40. ஜீவனின் ஜனனம் நீ…!!

4
(1)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 40

 

காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் மூவரும். சத்யா ஓட்டுனர் இருக்கையில் அமர, யுகன் வழமை போல் முன்னால் ஏறப் போனவன் சற்றுத் தாமதித்து, “ஜானு! நீயும் முன்னால வா. நான் உன் மடியில் உட்கார்ந்துக்கிறேன்” என்றிட,

 

“ஓகே யுகி” அவனது சொல்லுக்கு மறுப்புக் கூறாமல் சத்யாவின் அருகில் அமர, யுகன் அவள் மடியில் அமர்ந்து கொண்டான்.

 

இருவரையும் ஒரு பார்வை பார்த்த சத்யா அமைதியாகவே பயணத்தைத் தொடர, இவர்கள் இருவரும் ஓயாமல் வளவளத்துக் கொண்டு வந்தனர்.

 

“ஏன் ஜானு இன்னிக்கு எல்லா இடமும் நிறைய பேர் இருக்காங்க?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் யுகன்.

 

“இன்னிக்கு நியூ இயர் தானே? கடைகள்ல சேல் போட்டிருக்கு, நிறைய விளையாட்டுப் போட்டிகள் கூட நடக்குதாம்” என்றவளைப் பார்த்து, “சூப்பர்ல ஜானு? நானும் அதில் கலந்துக்கலாமா?” துள்ளலோடு வினவினான்.

 

“கண்டிப்பா செல்லம். உள்ளே போய் பார்ப்போம். ஏதாவது இருந்தா உன்னை அனுப்புறோம்” அவனது கன்னங்களைக் கிள்ள, தலையசைத்துப் புன்னகைத்தான்.

 

“டாடி! நீங்க ஏன் பேசாம வர்றீங்க?” தந்தையின்‌ அமைதி சின்னவனைப் பாதித்தது போல.

 

“நீ தான் பேசுறியே கண்ணா! நீ பேசுறதை ரசிச்சு கேட்டுட்டு வர்றேன்” அவன் முகத்தை ஏறிட, “ஜானு பேசுறதையும் கூட ரசிக்கிறீங்களா?” அவன் கேட்டவுடன் சத்யா திகைத்துப் பார்த்தான்.

 

அவனது முகம் மாறிய தோரணையைக் கண்டு ஜனனி பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் பதிலுக்காகக் காத்திருக்கலானாள்.

 

“சொல்லுங்க டாடி. ஜானு பேசுறதையும் ரசிங்கிறீங்க தானே?” யுகனின் கேள்வியே ஆம்’ எனும் பதிலை எதிர்பார்த்துத் தான் இருந்தது.

 

“தெரியல டா” நாலாபுறமும் தலையை ஆட்டி வைத்தான் தகப்பன்.

 

“அதென்ன தெரியாது? அப்படி ஒரு பதில் இல்லையே?” புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போல் கேள்விக்கணை தொடுத்த மகனை ஆயாசமாகப் பார்த்து வைத்தான் சத்யா.

 

“நெஜமாவே தெரியல யுகி. ரசிக்கலனு சொன்னா நீ கோபப்படுவ. அதற்காக ரசிச்சேன்னு சொல்லவும் முடியல.‌ ரசிச்சேனானு தெரியாதப்போ பொய் சொல்ல முடியுமா? ஆனால் கேட்டுட்டு தான் வந்தேன்” பதிலுக்கு விளக்கமும் கொடுத்து முடித்தான்.

 

“யூ ஆர் மை ட்ரஸ்ட் ஃபுல் டாடி! பொய் சொல்ல மாட்டீங்கள்ல?” தந்தையின் கன்னத்தில் முத்தமிட்ட யுகன், சற்றே தலை சாய்த்து ஜனனிக்கும் முத்தமிட்டான்.

 

அவளுக்கு மனம் நெகிழ்ந்தது. தந்தையைப் போலத் தான், அவன் தனக்கும் சகலமும் செய்கிறான். அப்படியெனில் தாய் எனும் அந்தஸ்தைத் தந்து விடுவானா? 

 

அந்நினைவில் உடம்பு புல்லரித்தது. தாய் எனும் அந்தஸ்து எத்தனை பெரியது? தான் பெறாமலே தனக்குக் கிடைத்த பொக்கிஷமாக யுகனை ஏற்றிருந்தாள். சத்யா எப்படியென்று அவளுக்குத் தெரியாது. தாலி கட்டிய கணவன் அவ்வளவே!

