வரதராஜனின் தீர்ப்பினைக் கேட்டு அனைத்து மக்களும் ஒன்று சேர ஆமோதித்ததும் ஒரு நிமிடம் கூட அந்த இடத்தில் நிற்க முடியாமல் ஆதிரன் தவித்தான்.
அந்த இடத்தை விட்டு உடனே எழுந்தவன் பஞ்சாயத்தின் நடுவில் மின்னல் வேகத்தில் வந்து நின்று,
“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் பஞ்சாயத்து தலைவர் நான் கொஞ்சம் பேசலாமா..?” என்று ஆதிரன் தனது கனீர் குரலால் அங்கு இருக்கும் அனைவரின் காதிலும் விழும் வண்ணம் வரதராஜனைப் பார்த்து கேட்க,
செந்தாழினிக்கு திடீரென பஞ்சாயத்து நடக்கும் இடத்தின் மத்தியில் நிற்கும் ஆதிரனைக் கண்டதும் மூச்சடைத்து விட்டது.
“அங்க நிக்கிறத பாத்தா நம்ம ஆதிரன் சார் மாதிரி இருக்கு..” என்று நன்கு கண்களைச் சுருக்கிக் கூர்ந்து பார்த்தவள் அப்படியே பயத்துடன் திரும்பி அருகிலும் சுற்றிப் பார்க்க அங்கு ஆதிரன் இருந்த இடத்தில் அவனைக் காணவில்லை.
அப்போ பஞ்சாயத்து தலைவர்கிட்ட பேசிகிட்டு இருக்கிறது அவனே தான் என்று நெஞ்சில் கை வைத்த படி திகைப்புடன் பயமும் சேர்ந்து உடல் மரத்துப் போனது போல ஸ்தம்பித்து போய் நின்றாள்.
‘ஐயையோ நிலைமை தெரியாம இந்த ஆளு ஏன் பஞ்சாயத்துக்கு நடுவுல போய் நிக்குது சரி இன்னைக்கு நான் செத்தேன் இவர் வேற ஊருக்கு புதுசு ஆச்சே ஏதாவது ஏடாகூடமா பேசி வச்சுட்டு இருந்தா பின்னுக்கு பெரிய பிரச்சினையா போயிடும்
நான் ஒரு கிறுக்கி வரும்போது விஷயத்தை சொல்லி கூட்டி வந்து இருக்கணும் அப்படி சொல்லாம விளையாட்டா அவரும் வர விளையாட்டு புத்தியுடன் தான் இருப்பாருன்னு நினைச்சு நான் ஒன்னும் சொல்லாம கூட்டி வந்தது தப்பா போச்சு..’ என்று தன்னுடைய மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள் செந்தாழினி.
அவன் அங்கு அனைவர் முன்பும் வந்து நிற்க, அங்கிருந்த மக்களுக்கு ஆதிரன் சற்று முன் அனைவரையும் புகைப்படம் எடுத்து பரீட்சையமானதால் “இவன் யார்..?” என்ற கேள்வி அங்கிருக்கும் மக்களுக்கு எழவில்லை. நடப்பதை மட்டும் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் பஞ்சாயத்து சபை உட்பட வரதராஜனுக்கும், செந்தூரனுக்கும் மட்டும் அவன் புதிதான ஆளாகவே தோன்றினான்.
“யார் இவன்..?” என்று அவனது உடலை அங்குல அங்குலமாக அளவெடுத்த செந்தூரன்.
“பார்க்க ரொம்ப அழகா இருக்கானே இந்த பொட்டச் சிறுக்கிக வேற முன்னுக்கும் பின்னுக்கும் திரிவாளுக நம்ம கெத்த நாம காப்பாத்திக்கணும் செந்தூரா..!” என்று மனதிற்குள் கணக்கிட்டான் அந்தக் காமுகன்.
அப்பொழுது பஞ்சாயத்து சபையின் தலைவர் ஒருவர்,
“என்ன தம்பி யாரு நீங்க..?”
“நான் யார் என்றது இருக்கட்டும் முதல் நீங்க இந்த பொண்ணுக்கு வழங்கின தீர்ப்பு சரியானதா..?” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அங்கிருக்கும் பஞ்சாயத்து தலைவர்களை பார்த்துக் கேட்டான்.
