விஷ்வ மித்ரன்
நட்பு 33
பட்சிகளின் கீச் கீச் ஒலி இன்னிசையாய் செவி தீண்டிட, மலர்ச் சரங்கள் தொங்கி மங்காத வாசத்தை வீச, பந்தல்களின் அலங்காரம் மனம் கொய்ய புது அழகுடன் விகசித்தது அந்த திருமண மண்டபம்.
வாயிலின் தொங்கிய பதாகையில் விஷ்வஜித் வெட்ஸ் வைஷ்ணவி என்றும், அருள் மித்ரன் வெட்ஸ் அக்ஷரா என்றும் அழகாக எழுதப்பட்டிருந்தது.
வருவோரை இன்முகத்துடன் வரவேற்றனர் சிவகுமார் தம்பதியும் ஹரிஷும். குறிப்பிட்ட உறவுகளையே அழைத்திருந்தனர் இரு தரப்பினரும். ரிசப்ஷனை அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாகச் செய்வதாக ஏற்பாடு.
மணப்பெண் அறையில் அமைதியாக அலங்காரங்கள் நடக்க, மணமகன் அறையோ குட்டி போர்க்களமாக மாறியிருந்தது.
“டேய் விஷு! ஆராப்பாட்டம் பண்ணாதே டா” கையில் வேஷ்டியுடன் நின்றிருந்தான் மித்ரன்.
“என்னால முடியலடா. அது வாழைப்பழ தோல் மாதிரி சர்ரு சர்ருனு வழுக்கிப் போகுது. நான் பேன்ட்டு ஷர்ட் போட்டுக்குறேன்” கட்டிலில் ஏறி போங்கு காட்டிக் கொண்டிருந்தான் விஷ்வா.
“பேன்ட் போட்டா உன்னை எல்லாரும் ஜோக்கர் மாதிரி பார்ப்பாங்க. சொன்னா கேளு நானும் எவ்வளவு நேரம் தான் இதைக் கையில் வெச்சுட்டு சுத்துறது?”
“வெச்சிருக்க கஷ்டம்னா அதை நீயே கட்டிக்க. என்னால கட்டிக்க முடியாது”
“நான் ஏற்கனவே கட்டித் தான் இருக்கேன். அடம்பிடிக்காம வா விஷு டைம் ஆச்சு” பாவமாகப் பார்த்தான் அவன்.
“உனக்கென்ன பழக்கம் தானே. எனக்கு அப்படியில்லை”
“பொய் சொல்லாதே ராஸ்கல். என் மம்மிக்கு திதி கொடுக்கும் போது நீயும் வேட்டி கட்டிட்டு தானே வருவ” அவன் காதைப் பிடித்துத் திருகினான்.
“அதுவும் இதுவும் ஒன்னா? அப்போ யாரும் இருக்க மாட்டாங்க. இப்போ நிறைய பொண்ணுங்க இருக்காங்க. அவிழ்ந்து விழுந்துருச்சுனா என் கற்பு போயிடும்” பயத்துடன் சொன்னவறனைக் கண்டு மற்றவன் கண்களில் சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“உன் கம்பனி ஸ்டாப்ஸ் யாராச்சும் இப்போ உன்னைப் பார்த்தாங்கனா மயக்கம் அடிச்சு விழுந்துருவாங்க. நம்ம ஹேன்ட்ஸம் அன்ட் லயன் எம்.டியா இது சின்னப் பிள்ளை மாதிரி பிஹேவ் பண்ணுறது அப்படினு” இதழோரம் புன்னகையுடன் சொன்னான் மித்து.
“என் இமேஜை டேமேஜ் பண்ணிராத. ஏதோ உனக்காக கட்டிக்குறேன். கழன்றுடுமா?”
