❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️
நிலவு 08
ஷாலுவை இறுக்கி அணைத்து அவளது பயத்தோடு சேர்ந்து தனது பதற்றத்தையும் மட்டுப்படுத்திய உதய் தன்னவளிடம் விரைந்து சென்றான். மயக்கத்தில் இருந்தவளின் முகத்தில் நீரை அடித்து மயக்கம் தெளிவிக்க, கண்களைக் கசக்கி எழுந்த அதியின் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஷாலுவைத் தேடினாள்.
“ரிலாக்ஸ் தியா மா! இதோ உங்க பாப்பா பத்துரமா இருக்கா” என்று ஷாலுவைக் காட்ட, “பாப்பா” என அவளைத் தாவி அணைத்துக் கொண்டாள் பாவை.
“அத்து! அழாத அத்து” அவளது கண்ணீரைத் தன் தளிர்க் கரங்களால் ஷாலு துடைக்க, அதுவோ நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. அவளது உள்ளம் அனலில் விழுந்த புழுவாகத் துடித்தது.
“முதல்ல எந்திரங்க இதயா. அழ வேணாம் ஷாலு ஃபீல் பண்ணுவா” என்று உதய் கூற, வேகமாக எழுந்தாள்.
அவனைப் பார்த்து “நீ தான் ஷாலுவைக் காப்பாற்றி இருக்க. இந்த நன்றியை என்னைக்குமே மறக்க மாட்டேன். தாங்க் யூ” என்று சொல்பவளைப் புதிதாக நோக்கினான் உதய்.
அவள் இவ்வாறு ஒட்டாமல் பேசுவது புரிய, “என்னாச்சுங்க? ஏதாவது ப்ராப்ளமா? உங்க முகத்தைப் பார்த்தாலே ஏதோ டிப்ரஷன்ல இருக்குற மாதிரி விளங்குது. அதான் ஓவர் ஷாக்ல மயங்கிட்டீங்க. எதுவானாலும் சொல்லுங்க” அக்கறையுடன் வினவினான் காதலன்.
“தயவு செஞ்சு என்னை டிஸ்டர்ப் பண்ணாத. எதுக்கு சும்மா தொன தொனன்னு கேள்வி கேட்டு குடையுற?” சற்று கோபமானாள் அதியா.
“ஓகே ஓகே. உங்க நிலமை எனக்கு புரியுதுங்க. வீட்டுக்கு போய் ரிலாக்ஸா துங்கி ரெஸ்ட் எடுங்க. தூங்கி எந்திரிச்சா சரியாகிடும்” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் அன்பு நிறைந்த ஒற்றைப் பார்வையை வீசி விட்டு ஷாலுவின் கன்னத்தையும் கிள்ளி விட்டுச் சென்றான்.
ஷாலுவை அழைத்துக் கொண்டு வீடு செல்ல, எதிர் வீட்டு கல்பனாவும் அவளது மாமியார் மல்லிகாவும் அவள் எதிரே வந்து நின்றனர்.
“அதியா” என்று கல்பனா அழைக்க, வித்தியாசமாய் அவர்களைப் பார்த்தாள் அவள். இதற்கு முன் அவளோடு ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அதே சமயம் முகம் திருப்பிச் சென்றிடவுமில்லை.
தான் உண்டு தன் குடும்பம் உண்டு வேலை உண்டு என இருக்கும் ஒற்றுமையான மாமியார் மருமகள் அவர்கள்.
“இத்தனை நாளா பேசாதவ இப்போ எதுக்கு வரானு நெனக்கிறியா? இன்னிக்கு நான் மார்கெட் போயிட்டு வரும் போது ஷாலு ஆக்சிடன்ட் ஆகப் போனதை பார்த்தேன் . எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியலை.
நீ முன்னெல்லாம் உன் அண்ணன் பொண்ணோட பாசமா அக்கறையா இருந்த. அவளை கவனமா பார்த்துக்கிட்ட. ஆனால் இப்போல்லாம் உன் கவனம் அவ மேல இல்லைனு எனக்குத் தெரியுது. இரண்டு வருஷமா உன்னைப் பார்க்குறவ நான்.