 

ஆனால் யுகன் அவளது மகனாகி விட்டான். அவனைச் சுமக்கவில்லை, பாலூட்டவில்லை, கொஞ்சித் தீர்க்கவில்லை, வளர்க்கவில்லை.. இருப்பினும் அவன் மீது தாயன்பு சுரக்கக் கண்டாள்.

 

அவ்வன்பு அவனிடம் கிடைப்பது எப்போது? என்று ஏக்கத்தோடு நினைத்தவளுக்குத் தெரியவில்லை.. அவ்வுறவுக்குப் பதிலாக, தற்போதிருக்கும் நட்புறவும் சில தினங்களில் அறுத்தெறியப்படப் போகிறது என்று.

 

ஷாப்பிங் மாலின் வாயிலில் ஸ்கூபிடூ பொம்மை உடை அணிந்து சிலர் ஆடிக் கொண்டிருக்க, யுகன் அவற்றைப் பார்த்து ரசித்துக் கொண்டே வந்தான்.

 

“என்னங்க! ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொடுங்களேன்” அலைபேசியை நீட்டிய ஜனனியை முறைத்து, “தேவையா இதெல்லாம்?” என்று கேட்டான் சத்யா.

 

“ஒருத்தங்க கேட்டா ஹெல்ப் பண்ணனும்ல டாடி” மகன் ஆரம்பிக்கும் போதே, “சரிடா சரி! இன்னிக்கு நாள் முழுக்க வேணும்னாலும் ஃபோட்டோ ஷூட் பண்ணுறேன். நீ அட்வைஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணிடாத” ஜனனியின் கையில் இருந்த அலைபேசியை வாங்கிக் கொள்ள,

 

“ஹா ஹா! உன் டாடியை ஆஃப் பண்ணுற சுவிட்ச் நீ தான் யுகி” யுகனின் கன்னத்தைக் கிள்ளியவள் அவனையும் அழைத்துக் கொண்டு ஸ்கூபிடூ அருகில் நிற்க, சத்யா போட்டோ எடுத்தான்.

 

யுகி சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்க, “சிரிச்சது போதும். நாக்கை நீட்டி கண்ணை மூடிட்டு ஒரு போஸ் கொடு” அவளும் அவ்வாறே செய்து காட்டினாள்.

 

“இதென்ன கன்றாவியா இருக்கு? சும்மா நில்லுங்க” சத்யா முகம் சுளிக்க, “அது செம்ம! உங்களுக்கு என்ன தெரியும்? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?” என்றாள் ஜனனி‌.

 

‘இவ வாயி நீளமாயிடுச்சு. வீட்டு வரட்டும் இருக்கு’ உள்ளுக்குள் கருவிக் கொண்டான்.

 

“இது நெஜமாவே சூப்பர் டாடி! எடுங்க எடுங்க” யுகன் சொல்லவே, தலையசைப்புடன் ஃபோட்டோ எடுத்தான்.

 

அங்கு அலப்பறை செய்த பின்னரே உடை எடுக்கச் சென்றனர். யுகன் புதிதாக வந்துள்ள டெனிம் ஒன்றைக் காட்ட, “இதென்ன அங்கே இங்கே கிழிஞ்சி தொங்குது? இது வேண்டாம்” மறுத்து விட்டான் சத்யா.

 

“ப்ளீஸ் டாடி! எடுத்துத் தாங்க. அதான் இப்போ ஃபேஷன். ஜானு நீயாவது சொல்லு” ஜனனியைத் துணைக்கு அழைக்க, “டாடி வேணாம்னு சொன்னா வேண்டாம் யுகி. அதை விட சூப்பரான ஒன்னு பார்ப்போம்” என்று வேறு ஒன்றை எடுத்துக் கொடுக்க அவனும் மகிழ்வோடு வாங்கிக் கொண்டான்.

 

தன்னிடம் யுகனுக்காகப் பேசி அவன் கேட்டதை வாங்கிக் கொடுப்பாள் என்று எதிர்பார்த்த சத்யாவுக்கு அவளது செயல் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

 

ஷாப்பிங் மால் நடுவே விளையாட்டு பேரூந்து போன்றதொன்று வைக்கப்பட்டிருக்க, யுகனின் ஆசைக்காக அவனை அதில் ஏற்றி விட்டனர்.

 

ஜனனி யுகனை விதவிதமாக ஃபோட்டோ எடுத்துத் தள்ளினாள்.

