45. விஷ்வ மித்ரன்

0
(0)

விஷ்வ மித்ரன் 

 

💙 நட்பு 45

 

“இப்போ எதுக்கு தள்ளித் தள்ளிப் போறீங்க?” விலகிச் சென்றவனை நெருங்கி அமர்ந்தாள் வைஷ்ணவி.

 

“நீ ஒட்டிக்கிட்டு வர்ரதால நான் தள்ளிப் போறேன். நீ எதுக்கு நெருங்கி வர?” அவளை விட்டும் தள்ளிச் சென்றான் விஷ்வா.

 

“நீங்க தள்ளித் தள்ளிப் போறதைப் பார்த்து என் இதயம் துள்ளித் துள்ளி உங்க பக்கத்தில் போய் கிள்ளிக் கிள்ளி விளையாடச் சொல்லுது” அவன் விட்ட இடைவெளியை சட்டென நிரப்பினாள் நங்கை.

 

“என்னடி ஒரு மார்க்கமா பேசுற?” அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தான் அவன்.

 

“ஒரு மார்க்கமா பேசுன காலம் எல்லாம் மலையேறிப் போயிடுச்சு. இனிமேல் நான் பல மார்க்கமாக பேசப் போறேன். பேசுறது மட்டுமல்ல ரசிக்க போறேன், முத்தம் கொடுக்க போறேன், என் காதலை மொத்தமாகக் கொடுக்கப் போறேன்” என ரகசியம் கொஞ்சும் குரலில் கூறினாள் காரிகையவள்.

 

“யாருக்கு யாருக்கு?” என்று அவன் பட்டென்று கேட்க, “ஹேய் கூல்யா. பயப்படாதீங்க வேறு யாருக்கும் இல்லை என் புருஷனுக்குத் தான்” என கண்ணடித்தாள்.

 

“அதற்கு உன் புருஷன் ஒத்துக்கனுமே மா. அவன் தான் கோபமா இருக்கானே? என்ன செய்வ?” 

 

“அவர் கோபமா இருந்தால் என்ன? நான் ஒன்னும் பயந்தாங்கொள்ளி கிடையாது. அவருக்குப் பயப்படாமல் அவரை லவ் டாச்சர் பண்ண போறேன்”

 

“அந்தளவுக்கு போய்ட்டீங்களா மேடம்?” வியந்து பார்த்தான் அவன்.

 

“அந்தளவுக்கு என்ன? என் விஷுக்காக எந்த அளவுக்கு வேணாலும் போக தயாராகிட்டேன்”

 

“நல்லா பேசக் கத்துக்கிட்ட”

 

“இந்த பாராட்டு என் குருஜி விஷ்வா சாருக்கு போய் சேரனும். ஏன்னா நான் பேசக் கத்துக்கிட்டது அவர் கிட்ட தான்”

 

“ஏய் ஏய் ஓவரா போகாதடி” முறைப்பை அள்ளி வீசினான் கணவன்.

 

“ஓகே போகல. இப்போ நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் விஷ்வா” தீர்க்கமாக சொன்னவளைப் புரியாமல் ஏறிட்டான்.

 

“என்ன முடிவு?”

 

“நமக்கு யாராவது கடன் தந்தால் அதைத் திருப்பி கொடுக்கனும் இல்லையா?”

 

“ஆமா கொடுக்கனும். அவங்க நம்பிக்கையை நாம பொய்யாக்கக் கூடாது” என்றவனுக்கு அவள் அன்றெல்லாம் தான் முத்தத்தைக் கடனாகக் கொடுத்ததைச் சொல்கின்றாள் என்பது புரிந்தது.

 

“ஆனால் ஒரு விஷயம் நவி! அவங்க அதை உதவியா நினைச்சு வேண்டாம்னு சொல்லிட்டாங்கனா திரும்ப கொடுக்கத் தேவையில்லை” என உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினான்.

 

“அப்படி முடியாது தானே? அவங்க நல்ல மனசுக்கு வேணானு சொல்லுவாங்க. ஆனாலும் ஆரம்பத்தில் அதைக் கடனாக நெனச்சுக் கொடுத்ததால் அதை அடைச்சே ஆகனும்னு கடன் வாங்கினவங்க நினைப்பாங்க. அது அவங்களோட கடமையும் கூட” நீளமாகப் பேசினாள் பெண்.

