5. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(3)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 05

 

“அப்பா இறந்த நேரம் நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் தந்த நினைவிருக்கா?” தேவ் கேட்டதும், “ம்ம் நினைவிருக்கு. அது எதுக்கு?” கோபத்தில் இருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நான் என்ன கேட்டாலும் தர்றதா சொன்ன. இப்போ அதைக் கேட்கிறேன். நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும் சத்யா” அவனை நேருக்கு நேர் பார்த்தவாறு சொல்லி விட்டான் தேவன்.

அனைவரும் அதிர்ந்து போயினர். அவன் இப்படிக் கேட்பான் என்று எவரும் நினைக்கவில்லை.

“தேவ்! இந்த விஷயத்தில் இதைக் கேட்காத. நீ என்ன கேட்டாலும் செய்றேன்னு சொன்னேன். ஆனால் இப்படி முடியாது” அவனால் தம்பியைப் பார்க்க முடியவில்லை.

“சத்யா சத்தியம் தவறாதவனா இருப்பான்னு அப்பா சொல்லுவார். அது கூட பொய்யா?” தேவனின் கேள்வியில், “தேவாஆஆஆ” என அலறினான் சத்யா.

அவனுக்கு தந்தை என்றால் அத்தனை பிரியம். மேகலையை விட அவரோடு நெருக்கமானவன். இளையவர்கள் தாயோடு இருந்தாலும், சத்யா எப்போதும் அப்பா செல்லம்.

“என் சத்யா சத்தியம் காப்பவனா இருப்பான்” மகேந்திரன் மீசையை முறுக்கி கர்வத்தோடு சொல்வது அவன் மனதில் தோன்ற, கண்களை மூடித் திறந்தான்.

“தேவா! உன் சத்தியத்தை இடையில் நுழைக்காத” ரூபனுக்கு அது சரியாகப் படவில்லை.

“அம்மா கேட்டாங்க, நீ ஃபோட்டோவே கொண்டு வந்த. நான் எதுவும் கேட்கக் கூடாதா? எனக்குத் தந்த சத்தியத்தை எப்போ வேணாலும் கேட்டு வாங்கலாம். தப்பில்ல” தேவ் தன் பேச்சில் மாறப் போவதில்லை என்று உறுதியாக நிற்க,

“ஃபைன்! நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். போதுமா?” சினத்தோடு சொன்னான் சத்யா.

ரூபனும் மேகலையும் அதிர்ந்து போயினர். தேவாவின் முகத்தில் வெற்றிப் புன்னகை. 

“சத்யா! நீ நெஜமா தான் சொல்லுறியா? அப்பறம் மறுக்க மாட்டியே?” மேகலை திக்கித் திணறிக் கேட்க, “அதான் கேட்டுட்டான்ல உங்க பையன்? இப்போ எதுக்கு இப்படி கேட்கிறீங்க? நான் வாக்கு கொடுத்தா கொடுத்தது தான். பேச்சு மாற மாட்டேன்” 

“ஆனால் சத்யா..” ரூபன் இழுக்க, “வேண்டாம் ரூபன். பேசாம நான் அங்கேயே இருந்திருப்பேன். என்னை வர வெச்சு இப்படி பண்ணிட்டீங்கள்ல? இப்போ நான் யுகனுக்கு என்ன பதில் சொல்லுவேன்னு தெரியல. ஆனால் இனிமே யோசிச்சு பிரயோசனம் இல்லை. எல்லாம் பண்ணனும். என் தலையெழுத்து” கோபத்தோடு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

“பார்த்தியா அவன் பேசிட்டு போனதை? ஏன் தேவா இப்படி பண்ணுன?” மேகலை கலக்கத்தோடு பார்க்க,

“அப்படி பண்ணலனா உங்க பையன் சம்மதிச்சு இருக்க மாட்டான். உங்களுக்கு ஓகே சொல்லவும் வேணும். இப்படி செய்யவும் கூடாதுன்னா என்ன பண்ணுறது?” என்றவன், “இனிமே பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணுற வேலையைப் பாருங்க. இப்படி இருக்கிறவர் ஒரு நாள் மாறிடுவார்” என சென்று விட்டான் தேவா.

