்..” என்றான் அவன் மிரட்டலாய்..
“நீங்க போட்ட சவாலுக்காக தினம் தினம் நீங்க அவமானப்பட தயாராக இருக்கலாம்.. ஆனா நான் எதுக்கு அவமான படணும்.. ஒவ்வொரு நாளும் யாராவது ஒருத்தர் வந்து என்னை பத்தி இன்னிக்கு மாதிரியே தப்பு தப்பா பேசுவாங்க.. அதெல்லாம் கேட்டுட்டு நான் எதுக்கு சகிச்சிக்கணும்? என்னை சந்தோஷமா வச்சுக்கிறேன்னு தானே கல்யாணம் பண்ணுனீங்க..? இந்த மாதிரி நடந்துட்டு இருந்தா நான் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? தினம் தினம் அழுதுகிட்டு தானே இருப்பேன்..”
அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அப்படியே சலனமின்றி அவளிடமிருந்து பார்வையை அகற்றாமல் நின்றான் சுந்தர்..
அவனை விட்டு பிரிந்து செல்ல வேறு வழி இன்றி அவளும் அப்படி கேட்டு விட்டாள்.. ஆனால் அவள் கேட்ட கேள்வி அவளுக்கே மனதில் ரணமாய் வலித்தது.. அவனுக்காக அவள் எப்படிப்பட்ட அவமானத்தையும் துன்பத்தையும் தாங்க தயாராக இருந்தாள்.. ஆனால் தனக்காக அவன் ஒரு சிறு அவமானமோ துன்பமோ படுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. என்றாலும் அவள் இப்படி சொல்லவில்லை என்றால் அவள் சொல்லும் முடிவை அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று மனதை கல்லாக்கிக் கொண்டு அப்படி பேசியிருந்தாள் சுந்தரி..
தன் முகத்தை இரு கைகளால் மூடியவன் அப்படியே கைகளை எடுத்து தலையையும் கோதியபடி “ஓகே.. சோ.. நீ என்னை விட்டு போகணும்னு முடிவு பண்ணிட்டே.. நீ போ.. ஆனா உன் புருஷனா நான் சொல்ற ஒரே ஒரு விஷயத்தை கேப்பியா?” என்று கேட்டான்..
அவள் என்ன என்பது போல் அவனை பார்க்க “நமக்கு டிவோர்ஸ் ஆகற வரைக்கும் நீ எனக்கு பொண்டாட்டி தான்.. அதனால நமக்கு டிவோர்ஸ் கிடைக்கிற வரைக்கும் நம்ம வீட்ல நீ என்னோட இருப்பியா..? ப்ளீஸ் சுந்தரி.. அதுவரைக்கும் எனக்காக உன்னை யாரு அவமானப்படுத்தினாலும் பொறுத்துப்பியா..?”
அவள் கண்ணை கூட பார்க்காமல் தலையை குனிந்து கொண்டு அவள் கையை பிடித்தபடி கெஞ்சிக் கொண்டு இருந்தான்..
அவன் கெஞ்சுவதை பார்த்து அவள் இதயமே சுக்கு நூறாய் உடைந்து போனது.. அவனுக்கு மட்டுமே உரிமையானவள் அவள்.. தன்னோடு இருக்கச் சொல்லி அவளிடம் அவன் கெஞ்சும் நிலை அவளை மொத்தமாய் நொறுக்கி வீழ்த்தியது..
நிமிர்ந்து அவன் அவள் கண்ணை பார்த்த அடுத்த நொடி அவனை அணைத்துக் கொண்டு இந்த ஜென்மத்தில் உன்னை விட்டு போக மாட்டேன் என்று சொல்லி கதறி அழவேண்டும் போல் தான் இருந்தது.. ஆனால் அப்படி செய்தால் அது அவன் வாழ்வுக்கு தான் பெரும்வினையை கொண்டு வரும் என்று நினைத்தவள் தன்னை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்..
அவளும் தலையை குனிந்து கொண்டு “ஓகே சுந்தர் சார்..” என்றாள்..
