💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 13
“நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கிற மண்டபம் எவ்ளோ நல்லாருக்கு. அதை விட்டு ஊர் எல்லையில் மண்டபம் எடுத்திருக்கார் அப்பா” சலித்துக் கொண்டான் ஜனனி.
“கட்டிக்கப் போறவளே சும்மா இருக்கா. உனக்கு அப்பாவை குறை சொல்லாம பொழுது விடியாது” ஜெயந்தி உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
நாளை நந்திதாவுக்கு திருமணம். இன்று காலையில் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும் என்றிருந்தார் மாரிமுத்து. மூத்த மகளின் கல்யாணத்திற்கு பணத்தை வாரி இறைத்திருந்தார்.
“அவளுக்கு கல்யாணத்தில் கூட விருப்பம் இல்லை. இதுல மண்டபம் எங்கே இருந்தா என்ன?” என்று ஜனனி சொல்ல, ஜெயந்தியின் பார்வை நந்திதா மீது நிலைத்தது.
இவர்களது பேச்சில் கவனம் செலுத்தாமல் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள் நந்திதா.
“நந்து…!!” தன் தோள் தொட்ட தாயை தலை தூக்கிப் பார்த்தாள் மகள்.
“உனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லையா நந்து? இரண்டாம் கல்யாணம்கிறதால யோசிக்கிறியா?” அவளை அன்போடு நோக்க, “அப்படிலாம் இல்லம்மா” உட்சென்ற குரலில் பதிலளித்தாள் அவள்.
“இரண்டாம் கல்யாணம்னா என்னம்மா? நீ எதுக்கு அதையே சொல்லிட்டு இருக்க?” ஜனனி புருவம் சுருக்க, “அந்தப் பையனோட மனைவி விட்டுட்டு போயிட்டா. ஆனால் அவர் மனநிலை எப்படியிருக்குமோனு பதட்டமா இருக்கு. அந்த சின்னப் பையனுக்கு அம்மாவைப் பிடிக்காதுன்னு மகி சொன்னா. நந்து எப்படி அதையெல்லாம் சமாளிப்பா?” தனது ஆதங்கத்தை வெளியிட்டார் ஜெயந்தி.
“யாரால சமாளிக்க முடியுமோ அவங்களுக்குத் தான் கடவுள் முடிச்சுப் போடுவார். அதுவும் இரண்டாம் கல்யாணம் என்கிறது தப்பு இல்லையேம்மா. எல்லாருக்கும் முதல் கல்யாணம் ஒழுங்கா அமைஞ்சிடுறது இல்ல. இதுல அவர் தப்பு பண்ணாதப்போ நீ பயப்பட அவசியம் இல்ல.
நான் ஒன்னு கேட்கவா? இதுவே சத்யா உங்க பையனா இருந்தா ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். பையனை மட்டும் பார்த்துக்கனு விட்றுவியா? இல்லல்ல. ஒரு அம்மாவா உன் பையன் வாழ்க்கையை சரி பண்ண தானே யோசிப்ப?” ஜனனி கேட்ட போது ஜெயந்தியால் பதில் சொல்ல முடியவில்லை.
உண்மை தானே? தனது மகனுக்கு இப்படி நடந்து இருந்தால் ஒரு பெண்ணைத் தேடி மணமுடித்துக் கொடுக்கப் போராடுவார். அவனுக்கு அமைவது திருமணமாகாத பெண்ணாக இருந்தாலும் சரி.
நம் சமூகத்தின் மிகப்பெரும் தவறான மனநிலை இது தான். மற்றவர் என்று பார்க்கும் போது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் மனம், சில விடயங்களைத் தனக்கு என வரும் போது சரி என்கிறது.
“நீ சொல்லுறது நிதர்சனம் ஜானு. ஆனால் என்னால தான் அதை ஏத்துக்க முடியல. நந்து நல்லா தானே இருக்கா?” எனக் கேட்க,
“நான் நல்லா இருக்கேன் மா. நீ எதுவும் கவலைப்படாத” அவரை அணைத்துக் கொள்ள, தலையசைப்போடு சென்று விட்டார்.