“இவனுங்க ரெண்டு பேருக்கும் என்ன தான் பிரச்சினை? எப்போவும் முட்டிக்கிட்டே இருக்காங்க. இவங்களை முதல்ல சரி செய்யனும்” என தலையில் கை வைத்தான் ரூபன்.

“சத்யாவை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு டா. எப்படி இருந்த என் பையனை விட்டு போயிட்டா அந்தப் பொண்ணு” மேகலை கண்ணீர் வடிக்க, “பழசைப் பற்றிப் பேசி எந்த பிரயோசனமும் இல்லம்மா. நடக்கனும்னு எழுதி இருந்தா நடக்கும். அண்ணா வாழ்க்கை இனியாச்சும் சந்தோஷமா மாறும்” அம்மாவிற்கு ஆறுதல் கூறினான் அவன்.

அறையினுள் இருந்த மகனைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா.

“உங்களுக்கு என்னைப் பிடிக்கலயா டாடி?” மகன் வாய் திறந்து கேட்ட கேள்வியில் அதிர்ந்து போனான் காளை.

“உன்னைப் பிடிக்காமலா? இந்த உலகத்தில் எனக்கு ரொம்பப் பிடிச்சது உன்னைத் தான் யுகி. யூ ஆர் மை வேர்ல்ட்” இரு கரம் நீட்டி அவனை அணைத்துக் கொள்ள, “அப்பறம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்க போறீங்க? புதுசா வர்றவங்களை சித்தி சொல்லுவாங்கள்ல. நம்ம பக்கத்து வீட்டு பையனுக்கு அவனோட சித்தி அடிப்பாங்களாம்” தன் மனதிலுள்ளதைக் கூறினான் யுகன்.

“ப்ச்! அப்படி நடக்காது யுகி. நான் நடக்கவும் விட மாட்டேன். நீ அதைப் பற்றி மட்டும் யோசிக்காத சரியா? யார் என் வாழ்க்கையில் வந்தாலும் இப்போ மாதிரியே எப்போவும் உன்னைப் பார்த்துப்பேன். இட்ஸ் மை ப்ராமிஸ்” அவனது நெற்றியில் முத்தமிட, “தாங்க் யூ டாடி” தந்தையை அணைத்துக் கொண்டான் மைந்தன்.

சத்யாவுக்கு தன் முதல் மனைவியின் ஞாபகம் வந்தது. அவளோடு வாழ்ந்த வாழ்க்கை எத்தனை இன்பமாக இருந்தது? ஆனால் அவனது இன்பத்தை மொத்தமாக துடைத்தெறிந்து விட்டுச் சென்றாளே அவள்?

“எனக்கு உங்க மேல சுத்தமா நம்பிக்கை இல்லை. இருந்த நம்பிக்கையை அந்த ஃபோட்டோ சுத்தமா நொறுக்கிப் போட்டுருச்சு. நாங்க பிரிஞ்சிடலாம்” எத்தனை சாதாரணமாக சொன்னாள்?

அவ்வளவு இலகுவாக அவனை விட்டும் சலனமே இன்றிப் பிரிந்தும் சென்றாள். மூன்று வருட வாழ்க்கை ஒரு புகைப்படத்திற்கு முன் காணாமல் போய் விட்டதா? இன்றும் கூட யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

காதலித்து திருமணம் செய்யவில்லை அவன். இனியாவை அர்ரேன்ஜ் மேரேஜ் செய்தான். ஆனால் சந்தோஷமாக வாழ்ந்தான். இருந்தும் யாரோ சொன்னதை நம்பி நொடியில் அனைத்தையும் சிதைத்து விட்டாள்.

“எதை வேணா மன்னிப்பேன். ஆனால் என் பிள்ளையை தாயில்லாத பிள்ளையா விட்டுட்டுப் போனத நான் மன்னிக்கவே மாட்டேன்” என்றவனுக்கு கண்ணை மூடும் போது கூட அவள் நினைவுகள் வந்தன.

