44. விஷ்வ மித்ரன்

5
(2)

விஷ்வ மித்ரன் 

 

💙 நட்பு 44

 

“பூ! பூக்குட்டி” ஆபிஸில் இருந்து வந்த ரோஹன் வீடு இருளில் மூழ்கி இருப்பதைக் கண்டு தன்னவளைத் தேடி சத்தமிட்டான்.

 

“எங்கே போய்ட்டா இவ?” ஒரு கணம் அவளுக்கு என்னானதோ ஏதானதோ என்று மனம் வெடவெடத்தது.

 

அறையிலும் இல்லாததால் எதற்கும் பார்க்கலாம் என சமயலைறையை எட்டிப் பார்க்க, கீழே மயங்கி விழுந்திருந்தாள்.

 

பெருத்த அதிர்வலைகள் நெஞ்சில் ஊடுறுவ, “பூஊஊஊ” என்ற அலறலுடன் அவளருகே முட்டி போட்டு அமர்ந்தவன் தண்ணீரை முகத்தில் அடித்தான்.

 

அவளைத் தன் மடியில் படுக்க வைத்தவனோ கையில் நீரை அள்ளி முகத்தில் தேய்க்க, மெல்லமாய் இமைகளை சுருக்கி சுருக்கி விரித்தாள் பூர்ணி.

 

“ரோஹி” என அவள் அழைக்க, “போடி லூசு! ஒரு நிமிஷம் பதற வெச்சுட்டியே” என கோபமாக சொன்னவனின் குரல் உடைந்தது.

 

“என்னாச்சும்மா?” சட்டெனக் கனிந்து ஒலித்தது அவன் குரல்.

 

“மயங்கி விழுந்துட்டேன்” என்று சொன்னவள் வேகமாக விலகி அமர, “பேசிட்டு இருக்கும் போது போனா எனக்குப் பிடிக்காது” என்று கடினமாக சொல்லி அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான் ரோஹன்.

 

அவளோ கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவளைக் கட்டிலில் கிடத்தியவன் அறைக்கதவை அடைத்தான்.

 

“எதுக்கு டோர் லாக் பண்ணுன?”

 

“கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாமேன்னு தான்” கைகளை உயர்த்தி சோம்பல் விட்டவாறு அவளை நெருங்கி அமர்ந்தான்.

 

“விளையாடாத ரோஹி”

 

“இன்னும் விளையாடவே ஆரம்பிக்கலையே பேபி. அதுக்குள்ள என்ன அவசரம்?” புருவம் உயர்த்தியவனின் குரலில் இருந்த நக்கல் அவளைக் கடுப்பாக்கியது.

 

“இப்போ உனக்கு என்ன தான் வேணும்?” சற்றே கோபமாகக் கேட்டாள் பெண்.

 

“இந்தக் கேள்வி நான் உன் கிட்ட கேட்க வேண்டியது. சும்மா மயங்கி விழுந்த மாதிரி தெரியல எனக்கு. உன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரியுது” அவள் முகத்தை நுணுக்கமாக ஆராயலானான் அந்த என்ஜினீயர்.

 

“உன் என்ஜினீயர் மூளையால வேற பில்டிங் கட்ட ப்ளான் பண்ணு. அதை விட்டுட்டு என் முகத்தை ஆராய்ச்சி பண்ண வராத”

 

“காலையில் போகும் போது நல்லாத் தானே இருந்த. இப்போ திடீர்னு என்னாச்சு?” புருவத்தை நகத்தால் கீறினான் அவன்.

 

“நான் நல்லா இருந்தால் என்ன? இல்லன்னா உனக்கு என்ன? என்னை நல்லா வெச்சுப் பார்த்துப்பனு நம்பிய என் அம்மாவை சொல்லனும். என்னைப் போல நிலமை எந்தப் பெண்ணுக்கும் வரக் கூடாது” வருத்தம் இழையோடலானது அவள் வார்த்தைகளில்.

