💙 *°•°விஷ்வ மித்ரன்°•°* 💙
~~~~~~~~~~~~~~~~~~~~
💙 நட்பு 55
யாருமற்ற அந்த சிறிய வீட்டில் கதிரையில் கைகள் கட்டப்பட்டு அமர்ந்திருந்தான் ஒருவன். அவன் முகம் வியர்வையில் குளித்திருக்க, உடம்போ நடுங்கிக் கொண்டிருந்தது.
“ஏன்டா எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படி பண்ணி இருப்ப?” அவன் சர்ட் காலரைக் கொத்தாகப் பற்றினான் எதிரில் நின்றவன்.
“சா…சார் என்னை விட்டுடுங்க. நான் எதையும் வேணும்னே பண்ணலை. பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன்” அவனது பார்வையில் கை கால்கள் உதற நடுக்கத்துடன் பதிலிறுத்தினான்.
“ஏன்டா பணம் பணம்னு தப்பு பண்ணுறீங்க? உனக்கு பணம் தேவைன்னா அதை நல்ல வழிமில் தேடிக்க வேண்டியது தானே?” அவனை கோபக் கனலுடன் முறைத்தான் விஷ்வஜித்.
அண்ணனது கோபத்தை ஒன்றும் புரியாமல் முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.
“தப்பு தான் சார்! ஆனால் எனக்கு வேறு வழி தெரியல. அந்த மேடம் பணம் கொடுப்பதைப் பார்த்து பேராசையில் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சு விடுங்க சார்” கரம் கூப்பி கெஞ்சினான் அவன். விஷ்வாவின் ஆபீஸில் வேலை செய்யும் சேகர்.
“மன்னிப்பு கேட்குறியா? உன் மேல அவ்ளோ கோபம் வருதுடா. உன்னை வெட்டிப் போட்டா தான் என் ஆத்திரம் தீரும். ஆனால் உன்னை நம்பி வந்த பொண்டாட்டியையும் அப்பானு கூப்பிட வந்த அந்த அப்பாவி ஜீவனையும் நெனச்சு சும்மா விடுறேன்” பற்களைக் கடித்துக் கொண்டு அவனை உறுத்து விழித்தான்.
“ரொம்ப நன்றி சார்! இனிமே இது மாதிரி பண்ண நினைக்கவும் மாட்டேன்” நன்றிப் பெருக்குடன் விஷ்வாவைப் பார்த்தான் சேகர்.
“ஆனால் உனக்கு இனிமே ஆபிஸில் வேலை கிடையாது. ஒரு தடவை உன் மேல இருந்த நம்பிக்கை போனதுக்கு பிறகு இனிமே அந்த நம்பிக்கையைக் கொண்டு வர்ரது கஷ்டம். சோ உனக்கு வேற ஒரு வேலை தரப் போறேன். இனிமேலாவது நியாயமா உழைச்சு அந்த காசை உன் குடும்பத்துக்காக செலவு செய்” என்று சொன்னவன்,
“எங்கே உன் மேடமுக்கு ஃபோன் போட்டு வர சொல்லு” என்க அவன் அழைத்து விட்டு அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக சொன்னான்.
“ஓஹ் ஷிட்” என்று தலையைக் கோதும் சமயம், “விஷு” என்று கேட்ட அழைப்பில் அவனோ மெதுவாகத் திரும்பினான்.
பேன்ட் பாக்கெட்டினுள் கையை விட்டு கண்களில் கோபக் கனல் தெறிக்க நின்றிருந்தான் மித்து.
“வாடா மாப்ள!” என்று விஷ்வா கையசைக்கவும் முகத்தில் அரும்பிய மெல்லிய புன்னகையுடன் வந்தான் மித்ரன்.
“நீ மாப்ளங்குற, அவன் சிரிக்கிறான். என்னடா நடக்குது இங்கே? இது கனவா இல்ல நிஜமா?” சத்தமாகவே கேட்டு வைத்தாள் அக்ஷரா.
“ஏய் அம்முலு! நீ இங்கே எப்படி டி?” மனைவியை எதிர்பாராததால் அவன் நெற்றியில் யோசனை முடிச்சுக்கள்.
“வரும் போது எங்கே போறன்னு கேட்டாள். சொல்லுறதை விட அவளைக் கூட்டிட்டு வருவது பெட்டர்னு தோணுச்சு. அவளும் எல்லாத்தையும் தெளிவா புரிஞ்சுக்கனும்ல?” என்று பதிலளித்தான் நண்பன்.
“என் கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க ரெண்டு பேரும். மண்டை காயுது இங்கே” மிரண்டு விழித்தாள் அக்ஷரா.
“எல்லா கேள்விகளுக்கும் பதில் இப்போவே தெரிஞ்சிரும். முதல்ல ஒருத்தங்களை கூப்பிடலாமா?” என்று கேட்ட மித்து, “ஹலோ மேடம் வாங்க” வாயிலைப் பார்த்து அழைத்தான்.
விஷ்வாவுக்கு ஏதோ புரிந்திடவும் வெடுக்கென நண்பனைப் பார்க்க, வரப் போவது யார் என்ற சிந்தனையுடன் நிற்கலானாள் அவனது தங்கையும்.