“சுந்தர் சார்” என்று கூப்பிட்டால் தன்னை தள்ளி வைப்பது போல் இருக்கிறது என்று அவன் சொல்லியும் அவனை தள்ளி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தே அவள் அப்படி கூப்பிடுவதை உணர்ந்தவன் மரித்தே போனான் அந்த நொடி..
“டிவோர்ஸ் கிடைக்கிற வரைக்கும் நான் நம்ம வீட்ல இருக்கேன்..” என்றாள் அவள்..
நம்ம வீடு என்று அவள் சொன்னது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாய் தான் இருந்தது..
இறுக்கமான முகங்களுடனே அவர்கள் அனைவரும் வீட்டுக்கு வர சுந்தரியும் ரதியும் அதற்கு முன் அவர்கள் தங்கிய அறையில் சென்று புகுந்து கொள்ள சுந்தர் தன்னறைக்குச் சென்றான்..
தன் அறைக்கு சென்று அவனுடைய முதல் இரவுக்காக அந்த அறை அலங்கரிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அப்படியே தரையில் காலை மடித்து அமர்ந்து தரையில் கைகளால் ஓங்கி குத்தி கத்தினான்.. அழுதான்.. அவன் கத்தும் சத்தமும் அழும் சத்தமும் சுந்தரியின் காதிலும் விழுந்தது..
அவளுக்கு ஓடிவந்து அவனை அணைத்து கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும் தன் காதுகள் இரண்டையும் இறுக்க பொத்திக்கொண்டு தலையை குனிந்த படி அமர்ந்திருந்தாள்..
ரதிக்கு அவளை பார்க்க பார்க்க கோபம் கோபமாய் வந்தது..
“ஏன் தான் இந்த சுந்தரி வறட்டு பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்கான்னு தெரியல.. அவர் மேல அவ்வளவு பாசம் வெச்சிருக்கா.. அவங்க சொன்னதெல்லாம் மறந்துட்டு கிடைச்ச வாழ்க்கையை ஒழுங்கா வாழாம இப்படி பாழ் பண்ணிக்கிறாளே.. இவளை..”
பல்லை கடித்து புலம்பியவள் ஒன்றும் செய்ய முடியாமல் அப்படியே படுத்து உறங்கிப் போனாள்..
சுந்தரோ தரையில் ஓங்கி தன் கைகளை பல முறை குத்தியதில் கைகளில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.. அவனுக்கு..
தன் கட்டிலில் போட்டிருந்த பூ அலங்காரம் எல்லாவற்றையும் பிய்த்து போட்டவன் அப்படியே அந்த கட்டிலில் விழுந்து தன் உயிரான சுந்தரி தன்னை விட்டு போகப்போவது எண்ணி அழுது கொண்டே இருந்தான்..
வெகு நேரம் அழுதவன் எப்போது உறங்கினான் என்று அவனுக்கே தெரியாது..
நடு இரவில் அவன் அறைக்கு வந்த சுந்தரி கட்டிலுக்கு வெளியே கால் தொங்கிக் கொண்டிருக்க அதன் குறுக்கே படுத்திருந்து அப்படியே உறங்கி போயிருக்கும் சுந்தரை பார்த்தவளுக்கு தாங்க மாட்டாமல் அழுகை வெடித்து கிளம்பியது..
இரு கைகளாலும் தன் வாயை பொத்தியவள் மெல்ல அவன் அருகில் சென்று அவனை நேராக திருப்பி படுக்க வைத்து தலையை கோதி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.. அப்போதுதான் அவன் கைகளை கவனித்தாள்..
அவன் கைகளில் இரத்தம் வந்து காய்ந்து போய் இருந்தது.. அதை பார்த்தவுடன் அவன் கைகளை எடுத்த கண்ணில் வைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தாள்..
