பரீட்சை – 101
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
என் இதயத்தில்
என்றும் வாழ்பவள்
என் இமைகளுக்குள்
அழியாமல் உறைந்தவள்..
என் உயிருக்குள்
உறைந்து
எனை ஆள்பவள்
என் சுவாசத்தில்
மூச்சாய் கலந்தவள்
அவள் மனதில்
நான் இல்லை
என்றாலும்
அவள் நலனே
என் நோக்கம்
எந்நாளும்
என் காதல்
பொய் இல்லை
அவள் காதலில்
மெய் இல்லாமல்
இல்லை..
இரண்டுமே
உண்மைதான்..
இறைமையின்
பிம்பம்தான்..
##########################
மெய் காதல்..!!
அருண் சொன்னதை கேட்ட சரணுக்கு முகம் பயத்தில் வெளிறிப் போனது..
அதைப் பார்த்த அருண் அவனை விழி சுருக்கி ஊடுருவும் பார்வை பார்த்து “பயமா இருக்கா சரண்? பயமா இருக்கணும்.. அன்னிக்கு என் அஸ்வினிக்கு எதுவும் ஆயிட கூடாதுன்னு நான் பயந்தேன் இல்ல..? அதே பயத்தை இன்னிக்கு உன் உயிர் போய்ட கூடாதேன்னு துடிச்சிட்டிருக்கிற உன் கண்ணுல பாக்குறேன் டா.. இதுக்கு தான்டா நான் இவ்வளவு நாளா காத்துகிட்டு இருந்தேன்.. இன்னும் கொஞ்ச நேரம் தான்.. பயப்படாதே.. இந்த பயம் எல்லாம் போயிடும்… உன் பயத்தை எல்லாம் நித்திலா சுத்தமா போக்கிடுவா.. அதுக்கப்புறம் பயம்னு இல்லை உனக்கு எதுவுமே தெரியாது.. நீதான் மொத்தமா போய் சேர்ந்திடுவியே”
அவன் சொன்னதை கேட்ட சரண் எப்படியாவது அந்த பாறையை பிடித்துக் கொண்டு மேலே ஏறிவிட வேண்டும் என்ற முயற்சி செய்யத் தொடங்கினான்..
நித்திலா பக்கம் திரும்பிய அருண் “நித்திலா.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது.. சரண் அந்த பாறையை புடிச்சிட்டு மேலே ஏறி வரக்கூடாது.. அவனே அந்த பாறையில் இருந்து கையை எடுத்து கீழே விழணும்.. அப்படி அவன் மேலே ஏறி உயிரோட வந்துட்டான்னா உனக்கு இந்த மருந்து கிடைக்காது..”
அவன் நிதானமாய் சொல்ல அவள் படபடப்போடு சரணையும் அருணையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க “ரொம்ப டைம் ஆகுது நித்திலா.. அங்க பாரு.. சரண் மேல ஏறி வரான்.. அப்புறம் நீ சாக வேண்டியது தான்.. ஏற்கனவே உனக்கு தலை சுத்தி மயக்கம் வர்ற மாதிரி இருக்குமே..” என்று கேட்க அவளும் அதை உணர்ந்தாள்..
எங்கே தன் உயிர் போய் விடுமோ என்ற பயத்தில் ஓடி சென்று அங்கே பக்கத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்து சரண் பாறையை பிடித்திருந்த கையின் மேல் ஓங்கி அடிக்கலானாள்..
சரண் “நித்திலா.. என்ன செய்ற? வேணாம்.. அடிக்காத.. நான் கீழ விழுந்தா செத்துருவேன் டி.. சொன்னா கேளுடி..” என்று கெஞ்சி கதறினான்..
ஆனால் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நெருக்கடியில் அவன் கதறியதோ கெஞ்சியதோ எதுவுமே நித்திலாவின் காதுகளில் விழவே இல்லை..
“டேய்.. நீ யோசிச்சியாடா? என் சாப்பாட்டில விஷத்தை கலந்தா நான் செத்துப் போயிடுவேன்னு.. இப்போ நீ செத்துப் போறதை பத்தி நான் எதுக்கு கவலைப்படணும்? எனக்கு என் உயிர் தான் முக்கியம்..” வேகமாக அவன் கையை அடித்துக் கொண்டே இருந்தாள்..