முகத்தில் எவ்வித சலனமுமின்றி உள் நுழைந்தாள் த்ரிஷா.
“ஹேய் அருள்! இவளையா சொன்ன?” தன்னவனிடம் வியந்து விட்டு, “வாட் அ சப்ரைஸ் த்ரிஷு?” என தோழியை நோக்கினாள் அக்ஷு.
உதட்டுக்கும் வலிக்காத புன்னகை ஒன்றை மாத்திரமே சிந்திய த்ரிஷாவின் விழிகள் விஷ்வாவின் மீது நிலைக்க, அவனது பார்வையோ ரௌத்திரத்துடன் அவள் மீது படிந்தது.
பின் தங்கையைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான் விஷ்வா.
“கொஞ்ச நாளாகவே ஆபிஸ்ல நிறைய ப்ராப்ளம் குட்டிமா! முக்கியமான டெண்டர் கையை விட்டு போச்சு. எங்களோட டீடேல்ஸ் எல்லாம் பக்காவா தெரிஞ்சுக்கிட்டு வேறொரு கம்பெனிக்கு சொல்லி கொடுத்திருக்காங்க. எங்க கம்பனி சம்பந்தமான டீடேல்ஸ் உடனே வெளியே லீக் ஆகுறது, முக்கியமான மெயில்ஸ் தேவையான நேரத்தில் கிடைக்காம கம்ப்யூட்டர்ல இல்லாம போறது இப்படி சில பல பிரச்சினைகள் நடந்தது. இது பத்தி மித்து கிட்டவும் சொல்லி இருக்கேன்” என்று கூறி நிறுத்தினான்.
“இவ்ளோ நடந்திருக்கா? யார் இதைப் பண்ணுறது அண்ணா?” குழப்பத்துடன் கேட்டாள் அக்ஷரா.
“அதை என்னால எவ்ளோ ட்ரை பண்ணியும் கண்டுபிடிக்க முடியலை. அப்படி இருக்கும் போது இரண்டு நாளைக்கு முன்னால் ஐம்பது இலட்சம் பணம் கட்டியதற்கான ரிசிப்ட், இன்னும் ஒரு அக்ரீமண்ட் பத்தின டாக்குமென்ட் எல்லாம் காணாம போயிருச்சு. அப்போ மட்டும் சீசிடி வேலை செய்யவும் இல்லை.
அதை மூனு நாளைக்குள் நாங்க பார்ட்னர்ஷிப் வெச்சுக்கிட்ட கம்பனிக்கு ஒப்படைச்சு ஆகனும். இதற்கு காரணம் முன்னாடி வந்த பிரச்சினைகளை உருவாக்கிய அந்த ஆள் தான்னு புரிஞ்சுருச்சு. ஆனால் எப்படியாவது உடனே கண்டு பிடித்தே ஆகனும்கிற இக்கட்டான சூழ்நிலை” என்றவனை அன்றைய நாள் நினைவு சூழ்ந்து கொண்டது.
டாக்குமெண்ட்ஸ் காணாமல் போய் விட்டதை அறிந்து தனது கேபினில் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான் விஷ்வஜித். மூளை சிந்திக்கும் திறனை அறவே இழந்து கொண்டிருந்தது.
இது வரை இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு உள்ளானதே இல்லை. முதல் முறை இடிந்து போய் சமாளிக்க முடியாமல் போய் விடுமோ என்று தோன்றிற்று. ஆனாலும் சிந்தித்தான். ஒரு கட்டத்தில் முடியாது போய் அலைபேசியை எடுத்து மித்ரனை அழைக்கலாம் என்று யோசித்த போது அவன் புத்தியில் ஒன்று உறைத்தது.
மித்ரன்! ஆம் இவனுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல் உள்ளுணர்வு கூறியது. ஒவ்வொரு முறை பிரச்சனையின் போதும் மித்து அதனோடு பிணைக்கப்பட்டது போன்று இருந்தது.
புதிய மெயில்கள் அவனது கம்ப்யூட்டரில் இருந்து தான் அழிக்கப்பட்டு இருந்தன. தனது அறைக்கு யாராவது வந்து டாக்குமெண்டை எடுத்திருப்பதற்கான ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்று பார்த்த போது மித்ரனின் காப்பும், அவனது பைக் கீயில் மாட்டியிருக்கும் செயினும் கீழே இருந்தன.
மித்து நேற்று ஆபிஸ் வரவே இல்லை. அப்படி இருக்கும் போது அவனது பொருட்கள் இங்கு இருக்கிறது என்றால் எப்படி? மித்து இதை நிச்சயம் செய்திருக்க மாட்டான். அப்படி என்றால் ஏன் இவ்வாறு? யோசித்தவனுக்கு ஒன்று ஆணித்தரமாகப் புரிந்து போனது.
இது தனது பிசினஸை வீழ்த்த மட்டும் உருவாக்கப்பட்ட சதிவலை அல்ல! தன்னையும் நண்பனையும் பிரிப்பதற்காகவும் கூடவே என்று.
