அவனுக்கு அருகே பட்டுப் புடவையில் தங்க நகைகளால் ஒளிர்ந்த மணப்பெண்ணாக பதுமை போல அமர்ந்திருந்தாள் மதுரா.
ஆனால் கதிர்வேலனின் முகத்தில் இருந்ததைப் போல அவளுடைய முகத்தில் மகிழ்ச்சியின் எந்த அறிகுறியும் துளி அளவும் இல்லை.
அவள் கண்கள் தரையை உற்று நோக்கிக் கொண்டிருந்தன.
யாரையும் பார்க்கப் பிரியப்படாதவள் போல தரையை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
அவளுடைய இதயம் விருப்பமற்ற திருமணச் சடங்குகளின் மத்தியில் ஒரு கூண்டில் அடைபட்ட பறவை போலத் தவித்துத் தத்தளித்தது.
பெண்ணாகப் பிறந்ததை எண்ணி சலித்துக் கொண்டாள் அவள்.
அதுவும் ஏழைக் குடும்பத்தில் ஏன் பிறந்தோம் என்ற எண்ணம் அவளுக்குள் அக்கணமும் தோன்றி மறைந்தது.
எவ்வளவு பெரிய வாய்ப்பு அவளுடைய வீடு தேடி வந்தும் கூட பணம் இல்லாததால் அந்த வாய்ப்பை இறுக்கப்பற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்கு.
அவளுடைய கண்கள் தரையை வெறித்தாலும், அவளது மனக் கண்ணில் மின்னியது ஒரு மங்கிய கனவு..
ஃபேஷன் டிசைனிங் உலகில் தன்னை ஒரு படைப்பாளியாக உருவாக்க வேண்டும் என்ற கனவே அது.
சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஒரு பேஷன் டிசைனிங் நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்கு ஒரு அரிய வாய்ப்பு அவளைத் தேடி வந்தது.
அவளுடைய திறமையைப் பாராட்டி அவளது வடிவமைப்பு ஓவியங்களைப் பார்த்து அந்த நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் அவளுக்கு முழு உதவித்தொகையுடன் பயிற்சி வழங்குவதாக உறுதியளித்திருந்தும் கூட அவளால் அந்த வாய்ப்பை இலகுவில் ஏற்க முடியவில்லை.
சென்னையில் தங்குவதற்கும் பயணம் செய்வதற்கும் அங்கு வாழ்வதற்கும் தேவையான குறைந்தபட்ச பணம் கூட அவளது குடும்பத்திடம் இல்லையே.
அவளுடைய தந்தை ஒரு விவசாயி. சாதாரண விவசாயி அல்ல.. கடனில் மூழ்கி எழ முடியாமல் தத்தளிக்கும் விவசாயி.
அம்மாவின் கண்ணீரும், தங்கையின் படிப்புச் செலவும், வீட்டின் அன்றாடத் தேவைகளும் அவளை இறுக்கிப் பிடித்திருந்தன.
விளைவு அவளுடைய ஆசை அவளுடைய தந்தையால் மறுக்கப்பட்டது.
அவர்களுடைய கடன் சுமை தீர்ந்து அவர்கள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால் இந்தத் திருமணம் அவசியம் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டாள் மதுரா.
அக்கணம் மதுராவின் மனம் ஆதங்கத்தில் தவித்தது.
‘ஏன் இந்த ஏழ்மை என்னை இப்படிக் வதைக்கின்றது..? என் திறமைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதைப் பயன்படுத்த முடியாமல் இப்படிப் பிடிக்காத திருமணத்தில் அமர்ந்திருக்கின்றேனே…’ என கசப்புடன் எண்ணினாள் அவள்.
கதிர் வேலனின் செல்வாக்கு, அவனது குடும்பத்தின் ஆடம்பரம், இவை எல்லாம் அவளுக்கு ஒரு தங்கக் கூண்டைப் போலவே தோன்றின.
இந்தத் திருமணம் அவளை பணக்கார வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லலாம்… ஆனால் அவளுடைய ஆசையை அவளுடைய கனவை அது நிறைவேற்றுமா..?