“தம்பி இதுதான் எங்களோட ஊர் வழக்கம் இப்படியான தப்பு செஞ்சா நாங்க இப்படித்தான் தீர்ப்பு வழங்குகிறது இதெல்லாம் கேக்குறதுக்கு நீங்க யாரு..?”
“என்னையா இது நான் ஒரு நியாயத்தை கேட்டா நீங்க யாரு நீங்க யாருன்னு கேட்டுகிட்டு இருக்கீங்களே தவிர ஒழுங்கா ஒன்னுக்கும் பதில சொல்ல காணும்..”
அதுதான் தம்பி சொன்னனே இதுதான் எங்க ஊர் பஞ்சாயத்து வழக்கம் இந்த வழக்கத்துப்படிதான் நாங்க நடத்துக்குவோம். என்னென்ன தப்புக்கு என்னென்ன தண்டனைன்னு சொல்லி இருக்கு அதன்படி தான் பஞ்சாயத்து சபை தீர்ப்பு வழங்கும் அதே மாதிரி இந்த பஞ்சாயத்துக்கு ஊர் மக்களும் கட்டுப்பட்டு நடப்பாங்க அதுதான் இந்த ஊரோட வழக்கம்..”
ஒரு கசப்பான புன்னகையை உதிர்த்துவிட்டு,
“அந்தப் பொண்ண கேட்டீங்களே இவன் தானா உன்னை கெடுத்ததுன்னு அதுக்கு அந்த பொண்ணு ஆமான்னு சொல்லுச்சா..” என்று அடுத்த கேள்விக்கனையை தொடுத்தான்.
அங்கிருந்த மக்கள் உட்பட பஞ்சாயத்து சபையும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் நின்றது.
உண்மைதானே மல்லிகா இதுவரையில் அவன் தான் என்னை இப்படி சீரழித்தான் என்று ஒரு தடவை கூட ஆமென்று ஒத்துக் கொள்ளவே இல்லையே..!
“பாத்தீங்களா ஐயா உங்களால பேச முடியல அந்த புள்ள அவன் தான் பலாத்காரம் செய்தான் என்று ஒத்துக்கொள்ளாமல் எப்படி நீங்க தீர்ப்பை சொல்லலாம் இது முறையா..?
நீங்களே யோசிச்சு பாருங்க தப்பு செய்தவன் தப்பு நான் தான் செஞ்சேன்னு வந்து சொல்றான் என்றதுக்காக, முறைப்பாடு செஞ்சவங்க அது உண்மையா பொய்யா என்று சொல்றதுக்குள்ள நீங்க எப்படி தீர்ப்ப வழங்கலாம்..? இதுவா உங்களுடைய பஞ்சாயத்து தீர்ப்பு..?” என்று நக்கலாக கேட்டவனை ஒரு நிமிடம் கண்களால் எரிக்கும் பார்வை பார்த்தார் வரதராஜன்.
“ஒரு பொண்ணுக்கு உங்க ஊர்ல அநியாயம் நடந்திருக்கு அதை தட்டிக் கேட்க ஒருவரும் இல்லை தப்ப ஆமோதிக்கிற மாதிரியும் ஊக்குவிக்கிற மாதிரியும் அதுக்கு ஒரு பஞ்சாயத்து சபை
இங்கே இருக்க யாருமே நியாயவாதியா எனக்கு தெரியல இந்த பஞ்சாயத்து சபையும் நியாயத்துக்குத் துணை போறதா தெரியல..” என்றவன்,
மல்லிகா வை திரும்பிப் பார்த்து,
“நீ என்கூட சென்னைக்கு வாமா நான் கோர்ட்ல கேஸ் போட்டு உனக்கு நியாயம் வாங்கி தாரேன் அப்படி அங்கேயும் உனக்கு நியாயம் கிடைக்கலன்னா ஹை கோர்ட்டுக்கு போடுவோம் நான் உனக்கு துணையா இருக்கேன்..” என்று மல்லிகாவை பார்த்துக் கூற,
மல்லிகாவின் கண்களுக்கோ ஆதிரன் அப்பொழுது தெய்வமாகவே தெரிந்தான்.