யார் இதைச் செய்தது? தன்னை நண்பனிடமிருந்து பிரிக்க நினைப்பது யார்? கண்டு பிடிக்க ஆயிரம் வழிகள் தேடலாம். ஆனால் மூன்று நாட்கள் அவகாசம் தான் இருக்கிறது எனும் போது வழி தேடி ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது என்றது மனம்.
அக்கணம் அவனில் ஒரு யோசனை உதித்தது. மித்ரனை வைத்தே ஆபிஸில் வலம் வரும் கறுப்பாட்டைக் கண்டு பிடிக்க நினைத்தான். அதை அவனால் ஏற்கவும் முடியவில்லை.
“மனசளவில் மட்டுமல்ல வாய் வார்த்தையாலும் கூட உன்னை பிரியவோ காயப்படுத்தவோ என்னால முடியாது. ஆனால் இப்போ இதைத் தவிர என் கிட்ட வழியே இல்லை மித்ரா! என் நடவடிக்கை இனிமேல் உன்னை கஷ்டப்படுத்தும். ஆனால் இது தான் எனக்கு இருக்கும் ஒரு வழி. என்னை மன்னிச்சுரு டா மாப்ள”
உடைந்து போன குரலில் பேசினான் விஷ்வா.
சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் மித்ரனை முதல் முதலாக ஆபிஸில் அனைவர் முன்னிலையிலும் காயப்படுத்தினான். நண்பனைப் பார்க்க இதயம் வலித்தாலும் கல்லாக இறுகிப் போய் நின்றான்.
அவனது கழுகுக் கண்கள் தம் சண்டையைக் கண்டு யார் முகத்திலாவது சிறு சந்தோஷம் தோன்றுகிறதா என்று ஆராய்ந்தன. சேகரின் முக மாற்றம் அவனுக்கு தப்பவுமில்லை.
கடற்கரைக்கு வந்த போதும் அவன் பின்தொடர்ந்து வருவதை உணர்ந்து மித்ரனோடு பொய்யாக சண்டை போட்டு பேசாமல் இருந்தான். உடனே சேகரை பிடித்து விடாமல், தக்க தருணம் வரும் வரை காத்திருந்தான்.
அதற்கான சூழ்நிலையும் விரைவில் அமைந்தது. இன்று ஆபிஸில் விஷ்வா மித்ரனை குற்றவாளியாகப் பேசினான். சேகருக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. இந்த செய்தியை தன்னை ஆட்டுவிக்கும் நபருக்குச் சொன்னால் கண்டிப்பாக அதிகம் பணம் கிடைக்கும் என்று ஓரமாக சென்று அழைப்பை ஏற்றான்.
“ஹலோ மேடம்! நம்ம ப்ளான் பக்காவா வர்க்அவுட் ஆகிருச்சு. விஷ்வா சார் மித்ரனை தப்பா நெனச்சுட்டார்…..” என்று நடந்தது அனைத்தையும் ஒப்புவிக்க, பின்னால் இருந்து கேட்ட காலடி ஓசையில் ஃபோனை நழுவ விட்டு திரும்பினான் சேகர்.
மார்புக்கு குறுக்கே கை கட்டி நின்றிருந்த விஷ்வாவைக் கண்டு, “சா..ர்.. சார் நீங்க” என்று உளறினான்.
“பேசிட்டு இருக்க நேரம் இல்லை சேகர்! டாக்குமெண்ட் கிடைச்சிருச்சு. உடனே என் கூட வா” என்று அழைக்க தான் பேசியது எதனையும் கேட்கவில்லை என்பதை அறிந்து நிம்மதிப் பெரு மூச்சு விட்டு அவனுடன் கிளம்பினான்.
ஆனால் அது விஷ்வாவின் பார்வைக்கும் செவிக்கும் தப்பவில்லை என்பதை அவன் அறியவில்லை.
நேரே வந்து இந்த வீட்டின் முன் நிறுத்தி அவனைத் தர தரவென இழுத்துச் சென்றவன் அவனை நன்றாகக் கட்டிப் போட்டான்.
“சார் ஏன் என்னைக் கட்டுறீங்க” பயத்தில் எச்சில் வற்றக் கேட்டான் சேகர்.
“பேசாதடா நாயே! என் கிட்ட வேலை பார்த்துட்டு எனக்கே குழி பறிக்கிறியா நம்பிக்கை துரோகி? நீங்க குறுக்கு வழில புகுந்து மட்டுமல்ல டா, ஆதாரத்தைக் காட்டி மித்து தப்பு பண்ணுனான்னு சொன்னாலும் அவன் மேல் துளி கூட சந்தேகப்பட மாட்டேன்.
அவனை சந்தேகப்படறது என்னை நானே சந்தேகப்படுறதுக்கு சமம். என் மாப்ளயை நானே காயப்படுத்துற மாதிரி பண்ணிட்டல்ல” ஆத்திரம் தீரும் வரை அவனை அடித்தான் மித்ரனின் உயிர்த் தோழன்.
