உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -20

5
(5)

அத்தியாயம் – 20

அன்று… 

அனுவோ உற்சாகத்தில் சுற்றினாள்.

வழக்கம் போல காலேஜ் முடிந்ததும் ஆகாஷுடன் வெளியே போய்விட்டு, ஆதியையும் பார்த்து விட்டு லேட்டாக தான் வீட்டுக்கு வருவாள்.

அவளுக்காக காத்திருந்த ருக்குமணியோ, ” அனு… சாப்பிட வா.” என்றுக் கூப்பிட…

” ஃபிரண்ட்ஸ் கூட சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க பாட்டி.” என்று அவரை அமர வைத்து, சாப்பாடு எடுத்து வைத்து விட்டு, உற்சாகமாக பாடிக் கொண்டே தனது அறைக்குச் சென்று விட்டாள்.

ருக்குமணியோ, தன் பேத்தியை ஆராய்ச்சியாகப் பார்க்க… அவரது பார்வையை கூட கண்டுக் கொள்ளவில்லை அனன்யா.

அவள் தான் காதல் என்னும் மாயலோகத்தில் அல்லவா சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

மறுநாள் குடும்பத்தோடு எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, விஸ்வரூனைப் பார்த்து, ” டேய் ரூபா… யாரும் அனுவைப் பத்தி கவலைப்படுவதே இல்லை. அவ வீட்ல ஒழுங்காவே சாப்பிடுவதில்லை. எப்பப் பாரு ஃப்ரெண்ட்ஸோட படிக்கிறேன். சாப்டுட்டேன் என்று சொல்றா.” என…

எல்லோரும் அவளைப் பார்க்க… அவளோ, திருதிருவென முழித்தாள்.

கிருஷ்ணனும், ரஞ்சிதமும் ‘ முன்னை விட அழகாக தானே தெரியுறா!’ என்று யோசிக்க.

கௌரியோ, ‘ இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை.’ என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

‘ அனு… என் கிட்ட எதையோ மறைக்கிறாளோ?’ என்று யோசித்தப்படியே அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தான் விஸ்வரூபன்.

அனுவின் முகத்தில் தெரியும் அதிகப்படியான தேஜஸ்ஸை பார்த்தவன், ‘ ஏதோ சரியில்லலையே…’ என்று எண்ணியவன், ” யார் அந்த ஃப்ரெண்ட்ஸ். சண்டே வீட்டுக்கு கூட்டிட்டு வா.” என்றான்.

” ம்… சரி மாமா.” என்றவளின் முகமோ மலர்ந்தது. ‘ எப்படியோ முதலில் ஆகாஷை அழைத்து வந்து நண்பன் என்று அறிமுகப்படுத்த வேண்டும். அவன் எல்லோரிடமும் நன்கு பழகிய பின்பு, தங்கள் காதலை சொல்லி பர்மிஷன் வாங்க வேண்டும்.’ என்று எண்ணினாள். 

அது மட்டுமா,’ எப்படியும் பாட்டி தனக்குத்தான் சப்போர்ட்டாக இருப்பார்கள்.’ என்று நினைத்தவள் பாட்டுப் பாடிக் கொண்டே அங்கிருந்து அகன்றாள்.

விஸ்வரூபனோ தலையசைத்து, ‘ ஏதோ சரியில்லை.’ என்று எண்ணிக்கொண்டே ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான்.

எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

உற்சாகமாக காலேஜுக்கு கிளம்பி வந்த அனன்யாவோ, எப்படா ஃப்ரீ டைம் கிடைக்கும் என்று காத்திருந்து, ஆகாஷை அழைத்துக் கொண்டு கேண்டீனுக்குச் சென்றாள்.

” என்ன அனு? ரொம்ப பசிக்குதா? இவ்வளவு வேகமா இழுத்துட்டு வர்ற? என்ன வேணும் சொல்லு. நான் வாங்கிட்டு வரேன்.” என்ற ஆகாஷை கொலைவெறியோடு பார்த்தாள் அனன்யா.