அவரளது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இவர் ஒருவராவது எனது மனதை புரிந்து கொண்டு பேசுகிறாரே..! என்ற உணர்வே அவளது மனதில் இருக்கும் பாரத்தை மிகவும் குறைத்தது.
ஒரு பெண் உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தப்பட்டிருக்கின்றாள் என்றால் அவளது உள்ளத்தை உணர்ந்து மனதை அறிந்து அதனை சரிப்படுத்த வேண்டியது பெற்றோர்களது கடமை.
அந்தப் பிழை எவ்வாறு நடந்தது..? எப்படி நடந்தது..? அதற்கு காரணமானவர் யார்..? என்று கண்டுபிடிக்க வேண்டியது பஞ்சாயத்து சபையில் நீதிக்கு சாட்சியாக கடவுளுக்கு சமமாய் இருக்கிற உங்களோட பொறுப்பு.
நீங்க இதெல்லாம் விட்டுட்டு தப்பு செய்தவன விட அந்தத் தப்பினால் பாதிக்கப்பட்டவள இப்படி துன்புறுத்துறீங்களே இது நியாயமா..?
இப்போ வற்புறுத்தி வன்புணர்வு செய்றவங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கலாம்ன்னு ஒரு சட்டம் வந்திருக்கு அது உங்களுக்கு தெரியுமா..?
ஒரு பெண் துன்புறுத்தப்பட்டா என்று அறிந்ததுமே அந்த ஊரில் இருக்கும் அனைத்து ஆண்களும் கொந்தளித்து அதற்கு நியாயம் வழங்க வேண்டும் ஆனால் இங்கு ஒருவரும் அவளுக்காக பேச கூட இல்லை அப்படி என்றால் இந்த ஊர்ல யாருமே ஆம்பளைகள் இல்லையா..?” என்று கேட்டதும் வரதராஜன் உட்பட அங்கிருக்கும் அனைத்து ஆண்களுக்கும் ஒன்று சேர கோபம் வந்தது.
வரதராஜன் தோளில் இருக்கும் துண்டை எடுத்து கொண்டு “டேய்..” என்று சத்தமிட்டுக் கொண்டு எழுந்து நிற்க,
அங்கிருக்கும் நாள் ஐந்து பேர் கையில் அருவாளுடன் எகிறிப் பாய்ந்து ஆதரனின் அருகில் வர செந்தாழனிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை தூக்கி வாரி போட்டது.
உடனே செந்தாழி பாய்ந்து வந்து ஆதிரனை பாதுகாக்கும் பொருட்டு அவன் முன்பு வந்து நின்றவள், வரதராஜனை பார்த்து,
“ஐயா மன்னிச்சுக்கோங்க அவர் இந்த ஊருக்கு புதுசு தெரியாம பேசிட்டாரு..”
வரதராஜன் கடும் கோபத்துடன்,
“அவர் இந்த ஊருக்குப் புதுசுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியுது ஆனா எப்படி எப்போ இந்த ஊருக்கு வந்தாரு அதை முதல் சொல்லு..”
“அதுவா ஐயா பிரகாஷ் அண்ணா கூட வேலை செய்ற கம்பெனியிலேயே இவங்களும் வேலை செய்றாங்க அந்த கம்பெனியில விடுமுறையா அதனால பிரகாஷ் அண்ணா சொல்லி இங்க வந்து இருக்காரு..”
“அதெல்லாம் இருக்கட்டும் உனக்கு பஞ்சாயத்து விதிகளை பத்தி ஒன்னும் தெரியாதா சிறு வயசுல இருந்து இந்த ஊர்ல தான் இருக்கா இங்க கடை பிடிக்கிறோம் நடைமுறையை மீறக் கூடாதுன்னு உனக்குத் தெரியாதா..?”
“தெரியும் ஐயா ஆனா..?” என்று அவள் இழுக்க,
“உன் மேல தான் பிழை ஊருக்கு புதுசா யாராவது வந்தா பஞ்சாயத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று உனக்கு தெரியாதா..?”
