❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️
நிலவு 09
அதியின் வார்த்தைகளில் மனம் வலிக்க, நடைப்பிணமாக வீடு வந்து சேர்ந்தான் உதய்.
வலித்தது. அவள் பேசியதை நினைக்க நினைக்க மனம் மிகவும் வலித்தது. ‘நீ யாருன்னு தெரியாது’ எவ்வளவு சுலபமாக இந்த வார்த்தையை சொல்லி விட்டாள். அதைக் கேட்டவனுக்குத் தானே தாங்க முடியவில்லை.
“ஏன் இப்படி சொல்லிட்டீங்க இதயா? என்னை உங்களுக்கு பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். அதை உங்க கண்ணுல பார்த்திருக்கிறேன். ஷாலுவுக்காக நான் ஒவ்வொன்னையும் செய்யும் போது நீங்க என்னைக் கண் சிமிட்ட மறந்து பார்த்தது எனக்குத் தெரியும். அப்புறம் ஏன்? ஏன் இந்த நாடகம்?” என்று கேட்டவனுக்கு கண்கள் கலங்கிச் சிவந்தன.
“உங்க மனசுல ஏதோ நிறைய குழப்பங்கள் இருக்கு. அதான் உங்களை எது செய்யுறீங்கனு தெரியாமல் செய்ய வைக்குது. உங்களை அறியாமலே ஏதேதோ பைத்தியக்காரத்தனமா பண்ணுறீங்க. ஐ ஆம் டாக்டர். நீங்க ஏதோ மன உளைச்சல்ல இருக்கீங்கன்னு என்னால உணர முடியுது. இப்போ என்னை இப்படி எல்லாம் பேசினது நீங்க உங்களையே காயப்படுத்திக்கிட்டதுக்கு சமன். ஐ நோ! உங்களால என்னை ஒரு போதும் மறக்க முடியாது. உங்க மனசுல நான் இருக்கேன்” அத்தனை வலியிலும் புன்னகைக்க முயன்றான் வர்ஷன்.
‘வலிகளுக்கு மத்தியில் பூக்கும் புன்னகையும் அழகு தான்’ என்பதே அவனது தாரக மந்திரம்! அதை இன்று அவனுக்கே பயன்படுத்த முடியாமல் போனது தான் விதி!
“என்னை நீங்க கண்டிப்பா தேடி வருவீங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க இப்படி பேசினதால உங்களை வெறுத்து மொத்தமா மறந்து போயிட்டேன்னா நான் உங்க மேல வெச்சதுக்குப் பெயர் காதலே இல்லை.
எத்தனை முறை வீழ்ந்தாலும், காயங்களைத் தந்தாலும், வலிகளை அள்ளி வீசினாலும், காதல்ல இருந்து கொஞ்சமும் மாறாமல் இருக்கிறது தான் உண்மையான காதல்! எனக்கு ரொம்ப வலிச்சுது தியா. இப்போவும் வலிக்குது. இந்த வலி சீக்கிரம் ஆறிடும்னும் நம்பிக்கை இல்ல. இருந்தாலும் அதையும் மீறி உங்க மேல அளவு கடந்த காதல் இருக்கு.
‘நீ எனக்கு பொம்மை வாங்கி தரலல? நீ என் அம்மாவே இல்லை. நீ எனக்கு வேண்டாம்’ அப்படினு தன் பிள்ளை சொல்லுறதால எந்த அம்மாவும் குழந்தையை வெறுக்குறது இல்லை. அம்மா குழந்தை மேல வெச்ச அன்பு குறையறதும் இல்ல. அன்பு ஒரு மேஜிக்! எனக்கும் உங்களுக்கும் இருக்குற உறவையும் அந்த மேஜிக் சரி பண்ணிடும். எனக்காக நீங்க வரும் வரை நான் காத்துக்கிட்டே இருப்பேன் இது குட்டி. ஐ லவ் யூ. ஐ லவ் யூ சோ மச்”
அவள் மீது கோபம், வருத்தம், அவளது வார்த்தைகள் தந்த வலி, காயங்கள் என அத்தனையும் இருந்தாலும் அவற்றைக் கடந்து உயர்ந்து நின்றது அவள் மீது அவன் கொண்ட தீராக் காதல்.
சிறிது காலம் அவளை விட்டும் பிரிந்து தூரமாக இருக்க வேண்டும் என்று நினைத்தவனை வரவேற்பது போல யூ.எஸ்.ஏவில் ஒரு மெடிக்கல் கேம்பிற்கு அழைப்பு வர அதை உடனே அக்சப்ட் பண்ணினான்.