நேற்றும் ஷாலு உன் கிட்ட பசிக்குது அத்து வா’னு கூப்பிடறது எங்க வீடு வரைக்கும் கேட்கவும் எட்டிப் பார்த்தேன். நீ என்னடான்னா அதைக் காதுல கூட வாங்கிக்காம வானத்தை அண்ணாந்து பார்த்துட்டு இருக்கே” என்று நிறுத்திய மல்லிகா அதியின் முகத்தைப் பார்த்தார்.
அவளது முகத்தில் கலக்கம் சூழ்ந்திருந்ததைக் கண்டு, “இங்கே பார் அதி! நான் உன்னைக் குறை சொல்லல. ஷாலு மேல நீ உயிரையே வெச்சிருக்கனு எனக்குத் தெரியும். ஆனால் நீ அவளை கவனிக்காம விடக் காரணம் உன் வீட்டுக்கு அடிக்கடி வந்து போற உதய் தம்பினு தெரியுது. அவரைப் பார்த்தா ரொம்ப நல்ல பையனாத் தான் தெரியுறார்.
உன் மனசும் ஒரு சராசரிப் பொண்ணா அன்பு, புருஷன், குடும்பம்னு வாழ ஏங்குறது தப்பில்லை. அதே சமயம் ஷாலுவையும் நல்லா பார்த்துக்க. உன் அப்பாம்மா அவளை உன்னை நம்பி விட்டுட்டு போயிருக்காங்க. அதை மறந்துராத” என்ற மல்லிகா இன்னும் தொடரந்தார்.
“நீ கஷ்டப்படனும்னு இதைச் சொல்லல அதி! நீ ரொம்ப பாசமான பொண்ணு. எதுக்கும் பார்த்து நடந்துக்க. உனக்கு ஏதாவது ப்ராப்ளம்னா சொல்லு. கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவோம்” என்று கூறி விட்டு நடக்க அவள் கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்து விடை பெற்றாள் கல்பனா.
சிலையென சமைந்து நின்றாள் பெண்ணவள். நடைப்பிணமாக வீடு செல்ல, ஷாலு சோபாவில் உறங்கிப் போயிருந்தாள். அவளது குழந்தைத் தனம் மாறா முகத்தைப் பார்த்த அதிக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
மல்லிகா எந்த நோக்கத்தில் சொல்லி இருந்தாலும் அவரது வார்த்தைகள் அனைத்தும் உண்மையே. பிரகாஷின் பிரச்சனையை நினைத்து மனக்குழப்பத்தில் உழன்றவள் ஷாலு கவனிக்கவில்லை. இன்று வீதியில் நடந்த சம்பவமும் இதனால்தான்!
முன்பெல்லாம் ஷாலுவோடு எப்படி இருப்பாள்? ஷாலு சாப்பிடுவது என்ன என்று கேட்டு அதைச் செய்து கொடுப்பாள். அவள் சொல்லும் இடமெல்லாம் அழைத்துச் செல்வாள். அவளுக்குப் பிடித்தது எதைக் கண்டாலும் அவளுக்காக வாங்கி வைப்பாள். அவள் விளையாடும் போது மனதில் ஆனந்தத்துடன் அவளை ரசிப்பாள். ஷாலு என்ற ஒருத்தியே அவளது உலகமாக இருந்தாள்.
ஆனால்….?? ஆனால் உதய்யைச் சந்தித்த பிறகு அவளது நடவடிக்கைகள் அனைத்தும் மாறியது. பார்க் சென்றாலும் அவன் வருவானா என எதிர்பார்ப்பாள். அவனைப் பற்றியே நினைப்பாள். பிரகாஷ் பற்றிய விடயத்திலும் உதய் தன்னைத் தவறாக நினைப்பானோ என்று அச்சமே இத்தனைக்கும் காரணம்.
அவனைப் பற்றிய நினைவால் ஷாலுவை இழக்கப் போனது போல் இருந்தது அவளுக்கு. சுவரில் மாட்டப்பட்டிருந்த அண்ணன் ரமேஷின் புகைப்படத்தைப் பார்த்தாள் தங்கை.