“வேணும்னா கயிறு எடுத்து வா இறுக்கி கட்டி விடுறேன். பின்ன என்னடா சும்மா வளவளனு. பேசாம கட்டு”
“நீ திரும்பி நில்லு. பார்க்க கூடாது” என்றவனைக் கண்டு, “அடேய் உன் அலப்பறை தாங்கல. நீ பாருனு சொன்னா கூட பார்க்க மாட்டேன் போதுமா? சீக்கிரம் வேஷ்டியைக் கட்டு” என தலையலடித்துக் கொண்டு திரும்பி நின்றான்.
அவன் முன் வந்து, “எப்படி?” என கண்களால் வினவ, “சூப்பர் மாப்ள! என் கண்ணே பட்டுரும் போல” அவனுக்கு நெட்டி முறித்தான் நண்பன்.
“ஹேய் வாடா ஒரு ரீல் பண்ணலாம்” என மித்து மறுத்தும் அவன் அழைக்க, ஒத்துக் கொண்டிடவே தெரிந்த ஒருவனை அழைத்து வீடியோ எடுக்க சொன்னான் விஷு.
“இந்த டைம்ல இதெல்லாம் தேவையா விஷு?” என மித்து கேட்க, “இதெல்லாம் ஒரு மெமரி டா. இந்த நிமிஷம் திரும்பி வருமா? வரனும்னா நீ இன்னுமொரு கல்யாணம் பண்ணினால் தான் உண்டு” என்றவனை முறைத்துப் பார்த்தான்.
சன்க்ளாஸை சர்ட்டில் மாட்டிக் கொண்டு வேஷ்டியை நுனியால் பிடித்துத் தூக்கி இருவரும் ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பின் ஒரே நேரத்தில் எதிரெதிரே திரும்பி விஷ்வா மித்துவின் சர்ட்டில் இருந்த சன்ஸ்க்ளாஸையுடம், மித்ரன் விஷுவின் சர்ட்டில் மாட்டியதையும் எடுத்துத் போட்டுக் கொண்டு ஒரு ஆட்டம் போட்டு இறுதியில் தோளில் கை போட்டுக் கொண்டனர்.
வீடியோ எடுத்தவன் போனைக் கொடுத்து விட்டுச் செல்ல, “நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாரும் வந்திருக்காங்கள்ள? யாரும் மிஸ் ஆகலையே?” எனக் கேட்டான் மித்து.
“ஒருத்தன் மட்டும் உனக்கு மிஸ் ஆகி இருக்கான்னு சொன்னியே. உன் ப்ரெண்டு அர்ஜுன். அதான் அந்த குண்டுக் கன்னம் பார்ட்டி” சிறு முறைப்புடன் சொன்னான் விஷ்வா.
ஏனோ மித்துவுடன் ஒட்டிக் கொள்ளப் பார்ப்பதால் அவனைக் கண்டாலே ஆகாது விஷ்வாவிற்கு. பதினொன்றாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவன் வெளிநாடு சென்று விட்டதாக அறியக் கிடைத்தது. அதன் பின் அவனைக் காணவே இல்லை.
“எஸ் விஷு. பட் அவன் டீடேல்ஸ் கிடைக்கவே இல்லை. அதான் கூப்பிட முடியல. அவன் மட்டும் தான் மிஸ்ஸிங் இல்லையா?” சற்றே முகம் வாடியவன், “எல்லாரும் இருக்கும் போது நான் மிஸ் ஆகுவேனா டியூட்?” எனும் குரலில் திரும்ப உள்ளே நுழைந்தான் ஒருவன்.
இன்னும் அதே முகச்சாயலில் குண்டுக் கன்னங்களுடன் கோர்ட் சூட் அணிந்து வந்தவனை, “அ..அர்ஜுன் நீயா?” என்று ஆச்சரியமாகப் பார்த்தான் அருள் மித்ரன்.
“யாஹ் நானே தான். உன் கூட சின்ன வயசுல ப்ரெண்டாக ட்ரை பண்ணி விஷுவோட பாசசிவ்கு காரணமான அதே அர்ஜுன் தான். நான் எப்படி வந்தேன்னு ஓவரா யோசிக்காத. நானே சொல்லிடறேன் கல்யாண மாப்பிள்ளை!