பிறகு மித்து வீட்டிற்குச் செல்ல, அவன் எங்கு சென்றான் எனத் தெரியாது என சொன்னாள் அக்ஷு. அவனுக்கு அழைத்து குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு கூறி தங்கையையும் அழைத்துக் கொண்டு மீண்டும் இங்கே வந்து சேர்ந்தான் அவன்.
இது அனைத்தையும் விஷ்வா சொல்லி முடிக்கவும் உறைந்து போய் நின்றிருந்தாள் அக்ஷரா. இவ்வளவு நடந்து இருக்கிறதா? என்று நினைத்தவளுக்கு அண்ணனுக்கு அருள் மீது எந்த கோபமும் இல்லை என்பது பெரும் நிம்மதியைக் கொடுத்தது.
“இதைப் பண்ணுனது யாருண்ணா? இவனுக்கு பணம் கொடுத்தது யார்? இதனால் அவங்களுக்கு என்ன லாபம்? கம்பனி விஷயம் போட்டிக்காக இருக்கலாம்னு விடலாம். பட் உங்களை ஏன் பிரிக்கனும்?” என்று வினாக்களை அடுக்கடுக்காக தொடுத்தாள் அக்ஷரா.
“அதை உன் அருமை நண்பி கிட்ட கேளு அம்முலு” அழுத்தமாக மனைவியை நோக்கினான் மித்ரன்.
“த்ரிஷு கிட்ட ஏன் கேட்கனும்?” புரியாத பாவனையுடன் அவனை ஏறிட்டாள் பெண்.
“இத்தனை வேலைகளையும் பண்ணியதே இவள் தானே?!” த்ரிஷாவை வெறுப்புடன் சுட்டிக் காட்டினான் அவன்.
“வாட்? இவளா பண்ணுனாள்? த்ரி..ஷா நீயா?” அதிர்ச்சியில் வார்த்தைகளைக் கோர்த்து திக்கித் திணறிக் கேட்டாள் அவள்.
“ஆமா நான் தான்” பட்டென பதில் கொடுத்தாள் த்ரிஷா.
“ஏன்டி ஏன் இப்படி பண்ணுன? இவனுங்க உனக்கு என்னடி பாவம் செய்தாங்க? உனக்கு என்னடி ஆச்சு?” கோபத்தில் பிதற்றினாள் அக்ஷரா.
அவளோ பதில் பேசாமல் அமைதியாக இருக்கவும், “வாயைத் திறந்து சொல்லு த்ரிஷா! என் பொறுமையை சோதிக்க வேணாம்” தன் வாயிலிருந்து வார்த்தைகளை உதிர்த்த விஷ்வாவினால் த்ரிஷா இதைச் செய்திருப்பாள் என்று கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
தங்கை போல் அவளைப் பார்த்தான். அக்ஷரா எப்படியோ அதே மாதிரி அண்ணனாக அவளோடு உரிமையோடு அன்போடு பழகினான். அவளது செயலில் தற்போது காயப்பட்டுப் போனான் விஷ்வஜித்.
“சுயரூபம் வெளியே வந்த பிறகும் ஊமைக் கோட்டான் மாதிரி நிற்காத. சொல்லித் தொலை டி” ஆவேசமாகக் கத்தினாள் அக்ஷு. நண்பியின் உண்மை முகம் அவளை குத்திக் கொன்றிருந்தது.
“விஷ்வாவையும் மித்ரனையும் பிரிக்க தான் இப்படி பண்ணுனேன். என் லவ்வரை என்னை விட்டுப் பிரிச்சது இவங்க. என் வாழ்க்கையை மொத்தமாக தொலைச்சுட்டு நிற்கிறேன். இவங்க மட்டும் சந்தோஷமா வாழனும். நான் தினம் தினம் சாகனுமா?” வலியும் கோபமும் மிகைக்கக் கேட்டாள் த்ரிஷா.
“நீ உன் லவ்வரை பிரிய நாங்க காரணமா? நீ யாரை லவ் பண்ணுறன்னு கூட எங்களுக்கு தெரியாது. என்னடி உளளுற?” சீறிப் பாய்ந்தான் மித்து.
“தர்ஷன்! அவனை நான் உயிருக்குயிரா காதலிக்கிறேன். ஐ லவ் ஹிம்”
அவளது பதிலில் திகைத்து கண்களை மூடித் தன்னை நிதானப்படுத்திக் கொண்ட விஷ்வா, “ஏய் உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா அந்த பொறுக்கி தர்ஷனை காதலிக்க? அவனுக்காக உன் லைஃபை அழிச்சிட்டு எங்க வாழ்க்கையைக் கெடுக்க வரியா?” என்று சீற்றத்துடன் வினவினான்.
“என் தர்ஷுவை தப்பா பேச நீ யாரு? அவன் ஒன்னும் பொறுக்கி இல்லை. உன்னால தான் நான் இன்னிக்கு அவனை இழந்துட்டு நிற்கிறேன்” வன்மத்துடன் உரைத்தாள் அவள்.