ஒரு நிலைக்கு மேல் தன் கையை வைத்து பாறையை பிடிக்க முடியாமல் பாறையில் இருந்து கையை எடுத்த சரண் அப்படியே அந்த பள்ளத்தாக்கில் கீழே விழுந்தான்.. பள்ளத்தாக்கின் முனைக்கு வந்து அவன் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அருண் கண்கள் லேசாக கலங்கி தான் இருந்தன..
“யாருக்குமே கெடுதல் நினைக்காத என்னை இப்படி மாத்திட்டீங்களேடா.. இப்ப கூட என் அஸ்வினிக்காக தான் இதை செய்யறேன்.. அவ உயிருக்கும் வாழ்க்கைக்கும் நிம்மதிக்கும் உங்களால எந்த ஆபத்தும் வந்துடக்கூடாது” இறுக்கமாய் மனதிற்குள் சொன்னவன் திரும்புவதற்குள் நித்திலா அவன் அருகே வந்து அவன் கையைப் பிடித்து “அருண்.. ப்ளீஸ்.. அந்த மருந்தை கொடு.. நீ சொன்னபடி நான் தான் சரணை கீழே தள்ளிட்டேன் இல்ல..? ப்ளீஸ்.. அந்த மருந்தை கொடு..” என்று கெஞ்சினாள்..
“இந்த மருந்தா? எதுக்கு இந்த மருந்து..? இதை குடிச்சு என்ன ஆக போகுது?” என்று கேட்டான் அருண்..
“விளையாடாத அருண்.. நீதான சொன்ன.. அந்த மருந்தை குடிச்சா நான் செத்துப் போக மாட்டேன்னு.. ப்ளீஸ்.. அதை குடு அருண்..” என்று மறுபடியும் அவள் செஞ்ச அவன் மறுபடியும் கிண்டலாய் சிரித்து “நித்திலா இந்த மருந்து இல்ல.. எந்த மருந்து குடிச்சாலும் உனக்கு ஒரு யூஸும் இல்ல..” என்றான்..
“என்ன சொல்ற? அப்ப என் உடம்புல விஷம் பரவிருச்சா? நான் செத்து போக போறேனா? அடப்பாவி ஏன்டா இப்படி பண்ண?” அவள் கதறி அழ தொடங்கினாள்..
“உனக்கு எந்த மருந்தும் தேவையே இல்லை.. ஏன்னா காலைல பிரேக் ஃபாஸ்ட்ல சரண் கலந்தது விஷமே இல்ல.. அது வெறும் மயக்க மருந்து.. அது சாப்டா ஒரு நாலு மணி நேரம் கழிச்சு ஒரு ஒரு மணி நேரம் மயக்கமா இருக்கும்.. அடுத்த ஒரு மணி நேரத்துல நீ நார்மலா ஆயிடுவ.. ஆனா அதுக்கும் இந்த மருந்து சாப்பிட்டா ஒன்னும் ஆகாது.. ஏன்னா இது வெறும் வைட்டமின் மாத்திரையோட பொடி..” என்று சொல்லி அவன் சிரிக்க அவன் மேல் கொலை வெறி கொண்டாள் நித்திலா..
“அடப்பாவி.. உன்னை நம்பி என் ஃப்ரெண்டை நானே கீழே பிடிச்சு தள்ளிவிட்டுட்டேனேடா.. இப்படி அனாவசியமா என்னை ஒரு கொலை பண்ண வச்சிட்டியே.. அதுவும் சரணை.. இப்படி எந்த காரணமுமே இல்லாம அவனை கீழே தள்ளி கொலை பண்ண வச்சிட்டியே.. அவன் பாவம்டா..” என்று அவன் சட்டை பிடித்து கதறியவளை “ஆமாம் இல்ல.. நீ இப்ப ஒரு கொலை பண்ணிட்ட இல்ல? என்ன செய்யறது? இப்ப செஞ்ச கொலைக்கு கம்பி எண்ணணுமே..” என்றான் அருண்..
“அப்படி நான் மாட்டுனா நான் சும்மா இருக்க மாட்டேன்டா.. நீ போட்ட டிராமாவை நான் உடனே போய் போலீஸ்ல சொல்றேன் டா.. நீ இன்னும் உயிரோட இருக்கறது மட்டும் இல்ல.. நீ என்ன எல்லாம் பண்ண..? எல்லாத்தையும் சொல்றேன்.. சரணை கொலை பண்றதுக்கு தான் நீ இதெல்லாம் செஞ்சன்னு சொல்லி நீதான் அவனை மலை மேலருந்து கீழ பிடிச்சு தள்ளுனன்னும் சொல்லுவேன்.. அதுக்கப்புறம் காலம் முழுக்க நீ போலீஸ் ஜெயில்ல தான் டா இருக்கணும்..” நித்திலா கண்களில் வெறியோடு சொன்னாள்..