 

“அப்படி என்ன கடனை வாங்கின?” தெரியாதது போல் வினவினான் விஷு.

 

“அது ஒரு அழகிய கடன். இனிமையான, உணர்வுகள் பொதிந்துள்ள ஒரு கடன்” நாணத்துடன் மொழிந்தாள்.

 

“அடடா அப்படியா? அவ்வளவு ஸ்பெஷலானதா? அதோட பெயர் என்ன?”

 

“மு..முத்… அச்சோ சொல்ல முடியல” என திக்கியவள் எதிர்பாராத விதமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

அவனோ அதிர்ந்து பார்க்க, “இது தான் அந்தக் கடன். எப்படி நல்லா இருந்ததா?” உதடு குவித்துக் கேட்டாள் நவி.

 

“அ..அது” என அவன் இழுக்க, “எ…எது?” அவனைப் போலவே ராகமாக இழுத்தாள்.

 

“நீ இப்படி கொடுக்குறதால ஒன்னும் என் கோபம் மறையாது”

 

“நீங்க கோபமா இருந்தாலும், எவ்ளோ கோபத்தைக் காட்டினாலும் கூட என் காதலும் மறையாது”

 

“என் வாயை அடைக்கிற டி. இது நல்லா இல்லை” முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

 

“நீங்க ஆல்ரெடி அடைச்சுட்டீங்க. என் வாயை இல்லை உங்களுக்காக துடிக்கும் இந்த இதயத்தை” நெஞ்சைச் சுட்டிக் காட்டினாள் அவள்.

 

தன்னவளின் அதிரடிக் காதலில் அவனுள் ஓர் ஆனந்தச்சாரல். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் உள்ளுக்குள் எரியும் கோபத்தீ தடுத்தது.

 

“போடி பைத்தியம்”

 

“ம்ம் பைத்தியம். காதல் பைத்தியம், உங்க மேல பைத்தியம், வெறித்தனமான பைத்தியம். இதற்கு எனக்கு செய்வீங்களா வைத்தியம்? பைத்தியத்தையும் நீங்களே தந்துட்டு வைத்தியமும் செய்யாமல் இருக்கும் இந்த கோபம் உங்க இதயத்தில் இருக்கும் காதலுக்கு முன்னால் எம்மாத்திரம்?” என வசனம் பேச,

 

“டைமிங்ல ரைமிங்கா பேசி கவிழ்க்க பார்க்குறியா?” என கடுப்படித்தான் அவளவன்.

 

“கவிழ்க்க உங்க மனசு என்ன தயிர்ச்சட்டியா? அது யாரும் அறிந்து கொள்ள முடியாத ரகசியப்பெட்டி” என்று மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்.

 

“அடிங் ஓடிருடி பேச்சுமுட்டி” என கையை ஓங்க ஓடியே விட்டாள் காதலி.

 

சிறிது நேரம் கண் அயர்ந்து விட்டு சாப்பிடச் செல்ல, அவனுக்கு பரிமாறினாள் வைஷ்ணவி.

 

“நீயும் சாப்பிடு வைஷுமா” என நீலவேணி சொல்ல, “இல்லை அத்தை. இன்னிக்கு என் புருஷனுக்கு நான் தான் பரிமாறுவேன்” என்று சொன்னவள் சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

 

‘அடியே வைஷு! ஆர்வக்கோளாறில் இப்படி அத்தை மாமாவுக்கு முன்னால் உளறி வெச்சுட்டியே. அவங்க என்ன நினைப்பாங்க. கொஞ்சம் அடக்கி வாசி’ என மனம் கண்டிக்க சமாளிப்பாக சிரித்து வைத்தாள்.

 

விஷ்வாவோ அடக்கப்பட்ட முறைப்புடன் பார்க்க, “சாப்பிடுங்க விஷ்வா. வேணும்னா ஊட்டி விடட்டுமா?” என்று கேட்டாள்.

 

“டாட், மாம் இருக்காங்க. சேட்டை பண்ணாத” அடிக்குரலில் சீறினான் அவன்.

 

“யார் கிட்ட சேட்டை பண்ணுறேன் உங்க கிட்ட தானே?” என்றாள் பதிலுக்கு அவள்.

 

அவளை முறைக்கவென்று நிமிர, உதட்டைக் குவித்துக் காட்டினாள் அவள்.