‘ என்ன தப்பா கேட்டோம். இப்படி பாசமா பார்க்குறா?’ என்று யோசனையாகப் பார்க்க…

” ஐயோ! ஐயோ! உன் அறிவை மியூசியத்துல தான் வைக்கணும் ஆக்ஸ். உன் கிட்ட முக்கியமான விஷயத்தை சொல்லணும்னு ஆசையா கூப்பிட்டு வந்தா… சாப்டுறதுலே இரு… ” என…

‘ அடிப்பாவி… வாரத்துல பாதிநாள் பசிக்குதுன்னு சொல்லி கேண்டீன்ல மொக்குவீயே… அதனால் தானே கேட்டேன்.’ என்று மனதிற்குள் புலம்பியவாறே, ” என்ன அனு டார்லிங்.

உங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களா. அதான் உன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுதா?” என்று கேட்டான் ஆகாஷ்.

” ஆசையப் பாரு. அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் இன்னும் உன்னை லவ் பண்ற விஷயத்தை சொல்லலை. டெய்லி ஃப்ரெண்ட்ஸோட வெளில போறன்னு சொல்றியே அவங்களை வீட்டுக்கு வர சொல்லு என்று எங்க மாமா சொல்லியிருக்கார். அதான் சண்டே ஃப்ரீயா இருந்தா வர்றீயா.”

” வித் ப்ளஷர் டார்லிங். வருங்கால மாமியார் வீட்டுக்கு வர்றதுக்கு கசக்குமா என்ன?” என்று கிண்டலாக சிரித்தபடியே ஆகாஷ் கூற…

” ஆக்ஸ்… இப்போதைக்கு உன்னை என் ஃப்ரெண்ட் என்று தான் சொல்லுவேன். எங்க பாட்டிக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ, அவங்களுக்கு ப்ளூ கலர் பிடிக்கும். அந்த கலர்ல டிரஸ் பண்ணிட்டு வர்றீயா. ” என்று இன்னமும் ஏதோ கூற வர…

” ஹேய் அனு… ஸ்டாப்… ஸ்டாப்… இது என்ன நாடகமா? இப்படி இரு,அப்படி இரு, என்று நடிச்சு ஸ்கோர் பண்றதுக்கு? இது வாழ்க்கை… நான் எப்படியோ அப்படியே தான் இருப்பேன். இன்னைக்கு நான் வந்து உங்க மாமாவுக்கு பிடிச்ச மாதிரி, உங்க பாட்டிக்கு பிடிச்ச மாதிரி ஆக்ட் பண்ணிட்டு, நம்ம வாழும் போது, என்னோட நிஜமான கேரக்டரைப் பார்த்து அவங்க என்னன்னு நினைப்பாங்க சொல்லு. சோ… நான் நானாக தான் இருப்பேன். ” என…

” ஓகே ஆக்ஸ் அதுவும் சரிதான்.” என்று அவனை பார்த்து சிரித்தாள் அனன்யா.

” சரி வா… நெக்ஸ்ட் கிளாஸ் ஆரம்பிக்க போறாங்க.” என்று அவளை அழைக்க…

” சும்மா ஒரு பேச்சுக்கு எதுவும் வேண்டாம் என்று சொன்னால், ஒன்னும் வாங்கித் தரமாட்டியா ஆக்ஸ்.” என்று பாவமாக அனன்யா வினவ.

” ம்… டைமாயிடுச்சு. ஈவினிங் வாங்கித் தரேன்.” என்று இழுத்துச் செல்ல.

” படிப்ஸ் கண்ணாயிரம் …” என்று திட்டிக் கொண்டே அவனோடு சென்றாள்.

அந்த ஞாயிறு அழகாக விடிந்தது. 

ஆகாஷ், அனன்யா வீட்டிற்கு செல்வதற்காக கிளம்பி தயாராகி வர…

ஆதி, ” என்னை கழற்றி விட்டுட்டு எங்க போகப் போறடா.” என்று வினவ.

” ம்… உன் பேபி என்னை வீட்டுக்கு வரச் சொல்லிருக்கா.”என்று புன்னகைத்தான் ஆகாஷ்.

” என்னது? உன்னை மட்டும் வரச் சொல்லிருக்காளா…” என்றவன் உடனே அனன்யாவிற்கு அழைத்தான்.