அருண் சிறிதும் சலனம் இல்லாமல் அவளை கூர்ந்து பார்த்தவன் “போய் சொல்லு நித்திலா.. ஆனா நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கூட சொல்ல வேண்டா.. இதோ.. என் ஃபோன்ல அவங்க நம்பர் இருக்கு.. நீ ஃபோன் பண்ணி கம்ப்ளெயின்ட் பண்ணு.. ஆனா ஒண்ணு.. அவங்க என்னை தேடி இங்க வர்றதுக்குள்ள நான் இந்த இடத்தை விட்டு எங்கேயாவது ஓடி போய்டுவேன்.. போலீஸ் என்னை தேடிக்கிட்டே தான் இருப்பாங்க.. ஆனா நான் தேடினாலும் கெடைக்க மாட்டேன்.. இதோ இந்த விஷ்வா இந்த மலையடிவாரத்தில் இருக்கற ஒரு குடிசை வீட்ல உன்னை கட்டி வெச்சுட்டு போயிடுவான்.. என்ன..? அவங்க என்னை தேடும் போது அவங்க கைல ஒரு வீடியோ கிடைக்கும்.. எந்த வீடியோன்னு யோசிக்கிறியா? பாக்கறியா?” என்று மறுபடியும் தன் கைபேசியை இயக்கினான்..
அதில் நித்திலா சரணை மலை மேல் இருந்து கீழே தள்ளியதும் அதன் பிறகு அவன் கையை கல்லால் அடித்து அவனை கீழே விழ செய்ததும் தெளிவாக பதிவாகி இருந்தது..
“இப்ப இந்த வீடியோ போலீசுக்கு போச்சுன்னா என்ன ஆகும் நித்திலா? அவங்க என்னை தேடி கண்டுபிடிச்சா கூட நான் எதோ செத்து போனா மாதிரி டிராமா பண்ணிட்டதா தான் நினைப்பாங்க.. ஆனா அவங்க கிட்ட இந்த வீடியோ கிடைச்சுதுன்னா உன்னை தேடி கண்டுபிடிச்சு நேரா கொலை கேஸ்ல காலம் முழுக்க உள்ள வச்சிருவாங்க.. நீ சரணை கொலை பண்ணதனால நான் தான் அந்த வீடியோவை அவங்களுக்கு அனுப்பிச்சிட்டு உன்னை கட்டி போட்டு அவங்களுக்கு நீ இருக்கற இடத்தை இன்ஃபார்ம் பண்ணதா சொல்லி நான் என் வழியை பார்த்துட்டு ஜாலியா போயிடுவேன்.. அப்பறம் நல்லா வசமா மாட்டிக்கிட்டு நீ ஜெயிலுக்கு போய் களி திங்க வேண்டியதுதான்.. என்ன போலீசுக்கு இந்த வீடியோவை அனுப்பிச்சு விடட்டுமா? ஃபோன்ல இருந்து ஒரு மெசேஜ் அனுப்பிச்சா போதும்.. உடனே உங்க மாமியார் வீட்டில் இருந்து வந்துருவாங்க உன்னை அரெஸ்ட் பண்ணறதுக்கு.. ரெடியா நித்திலா?” அவன் கேட்க அப்படியே அரண்டு போய் நின்றாள் நித்திலா..
“என்ன நித்திமா.. அப்படியே ஷாக் ஆகி நின்னுட்ட.. இந்தா.. போலீஸ்க்கு ஃபோன் பண்ணு.. சீக்கிரம்.. எனக்கும் வேலை சீக்கிரமா முடிஞ்சிடும்.. இந்தா.. வாங்கிக்க.. வேணும்னா நானே உனக்கு நம்பர் போட்டு கொடுக்கட்டுமா?” என்று மெதுவாய் அந்த எண்ணுக்கு அழைக்க போக அவள் அவன் கையிலிருந்த கைபேசியை தட்டிவிட்டு “வேண்டாம்.. ப்ளீஸ்.. நீ என்ன சொன்னாலும் செய்யறேன்.. போலீஸ்க்கு ஃபோன் பண்ணாத..”
