18. விஷ்வ மித்ரன்

5
(3)

 விஷ்வ மித்ரன்

💙 அத்தியாயம் 18

 

கடு கடுவென இருந்த வைஷு, எதிரில் கூர்மையாய் தன்னைப் பார்த்தவாறு நிற்கும் விஷ்வாவைக் கண்டு திரு திருவென விழிக்கத் துவங்கினாள். தான் பேசியதை அவன் கேட்டு விட்டானோ என்று நினைக்கும் போது இதயம் ரயிலாக தடதடத்து ஓட ஆரம்பிக்க, கைகளைப் பிசைந்து கொண்டு அவனைப் பயத்துடன் பார்த்தாள் வைஷ்ணவி.

 

“என் மூஞ்சில படமா ஓடுது? அப்படி பார்த்துட்டே இருக்க. யாரு அந்த சீன் பார்ட்டி?” என்று அவன் வினவ, அவனுக்கு எதுவும் சரியாக கேட்கவில்லை என்பதில் இத்தனை நேரம் அடக்கிக் கொண்டிருந்த மூச்சு சீராக வெளிப்பட “ஊஃப்ப்”என இதழ் குவித்து ஊதினாள் அவள்.

 

“அவன் ஒரு பிராடு பய. என்னை ரொம்பவே இன்ஸல்ட் பண்ணிட்டான். மனசு ஆறவே மாட்டேங்குது. அதான் அவனைத் திட்டிட்டு இருக்கேன்” என அப்பாவியாக அவனிடமே அவனைப் பற்றி புகழ் பாட,

 

“அப்படியா உன்னையே சீண்டிட்டானா? பாவம் தான் நீயும்” என சோக ராகம் இசைத்தான் விஷ்வா.

 

பாவமாக முகத்தை விட்டுக் கொண்டவளோ “ஆமா விஷ்வா. என் கையில சிக்கினா சும்மா விட மாட்டேன். என்ன டா என்னைப் பாத்தா லூசு மாதிரி இருக்கா? அடிச்சேன் பாரு கன்னம் பன்னு மாதிரி வீங்கிரும்னு எச்சரிச்சு விட்றுவேன். இனி இந்த வைஷுவ நெருங்கவே அந்த ஹிட்லர் பயப்படனும்” என கைகளை முறுக்கிக் கொண்டு பேசினாள், ரவுடி ரங்கம்மா போல்!

 

“யம்மா இவ்வளவு கோபம் வருமா உனக்கு? நான் சிக்கினாலும் என்னையும் இப்படித்தான் வறுத்தெடுப்ப போல இருக்கே” பயந்தது போல் கேட்டான் அவன்.

 

‘நான் இவ்வளவு நேரம் உப்பு, மிளகு, காரம் எல்லாம் போட்டு வறுத்துட்டு இருக்குறதே உன்னத் தானே மக்கு விஷ்வா’ என உள்ளுக்குள் வில்லச் சிரிப்பு சிரித்துக் கொண்டவள், வெளியில் “அச்சச்சோ ஒரு பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதீங்க. நீங்க சொக்கத் தங்கம். உங்களைத் திட்ட எனக்கு மனசு வருமா?” என்று இந்த பூனையும் பால் குடிக்குமா ரேஞ்சுக்கு ரியாக்ஷன் கொடுத்தாள்.

 

“அந்த சொக்கத் தங்கத்தைத் தானே இவ்வளவு நேரம் விம் போட்டு துலக்கிட்டு இருக்க. எருமைக்கடா அப்புறம் ஹிட்லர்னு எல்லாம்” என்று கடினமான குரலில் சொன்னான் விஷ்வா.

 

அவனைப் பார்த்து நெஞ்சைப் பிடித்துக் கொண்ட வைஷு “வகையா மாட்டுனடி. கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமே. இப்போ என்ன பண்ணுறது?” என்று திருட்டு முழி முழித்தாள்.

 

பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு “இன்னைக்கு டோலி” என பேச ஆரம்பித்த வைஷுவின் வாய் கப்பென மூடிக் கொண்டது, “விஷு” என்றவாறு வந்த அக்ஷராவைக் கண்டு.

 

“சொல்லுடி. பானிப்பூரி சாப்பிட்டு முடிச்சிட்டியா?” என்று அவன் கேட்க, “அது பத்தலடா. எனக்கே இப்படி கஞ்சத்தனம் பார்த்து வாங்கித் தரது நல்லாவா இருக்கு?” என அவன் தோளில் அடிக்க,

 

“வயிறா வானமா? அது கொஞ்சமாடி” என முறைத்துப் பார்த்தான் அண்ணன்காரன்.

 

இருவரது உரையாடலைக் கேட்க விரும்பாமல் மறுபுறம் திரும்பி நின்றாள் வைஷ்ணவி. 