” ஹாய் ஆதி…” என…

” பேபி உன் கிட்ட சண்டை போடத்தான் நான் ஃபோன் பண்ணேன். ஆகாஷை மட்டும் உன் வீட்டுக்கு அழைச்சிருக்க… அவன் மட்டும் உனக்கு முக்கியமா போய்ட்டானா? நான் யாரோ தானா?” என.

” ஹேய் ஆதி செல்லம். நீ என் பெஸ்டி இல்லையா… உன்னைக் கூப்பிட்டாத் தான் வருவீயா. அது உன் வீடு மாதிரி.” என்று சமாதானப்படுத்த…

” அடிப்பாவி… அப்போ நான் யாருடி?” என்று அதுவரை அவர்கள் இருவரும் பேசியதை ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த ஆகாஷ் வினவ.

” அடேய் ஆதி… இப்படி பத்தவச்சிட்டியே. நான் இந்த ஆட்டத்துக்கே வரலை. ஒழுங்கா லஞ்ச்க்கு இரண்டு பேரும் வந்து சேருங்க. இப்போ நான் வச்சிடுறேன்.” என்று ஃபோனை அவசர அவசரமாக கட் செய்தாள் அனன்யா.

அவள் ஃபோனை வைத்ததும், இங்கு இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

” டேய் ஆதி… பாவம் டா என் டார்லிங். அவளைப் பாடாய்படுத்துற. சரி சீக்கிரம் போய் கிளம்பு.” என்று அவனை அனுப்பி வைத்தான்.

அனன்யாவும், ஆகாஷும் ஆதியிடம் சொல்ல மறந்து விட்டனர். இது ஒரு நட்பு ரீதியான அழைப்பு என்பதை…

ஆகாஷும், ஆதவனும் பழம், ஸ்வீட் வாங்கிக் கொண்டு, அனன்யாவின் வீட்டிற்கு வந்தனர்.

அதையெல்லாம் பாட்டியிடம் கொடுத்து விட்டு ஆசிர்வாதம் வாங்கினான் ஆகாஷ். அவனைப் பார்த்து ஆதவனும் ஆசிர்வாதம் வாங்கினான். 

பாட்டிக்கு இருவரையும் மிகவும் பிடித்துவிட்டது. ஆகாஷ் எப்பொழுதும் போல அழுத்தமாக இருந்தான்.

ஆதியோ கலகலவென பேசிக் கொண்டிருந்தான். 

அவர்கள் இருவரையும் உணவருந்த அழைத்தார் ருக்குமணி.

ரஞ்சிதமும், கௌரியும் பரிமாற… அனைவரும் உணவருந்தினர்.

விஸ்வரூபன் தான் ஆகாஷ் இறுக்கமாக இருப்பதைப் பார்த்து மருத்துவ சம்பந்தமான பேச்சை ஆரம்பித்தான்.

ஆகாஷும் அதற்குப் பிறகு இலகுவாக பேச ஆரம்பித்தான். பேச்சு ஒரு பக்கம் போய்க் கொண்டே இருக்க. உணவு ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தது. உணவுக் கூட ஒரு வழியாக முடிந்தது. ஆனால் பேச்சு முடியவே இல்லை. ஹாலில் மீண்டும் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

 அவர்கள் மருத்துவ சம்பந்தமான பேச்சு ஆதிக்கு போரடிக்க, அனன்யாவிடம் பேச ஆரம்பித்தான். “பேபி… நீ இந்த சாரியில் ரொம்ப அழகா இருக்க. ” என.

அவளோ, ” ம்… ” என்று விட்டு ஆகாஷை பார்த்தாள். 

அவனோ, விஸ்வரூபன், கிருஷ்ணனிடம் பேசியவாறே, கண்களாலே பாராட்டையும் தெரிவித்திருந்தான். அதில் முகம் சிவக்க திரும்பிக் கொண்டாள்.

அவளது பார்வை, ஆகாஷை அவள் பக்கமே காந்தமென இழுக்க, கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

ருக்குமணியோ, ” என்ன அனுவை பேபி என்று கூப்பிடுற?” என்று குழப்பமாக வினவ.