அக்ஷராவோ நண்பியின் புது அவதாரத்தில் சிலையாகச் சமைந்து நிற்க, “பொண்ணுங்கறதால சும்மா இருக்கேன். இல்லனா பல்லை உடைச்சிருப்பேன். என் விஷுவை என் முன்னாடியே அவன் இவன்னு பேசுறியா” தனது கையை முறுக்கிக் கொண்டு கூறினான் மித்ரன்.
“அப்படி தான் பேசுவேன். என்ன தப்பு பண்ணுனான் அவன்? உன்னை ஏதோ பண்ணிட்டான்னு உள்ளே தூக்கி வெச்சிருக்கான். உன் மேல ரொம்ம்ப பாசம் இருக்கிற மாதிரி சீன். உலகத்தில் இல்லாத நட்போ? இவனைப் போய் எல்லாம் அண்ணானு கூப்பிட்டு இருக்கேன்” முகத்தைச் சுளித்துக் கொண்டாள் த்ரிஷா.
அவள் சொன்ன தோரணையில் மித்ரன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளம் கொதிக்க நிற்க, அவள் கன்னத்தில் இடியென இறங்கியது ஒரு கரம்.
அனைவரும் அதிர்ந்து பார்க்க, கோபமே உருவாய், பெண் வேங்கையாக நின்றிருந்தாள் வைஷ்ணவி.
“வை…வைஷ்ணவி?” கன்னத்தைப் பொத்திக் கொண்டு அதிர்ந்து பார்த்தாள் த்ரிஷா.
“ம்ம் வைஷ்ணவி தான். என்ன ஆரா சௌக்கியமா?” என்று நக்கலாகக் கேட்க, அதிர்ந்து பார்த்தனர் ஆடவர்கள் இருவரும்.
“பொய் எல்லாம் சொல்லி உங்களையும் என்னையும் பிரிக்க ட்ரை பண்ணுனாளே ஆரா. அது வேறு யாரும் இல்லை விஷ்வா! இவள் தான்” தன்னவனிடம் மொழிந்தாள் மாது.
“இவள் தானா அந்த ஆரா?” தன் முன்னே நிற்பவளை அனல் பறக்க முறைத்தான் மித்து.
“என்ன நடந்துச்சு அருள்? ஆரா யாரு?” தலைகால் புரியாது வினவினாள் அக்ஷு.
அவனும் சுருக்கமாக சொல்லி முடிக்க, இன்னும் வெறுத்துப் போனாள் அவள்.
“என்ன பொய் எல்லாம் சொல்லி என்னைக் குழப்பி விட்ட. உன்னை முழுசா தப்பு சொல்ல முடியாது. அதைக் கேட்டு நானும் முட்டாளா நடந்துக்கிட்டேன். ஆனால் இன்னிக்கு பண்ணுனதை மட்டும் என்னால ஏத்துக்க முடியாது. தப்பை எல்லாம் நீயே பண்ணிட்டு பழியை விஷ்வா மேல போடுறியா?” இத்தனை கோபத்துடன் பேசுபவளை ஆச்சரியமாகப் பார்த்தனர் மற்றவர்கள்.
ஆம்! தன்னை விஷ்வா அழைத்து வந்தது முதல் வைஷுவிற்கு அழைத்து ஃபோனை அப்படியே வைத்துக் கொண்டாள் அக்ஷரா. தாம் இருக்கும் இடத்தையும் அனுப்பி விட இங்கு நடப்பதை அலைபேசி வழியே அறிந்து கொண்டு வந்து சேர்ந்தாள் வைஷு.
“என்ன தப்பு பண்ணினேன் நான்? இவங்க பண்ணிய தப்புக்கு தண்டனை கொடுக்க நெனச்சேன்” அலட்சியமாக சொன்னாள் த்ரிஷா.
“கரெக்டு த்ரிஷா! நீ எப்படி இவங்க பண்ணுன தப்புக்கு தண்டனை கொடுக்க நெனச்சியோ, அதே மாதிரி தான் தர்ஷன் பண்ணுன தப்புக்கு அவனுக்கு தண்டனை கெடச்சுது. இதற்கு விஷ்வாவோ அண்ணாவோ காரணம் இல்லை” என்று சொல்லி விட்டு அன்று தன்னைக் கடத்தியது முதல் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் நவி.
ஏதோ சிறிய சண்டைக்காக அவனைக் கைது செய்திருக்கின்றனர் என அவள் நினைத்திருக்க, இப்படி நடந்ததை அறிந்து வாயடைத்துப் போய் நின்றாள் த்ரிஷா. தான் உயிராக நேசித்தவன் அக்ஷராவையே தவறான பார்வை பார்த்து, அவளை அடைய நினைத்ததை எண்ணி அருவறுத்துப் போனாள். இப்படி ஒருவனுக்காக தன் மீது அன்பு கொண்டவர்களை வருத்தியதில் உள்ளம் கூசியது.