 

“ஹே விஷு! வாட் அ சப்ரைஸ்” என மலர்ந்த முகமாக வந்த மித்ரன், அக்ஷுவை கண்டு “அட அக்ஷு” என சிரிக்க, இருவரும் அவனை அனல் கக்க முறைத்தார்கள் என்றால் வைஷ்ணவியோ அப்பெண் அக்ஷரா என்பதை அறிந்து உறைந்து போய் சிலையானாள்.

 

அவளின் அதிர்ந்த தோற்றம் விஷ்வாவுக்கு சிரிப்பை வரவழைத்தாலும், அவள் தன்னை எப்படி நினைத்திருக்கிறாள் என்பது அறிந்து மறுபுறம் கொதித்துப் போகலானான். ஃபோனில் அவளை டீஸ் பண்ணியதே அவளது இந்த எண்ணத்திற்குக் காரணம் என்பதை அவன் மறந்தும் தான் போனான்.

 

இருவரும் முறைப்பதைப் பார்த்த மித்ரன் “என்னப்பா வந்த உடனே லிட்டர் லிட்டரா முறைப்பை அள்ளித் தரீங்க?” என்று கேட்க, “லிட்டர் லிட்டர் எல்லாம் வேணாம்னா கிலோ கிலோவா தரட்டுமா?” என அக்ஷு குதர்க்கமாக வினவ,

 

“ஆமா குட்டிம்மா. பாத்தியா இவனுக்குள்ள குசும்ப. எல்லாம் பண்ணிட்டு நக்கல் வேற வேண்டிக் கிடக்கு” என முறைப்புடன் சொன்னான் விஷ்வா.

 

ஆக! அத்தனை விடயமும் அக்ஷராவுக்குத் தெரிந்து விட்டது என்று புரிந்தவனோ அவளைப் பார்க்க, அவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள். விஷ்வா வைஷ்ணவிக்கு தன்னிடம் வருமாறு கண்ணைக் காட்ட, அவளோ என்ன என்பதாக சைகையால் கேட்டாள்.

 

அக்ஷராவுக்கு அப்போது தான் வைஷ்ணவி நிற்பது தெரிய அவள் யாரென யூகித்தவளோ அவளை நன்றாகப் பார்த்தாள். எவ்வித செயற்கை அலங்காரங்களும் இன்றி எளிமையாக, பேரழகியாய்த் தெரிந்தவளை “அண்ணி” என கத்தியவாறு தாவி அனைத்து கொண்டாள்.

 

அவளது திடீர் அணைப்பில் வியந்தாலும் “நீங்க தான் என் அண்ணியா?” என புன்னகைத்தபடி கேட்கலானாள் வைஷுவும்.

 

அவளை விட்டும் விலகி “நீங்க செம்ம அழகு அண்ணி. விஷ்வா லக்கி தான்” என்று கண்ணடிக்க நெளிந்தாள் வைஷ்ணவி.

 

“ஏய் கேடி…! வந்த உடனே உன் சேட்டை ஆரம்பிச்சிட்டியா?” என மித்ரன் சிரிக்க, “இல்லடா இவளுக்கு வைஷு அழகுல பொறாமை அதான் பொங்குறா” என கிசுகிசுத்தான் விஷ்வா.

 

அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளைப் பார்த்து “தட்ஸ் கரெக்ட்! கண்ணு வைக்காத அக்ஷு. என் தங்கச்சி பாவம்” என விஷ்வாவுடன் ஹைஃபை கொடுத்தான் மித்து.

 

“வேணாம் என் கிட்ட வாங்கி கட்டிக்காதீங்க” என சண்டைக் கோழியாய் சிலிர்த்தவள், “அண்ணி பாருங்களேன்! இந்த தடிப் பயலுங்க ரெண்டும் சேர்ந்தாலே என்னை பாடாப் படுத்தி எடுப்பானுங்க. இனிமேல் என் கூட கூட்டு சேர்ந்துக்கறீங்களா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து இவனுங்கள வச்சு செய்யலாம்” என்று வைஷ்ணவியிடம் கை நீட்டினாள்.

 

வைஷு “சரிங்க அக்ஷு” என அவள் கை மேல் தன் கையை வைக்க, “அண்ணி! நான் உன் வயசு தான். சோ இந்த ங்க எல்லாம் வேண்டாமே. மரியாதை மனசுல இருந்தா போதும். வா போனே பேசு” என்று அக்ஷு தன் செல்ல அண்ணியிடம் கன்டிஷன் போட,

 

அக்ஷுவை மிகவும் பிடித்து போய்விட “ஓகே டன்” என ஒத்துக் கொண்டாள் அக்ஷுவின் அண்ணன் மனைவி!