மணமேடையில் மங்கள இசை முழங்க புரோகிதர் மந்திரங்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த மந்திரங்கள் யாவும் அவளுக்கோ நாராசமாய் செவியினுள் நுழைந்தன.
வெறுப்போடு தன் அருகே அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள் அவள்.
அழகாகத்தான் இருந்தான் அவன்.
ஆனால் அவளுக்குத்தான் இரசிக்கவில்லை.
கதிர்வேலனோ அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
சட்டென தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள்.
அதை வெட்கம் என எண்ணிக் கொண்டான் நம் நாயகன்.
பாவம் அவன் இருந்த குதூகலமான மனநிலையில் அவளுடைய மன உணர்வுகளை அவனுக்குப் படிக்கத் தெரியவில்லை.
அவளுடைய கைகள் மணமாலையை இறுகப் பற்றியிருந்தன.
ஆனால் அவளது இதயம் அந்த மாலையை பிய்த்து எறிந்து விட்டு தன் கனவை நோக்கி ஓட விரும்பியது.
திடீரென மணமேடையில் ஒரு சிறு அமைதி நிலவியது. புரோகிதரோ மணமாலை மாற்றும் நேரம் வந்துவிட்டதாக அறிவித்தார்.
மதுராவின் இதயத் துடிப்பு அதிகரித்தது. அவள் மெல்ல முகத்தை உயர்த்தி கூட்டத்தைப் பார்த்தாள்.
அவளுடைய அம்மாவின் கண்ணீர் படர்ந்த முகம், தந்தையின் வாடிய பார்வை, அவளைப் போலவே உருவ ஒற்றுமையுடன் இருந்த தங்கையின் அப்பாவித்தனமான புன்னகை இவை அனைத்தும் அவளை மீண்டும் யதார்த்தத்திற்கு இழுத்து வந்தன.
சடாரென நிமிர்ந்தாள் அவள்.
அவளைப் போலவே உருவ ஒற்றுமையுடன் இருந்த தங்கையின் அப்பாவித்தனமான புன்னகை..!!!
அவளைப் போலவே உருவ ஒற்றுமையுடன் இருந்த தங்கை..!?
நொடி நேரத்தில் அவளுக்குள் ஆயிரம் திட்டங்கள் உருவாகின.
அந்தத் திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது.
கடைசி நேரத்தில் அவளுக்குள் உதித்த அந்தத் திட்டத்தை தன் இறுதி நம்பிக்கையாக எண்ணிக் கொண்டாள் மதுரா.
அவளுக்கு எதிர்மாறான எண்ணங்களுடன் பட்டு வேஷ்டியும், தங்கக் கரை வைத்த ஷர்ட்டும் அணிந்து முகத்தில் ஒரு குறுங்கனவு மின்ன சிறு முறுவலுடன் அமர்ந்திருந்தான் கதிர்.
அவனைப் பொறுத்த வரைக்கும் இந்தத் திருமணம் ஒரு புதிய அத்தியாயம்.
அவனுடைய கண்கள் மதுராவை மட்டுமே தழுவின.
முப்பது ஆண்டு கால பிரம்மச்சரிய வாழ்க்கையின் கனவு இன்று நிறைவேறப் போகின்றது என்ற எண்ணத்தில் அவன் இதயம் துள்ளியது.
மகிழ்ச்சியுடன் தன்னுடைய அன்னையைப் பார்த்தான் கதிர்.
அவரோ உறவுக்காரருடன் சேர்ந்து எதையோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது கூட அவருடைய கண்கள் பெருமையுடன் அடிக்கடி தன்னைத் தீண்டுவதைக் கண்டு அவனுக்கும் சிரிப்பு முகிழ்த்தது.
சிரித்தவாறே தன்னுடைய உயிர் நண்பனான ஆகாஷைத் தேடினான் கதிர்.
ஆகாஷோ முறுக்கு நிறைந்த வெள்ளித் தட்டை தன் கையில் ஏந்தி நின்றவாறு திருமணத்துக்கு வந்திருந்த அழகிய பெண்களை நோக்கித் தன் பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.