உதய்யை ஒரு நாளாகக் காணாததால் சோகமாக இருந்த ஷாலு நர்சரி முடிந்ததும் சுமதியின் வரவுக்காகக் காத்திருக்க, அவளது கண்களைப் பின்னாலிருந்து மறைத்தது ஒரு கரம்.
அதை தொட்டுப் பார்க்காமலே குட்டி ரோஜா இதழ்கள் அழகாக விரிய “வர்ஷு” என்று உற்சாகமாகக் கத்தினாள் அவள்.
கைகளை விலக்கி விட்டு “ஓ மை கியூட்டி…!! வர்ஷுவைக் கண்டுபிடிச்சுட்டியா? போ” என கோபம் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான் உதய்.
“நான் உங்க கூட அதை விட கோபம்” கண்களைப் பெரிதாக்கி கைகளை விரித்துக் காட்டியது பிஞ்சு.
“ஏன் கோபமாம் என் செல்லத்துக்கு?” உதடு பிதுக்கினான் அவன்.
“என்னை நேற்று பார்க்க வரலைல? என்னைத் தேடி வர்ஷு இனி வரமாட்டார் என்று அத்து சொல்லுச்சு. அது பொய் தானே?” அது பொய்யாக இருக்க வேண்டும் என்று நினைத்து அவனை ஏறிட்டாள் ஷாலு.
“பொய் இல்ல டா உண்மை. அங்கிள் இனிமேல் நிறைய நாளைக்கு உன்னைப் பார்க்க வரமாட்டேன். என்னை தூர இடத்துக்கு வர சொல்லி இருக்காங்க. போயே ஆகணும் பாப்பா” என அவளது உயரத்துக்குக் குனிந்து நின்றான் ஆடவன்.
அவளது குரலில் வருத்தம் இழையோட “நீங்க போகாதீங்க. நீங்க போனா என் கூட யார் விளையாடுவாங்க? யார் என்ன பீச்சுக்கு கூட்டிட்டு போவாங்க? எனக்கு நீங்க வேணும் வர்ஷு” அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
“அப்படி சொல்லக்கூடாது கியூட்டி. உன் கூட ஜாலியா விளையாட அத்து இருக்கா. என் பெண்டா உன்னை சந்தோஷமா பாத்துப்பாங்க. அவ கிட்ட இப்படி எல்லாம் கேட்கக் கூடாது. உன் மேல நிறைய பாசம் வச்சிருக்காங்க இல்ல. அதனால கவலைப்படுவாங்க” அவளிடம் எடுத்துக் கூறினான் காளை.
“சரி! அங்கிள் சொன்னா ஷாலு கேட்பா. அப்போ உங்க நினைப்பு வந்தா என்ன பண்ணுறது அங்கிள்? உங்களை கூப்பிட்டா ஓடி வந்துடுவீங்களா?” என்று ஆவலுடன் வினவினாள்.
“அப்படி நினைச்ச உடனே ஓடி வர முடியாது. அந்த இடம் இங்கிருந்து ரொம்ப தூரம். வர்ஷு ஞாபகம் வந்தா உனக்கு வெச்சிக்கிற மாதிரி ஒன்னு தரேன்” என்று கூறிட,
“என்ன தருவீங்க?” என் ஆர்வமாக ஏறிட்டாள் ஷாலு.
“நிறைய கிஸ் தருவேன். அதை பத்திரமா வச்சுக்க” என அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்தான். புன்சிரிப்புடன் அவற்றைப் பெற்றுக் கொண்ட அன்புச்சிட்டிடம் தான் பின்னால் மறைத்து வைத்திருந்த பொம்மையை நீட்டினான் உதய்.
“இதுல என்ன இருக்கு?” கண்கள் மின்னக் கேட்டாள்.
“நீ அன்னிக்கு என் கிட்ட வாங்கி கேட்ட கிப்ட் இருக்கு. வீட்டுக்கு போய் பிரிச்சு பாரு. எப்போ எல்லாம் என் ஞாபகம் வருதோ இதை ஹக் பண்ணிட்டு இரு” அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
“அப்படின்னா இதை எந்த நேரமும் ஹக் பண்ணிட்டே இருப்பேன். ஏன்னா க்யூட்டிக்கு எப்போவுமே வர்ஷு ஞாபகம் வரும்” அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவளின் பேச்சில் சிரித்த வர்ஷன் “ஓகே டா! அப்போ நான் போயிட்டு வரேன். நிறைய நாளைக்கு அப்புறம் முடிஞ்சா மீட் பண்ணுவோம்” பிரிய மனமின்றி அவளது தலையைத் தடவி விடை பெற்றான்.
