தணலின் சீதளம் 33

5
(5)

சீதளம் 33

வீட்டின் பின் புறம் முற்றத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு இரவு வானத்தில் இருக்கும் ஒற்றை நிலவை பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன்.
தன்னுடைய மகன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான் என்பதை அறிந்த செல்வரத்தினம் அவன் அருகில் வந்து அவனுடைய தோளில் கரம் பதித்தார்.
நிலவை வெரித்துக் கொண்டிருந்தவன் பார்வையோ தன் தோளின் மீது பதிந்திருந்த கரத்தின் மேல் பதித்தான்.
தன் தந்தை தான் வந்திருப்பது என்று உணர்ந்து கொண்டவன் கட்டிலிலுருந்து எழப்போக அவனை எழ விடாமல் தடுத்த செல்வரத்தினமோ அவனுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.
அப்பொழுதும் வேந்தனுடைய முகம் களையில்லாமல் காட்சி அளிக்கவே செல்வரத்தினம் அவனுடைய தலை முடியை கோதிவிட்டவாறு,
“ என்ன வேந்தா அப்பா மேல கோபமா இருக்கியா”
என்று கேட்டார்.
அதற்கு அவனோ எந்த ஒரு பதிலும் சொல்லாமல் தலையை குனிந்து அமர்ந்திருக்க.
“ உன்னோட இந்த அமைதியிலேயே தெரியுது என் மேல பயங்கர கோபத்தில் இருக்கேன்னு” என்று செல்வரத்தினம் சொல்ல அவரை ஏறிட்டு பார்த்த வேந்தனின் விழிகளோ கலங்கியிருந்தன.
“ என்ன வேந்தா இது கண்ணு ரெண்டும் இவ்வளவு சிவப்பா இருக்கு.
உன் கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்கோ ஒரு மனுஷனுக்கு இவ்வளவு கோபம் வரக்கூடாது” என்றார் அவர்.
வேந்தனோ,
“என்னால என் கோபத்தை கட்டுப்படுத்த முடியலப்பா அந்த ஆள பார்த்தாலே எனக்கு அவ்வளவு வெறி வருது.
எப்படி உங்களை அசிங்கப்படுத்தின அந்த ஆளை வீட்டுக்குள்ள விட்டீங்க” என்று அவன் மீண்டும் கேட்க அதற்கு செல்வரத்தினமோ சிறு புன்னகையை உதிர்த்தவர்,
“வேந்தா இங்க பாரு நீ என் மேல எந்த அளவுக்கு பாசம் வச்சிருக்கியோ நானும் உன் மேல எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறேனோ அதே மாதிரி தான் சத்யராஜ் அவர் பொண்ணு மேல உயிரையே வைத்திருக்கிறார்.
அதுக்காக அவர் நடந்துகிட்ட முறை சரின்னு சொல்ல மாட்டேன்.
எந்த ஒரு அப்பாவும் தன்னோட பிள்ளைகளோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நினைப்பாங்க அதுல அவரும் விதிவிலக்கல்ல.
அவரு பட்டணத்துல பணக்காரரா இருக்காரு பொன்னையும் அப்படித்தான் வளர்த்திருக்கிறார்.
அப்படி இருக்கும்போது தான் பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்கிற இடத்திலயும் தன்னைவிட வசதியான இடத்துல கொடுக்க ஆசைப்பட்டாரு.
அப்படி இருக்கும்போது தான் பொண்ணு ஒரு கிராமத்துல போயி கஷ்டப்பட யாரு விரும்புவா”
“ அப்பா பேசுறது நீங்க தான் பேசுறீங்களா கிராமத்துல கட்டிக் கொடுத்தா கஷ்டம் தான் படுவாங்கன்னு எப்படி சொல்றீங்க. அதுவும் நீங்களும் ஒரு கிராமத்திலியே இருந்து கொண்டு இப்படி பேசலாமா” என்று வேந்தன் கேட்க.
அதற்கு அவரோ,
“ இல்ல வேந்தா நான் பொதுவா எல்லாரோட மனப்பான்மையும் இப்படித்தான் இருக்கணும்னு சொன்னேன்.
நீயே யோசிச்சு பாரு கிராமத்துல காட்டுல மேட்டுல வேலை செய்றவங்க, தன் பிள்ளைங்களும் தங்களை மாதிரி இப்படி கிடந்து கஷ்டப்படக்கூடாது.