“அண்ணா! என்னை மன்னிச்சிடு. நீ என்னை நம்பி ஒப்படைச்சிட்டு போன பொக்கிஷத்தை ஏதேதோ வீணான விஷயங்களால தொலைக்க இருந்தேன். இவ்வளவு நாளும் ஏதோ மாயைக்குள்ள சிக்கிக் கிடந்திருக்கேனு தெரியுது. ஷாலுவை மறந்ததுக்கு சாரிணா. அவள் என் உயிர். அவளை நான் பத்துரமா பார்த்துப்பேன். என் கண்ணுக்குள்ள பொத்திப் பாதுகாப்பேன். எனக்கு அவள் மட்டுமே போதும்ணா. அவளை இழந்து தான் நான் வேறு எதையும் அடையனும்னா எனக்கு அப்படிப்பட்ட எதுவும் தேவையில்லை.
உதய் மேல் எனக்கு இருந்தது பாசம் தான். நல்ல வேளை இத்தோட முடியுது. காதல் வந்திருந்தால் நான் என் பாப்பாவை இழந்திருப்பேனோ என்னவோ? இனி அவனை என் வாழ்க்கைக்குள்ள வர விட மாட்டேன்” என்று ரமேஷிடம் பேசியவளின் கண்கள் கலங்கி இருந்தன.
ஷாலுவைத் தூக்கி கட்டிலில் கிடத்தி அவளது உடையை மாற்றி விட்ட அதி அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
இங்கு தன் வீட்டில் தன் கையிலிருந்த பொம்மையைப் பார்த்துக் கொண்டிருந்தான் உதய்.
ஷாலுவுக்காக பெரிய பெண்டா பொம்மையை வாங்க கடைக்குச் சென்ற போது ஷாலு வீதியில் நின்றிருக்க அவளைக் காப்பாற்றினான் வர்ஷன். அதனை நினைக்கும் போது அவனது மனம் இப்பொழுதும் நடுங்கியது.
அவனுக்காக பாசத்தை அள்ளிக் கொட்டும் ஒரு ஜீவன் ஷாலு! அங்கிள் என்ற அவளது அழைப்பு இவனைப் பெரும் மகிழ்வில் ஆழ்த்தி விடும். பொம்மையை பேக்கிங் செய்து வைத்தவனின் இதயத்தில் வந்து தோன்றினாள், அவனது உதய நிலவானவள்.
“என்னாச்சுன்னு தெரியல இதயாவுக்கு?” என்று நினைத்தவன் கண்களை மூடி, “கடவுளே! என் பெண்டா பேபிக்கு எந்த மனக் கஷ்டம் வந்தாலும் அதை இல்லாமல் ஆக்கிடு. அவங்க எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமா வாழனும். எனக்கு அது தான் முக்கியம். அவங்களுக்குப் பதிலா அந்த கவலைகளை எனக்கு கொடுத்திடு” என தன் தேவதைக்காக மனமுருகி வேண்டினான் வேங்கை.
அவன் கேட்டதைப் போலவே அந்தக் கவலை அவனைத் தேடி வர போகிறது என்பதையோ அது அவனவளால் தான் வரப்போகிறது என்பதையோ அவன் அறியவில்லை.
நாளை அதியைப் போய் பார்க்க வேண்டும். அவளோடு பேச வேண்டும். முடிந்தளவு அவளை மனக் குழப்பத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று நினைத்து உறங்க முயன்றான். ஆனால் தூக்கம் வரவில்லை.
“அதிம்மா! ஏன் என்னைத் தூங்க விடமாட்றீங்க? நாளைக்கு ஏதோ தப்பு நடக்கப் போற மாதிரி மனசு படபடன்னு அடிச்சுக்குது. என்ன ஆகுமோ? ஒரு மாதிரி இருக்கே” என்று அவளிடம் பேசினான்.
“எனக்கு நீங்க என்னைக்கும் வேண்டும் இதயா. உங்க முகத்தை நான் எப்போவும் பார்க்கணும். உங்களுக்காக என் இதயம் துடியாத் துடிக்கணும். நான் நீங்க ஷாலு பாப்பானு மூணு பேரும் சந்தோஷமா நிம்மதியா வாழனும். நீங்க இல்லனா நான் வெறும் பிணம் தான். எனக்கு உயிரே நீங்க தான்” என்று தனக்குள் ஏதோ பிதற்றியவனை வாரி அணைத்தும் கொண்டாள் துயில் தேவதை. கண்களை மூடி அவள் நினைப்புடன் தூங்கிப் போனான் அக்காதல் பித்தன்.
அடுத்த நாளும் அழகாய் விடிந்தது. காலையில் எழுந்த அதியா உதய்யை சந்திக்க முன்னால் எவ்வாறு இருந்தாலோ அப்படியே இருக்க முயன்றாள்.