நான் இங்கே வரக் காரணம் உன் விஷ்வா! உனக்காக என்னைத் தேடி எப்படியோ கண்டுபிடிச்சான். ஆனாலும் நான் வர முடியாதுனு சொன்னேன் மித்து. ஏன்னா நான் ஒரு கடன் பிரச்சனையில் மாட்டிக்கிட்டு இருந்தேன். ஹவுஸ் அர்ரஸ்ட் பண்ணி வெச்சிருந்தாங்க.
எனக்குத் தேவையான ஃபைவ் லேக்ஸ் பணத்தை செட்டில் பண்ணி என்னை உனக்கு காண்பிக்கனும்னு கூட்டிட்டு வந்தான். என்னை கூட்டிட்டு வர நிறைய ப்ராப்ளம்ஸை எதிர்த்தான்”
அர்ஜுன் சொன்னதைக் கேட்டு ஷாக் அடித்தது போல் நின்றான் மித்ரன். தனக்காக எவ்வளவு செய்து இருக்கின்றான். ஐந்து இலட்சம் கொடுத்து உதவினான் என்றால்?
“அதுவும் இந்த பணத்தைத் தரும் போது நான் சொன்ன தேங்க்ஸைக் கூட ஏத்துக்கல. அவனுக்கு நன்றி சொல்ல ஆசைப்பட்டா உனக்காக வேண்டிக்க சொன்னான். உனக்காக தான் எனக்கு ஹெல்ப் பண்ணுனான். இந்த அன்புக்கு ஐந்து லட்சம் இல்லை ஐயாயிரம் கோடி கொடுத்தால் கூட ஈடாகாது டா” என்றான் அர்ஜுன்.
விஷ்வாவை நோக்கியவனின் கண்களில் மெல்லிய நீர்ப்படலம்.
“விஷு எனக்காகவா? ஏன்டா?” அவனைத் தாவி அணைத்துக் கொண்டான் தோழன்.
“மாப்ள கண்ட்ரோல் யூவர் செல்ஃப். அர்ஜுன் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க முடியாமல் போச்சேனு ஃபீல் பண்ணியே. அதான் உன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன். ஆசை தீர அவன் கன்னத்தை இழுத்துப் பாரு” மித்துவை அணைத்து விடுவித்தான் விஷு.
புன்னகையுடன் விலகி தன் ஆசைப்படி அர்ஜுனின் கன்னத்தைப் பிடித்து, “அப்போ மாதிரியே கொழுக் மொழுக் என்று இருக்கே அர்ஜு” என்று கிள்ளி விட்டான் அவன்.
“நானும் கிள்ளிப் பார்க்கனும்” விஷு மறு கன்னத்தைப் பிடித்து ஆட்ட, “பக்கிங்களா! என் கன்னத்தை பரோட்டானு நினைச்சீங்களா இப்படி இழுக்குறீங்க?” கன்னத்தைப் பொத்திக் கொண்டான் அர்ஜுன்.
“பரோட்டானா இழுத்து மட்டும் இருக்க மாட்டோம். கடிச்சு சாப்பிட்டே இருப்போம்” என்றான் மித்து.
“ஆத்தே சரியான ஆளுங்க தான். ஆனாலும் எனக்கு உங்க நட்பைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியலை. ஸ்கூல் டேய்ஸ்ல எப்படி ஒட்டிக்கிட்டு இருந்தீங்களோ அப்படியே தான் இருக்கீங்க. உண்மையான நட்பு காலத்தால் கூட அழியாதுன்னு நிரூபிச்சுட்டீங்க. நான் வெளில போய் இருக்கேன்” என வெளியேறினான் அர்ஜுன்.
“பாவம்டா ஃபேமிலியை ரன் பண்ண பணம் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுறான். கம்பனில வேலைக்கு வர சொல்லவும் ஓகேனுட்டான்” வருத்தமாகச் சொன்னான் விஷ்வா.