“இனிமேல் இன்னொருத்தி வரப் போறாளா? என் வாழ்க்கையில் அவள் எதைப் பறிக்கப் போறாள்?” தன் வாழ்வில் நுழையப் போகும் முகம் தெரியாப் பெண்ணை வெறுப்போடு நினைவு கூர்ந்தான் சத்ய ஜீவா.

மேகலைக்கு மனம் ஆறவில்லை. சத்யா சம்மதித்தாலும், அவரால் சந்தோஷப்பட முடியவில்லை.

ஒரு வாரத்திற்கு முன் கோயிலுக்குச் சென்ற போது, சத்யாவிற்கு திருமண யோகம் இருப்பதாக ஜோசியர் கூறினார். ஒரு மாதத்திற்குள் கல்யாணம் நடந்தாக வேண்டும். இல்லையெனின் அவனது வாழ்க்கைக்கு அது ஆபத்தாகும் என்று விட்டார்.

ஏற்கனவே மூத்த மகனின் வாழ்வை சரி செய்ய வேண்டுமென நினைத்திருந்தவர், ஜோசியர் இப்படி சொன்னதும் அதீத யோசனைக்குச் சென்றார்.

இதோ, சத்யா கல்யாணத்துக்கு ஒப்புதல் அளித்து விட்டான். ஆனால் அவன் முழு மனதாக சம்மதிக்கவில்லை என்பது மனதோரம் முள்ளாய்க் குத்தியது.

இருந்தாலும் அனைத்தும் சரியாகும் எனும் முடிவோடு, புகைப்படங்களை ஆராயத் துவங்கினார்.

“நீ பாரேன் டா” என்று ரூபனிடம் சொல்ல, “எனக்கு வெட்கமா இருக்கும்மா. நீ பார்த்து தந்தா எனக்கு ஓகே” என முகத்தை மூடி வெட்கம் எனும் பெயரில் ஏதோ செய்ய,

“டேய் கருமம் புடிச்சவனே. கல்யாணம் உனக்கில்ல, உன் அண்ணனுக்கு” எனக் கூறியவாறு தாயின் மடியில் தலை சாய்த்தான் தேவன்.

“அதை விடு. நீ எதுக்கு உங்க பையன், உன் அண்ணன்னு சொல்லிட்டு இருக்க? அவர் உனக்கு யாரு?” சற்றே கோபமாகக் கேட்டான் ரூபன்.

“ஏன் உனக்கு தெரியாதா?” என அவன் வினவ, “உனக்கு தான் தெரியல. ஒழுங்கா நடந்துக்க. நானும்‌ ரொம்ப நாள் பார்த்துட்டு இருக்க மாட்டேன்” என்றான், அவன் பதிலுக்கு.

“அண்ணனை சொன்னா தம்பிக்கு கோபம் பொங்குதோ?”

“பொங்கத் தானே வேணும். இரத்த பாசம் இருக்குல்ல” என ரூபன் கூற, “சரிடா போதும். முதல்ல ஃபோட்டோ சிலெக்ட் பண்ணுங்க” என்றார் மேகலை.

“கல்யாணம் பண்ணிக்க போறவர் கிட்ட கேட்கனும். அவர் சொல்ல மாட்டார்ல. நானே ஒன்னு பார்க்கிறேன்” என்றவாறு தேவன் ஒன்றை எடுக்க, “நீ கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சல்ல. சோ இந்த வேலையை நான் தான் பார்ப்பேன்” என ரூபன் ஒவ்வொரு போட்டோவாகப் பார்த்தான்.

மேகலை யின் கண்கள் ஒரு புகைப்படத்தில் நிலைக்க, இருவரும் அதனை எடுத்துப் பார்த்தனர்.

“வாவ்! அழகா இருக்காங்கள்ல?” ரூபன் வாயைத் திறக்க, “சைலண்டான பொண்ணு மாதிரி விளங்குது. நம்ம அண்ணனோட கோபத்தில் மிரண்டு போயிடும்” என்றான் தேவன்.

“லட்சணமா இருக்கா இந்த பொண்ணு. பெயர் என்ன?” என்று மேகலை கேட்க, “அப்பா பெயர் மாரிமுத்து. நமக்கு பக்கத்து ஊர்” என ரூபன் சொல்ல, அவர் விழிகள் அவள் மீது படிந்தன.

முகத்தில் மென் புன்னகை பூசி, அமைதியான அழகால் அனைவரையும் வசீகரித்தாள் நந்திதா. மாரிமுத்துவின் மூத்த புதல்வி.

சத்யாவிடம் புகைப்படத்தைக் காட்ட, அவன் அதை வாங்கிப் பார்த்து விட்டு அலட்சியாக நின்றான்.

“கல்யாணம் எனக்கில்ல உனக்கு” ரூபன் சொல்லியதும், “பேசாம நீயே கட்டிக்கோயேன். அம்மாவோட கல்யாண ஆசை தீர்ந்துடும்” சலிப்போடு சொன்னான் அவன்.

“ஆத்தே. அவங்க எனக்கு அக்கா. அக்காவை கட்டிக்க மாட்டேன் நானு. அப்பறம் இனிமே எனக்கு அண்ணியாகப் போறாங்க. அவங்க முகத்தைப் பாரு. ரொம்ப அமைதியான சுபாவம் போல” என்றான் ரூபன்.

அதைப் பறித்துப் பார்த்த யுகனிடம், “நல்லா இருக்காங்களா? உனக்கு பிடிச்சிருக்கா?” ஆவலுடன் கேட்டார் மேகலை.

“எனக்கு யாரும் வேண்டாம்னு சொல்லிட்டேனே பாட்டி. அந்த இனியா எங்க டாடியை விட்டுட்டு போயிட்டாங்க. அங்கே யூ.எஸ்ல சில பேர் டாடி தப்பானவர்னு சொல்லுறாங்க. அதனால எனக்கு அப்படி ஒருத்தரே தேவையில்லை” வெறுப்போடு சொன்னான் பேரன்.

ஆம்!

இனியா சென்ற காரணம் சத்யாவை பலர் முன் தவறாக சித்தரித்து விட்டது. அவனை யுகனின் காது படவே சிலர் குறை கூற, எல்லாம் இனியாவால் என்ற எண்ணத்தில் ‘அம்மா’ எனும் உறவையே வெறுக்க ஆரம்பித்து விட்டான் யுகன்.

அதிர்ந்து நின்ற தன் குடும்பத்தினரை ஒரு தடவை பார்த்து விட்டு, ஈற்றில் தேவ்விடம் அழுத்தமான பார்வையை வீசி விட்டு நகர்ந்தான்.

‘நான் அம்மா என்ற உறவை வெறுக்கச் செய்ததாக நினைத்தாயே. இப்போது புரிகிறதா யுகனின் மனம்?’ எனும் கேள்வியைத் தாங்கி நின்றது அப்பார்வை.

யுகனை அள்ளித் தூக்கிக் கொண்ட ரூபன், “அப்படியே டாடியை மாதிரி கோபம். ஆனால் நீ கோபப்படும் போது கியூட்டா இருக்க டா. எனக்கு சிரிப்புத் தான் வருது” அவன் கன்னத்தைப் பிடித்து ஆட்ட,

“வலிக்குது ரூபி” என்றவன், “சித்தா! இனிமேல் நாங்க இங்கே தான் இருக்கனும் போல. நீங்க எனக்கு தினமும் பாக்ஸிங் ப்ராக்டிஸ் கொடுங்க” என்று சொன்னான்.

“கண்டிப்பா டா. சித்தாவும் யுகியும் சேர்ந்து ரூபியை வெச்சு டிஷ்யூமா டிஷ்யூம் பண்ணலாம்” என்றிட, அவனோ ஹைபை கொடுத்துச் சிரித்தான்.

“டேய் இதெல்லாம் அநியாயம்” அங்கிருந்து தலைதெறிக்க ஓடினான் ரூபன்.

அதைக் கண்டு, கவலை மறந்து சிரிக்கும் தாயை அன்பு கனிய ஏறிட்டான் தேவன்.

 

தொடரும்……..!

ஷம்லா பஸ்லி 

2024-12-07

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!