” ஏன் பாட்டி? அண்ணி என்று தான் சொல்லணுமா… பார்க்க பேபி மாதிரி இருக்கறதால தான் இந்த பெயர்.”என்று அவன் வாயை விட.

லேசாக தலையை தட்டி கொண்டாள் அனன்யா.

எல்லோரும் அவளையே அதிர்ந்துப் பார்க்க… என்ன சொல்வது என்று தெரியாமல் விரல் நகத்தை கடித்துக்கொண்டு இருந்தாள்.

ஆகாஷ் அந்த தர்மசங்கடமான சூழ்நிலையில், ” சாரி… நானும், அனுவும் காதலிக்கிறோம். எங்க வீட்ல, அனுவைப் பார்த்த உடனே ஓகே சொல்லிட்டாங்க. என்னைப் பற்றி அனு சொல்லுவா. நீங்க வீட்ல கலந்துப் பேசிட்டு எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க. நான் வருகிறேன்.” என்றுக் கூறி விட்டு, அனன்யாவைப் பார்த்தான்.

அவளோ படபடப்புடனே இருந்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்து, வருகிறேன் என்பது போல் தலையசைத்தான்.

அவனது புன்னகையில் அவளும் தெளிந்தாள்.

இன்று… 

ஃபோனில் ராதிகா பாடிய பாடல் முடிந்தவுடன், மீண்டும் குழந்தை சிணுங்கிக்கொண்டே போட சொல்ல… 

அவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, “மேய்க்கிறது எருமை… இதுல என்ன பெருமை வேண்டி இருக்கு.” என்று கூறிக்கொண்டே குழந்தையை தூக்கினாள்.

 அவன் எதையோ கூற வர…

 கையால் நிறுத்துமாறுக் கூறியவள், ” அவந்திகா… என் அனுவோட குழந்தை. நான் தூக்குவதற்கு யாரோட அனுமதியும் தேவையில்லை.” என.

” அம்மு… அனுவோட குழந்தை மட்டும் இல்லை. என்னோட குழந்தையும் தான்.” என்று அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கூறினான்.

அவளோ அவனது பார்வையை அலட்சியம் செய்து, ” எனக்கு உங்களையும் தெரியும், அனுவையும் தெரியும்.” என்றுக் கூறிவிட்டு,

ஃபோனை எடுத்து கூகிளில் தாலாட்டு பாடல் செலக்ட் செய்து பாடினாள்.

 குழந்தை சமத்தாக தூங்கியது.

குழந்தையை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தவள், குழந்தையை அணைத்தவாறு உறங்கினாள்.

 விஸ்வரூபன் தான் நீண்ட நேரம் தூக்கம் வராமல், நடைப்பயின்றுக் கொண்டிருந்தவன், அவள் நன்கு உறங்கிய பிறகு, குழந்தைக்கு மறுப்பக்கம் வந்து படுத்துக் கொண்டான்.

குழந்தை உறக்கத்திலே ராதிகாவின் கழுத்தை கட்டிப் பிடிக்க, அவளும் குழந்தை மேல் கையைப் போட்டுக் கொண்டு உறங்கினாள்.

அவர்கள் இருவரும் உறங்கும் அழகை ரசித்துக்கொண்டே உறங்கினான் விஸ்வரூபன். 

மறுநாள் அங்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கூறிய இடங்களை சுற்றி பார்த்தனர்.

கேரளாவில் இயற்கை அழகுக்கா பஞ்சம். அது அங்குக் கொட்டிக்கிடக்க…

அந்த அழகில் லயித்துப் போனாள் ராதிகா. குழந்தையை கையில் வைத்துக் கொண்டு, அவளும் குழந்தையாக ஆட்டம் போட்டாள். விஸ்வரூபனோடு பெரிதாகப் பேச முயற்சிக்கவில்லை‌. அவனாக ஏதாவது பேச வந்தாலும், ஒரிரு வார்த்தைகளிலே முடித்துக் கொண்டாள்.

ஒவ்வொரு இடத்திலும் குழந்தையும், அவளுமாக செல்ஃபியும் எடுத்துக் கொண்டிருக்க… வெறுத்துப் போனான் விஸ்வரூபன்.