“என்ன தான் பேசினாலும் அவன் முகத்தில் அத்தனை கவலை தெரியுதுல்ல. நீ நல்ல வேலை பண்ணி இருக்க விஷு” நண்பனைப் பாராட்டியவன், “நீ தான் அவன் பேச்சை எடுத்தாலே கோபப்படுறியே? இப்போ அது இல்லாமல் போயிடுச்சா?” என்று கேட்டான் பதிலறிய ஆவலுடன்.
“அவன் கூட ப்ரெண்ட் ஆகப் பார்த்ததுனால கோவம். அது ஒரு வித பொறாமை, பாசசிவ்னஸ் கலந்தது. அந்தக் கோபத்துக்குக் காரணம் அவனைப் பிடிக்காதது இல்லை; அவன் எனக்குப் பிடிச்ச உன்னை நேசிக்கின்றது. அந்தக் கோபத்துக்கு உன் மேல இருக்கும் பாசமும், நீ எனக்கு மட்டுமே நண்பனா இருக்கனும்கிற ஒரு வகை சுயநலமான உணர்வும் தான் காரணம்” என்றவனை உணர்வுச் சுழியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மித்து.
மேலும் தொடர்ந்தான் மற்றவன்.
“அர்ஜுனோட நிலமையைப் பார்த்து கஷ்டமா இருந்துச்சு. அதான் ஹெல்ப் பண்ணுனேன். அதுவும் உனக்காக! என்ன தான் பாசசிவ்னஸ் இருந்தாலும் அவனை எனக்குப் பிடிக்கும் டா. உன்னை அவனுக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட அவனை எனக்குப் பிடிக்காமல் போகுமா?”
“கண்டிப்பா பிடிக்கும். அதை விட பல மடங்கு எனக்கு உன்னைப் பிடிக்கும் விஷு. ஆயிரம் உறவுகள் என் வந்தாலும் அது உனக்கு நிகராகாது. அவற்றின் மொத்த அன்பையும் ஒன்று சேர்த்தாலும் உன் அன்பிற்கு ஈடாகாது மாப்ள!” விஷ்வாவின் அன்பில் தோற்றுப் போய் உருகி நின்றான் மித்து.
………………
மணமேடையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தனர் விஷ்வ மித்ரர்கள். இருவரது உள்ளமும் தம் இணையைக் காணும் வேட்கையில் அலை பாய்ந்தன.
“இன்னும் கூட்டிட்டு வரலையே மாப்ள! நம்ம நிலமை புரியாமல் இப்படி பண்ணுறாங்களே” மெல்லிய குரலில் அங்கலாய்த்தான் மித்து.
“லைஃப்ல பொறுமை முக்கியம் மச்சா! பொறுமையா இரு வருவாங்க” என தத்துவம் சொன்ன விஷ்வாவை முறைத்தான் மற்றவன்.
“போடா கொழுப்பெடுத்தவனே. இப்போ வந்துருவாங்கனு சொல்லாமல் பொறுமையா இரு எருமையா இருனு. உன் வீட்டு மாப்பிள்ளையை ரொம்பத் தான் இன்சல்ட் பண்ணுறே?”
“நானும் உன் வீட்டு மாப்பிள்ளை தான். சோ என்னையும் மரியாதையா கூப்பிடு” என்று விஷ்வா கூற, நொடித்துக் கொண்டான் மித்ரன்.
சிறிது நேரம் கழித்து, “மித்து இந்த ஐயரை எதுக்கு கூப்பிட்டாங்களோ தெரியல. ஏதேதோ சொல்லிட்டு ரொம்ப லேட் பண்ணுறார்” நண்பனின் தொடையை சுரண்டினான் விஷு.
“நல்லாத் தான் சொல்லுறார். பொறுத்தார் பூமியாள்வார் மாப்பிள்ளை. பொறுத்துக்கங்க” இப்பொழுது பொறுமை பற்றி இவன் பேச, “எனக்கே ரிபீட்டா?” என்பதாய் புருவம் தூக்கினான் நண்பன்.