 

இருவரின் பிணைப்பைப் பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் “இரண்டு பேரும் சேர்ந்ததால நாங்க பயந்துட்டோம்னு நினைக்காத” என்ற மித்ரன் அக்ஷுவைப் பார்த்தான்.

 

அவளை சமாதானம் செய்ய மனம் தவித்துக் கொண்டிருந்தது. அதைப் புரிந்து கொண்ட நண்பன், வைஷுவை அழைக்க அவளோ பார்வையாலேயே மறுப்பை வெளியிட்டாள்.

 

கோபம் எல்லை மீற அதை கட்டுக்குள் கொண்டு வந்தவனோ “வைஷு வா” என அவள் கையை பிடித்தான்.

 

“அடடா! என் அண்ணாவா இது?” என நகைத்த அக்ஷராவை மித்து இழுத்துக் கொண்டு மறுபக்கமாக நடக்க, வைஷுவின் கைப்பற்றி வேறு பக்கமாக சென்றான் விஷு.

 

“என்ன பண்ணுற விடு?” என கையை உருவப் போனவளைத் தீயாக முறைத்து, “கம்முனு இரு. இல்லனா நடக்கிறதே வேற” என கத்தியவனின் குரலில் தனது இயலாமையை நினைத்து நொந்தவாறே அவனோடு சென்றாள்.

 

அவனின் பிடியிலிருந்து விலக எத்தனித்த வைஷ்ணவியின் செயலில் ஏனென்றே தெரியாமல் ஆத்திரம் தலைக்கு ஏற அவள் கையை அழுத்தமாக பிடித்தான் முரடனாக!

 

எப்பொழுதும் மென்மையாகவே இருக்கும் விஷ்வா தன்னையே அறியாமல் அவளிடம் மட்டும் வன்மையாக மாறினான்.

 

“ப்ளீஸ் விடுங்க வலிக்குது” என்ற அவளின் கலங்கிய முகத்தில் எதைக் கண்டானோ சட்டென பிடியை விட, அவள் கை கன்றிச் சிவந்திருப்பதைக் கண்டான்.

 

அவளோ கலங்கிய கண்களுடனும், வலியுடனும் அவனை நோக்க, தன்னை நொந்து கொண்டான் அவனும்.

 

விஷ்வா “நான் அக்ஷு கூட போட்ட ஃபோட்டோவைப் பார்த்து நீ என்ன நெனச்ச?” என்று கேட்க, முதலில் மருண்டு விழித்தவள் பின் தன்னைச் சுதாகரித்துக் கொள்ள நேற்று ஃபோனில் தன்னைத் திட்டியது நினைவுக்கு வந்தது.

 

“எனக்கு அது அக்ஷரானு தெரியாது. அதான் உங்க கேர்ள் ப்ரென்ட்டுனு நினைச்சேன்” என்றவளின் குரலில் இப்போது பயமில்லை.

 

அதை ஏற்கனவே யூகித்திருந்தாலும் அவள் வாயால் சொல்லிக் கேட்டதில் கோபமாக வந்தது.

 

“சோ! என்னை அவ்ளோ கேவலமா நினைச்சிட்டல்ல? ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுறேன்னு வாக்கு கொடுத்துட்டு, இன்னொரு பொண்ணு பின்னாடி போறவன்னு நினைச்சுட்ட தானே” அவன் வார்த்தைகளில் ஒரு வித வலி நிறைந்திருந்தது.

 

“அய்யய்யோ” என்று பதறியவள், “அப்படி இல்லைன்னு சொல்லவும் முடியாது. ஆனால் நான் அப்படி நினைக்க நீங்க தான் காரணம்” என்று சொன்னவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தான் விஷ்வா.

 

“வாட்?” எனக் குழம்பிப் போய் “ஏய் லோக்கல் ரவுடி” என்று அழைக்க அவளுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது.

 

“நான் லோக்கல் ரவுடியா? ஏன் சொல்ல மாட்டே? அன்னைக்கு குடிகாரின்னு சொன்னப்போ தலையில் நாலு கொட்டி இருக்கனும். அப்பறம் திருடினு சொன்ன வாயை இழுத்து வச்சு தைச்சு இருக்கனும். இரண்டையும் செய்யாமல் உன்னை சும்மா விட்டு வச்சிருக்கேன்ல. நீ இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ” என்று படபடவென பொரிந்தாள் வைஷு.

 

 “எப்பா! ஒரு வார்த்தை சொன்னதுக்கு இவ்வளவு பேச்சா? பேசுற உனக்கு வாய் வலிக்குதோ இல்லையோ கேட்குற எனக்கு காது வலிக்குது” என காதைத் தடவி வலிப்பது போல் முகம் சுருக்கினான்.