நல்லவேளையாக அவனுக்கு ஒரு ஃபோன்கால் வர்ற… அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

ராதிகாவின் முகத்தில், அந்த ரிங்டோனை கேட்டதும் ஒரு புன்சிரிப்பு ஒட்டிக் கொண்டது.

அது ஏதோ ஒரு கம்பெனி கால். அதை ஆன் செய்த விஸ்வரூபன் எரிச்சலுடன் வைத்து விட்டு அவர்களிடம் வந்தான்.

திடீரென்று ஏதோ தோன்ற, “அப்பா மூன்று பேரும் இருக்கப் போல போட்டோஸ் எடுத்துட்டு வர சொல்லி இருக்காங்க. எப்ஃபி, இன்ஸ்டாகிராம்ல போடணுமாம்.” என்று வாய்க்கு வந்ததைக் கூற…

ராதிகா தனக்குள் சிரித்துக் கொண்டாள். கிருஷ்ணன் சாரை பற்றி அவளுக்காத் தெரியாது.

‘ அவராவது ஹனிமூனுக்கு வந்திருக்கும் போது இவரைத் தொந்தரவு செய்வதாவது.’ என்று எண்ணியவள் அமைதியாக போட்டோ எடுத்துக்கொண்டாள்.

குழந்தையோ,” மா… மா…” என்றபடி அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு விடவே இல்லை. 

ஹனிமூனுக்கு வந்திருந்த நான்கு நாட்களும் வேகமாக விரைந்தோட, அவர்கள் வீடு திரும்பினர்.

அங்கே வீட்டில் உள்ளவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தையும், ராதிகாவும் பழகுவதை பார்த்து…  

ராதிகாவும் கேரளாவில் தாங்கள் சுற்றிப் பார்த்த இடத்தைப் பற்றி சொல்லியவள், எல்லா ஃபோட்டோக்களையும் காட்டி பேசிக் கொண்டிருந்தாள். 

” சரி கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு மா.” என ரஞ்சிதம் அவளை அறைக்கு அனுப்பி வைக்க…

” ம்மா…” என கௌரியின் கைகளில் இருந்த குழந்தை கூப்பிட்டது.

இரண்டு படி ஏறியவள், இறங்கி வந்து, ” அம்முக் குட்டி என்ன அம்மாக் கிட்ட வர்றீங்களா?” என்றபடியே கைகளை நீட்ட…

” இருக்கட்டும் டா. நீ ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா.” என்று கௌரிக் கூற…

” பரவாயில்லை மா… அப்புறம் அவ அழ ஆரம்பிச்சிடுவா. அவங்க அப்பா அங்கே தானே இருக்காங்க பார்த்துக்க சொல்றேன்.” என்றவள் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றாள்.

மாடிக்குச் சென்றவள் சுந்தரிக்கு அழைத்துப் பேச… 

குழந்தையும் கூட மழலையில் பேசிக்கொண்டு இருந்தது.

” பாப்பா பக்கத்துல இருக்காளா. எங்க வீடியோ கால் போடேன். நான் பார்க்கிறேன்.” என்று சுந்தரிக் கூற…

விஸ்வரூபன் எங்கே இருக்கிறான் என்று பார்த்தாள். அவன் அந்த அறையில் இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை குழந்தையோட அறையில் இருக்கிறான் போல என்று எண்ணியவள், சுந்தரிக்கு வீடியோ கால் செய்தாள்.

சுந்தரியோ, “அம்முகுட்டி… பாட்டிய பாருங்க.” என்று பேச.

தன் கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மையை வைத்துக் கொண்டே நிமிர்ந்துப் பார்த்த அவந்திகா, ” பாட்டி…” என்று இழுத்துக் கூற .

சுந்தரிக்கும், ராதிகாவிற்கும் சந்தோஷம்.” ஹேய் செல்லக்குட்டி… பாட்டி சொல்றீங்களா.” என ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சண்முகம் தான், ” எப்ப மா… மறுவீட்டிற்கு வர்றீங்க.” என.

