52. விஷ்வ மித்ரன்

5
(1)

விஷ்வ மித்ரன் 

 

💙 நட்பு 52

 

கண்ணாடி முன் நின்று தலை துவட்டிக் கொண்டிருந்தாள் அக்ஷரா. அவளைப் பின்னால் இருந்து அணைத்தான் மித்து.

 

“அருள்” என அழைத்தவளின் கழுத்தில் நாடி குற்றி அவளைக் கண்ணாடி வழியே பார்த்தான் அவன்.

 

“என்னடா பார்வை?” புருவம் உயர்த்தினாள் பாவை.

 

“நீ தான் என்னைப் பார்க்க மாட்டேங்கிற. நானாவது பார்த்துட்டு போறேனே விடு” அவன் பார்வையின் கூர்மை இன்னும் அதிகரித்தது.

 

அந்த ஆழமான பார்வையில் உள்ளுக்குள் புது வெட்கப் பூக்கள் கொத்துக் கொத்தாய் பூக்க, அவை அவளின் முகமெனும் பூஞ்சோலைக்கும் இடம்பெயர்ந்தன.

 

“வெட்கத்தில் சிவக்குதடி உன் முகம்!

உன்னுள் புதைந்திடவே தவிக்குதடி என் அகம்” மதிமுகத்தில் விரல்களால் ஓவியம் தீட்டத் துவங்கினான் ஆடவன்.

 

“நேற்று அப்படி கோபமா இருந்த. இப்போ போயிருச்சா?”

 

“இருக்குது உள்ளுக்குள்ள நிறையவே இருக்கு. அது உன் மேல இல்லை அவன் மேல. சோ அந்த கோபத்தை உன் கிட்ட காட்டக் கூடாதுனு நினைச்சு இருக்கேன்” என்று கூறினான் அவன்.

 

“ஏன் டா இப்படி? நீ என்னிக்குமே அவன் மேல கோபப்பட மாட்டியே அருள். இப்படி இருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு” சோகம் இழையோடியது அவள் குரலில்.

 

“எனக்கு மட்டும் இப்படி இருக்க ஆசையா என்ன? ஆனால் முடியலை அம்முலு. கோபம் என்கிறதையும் தாண்டி வருத்தமா இருக்கு. ஆயிரம் கோபம் வந்தாலும் என் கிட்ட அதைக் காட்டிக்கவே மாட்டான். எனக்காக அதை அடக்கிட்டு சிரிப்பான். ஆனால் இப்போ என்னாச்சுனு தெரியல” பிடரியைக் கோதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் மித்ரன்.

 

“ஓகே லீவ் இட். ரொம்ப நாளாச்சுல்ல. நாம பீச் போகலாமா?” என்று கேட்டவளிடம், “முடியாது” ஒற்றை வார்த்தையில் மறுப்பை வெளியிட்டான்.

 

“ஏன்டா? ஏன் முடியாது” வெடுக்கென வினவினாள் அக்ஷரா.

 

“ஆமா முடியாது. ஆனால் ஏதாச்சும் தந்தா கூட்டிட்டு போறேன்”

 

“ஏதாச்சும்னா?” கேள்வியாய் அவனை நோக்க, “இந்த சூடான சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி கூலா கிக்கா எதுவும்…” அவன் பார்வை வண்டாக இவளது ஆரஞ்சு இதழ்களை மொய்த்தது.

 

“ஓஓ! நீ அப்படி வரியா? கூலா கிக்கா வேணுமா உனக்கு?” இடுப்பில் கை குற்றி அவனைப் பார்த்தாள் பாவை.

 

“எஸ் எஸ் சீக்கிரம் தா” அவசரப்படுத்தினான் அவன்.

 

“நீ கண்ணை மூடு நான் தரேன்” என்றதும் கண்களை மூடிக் கொண்டான் ஆடவன்.

 

அவளோ மெதுவாக நழுவி ஓடப் போக, ஈரெட்டில் அணுகி அவளை அலேக்காக தூக்கிக் கொண்டான் மித்து.

 

“அச்சோ மாட்டிக்கிட்டியே அக்ஷரா” தனக்குத் தானே கூறிக் கொண்டாள் அவள்.

 

“நீ சொன்னதும் கண்ணை மூடி காது குத்தும் வரை பார்த்துட்டு இருக்க நான் லூசா? உன் தில்லாலங்கடி வேலை எல்லாம் நான் சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டு தான் வரேன்” அவள் காதை வலிக்கத் திருகினான்.

 

“வலிக்குது டா ராட்சசா” அழகாய் விரிந்த இதழ்களைத் தன் முரட்டு இதழ்களால் கவ்வி அதற்கு தண்டனை கொடுக்கத் துவங்கினான் அக்ஷராவின் அழகிய ராட்சசன்.

 

அவளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. அவள் தன்னிடம் இருந்து விலக முடியாமல் இனிய தண்டனை கொடுத்து இதமாக சித்திரவதை அளிக்க இஷ்டப்பட்டு தன் இதய தேவியிடம் சரணடைந்தான் அவனும்.

 

அவ்வினிய சிறையிலிருந்து மீளவும் முடியாமல், இன்பம் தாளவும் முடியாமல் அவளிடமிருந்து விலகி கன்னத்தில் மெல்லமாய்க் கடித்து வைத்தான்.

 

“ஸ்ஸ்” அவளின் குழந்தைத்தனமான சிணுங்கலும் அவனுக்கு உன்மத்தம் ஊட்டத் தான் செய்தது. 

 

கழுத்து வளைவில் கிறங்கிக் கிடக்கத் துடித்த மனதை வெகுசிரமப்பட்டு அடக்கிக் கொண்டு விலகி, “ரெடியாகிட்டு வா போகலாம்” என வெளியேறினான்.

 

இங்கோ இப்படி என்றால் வைஷுவின் நிலைமையோ படபடப்பாக இருந்தது.

 

“இவரை எப்படி பீச் கூட்டிட்டு போறது? ஏதோ டென்ஷனா வர்க் பண்ணிட்டு இருக்காரே” நகத்தைக் கடித்துக் கொண்டு குட்டி போட்ட பூனை போல் நடை பயின்று கொண்டிருந்தாள்.

 

லேப்டாப்பில் பார்வையைப் பதித்திருந்தாலும் விஷ்வாவின் கவனம் முழுவதும் இருந்தது என்னவோ அவனது அருமை மனைவியிடம் தான்.

 

அவளது பதற்றத்தை உணர்ந்தவனாய் இதற்கு மேல் முடியாமல், “ஹனி” என அழைத்தான்.

 

திடீர் அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்தவளிடம், “ஓய் என்னடி? எதுக்காக குறுக்கும் மறுக்கும் நடந்துட்டு இருக்கே?” என்று கேட்டான்.

 

“அ…அது சாப்பிட்டது செரிக்கலை. அதான் நடந்துட்டு இருக்கேன்” வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள்.

 

“த்ரீ ஹவர்ஸ்கு முன்னாடி சாப்பிட்டது இன்னும் கழுத்து வரைக்கும் இருக்கா? பொய் சொல்லாத” லேப்பை மூடி விட்டு அவளருகே வந்தான்.

 

“அதான் தெரியுதுல்ல பின்ன என்ன கேள்வி? அதுக்கு மஞ்சக்கயிறு கட்டுன மாதிரி எப்போ பாரு லேப்பை கட்டிக்கிட்டு கொஞ்ச வேண்டியது” முறுக்கிக் கொண்டாள் யுவதி.

 

“எதுக்கு கயிறு கட்டி எத்தனை முடிச்சு போட்டாலும் நீ எனக்கு கட்டுன கயிறு மாதிரி வருமா?” அவளைத் தோளால் இடித்தான் விஷு.

 

“நான் உங்களுக்கு கயிறு கட்டினேனா? என்னத்த உளறுறீங்க?”

 

“எஸ்! நான் உன் கழுத்தில் ஊரறிய தாலிக்கயிறு கட்டினேன். ஆனால் நீ உன்னைப் பார்த்த மாத்திரத்திலே என் இதயத்தை கட்டிப் போட்டுட்ட நவிமா. அது சாதாரண கயிறு இல்லை. என் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவையும் ஆட்டிப் படைக்கும் மேஜிக் கயிறு” இதயத்தைத் தொட்டுக் காட்டியவனின் பேச்சில் அகம் குளிர்ந்தது அவளுக்கு.

 

“பேசியே மயக்கிருவீங்க”

 

“யாரு என்னைச் சொல்லுறியா நீ? என்னை கொஞ்சநஞ்சம் இல்லை முழுசா மயக்கிப் போட்ட மாயக்காரி டி நீ” அவள் நாடி பிடித்துக் கொஞ்சினான் காளை.

 

“சும்மா கொஞ்ச வர வேணாம். எனக்கு ஐஸ் வெச்சிட்டு திரும்ப வேலை வேலைனு அது பின்னாடி ஓடப் போறீங்க. போங்க இப்போ மட்டும் எதுக்கு வரீங்க?” அவனை விட்டும் விலகி நின்றாள் வைஷ்ணவி.

 

“ஆமா இப்போவும் நான் முக்கியமான ஒரு வேலையைத் தான் செய்ய போறேன்”

 

“சரி செஞ்சுக்கங்க. எல்லாம் முடிஞ்சதும் ஹனி மணினு வந்தா நான் சந்திரமுகி ஆகிருவேன்” 

 

“ஹா ஹா. என்ன வேலைனு கேட்க மாட்டியா நீ” புன்முறுவலுடன் அவளைப் பார்த்தான்.

 

“நான் எதுக்கு கேட்கனும்? எனக்கு ஒன்னும் அவசியம் கிடையாது”

 

“ஏய் கோவக்காரி! இங்கே வாடி” அவளை இழுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தான் விஷ்வஜித்.

 

“போங்க! என்னை விடுங்க” அவனிடமிருந்து விடுபடத் திமிறினாள் அவனது தேவதைப் பெண்ணவள்.

 

“விட முடியாது. என் அதிமுக்கியமான வேலை என்னனு சொல்லவா?” என்றவன் அவள் முகத்தில் இதழ்களால் முத்திரை பதித்து, “இது தான். இந்த வேலையை பண்ணட்டுமா?” என்றவன் இதழ்கள் அவளது கழுத்து வளைவில் வலம் வந்து புதுவாசம் நுகர்ந்தன.

 

கழுத்தில் மீசை குத்த கூச்சத்தில் நெளிந்தவளின் உணர்வுகள் ஊசி முனையில் ஊசலாடி சிலிர்த்து அடங்கியது தேகம்.

 

“என் வேலை உனக்கு பிடிச்சிருக்கா?” செவியோரம் இதழ் உரசக் கேட்டான்.

 

“ஹ்ம்ம் ரொம்ம்ம்ப” அவளறியாமலே அசைந்தன இதழ்கள்.

 

அனைத்தும் மறந்து காதல் சமரில் ஈடுபட்டு, மதுவுண்ட பட்டாம்பூச்சியாய் மயங்கிக் கிடந்தனர் இருவரும்.

 

பின்னர், வைஷுவுக்கு பீச் செல்ல வேண்டும் என்ற ஞாபகம் வரவே, “விஷு எங்காவது போகலாமா?” என்று கேட்டாள்.

 

“எங்கே போகனும்?” புருவம் உயரத்தினான் ஆணவன்.

 

“பீச் போகலாமா?” என்ற கேள்வியில் அவன் மனதில் மித்ரனின் முகம் வந்து போக, “வேண்டாம்” என மறுத்துரைக்க வந்தவனோ ஆசை மனையாட்டியின் முகத்தைக் கண்டு சம்மதமாகத் தலையசைத்தான்.

 

இருவரும் உடை மாற்றிக் கொண்டு பைக்கில் சென்றனர்.

 

தலை கோதியபடி தன்னோடு இணைந்து நடக்கும் மித்ரனைக் கண்டு, “டேய் கையை கீழே விட்டு வா” என கத்தினாள் அக்ஷரா.

 

“ஏன் அம்முலு?” புரியாமல் வினவினான் அவன்.

 

“அங்கே பார் ரெண்டு பொண்ணுங்க உன்னைத் தான் பார்க்குறாங்க. நீ முடி கோதுற ஸ்டைல்லைக் கண்டா இன்னும் உத்து உத்துப் பார்ப்பாளுங்க” அவனை மறைத்துக் கொண்டு நிற்கலானாள் அவள்.

 

“பார்த்தா பார்த்துட்டு போகட்டுமே விடு” என்றவனை, “அவளுங்க உன்னைப் பார்க்குறது கிளுகிளுப்பா இருக்கு போலவே” முறைத்துப் பார்த்தாள் அக்ஷு.

 

“ஹேய் லூசு! யாரோ பார்க்குறதுக்காக நான் என்னடி பண்ண முடியும்? அதையெல்லாம் கண்டுக்காத”

 

“என்னால அப்படி விட முடியாது. என் புருஷனை அவளுங்க எப்படி சைட் அடிக்கலாம்?” உள்ளம் கொதித்தாள் அவள்.

 

“பாசசிவ் குயீன்! உன் புருஷன்னு அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ? நீ வேணா தாலியைக் காட்டி நான் கட்டுனதுன்னு சொல்லு. அதையும் நம்பலைனா நம்ம மேரேஜ் செட்டிபிகேட்டை கொண்டு வந்து ப்ரூப் பண்ணு” பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறியவனைக் கண்டு,

 

“என்னடா கிண்டலா உனக்கு? சிரிக்காத சிரிக்காத டா” அவனுக்கு அடித்தாள் அக்ஷு.

 

“முடியலை டி. பயங்கரமா சிரிப்பு வருது” அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை ஏறிட்டான்.

 

அவனது முகத்தில் சிரிப்பு திடீரென உறைந்து விட அவ்விடம் நோக்கி பார்வையை செலுத்தி அக்ஷு அண்ணனும் அண்ணியும் வருவதைக் கண்டு யாருமறியாமல் வைஷுவுக்கு கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

 

அவளும் அச்செய்கை உணர்ந்து கண்களால் வெற்றிக் களிப்பை வெளியிட, அவளை ஒட்டி வந்தனும் நண்பனைக் கண்டு ஸ்தம்பித்துப் போய் நின்றான்.

 

என்றும் போல், “டேய் மாப்ள!” என நண்பன் அழைக்க மாட்டானா என்று ஒவ்வொருவர் மனமும் ஏங்கத் தான் செய்தன.

 

“இவன் எப்படி இங்கே?” விஷ்வா வைஷுவிடம் கேட்க, மித்ரனும் அதே கேள்வியை தன்னவளிடம் தொடுத்தான்.

 

“எங்களுக்கு என்ன தெரியும்?” கையை விரித்து கமுக்கமாக நின்றனர் பெண்கள் இருவரும்.

 

“அப்போ நாம சரியா சந்திக்க காரணம் என்னவா இருக்கும்?” நெற்றியை நீவி விட்டுக் கொண்டான் மித்து.

 

“வேற எது? உங்க நட்போட பவர் அது!” கோரசாக கூறிய பெண்களை முறைத்துத் தள்ளினர் ஆடவர்கள்.

 

“இப்போ எதுக்கு முறைப்பையன் மாதிரி முறைச்சு தள்ளுறீங்க? வந்தது வந்தாச்சு ரெண்டு பேரும் மீட் பண்ணிட்டீங்க. கொஞ்சம் மனசு விட்டுப் பேசுங்க. ஆல் இஸ் வெல்” புன்னகை பூத்தாள் அக்ஷரா.

 

“என்னால பேச முடியாது” என்று விஷ்வா சொல்ல, “நானும் பேச மாட்டேன்” விடாப்பிடியாய் நின்றான் மித்து.

 

“இப்போ என்ன தான் உங்க பிரச்சினை? இப்படிலாம் மூஞ்ச வெச்சுக்காதீங்க. கொஞ்சமும் செட் ஆகலை” முகச் சுளிப்புடன் கூறினாள் வைஷ்ணவி.

 

“அண்ணா பேசுண்ணா” விஷ்வாவிடம் அக்ஷரா கெஞ்ச, “ப்ச் போ குட்டிமா! உன் புருஷனைப் பாரு எப்படி கள்ளுளி மங்கன் மாதிரி இருக்கான்னு” அவளிடம் எகிறினான் அவன்.

 

“அவன் மட்டும் என்னவாம்? செதுக்கி வெச்ச சிலை கணக்கா இருக்கான். உன் புருஷனை சும்மா இருக்க சொல்லு பாப்பா” தங்கையிடம் கூறினான் மித்ரன்.

 

“என்னடா எங்களை வெச்சு பேசிட்டு இருக்கீங்க?” அக்ஷரா தலையில் அடித்துக் கொள்ள, “நண்பர்களுக்கு இடையில் ஊடல் நடக்குது டி. அதான் நம்மளை தோழியா வெச்சு தூது அனுப்பி விடறாங்க” பதிலுக்கு நொடித்துக் கொண்டாள் வைஷு.

 

“இதோ பாருங்க! என்னவா இருந்தாலும் நீங்களே நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கங்க. நடுவில் எங்களை இழுத்து விடக் கூடாது” அக்ஷரா வைஷுவை இழுத்து தன் பக்கம் நிறுத்தினாள்.

 

“எங்களுக்கு நடுவில் பேச என்ன இருக்கு? வேணும்னே நீங்க ரெண்டு பேரும் கூட்டணி போட்டு ப்ளான் பண்ணி எங்களை கூட்டிட்டு வந்திருக்கீங்க அப்படித் தானே?” கோபத்தில் சீறினான் விஷ்வா.

 

“என் கூட பேசுடா! என்ன சொன்னே? எங்களுக்கு நடுவில் ஒன்னும் இல்லையா?” கண்கள் சிவக்க நண்பனை ஏறிட்டான் மித்து.

 

“ஆமா! இல்லைங்குறேன் அதற்கு என்ன?” முறைப்புடன் திரும்பியவனின் முகத்தைப் பற்றி தன்னை நோக்கித் திருப்பி,

 

“என்னைப் பார்த்து சொல்லு டா. இப்போ சொல்லு. யேன் இப்படி நடந்துக்கிற விஷு?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

 

“ஏன்னு உனக்கு தெரியாதா? தயவு செய்து திரும்ப என் கிட்ட இதைப் பற்றி பேச வராத”

 

“ஏய் போடா பைத்தியக்காரா” திரும்பிச் செல்ல எத்தனித்தவனின் கையைப் பிடித்து, “போகத் தான் டா போறேன். நானா உன் கூட பேச வந்தேன்?” என்கவும் அவனது கையை உதறி விட்டான் மற்றவன்.

 

“ஹேய் ஸ்டாப் இட்” உச்சபட்ச அதிர்வுடன் சத்தமிட்டாள் அக்ஷரா.

 

“என்ன ப்ராப்ளம் ஆஹ்? ஏதோ விளையாட்டுத் தனமா பண்ணிட்டு இருக்கீங்கனு பார்த்தா அளவு மீறி போகுது எல்லாம்” என்றாள் அவள்.

 

“எல்லை மீறிப் போறது உன் அண்ணன் டி. அவனைக் கேளு” – மித்ரன்

 

அவளோ அண்ணன் புறம் திரும்ப, “என்னடி குட்டிப்பிசாசு என்னையே பார்க்கிற? உடனே கிட்ட கேள்வி கேட்க ஸ்டார்ட் பண்ணாத” என்றான் அவன்.

 

“விஷு ப்ளீஸ் கத்தாதீங்க . என்ன நடந்தாலும், எத்தனை பிரச்சனை வந்தாலும் ரெண்டு பேருமா சேர்ந்து தானே ஃபேஸ் பண்ணுவீங்க. இப்போ எதுக்கு வெட்டியா கோபப்பட்டுட்டு இருக்கீங்க. என்ன ப்ராப்ளம் இருந்தாலும் அதை இத்தோட முடிச்சுக்கங்க” தீர்க்கமாக சொன்னாள் நவி.

 

“அருள்! உன் விஷு கூட பேசு” மன்றாடினாள் காரிகை.

 

எதுவும் பேசாமல் மறுபுறம் நடந்து சென்றவனை நண்பனும் தடுக்கவில்லை. மித்ரனின் மனமோ வேதனையில் வெந்து கொண்டிருந்தது. அக்ஷுவும் அவனோடு சென்றாள்.

 

“ஜித்து! அண்ணா போறாருல்ல. கூப்பிடக் கூட மாட்டீங்களா?” மனம் தாளாமல் கேட்டாள் வைஷு.

 

“உனக்கு பேசனும்னா போய் பேசிட்டு வா. என்னால பேச முடியாது”

 

“இது டூ மச்! என்னால உங்களை இப்படி பார்க்க முடியலை. எப்படி இந்த மாதிரி பேசாம இருக்கீங்க?”

 

“இது எனக்கும் அவனுக்கும் இருக்கும் விஷயம். நீ தலையிடாத நவிமா”

 

“ஓஹோ அப்படியா? சரி உங்க விஷயத்தில் நான் தலையிடலை போதுமா?” விலகி நின்றாள் அவள்.

 

“நான் இந்த பிரச்சனையை சொன்னேன். நீ வேற எதையும் கற்பனை பண்ணிக்காத” என்றவனை அதிசயமாகப் பார்த்தாள் பெண்.

 

மித்ரனது வாயில் வரும் பிரிவு எனும் வார்த்தையைக் கேட்கவே இஷ்டப்படாத இவனால் எப்படி அவனோடு பேசாமல் இருக்க முடியும்? அவனோடு பேசாததைக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தன்னோடு எப்படி சகஜமாக பேச முடிகிறது? 

 

பதிலறியா வினாவுடன் அவனை நோக்கினாள் வைஷ்ணவி. எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் நிர்மலமாக இருந்தது அவன் முகம்! இவளுக்குத் தான் தலையை எங்காவது முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

 

இங்கோ கடற்கரை மணலில் அமர்ந்து எங்கோ பார்த்தபடி இருந்தான் மித்து.

 

“டேய் அருள்! இப்படி இருக்காத. உன்னைப் பார்க்க முடியலை” அவன் கையைப் பிடித்து தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டாள் அக்ஷு.

 

“எனக்கு மட்டும் இப்படி லூசு மாதிரி கண்டதையும் யோசிச்சுட்டு இருக்க ஆசையா? அவனுக்கு நட்டு ஏதாவது கழன்றுச்சா? எதுக்காக இப்படி ஆடிட்டு இருக்கான்?” மணலில் ஏதேதோ கிறுக்கி அழித்து விட்டான்.

 

“அவன் இதை உணர்ந்து பண்ணலைனு தோணுது டா. இந்த விலகலுக்கு ஏதாச்சும் ரீசன் இருக்கலாம் இல்லையா?” மெதுவாக கூறினாள் அவள்.

 

“அப்படி என்ன பொல்லாத ரீசன்? எந்த ரீசன் இருந்தாலும் என்னால இதை ஏத்துக்க முடியாது. நிஜமாவே அவன் மேல ஃபர்ஸ்ட் டைம் கோபம் வருது டி” கண்களை மூடி தன்னை சமப்படுத்த முயன்றான் அருள்.

 

“அண்ணாவைப் பற்றி உனக்கு…!” என பேச வந்தவளை ஒற்றைக் கையுயர்த்தி தடுத்தவன்,

 

“உன் நொண்ணன் புராணத்தை பாடாத அம்முலு. கிறுக்கு முத்திப் போச்சு அவனுக்கு. ஒரு நல்ல வைத்தியத்த பண்ணனும். நானே பண்ணுறேன் அவனுக்கு” என்றான் பற்களைக் கடித்துக் கொண்டு.

 

“ம்ம் ஏதாச்சும் பண்ணி அவனைத் தெளிய வெச்சா போதும். நீயும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ” இதற்கும் ஏதாவது கோபமா பேசி விடுவானோ என அச்சம் கொண்டாள்.

 

“அவனுக்காக யார் இல்லேனாலும் நான் விட்டுக் கொடுப்பேன். என் விஷு டி அவன். என் உயிரு! அவனை நான் அவ்ளோ சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டேன். விட்டு விலகவும் மாட்டேன்” உறுதியாக சொல்லி விட்டு எழுந்து நடந்தான் மித்ரன்.

 

“நான் என்னவோ அவனை விட்டுட்டு வா என்று சொன்ன மாதிரி என் கிட்ட கத்திட்டு போறான். இவனுங்களுக்கு நடுவில் போனா நாம நொந்து நூடுல்ஸ் ஆகுறது உறுதி” அங்கலாயாத்துக் கொண்டு அவனோடு சேர்ந்து நடந்தாள் மித்ரனின் மனையாள்!

 

நட்பு தொடரும்……!!

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!