‘இவன் திருந்த மாட்டான்…’ என எண்ணிய கதிரின் பார்வை மீண்டும் தன் அருகே அமர்ந்திருந்த தன்னவளின் மீது பதிந்தது.
‘ஐயோ ரொம்ப அழகா இருக்காளே…’ ஜொள்ளினான் அவன்.
அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கப்பட்ட தாலியோ மீண்டும் மணமேடைக்கு வந்து விட அதை எடுத்து கதிர்வேலனின் கரத்தில் கொடுத்த புரோகிதரோ “கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..” என்றவாறு மாங்கல்ய மந்திரத்தை சத்தமாக உச்சரிக்கத் தொடங்க,
பொன் தாலி கோர்க்கப்பட்டிருந்த மஞ்சள் கயிற்றைத் தன் கரத்தில் ஏந்தியவனுக்கு உடலில் சிலிர்ப்பு உண்டானது.
மதுராவோ படபடத்த தேகத்துடன் தலையைக் குனிந்தவாறு அப்படியே அசையாது அமர்ந்திருக்க அவளுடைய கழுத்தில் அந்த மஞ்சள் கயிற்றை அணிவித்தான் கதிர்வேலன்.
சுற்றி இருந்தவர்கள் யாவரும் மலர்களைத் தூவி அவர்களை ஆசீர்வதிக்க,
மதுராவின் பின்னே நின்ற அவளுடைய தங்கை அஞ்சலியோ மதுராவின் காதருகே குனிந்து “அக்கா முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கோ… போட்டோ எல்லாம் எடுக்குறாங்க பாரு…. எல்லாரோட பார்வையும் உன்மேலதான் இருக்கு…” என கிசுகிசுப்பாகக் கூறினாள்.
மற்றைய நேரமாக இருந்திருந்தால் அஞ்சலியை நன்றாக திட்டி விட்டிருப்பாள் மதுரா. ஆனால் இப்போது வாய் திறந்து பேச முடியாத நிலையில் அமர்ந்திருப்பதால் எதுவும் கூறாது அமைதியாக இருந்து விட்டாள் அவள்.
அதன் பின்னர் ஒவ்வொரு சடங்கும் முறைப்படி நடைபெறத் தொடங்க அனைத்திலும் வேண்டா வெறுப்பாக கலந்து கொண்டவளுக்கு எப்போது தன் தங்கையிடம் தனியாக பேசலாம் என்றிருந்தது.
“ஹேய் என்னாச்சு மது..? நீ ரொம்ப டல்லா இருக்க மாதிரி தெரியுதே.. நீ ஓகேதானே..?” என அவளருகே நின்ற கதிர்வேலன் கேட்டான்.
“ம்ம் ஓகேதான்.. கொஞ்சம் டயர்டா இருக்கு..” என்றாள் அவள் எரிச்சலை மறைத்த குரலில்.
“இன்னும் பத்து நிமிஷத்துல கார் வந்துடும்… நாம வீட்டுக்கு கிளம்பிடலாம்..” என்றவன் அவளுடைய கரத்தை மெல்லப் பற்றிக்கொள்ள,
சட்டென தன் கரத்தை உருவி விடுவித்துக் கொண்டவள் “ஓகே..” என்றவாறு அவனை விட்டு விலகி நின்று கொண்டாள்.
அவன் கூறியதைப் போல சில நிமிடங்களில் அவர்களை ஏற்றிச் செல்வதற்காக கார் வந்திருந்தது.
தன் குடும்பத்துடன் நின்ற தங்கையைப் பார்த்தவள் “ம்மா ப்பா.. நீங்களும் வாங்க.. அஞ்சலி வா..” என அவர்களிடம் கூறிவிட்டு அந்தக் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
கதிர்வேலனின் வீட்டை நெருங்க நெருங்க மதுராவுக்கோ மனம் படபடக்கத் தொடங்கியது.
அரை மணி நேரத்திற்குள் கதிர்வேலனின் வீட்டை அனைவரும் வந்தடைந்திருந்தனர்.
மதுராவை முதலிரவுக்கு தயாராகுமாறு அங்கிருந்த பெரியவர்கள் கூற அஞ்சலியின் கரத்தைப் பிடித்து அவளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள் மதுரா.