 

“பூ! நீ எதற்கோ ஹர்ட் ஆகி இருக்கேனு தெரியுது. என்னனு சொன்னால் தானே தெரியும்?” என்று கேட்கும் போது காலிங் பெல் ஒலிக்க, கதவைத் திறக்க பதற்றத்துடன் நின்றிருந்தாள் துர்கா.

 

“என்னாச்சு துரு? ஏன் பதட்டமா வந்தே? ஏதாச்சும் ப்ராப்ளமா?” பதறினான் அண்ணன்.

 

“இல்லண்ணா. அண்ணிக்கு என்னாச்சு? கால் பேசிட்டு இருக்கும் போது திடீர்னு பேசாம இருந்தாங்க. உள்மனசு படபடனு அடிச்சுது. உனக்கு கால் எடுத்தா ஃபோன் சுவிட்ச்ஆப் அதான் ஓடி வந்தேன்” உள்ளே ஓடினாள் துர்கா.

 

“நீ டென்ஷன் ஆகாத துரு. அவ மயங்கி விழுந்துட்டா. இப்போ ஓகே” என்று சொல்லிக் கொண்டு அவளது பின்னால் செல்ல,

 

இவர்களது பேச்சு சத்தத்தில் எழுந்து வந்த பூர்ணியைக் கண்டு, “எதுக்கு எந்திரிச்சு வந்த?” என அமர வைத்தான்.

 

“துரு நீயா? இந்த நேரத்தில் தனியா வந்தியா?” என்று பூர்ணி கேட்க,

 

“வேற என்ன பண்ணுறது அண்ணி? நீங்க மயங்கி விழ நான் காரணமாகிட்டேனே” வருத்தமாகக் கூறிய தங்கையின் பேச்சில் ரோஹனின் புருவம் முடிச்சிட்டது.

 

“வாட்? பூ மயங்கி விழ நீ காரணமா? என்னடி நடக்குது?”

 

“என் கிட்ட கேளு நான் பதில் சொல்லுறேன். இத்தனை நாளா நீ உன் வீட்டுக்குப் போகலைனும் தெரிஞ்சுக்கிட்டேன். அது ஏன்னும் தெரிஞ்சுருச்சு” என்றாள் பூர்ணி.

 

அதிர்ந்து போனவன் துர்காவை முறைக்க, “என் கூட பேசு. அவளை எதுக்கு முறைக்கிறே? உன் அம்மா எதற்காக வீட்டுக்கு வரச் சொல்லி கெஞ்சுனாங்கன்னு இப்போ புரிஞ்சுடுச்சு ரோஹி. என் கிட்ட சொல்லாமல் போயிட்டல்ல. இன்னும் எத்தனை விஷயங்களை இதே மாதிரி மறைச்சு வெச்சிருக்கே?” என்று முறைத்தாள்.

 

“துரு! நான் உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு தானே சொன்னேன்? ஏன்டி சொன்ன?” துர்காவை இயலாமையுடன் பார்த்து வைத்தான் அண்ணன்காரன்.

 

“அண்ணி தான் என்னை கம்பல் பண்ணுனாங்க. என்னால ஒரு கட்டத்துக்கு மேல தாக்குப் பிடிக்க முடியாமல் சொல்லிட்டேன். சொன்னது பிழைன்னா நடந்ததை ஒரேயடியாக மூடி மறைக்கிறதும் பிழைன்னு எனக்குத் தோணுச்சு. அதான் சொன்னேன். தப்பு இருந்தால் என்னை மன்னிச்சுடுண்ணா” என மன்னிப்புக் கேட்டு விட்டுச் சென்றாள் துர்கா.

 

செல்லும் அவளைத் தடுக்கவும் தோன்றாமல் சிலையென சமைந்து நின்றவனுக்கு மனைவியை எப்படி எதிர்கொள்வது என்று புரியவில்லை.

 

எவ்வளவு நேரம் தான் அப்படியே இருப்பது? அவளருகே சென்று தோள் தொட, “ஏன் ரோஹி; வனிதா சொல்லுற மாதிரி என்னைப் பார்த்தால் தப்பானவள் மாதிரி தோணுதா? ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிட்டு இன்னொருத்தன் குழந்தையை வயிற்றுல சுமக்கும் அளவுக்கு கேவலமானவளா நான்?” என்று விரக்தியுடன் கேட்டவள் அதற்கு மேல் தாங்க முடியாமல் அழுதாள்.

