இனியனின் எம்டியோ, “மிஸ்ஸஸ் இனியன், ஆஸ்திரேலியால நாங்க ஒரு தமிழ் சங்கம் நடத்தலாம்னு இருக்கோம். நீங்க வந்து ஒரு ஸ்பீச் கொடுக்க முடியுமா?”, என்று அவர் கேட்டதும், அதிர்ந்து விட்டால் அவள்!
“சார் நானா?”, என்று அவள் கேட்கும் போதே அங்கு வந்திருந்தான் இனியன்!
“மிஸ்டர் இனியன் என்ன உங்க வைப் ஷாக் ஆகுறாங்க? நீங்க ஏதுமே சொல்லலையா?”, என்று அவர் கேட்க, “நீங்க கேட்டா நல்லா இருக்கும்னு நெனச்சேன்…”, என்று சொல்லி கனியின் அருகில் அவனும் அமர்ந்தான்.
“அம்மா ஓகே சொல்லுங்க நம்ப ஆஸ்திரேலியா போய்ட்டு வரலாம்”, என்று அச்யுத் குதிக்க,”மிசஸ் இனியன் உங்க ஸ்டே உங்க பசங்க ஸ்டே எல்லாமே நாங்களே பாத்துக்குறோம்… எப்படியா இருந்தாலும் மிஸ்டர் இனியனும் அதே டைம் ஆபீஸ் ஒர்க் விஷயமா ஆஸ்திரேலியா வரார்! அண்ட் பசங்களுக்கும் அப்போ லீவ் டைம் தானே!”, என்று அவர் சொல்ல, “என்கிட்ட பாஸ்போர்ட் கூட இல்லைங்க”, என்றாள் கனி!
“அதெல்லாம் இரண்டு வாரத்துல வாங்கிறலாம்”, என்று இனியன் சொல்லவும், அனைத்தையும் அவன் திட்டமிட்டு தான் கூறுகிறான் என்று அவளுக்கு புரிந்து விட்டது!
“எஸ் சொல்லுங்க மிசஸ் இனியன்”, என்று அவர் மீண்டும் கூற, பிள்ளைகளின் முகத்திலும் உற்சாகம் இருக்க, இனியனின் முகத்திலும் ஆமாம் என்று சொல் என்கிற முகபாவனையில் அவளும் தலை அசைத்தாள்!
இப்படியாக அவர்கள் வந்து பொன்னம்மாளிடமும் விடயம் சொல்ல, “நல்ல படியா போய்ட்டு வாங்க”, என்று அவர் சொல்ல, “அப்பத்தா நீங்களும் வரணும்”, என்று கயல் சொல்லவும், “நான் எதுக்கு கண்ணு… எனக்கே எப்போ எமன் டிக்கெட் போடுவானு தான் காத்துக்குட்டு இருக்கேன்”, என்றதும், “அம்மா”, “அத்த”, என்று ஒரே சமயம் அழைத்து இருந்தனர் இனியனும் கனியும்!
“சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன்”, என்று அவர் சொன்னதும் அனைவரும் போய் படுத்து விட்டனர்!
ஆனால் அவர் தெரிந்து சொன்னாரோ, தெரியாமல் சொன்னாரோ, அடுத்த நாள் அவரின் உயிரை பறித்து தான் விட்டான் எமன்!
அவர் தூக்கத்திலேயே இயற்கை எய்தி இருந்தார்!
உடைந்து விட்டான் இனியன்! அவனை சிறுவயதிலேயே கண்ணனுக்கு கண்ணாக வளர்த்த தாய் அல்லவா!
அவனை விட உடைந்தது என்னவோ கனி தான்! அவளை மருமகளாய் அல்லாமல் மகளாய் அல்லவா பாவித்து இருந்தார்!
பிள்ளைகளின் கண்களிலும் கண்ணீர்!
“அப்பத்தா எழுந்திரிங்க அப்பத்தா”, என்று ஒரு பக்கம் அச்யுத் கயலும் அழ, உண்மையாகவே பார்ப்பவர்களின் கண்களில் கூட கண்ணீர் மழை தான்!
அவர்கள் தேறி வரவே ஒரு வாரம் ஆனது!
பின்பு காரியம் அது இதுவென்று முடித்து, இயல்பு நிலைமைக்கு திரும்புவதற்குள் ஒரு மாதம் கடந்து விட்டது!
பின்பு இரண்டு மாதம் கழித்து அவர்கள் செல்ல வேண்டிய ஆஸ்திரேலியா பயணம் வர, அவர்களின் மனநிலையை மாற்றுவதற்காகவே சென்றனர்.
அங்கோ ஓபரா ஹவுஸ் பார்த்து துள்ளி குதித்தனர் பிள்ளைகள்!