அவளையும் மீறி அவனது நினைவு வந்து கொண்டே இருந்தது. அவனை மறக்க அவள் செய்யும் பகீரதப் பிரயத்தனத்தில் தலைவலி வந்து அடிக்கடி குடைசல் கொடுத்தது. அதை மறந்தும் ஷாலுவிடம் காட்டாமல் பார்த்துக் கொண்டாள்.
அவனை ஞாபகமூட்டும் விடயங்களை ஷாலுவும் செய்து கொண்டிருந்தாள். அவளது பேச்சில் நொடிக்கொரு தரம் வர்ஷன் வருவான்.
ஆஃபீஸ் லீவ் போட்ட அதி ஷாலுவை பாலர் பாடசாலையில் வ விட்டு விட்டு பஸ் ஸ்டாண்ட்டை நோக்கி நடந்து கொண்டிருக்க, அவள் இருந்து முன்னால் வந்து நின்றான் வர்ஷன்.
அவனது முகத்தில் புன்னகை கூத்தாட “குட் மார்னிங் இதயா மேடம்!” என்று சல்யூட் வைத்தான்.
முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தாள் அவள். “ஏன் பேசாம போறீங்க? என் கூட கோபமா?” என்று கேட்டவாறு அவள் பின்னால் வந்தான் அவன்.
“நான் எதுக்கு உன் கூட கோபப்படனும்? கோபம் கொள்ளவும் ஒரு உறவு இருக்கணும். அப்படி என்ன உறவு நமக்குள்ள இருக்கு?” கோபமாகக் கேட்டாள் அவள்.
“உறவு இருக்கு. அதை நீங்களே இப்போ சொல்லிட்டீங்க” என்று கண் சிமிட்டினான் காளை.
“நான் சொன்னேனா? என்ன உளறுற?”
“கோபம் கொள்ளவும் உறவு வேண்டும் என்று சொன்னீங்க. இப்போ என் கிட்ட கோபப்படுறீங்க. சோ உங்களுக்கும் எனக்கும் நடுவுல உறவு இருக்கு. அது சாதாரணமான உறவு இல்ல. ஒரு அழகான அன்பான நெருக்கமான உறவு” குறும்பில் துடித்தன அவன் இதழ்கள்.
“சும்மா பேச்சை மாத்தாத. உனக்கு என்ன அறிவாளியா பேசுறேன்னு நினைப்பா?” என்று கேட்டவளின் இந்தக் கோபம் அவனுக்கு வித்தியாசமாகப் பட்டது.
முன்பு கோபப்பட்டாலும் அதில் உரிமை உணர்வும் நெருக்கமும் மிகுந்திருக்கும். ஆனால் இந்தக் கோபத்தில் ஒருவித வெறுப்பும் விலகலும் நிறைந்திருந்தது.
“ப்ளீஸ் அதிம்மா! இப்படி பேசாதீங்க எனக்கு ஒரு மாதிரி ஹர்ட் ஆகுது. வழக்கம் போல பேசுங்களேன்” கெஞ்சுதலுடன் மொழிந்தான் ஆணவன்.
“நீ இப்படி பேசவும் நான் தான் காரணம். உன்னை எங்கே வைக்கணுமோ அங்க வெச்சிருக்கணும். அளவுக்கு மீறி இடம் கொடுத்ததால தான் எல்லாமே எல்லை மீறிப் போச்சு” கட்டை விரலால் புருவத்தை நீவி விட்டுக் கொண்டாள் காரிகை.
அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனது மென்மையான பூப்போன்ற இதயத்தைக் காயப்படுத்தியது.
“நல்லா தானே இருந்தீங்க. திடீர்னு என்ன நடந்தது? நான் என்ன பண்ணேன்னு இப்படி கோபப்படுறீங்க? சொன்னா தானே தெரியும்” புரியாமல் கேட்டான் ஆடவன்.
“உன் கிட்ட எதையும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. உன் கூட நான் பேசின பழகுன அனைத்தையும் மறந்துரு. எனக்கு பஞ்சு மிட்டாய் வாங்கி தந்ததுக்கு பணம் எவ்ளோனு சொல்லு தரேன். தயவு செஞ்சு இனிமேலும் வழியில் வராத. நான் உன்னை மறக்கனும்னு நினைக்கிறேன்” முகம் சுளித்தாள் நிலா.