 

“பூ! யாரோ சொன்னதை எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு நீ அழலாமா? அழாத டி. எனக்கு கஷ்டமா இருக்கு” அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

 

“ப்ச்ச்! தொடாத! என் கிட்ட வராதே. எல்லாம் உன்னால தான் டா. அன்னிக்கு என்னை மித்து கூட சேர்த்து வெச்சு அத்தனை பேரும் பேசும் போது கல்லு மாதிரி நின்னியே அது தான் இதற்கெல்லாம் காரணம். உன் மனசுல அந்த நிமிஷம் நான் தப்பானவளாத் தான் பதிந்து போய் இருக்கேன் இல்லையா?

 

நீ ஊமை மாதிரி நிற்காமல் எனக்காக பேசி அவங்க வாயை அடைச்சி இருந்தால் இன்னிக்கு ஒவ்வொரு தடவையும் நான் வார்த்தைகளால் குத்திக் கிழிக்கப்பட்டிருக்க மாட்டேன். 

 

அவங்க வீட்டு வாரிசைச் சுமந்துட்டு இருக்கேங்குற நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் ச்சை! எனக்கு வனிதா வேலையும் இல்லை அவளுக்கு எதுவும் சொல்ல அவசியமும் இல்லை. நான் வாழ வந்தது அவ கூட இல்லை உன் கூட. உன் மேல தான் எனக்கு கோபம்.

 

உன் கூட வாழ்ந்தது கொஞ்சம் காலமாக இருந்தாலும் அது எனக்கு நூறு வருஷம் வாழ்ந்த மாதிரி உணர்வைக் கொடுத்தது ரோஹி. ஆனால் உனக்கு அப்படி இல்லை. அப்படி இருந்திருந்தால் நீ எனக்காக அன்னிக்கு பேசி இருப்ப” கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.

 

அவளது கண்ணீர் அவனைச் சிதைத்தது. அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் தீக்கங்குகளாய் மாறி அவனைச் சுட்டுப் பொசுக்கின. மீண்டும் பதில் பேச இயலாதவனாய் மாறிப் போனான் அவன்.

 

“அன்னிக்கு நீ மௌனமா இருந்ததற்குப் பதிலாக என்னைக் கொன்னு போட்டிருக்கலாம். அப்போ கூட நிம்மதியாகப் போய் சேர்ந்திருப்பேன். ஆனால் பாதி உயிரோடு வாழ வெச்சு மீதி உயிரையும் தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்கீங்க” அனைத்தையும் வெறுத்து விட்ட பானையில் அவள் பார்த்த பார்வை கணவனை ஆழமாகத் தாக்கியது.

 

“அப்படில்லாம் பேசாதடி. எனக்கு நீ வேணும்”

 

“பயப்படாத. நீ நினைக்கிற மாதிரி உன்னை விட்டுப் போக மாட்டேன். உன் குழந்தை என் வயிற்றில் இருக்கு. அதனால இன்னும் எத்தனை வலிகள் வந்தாலும் தாங்கிக் கொண்டு இங்கே தான் இருப்பேன்” என்று எழுந்து செல்ல, “சாரி டி. ரியல்லி சாரி பூ” என்று ஈனஸ்வரத்தில் முனகுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை அவனால்.

 

………………..

சாப்பிட்டு முடித்து கை கழுவிய மகனைப் பார்த்து, “விஷு! வைஷுக்கு பூர்ணி வீட்டுக்கு போகனும்னு சொன்னா” என்று நீலவேணி சொல்ல,

 

“ஓகே மாம் நான் பார்த்துக்குறேன்” என உதட்டுக்கும் வலிக்காத புன்னகையொன்றைச் சிந்தி விட்டுச் சொல்பவனைக் கண்டு தாயானவளுக்கு ஏதோ தவறாகப் பட்டாலும், என்னவென்று கேட்காமல் தனது வேலையில் மூழ்கிப் போனார்.