“தர்ஷன் இது மட்டுமல்ல! இன்னும் நிறைய பொண்ணுங்களை ரேப் பண்ணி இருக்கான். இன்னுமின்னும் கெட்ட பழக்கங்கள் இருக்கு. சரியாக தேடிப் பார்க்காமல் இப்படிப்பட்ட ஒருத்தனை காதலிச்சுட்டு, அவன் எதுக்காக தண்டனை அனுபவிக்கிறான் என்பதையும் முழுதாக தெரிந்து கொள்ளாமல் நீயா ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு தப்பு பண்ணிட்ட த்ரிஷா” அழுத்தம் திருத்தமாக கூறினாள் வைஷ்ணவி.
“இவள் கிட்ட எதுக்கு வைஷு நிதானமா பேசிட்டு இருக்கே? என் நட்பை, விஷுவோட பாசத்தை எல்லாம் கொச்சைப்படுத்துற மாதிரி பண்ணிட்டாள். இவள் முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கலை” வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அக்ஷரா.
“நான் பண்ணுன தப்பு இப்போ புரியுது அக்ஷு! எவ்ளோ புண்ணியம் செய்தாலும் இந்த பாவம் தீராது. நான் செய்தது மன்னிப்பு தர்ற குற்றமும் இல்லை” தலையைக் குனித்துக் கொண்டாள் த்ரிஷா.
“எதை வேண்டுமானாலும் மன்னிப்பேன் டி. ஆனால் உன்னால விஷு மித்துவை ஹேர்ட் பண்ணுனான் பார்த்தியா அதை மட்டும் என்னால எந்த ஜென்மத்திலும் மறக்க முடியாது. நடிப்பாக இருந்தாலுமே அவங்க பிரிந்து இருக்க நீ காரணமாகிட்ட” தோழியை கோபத்துடன் பார்த்தாள் அக்ஷு.
“உன் நிலமை புரியுது டி. நான் இங்கே நின்னு உங்களை கஷ்டப்படுத்த விரும்பலை. நான் யூ.எஸ்கு டாடி கிட்டவே போயிட போறேன். உங்க நாலு பேருமே என்னால பாதிக்கப்பட்டு இருக்கீங்க. இனி உங்க லைஃப்ல த்ரிஷா வர மாட்டா” என்றவள் விஷ்வாவின் முன் வந்து,
“விச்சு! சாரி விஷ்வா அண்ணா! நான் கிளம்புறேன். இந்தாங்க டாக்குமெண்ட் எல்லாம் இருக்கு” அவன் கையில் ஒரு பையைத் திணித்து விட்டு சென்றாள் த்ரிஷா.
“எங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும்” தமக்கு கெடுதல் செய்தவள் ஆயினும், அவள் நன்றாக எந்த கெட்ட எண்ணங்களும் இன்றி வாழ வேண்டும் என்று நால்வரும் மனமார வேண்டிக் கொண்டனர்.
“உனக்கு எப்படி த்ரிஷாவைத் தெரிய வந்துச்சு டா?” நண்பனிடம் கேட்டான் விஷ்வா.
“நான் ஆபீஸ் போகும் போது சேகர் ஃபோன் இருந்தது. அதை எடுத்து வைக்கலாம்னு பார்த்தப்போ அதில் த்ரிஷாவோட கால் வந்துச்சு. ஒரு சந்தேகத்தில் அட்டன்ட் பண்ணுனதும் அவளே மொத்தமா உளறிக் கொட்டிட்டாள். நான் உன் கூட கோபமா இருக்கிற மாதிரி பேசவும் உன்னை நான் மொத்தமா வெறுத்துட்டேன்னு நெனச்சு என்னை அவ கட்சியில் சேர்த்துக்க ஓடி வந்துட்டா” கடினமான குரலில் செப்பினான் அவன்.
“எல்லாம் சரி! நீங்க ரெண்டு பேரும் எப்படி சேர்ந்தீங்க?” அதிமுக்கியமான வினாவைத் தொடுத்தாள் அக்ஷரா.
“நேற்று நைட்” என்று கூறிய விஷ்வா கண்சிமிட்டலுடன் நேற்றைய சந்திப்பைக் கூறத் துவங்கினான்.
நண்பனுடன் ஏற்படுத்திக் கொண்ட பிரிவினால் மனம் நிம்மதியிழந்து தவித்துக் கொண்டிருந்தது விஷ்வாவுக்கு. அவனோடு பேசாமல் ஏதோ போல் இருந்தது. இனியும் மறைக்காமல் உண்மையை அவனிடம் கூறி விட முடிவு செய்தான்.
அவனுக்கு அழைப்பு விடுக்க, “சொல்லுங்க விஷ்வா சார்” படுநக்கலாகப் பேசினான் மித்ரன்.
அதில் அவனும் கடுப்பாகி, “உங்க கூட கொஞ்சம் பேசனும் மித்ரன். பீச்கு கொஞ்சம் வாங்க” என்றான்.
“இந்த நேரத்தில் பீச் போக நாம லவ்வர்ஸா?” மறுமுனையில் வெடுக்கென பிறந்தது கேள்வி.
“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா லவ்வர்ஸ் ஆகிருவோம். இன்னிக்கே ப்ரபோஸ் பண்ண போறேன். கண்டிப்பா வாங்க பேபி” கொஞ்சலுடன் சொன்னான் விஷ்வா.