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என ஐயர் சொல்ல, மித்து முகம் ஜொலிக்க ஆரம்பிக்க, “ஐயரே உங்களுக்கு ஒருமை பன்மை தெரியாதா? பொண்ணு இல்லை பொண்ணுங்க! இரண்டு மாப்பிள்ளைங்க இருக்கோமே தெரியலையா?” விஷ்வா கேட்டான் மெதுவாக.
“வாயை மூடுடா வெண்ணெய்! மணமேடைனு கூடப் பார்க்காம வாத்தியார் மாதிரி ஐயருக்கு தமிழ் வகுப்பு எடுக்குற?” விஷுவை அதட்டிய மித்து,
“தப்பைத் திருத்தினது தப்பா? இங்கே நல்லதுக்குக் காலம் இல்லை காட்!” என்றவனை மேலும் முறைத்துத் தள்ளினான்.
“முறைப் பையா அங்கே பார் உன் ஆளு வரா. நானும் என் ஆளைப் பார்க்கப் போறேன். டிஸ்டர்ப் பண்ணாத” என்றவன் சலங்கை ஒலியில் நிமிர்ந்தான்.
ஆடவர்களின் பார்வை தம் இதயக் கன்னிகளின் மீது ஏக காலத்தில் நிலைத்தன. சிவப்பு பட்டுப் பிடவையில் பின்னி விட்ட கூந்தல் மலர் அம்பாக அங்குமிங்கும் உரசி ஆட, ஆபரணங்கள் அணிந்து தோன்றிய நவியைக் கண்டு கண்ணிமைக்கவும் மறந்து போகலானான் ஜித்து.
“ப்பாஹ் நவி! என்னை முழுசா சாய்ச்சுட்ட டி” இதழுக்குள் முனகினான் காதலன்.
சிவப்பு சாரியில் கூந்தலில் பூச்சூடி அளவான மேக்அப்பில் முகத்தில் வெட்கச் சிவப்பை அப்பி வரும் அம்முலுவின் அழகில் அருளின் இதயம் புது தாளம் சேர்த்துத் துடிக்கலானது.
இருவரும் தம் துணையின் அருகில் வந்து அமர, “வாயை மூடு விஷு. கொசு போயிடப் போகுது” என எட்டி நண்பனின் காதில் கிசுகிசுத்தான் மித்து.
“என் வாய்க்குள்ளே தான் போச்சு. நீ வழிஞ்ச வழிசல்ல உன் காது வழியாக் கூட போயிருச்சு தெரியுமா?” விஷுவும் சளைக்காமல் பேசினான்.
“அம்முலு! என்னைப் பாரேன்” என தன்னவளருகே குனிந்து மித்து கூற, “எனக்கு வெட்கமா வருது அருளு” என்றாள் அவள்.
“அய்யடா அப்படியா? வெட்கப்படுறதைப் பார்க்கும் போது நிம்மதியா இருக்கு. ஏன்னா நீ எனக்கு அடிக்கும் போதெல்லாம் ஒரு பையனை லவ் பண்ணிட்டோமோனு சில சமயம் எனக்குள்ள சந்தேகம் வந்தது உண்டு” என்றவனின் இடையை அழுத்தமாகக் கிள்ளி விட்டாள் அக்ஷரா.
“உன் குசும்பு இப்போ கூட போகலைல? வீட்டுக்கு வா உனக்கு பையனா பொண்ணானு விளக்கம் தரேன்” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
இங்கு விஷ்வா தன்னவளை நோக்க, “என்ன பார்வை?” எனக் கேட்டாள் அவள்.
“கடன் கொடு கொடுனு மனசு சொல்லுது நவி. என்ன பண்ணட்டும்?” என்றிட அவளது சாரியை விட செக்கச் சிவந்தது அவள் வதனம்.
“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி. அப்படித் தானே நவிமா?”
“இ..இல்லை. பேசாம இருங்க. எல்லாரும் பார்க்குறாங்க விஷ்வா” மருண்டு விழித்தாள் மான் விழியாள்.