“ஜானு! நம்ம வீடு போரடிக்குது தெரியுமா?” கோபத்துடன் வந்து அமர்ந்தாள் மகிஷா.
“ஏன் டி?” சகோதரிகளின் பார்வை அவள் மீது திரும்பியது.
“நம்ம வீட்டுல கல்யாணம். ஆனால் ஒரு ஃபன் இருக்கா? மத்தவங்க சும்மா இருக்காங்கன்னா நீங்க ரெண்டு பேரும் சோக வீணை வாசிச்சு இன்னுமே கடுப்படிக்கிறீங்க” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் தங்கை.
“இப்போ என்ன பண்ணனும் நாங்க?” என்று நந்திதா கேட்க, “கல்யாண வீடுன்னா எப்படி இருக்கனும்? டான்ஸ், ஸ்நாக்ஸ், டிஜேனு களைகட்டனுமே. நம்ம வீடு பேய் பங்களா மாதிரி அமைதியா இருக்கு” என்றாள் அவள்.
ஜனனிக்கு ராஜீவ் நினைவில் வேறெதுவும் யோசிக்கத் தோன்றவில்லை. அடிக்கடி அவன் நினைவு எழும் போதெல்லாம் சோர்ந்து போனது மனம்.
தன்னையும் மீறி வழியும் கண்ணீரை அடக்கும் வழி தெரியாமல் அவள் மீதே அவளுக்கு கோபமாக வந்தது. நிலைக்காது என்று தெரிந்தும் காதல் கொண்டிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. ஆனால் காதலித்த பின் அதை யோசித்து என்ன பயன்? காயம் மட்டுமே நிலையாய்க் கிடைத்தது.
நந்திதா எழில் ஞாபகமாக இருந்தாள். அவனோடு பேசவில்லை, பழகவில்லை. ஆனால் அளவில்லாத காதலை அவன் மீது சுமந்து கொண்டிருந்தாள்.
அதை மீறி வேறொரு திருமணத்தை நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவள் நினைவில் எழில் எழில் எழில் மட்டுமே நிறைந்திருந்தான். வேறு எதுவும் தலைக்கேறவில்லை அவளுக்கு.
“பார்த்தீங்களா இப்போ கூட உங்க உலகத்துக்கு போயிட்டீங்க. நான் போறேன்” கோபித்துக் கொண்டு செல்லலானாள் மகி.
“ஹேய் நில்லு மகி. நான் வர்றேன், உன் கூட டான்ஸ் பண்ண” என்று சொல்லி விட்டாள் ஜனனி.
நிலைக்காத காதலின் வலிக்காக, தன் அன்பான தங்கையின் மகிழ்வைக் கெடுப்பதில் அவளுக்கு விருப்பம் இல்லை.
“நானும் வர்றேன்” நந்திதாவும் சொல்ல, “ஹய்ய்! ஜாலி ஜாலி” துள்ளிக் குதித்து பாட்டை ஒலிக்க விட்டாள் அவள்.
மூவரும் நடனமாட, அங்கு மாரிமுத்து வந்ததும் அப்படியே உறைந்து போய் நின்றனர்.
“ம்ம் வீடு தானே ஆடிக்கங்க. மண்டபத்திற்குப் போய் கூத்து போடாமல் அடக்க ஒடுக்கமா இருக்கனும்” என்று சென்று விட,
“அக்கா வேற வீட்டுக்குப் போறதால அப்பா ஃபீல் பண்ணுறார் போல. எது எப்படியோ நமக்கு டான்ஸ் பண்ண அனுமதி கிடைச்சுதே. கெடச்ச சான்ஸை யூஸ் பண்ணிப்போம்” இரு கைகளாலும் சகோதரிகளின் கையைக் கோர்த்து மகி ஆட, அவளுக்காக வலியைப் புதைத்து புன்னகையோடு நடனமாடினர், ஜனனி மற்றும் நந்திதா.
……….
“கல்யாணத்தை அந்த மண்டபத்தில் வெச்சிருக்கலாம்ல சித்தா? எதுக்கு அவ்ளோ தூரமா போகனும்?” மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரியும் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தைக் காட்டிக் கேட்டான் யுகன்.