 

“யுகிக்கு அந்த டெனிமை வாங்கிக் கொடுக்கலாமே” அவள் குரலில் கெஞ்சல் தெரிந்தது.

 

“ஏன்?” எனக் கேட்டான், இப்போது ஏன் கேட்கிறாள் என்ற யோசனையோடு.

 

“அவன் ஆசைப்படுறான்ல. உங்களுக்குப் பிடிக்கலனாலும் அவனோட ஆசைக்காக எடுத்துக் கொடுக்கலாம் தானே? அவங்க கேட்டுட்டாங்கனு எல்லாத்தையும் வாங்கிக் கொடுக்கக் கூடாது தான். ஆனால் இதைக் கொடுக்குறதால ஒன்னும் ஆகப் போறதில்லையே. வேணாம்னு சொன்னா வெளியில் போகும் போது போட மாட்டான். வீட்டிலாவது இஷ்டத்துக்கு போட்டு சந்தோஷப்படுவான்ல?” 

 

“அவன் கேட்டப்போ நீ என் கிட்ட அவனுக்காக பேசலயே?” மண்டையைக் குடைந்த கேள்வியை கேட்டு விட்டான்.

 

“வேணாம்னு சொன்னத நான் கொடுங்கனு சொல்லி நீங்க கொடுத்தா அது யுகி மனசுல ஆழமா பதிஞ்சு போகலாம். அப்பறம் எதுவா இருந்தாலும் உங்களை விட்டுட்டு என்னை நாடலாம்‌. இல்லனா நீங்க மறுக்குறதை என் மூலமா உங்க கிட்டிருந்து அடையலாம்னு ஒரு எண்ணம் அவனுக்கு வரலாம்.

 

அது சரியானது இல்ல‌னு தான் நான் அவன் முன்னாடி பேசல‌. ஆனால் இப்போ கேட்கிறேன். எடுத்துக் கொடுக்குறீங்களா?”

 

அவளின் சிந்தனை செல்லும் திசை சத்யாவை மீண்டுமொரு தடவை வியக்கத் தான் வைத்தது. அவள் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

 

அப்பா மறுத்தாலும் அம்மா மூலம் கெஞ்சிக் கொஞ்சி, ஏன் மிரட்டிக் கூட காரியம் சாதிக்கும் பிள்ளைகள் இன்று இருக்கக் காண்கின்றோம். தந்தைக்குப் பயந்து பிள்ளைக்கு உதவிடும் தாய்மார், பின்னாளில் பிள்ளைகளின் குற்றத்திற்காக கணவனின் கோபத்திற்கு இலக்காகின்றனர். அப்படியொரு நிலைக்கு யுகனைத் தள்ளக் கூடாது என்ற ஜனனியின் எண்ணம் சத்யாவை நெகிழச் செய்வதாய்.

 

விளையாடி முடிந்து வந்த யுகன் ஈட்டியைக் குறி பார்த்து எய்யும் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப்பட்டான்.

 

சத்யாவும் மறுப்புத் தெரிவிக்காமல் அனுப்பி விட, மகிழ்வோடு விளையாடி விட்டு வந்தான். 

 

“நானும் விளையாடிப் பார்க்கவா?” ஜனனி ஆசையோடு கேட்க, “போ ஜானு” தந்தை மகன் இருவரும் அனுமதி வழங்கினர்.

 

மூன்று முறையுமே சரியாக எய்யவில்லை என்றதும் அவளுக்கு முகம் வாடிப் போனது.

 

“நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம் ஜானு. ஃபீல் பண்ணாத” ஆறுதல் சொன்ன சின்னவனை அணைத்துக் கொண்டாள் அவள்.

 

சத்யா மூன்று முறையும் குறி பார்த்து சரியாகவே எய்ததில் ஐஸ்கிரீம் பெட்டியொன்று பரிசாகக் கிடைத்தது‌.

 

“யேஹ்” யுகன், ஜானு இருவருமே துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தனர்.

 

“என்ன இது?” சிரிப்புடன் செல்லமாகக் கடிந்து கொண்டான் சத்யா.

 

“ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?” யுகன் துள்ளலுடன் கேட்க, “சாப்பிடலாமே” என்ற ஜனனி சத்யாவின் முக மாற்றத்தை நன்கு கவனித்தாள்.

 

“டாடிக்கு என்னாச்சு யுகி?” அவன் காதருகே ரகசியமாகக் கேட்க, “ஐஸ்கிரீம் பிடிக்கும். ஆனால் சாப்பிட மாட்டார்” என்றான் அவன்.