வழக்கத்துக்கு மாறாக ஷாலுவை அழைத்துக் கொண்டு செல்ல வந்திருந்த அதியா அண்ணன் மகளின் கையில் இருந்ததைக் கண்டு “இது என்ன பாப்பா?” எனக் கேட்டாள்.
“வர்ஷு தந்தது. இனிமேல் என்னைப் பாக்க வர மாட்டாராம். அவரைத் தேடி அழாம குட் கேர்ள்லா இருப்பேன்” என்றவளின் புன்னகை அவளுக்கு அந்தப் புன்னகை மன்னன் வர்ஷனை நினைவூட்டியது.
தலை சிலுப்பி அதிலிருந்து மீண்டவள் ஷாலுவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள். ஷாலு வேகமாக உதய்யின் பரிசைப் பிரித்துப் பார்க்க அழகான பெண்டா பொம்மை அவளைப் பார்த்துச் சிரித்தது.
“வாவ்! பெண்டா. நான் அன்னைக்கு அங்கிள் கிட்ட வாங்கி கேட்டது. ஐ அம் சோ ஹாப்பி” எனத் துள்ளிக் குதித்து ஆட்டம் போட்டாள் அவள்.
அந்த பெண்டா பொம்மை அதியாவுக்கு அவனைச் சந்தித்த முதல் நாளை ஞாபகப்படுத்தியது. “பெண்டா பேபி!” என்ற அழைப்பு செவி தீண்டியது.
அந்தக் கவிஞன் அவளுக்காக சொன்ன கவி வரிகள் அடுக்கடுக்காக மின்னி மறைந்தன. கண்களை மூடிக் கொண்டாள் அதியா. அவனோடு பழகிய நாட்களில் வந்ததை விட அவனைப் பிரிந்த பின்னர் அவனது நினைவுகள் அதிகமாக வந்தன. அவளில் சுற்றிச் சுழன்று தவிக்க வைத்தன.
“அவனால நான் ஷாலுவை இழக்கக் கூடாது” என்று உறுதியாக நினைத்த அவளின் இன்னொரு மனமோ “அவன் உயிரை இழந்தாலும் என்னைக்குமே ஷாலுவை இழக்க விட மாட்டான். இது ஏன் உனக்குத் தெரிய மாட்டேங்குது?” என எதிர்க் கேள்வி கேட்டது.
“எனக்கு எதுவுமே தெரிய வேண்டாம். இப்போ அவனை விலகி முன்ன மாதிரி இருக்கேன். இதுவே நல்லாத்தான் இருக்கு. கீழே விழுந்தா சிதறிப் போற கண்ணாடி மாதிரியான உறவுகள் எனக்கு வேண்டாம். அவன் வேண்டவே வேண்டாம்” கண்களை இறுக மூடிக்கொண்டு திரும்பத் திரும்ப அதையே சொன்னாள்.
ஒரு நொடி அவனது வருகைக்காக மனம் ஏங்கும். அந்தத் தவிப்பை ‘பாப்பாவுக்காக அவன் வேண்டாம்’ என்ற போலியான எண்ணத்தில் மறைத்துக் கொள்வாள். உண்மையாக அவளை அவளே ஏமாற்றிக் கொண்டிருந்தாள்.
ஷாலுவோ வர்ஷுவாக நினைத்து பெண்டா உடனே சுற்றினாள். சில சமயங்களில் வர்ஷு, வர்ஷு அங்கிள் என்று அதற்கு முத்தமிடுவாள். அணைத்துக் கொள்வாள். ‘சீக்கிரம் வாங்க’ எற அதன் கன்னத்தைப் பிடித்து ஆடுவாள்.
அதைக் கட்டிக் கொண்டால் தான் அவளுக்கு தூக்கமே வரும். ஆனால் அதியிடம் அவனைத் தேடி அழவில்லை. இருந்தாலும் சில சமயங்களில் தூக்கத்தில் வர்ஷு என முனகுவாள்.
அந்த சத்தத்தில் தன் அத்தையை எழுப்பி விட்டு சிறுமி தூங்கி விடுவாள். இவளது தூக்கம் தான் வர்ஷு நினைப்பில் பாழாகிவிடும்.