 

“பண்ணுற எல்லாம் பண்ணிட்டு இப்போ குத்துதே குடையுதேன்னா நான் என்ன பண்ணுறது? என் வாய கிளறி விட்டது நீங்க தான். அப்போ அதோட பின்விளைவுகளை நீங்க அனுபவிச்சு தான் ஆகணும்” என முறைத்தவள், “விஷ்வா உண்மைய சொல்லுங்க. நிஜமாவே என்னைப் பார்க்கும் போது ரவுடி மாதிரி இருக்கா” அவனிடமே கேள்வி கேட்டாள் சிறு குழந்தை போல்.

 

அவளின் பாவனையில் சிரிப்பு எட்டிப் பார்க்க, மேலிருந்து கீழாக ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான் அவன். அவளுக்கோ ஏனென்றே தெரியாமல் சிறு வெட்கம் துளிர்த்திட “பார்த்தது போதும் ஒழுங்கா சொல்லுங்க” என்றாள் பிடிவாதக் குரலில்.

 

“உண்மைய சொல்லவா? பொய் சொல்லவா?” என்று அவன் கேட்க, “பெரிய அரிச்சந்திரன் மகன். உண்மையை மட்டுமே பேசுறவன் மாதிரி பேச்சு” என முணுமுணுத்தவள் “உண்மையே சொல்லுங்க” என்றாள்.

 

“அந்த வானத்துல விண்மீன்களுக்கு மத்தியில் ஜொலிக்குற நிலவை மாதிரி அவ்ளோ அழகா இருக்க” மன்மதனையும் வீழ்த்தும் அந்த நவீன ரதியின் அதீத அழகில் முரட்டு விஷ்வாவுக்குள் இருக்கும் காதல் கவிஞனும் வெளிவரலானான்.

 

அவன் ரசனைப் பார்வையும், வார்த்தைகளும் அவளுள் ஏதோ நுண்ணிய உணர்வுகளை ஊடுறுவச் செய்ய ஒரு வித அவஸ்தையில் நெளிந்தாள் பெண்.

 

அவளைப் பார்த்து உதட்டுக்குள் சிரித்தவன் “பட் இது பொய்! இப்போ தான் உண்மையை சொல்லப் போறேன்” என்க காண்டாகிப் போய், “யப்பா தெய்வமே! ஒரு மெய்யையும் சொல்ல வேண்டாம். நான் எப்படியோ இருந்துட்டு போறேன்” என்றாள் வைஷ்ணவி.

 

அவளது கடுப்பில் சுவாரஸ்யம் கூடிப் போனது அந்தக் குறும்பனுக்கு.

 

“அழகா இதழ் விரிச்சு மலர்கின்ற ரோஜா” என அவன் சொல்ல ஆரம்பிக்கும் போது, “ரோஜா மல்லிகை தாமரைனு சொன்னீங்க, சாவடிச்சிடுவேன். கடுப்ப கிளப்பாம இருங்க. நீங்களும் உங்க வர்ணனையும்” காய்ந்தாள் மாது.

 

“ஓகே ஓகே கூல்” என அழகாக இதழ் பிரித்துச்சிரித்தான் காளை. அரிசிப் பற்கள் தெரிய அவனில் பூத்த புன்னகையில் இத்தனை நேர கடுப்பு மறைந்து அவள் உதட்டிலும் குறுநகை அரும்பியது.

 

விஷ்வா “நீ சிரிக்கும்போது அழகா இருக்க. ஆனா உன்ன கடுப்பாக்கி பாக்குறது தான் எனக்கு பிடிச்சிருக்கு” உண்மையை மறைக்காமல் சொன்னவனை ஏறிட்டு, “இருக்கும் இருக்கும்… இனிமேல் கடுப்பாக்கினா, எலும்பை உடைச்சு அடுப்புல வச்சுருவேன் ஜாக்கிரதை” என இடுப்பில் கை வைத்து முறைத்துப் பார்த்தாள் அவள்.

 

‘முறைப்பழகி’ என உள்ளுக்குள் கொஞ்சிக் கொண்டு, “உன்னை மித்து தங்கச்சின்னு சொல்லவே முடியாது. ஏன்னா நீ அவனுக்கு எதிரா இருக்க. அவன் ரொம்ப அமைதியான சுபாவம்! ஆனா நீ பட்டாசு மாதிரி படபடன்னு வெடிக்கிற” என்றவனுக்கு மித்ரனின் நினைவில் முகம் மலர்ந்தது.

 

அவனையே இமை சிமிட்டாமல் பார்த்தவளைக் கண்டு அவன் புருவம் தூக்க, “உங்கள பற்றி பேசும் போது அண்ணாவும் இப்படித்தான். குரல் சாஃப்ட்டா மாறி, முகம் எல்லாம் பிரைட்டா மாறிடும்” என்றாள் வைஷு.