” பா… இப்போ தான் இரண்டு வாரமா காலேஜுக்கு லீவ் போட்டுருக்கேன். மறுபடியும் எக்ஸ்டென் பண்ண முடியாது. செமஸ்டர் லீவ் அப்ப வரோம் பா.” என்று பதில் கூறிய மகளின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை பார்த்து அவர்களும் சரி என்று தலையசைத்தார்.

 இதையெல்லாம் பால்கனியில் நின்று ஃபோன் பேசி முடித்து விட்டு வந்த விஸ்வரூபன் ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஃபோனை வைத்து விட்டு திரும்பிய ராதிகா, அவனது பார்வையைப் பார்த்து திகைத்தாள்.

‘இவனை புரிந்துக்கொள்ளவே முடியலை.’ என்று எண்ணிக் கொண்டே ப்ரெஷ்ஷப் ஆகிவிட்டு வந்தவள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்.

எப்போதும் போல் உறங்கலாம் என்றுப் பார்க்க, அங்கோ விஸ்வரூபன் குழந்தையுடன் இருந்தான். 

என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க… குழந்தை ” மா…” என்று அழைக்க…

அவளும் படுத்துக் கொண்டாள்.

நாளையிலிருந்து கல்லூரிக்குப் போக வேண்டும். அவளுக்கோ தயக்கமாகவே இருந்தது. யார் அந்த வீடியோவை எடுத்தது என்று அவளுக்கு தெரியவில்லை அது வேறு குழப்பமாக இருக்க… உறக்கம் வருவேனா என்று இருந்தது.

மறுநாள் காலையில் எழுந்ததவள், அந்த குழப்பத்துடனேயே கல்லூரிக்கு கிளம்பினாள்.

அவளது முகத்தைப் பார்த்த விஸ்வரூபன், ” அடுத்தவங்க என்ன சொல்வாங்க என்று நினைத்துக் கொண்டே இருந்தால், நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. சோ எதையும் கேர் பண்ணாமல் இருக்க பழகு‌.” என்றுக் கூற…

 ” அதை நீங்க சொல்றீங்களா? எதை எதையோ நினைச்சுட்டு தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னீங்க.” என்று பதில் கூறிய ராதிகா வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.

 நான் படும்பாடு உனக்கென்ன புரியும்.’ என்று புலம்பியவன், அவள் பின்னே சென்றான்.

சாப்பிட்டு முடித்ததும், ” நானே காலேஜ்ல ட்ராப் பண்றேன்.” என.

” இல்லை … நான் பஸ்ஸிலே போறேன்.” என்று மறுத்துக் கூறினாள் ராதிகா.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஹாஸ்பிடல் போகும் போது நானே ட்ராப் பண்றேன்.” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்று கல்லூரியில் விட்டான்.

 கல்லூரியில் உள்ளவர்கள் எல்லோரும் அவளிடம் சினேகமாக பேசிவிட்டு, பின்னாடி கிண்டலடித்தனர்.

அவளுக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பாரேன் என்று பொறாமைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதையெல்லாம் அலட்சியம் செய்த ராதிகா ஆதவனிடம், ” ஹாய் ஆதி.” என.

அவனோ ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

” ஆதி… என் மேல கோவமா? ஏன் எதுவும் பேசமாட்டேங்குற?” என கண்கள் கலங்க வினவ.

” நான் யார் உன் மேல கோபப்பட? நான் யாரு? இல்லைன்னா கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட்டுருக்க மாட்டியா? ” என.

” ஹேய் ஆதி. உனக்கு தெரியாததா? விஷ்வா மேரேஜ்ஜை சிம்பிளா செய்தால் போதும் என்று சொல்லிட்டார். அப்புறம் நான் என்ன பண்ண முடியும் சொல்லு. நீ கவலைப்படாதே. உன்னை மட்டும் ஸ்பெஷலா எங்க வீட்டுக்கு இன்வைட் பண்றேன். நீ வா…” என்றுக் கூற…

 ஷ்யூர்?” என்று கேள்வியாக வினவினான் ஆதவன்.

” யா” என்றாள் ராதிகா. அடுத்து வரும் பூகம்பத்தை அறியாமல்… 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!