“என்னால வர முடியாது போடா” என அழைப்பைத் துண்டித்து விட்டான்.
அவனுடன் எப்படியோ பேசி விட்டதால் அரும்பிய புன்னகையுடன் டீசர்ட்டை போட்டுக் கொண்டு பைக்கில் கிளம்பினான்.
அவனுக்கு முன்னால் அங்கு வந்திருந்த நண்பனைக் கண்டு, “பரவாயில்லையே என்னைக் காண ஓடோடி வந்துட்டீங்க? அவ்வளவு காதலா?” என்று கேட்டவாறு அருகில் அமர்ந்தான்.
“ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை” முறைப்புடன் கத்தினான் மித்து.
“எஸ் எஸ்! காதல் இல்லை ஊடல். மருத நிலத்து ஒழுக்கம் தான் அது. இது நெய்தல் இல்லையா? சோ இரங்கல் வரனும்” அழகாக வசனம் பேசியவனைத் தள்ளி,
“ஏன்டா நானே ஏகப்பட்ட மண்டைக் குடைச்சல்ல இருக்கேன். என்னைக் கூப்பிட்டு வெச்சு சங்ககால அகத்திணை ஒழுக்கத்தை விளங்கப்படுத்தறியா? சாவு டா” அவன் வயிற்றில் வலிக்காமல் குத்தினான் அவன்.
“ஏய் வலிக்கவே இல்லை டா. வலிக்க குத்து. ம்ம் நல்லா அடி” மணலில் அப்படியே சாய்ந்து ஒரு பக்கமாகச் சாய்ந்து தலையைக் கைகளால் தாங்கியவாறு அவனை ஊக்கப்படுத்தினான் நண்பன்.
“உன்னை மாதிரி என்னை நேசிக்கிறவனுக்கு வலியைக் கொடுக்கிற ஆள் நான் இல்லை. என்னை காயப்படுத்தினாலும் அவன் மேல பாசம் இருக்குன்னா அந்த காயத்தை அவனுக்கு திருப்பி கொடுக்க மாட்டேன்” என்று உறுதியாக சொன்னவன், சட்டென குரல் உடைய, “இங்கே வலிக்குது டா உன்னால! ஏன் மாப்ள என்னை விலகிப் போற?” நெஞ்சைத் தொட்டுக் காட்டினான் தோழன்.
“மித்து! நான் சொல்வதைக் கேளு” அவனது சோகத்தில் உள்ளம் நொறுங்கியது விஷ்வாவுக்கு.
“கேட்டுட்டு தானே இருக்கேன். அதைக் கேட்டு தான் மனசு ஒடஞ்சி போய் கிடக்கு. இப்படி என்னை பேசாம கொல்லுறதுக்கு பதிலா நிஜமாவே கொன்னுரு” ஆற்றாமையுடன் கூறினான் மித்ரன்.
“உன்னைக் கொன்னா எனக்கு யாருடா இருக்கா? இப்படி பேசாத மாப்ள?”
“இப்படி மாப்ள கீப்ளனு கூப்பிடாத. சும்மா ஆசையைக் காட்டிட்டு ஆபீஸ்கு வந்தா மட்டும் மிஸ்டர் மித்ரன் சிஸ்டர் புத்திரன்னு பேசு”
“அப்படினா உனக்கு நான் மாப்ளனு கூப்பிடனும்னு ஆசை இருக்கு. இப்போ கூப்பிடுறேன் உன் ஆசை போக” என்றவன் மாப்ள, மாப்ள என்று அழைத்துக் கொண்டே இருக்க,
“பேசினா மட்டும் போதாது மணல்ல எழுது” என்றான் அவன்.
தலையசைப்புடன் மணலில் மாப்ள என்று எழுதி எழுதி அதை உச்சரித்தவனைக் கண்டு இவனுக்குப் புன்னகை.
ஆனால் அதைக் காட்டாமல் சட்டென இதழுக்குள் விழுங்கிக் கொண்டவனுக்கு இன்னும் பத்து வயதில் ப்ரெண்ட்ஸ்’ என்று கையை நீட்டிய விஷ்வா போன்றே இவன் தெரிந்தான்.
“வாய் வலிக்குது டா போதுமா?” என்று கேட்டான் விஷு.
“இல்லை பத்தலை” என்று வேண்டுமென்றே கூற, “பாக்கு வெத்தலை” முறைத்துக் கொண்டு எழும்பி கடலைகளை நோக்கி சென்றான்.
என்ன செய்ய போகிறான் என்று பார்க்கும் போது, மண்டியிட்டு கைகளை விரித்து “சாரி மாப்ள. ரியல்லி சாரி” என்று தன்னால் இயன்ற அளவு சத்தமாக கத்தினான்.
அவனது சத்தம் அந்த இரவுப் பொழுதின் அமைதியைக் கிழித்து எங்கும் எதிரொலிக்க, எழுந்து சென்று நண்பனின் அருகில் தானும் மண்டியிட்டு அமர்ந்து கொண்டான் மித்ரன்.