 

தலை கோதிச் சிரித்தவன் “இப்போ எங்கிருந்து மரியாதை எல்லாம் வந்துச்சு. உங்களனு சொல்லுற? அப்போ எத்தனை பேர் வச்சு திட்டுன” என்று அவன் கேட்க.

 

“சாரி விஷ்வா! நான் அப்படி நினைச்சது தப்பு தான். நான் அக்ஷுவ கண்டதே இல்லல்ல” என வருந்தி விட்டு “நான் ஃபர்ஸ்ட் உங்களை கண்டப்போ கொஞ்சம் அதிகமாவே பேசிட்டேன். அதுக்கு சாரி கேட்க தான் உங்க நம்பர் எடுத்து கால் பண்ணேன். ஆனா நீங்க வேற யாரோன்னு நினைச்சு அவங்க கிட்ட என்ன பத்தி பேசுனீங்க” என்றவளில் முன்பு இருந்த வருத்தம் மாறி இப்பொழுது குற்றம் சாற்றும் குரல் அவளிடம்.

 

“நீ யாரென்று உன் வாய்ஸ் கேட்டவுடனே தெரிஞ்சுகிட்டேன். உன்னை காண்டாக்கத்தான் அப்படி பேசினேன். க்ளப்புக்கு போனதும் இல்லை வைஷுனு ஒருத்திய சந்தித்ததும் இல்லை. நீ சாரி கேட்க வரேன்னு தெரியாம அப்படி பேசிட்டேன்” என்று உண்மையை விளக்கினான்.

 

அவன் தன்னை அடையாளம் கண்டு கொண்டதில் மனம் தெளிந்தவள் “ராட்சசா! உன்ன விட மாட்டேன். என்னையா காண்டாக்குற? இனிமேல் இப்படி பண்ணுவியா” கைப்பையால் அவனை சரமாரியாக அடித்தவளுக்கு மரியாதை தூரப் பறந்தது.

 

“அய்யோ விட்று டி. மீ பாவம்” என்று அலறினான் அவன்.

 

அடித்து ஓய்ந்தவளைப் பார்த்து “இனிமேல் நாம இப்படி அடிச்சுக்காம ஒருத்தர பற்றி ஒருத்தர் புரிஞ்சுக்குவோம்.

 மனசு விட்டு பேசினால் தான் நமக்குள்ள ஒரு புரிதலும் நம்பிக்கையும் வரும்” என்றான்.

 

விஷ்வாவின் கூற்றை ஆமோதித்து தலையாட்டி “அப்பாடா! இனிமேல் என்னைக் கடுப்பாக்க மாட்டான்” என மனதுக்குள் பெருமூச்சு விட்டாள் பெண்ணவள்.

 

“அப்படியெல்லாம் தப்பு கணக்கு போடக் கூடாது டார்லி! புரிஞ்சுக்க வேண்டும் என்று பேசிப் பேசியே இருந்தா போரடிக்கும் இல்லையா. அதனால நான் உன்னை கடுப்பாக்க, நீ என்ன முறைக்க, அப்படி இப்படின்னு குட்டி குட்டி சண்டை எல்லாம் போட்டுக்கலாம். ஆனா ரொம்ப நேரத்துக்கு இழுத்து வச்சுக்காம உடனே சமாதானமும் ஆயிடனும்” அவள் மனதில் நினைத்ததற்கு பதில் சொன்னான் விஷு.

 

அவனை முறைக்க முயன்று தோற்றுப் போய் அவன் பேச்சைப் புரிந்து கொண்டு சிரிப்புடனே, “ஓகே விஷு” என ஒத்துக் கொண்டாள் வைஷு.

………………

 

தன்னை இழுத்துக் கொண்டு வந்தவனைப் பார்வையால் எரித்துக் கொண்டு கையை உதறி விட்டாள் அக்ஷரா.

 

அவனோ அவளைப் பாவமாகப் பார்க்க, “தயவு செஞ்சு இப்படி பாவமா மட்டும் பார்க்காத” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைக்க,

 

“அப்போ ரொமான்டிக்கா பார்க்கவா?” கண்ணடித்துக் கேட்டான் அருள் மித்ரன்.

 

“வேண்டாம்! கொலை வெறியில இருக்கேன். கண்ணடிச்சா, அந்த கண்ணை நோண்டி காக்காக்கு போட்றுவேன்” பாப்கார்ன் போலத்தான் வெடித்துச் சிதறலானாள் அவளும்.