 

விஷ்வா தடதடவென மாடிப் படிகளில் தாவி அறைக்குச் செல்ல, பல்கோணியில் நின்றிருந்தாள் வைஷ்ணவி.

 

“எங்களுக்குள்ள சண்டைன்னு எல்லாருக்கும் தெரிய வெச்சு அம்பலப்படுத்த விரும்புறியா?” என்று கடினமாகக் கேட்டான்.

 

திடீரென்று ஒலித்த குரலில் பயந்தாலும் சட்டென தட்டை மீட்டுக் கொண்டு, “என்ன சொல்லுறீங்க?” என வினவினாள்.

 

“பூர்ணி வீட்டுக்குப் போகனும்னா என் கிட்ட சொல்லாமல் எதுக்கு மாம் கிட்ட சொல்லுற? இதுக்கு முன்னெல்லாம் என்னிடம் தானே சொல்லுவாய். இப்படி புதுசு புதுசா பண்ணும் போது அவங்களுக்கு சந்தேகம் வருமா இல்லையா?” சன்னக் குரலில் சீறினான் வேங்கை.

 

“எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்காதீங்க விஷு. நான் ரெடியாகிட்டு இருந்ததை அத்தை கண்டாங்க. அதனால ஒரு பேச்சுக்கு அவங்க கிட்ட பூ வீட்டுக்கு போகனும்னு சொன்னேன். இது ஒரு குற்றமா?” வெடுக்கெனக் கேட்டாள் அவள்.

 

“ஓஓ! குற்றம் பண்ணாதவ குற்றம் பற்றிக் கேட்க வந்துட்டா” என இதழ் வளைத்தான் விஷ்வா.

 

“விஷ்! ப்ளீஸ் இப்படிலாம் பேச வேண்டாமே. எனக்கு கஷ்டமா இருக்கு” கவலை மண்டிய குரலில் இறைஞ்சினாள் வைஷு.

 

“எனக்கும் தான் கஷ்டமா இருக்கு நவி! நான் உயிரையே வெச்சிருந்த நீ என்னைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் என்னை ரொம்ப சீக்கிரத்தில் தப்பா நினைச்சுட்ட. அதை விட குறைவான நேரத்தில் தப்பை உணர்ந்தும் இருக்கலாம்.

 

ஆனால் என்னால அவ்வளவு சுலபமாக இதை ஏத்துக்க முடியல. இதை ஜீரணிக்கவே முடியாமல் என் மனசு இன்னும் தவிச்சுக்கிட்டு இருக்கு” இந்தக் கோபத்திலும் கலந்திருந்தது வலி.

 

அவனது கோபத்தை விட அதில் மறைந்திருந்த வலி அவளைச் சுக்கு நூறாக உடைத்தது.

தன் மீது அவளுக்கு அத்துனைக் கோபம்! அவனைத் தவறாக நினைக்கும் முன் ஆராய்ந்து பார்த்திருக்கலாமோ? என்று தோன்றிற்று.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு?

 

“அ..அப்போ என்னைக் கூட்டிட்டு போவீங்களா?” என்று மெதுவாகக் கேட்டாள்.

 

“எஸ்! ஆயிரம் தான் கோபம் இருந்தாலும் நீ என் பெண்டாட்டி. நீ அதை மறந்தாலும் உன்னை பெண்டாட்டியா மனசார ஏத்துக்கிட்ட புருஷனாக என்னால் மறக்க முடியாது. சோ கூட்டிட்டு போவேன். வா” என்று கூறி பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு நிற்க அவன் பின்னால் அமர்ந்தாள் மனையாட்டி.

 

அவள் சற்றே தயக்கத்துடன் தள்ளி அமர அதைக் கண்டாலும் காணாதது போல் வண்டியைக் கிளப்பினான். சீரான ரிதத்தில் கேட்ட பைக் ஹாரனையும் கிழித்துக் கொண்டு வேகமாய்த் துடித்தது மெல்லியவளின் இதயம்.