“எவளோ அழகா இருக்குல!”, என்று அச்யுத் கூற, “ஆமா பார்க்கவே அழகா இருக்கு”, என்று கயலும் ஆமோதித்தாள்.
அந்த முழு நாட்டையும் சுற்றி திரிந்தனர்! பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவ்வப்போது, “அத்த இருந்திருக்கலாம்”, என்று கனி சொல்வதை வைத்தே அவள் எவ்வளவு அவனின் அன்னையுடன் ஒன்றி இருக்கிறாள் என்று இனியனுக்கும் புரிந்தது!
அவள் பேச வேண்டிய நாளும் வந்தது!
அவளுக்கோ பயம்!
“எதுக்கு பயப்படற? எங்களை மட்டும் பார்த்து பேசு”, என்று இனியன் சொல்லவும், அவள் முதலில் பேச வேண்டிய பேச்சை துவங்கினாள்!
“அவையோருக்கு வணக்கம்!
யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற தமிழின் உண்மையான கூற்றிற்கு இணங்க, இந்த வையகம் முழுவதும் நம் தமிழினம் படர்ந்து இருக்கிறோம்!
எத்தகைய இனியது தமிழ்!! எவ்வளவு பழமையானது நம் மொழி!! எப்படி பட்டது நம் பண்பாடு!!
இன்றும் வெளிநாட்டவர்கள் வந்து போற்றி புகழும் மொழி தமிழ் அல்லவா!
கலப்படம் இல்லாமல் ஒரு மொழியை பேச வேண்டும் என்று யாரேனும் கூறினால் பிற மொழிகள் வேண்டுமாயின் அழிந்து விடலாம் அல்லது தோல்வியுறலாம்! ஆனால் என்றுமே கலப்படம் இல்லாமல் பேசக்கூடிய மொழி தமிழ் அல்லவா!
எங்கு இருந்தால் என்ன? என்ன மொழியில் பயின்றால் என்ன? தமிழ் மொழியையும் கற்பது தானே தமிழனுக்கு அழகு!
ஒரு ஆணின் வாழ்க்கையில் எத்தனை பெண்கள் ஆனாலும் வரலாம் ஆனால் தாய் ஒன்று தானே! அதே போல் தான் எத்தனை மொழி அறிந்தாலும் தமிழ் மொழியை மறவாதே!
தமிழை மட்டும் கற்று கொள்ளுங்கள் என்று ஒருபோதும் சொல்லமாட்டேன்! தமிழை கற்காமல் விடாதீர்கள் என்பது தான் என் கூற்று!
“ழ” என்கிற ழகரத்திற்கு பெயர் போன மொழி நம் மொழி!
தமிழ் எழுத்துக்களின் பிரிவை போல தான் நம் வாழ்க்கையும் அல்லவா!
வல்லினம் போல சில நேரம் வலிமையாகவும், மெல்லினம் போல சில நேரம் மென்மையாகவும், இடையினம் போல எல்லோரையும் இணைத்து இருப்பது தானே நம் வாழ்க்கை!
எங்கு வேண்டும் ஆனாலும் இருக்கலாம் ஆனால் தாய்மொழியை என்றும் மறக்க வேண்டாம்!
அது நம் மொழி மட்டும் அல்ல நம் அடையாளமும் கூட!
வாழ்க தமிழ்! வளர்க்க தமிழ்!”, என்பதோடு முடித்து இருந்தாள்.
அவள் முடித்ததும், அரங்கே அவளுக்காக கை தட்ட, இனியனின் கண்களில் அத்தனை பெருமை!
அவள் பேசி முடித்து விழா முடிய, இரவு உணவு உட்கொள்ளும் சமயம், அங்கிருந்த பல மக்கள் கனியை பாராட்டி தள்ளி விட்டனர்!
இப்படியே அவர்களின் ஆஸ்திரேலியா பயணம் முடிந்து அவர்களும் இந்தியா வந்து ஆயிற்று!
வந்த ஒரு வாரத்தில், கனி வேலை செய்யும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் அழைத்து இருந்தார்.
“உட்காருங்க மிஸ்ஸஸ் கனி”, என்று அவளை அழைத்து கூற, “சொல்லுங்க சார்”, என்று அவளும் கேட்க, “நீங்க ஏன் மாஸ்டர்ஸ் பண்ண கூடாது?”, என்று அவர் கேட்டதும், “இப்போ போயா?”, என்று அவள் தயங்கி கொண்டு கேட்க, “படிக்கர்துக்கு வயசு ஒரு தடை இல்லைனு நினைக்கிறன்… உங்கள நம்ப ஸ்கூல்ல படிக்கிற நிறைய பிள்ளைங்களுக்கு பிடிச்சிருக்கு… இவளோ ஏன் நீங்க எடுக்குற எட்டாம் வகுப்பு பிள்ளைங்க கூட கனி டீச்செர்ரே ஒன்பதாவதுக்கும் எடுக்கட்டும்னு சொல்ராங்க… ஆனா நீங்க வெறும் பிஏ பிஎட் தான் முடிச்சிருக்கீங்க… நீங்க மாஸ்டர்ஸ் ஜாயின் பண்ணிட்டா…உங்கள ஒன்பதாவது பாத்தவத்துக்கு கூட டீச்சரா போடலாம்னு ஒரு ஐடியா”, என்று அவர் கூறினார்.