 

“ஓஓ! அதானா விஷயம்?” என்று இதழ் குவித்தவளுக்கு அது ஏன் என்று தெரியாததால் அத்தனை பெரிய விடயமாகத் தெரியவில்லை‌.

 

இருவரும் ஐஸ்கிரீமை சாப்பிட்டனர். சத்யா கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

வீடு செல்லும் போது யுகனும் ஜனனியும் பேசிக் கொண்டு வந்தனர்.

 

“நாளைக்கு நர்சரிக்கு படிச்சு கொடுக்க போறியாமே ஜானு. நானும் நர்சரி சேர்ந்தா நீ எனக்கு டீச்சரா வருவல்ல” மகிழ்வோடு யுகன் வினவ, “ஆமா செல்லம்” அவனது கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.

 

“யுகி! உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” பையொன்றை அவன் கையில் திணித்தான் சத்யா.

 

அதைத் திறந்து பார்த்தவனுக்கோ கொள்ளை ஆனந்தம். அவன் ஆசைப்பட்ட டெனிம் கிடைத்து விட்டதே.

 

“வாவ்! தாங்க் யூ டாடி” அவனது கன்னத்தில் முத்தங்களை வாரி இறைத்தான்.

 

“இதை வாங்கித் தந்தேன். ஆனால்..” என்று அவன் ஆரம்பிக்கும் போது இடைமறித்து, “ஆனால் ஆசைப்பட்ட எல்லாமே வாங்கித் தருவீங்கனு எதிர்பார்க்க கூடாது. காணுற எல்லாத்தையும் கேட்டு அடம் பிடிக்கவும் கூடாது. அதானே டாடி?” என்று கேட்ட மைந்தனை கர்வத்தோடு நோக்கினான் சத்யா.

 

“என் சிங்கக்குட்டி! அதுக்காக விரும்புவதை கேட்காம இருந்துடாத. விரும்பால் கேளு. நல்லா இருந்தா நான் எடுத்து தருவேன். இல்லேனா விட்றனும்” அவனது முடியைச் செல்லமாகக் கலைத்து விட்டான்.

 

இந்த உறவைப் பார்க்கையில் ஜனனிக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது. தந்தை மகள் பாசம் மட்டுமா அழகு? தந்தை மகன் உறவும் தனியழகு. உறவென்றாலே அழகு தானே, பாசமும் பற்றும் நிறைந்திருக்கையில்?

 

“என்ன ஜானு அப்படி பார்க்குற?” யுகன் அவளைக் கேள்வியாக நோக்க, “உன்னைத் தான் பார்த்தேன். யாரு கண்ணும் படக் கூடாது உன் மேல” அவனுக்கு நெட்டி முறிக்க, “சோ ஸ்வீட்! பாட்டியைப் போல செய்றீங்க” என சிரித்தான் யுகி.

 

“போற போக்கில் என்னை பாட்டி லிஸ்ட்ல சேர்த்துட்ட பார்த்தியா?” செல்லமாக முறைத்தாள் ஜானு.

 

செல்லும் வழியில் ஐஸ்கிரீம் பெட்டியொன்றை வாங்கிக் கொள்ளுமாறு சொன்னாள் அவள்.

 

“நாங்க சாப்பிட்டோம்ல. வீட்டில் உள்ளவங்களுக்கும் வாங்கிட்டு போகலாமே” என்று அவள் கூற, “நாங்க சாப்பிட்டது அவங்களுக்கு தெரியாதே ஜானு?” வினாத் தொடுத்தான் சின்னவன்.

 

“தெரியாது தான். தெரிஞ்சாலும் அவங்களுக்கு தரலனு கோவிச்சுக்க போறது இல்ல. ஆனால் அப்படி கொடுக்கிறது ஒரு நல்ல பழக்கம். நம்ம சாப்பிட்டதை அவங்களுக்கும் கொடுத்தோம்னு ஒரு மனநிறைவு வரும் இல்லையா?” அவள் சொன்னதை, சத்யாவும் ஆமோதித்து அவள் சொன்னபடி வாங்கிக் கொண்டான்.

 

அவன் என்றுமே இப்படியெல்லாம் சிந்தித்ததில்லை. ஜனனியின் இப்படி அழகான எண்ணங்கள் அவனைக் கவர்ந்தன. அவற்றை ஏற்க வைத்தன, பிரம்மிக்க வைத்தன, ஏன் சிறிது ரசிக்கவும் வைத்தன என்றாலும் தவறில்லை.

 

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!