 

உள்ளுக்குள் அரண்டு போய், “கடவுளே இவளுக்கு கிறுக்கு முத்திருச்சு” என அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து மாடிக்குச் சென்று விட்டான்.

 

“இன்னிக்கு இது போதும். பயபுள்ளக்கு ஓவர் டோஸ் கொடுத்தாச்சு” என்று நினைத்தவளுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது.

 

உண்டு முடித்து அவனைத் தேடி சென்று, “உங்க ஹனி என்ன சொல்லுறா விஷ்வா?” எனக் கேட்டாள் அவள்.

 

“அவளுக்கென்ன சூப்பரா இருக்காள். உன்னை மாதிரி ராட்சசியா அவள்? எவ்வளவு கியூட்டா சாஃப்ட்டா பேசுவா மை ஏஞ்சல்” வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்ற சொன்னான்.

 

“எங்கே அவளோட ஃபோட்டோ இருந்தால் காட்டுங்க பார்க்கலாம் ஏஞ்சலா? ஊஞ்சலா என்று?” அவனை இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

 

“அங்கே குந்தாமல் வேணும்னா மடியில் வந்து இரேன்” என்று கடுப்புடன் சொல்ல, சட்டென அவன் மடியில் தாவி அமர்ந்தாள் நவி.

 

“ஓய் என்னடி நான் அமைதியா இருக்கேன்னு திமிருல ஆடுறியா?” அவளைக் கட்டிலில் தள்ளி விட்டான் வேங்கை.

 

“நீங்க தானே மடியில் உட்கார சொன்னீங்க. நானும் உங்க சொல் தட்டாமல் செய்தேன். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷனுன்னு வாழுற பத்தினிப் பெண் நானுங்க” அப்பாவியாய்ப் பார்த்தவளின் முகத்தில் லிட்டர் கணக்கில் பால் வடிந்தது.

 

“புல்லானாலும் புருஷன் என்பதை மாற்றி நான் பில்லோ ஆனாலும் புருஷன்னு வைக்க போறேன்” என்றவன் பில்லோவைக் கையில் எடுத்தான்.

 

“நோ வயலன்ஸ். இங்கே வாயால் மட்டுமே சண்டை போடலாம். கையை யூஸ் பண்ணக் கூடாது இது எழுதப்படாத சட்டம்” ஓடுவதற்குத் தயாராக இருந்தவளைப் பார்த்து,

 

“உனக்கு வாய்க் கொழுப்பு கூடிருச்சு. என்னால முடியல” தலையில் கை வைத்தான் விஷ்வா.

 

“முடியலனா எதுக்காக உங்களை நீங்களே வருத்திக்கிட்டு கோபத்தை இழுத்துப் பிடிக்கிறீங்க? விட்டுத் தள்ளுங்க” தலை ஒரு பக்கமாக சாய்த்துச் சொன்னாள்.

 

“அங்கே தொட்டு இங்கே தொட்டு இதில் வந்து நிற்கிறியா? உன் மேல கோபம் இல்லைனா நான் இப்போ பேசுற டோனே வேற மாதிரி இருக்கும். உன் கூட வாய்க்கு வாய் பேசுவதால் எல்லாம் மறந்துட்டேன்னு நினைக்காத. ஒரு வேளை மறந்துட்டேன்னா அதை நானே சொல்லுவேன்” சற்றே வன்மையாகக் கூறி விட்டு அலைபேசிக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

 

அவனது வார்த்தைகள் சுருக்கெனத் தைத்தாலும் வலியோடு நின்றது ஒரு செக்கன் தான். மறு நொடியே காற்றை ஊதித்தள்ளி இலகுவாகப் புன்னகைத்தாள் விஷ்வாவின் குறும்பழகி நவி.

 

…………………

“ஹரிப்பா! உங்க பையன் ரொம்ப மோசம்” எதிரில் இருக்கும் கணவனைப் பார்த்துக் கொண்டு மாமனாரிடம் முறையிட்டாள் அக்ஷரா.

 

“அவன் மோசமாத் தான் இருப்பான். ஏன்னா இந்த கெட்ட பையன் ஹரியோட பையனாச்சே” என அவர் கெத்தாகச் சொல்ல, மருமகளின் முகமோ இஞ்சி தின்றதைப் போல் அஷ்டகோணலாகி விட அவர் மகனோ வெற்றிப் பெருமிதத்துடன் தன்னவளைப் பார்த்தான்.