 

“அண்ணனுக்கு தப்பாத தங்கச்சி. அப்படியே அவனை மாதிரி கோவக்காரி. பாரேன் மூக்கு செவ செவன்னு சிவந்து போய் இருக்கு. அதை அப்படியே கிள்ளி விடனும் போல இருக்கு” என பேச்சுடன் நிறுத்திக் கொள்ளாது, அவள் மூக்கைக் கிள்ளி எரிகிற நெருப்பில் எண்ணையை அள்ளி ஊற்றினான்.

 

மூக்கில் பதிந்த அவன் கையைப் பற்றி எதிர்பாராத விதமாக அதைக் கடித்து வைத்தாள்.

 

“ஆவ் வலிக்குது டி அணில் குஞ்சு” என கையை இழுத்துக் கொண்டு, “அம்முலு குட்டி! என் பட்டுல்ல. உன் கோபம் போகணும்னா என்ன பண்ணனும்னு சொல்லு டி தங்கம்” என கெஞ்சலும் கொஞ்சலமாக வினவினான் மித்து.

 

“இதெல்லாம் நீ அம்மா சொன்னத பெரிய தியாகச் செம்மல் மாதிரி கேட்டுட்டு, நம்மள விட்டு போகும் போது யோசிச்சு இருக்கணும். விஷுக்கு அம்மா இருக்கனும்னு போனது சரிதான். ஆனால் நீ இல்லாம அவன் எவ்ளோ கஷ்டப்பட்டான்னு உனக்கு தெரியாதுடா! அம்மா இல்லனா கூட அவன் அந்த அளவுக்கு ஃபீல் பண்ணிக்க மாட்டான். கலகலன்னு இருந்தவன் வெளியில இரும்பா இறுக்கிப் போனான். ஆனால் உள்ளுக்குள்ள கலங்கி போய் நின்னான். நைட் உன் போட்டோவை தடவிட்டு ‘ஏன் மாப்ள என்ன விட்டு போன? செத்துடலாம் போல இருக்குடா. ஆனாலும் நீ என்னைத் தேடி வருவங்குற நம்பிக்கையில ஜடமா காத்துட்டு இருக்கேன்னு’ சொல்லி அழுதான்” அக்காட்சியை இப்பொழுது கண்டது போல் அவள் கண்கள் கலங்கின.

 

இதைக் கேட்டு இதயமே வெடித்து விடும் போலிருந்தது விஷுவின் நண்பனுக்கு.

 

மித்து அவள் கைகளை இறுகப்பற்றிக் கொள்ள, அக்ஷு தொடர்ந்தாள்.

 

“இதெல்லாம் உன்னை கஷ்டப்படுத்தவோ குத்திக் காட்டவோ சொல்லல அருள். இத்தனை நாள் என் மனசுக்குள்ள பூட்டி வைச்சிருந்தத உன் கிட்ட திறந்து சொல்லுறேன்” என்றாள்.

 

“எனக்கு தெரியும் டா நீ எப்போவுமே என்ன கஷ்டப்படுத்த மாட்டேனு. நானே உனக்கு கஷ்டத்தை தந்தாலும்” அவளை காதலுடன் பார்த்தான் அக்ஷர மித்ரன்.

 

“நீ இல்லாம நானும் கூட எவ்வளவு வலிய அனுபவித்தாலும் விஷுவோட ஒதுக்கமும் வேதனையும் என்ன அதை விட பாதிச்சிருச்சு. அப்படி இருக்கும் போது ஒரு நாள் அவன் குடிச்சுட்டு வந்தான்” எனும் போதே “வாட்? விஷு குடிச்சானா” என இடைமறித்தான் அவன்.

 

அக்ஷரா “ஆமா. அவன எப்படியோ ரூமுக்கு கூட்டி போனேன். அவன் முகத்துல ஒரு பிரகாசமும் கூடவே வருத்தமும் இருந்துச்சு. ஆறு மாசம் கழிச்சு உன்ன அவன் கண்டது தான் அந்த பிரகாசத்துக்கு காரணம்னு அவன் போதையில் உளறுனதுல புரிஞ்சுது. அவன் வாயாலே உன்னை துரோகின்னு சொன்னது தான் அவனோட வருத்தத்துக்கு காரணம்! உன்னை காயப்படுத்தினதுல அவனே அவனை வெறுத்துத்தான் குடிச்சிருக்கான்” தன் மன பாரத்தை தன்னவனிடம் கொட்டி தீர்த்த அக்ஷராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

அவள் சொன்னதை கேட்டு சிலையென சமைந்து போய் நின்றவனின் கண்களில் ஒரு துளி நீர் அக்ஷுவின் கரத்தை நினைத்திட, “அருள்” பதறிப் போய் அவன் கண்ணீரை துடைத்து விட்டாள் காரிகை.