“கோபம் போயிருச்சா மித்து?” என்று நண்பனைப் பார்க்க, “இல்லை! இருந்தா தானே போகனும். நீ பேசலைனு வருத்தம் தான். எனக்கு உன் மேல கோபம் வராது என்னைக்கும்” புன்னகையுடன் அவன் முடியைச் சிலுப்பி விட்டான்.
“நீ சாரி கேட்க கூடாது. ஏன்னா நீ இப்படி பண்ண ஏதாவது ரீசன் இருக்கும் என்று எனக்கு தெரியும். தெரிந்து தெரிந்தே உன்னால ஒரு போதும் என்னை காயப்படுத்த முடியாது. இதெல்லாம் உணர்ந்தும் நீ என்னை விட்டு தூரமா போகும் போது அப்போ தோணுற ஏமாற்றத்தில் உன்னைத் திட்டிட்டேன்” என்று மென் குரலில் கூறினான் மித்து.
“உன்னைத் தவிர என்னை யாராலையும் முழுசா புரிஞ்சுக்க முடியாது. நீ என் மித்து டா! ஆனாலும் உன்னை ரொம்ப ஹேர்ட் பண்ணிட்டேன் அத்தனை பேர் முன்னாடியும்” என்றவன் அவனிடம் ஒன்றையும் விடாமல் அனைத்தையும் ஒப்புவித்தான்.
அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்தான் நண்பன்.
“இவ்வளவு பிரச்சினைகளை எப்படிடா நீ தனியா சுமந்துட்டு இருந்த? ஆனாலும் நீ எடுத்த முடிவு சரி தான். இல்லேனா மூனு நாளைக்குள் பிரச்சினையைத் தீர்க்க வேறு வழி இல்லை. உன் முடிவு படியே செய் விஷு” நண்பனின் தோளில் தட்டிக் கொடுத்தான்.
“எப்படியாவது கண்டு பிடிப்பேன் டா. நடிப்பு என்றாலும் கூட நானே உன்னைக் கஷ்டப்படுத்துற மாதிரி பண்ண வெச்ச ஆளை சும்மா விட மாட்டேன்” மணலில் கையை அடித்துக் கூறினான் விஷு.
“டென்ஷன் ஆகாத. எல்லா பிரச்சினையும் சரியாகிரும். நாளைக்கு நீ என்னைக் குற்றவாளியாக நெனச்சு டாக்குமெண்டை நான் திருடின மாதிரி ஆபிஸ்ல பேசு. நிச்சயம் ஏதாவது ஒரு க்ளூ கிடைக்கும்” என்று யோசனை சொன்னான் காளை.
“திரும்பவும் உன்னை எல்லார் முன்னாடியும் காட்சிப் பொருளாக்க சொல்லுறியா?”
“பிரச்சினையைத் தீர்க்க இது ஒன்று வழியாக இருக்கும் போது இதை செஞ்சு தான் ஆகனும்” என்றான் மித்து.
“எனக்காக நீ நாளைக்கு தலை குனிந்து நிற்க போறல்ல. உனக்காக நான் என்ன செய்யட்டும்?” இயலாமையுடன் கேட்டான் விஷ்வா.
“என் தோளில் சாஞ்சுக்கோ. இப்போதைக்கு உன் மனசு சமாதானம் ஆகிருமே. அது போதும் மாப்ள எனக்கு” என்றவனை அன்பு பொங்க பார்த்தவாறு அவன் தோளில் சாய்ந்தான் விஷ்வஜித்.
தன் தோளி
ல் சாய்ந்த நண்பனை பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்த தோழனுக்கு உள்ளம் நிறைந்த உணர்வு.
இதனைச் சொல்லி விட்டு, “எப்படி டி ஃப்ளேஷ்பாக்?” என்று கேட்டான் விஷு.
“வழக்கமா பாசமலர் படத்தை ஓட்டுவீங்க தான். ஆனால் இன்னிக்கு கொஞ்சம் வேற மாதிரி இருந்தது” என்றாள் அக்ஷரா.
இவர்களது நிகரிலா நட்பில் மீண்டும் மீண்டும் சிலிர்த்துப் போனாள் நவி.
“அதை யேன்டி மூக்கை சுளிச்சுட்டு சொல்லுற?” என்று மித்து கேட்க, “குட்டிப் பிசாசுக்கு பொறாமை டா” அவளது தலையில் நங்கென்று கொட்டு வைத்தான் அண்ணன்காரன்.
“போடா நெட்டைக் கொக்கு” தலையைத் தடவிக் கொண்டவளை லேசாக அணைத்து, “சும்மா இரேன்டா” என கூறினான் மித்து.
“அடடே! எனக்கு சப்போர்ட் பண்ணிட்ட. இன்னிக்கு மழை பெய்யுமா?” வியந்து பார்த்தாள் மனைவி.
“நிச்சயம் மழை பொழியும்! பாச மழை!” என்று கூறிய விஷ்வா, தன்னவள் காதில், “காதல் மழையும் பயங்கரமாக பொழியும். நனைய ரெடியாகிக்கோ” என கிசுகிசுக்க அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் ஹனி.
நட்பு தொடரும்…….!!
ஷம்லா பஸ்லி