 

“போங்கப்பா. நான் உங்க கூட கோபம். எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்தால் இப்படி சப்புனு ஆக்கிட்டீங்க”

 

“ஹா ஹா. கடுப்பாகிட்டியா அக்ஷுமா. நான் சும்மா சொன்னேன். இப்போ அவன் என்ன செய்தான்?” என மாணவியின் முறையீட்டை விசாரிக்கும் அதிபர் போலாகினார் ஹரிஷ்.

 

“அவன் எனக்கு ஐஸ்கிரீம், சாக்லேட் எதுவும் வாங்கித் தர மாட்டேன்னு சொல்லிட்டான்” என குற்றம் சாட்டினாள் காரிகை.

 

“அப்படியா சொன்னான்? ஏன் டா?” என்று கேட்க, “அவளுக்கு லைட்டா ஃபீவர் மாதிரி இருக்கு. அப்புறம் எப்படிக் கொடுக்க முடியும் டாடி?” என்றான் மைந்தன்.

 

“ஆமா! அவன் சொல்லுறதும் உண்மை தானே செல்லக் குட்டி. ஃபீவர் ஓகே ஆனதும் வாங்கித் தருவான். அவன் தரலைனா என்ன நானே வாங்கித் தரேன் ஓகேவா?” என்று அவள் தலையை வருடி விட்டுச் சென்றார் ஹரி.

 

“அம்முலு!”

 

“நான் கோவமா இருக்கேன். எனக்கு ஒன்னும் ஃபீவர் இல்லை”

 

“அடியே என் செல்ல கோவக்காரி. உன் கோபம் கூட உன்னை இன்னுமின்னும் ரசிக்கத் தூண்டுது” அவள் கைகளைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டான் மித்ரன்.

 

“ஐஸ் வெக்கிறியா ராட்சசா” என முறைத்தாலும் அவன் தோளில் சாய்ந்தாள் அக்ஷரா.

 

“ஏன்டி என் மேல கோபமா இருந்தியே அதுக்குள்ள போயிருச்சா?”

 

“அது போகலை. நீ ஐஸ்கிரீம் வாங்கித் தரும் வரைக்கும் போகாது. அதற்காக என்னால தள்ளி எல்லாம் இருக்க முடியாது. இது என் உரிமை நான் சாஞ்சுக்குவேன்”

 

“வர்ரேவா சூப்பர் கான்செப்ட் டார்லிங்” என்று புன்னகைத்து அவள் தோளில் கை போட்டுக் கொள்ள, “உரிமையை நிலை நாட்டுறியா?” என்று கேட்டாள் முறைப்போடு.

 

“எஸ் அப்கோர்ஸ்! என் பொண்டாட்டி என் உரிமை அதை நிலை நாட்டுவது என் கடமை” என வசனம் பேசினான்.

 

“ஐஸ்கிரீம் வராமல் அந்தக் கடமையை செய்ய விட மாட்டேன்” என எழுந்து சென்றவளைத் தூக்கம் தழுவிக் கொண்டது.

 

“அம்முலு! அம்முலு எந்திரி டி” என எழுப்பியவனின் கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தவளைக் கடினப்பட்டு எழுப்பினான் அருள்.

 

“என்னடா அதுக்குள்ள விடிஞ்சிருச்சா?” என்று கண்களைக் கசக்கினாள்.

 

“ஆமா! விடிய இன்னும் டூ மினிட்ஸ் தான் இருக்கு. ஒரு முக்கியமான வேலை இருக்கு வா” என அழைத்தவனின் குரலில் இருந்த பதற்றத்தில் அபாய மணி ஒலிக்க வேகமாக அவனோடு கீழே சென்றாள்.

 

அவளை டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றவனோடு சென்றவளின் விழிகளைத் தன் விழிகளால் சிறைப்பிடித்தான்.

 

“எ…என்ன?” அந்த விழிகளில் தெரிந்த அதீத காதலில் சித்தம் தடுமாறி நின்றாள்.

 

“வெண்ணிலவு ஒத்த வெனிலா விழிகளில் முத்தமிட ஆவல் மிகுந்திடுதே.