கதிர்வேலனோ அறையை விட்டு வெளியே வந்தவன் வெட்கத்துடன் மதுராவைத் தேட அவன் முன்பு வந்து நின்றான் அவனுடைய நண்பன் ஆகாஷ்.
“டேய் என்னடா இப்படி வெக்கப்படுற..?” எனக் கேட்டான் ஆகாஷ்.
“பின்ன எத்தன வருஷக் கனவு தெரியுமா இது..? என்னோட முப்பது வருஷ பிரம்மச்சரிய வாழ்க்கையும் இன்னையோட முடியப் போகுது.. ஐயோ அத நினைச்சாலே எனக்கு வெக்க வெக்கமா வருதே…” என மீண்டும் வெட்கப்பட்டான் நம் நாயகன் கதிர்.
“டேய்… ஏன்டா இப்படி அலையிற..? இதுக்குத்தான் சொன்னேன் ஒரு பொண்ண லவ் பண்ணுன்னு கேட்டியா..? என்ன மாதிரி ஒருத்திய லவ் பண்ணிருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் அனுபவிச்சி இருக்கலாம்ல..?” என ஆகாஷ் கூற,
அவனை அழுத்தமாகப் பார்த்தவன் “நீ சொல்றது இல்லீகல் ரிலேஷன்ஷிப்டா… அதுல என்னடா கிக் இருக்கப் போகுது..? எனக்குன்னு ஒருத்தி வரணும்.. அவ கூட வாழணும் மச்சான்..”
“சரி என்னவோ பண்ணு..” சலித்துக் கொண்டான் ஆகாஷ்.
“என்னவோ பண்ணுன்னு சொல்லக் கூடாது.. என்ஜாய் பண்ணுன்னு சொல்லணும்..” என கதிர் இமை சிமிட்டிச் சிரிக்க,
“அடச்சீ நீ சாதா கதிர் இல்ல காஜி கதிர்டா.. உன்னப் பத்தி தெரியாம ஊருக்குள்ள இருக்கவனுங்க எல்லாம் உன்ன ரொம்ப பெருமையா பேசுறானுங்க.. நீ என்னடான்னா எப்போ முதலிரவு நடக்கும்னு காஜியா காத்துகிட்டு கிடந்திருக்க..”
“டேய் டேய் அடங்குடா.. நான் என் பொண்டாட்டிக்கு காஜியாவே இருந்துட்டுப் போறேன்..” என்றான் அவன்.
“அது சரி எந்த அனுபவமும் இல்லாம போறியே.. உள்ள போய் என்ன பண்ணனும்னு தெரியுமா..?” என நக்கலோடு ஆகாஷ் சிரித்தவாறே கேட்க,
“கல்யாணத்துக்கு முதல்நாள் ஏழு மணி நேரமா என்ன காணலைன்னு எல்லாரும் தேடினாங்களே.. ப்ச் நீ கூட என்னத் தேடினியே…”
“ஆமாடா எங்க போன..? இப்ப வரைக்கும் நீ எங்க போனேன்னு எங்கிட்ட சொல்லவே இல்லையே… எவ்வளவு நேரமா உன்னத் தேடினோம் தெரியுமா..?”
“நம்ம தோப்புல படுத்துக்கிடந்து கிட்டத்தட்ட இருபத்தஞ்சு பிட்டுப் படம் பார்த்தேன் மச்சான்..” என்றதும் ஆகாஷுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“அடப்பாவி 7 மணி நேரமா இதைத்தான் பண்ணிக்கிட்டு இருந்தியா..?”
“ஆமாடா அதுல கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இன்னிக்கு இறக்கணும்..” என்றவன்,
“பாலிருக்கும்
பழமிருக்கும் பள்ளி
அறையிலே
பாப்பாவுக்கும் இந்த ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்…” எனப் பாடிக் கொண்டே வெட்கப்பட்டவாறு தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான்.
பாவம் அவனுடைய ஆசைக்கு மாபெரும் ஆப்பு வைக்கக் காத்திருந்தாள் அவனுடைய மனைவி.