“யார் பார்த்தால் என்ன? நீ என் பொண்டாட்டி. நான் உன் புருஷன். சோ..?” என இன்னும் நெருங்க,
“வேணாம் விஷ் ப்ளீஸ்” அவனது கையைப் பிடித்துக் கொண்டவளைக் கண்டு கண்சிமிட்டிச் சிரிக்க, அவனைக் கண்டு புன்னகைத்தாள் வைஷ்ணவி.
மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுனா எனும் மந்திரம் தொடர, நம் நாயகர்களின் கையில் மாங்கல்யம் வழங்கப்பட்டது. பூரிப்புடன் மிளிர்ந்தன ஆடவர்களின் முகம்.
தம் துணையை நோக்கிய நாயகிகளின் விழிகளில் மினுமினுப்பு.
“ஐ லவ் யூ அம்முலு” என்ற வார்த்தையுடன் அக்ஷராவின் கழுத்தில் தாலியைக் கட்டினான் அருள் மித்ரன்.
அதே வார்த்தைகளை மனதினுள் கூறிக் கொண்டு தன்னவள் கழுத்தில் தாலி கட்டி அவளைப் பார்த்து அழகாகப் புன்னகை பூத்தான் விஷ்வஜித்.
தன் காதல் நிறைவேறிய உச்சகட்ட திருப்தியில் அக்ஷரா! கணவனாகக் கிடைத்தவனை காதல் மழையில் நனைய வைக்கக் காத்திருக்கும் வைஷ்ணவி!
இருவேறு விதமாக ஜோடிகள் திருமண பந்தத்தில் இனிதே இணைந்தன.
தன் மகனையும் மகளையும் மணக்கோலத்தில் கண்டு உச்ச மனநிறைவில் ,”உன் ஹரி இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கான் அன்னுமா” என தன்னை விட்டுச் சென்ற மனைவியிடம் ஆத்மார்த்தமாக உரையாடினார் ஹரிஷ்.
தம் பிள்ளைகள் மகிழ்வில் இருப்பதைக் கண்டு தாமும் உச்சி குளிர்ந்தனர் சிவகுமாரும், நீலவேணியும். இதில் அவர்களுக்குப் பிறக்கா விட்டாலும் மகனைப் போலவே வளர்த்த மித்ரன் மருகமனாக தமது வீட்டிற்கே வரப் போவதில் அதை விட ஒரு படி மேலாக ஆனந்தம் கொண்டனர் விஷ்வாவின் பெற்றோர்.
மித்துவை மணக்கோலத்தில் கண்டு மனமாரப் புன்னகைத்தாள், ஐந்து மாத மேடிட்ட வயிற்றுடன் கணவனோடு வந்திருந்த பூர்ணி.
ஆனால் ஒரு உள்ளம் மட்டும் இந்த சந்தோஷத்தைக் கண்டு கண்கள் கலங்க ஒரு வித கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்ததை யாரும் அறியார்..?
மீதமிருந்த சடங்குகளை நால்வரும் உவகையுடன் செய்து முடித்து சிவகுமார் தம்பதியிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
“அப்பா கிட்ட ஆசீர்வாதம் வாங்கு மாப்ள” என ஹரிஷைக் காண்பித்தான் விஷ்வா.
மித்ரனின் மனதில் ஒரு கணம் தாயின் நினைவு வந்து போனது. தன் தாயால் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தன்னை ஆசீர்வதிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் உருவெடுக்க அதை யாரும் காணாத வண்ணம் சட்டென முகபாவனையை மாற்றிக் கொண்டான்.
யார் கண்ணிற்கு தப்பினாலும் நண்பனின் கண்ணிற்கு தப்புமா என்ன? அவனது எண்ணம் விஷ்வாவுக்கும், அக்ஷுவுக்கும் கூட புரிந்தது. “ம்ம் வா அருள்” என அக்ஷரா மித்துவின் கையைப் பிடித்து தந்தையிடம் அழைத்துச் சென்றாள்.