புதுச் சுவை தரும் சாக்லேட் இதழ்களை ரசித்துச் சுவைத்திட உள்ளம் ஏங்கிடுதே.

வெட்கத்தில் சிவக்கும் ஸ்ட்ராபெர்ரி கன்னங்கள் என் கன்னத்தால் கோடு போட்டிடச் சொல்லிடுதே.

பட்டர்ஸ்காச் நெற்றியில் இதயமும் பட்டாம்பூச்சியாய் மாறி கிட்ட நெருங்கி ஒட்டிக் கொண்டிடுதே.

 

ப்ளூபெர்ரி கண்மணிகள் ஆகாய நிறத்தையும தோற்கடிக்கச் செய்திடுதே.

மெங்கோ ப்ளேவரில் புசிக்காமலே ருசித்திட்ட கூர்மூக்கும் என்னை உரசிடுதே.

மொத்தத்தில் நீ பெண்ணா? இல்லை பல கலவைகள் சேர்ந்த ஐஸ்கிரீமா தெரியவில்லையடி ஃப்ரூட் அன்ட் நட் காதலியே!

 

ஐஸ்கிரீம் முடித்து சாக்லேட்டில் கவி படைக்க வந்து உன் விழி நோக்கினேன். என்னை முழுதாய்த் தொலைக்கச் செய்திட்டாயே இது நியாயமோ?

உன் ஓரவிழிப் பார்வையில் சாக்லேட்டாய் உருகிப் போனேன் கிட்கேட் பெண்ணே!” அழகாய்ப் பேசிய அருள் மித்ரன் அவள் கையில் பெரிய கிட்கேட் பாக்ஸைக் கொடுத்தான்.

 

அவனது வார்த்தைகளில் உள்ளம் சிலிர்த்தவளுக்கு டைனிங் டேபிளைச் சுட்டிக் காட்டினான் அவன். விழிகளை அகல விரித்தாள் அவனவள்.

 

இதய வடிவ பெட்டி சிறு சிறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஃப்ளேவர் ஐஸ்கிரீம் இருந்தது. அதன் கீழே சிறிய அளவிலான இதய வடிவ சாக்லேட்ஸ் “ஐ லவ் யூ அம்முலு” எனும் எழுத்து வடிவில் வைக்கப்பட்டிருந்தது.

 

“வாவ்! இவ்ளோவும் எனக்கா?” ஐஸ்கிரீம் மீதுள்ள காதலில் துள்ளிக் குதூகலித்தவளுக்கு இதனைத் தனக்காகக் கொண்டு வந்த கணவன் மீது காதல் பெருக்கெடுத்தது.

 

“தாங்க் யூ டா. தாங்க் யூ சோ மச்! நான் இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. இந்த ஐடம்ஸ் விட என்னை சந்தோஷப்படுத்தி பார்க்க இதெல்லாம் செஞ்ச உன் காதல் மிகவும் மேலானது அருள்” என அவனைக் கட்டிக் கொண்டாள்.

 

“வெறும் ஹக் தானா?” இதழ் பிதுக்கியவனுக்கு, “ம்ஹூம் கிஸ்ஸும் தருவேன்” என கன்னத்தில் இச்சொன்று பதித்தாள்.

 

“வெறும் கிஸ் தானா? இது வேணாம்” என்றான் அவன்.

 

“வேறென்ன டா வேணும் உனக்கு? சாக்லேட்டா?” புரியாமல் கேட்டாள்.

 

“இல்லை”

 

“ஐஸ்கிரீமா?” அதனைச் சுவைத்தபடி கையால் காட்டினாள்.

 

“நோ நோ” தலையை இடம் வலமாக அசைத்தான் அருள்.

 

“அப்போ?”

 

“சாக்லேட் வித் ஐஸ்கிரீம்” என கண்சிமிட்டினான்.

 

“இதுக்கா இவ்ளோ பில்டப் பண்ணுறே? கப் தரேன். அதில் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி சாப்பிடு” மெல்லமாய் முறைத்தாள் மங்கை.

 

“அதுவும் வேண்டாம்” என்றவனின் பேச்சில் காண்டாகியவள், “அப்போ என் கிட்ட சொல்லி என் டைமை வேஸ்ட் பண்ணாமல் உனக்கு வேண்டியதை நீயே எடுத்துக்க ராசா” என சாக்லேட்டைக் கடிக்க,

 

கள்ளப்புன்னகையுடன் அவளை இழுத்து தன்னோடு அணைத்தவன் ஐஸ்கிரீமை வாயினுள் போட்டு அவளிதழை வன்மையாய்ச் சிறை செய்தான்.