நல்லா படிச்சு பெரிய ஆள் ஆகணும்னு தான் விரும்புவாங்க”
“ அது சரிப்பா எந்த ஒரு அப்பா அம்மாவும் தன் பிள்ளைங்க கஷ்டப்படுவதை பார்க்க மாட்டாங்க”
“ பாத்தியா நீயே சொல்ற எந்த ஒரு அப்பா அம்மாவும் தன் பிள்ளைங்க கஷ்டப்படுவதை பார்க்க மாட்டாங்கன்னு அதே இடத்துல தான் அன்னைக்கு சத்யராஜ் இருந்தாரு. எங்க தான் பொண்ணு கிராமத்துல போயி கஷ்டப்பட்டால் தன்னால அதை தாங்கிக்க முடியாதுன்னு நினைச்சாரு. அதனால தான் கோபப்பட்டார்.
இப்போ அதே பொண்ணு கிராமத்திலேயே இருந்தாலும் அவர் கண்ணுக்கு அவ சந்தோஷமா இருக்கிறத பார்க்கும்போது அவருக்கும் ரொம்ப சந்தோஷம்.
அதுவும் போக தன்னோட ஒரே பொண்ணு நம்மளுக்காக அவங்க அப்பா கிட்ட முகம் கொடுத்து பேசலைன்னு அவர் நினைக்கும் போது அவர் மனசு ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கு. அதுவும் போக அவ சந்தோஷமா இருப்பதையும் அவரு உணர்ந்து இருக்காரு.
அதனாலதான் அவரு எல்லாத்தையும் மறந்து தான் பொண்ணுக்காக இங்க நம்ம வீட்டு படியேறி வந்து மன்னிப்பு கேட்டது.
இதுல நீ கோபப்பட எதுவும் இல்ல வேந்தா புரிஞ்சுக்க.
அவருக்கு இருக்கிறது ஒரே பொண்ணு அந்தப் பொண்ணை இப்ப நீ கல்யாணம் பண்ணி இருக்க.
ஒரு மருமகனா இல்லாம ஒரு மகன் ஸ்தானத்துல நீதான் இனி அவங்களை பார்த்துக்கணும். இப்படி கோபத்தை தூக்கி பிடிச்சுக்கிட்டு இருக்க கூடாது.
நான் உன்ன அப்படி வளர்க்கலைன்னு நினைக்கிறேன்”
என்று செல்வரத்தினம் கூறியதும் வேந்தனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தாலும் தன் குடும்பத்தை அவமானப்படுத்திய சத்தியராஜின் மேல் சிறிதேனும் அவனுக்கு கோபம் இருக்கத்தான் செய்தது.
ஆனால் தன் தந்தையின் வார்த்தைக்காக சத்யராஜின் மேல் உள்ள கோபம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும் என்றும் நினைத்துக் கொண்டான்.
பிறகு தன்னுடைய கண்களை ஒரு முறை இருக்க மூடிக்கொண்டு பின்பு திறந்தவன் தன் தந்தையை பார்த்து,
“ சரிப்பா நீங்க சொன்னா அது சரியா தான் இருக்கும்” என்று புன்னகைத்தான்.
“ சரி வேந்தா அப்பா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”
“ என்னப்பா என்ன விஷயம் சொல்லுங்க”
“ நம்ம அறிவுக்கு ஒரு வரன் வந்திருக்கு நல்ல சம்மந்தம்”
“ என்னப்பா சொல்றீங்க அறிவுக்கு அதுக்குள்ள கல்யாணமா அவ படிச்சுக்கிட்டு இருக்கா”
என்றான் வேந்தன்.
“ என்ன வேந்தா எனக்கு மட்டும் அவ படிப்பு மேல அக்கறை இல்லையா என்ன. ரொம்ப நல்ல குடும்பம் கல்யாணத்துக்கு அப்புறமா அவளை அவங்க படிக்க வைக்கிறதா சொல்லி இருக்காங்க அதனால அவ படிப்புக்கு எந்த பிரச்சனையும் வராது”
“ அப்படியாப்பா அப்போ சரி உங்களுக்கு சரின்னு பட்டுச்சின்னா அவங்கள வர சொல்லுங்க” என்றான்.
“ எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு பா நான் சாயங்காலமே வீட்ல பேசிட்டேன் நீ தான் இல்லை. அதான் இப்ப உன்கிட்ட சொல்றேன் நாளைக்கு அவங்க கிட்ட பேசிட்டு உடனே வர சொல்லலாம்”
என்றார் செல்வரத்தினம்.
“ சரிப்பா நீங்க பேசிட்டு சொல்லுங்க”
“ சரி வேந்தா ரொம்ப நேரம் ஆகுது வாடைக்காத்து வேற வெளியே ரொம்ப நேரம் இருக்காதே அப்புறம் உடம்புக்கு சரியில்லாம போயிரும். சீக்கிரம் உள்ள போ” என்றார்.
அவனும் சிறிதாக புன்னகைத்தவன்,
“ சரிப்பா நீங்களும் உள்ள போங்க நானும் போறேன்” என்றவன் தன்னுடைய அறைக்குச் சென்றான்.
உள்ளே வந்தவனோ அவனுடைய அறை வெறுமையாக இருக்க, ‘இவ எங்க போனா ஓஓ அப்பா அம்மாவ பார்த்த உடனே அங்க போயிட்டாளா’ என்று நினைத்துக் கொண்டவன் கட்டிலில் சென்று படுத்துக்கொள்ள சிறிது நேரத்தில் அவனுடைய அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் அவனுடைய மனைவி.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு வாசல் பக்கம் பார்வையை செலுத்திய வேந்தனோ தன்னுடைய மனைவியின் சிரித்த முகத்தை கண்டு சற்று பொறாமையாகவே இருந்தது.
‘ஏதோ எங்க கூட இருக்கிறது ஜூவுல இருந்த மாதிரியும் இப்போ அவங்க அம்மா அப்பாவை பார்த்த உடனே எவ்வளவு சந்தோஷப்படுறா இந்த பொண்ணுங்களே இப்படித்தான். என்னதான் புருஷன் பொத்தி பொத்தி பாத்துக்கிட்டாலும் பெத்தவங்கள கண்டதும் அவங்கள எல்லாம் தூக்கி போட்டுறது ம்ஹூம்’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
புன்னகை முகமாக உள்ளே வந்த மேகா அங்கு கட்டிலில் வேந்தன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவளுக்கோ கோபம் ஏற்பட்டது.
வீடு தேடி வந்த தன்னுடைய பெற்றோரை இவன் எப்படி அசிங்கப்படுத்தலாம் என்ற கோபமே அது.
தன்னுடைய இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டியவள் அவனை முறைத்தவாறு அவன் அருகில் வந்தாள்.
அவனோ அவளுடைய முகம் மாற்றத்தை கண்டவன்,
‘ என்ன உள்ள வரும்போது சிரிச்சுக்கிட்டே வந்தா இப்போ நம்மள பார்த்ததும் பத்ரகாளி மாதிரி வந்து நிற்கிறா’ என்று நினைத்துக் கொண்டவன் அவளிடம்,
“ என்ன இப்படி வந்து நிற்கிற” என்று கேட்டான்.
“ உங்களுக்கு என்னோட அப்பா அம்மா மேல உள்ள கோபம் இன்னும் போகல இல்ல” என்று கோபமாகவே கேட்டாள்.
‘ ஓஓ மேடமோட கோபம் இதனால தானா’ என்று நினைத்துக் கொண்டவன் அவளை சமாதானப்படுத்த நினைக்காமல் வேண்டுமென்றே ஆமா என்று அவன் சொல்ல அவளோ,
“ ஓஓ சரி எங்க அப்பா அம்மா மேல நீங்க கோவமாக இருங்க நான் இனி ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்க மாட்டேன். தன்னோட தப்ப உணர்ந்து வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டவங்க மேல நீங்க இவ்ளோ கோவமா இருக்கீங்க என்ன. மனுஷ தன்மையே இல்லாத உங்க கூட இனி என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது நான் போறேன்” என்று அவள் ஒரு அடி எடுத்து வைக்க சட்டென அவளுடைய கையைப் பிடித்து இழுத்தவன் தன் மேல் போட்டுக்கொண்டு கட்டலில் சாய்த்து அவளுடைய அதரங்களை சிறை செய்தான் வன்மையாளனாக.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!