 

“என் ஜித்துவை நானே காயப்படுத்திட்டேன். இதற்கு எனக்கு இந்த தண்டனை போதாது. இன்னும் வேணும். இன்னும் வேணும்” என்று மனம் ஓயாமல் பிதற்ற, கோபத்தில் மொத்தமாக விலகிச் செல்லாது தன்னை சொல்லும் இடத்திற்கு அழைத்துச் சென்று விடும் கணவன் மீது காதல் இன்னும் பொங்கியது.

 

ப்ரேக் போடவும் அவன் மேல் மோதியவளோ பயத்தில் அவனது தோளை இறுகப் பற்றிக் கொண்டாள். அவனோ கண்ணாடி வழியே பார்க்க கைகளை எடுத்துக் கொள்ள,

 

“சும்மா ஓவரா பண்ணாமல் பிடிச்சுக்க. எதற்கு பாம்பைக் கண்ட மாதிரி பத்தடி தள்ளிப் போய் உட்கார்ந்திருக்கே? விழுந்து கிழுந்துட போற. அப்பறம் மித்துக்கு நான் என்ன பதில் சொல்லுறது. நீ எனக்கு மட்டும் பொண்டாட்டி இல்லை. அவனுக்கு தங்கச்சியும் கூட. சோ இன்னும் ஒரு படி மேலாக உன்னை பத்திரமா பார்த்துக்க சொல்லி இருக்கான்” என படபடவென பொரிந்து தள்ளினான்.

 

“அப்படினு அண்ணா உங்க கிட்ட ஆர்டர் போட்டு இருக்காரா?”

 

“நோ நோ! அவன் எனக்கு என்னிக்குமே ஆர்டர் போட்டது இல்லை. ஆனால் அவன் வாயில் சும்மா வரும் ஒவ்வொரு வார்த்தையும் கூட எனக்கு கட்டளை மாதிரி. அதை அப்படி நினைச்சுக்குவேன்” முடியைக் கோதி விட்டுக் கொண்டான் மித்ரனின் மித்திரன் (நண்பன்).

 

“உண்மையில் எனக்கு உங்க ரெண்டு பேர் நட்பைப் பார்த்தால் பொறாமையா இருக்கு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுனு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனால் ஒவ்வொரு நாளும் அளவு கடந்துட்டே போனாலும் பாசமும், நட்பும் உங்களை இன்னுமின்னும் நெருக்கமா மாற்றுதே தவிர சின்ன அளவு கூட பிரித்தது கிடையாது” அவர்களது நட்பில் அவள் அதரங்கள் அழகாக விரிந்தன.

 

பூர்ணியின் வீடு வந்து விட, “நான் போயிட்டு வரேன்” என்றவனைப் பார்த்து, “நீங்களும் வாங்க” என்று அழைத்தாள் வைஷ்ணவி.

 

“இல்லை நான் ஆபீஸ் போகனும் நவி. நீ போ” என்று ஹெல்மட்டை மாட்டினான்.

 

“உங்களுக்கு என் மேல இருந்த கோபம் கொஞ்சமாவது குறைஞ்சுதா?” என்று வினவினாள்.

 

“அது குறையுறப்போ குறையும். உன் கூட பேசுறதால கோபம் இல்லைனு மட்டும் நினைச்சுடாத. இன்னொரு விஷயம்! நமக்குள்ள ப்ராப்ளம்னு யார் கிட்டேயும் காட்டிக்காத. குறிப்பாக மாம்கு தெரிஞ்சா நான் தொலைஞ்சேன்” என்று சொல்ல,

 

“ஓகே நான் சொல்லவே மாட்டேன்” என திரும்பிச் சென்றவள் சட்டென திரும்பிப் பார்த்து அவனை நோக்கி பறக்கும் முத்தத்தைப் பறக்க விட்டாள்.

 

இதயம் ஒரு கணம் நின்று துடிக்க விருட்டெனக் கிளம்பி விட்டான் விஷ்வஜித்.