 

அம்மெல்லியவளோ எதிர்பாராத தாக்குதலில் திக்கென்று விட்டு பின் அவனுக்கு ஒத்துழைக்க, இரு வித இனிப்புக்களையும் அவளின் இதழெனும் தேனோடு சேர்த்து ரசித்து ருசித்துப் புசித்தான் அக்காதல் ஆட்டக்காரன்.

 

அவளை விட்டும் விலகி முகம் பார்க்க, அவனைப் பார்க்க முடியாது இமை தாழ்த்தினாள் தாழை மேனியுடையாள்.

 

“ஓய்! என்னைப் பாரேன்” அவள் நாடி நிமிர்த்தி, “இத்தனை நாளாச்சு. ஆனால் இன்னும் உன் வெட்கம் போகலையே. இருந்தாலும் உன் வெட்கம் தான்டி உனக்கு அழகு. சுமாரான அழகு இல்லை சும்மா டக்கரான அழகு” அவளைப் பார்த்தவன் விழிகளில் காதலையும் தாண்டிப் படர்ந்தது மோக வலை.

 

“போடா நீ ரொம்ப மோசம். எனக்காக வாங்கிட்டு நீயே சாப்பிட்டு என்னை சாப்பிட விடாமல் பண்ணிட்ட. இப்போ என்னை டிஸ்டர்ப் பண்ணாத” என ஒவ்வொரு ப்ளேவராக சாப்பிட்டாள்.

 

“ஹரிப்பா எங்கேடா? நாம நட்ட நடு ஹால்ல இருக்கோம்” இப்போது தான் ஞாபகம் வந்தவளாக வினவினாள்.

 

“டாடிக்கு நைட் டியூட்டி. ஹாஸ்பிடல் போய்ட்டார்” என்றான் மித்து.

 

“இந்த டைம்ல கூட தூக்கத்தைத் தொலைத்துக் கொள்கிறார்” கவலையோடு சொன்னாள் அக்ஷு.

 

“இந்த வைத்தியர் சேவையே தியாகம் தான் அம்முலு. எப்போ டியூட்டி எடுக்கிறோமோ அப்போவே தூக்கம், பசி, தாகம், ஆரோக்கியம் ஃபேமிலி கூட ஸ்பென்ட் பண்ணுற டைம், இன்னும் சில இம்போர்டன்ட் டேய்ஸ், இன்னும் பல விஷயங்களை தியாகம் செஞ்சுடனும்.

 

தியாகமும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு சேவை இது. டீச்சரை விட, இன்னும் சில தொழிலை விட டாக்டருக்கு கூடுதலான சம்பளம் கிடைக்குதுன்னு வாய்க்கு லேசா சொல்லிருவாங்க. ஆனால் அவங்களோட வாழ்க்கையில் வரும் பல கவலைகளும், தடைகளும் அவங்களுக்கும் அவங்க கூடவே இருக்கிறவங்களுக்கும் மட்டும் தான் தெரியும்” பெருமூச்செறிந்தான் ஹரிஷின் அன்பு மகன்.

 

“எஸ் அருள்! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நீ காலேஜ்ல டான்ஸ் பண்ணுறதைப் பார்க்க ஹரிப்பாவை ஆசையா கூட்டிட்டு வந்தே. ஆனால் கரக்ட் டைம்கு ஏதோ ஆக்சிடன் கேஸ் ஒன்று வந்திருக்குனு சொல்லி எழுந்து போயிட்டார். அந்த டைம் நீ ரொம்ப ஃபீல் பண்ணுனது எனக்கு மறக்கலை” அவன் தோளில் கை வைத்தாள் அக்ஷு.

 

“உடனே அதைப் பற்றிப் பேசி மூட் ஸ்பாயில் பண்ணிக்காத. ஐஸ்கிரீம் சாப்பிடு” என ஊட்டி விட, அவனைப் பார்த்தவாறு சாப்பிட்டாள் அருளிற்கு அருளாகக் கிடைத்த அரிய பொக்கிஷமானவள்!

 

நட்பு தொடரும்…….!!

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!