“தெரியும் ஆனா நைட்டு நாம வரவே ரொம்ப லேட் ஆயிட்டு காலையில அறிவிக்கலாம்னு தான் இருந்தேன் அதுக்குள்ள இப்படி பஞ்சாயத்து கூடி சில பிரச்சனைகள் வந்ததால என்னால பஞ்சாயத்துக்கு அறிவிக்க முடியல ஆனா நான் செய்தது தப்புதான் அதுக்காக இந்த பஞ்சாயத்து முன்னுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்..”
“அந்தப் பையன் இந்த ஊருக்கு புதுசு அவனுக்கு இங்கத்த நடைமுறை தெரியாது. அதனாலதான் அப்படி பேசுறான் ஆனா நீ சொல்லி இங்க கூட்டி வந்து இருக்கனும் இப்ப பாரு எல்லாரும் முன்னாடியும் அவன் எப்படி பேசுறான்னு இதெல்லாம் சரிப்பட்டு வராது இன்னைக்கே அவன அவங்க ஊருக்கு அனுப்பி வைச்சிரு..” என்று வரதராஜன் கராராக கூறிவிட்டார்.
“எங்கள பார்த்தா இங்க சொம்புல தண்ணி குடிக்க வந்தவங்க மாதிரியா தெரியுது நாங்க காலாகாலமா பின்பற்றி வருகிற பழக்கங்களை தான் இங்க தீர்ப்பா நாங்க சொல்றோம் இவரு அந்த பொண்ணு பாதிக்கப்பட்டான்னு ரொம்ப வருத்தப்படுறாரு ஏன் பொண்ணுக்கு ரொம்ப வேண்டியவரோ..?” என்று கூறியதும் கோபம் துளிர் விட வரதராஜனை பார்த்த ஆதிரன்,
“ஒரு பெண்ணுக்கு அநியாயம் நடக்க அவங்களுக்கு வேண்டியதாக வரவேண்டும் என்று அவசியம் இல்லை பெண்ண பெண்ணா மதிக்கிற ஒரு மனுஷனா இருந்தா போதும் என்று மூஞ்சில அடித்தாற் போல கூற,
செந்தூரன் பாய்ந்து வந்து ஆதிரன் சட்டை காலரை பிடித்து,
“எங்க வந்து யாருகிட்ட எப்படி பேசணும்னு தெரிஞ்சுகிட்டு தான் பேசுறியா நீ ஒத்தாள் இங்க ஒரு ஊரே இருக்கு எங்க அப்பாவை அவமானப்படுத்திட்டு இந்த ஊரை விட்டு நீ உயிரோட போயிருவியாடா கொன்னுடுவேன் கொன்னு..” என்று மிரட்ட,
ஆதரனின் சட்டை காலரை செந்தூரன் பிடித்ததும் ஆதிரனுக்கு கட்டுக்கடங்காத கோபம் எழுந்து அவனது முகத்தில் அறைவதற்கு கை ஓங்க ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருவரையும் பிரித்தெடுத்தனர்.
செந்தாழினி உடனே ஆதிரனை அவ்விடத்திலிருந்து இழுத்து சென்று பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் பூட்டிவிட்டு வெளியே வந்து,
ஐயா நான் பண்ணினது தப்புதான் யார் என்று தெரியாத அவரை இங்கு நான் பஞ்சாயத்துக்கு கூட்டி வந்திருக்கக் கூடாது அதோட பஞ்சாயத்துக்கு நான் முக்கியமா வந்தத அறிவித்திருக்கணும் என்னோட தப்பு தான் நீங்க இதுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் தாங்க நான் கட்டாயமாக ஏற்றுக் கொள்வேன்..” என்று செந்தாழினி அனைவரும் முன்பும் கேட்க,
அப்பொழுது செந்தூரனின் குறுக்கு புத்தி எதையோ யோசிக்க வரதராஜனின் அருகில் சென்று காதில் எதையோ ஓதினான்.
அப்படி எதைத்தான் வரதராஜனிடம் கூறினானோ தெரியவில்லை அவரது காது மடல்கள் கேட்ட விடயத்தில் வாயில் சிறு புன்னகை தவழ்ந்தது.