 

“ஹா ஹா என் பயந்தாங்கொள்ளி புருஷா! அத்தைன்னா அவ்ளோ பயமா? அதை வெச்சே உங்களை கவுக்குறேனா இல்லையானு பாருங்க. எத்தனை வாட்டி கிஸ் பண்ணி என்னை பயம் காட்டுனீங்க? இனிமேல் வைஷு ஆட்டம் ஆரம்பம். உன் மனசுக்குள்ள நிச்சயம் வரும் இனிமையான ஒரு காதல் பூகம்பம்” என கெத்தாக சொல்லி விட்டுச் செல்ல, அவளைக் கண்டு ஓடோடி வந்தாள் பூர்ணி.

 

“ஹேய் வைஷு வா வா. இப்போ தான் என்னை ஞாபகம் வந்துச்சா?” என அவளை அமர வைத்தாள்.

 

“ஆமாடி. இவ்ளோ நாளா மனசுல விஷ்வாவைத் தவிர வேறு ஞாபகமே இல்லை” என்று கண்ணடிக்க வாயில் கை வைத்தாள் மற்றவள்.

 

“அடிப்பாவி! ச்சே ச்சே உன்னைப் போய் நான் மறப்பேனா அப்படினு ஒரு பேச்சுக்கு கூட சொல்லுவன்னு பார்த்தால் இப்படி தடாலடியா புருஷனை இழுத்து விட்டுட்ட” வியந்தாள் அவள்.

 

“ரோஹி அண்ணா எங்கே பூ?” என்று வைஷு வினவ, “அவன் ஆஃபீஸைக் கட்டிக்கிட்டு அழுறான். நான் என் பாப்பா கூட இருக்கேன்” ஆறு மாத வயிற்றைத் தடவிக் கொண்டாள் பூர்ணி.

 

“அடடா என் பப்ளியை மறந்துட்டேனே. ஹாய் டா செல்லம். நான் தான் வைஷு! என் கிட்ட சீக்கிரம் வா. உனக்காக நான் காத்துட்டு இருக்கே குட்டி பையா” என்று அவள் வயிற்றருகே குனிந்து பேசினாள் பெண்ணவள்.

 

“நீ ஒன்னும் காத்துட்டு இருக்க தேவையில்லை. அவனுக்காக என் மித்து பேபியோட பொண்ணு காத்துட்டு இருந்தால் போதும்”

 

“என்னடி சொல்லுற? அண்ணாவுக்கு பொண்ணா?” என முட்டைக் கண்களை அகல விரித்தாள்.

 

“அடியேய் லூசே! மித்துவுக்கு பொண்ணு பிறந்தால் என் பையனுக்குக் கட்டிக் கொடுக்கலாம்னு சும்மா சொன்னேன்”

 

“அப்படி நடந்தால் சந்தோஷம் தான்” என்றவளுக்கு தன் வயிற்றில் குழந்தை இருந்தால் எப்படி இருக்கும் என்பதாக நினைவு வந்தது.

 

விஷ்வாவின் மடியில் அமர்ந்திருக்கும் தனது மேடிட்ட வயிற்றை விஷ்வாவின் கை அன்போடு வருட, அடுத்த கையோ தன் தோளில் இருப்பதாக ஒரு காட்சி தோன்ற பெரிதாகவே ஒரு புன்னகை அவளில் உதிர்ந்தது.

 

“ஏய்ய் என்னடி கனவா?” பூர்ணி அவளது தோளைச் சுரண்டினாள்.

 

“ம்ம்! ஆமா பூ” என்று சொல்ல, “உன் கனவு எதுவோ அது நிஜத்திலும் நடக்கட்டும்” என்றாள் பூர்ணி.

 

“நடந்தால் என்னை விட சந்தோஷப்படுற ஆள் நீங்களா தான் இருப்பீங்கள்ல ஜித்து? அப்படி ஒரு சந்தோஷத்தை நான் உங்களுக்கு நிச்சயம் தருவேன்” என்று உள்ளுக்குள் அவளவனுடன் உரையாடினாள் விஷ்வாவின் உயிரானவள்.

 

நட்பு தொடரும்…….!!

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!