“டேய்.. அழகா.. ஏன்டா இப்படி உன்னை நீயே வருத்திக்கிற.. ப்ளீஸ் என்னை விட்டுடு.. என்னை விட்டு தள்ளியே இரு.. அதுதான் உன் வாழ்க்கைக்கு நல்லது…” என்று சொல்லி அவள் அவன் கைகளை சுத்தம் செய்து கட்டு போட்டுவிட்டு போர்வை போர்த்தி விட்டு எழுந்தவள் தன் அறைக்கு செல்ல திரும்பவும் தன் கையை சுந்தர் அழுந்த பிடித்து இழுத்திருக்க அப்படியே விழி விரித்து நின்றாள்..
“உன்னால என்னை விட்டுட்டு இருக்க முடியுமா சுந்தரி.. அந்த ஹோட்டல்ல அவ்வளவு பேசினே.. இந்த கையில ஒரு சின்ன காயம் பட்டத்துக்கே உனக்கு தாங்கல.. நீ என்னை விட்டு போயிட்டா என் உயிர்ல ரத்தம் வடியுமே.. அப்ப உனக்கு இன்னும் வலிக்குமேடி.. உனக்கு ஏன்டி இது புரிய மாட்டேங்குது..?” என்று சொன்ன சுந்தர் அவளைப் பின்னிருந்து இழுத்து அந்த கட்டிலில் அமர வைத்தான்.. தானும் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவள் தோளில் சாய்ந்து படுத்துக் கொண்டான்..
“சுந்தரி ப்ளீஸ்.. எதுவும் சொல்லிடாத.. நீ இங்க இருக்கற வரைக்கும் என்னோடயே இரு.. உன்னை பாத்துகிட்டே இருந்தா போதும் எனக்கு.. எனக்கு யார் மடியிலயாவது படுத்து அழணும் போல இருக்கு சுந்தரி.. நான் உன் மடியில படுத்து தூங்கட்டுமா..?”
அவள் கண்ணிலோ அருவி கொட்டிக் கொண்டிருந்தது..
அவள் கண்ணை துடைத்தவன் “சரி உனக்கு இஷ்டம் இல்லனா வேண்டாம்.. விடு..” என்று சொல்லி தலையணையில் தலை வைத்து படுக்க திரும்ப அவன் தலையை பிடித்து தன் மடியில் சாய்த்தவள் அவன் தலையை கோதி நெற்றியில் முத்தமிட்டாள்..
அவள் இடையை சுற்றி தன் கைகளால் வளைத்து அவள் மடியில் முகம் புதைத்து கண்ணை மூடியவன் அப்படியே உறங்கியும் போனான்..
அவன் மனதில் இருந்த வலியில் தாய்மடி தேடும் ஒரு சிறு குழந்தையாய் ஆகிப்போனான் அவன்.. அந்த தாய்மடி சுந்தரியிடம் கிடைத்தவுடன் அப்படியே உறங்கியும் போய் விட்டான் நிம்மதியாய்..
சுந்தரிக்கு தான் எப்படி அவனை விட்டு தனியாக இருக்க போகிறோமோ என்று உள்ளத்தில் சிறிது அச்சமாகவே இருந்தது.. ஆனால் அவனுக்காக அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று உறுதி கொண்டாள்..
இதற்கு மாறாக சுந்தரோ அவளை அந்த வீட்டை விட்டு எக்காரணத்தை கொண்டும் வெளியே போக விடக்கூடாது என்று முடிவு செய்து உறங்கிப் போனான்..
சிறிது நேரம் கழித்து அவனைக் கட்டிலில் படுக்க வைக்க முயல அவனோ அடம் பிடிக்கும் குழந்தையாய் அவளை இறுக்கி அணைத்து படுத்திருந்தான்..
இன்னும் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு தூக்கம் வர மெதுவாக அவன் தலையை தூக்கி தலையணையில் வைத்து எழுந்து செல்லலாம் என்று இருந்தவளின் கை அவன் கன்னத்திற்கு அடியில் மாட்டிக் கொண்டிருந்தது..
அவள் உள்ளங்கையை தன் இருகைகளால் பிடித்து கன்னத்திற்கு அடியில் வைத்துக்கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.. அவள் தன் கையை எடுக்க முயல அவன் தூக்கம் கலையவும் அப்படியே கையை வைத்துக் கொண்டு படுத்து உறங்கியும் போனாள் சுந்தரி..