அவரிடம் சென்று நின்றதுமே அவன் விழிகள் பெரிதாக விரிந்தன. அவனது வீட்டில் இருந்த அன்னபூர்ணியின் ஆளுயரப் புகைப்படத்தை ஹரிஷிற்கு அருகில் வைத்திருந்தான் விஷ்வா.
அதை ஒருவருமே எதிர்பார்க்கவில்லை அக்ஷுவைத் தவிர! இதை விஷுவும் அவளும் தான் யோசித்து செயற்படுத்தினர்.
தன் மனைவியுடன் சேர்ந்து ஹரிஷின் காலில் விழுந்தவனுக்கு தன், “நல்லா இரு கண்ணா! உன் அம்மா சார்பாகவும் நான் ஆசீர்வாதம் செய்யுறேன்” புகைப்படத்தில் இருந்த அன்னபூர்ணியின் கையைத் தன் கையால் தொட்டு இருவரினதும் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் ஹரிஷ்.
அவ்வாறு விஷுவும் வைஷுவும் கூட ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். மித்துவின் முகத்தில் அப்பட்டமான சந்தோஷம். தாயே நேரில் வாழ்த்தியது போன்ற உணர்வை உண்டாக்கி விட்டான் அல்லவா நண்பன்?
அவனுக்குத் தான் என்ன உணர்கின்றோம் என்றே தெரியவில்லை. தன்னுடைய விஷ்வாவின் செயலுக்கு ஆயிரம் நன்றி சொன்னாலும் போதாது.
“விஷு தாங்க்யூ டா” அவனைக் கட்டிக் கொள்ள, “இப்போ திட்ட முடியாது. சோ எதுவும் சொல்லல. இந்த தாங்க்யூ சொன்னதுக்காக உனக்கு அப்பறமா தண்டனை தரேன்” அவன் வயிற்றில் செல்லமாகக் குத்தினான் அவ்வுயிர்த் தோழன்.
இவர்களது நட்புக்கு கண் பட்டு விடக் கூடாது என்று குடும்பத்தவர்கள் நெட்டி முறிக்க, நண்பர் கூட்டமும் கூட இவ்வன்பில் நெகிழ்ந்து தான் போனது.
பந்தியில் சாப்பிட அமரும் போது கூட இருவரினதும் அலப்பறை தொடர்ந்தது. விஷ்வா நவிக்கு ஊட்ட, மித்து அக்ஷராவிற்கு ஊட்ட, மனைவிகள் கணவன்மாருக்கு ஊட்டி விட, விஷ்வா மித்ரனுக்கு ஊட்ட என்று சாப்பிடும் இடத்தையும் அமர்க்களமாக்கி இருந்தனர் நால்வரும்.
“அம்முலு சாப்பாடு நல்லா இருக்கா?” என்று மித்து கேட்க, “நேத்து சாப்பிட்ட பிரியாணியை விட கம்மி தான்” என்று வேண்டுமென்றே விஷ்வாவுக்கு கேட்டுமாறு சொல்ல,
“என்னது பிரியாணியா? என்னை விட்டுட்டு சாப்பிட்டிருக்கல்ல தீனிப் பண்டாரம்” சண்டைக்கு வந்தான் அண்ணன்காரன்.
“அப்போ உனக்கு இவன் இதுவும் வாங்கி தரலையா வைஷு?” அக்ஷரா வைஷுவிடம் வினவ, “அ..அது வந்து” அவன் தந்த முத்தம் நினைவுக்கு வர வார்த்தைகள் சதி செய்தன.
“ஓஓ அப்போ ஏதோ பிரியாணியை விட பெருசா கொடுத்திருக்கான். நான் என்னனு கேட்கல அண்ணியாரே” அக்ஷு நக்கலடிக்க, “போ அக்ஷு” அவளுக்கு அடித்தாள் வைஷ்ணவி.