“இ… இதயா…!!” வலி சூழ்ந்த குரலில் அழைத்தான்.
அந்தக் குரலில் இருந்த வலி அவனது உள்ளத்தைத் தாக்கினாலும் அதைக் கண்டு கொள்ளாதவளாக வேகமாக நடந்தாள். இவனோ “நில்லுங்க! கொஞ்சம் நில்லுங்க” என அவள் பின்னால் வேக எட்டுக்களுடன் தொடர்ந்தான்.
ஒரு பஸ் ஸ்டாண்டில் நிறைய பேர் இருக்க, அங்கு சென்று நின்று கொண்டவளை “தியா! ப்ளீஸ் ஒரு நிமிஷம் வாங்க” என்று வேறு வழியில்லாமல் அவளது கையைப் பிடிக்க தீச்சுட்டார் போன்று கையைத் தட்டி விட்டு,
“எவ்வளவு தைரியம் இருந்தால் கையைப் பிடிப்ப?” என சீறி எழுந்தாள் பாவை. அனைவரது பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியது.
“எல்லோரும் பார்க்கிறாங்க. நீங்க அவங்க கண்ணுக்கு காட்சிப் பொருளாகிறதை நான் விரும்பல. கொஞ்சம் வாங்க” அப்பொழுதும் அவளைப் பற்றியே நினைத்தான்.
“நீ யாருன்னே எனக்குத் தெரியல. என்னைக் கூப்பிட அசிங்கமா இல்ல? யாருன்னே தெரியாத ஒருத்தியை இப்படித்தான் கூப்பிடுவியா? சும்மா சீன் க்ரியேட் பண்ண ட்ரை பண்ணாத” என்று வார்த்தைகளை அமிலமாகத் தெறித்தாள்.
“என்னைத் தெரியாதா?” பெரும் அதிர்வுடன் விழிகளை அகல விரித்து நிற்கலானான். யாரை உயிராக நினைத்தானோ அவளது வாயாலே தன்னைத் தெரியாது என்பதை கேட்ட இந்த நொடி உயிருடன் மரித்துப் போனான் உதய வர்ஷன்.
இதுவரை உணர்ந்திடாத ஒரு வேதனை உணர்வு அவனைத் தாக்க இந்த நேரத்தில் அவன் அனாதையாக உணர்ந்தான்.
“தயவு செஞ்சு இனிமேல்…” என்று ஏதோ பேச வந்த அதியைக் கை நீட்டித் தடுத்தவன்,
“இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோங்க. இனிமேல் நீங்களா என்னைத் தேடி வரும் வரைக்கும் உங்க முன்னாடி வரவே மாட்டேன். உங்களைத் தேடி இந்த வர்ஷன் வரமாட்டான். நானே உங்களை எதேர்ச்சையாக் கண்டாலும் நீங்க சொன்ன மாதிரி ‘இவங்கள யாருன்னு எனக்கு தெரியாதே’ அப்படிங்குற நினைப்போட உங்க பார்வைக்கு கூட படாத மாதிரி போயிடுவேன்.
அப்பறம் என்ன கேட்டீங்க? உங்களுக்காக செலவு செஞ்ச பணத்தை திருப்பி கொடுப்பீங்களா? உங்களுக்கு வேணா அது பணமா இருக்கலாம். எனக்கு அது அன்பு! அன்பை யாராலேயும் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அன்புக்கு விலை அன்பு மட்டும் தான்.
இத்தனை வருடமா யாருமில்லேங்குறதை பெரிசுபடுத்தாம புன்னகையோட வலம் வந்த இந்த உதய வர்ஷனை முதல் முதலா யாருமில்லாத அனாதையா உணரவெச்ச முதல் ஆள் நீங்கதான்! தாங்க் யூ சோ மச் ஃபார் திஸ். அன்ட் குட் பை” என்று கசந்த முறுவலுடன் கூறிவிட்டு திரும்பி நடந்தான்.
அவளைப் பார்க்க உள்ளம் பூரிக்க வந்தவனின் இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்து அவனை உயிரோடு கொன்ற புதைத்திருந்தாள் உதய வர்ஷனின் இதய நிலவு.
நிலவு தோன்றும்…!!
✒️ ஷம்லா பஸ்லி