 

“வேண்டாம் அம்முலு! உன்னையும் விஷுவையும் எவ்வளவு கஷ்டப்படுத்திட்டேன். அம்மா சொன்னத கேட்ட அதிர்ச்சியில் இதெல்லாம் யோசிக்காம போயிட்டேனே. குடிக்கக் கூடாது என்று எனக்கு எச்சரித்தவனையே நான் குடிக்க வச்சிட்டேனே” அவள் கைகளைப் பற்றி அவனுக்கு அடித்துக் கொண்டான் அருள்.

 

“அருள்! காம் டவுன் ப்ளீஸ் டா. நீ நல்லதுக்கு தானே போன. தப்பான எண்ணம் எதுவும் உன் மனசுல இல்லையே” அவனை சமாதானம் செய்ய முயன்றாள் அவள். அவளது சமாதானம் அவன் செவிகளை எட்டவில்லை.

 

“இல்லடி தப்பு பண்ணிட்டேன். என் மாப்ளய காயப்படுத்திட்டேன். அவன் சிரிப்புக்கு மட்டுமே காரணமா இருக்கணும்னு நினைச்சேன், ஆனா அவன் கண்ணீருக்கு இந்த மித்து காரணமாயிட்டேன்” என்று பிதற்ற அவன் பின்னால் நின்றவனைப் பார்த்து கண்களை அகல விரித்தாள் அக்ஷு.

 

“நான் பிறந்திருக்கவே கூடாது! அப்படியே பிறந்திருந்தாலும் விஷுவ பார்த்திருக்கவே கூடாது. அவன் கூட ப்ரெண்டாகி இருக்கவே கூடாது” என்று அழுகையூடே புலம்பிய மித்ரனின் முன் வந்து, அவனது ஷர்ட் காலரைப் பற்றியிருந்தான் விஷ்வா, வெறி கொண்ட வேங்கையாக!

 

“என்னடா சொன்ன? என்ன சொன்ன? நீ என்னைப் பார்த்து இருக்க கூடாதா? என்னை பிரண்டா ஏத்துக்கிட்டு இருந்திருக்க கூடாதா? சொல்லு டா” அவனைக் கோபமாக உலுக்கினான் நண்பன்.

 

பேச்சற்றுப் போய் அவனின் கோப முகத்தையே கண்கலங்க பார்த்திருந்தான் மித்ரன். அஷுவும், விஷ்வாவுடன் வந்திருந்த வைஷ்ணவியும் இவர்களது சண்டையைப் பீதியுடன் பார்த்தபடி நின்றிருந்தனர்.

 

“ஆமா டா அப்படித்தான் சொல்லுவேன். அது பொய்யே இல்ல. என்னால எல்லோருக்குமே கஷ்டம் தான்” என்று மித்ரன் தன்னை மறந்து கத்த, “டேய்ய்ய்” சீற்றம் கொண்டு சீறும் புலியாய் அவனைத் தள்ளி விட்டான் விஷ்வா.

 

“விஷு என்ன பண்ணுற?” என பதறிக் கொண்டு வந்த அக்ஷுவைப் பார்வையாலே தூர நிறுத்திய மித்ரன், “அடி டா நல்லா அடி. உன் கையால கொன்னு போடு டா. சந்தோஷமா போய் சேர்ந்திடுறேன்” என்க, “அண்ணா” என வைஷு அலற, “அரூஊள்” என்று காதையை பொத்திக் கொண்டே கதறினாள் அக்ஷரா.

 

ஆனால் நண்பனோ அவனது கன்னத்திலேயே சப்பென அறைந்திருந்தான். கன்னத்தில் கை வைத்துத் தன் விஷுவை நோக்கினான் அவனின் மித்து.

 

“அடிச்சுட்டு அணைப்பேன்னு மட்டும் ஆசைப்படாத! இனிமேல் ஒரு வார்த்தை பேசினா கொன்றுவேன் ராஸ்கல்” விரல் நீட்டி உறுமினான் விஷு.

 

“நீ இல்லாம இவ செத்துடுவா டா. நீ பூர்ணி கூட இருந்தத பாத்து அவள கல்யாணம் பண்ணி இருக்கேனு நெனச்சி இதோ இந்த கடல்ல பாயப் போனா உனக்குத் தெரியுமா? நான் மட்டும் கரெக்ட் டைம்க்கு வரலைன்னா உன் அம்முலு இன்னிக்கு உசுரோட இருந்திருக்க மாட்டா” என்று விஷ்வா வேதனையுடன் கூற,

 

மித்ரனோ அதிர்ந்து போய் தன்னவளைப் பார்த்தான். அவன் பார்வையை எதிர்கொள்ள சக்தியின்றித் தலை குனிந்து கொண்டாள் அக்ஷரா.

 

“சாரி மாப்ள! இனிமேல் உங்களை நான் கஷ்டப்படுத்துற மாதிரி நடந்துக்க மாட்டேன்” என்று மித்ரன் விஷ்வாவை ஏக்கமாகப் பார்க்க, அவனை இழுத்து அணைத்துக் கொண்டான் தோழன்.