அவள் சொன்னதைக் கேட்டவன் இதழ் ஓரமாய் ஒரு புன்னகையோடு “நீ புத்திசாலி.. புரிஞ்சுகிட்ட.. போலீஸ்கிட்ட நீ மாட்டாம இருக்குறதுக்கு நானே உனக்கு ஒரு வழி சொல்றேன்.. காலேஜ் டைம்ல சரண் ஒரு ட்ரக் டீலரை கிராஸ் பண்ணான்.. ஆக்சுவலா அந்த ஆளை போலீஸ்ல மாட்டி விட்டுட்டான் அவன்.. அதனால அந்த ஆளு அவனை கொலை பண்ண தீவிரமா தேடிட்டு இருக்கான்.. இப்போ இந்த கொலை கேஸ்ல அவனை மாட்டிவிட்டுட்டு நீ தப்பிச்சுக்கலாம்.. நீ அதை எப்படி பண்ணுவியோ எனக்கு தெரியாது.. உனக்கு தான் உங்க அப்பா இருக்கிறார் இல்ல..? அவருக்கு தான் எல்லா இடத்திலயும் நல்ல இன்ஃப்ளூயன்ஸ் இருக்கே.. அவர்கிட்ட சொல்லி அந்த ஆள எப்படியாவது மாட்டி விட சொல்லு.. மத்தபடி அந்த ஆளு இங்க வந்து உன்னை விஷ்வாவை ரெண்டு பேரையும் கட்டி போட்டுட்டு சரணை கொலை பண்ணிட்டான்னு சொல்லிடு.. இதனால நீ அந்த கொலை கேஸ்லருந்து தப்பிச்சிக்கலாம்.. “
அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு நெஞ்சில் நிம்மதி படர்ந்தது.. “நீ சொன்னபடியே செஞ்சிடுறேன்.. தயவு செஞ்சு இந்த வீடியோவை டெலிட் பண்ணிடு ப்ளீஸ்..” கெஞ்சினாள் நித்திலா..
“உன்னை இப்பதான் புத்திசாலின்னு சொன்னேன்.. இல்லன்னு சொல்லல.. அப்படி சொன்னதுக்காக உன்னோட ஓவர் ஸ்மார்ட்னெஸ்ஸை என்கிட்டயே காட்ட பாக்குறியா? இந்த வீடியோ எப்பவுமே என்கிட்ட தான் இருக்கும்.. அந்த ட்ரக் டீலரை மாட்டி விட்டதனால நீ என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டேன்னு மட்டும் நினைக்காதே.. இந்த வீடியோ என்கிட்ட இருக்கிற வரைக்கும் என்னோட கண்டிஷன்க்கு எல்லாம் ஒத்துக்கிட்டு தான் நீ நடந்துக்கணும்..”
அருண் சொன்னதை கேட்டவள் “கண்டிஷனா.. என்ன கண்டிஷன்?” என்று சிறிது பயத்துடனே கேட்டாள்..
“பயப்படாதே.. உன்னை ஒன்னும் பண்ண சொல்ல போறதில்லை.. நீ எதுவும் செய்யாம இருக்கணும்னு தான் சொல்ல போறேன். என் அஸ்வினி வாழ்க்கையில எந்த விதத்திலும் இனிமேல் நீ குறுக்கிடக் கூடாது.. உன்னால அவ வாழ்க்கையில ஏதாவது சின்ன டிஸ்டர்பன்ஸ் வந்ததுன்னு தெரிஞ்சா கூட இந்த வீடியோ போலீஸ் கிட்ட போய்டும்.. அப்புறம் உன்னை உங்க அப்பாவால கூட காப்பாத்த முடியாது… நீ அமைதியா நல்ல பொண்ணா இருக்குற வரைக்கும் தான் நீ வெளில சுத்த முடியும்.. இனிமேல் யார் வாழ்க்கையிலயாவது விளையாடணும்னு நெனச்ச.. உனக்கு ஆப்பு இந்த வீடியோ மூலமா உன் பின்னாடியே வந்துக்கிட்டு இருக்குங்கறதை மறந்துடாதே.. நீ எங்க இருந்தாலும் நான் உன்னை வாட்ச் பண்ணிக்கிட்டு தான் இருப்பேன்.. என்கிட்ட இருந்து ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ” மிரட்டலாய் சொன்னவன் தன் சுட்டு விரலையும் நடு விரலையும் தன் கண்ணை நோக்கி வைத்து பிறகு அவள் புறமாய் காட்டினான்..
தொடரும்..