“தூரமா இருக்கிறது தான் சூப்பர். ட்ரிப் மாதிரி ஜாலியா போகலாம்ல?” என்று சொன்னான் தேவன்.
“போரடிக்கும். இன்னிக்கே அங்கே போகனும்ல. வீட்டுல இருந்தா நல்லாருக்கும்” என்றான் சின்னவன்.
“நீ என்னடா உலகம் முழுக்க சுற்றி வந்த கிழவன் மாதிரி வீட்டுல இருக்கனும்னு ஆசைப்படுற. உன் வயசுப் பசங்க ட்ரிப் போகனும், என்ஜாய் பண்ணனும்னு ஆசைப்படுவாங்க” என்று ரூபன் கேட்க,
“யூ.எஸ்ல டாடி தினமும் என்னை எங்கேயாவது கூட்டிட்டு போவார். நாங்க ஜாலியா ஊர் சுற்றுவோம். ஆனால் இங்கே நல்லா இல்ல. ஆனால் இங்கே வந்ததும் அவர் முகத்தில் ஸ்மைல் கூட இல்ல” என்று குற்றம் சாட்டினான் அவன்.
“நீ எதுக்குடா எங்களைப் பார்த்து சொல்லுற? உங்கப்பா ஸ்மைல் இல்லாம இருக்க நாங்க காரணமா?” தேவன் கேட்டதும், “இல்லையா பின்ன? நீங்க தான் காரணம்” இடுப்பில் கை குற்றி சொன்னான் யுகன்.
“நீ அஞ்சு வயசு பையன் மாதிரியா இருக்கே? என்னா பேச்சு பேசுற?” ரூபன் வாயைப் பிளக்க, “இன்னும் ஃபைவ் ஆகல ரூபி. உனக்கு ஒன்னுமே தெரியல” என்று அவன் சிரிக்க,
“உனக்கு இந்த அவமானம் தேவையா?” வாயை மூடி தேவன் சிரிக்கவும், கடுப்பாகி விட்டான் ரூபன்.
“என் மானத்தை வாங்க நீ ஒருத்தன் போதும்டா” என்றவன் யுகனை மடியில் அமர வைத்து, “உன் கிட்ட ஒன்னு மட்டும் கேட்கிறேன் செல்லம். மத்தவங்க முன்னாடி என்னை ரூபி சொல்லாத. அன்னிக்கு மகி பொண்ணு முன்னால சொல்லி ஒரே சங்கடமா போச்சு” என்றதும்,
“உங்களுக்கு ஒன்னுமே தெரியல. ரூபி எவ்ளோ அழகா இருக்கு. நான் அப்படித் தான் சொல்லுவேன். பை ரூபி” அவன் கன்னத்தைக் கடித்து விட்டு ஓடியது இளஞ்சிட்டு.
“அவன் நல்லா பேசுறான்ல டா?” ரூபன் சிரிக்க, “புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அப்படியே சத்யாவைப் போல” என்றான் தேவன்.
அதை ஆமோதித்த ரூபனும், “அவன் அதே மாதிரி எப்போ மாறுவானோ?” எனக் கேட்டுக் கொண்டான்.
அறையினுள் ரெடியாகி முடிந்து கண்ணாடியைப் பார்த்தான் சத்ய ஜீவா. அவன் முகத்தில் மட்டும் இறுக்கம் நீங்கவில்லை.
“டாடீஈஈஈஈ” என்று ஓடி வந்த மகனைக் கண்டு, “வாடா என் சிங்க குட்டி” அவனை அள்ளித் தூக்கிக் கொண்டான்.
“டாடி ஸ்மைல் ப்ளீஸ்” கண்ணாடியில் அவனைப் பார்த்துக் கொண்டு கேட்க, “ஈஈஈஈ” பற்களைக் காட்டி பெரும் சிரிப்பை வழங்கினான் சத்யா.
“கொஞ்சம் தானே கேட்டேன். பெரிய ஸ்மைல் தர்றீங்க” அவன் உதட்டிலும் சிரிப்பு.