“அப்படியா? அவ்வளவு ஸ்பெஷலாவா நவி இருந்துச்சு?” என விஷு அவள் காதில் கேட்க, “என்னை கொலைகாரியாக்காம இரு” மரியாதையைக் கை விட்டு பல்லைக் கடித்தாள் பெண்.
“நான் தாலி கட்டும் போது சொன்ன ஐ லவ் யூவுக்கு பதிலே சொல்லலையே நீ?” என்று கேட்டான் மித்து.
“நீ சொன்ன உடனே பதிலுக்கு சொல்லிடனுமா முடியாது போடா. எப்போ பாரு அந்த வேர்டையே பிடிச்சு மங்கி மாதிரி தொங்கிக்கிட்டு” சிலுப்பிக் கொண்டாள் அம்முலு.
“அப்போ வேணா உன் சாரியை பிடிச்சு தொங்கட்டுமா? உன்னை விட்டுப் பிரிய முடியலை டி” அவளைப் பார்வையால் வருடி கையைப் பிடிக்க,
“கண்ணை நோண்டிருவேன் டா. அப்படி பார்க்காதே” என முறைத்தாலும், அவன் பார்வையில் நாணம் குடியேறியது காரிகையின் பூமுகத்தில்.
புகுந்த வீட்டிற்கு செல்ல கார் வந்திட, “இரண்டு பேரும் வீடு மாறி போக போறோம்ல டா?” என்று விஷுவிடம் கூறினான் மித்து.
“எஸ் டா! நான் வேணா மித்து வீட்டுக்கே போயிடட்டுமா மாம்?” விஷ்வா தாயிடம் கேட்க, “என் வாயைக் கிளறாமல் இரு படவா” அவன் காதைத் திருகினார் நீலவேணி.
“பொறாமை ஃபெல்லோவ்ஸ்! எல்லாரும் நம்மளை பிரிக்கவே குறியாக இருக்காங்க மாப்ள. என்ன செய்யுறது?” வராத கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டான் விஷு.
மித்துவும் அக்ஷராவும் முதலில் செல்ல, விஷ்வா அவனது முக்கியமான வி.ஐ.பி ஆட்களுடன் கதைத்துக் கொண்டிருந்தான்.
நீலவேணியுடன் நின்றிருந்த வைஷ்ணவிக்கு மனம் நிலையின்றித் தவித்தது. சற்று முன் சாப்பிடச் செல்லும் போது மண்டபத்தில் ஆராவைக் கண்டாள் அவள். அவளது வலி நிறைந்த முகத்தில் திகைத்தவள் மீண்டும் அவளைத் தேட அங்கு அவள் இருக்கவில்லை.
இப்போது நீலவேணி மகனைத் தேட, அவனைக் காணாத வைஷு, “எங்கே போயிட்டார் விஷு? அதுக்குள்ளே காணாம போயிட்டாரே?” என்று அவனைத் தேடிச் சென்றாள்.
சிறிது தூரம் சென்றவளுக்கு “விச்சு…!!” எனும் ஆராவின் குரல் கேட்க, சடாரெனத் திரும்பினாள்.
அவள் கண்ட காட்சி நிலைகுலைய வைத்தது.
அங்கு..?
அங்கு ஆராவின் கண்ணீரைத் தன் கையால் துடைத்துக் கொண்டிருந்தான் அவளது ஆருயிர் ஜித்து. அவனது கையைப் பிடித்து அழுதாள் ஆரா.
“ஆராவோட விச்சு விஷ்வாவா? அவர் ஆராவை லவ் பண்ணுனாரா?” என்று கேட்டுக் கொண்டாள்.
“உங்க மனசுல ஆரா இருக்காளா? ஆராவோட விச்சு நீங்களா? ஏ…ஏன் ஜித்து?” மனதினுள் கதறியவள் அங்கிருந்து திரும்பி நடக்க, சற்று முன்னிருந்த ஆனந்தம் பறிபோய் அவள் இதயத்தை வேதனை நிறைக்கத் துவங்கிற்று.
நட்பு தொடரும்….!!
✒️ ஷம்லா பஸ்லி