 

“இதுவே நாம கஷ்டப்பட்டு கலங்கி நிற்கிற கடைசி தடவையா இருக்கட்டும்” என்று விட்டு “ஏய் அலுமூஞ்சி அலமேலு முதல்ல கண்ணத் துடை. இந்த ரியாக்ஷன் உன் முகரக்கட்டைக்கு செட்டே ஆகல” அக்ஷராவின் காலை வாரினான் விஷ்வா.

 

“நிம்மதியா அழக் கூட சுதந்திரம் இல்லாம இருக்கு உன்னால” பற்களை நறநறத்தாள் தங்கை!

 

“வேணா ரூம் போட்டு தரட்டுமா. நிம்மதியா நெனச்சு நெனச்சு அழு” என்று அதற்கும் கமண்ட் அடிக்க, “உன்னல்லாப் எப்படித் தான் வைஷு கட்டி மேய்க்கப் போறாளோ” கண்ணீரைத் துடைத்துச் சிரித்தாள் அக்ஷரா.

 

வைஷ்ணவி “மாடு தானே நான் மேய்ச்சுக்குவேன்! சொல் பேச்சு கேட்கலைனா வாயிலேயே சூடு போட்றுவேன்” விஷுவை நக்கலாக பார்க்க, “ராங்கி! என் மாப்ளக்கு சூடு போடுவியா?” மித்ரன் வரிந்து கட்டிக் கொண்டு வந்தான்.

 

“இந்த வளர்ந்து கெட்டவனுக்கு ஏதாவது சொன்னா தூக்கிப் பிடிச்சுட்டு வந்துட வேண்டியது. அடச்சை முதல்ல ரெண்டு பேரும் தள்ளி நில்லுங்க. ஒட்டிப் பிறந்த ரெட்டையர் மாதிரி” என்ற அக்ஷரா இருவரையும் பிரிக்க,

 

அவர்களோ எங்ககளைப் பிரிக்கவே முடியாது என்பது போல் நிற்க, “போடி” அவள் தலையில் தட்டினான் விஷ்வா.

 

சாக்லேட்டை பறிகொடுத்த மழலை போல் அவள் முகத்தை தூக்கிக் கொண்டு வைத்திருக்க அவளை இழுத்து தமக்கு நடுவில் நிறுத்திக் கொண்டனர் இருவரும்! தனியாக நின்ற வைஷுவைப் பார்த்த விஷ்வா “வா” என கண்களால் அழைக்க, இம்முறை மறுப்பேதும் சொல்லாமல் அவன் அருகில் சென்றாள்.

 

அக்ஷுவுக்கும் தனக்கும் நடுவில் அவளை நிற்க வைத்து தோளில் கை போட்டுக் கொண்டான் வைஷுவின் கண்ணாளன்.

 

மித்ரன் மகிழ்வுடன் தன்னவளைப் பார்த்து “ஐ லவ் யூ” என்று காதில் கிசுகிசுக்க, “ஐ….” என்றவள் அடுத்து சொல்லப் போவதைக் கேட்க ஆர்வமானான்.

 

 “ஐ கிஸ் யூ” உதடு குவித்து பறக்கும் முத்தத்தைக் கொடுத்தாள் அம்முலு.

 

“கேடி என்னை ஏமாத்திட்டல்ல” என செல்லமாக முறைத்தான் அருள்.

 

விஷ்வாவின் பக்கத்தில் நின்றவள், அவனைப் பார்க்க “நான் கை போட்டது பிடிக்கலையா?” என்று கேட்ட விஷ்வா ‌அவள் தோளில் போட்ட கையை விலக்கப் போக, சட்டென அவனது கையைப் பிடித்துத் தன் தோளில் வைஷ்ணவி போட்டுக் கொள்ள வசீகரச் சிரிப்பு அவனிதழில் தவழ்ந்தது!

 

நால்வரும் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டு ; அதிலும் தம் இணைகளை திரும்பி நோக்கியது மனம் கவர் காட்சியாக இருந்தது!

 

அதிலும் விஷ்வாவும் மித்ரனும் ஒரே சமயத்தில் எட்டி நண்பனைப் பார்க்க, விஷ்வா மித்ரனை நோக்கி பூரிப்புடன் கண் சிமிட்டிட பேரழகாய் மாறியது அந்நொடி! 

 

 

ஐ லவ் யூ சொல்லி தன்னவனின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வாளா அம்முலு….??

 

பக்கத்தில் இடம் பிடித்தது போல் விஷ்வாவின் மனதிலும் இடம் பிடிப்பாளா வைஷு…..??

 

நட்பு தொடரும்………!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!