“என் யுகி கேட்டா அது பல மடங்கா கிடைக்கும். யூ ஆர் மை லவ் டா” அவனது முடியைக் கலைத்து விட, தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டான் பாசமிகு புதல்வன்.
சத்யாவினது காயத்திற்கு மருந்தானவன் இந்த யுகன். அவன் மட்டும் இல்லையென்றால் அவனது வாழ்வே வெறிச்சோடித் தான் போயிருக்கும். அவனது அன்பு தான் சத்ய ஜீவாவின் ஆனந்தம்.
“சத்யா! போகலாமா?” மேகலையின் அழைப்பில், மகனோடு வந்தான் அவன்.
“தேவா! கல்யாணம் அண்ணனுக்கா நம்ம அம்மாவுக்கா? சின்னப் பொண்ணு மாதிரி வந்திருக்காங்க” என்று ரூபன் கேட்க, “கலாய்க்கிற தானே?” அவனை முறைத்தார் மேகலை.
“நெஜமாம்மா. அவ்ளோ அழகா இருக்கீங்க. ஒரு ஜிலேபி எடுத்துக்கலாமா?” என்று ரூபன் கண்ணடிக்க, “ம்மா! இவன் உங்களை ஓட்டுறான்” அடக்கப்பட்ட சிரிப்புடன் உரைத்தான் தேவன்.
“ஜிலேபின்னா என்ன சித்தா?” யுகன் புரியாமல் கேட்க, “ஒரு நாள் அம்மா என் கிட்ட வந்து ஜிலேபி எடுத்துக்கோனு சொன்னாங்க. நானும் சாப்பிடலாம்னு ஜிலேபிக்காக கையை நீட்டினா ஃபோனை தர்றாங்க. செல்ஃபியைத் தான் அவங்க பாஷையில் அப்படி சொல்லிருக்காங்கனு அப்பறம் புரிஞ்சுது” அண்ணன் மகனுக்கு விளக்கம் கொடுத்தான் ரூபன்.
“அய்யோ செம்ம பாட்டி” கலகலத்துச் சிரித்தான் யுகன்.
“எனக்கு எங்கே அந்த வார்த்தையெல்லாம் தெரியும்? நீங்க தான் சரியா சொல்லிக்கனும்” முகத்தை மூடிக் கொண்டார் மேகலை.
“இவன் கிட்ட சொன்னது ஓகே. ஆனால் வேற யார் கிட்டேயாவது ஜிலேபி மேட்டர் சொன்னா கொன்றுவேன். அப்பறம் உன்னோட நிக் நேம் ரூபியை போஸ்டர் அடிச்சிடுவேன்” என்று தேவன் சொல்ல,
“சரண்டர் சரண்டர்! தயவு செஞ்சு அதை மட்டும் இழுக்காத” கையை உயர்த்திய ரூபன், “அவங்க உனக்கு மட்டும் அம்மா இல்லை. எங்களுக்கும் தான் டா. நீ ஓவரா பண்ணாத” என்றிட,
“நான் இல்லேனு சொல்லவே இல்லையே. என் அம்மானு நான் சொல்லுறேன். நீயும் உரிமைக் கொடியை நாட்டலாம். நான் தடை சொல்ல மாட்டேன்” என்று விட்டான் தேவன்.
“கல்யாணத்துக்கு போகாம அம்மா அம்மானு சொல்லிட்டு இருக்கப் போறீங்களா? நாம இப்போ யுகனோட அம்மாவைப் பார்க்க வேணாமா?” என்று மேகலை கேட்க,
“பாட்டீஈஈ! அம்மா சொல்லாதீங்க. எனக்கு அப்படி யாரும் வேண்டாம்” கோபமாகக் கூறிய யுகன், “யுகி” எனும் சத்யாவின் அழுத்தமான அழைப்பில் அமைதியாகி விட, “போகலாமா?” என்றவாறு முன்னால் நடந்தான் சத்யா.
இனியாவைத் திருமணம் செய்ய மகிழ்வோடு மண்டபம் சென்ற தருணம் நினைவுக்கு வந்ததில், அவன் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி