53. விஷ்வ மித்ரன்

5
(1)

விஷ்வ மித்ரன் 

 

💙 நட்பு 53

 

சின்னஞ் சிட்டுக்களின் கீச்சுக் குரல்களில் அமர்க்களமாய் இருந்தது அந்த சிறுவர் பூங்கா.

 

கல்பெஞ்சில் அமர்ந்து ரோஹனின் கை கோர்த்து, ஓடியாடும் சிறுவர்களின் புன்னகை மாறாத வதனத்தை இமை மூடாமல் பார்த்திருந்தாள் பூர்ணி.

 

“பூ….!!” என்று அழைத்த ரோஹனின் பார்வை மனைவியின் முகத்தில் ஜொலித்த பிரகாசத்தை மனம் நிறைய ரசித்தது.

 

“ம்ம் என்ன ரோஹி?” பக்கவாட்டாக அவனை ஏறிட்டாள் அவள்.

 

“நீ சந்தோஷமா இருக்கியா?” என்ற வினாவைத் தாங்கி அவளை ஏறிட்டான்.

 

“ரொம்ம்ப சந்தோஷமா இருக்கேன். என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கே. நிறைய குழந்தைங்க, அவங்களோட சிரிப்பு சத்தம், சிணுங்கல்கள், அவங்களோட விளையாட்டு இதைப் பார்த்துட்டு இருக்கேன். சோ நான் ரொம்ப ஹேப்பி” புன்னகையை வழங்கினாள் பூர்ணி.

 

“இது போதும் டி எனக்கு” அவளது மென்கரங்களை அழுத்திக் கொடுத்தான் கணவன்.

 

“அதோ பார்த்தியா அண்ணனும் தங்கச்சியும் மாதிரி தெரியுறாங்கல்ல ரெண்டு குட்டீஸ். அவங்களை பார்க்கும் போது எனக்கு என் சின்ன வயசு ஞாபகம் வருது. என் மித்து பேபி கூட இப்படித் தான் விளையாடுவேன்” மித்ரனின் நினைவில் அவள் குரலில் ஆனந்தமும் உற்சாகமும் முகிழ்த்தன.

 

குறுநகை பூத்து விட்டு, “உனக்கு மித்து மேல அவ்ளோ பாசமா?” என வினவினான்.

 

“அவ்ளோ பாசம் என்று வெறும் வார்த்தையில் சொல்லி முடிக்க முடியாத அளவிற்கு அவன் மேல பாசம், அதை விட அவனுக்கு என் மேல் பாசம். ஆனால் என்னை மாதிரி வெளிப்படையா காட்டிக்க மாட்டான் அவ்ளோ தான்.

 

அண்ணன் மாதிரினு சொன்னாலும் அவன் எனக்கு நல்ல ப்ரெண்ட். நிறைய விஷயங்களை அம்மாவை விட அவன் கிட்ட ஷேர் பண்ணி இருக்கேன். ஒரு அப்பா மாதிரி பாதுகாப்பா அவ்ளோ அக்கறையா என்னை பார்த்துப்பான்.

 

காலேஜ் விட வந்தா என்னைப் பார்த்துட்டு இருக்கிற பசங்களை ஒரு பார்வையால் சுட்டெரிச்சுட்டு போவான். இன்னும் சொல்லப் போனா இன்னொரு அம்மா மாதிரி அவன். எனக்கு ஏனோ அத்தனை பேரை விடவும் அவன் ரொம்ப ஸ்பெஷல் ரோஹி” கன்னம் தொட்ட முடியை செவியோரம் சொருகி விட்டுக் கொண்டாள் மாது.

 

“உனக்கு அவன் எவ்ளோ முக்கியம்னு எனக்கு புரியுதுடி. உண்மையில் அவனுக்கு நல்ல மனசு. அன்னிக்கு அவனைப் பொறுத்தவரைக்கும் நானும் உன்னை தப்பா நெனச்ச ஆள். அப்படி இருந்தும் என் மேல கோபப்படாம உன் கூட சேர்த்து வைக்க ட்ரை பண்ணுனான்”

 

“எஸ்டா! அவன் அப்படி தான். ரொம்ப பாசக்காரன். ஆனால் முன்னெல்லாம் சரியான அழுமூஞ்சி. அதாவது அம்மா இல்லைனு அவன் ரொம்ப அழுவான். அவன் லைஃப்ல விஷு வந்ததுக்கு அப்பறமா அவன் சந்தோஷமாவே இருப்பான். அவனோட ஏக்கங்கள் விஷு மூலம் தீர்ந்துருச்சு. மித்துக்கு அவனோட விஷு ஸ்பெஷல்”

 

“என் வாழ்க்கையிலும் ஒரு ஸ்பெஷல் பர்சன் இருக்கா” என்ற ரோஹனிடம், “அது யார்?” என வினவினாள்.

 

“ஒரு பொண்ணு! சிரிச்சா ரோஜாப்பூ! சிணுங்கினா சூரியகாந்திப்பூ! பேசினா செங்காந்தள் பூ! ஏனோ தானோன்னு போயிட்டு இருந்த என் வாழ்க்கையை அன்பால் மாற்றி வாசம் வீச எனக்குள் மலர்ந்த என் இதயப் பூ! அது நீ தான்டி பூக்குட்டி” அவள் நாடி பிடித்துக் கொஞ்சினான் காதலன்.

 

“நல்லா சொன்ன போ! ஆனால் கேட்க சூப்பரா இருந்துச்சு. உனக்கு கல்யாணத்துக்கு முன்னால் எந்த பொண்ணு மேலேயும் ஒரு ஈர்ப்பு கூட வந்தது இல்லையா?” ஆவல் மேலிட கேட்டாள் காரிகை.

 

“ஈர்ப்பு!? நான் சொல்லி இருக்கேனே நிவியைப் பற்றி. இன்ஜினியரிங் காலேஜ்ல என் கூட பழகினாள். அவள் என் பெஸ்ட் ப்ரெண்டா இருந்தாள். அவளைத் தவிர நான் வேற பொண்ணுங்க கூட பழகுனது கிடையாது. ஒரு ப்ரெண்டா அவளை எனக்குப் பிடிச்சது. அதைத் தாண்டி எதுவும் வந்தது இல்லை.

 

வேற ஊருக்கு போயிட்டானு கேள்விப்பட்டேன். அவ நம்பரும் இல்லை! எங்கே இருக்கா எப்படி இருக்கானு தெரியலை” பெருமூச்சு விட்டான் ரோஹன்.

 

“உண்மை தான். இப்படி சில பேர் நம்ம கூட பேசுவாங்க பழகுவாங்க. அவங்க கூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணுவோம். அவங்க நம்ம லைஃப் லாங் இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்.

 

ஆனால் நினைக்கிற மாதிரி நடக்காது. மேற்படிப்பு, கல்யாணம் என்று வரும் போது அந்த பிணைப்பு அறுந்து போயிடுது. அவங்க முகவரி தெரியாம தொலைந்து போயிடுவாங்க. ஆனால் இப்படி பேசும் போது, அல்லது தனியா இருக்கும் போது அந்த ஞாபகங்கள் வரும். அந்த நினைவுகள் அழகாக மனதை வருடும்” அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் பூரி.

 

சிறிது நேரம் இருந்து விட்டு பூங்காவை விட்டு வெளியே வந்தனர் இருவரும். 

“ரோஹி” என அவள் கெஞ்சலுடன் அழைக்கும் போதே அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஐஸ்கிரீம் தள்ளு வண்டியைக் கண்டு அவ்விடம் சென்று இரண்டு ஐஸ்கிரீம் வாங்கி வந்து நீட்டினான்.

 

“அய்ய் தாங்க்யூ” என்று ஒன்றை வாங்கிக் கொண்டு சாப்பிட, அவனோ சாப்பிடாமல் அவளையே பார்த்தான்.

 

“அப்படி பார்க்காதே எனக்கு வயிறு வலிக்கும். உன்னோடதை சாப்பிடு” கீழ்க்கண்ணால் அவனைப் பார்த்தவாறு ருசித்தாள்.

 

அவனது பார்வையோ ஐஸ்கிரீம் படிந்த அவளது ரோஜா இதழ்களில் நிலைபெற அதை உணர்ந்து, “ரோஹி இது ரோட்” இதழ் கடித்துக் கூறினாள் அவள்.

 

“கண்ணுக்கு தெரியுது. ஆனால் மனசுக்கு தெரிய மாட்டேங்குது பூ” அவள் உதட்டை வருட பரபரத்த மனதை அடக்க சிரமப்பட்டான்.

 

“அடேய் ரோமியோ கொஞ்ச நேரம் அடக்கி வாசி. ம்ம் இதை சாப்பிடு” ஐஸ்கிரீமை மாற்றிக் கொடுத்தாள்.

 

“அட! இது நல்லா இருக்கே” அவளைப் பார்த்தவாறு அவள் ருசித்த ஐஸ்கிரீமை சாப்பிட்டான் ரோஹன்.

 

“ரோஹி! உன் அம்மா கூட பேசினியா?” என்று அவள் கேட்க, அமைதியாகிப் போனான் ஆடவன்.

 

“உன் கிட்ட தான் கேட்கிறேன். பதில் சொல்லு”

 

“பதில் தெரிஞ்சுட்டே கேள்வி கேட்காதன்னு சொல்லி இருக்கேன்ல. நான் தான் அவங்க முகத்தில் முளிக்கக் கூடாதுன்னு வந்துட்டேன்ல” சற்று கடினமாகக் கூறினான்.

 

“ஏன் இன்னும் அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கே? விட்டுத் தள்ளிட்டு போய் பேசு”

 

“உன்னால எல்லாம் மறந்துட்டு வனிதா கூட போய் பேச முடியுமா?” என்ற கேள்விக்கு மௌனத்தைத் தவிர அவளிடம் பதில் இல்லை.

 

“உன்னால பேச முடியாது. ஏன்னா உன்னால அவ பேசியதை எல்லாம் மறக்க முடியலை. நான் மட்டும் போய் உறவு கொண்டாடனுமா? இது என்ன நியாயம்?” புருவம் உயர்த்தினான் ரோஹன்.

 

“வனிதாவை பற்றி நான் பேசலை. உன் அம்மாவை சொன்னேன். அவங்க ஒன்னும் அன்னிக்கு எதுவும் பேசலையே”

 

“பேசலை! அது தான் என் கோபத்திற்கு காரணம். வனிதா அவ்ளோ பேசுறா. இது தப்புன்னு ஒரு வார்த்தை தட்டிக் கேட்காம இருக்காங்க. என் மனசு எவ்ளோ காயப்பட்டிருக்கும். உன்னை பேசுறது என்னை கேவலமா பேசுறதுக்கு சமன்னு அவங்களுக்கு புரியலையா? புரிஞ்சு இருந்தா எனக்காக வனியை அதட்டி இருப்பாங்க” வேதனையில் கசங்கியது அவன் முகம்.

 

“ப்ச்! நடந்ததை எத்தனை நாளைக்கு தான் நினைச்சுட்டே இருப்ப. தப்பாகவே இருந்தாலும் அதை மறந்துரு டா. என்ன தான் இருந்தாலும் அவங்களுக்கு உன் மேல ரொம்ப பாசம். ஒரு தாயோட வேதனையை புரிஞ்சுக்கிட்டவளா சொல்லுறேன். எனக்காக அவங்களோட பேசு”

 

எதுவும் பேசாமல் அமைதி காத்தான் அவன். உடனடியாக அவனால் இதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

 

“அவங்க வீட்டுக்கு போகனும்னு சொல்லல. ஆனால் அம்மாவைப் பார்த்து கொஞ்சம் பேசு. நல்லா இருக்கியாம்மா என்று கேளு. அந்த ஒரு வார்த்தையே அவங்களுக்கு பெரிய நிம்மதியை, சந்தோஷத்தை கொடுத்துரும்” அவன் முகத்தைப் பார்த்தவாறு சொன்னாள்.

 

“ம்ம்! உனக்காக நான் பேசுறேன்” அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தவனின் வார்த்தைகளில் நிம்மதியாக உணர்ந்தாள் பூர்ணி.

 

………………..

சமயலறையில் படபடவென பாத்திரங்கள் உருளும் ஓசையில், கையில் இருந்த பேப்பரை வைத்து விட்டு, “உன் பொண்டாட்டி என்னடா பண்ணுறா? உன் மேல எதுவும் கோபமா இருக்காளோ அன்னிக்கு மாதிரி ஐஸ்கிரீம் வாங்கி தரலைனு?” என்று கேட்டார் ஹரிஷ்.

 

“நோ டாடி! ஏதோ சமைக்கனும்னு போனா”

 

“அவளை எதுக்கு சமைக்க சொல்லி கஷ்டப்படுத்துற கண்ணா? நானே சமைப்பேன்ல?” எழுந்து சமயலறைக்குச் செல்ல,

 

“இத்தனை நாளா நீங்க சமைச்சீங்க. இனி கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என அவரோடு சென்றான் மகன்.

 

உள்ளே எட்டிப் பார்த்த இருவரும் வாயைப் பிளந்து நின்றனர். இரண்டு கைகளிலும் கரண்டியை வைத்து அதை சட்டியில் தட்டியவாறு ஆடிக் கொண்டிருந்தாள் அக்ஷரா.

 

“பார்த்தீங்களா உங்க செல்ல மருமகள் சமைக்கும் லட்சணத்தை?” தந்தையிடம் கேட்டான் மித்ரன்.

 

“பாவம் சின்ன பொண்ணுடா அவ. போய் நீயும் ஹெல்ப் பண்ணு” என புன்னகையுடன் நகர்ந்தார்.

 

“பாவமா இவள்? என்னை கொல்லுறாள் ராட்சசி” என்று முனகிக் கொண்டு உள்ளே சென்று அவளைப் பின்னாலிருந்து அணைத்தான்.

 

“ஹேய் டார்லிங்! வா டான்ஸ் பண்ணலாம்” அவனது கையைப் பிடித்து சுற்றியவாறு ஆடினாள் அக்ஷரா.

 

“உனக்கென்ன மேடையில் டான்ஸ் பண்ணுறதா நினைப்பா? இது கிட்சன் டி”

 

“டியூப் லைட் இன்னிக்கு தான் ப்ரைட்டா எரியுது” அவன் தலையில் தட்டினாள் அவள்.

 

“நான் டியூப் லைட்டா? ஏன் ஏன்?” வேகமாகக் கேள்வி எழுப்பினான்.

 

“இன்னிக்கு தான் இது கிட்சன்னு தெரிஞ்சு இருக்குல்ல அதை சொன்னேன். ரொமான்ஸ் மூடில் இருக்கும் போது ஐயாவுக்கு இது ரூம் இல்லை கிட்சன் என்று நான் சொல்லிப் புரிய வைக்கனும்” என்றதும் கள்ளமாய்ச் சிரித்தான்.

 

“இப்போ எதுக்கு திருடன் மாதிரி பார்க்குறே?” அவன் சிரிப்பில் தொலைந்து போனாள் மலர்க் கொடியாள்.

 

“சும்மா ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன். நீ ரொமான்ஸை ஞாபகப்படுத்திட்ட. சோ இனி ம்ம் ம்ம்?” கண்களால் கதை பேசியவாறு அவளை நெருங்கி வந்தான்.

 

“என்ன ம்ம் ம்ம்?” முறைப்புடன் நின்றாள் அவள்.

 

“ஒன்னே ஒன்னு அம்முலு” அவள் பின்னால் சுற்றினான் அருள்.

 

“ஒன்னுனு சொல்லி அது எத்தனை ஆகும்னு எனக்கு நல்லா தெரியும்டா கேடி” என்றவாறு தோசை ஊற்றினாள் அக்ஷு.

 

“நீ ரொம்ப தான் பிகு பண்ணுறே” முறைப்புடன் பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தான்.

 

“இப்போல்லாம் உனக்கு மூக்கு மேல கோபம் வருது டா. முன்ன எல்லாம் எவ்ளோ கூலா இருப்ப” அதற்கு மேல் பேசாமல் இருவரும் சேர்ந்து சமைத்து முடித்தனர்.

 

ஹரிஷிற்கும் மித்ரனிற்கும் பரிமாறி விட்டு தானும் சாப்பிட்டாள் அவள். 

“நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வரேன் செல்லக்குட்டி” என்று ஹரிஷ் கூற, “ஓகேப்பா” என கையசைத்தாள்.

 

“நான் குத்துக்கல்லாட்டம் இருக்கேன். என்னை விட்டுட்டு ஆட்டுக்குட்டி சோப்புக் கட்டினு” வாய்க்குள் முனகினான் மைந்தன்.

 

“டேய் டேய் எனக்கு கேட்குது. சும்மா கோச்சுக்காம அவளை பார்த்துக்கோ. டான்ஸ் ஆடி பாத்திரங்களை உடைக்க போறா” சிரிப்புடன் சென்றார் ஹரிஷ்.

 

விரிந்த வாய் மூடாமல் நின்றவள், “ஏன்டா இதை முன்னமே சொல்லல!? அப்பா பார்த்ததை நான் காணலையே” நகத்தைக் கடித்தாள் அக்ஷு.

 

“நான் ஏன் சொல்லனும்? குரங்குக் குட்டி” என்று அறையினுள் நுழைந்து கொண்டான்.

 

“இருடா உன்னை வெச்சுக்குறேன்” உள்ளுக்குள் கருவிக் கொண்டு சமயலறையை சுத்தம் செய்து விட்டு தன்னவனைத் தேடி சென்றாள்.

 

“ஹல்லோ எக்ஸ்கியூஸ் மீ மை ஹஸ்பண்ட்” அவன் காதருகே சத்தமாக அழைக்க, யாருக்கு வந்த விருந்தோ என்று ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான் மித்ரன்.

 

தொண்டையை செருமிப் பார்த்தாள், கைகளைத் தட்டினாள், அவன் தோளைச் சுரண்டினாள் எதற்கும் பிடி கொடுக்காமல் இருந்தான் அவன்.

 

“டேய் எருமை! நீ ரொம்பத் தான்டா பண்ணுற. ஓவரா சீன் போடாத” என்று கத்த,

 

“என்னடி பண்ணுவ?” சடாரெனத் திரும்பி அவளிடம் சீறினான்.

 

“நா..நான் ஃபோன்ல என் ப்ரெண்டு கிட்ட பேசிட்டு இருக்கேன்” அலைபேசியை காதில் வைத்தவளைக் கண்டு முறைப்புடன் திரும்பிக் கொண்டான்.

 

“நீ இவ்ளோ தூரத்துக்கு போனா நான் பல மைல் தூரத்துக்கு போவேன். சும்மா பார்த்துட்டே இருக்க மாட்டேன். அந்த முட்டைக் கண்ணை நோண்டிருவேன். முடியைப் பிச்சு உதறிடுவேன். வெள்ளைப் பன்னி ! டைனோசர்” என்று சொல்ல இவனுக்கோ இரத்த அழுத்தம் எகிறி உச்சம் தொட்டது.

 

“என்னைத் தான் சொல்லுறாள் இவள். வாயைத் தச்சு வைக்கனும்” உள்ளுக்குள் பொங்கினான் ஆணவன்.

 

“என்னடா உனக்கு மறைமுகமா திட்டுறேனு நினைக்கிறியா? மறைமுகமா இல்லை டேரக்டாவே சொல்லுவேன் டா. ஆனால் என்ன? உன் முகத்தைப் பார்க்கும் போது திட்ட தோணாது. அந்த முகம் முழுக்க முத்தத் தடம் பதிக்க துடிக்குது என் இதயம்” 

 

இதற்கு மேல் முடியாமல் பொறுமை பறந்து போக, அவள் கையில் இருந்த ஃபோனை பிடுங்கி எடுத்தான்.

 

“ஹேய் நான் பேசிட்டு இருக்கேன்”

 

“யாரு? உன் வீணாப் போன ப்ரெண்டு கூட பேசுறியா? அவன் முகத்தில் முத்த தடம் பதிப்பியா நீ? உன் கன்னத்தில் பதிக்க போறேன் டி நான்” கையை ஓங்கியவனைக் கண்டு முகம் சுருக்கினாள் பெண்ணவள்.

 

அவளது சுருங்கிய கண்களையும், பயந்த முகபாவனையையும் ரசித்துக் கொண்டே கையைக் கீழிறக்கி தன் இதழ்களால் அழுத்தமாக அவள் மென்கன்னத்தில் தடம் பதித்தான் அருள் மித்ரன்.

 

எதிர்பாராத முத்தத்தில் கண்களைத் திறந்து, “கோபம் போச்சாமா அதிரடி நாயகனுக்கு?” இதழ் சுளிப்புடன் கேட்டாள்.

 

“இந்த அதிரடி நாயகனையே ஒற்றைப் பார்வையில் ஆட்டமிழக்கச் செய்றாளே என்னோட அடாவடி நாயகி” அவளது குவிந்த கீழிதழை கட்டை விரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்தான்.

 

“அப்பறம் ஏன் சும்மா வீம்பு பிடிச்சுட்டு இருக்கே?” அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள் அக்ஷரா.

 

“ஒரு கிக்குக்காக! சும்மா பேசிட்டு ரொமான்ஸ் பண்ணிட்டு மட்டும் இருந்தா போரடிக்கும்ல. அதான் இப்படி குட்டி குட்டியா சண்டைகள்! 

இந்த சின்ன செல்ல சண்டைகள் வாழ்க்கையில் இன்னும் சுவாரசியம் கூட்டும்.

 

கொஞ்சம் காதல், கொஞ்சும் மோதல், கெஞ்சும் கோபம், மிஞ்சும் தாபம் இப்படினு உன் கூட இருக்கிற நேரத்தை சிறிதும் வீணடிக்காமல் ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சு ருசிச்சு நானும் சந்தோஷப்பட்டு, உனக்கும் அதே சந்தோஷத்தைக் கொடுத்து வாழனும்னு ஆசைப்படுறேன்” கண்களை மூடி ரசனையுடன் கூறினான் காளை.

 

“ப்பாஹ்! இப்படிலாம் பேசுவியா நீ? எனக்கும் இப்படிலாம் தோணும். ஆனால் இதே மாதிரி சொல்ல வராது. உன்னைப் பார்க்கும் போது உனக்குள் எத்தனை மாற்றம் என்று யோசிக்க வைக்குது. சின்ன வயசுல உன் கிட்ட ஒரு வார்த்தை பதில் எதிர்பார்க்குறதே பெரும்பாடா இருக்கும். இப்போ இவ்ளோ பேசுற”

 

“யாவும் காதல் செய்யும் மாயை! ஆனால் என் மாற்றத்திற்கு மூலகாரணம் அவன். அவன் மட்டும் இல்லைனா நான் அமைதியா, ஏனோ தானோன்னு என்னைத் தேடி வரதை வெச்சு வாழ்ந்திருப்பேன்.

 

அவனால் எனக்குப் பிடித்த மாதிரி எனக்கான காதலை நானே தேடிப் பிடித்தேன். உன்னைக் கைப்பிடித்து மனநிறைவோடு வாழுறேன். எனக்குள் வசந்தம் வீச வந்தவன் அவன்” நண்பனை நினைக்கையில் அவன் இதழ்களில் புன்னகை.

 

“இவ்ளோ சொல்லுற. ஆனால் வேறு நாளைக்கு என் மாப்ள, என்னோட விஷு என்று பேசுவ. இன்னிக்கு அவன் அவன்னு பேசுறியே. ஏன் பெயரை சொன்னால் குறைந்து போய்டுவியா?” கேள்வியாக அவனை விழியுயர்த்தி நோக்கினாள்.

 

“எதுவும் குறையாது. அவன் மேலுள்ள கோபம் அவன் பேசும் வரையிலும் குறையாது. அவன் பழையபடி என் கிட்ட வரும் வரைக்கும் என் தவிப்பு குறையாது. அப்படியே தள்ளி இருந்தாலும் கூட அவன் மேலுள்ள அன்பு குறையாது. நட்பு மாறாது” என்று கூறியவனைக் கண்டு,

 

“கண்டிப்பா உன் ஏக்கத்தை தவிப்பை எல்லாம் போக்க பழையபடி உன் விஷுவா வருவான். நிச்சயம் உன்னோட பேசுவான்” உறுதியாக சொன்னாள் மனைவி.

 

“எனக்கும் அதே உறுதி இருக்கு” திருப்தியுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டான் விஷ்வாவின் மித்திரன்.

 

நட்பு தொடரும்…….!!

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!