“நான் என் குடும்பத்தோட பேசிட்டு சொல்றேன் சார்”, என்று அவள் நகர்ந்து சென்று விட்டாள்.
அன்று மாலை இனியன் வர, அவனுடன் பேச தயங்கிய நின்று இருந்தாள் கனி!
“என்னனு சொல்லு?”, என்று கேட்டே விட்டான் இனியன். பிள்ளைகளும் கூட அங்கு தான் இருந்தார்கள்.
அவளும் தயங்கி தயங்கி தலைமை ஆசிரியர் சொன்னதை சொல்லிவிட்டாள்.
“இதுக்கு என்ன தயக்கம்? நீ கரெஸ்ல எம்ஏ போடு… அடுத்து அப்படியே எம்எட்”, என்று அவன் சொன்னதும், “எப்படிங்க? பசங்க இருக்காங்க… வீடு வேலை எல்லாம்”, என்று அவள் தயங்க, “அம்மா நாங்க எங்களை பாத்துக்குவோம்”, என்று முதலில் சொல்லியது அச்யுத் தான்!
“அம்மா வீட்டு வேலையெல்லாம் நானும் அப்பாவும் கூட ஹெல்ப் பண்றோம்”, என்று கயலும் சொல்ல, “அதான் இவளோ சொல்றோமே கரெஸ்ல போடு”, என்று அவன் சொல்ல அவளும் துவங்கினாள் மீண்டும் அவளின் பயணத்தை மாணவியாக!
அவளின் எம்ஏ படிப்பை துவங்கி அவளின் முதல் பரீட்சையின் சமயம், “என்ன மீண்டும் தமிழோடு உறவாடா?”, என்று இனியன் கேட்கவும், “பதிமூணு வருஷமா தமிழோடு இனிமையும் சேர்ந்து தான் உறவாடிக்கிட்டு இருக்கேன்”, என்று அவள் சொல்ல, “தமிழ் டீச்சர் கிட்ட பேச முடியுமா?”, என்று அவன் கேட்க, “ஏன் பேசி டைம் வேஸ்ட் பண்றீங்க?”, என்று அவள் புருவம் உயர்த்தவும், “நீ சரியே இல்ல டி”, என்று அவன் தலை அசைத்தான்.
“நான் எப்போ சரியா இருந்து இருக்கேன்? அதுவும் இப்போ ஸ்டுடென்ட்ல கொஞ்சம் குறும்பும் இருக்கனும், இல்லனா அந்த உணர்வே வரமாட்டேங்குது மிஸ்டர் இனியன்”, என்றவளை பார்த்து, “வேணா கனி, நீ ரொம்ப சீண்டி விடுற… உனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு”, என்று சொல்லிக்கொண்டே அவன் நெருங்க, “அது என் பிரச்சனை… நாற்பது வயசுல எல்லாமே பியூஸ் போயிருச்சா?”, என்று அவள் கேட்க, அதற்கு மேல் பொறுத்துக்கொண்டு இருப்பானா அவன்?
அதற்குமேல் அவளும் படித்தால் தான், புத்தகத்தை அல்ல, பள்ளியறை பாடத்தை!
அடுத்த நாள் பரிட்ச்சைக்கு அவள் போக தயாராக, “நைட் படிச்சதெல்லாம் நினைவு இருக்கா?”, என்ற இனியனிடம், “நைட் படிச்சத நினைவு வச்சுக்கிட்டா எக்ஸாம் எழுத முடியாது இனியன் சார்”, என்கவும், “நீ ரொம்ப மோசம் ஆகிட்ட”, என்று சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு செல்ல, அவளோ சத்தமாக சிரித்து கொண்டாள்.
அவள் எம்ஏவில் எழுத போகும் முதல் பரீட்சை!
இரு பிள்ளைகளும் வாழ்த்து கூறினர்!
அவள் அடுத்து பொன்னம்மாளின் புகைப்படத்தின் முன்பு போய் நிற்க, அங்கே அவரின் படத்தில் இருந்த பூ விழ, அவளின் கண்களில் ஒரு துளி நீர் விழுந்தது!
“நன்றி அத்தை!”, என்று மனமார வேண்டிக்கொண்டு செங்கனி அவளின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி சென்றாள்.