“இது என்ன புது வம்பா இருக்கு? அவன் மேல வெச்ச அன்பு இன்னுமே மாறாம இருக்கு. எத்தனை நாள் ஆச்சு. அவன் சொன்ன மாதிரி நான் வரும் வரை வெயிட் பண்றானா. நான் அவன் கிட்ட போன என் கூட பேசுவானா? எப்படி ரியாக்ட் பண்ணுவான்?” என்று மனம் கனவுலகில் சஞ்சரிக்க மூளையில் அபாய மணி ஒலித்தது.
“அவன் எப்படி ரியாக் பண்ணுனா உனக்கு என்ன? வர வர நீ நீயாகவே இல்ல அதி” என தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவன் நினைப்பில் தொலைந்து போனாலும் அவன் மீது தனக்கு இருப்பது வெறும் அன்பு அல்ல கடலளவு காதல் என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளவில்லை அவளது வீம்பு பிடித்த மனம்!
ஒரு அழகான காலைப் பொழுதில் வீதியில் நடந்து வந்து கொண்டிந்திருந்தாள் அதியப் பெண்ணவள். அந்த வீதியில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த மலர்ப் பூங்கா அவளைத் தலை சாய்த்து வரவேற்க அதனுள் நுழைந்தாள்.
அங்கிருந்து கல்பெஞ்சில் அமர்ந்து தன்னைச் சுற்றி மலர்ந்துள்ள பூக்களின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். திடீரென அவள் முகத்தை சில்லென்ற தென்றல் காற்று வந்து தழுவியது. சுற்றி எங்கிலும் மெல்லிசை ஒலிப்பது போல் இருந்தது. ஒருவித ஈர்ப்பு விசை தோன்றியதாக உணர விலுக்கென நிமிர்ந்தாள் அதிய நிலா.
அங்கு யாரும் இல்லை. வேகமாக எழுந்து விழிகளை அனைத்து இடங்களிலும் சுழற்றிப் பார்த்தாள். பின்னால் திரும்பப் போனவள் எதுவோ ஒன்றில் மோதி விழ எத்தனிக்க அவளைத் தாங்கிப் பிடித்தது ஒரு வலிய கரம்.
விழப்போனதால் பயத்தில் கண்களை அழுந்த மூடியிருந்தவளோ தான் இன்னும் விழவில்லை என்பதை உணர்ந்து கண்களைத் திறக்க, தன் முன்னால் இருப்பவனைக் கண்டு இன்பமாக அதிர்ந்தாள். அவளது முகபாவனைகளை கண்களைச் சிமிட்டி ரசனை பொங்கப் பார்த்திருந்தான் அவ்வலிய கரத்தின் சொந்தக்காரன் உதய வர்ஷன்.
காதல் பெருகிப் பொழியும் அவனது விழிகளையே தன் மலர்விழிகளால் ஆழ்ந்து பார்த்தாள் இதயா. அவனைக் கண்டு வெகு நாட்களாகின்றதில் இதயம் தாளம் தப்பித் துடிக்க உதடுகளும் மெலிதாய்த் துடிக்க ஆரம்பித்தன. வேறு யாருமின்றி இருவரும் மட்டுமே இவ்வுலகில் இருப்பது போல் உணர்ந்த அதிக்கு தன்னைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் இருக்க தன்னிலை மறந்தாள்.
சுய உணர்வு பெற்றவனாக அவளைத் தன்னிலிருந்து விலக்கிய உதய் எதுவும் பேசாமல் திரும்பி நடந்தான். அவன் விலகிச் செல்லும் ஒவ்வொரு நொடியும் அவளுள் பெரும் தாக்கத்தையும் சொல்லொணாத் துயரையும் ஏற்படுத்த “உ… உதய்” என காற்றுக்கும் வலிக்காமல் அழைத்தாள் அவள்.
அவ்வழைப்பு அவனது செவியை அடையாமல் போய்விடவே இதற்கு மேலும் தாங்க முடியாதவளாய் ஓடிச் சென்று அவனைப் பின்னாலிருந்து அணைத்து பரந்த முதுகில் முகம் புதைத்தாள் பாவை.
தன் முதுகில் மென் பஞ்சுப் பொதியென அழுந்தியவளை உணர்ந்தவன் திரும்பாமலே அது யார் என்பதை உணர்ந்திட “இதயா” என அசைந்தன இதழ்கள்.
“நானே தான் உதய்! என்னை மறந்துட்டியா? இந்த இதயாவை உன் இதயத்துல இருந்து தூக்கிப் போட்டுரலாம்னு நினைச்சியா?” அழுகையுடன் கேட்டாள் அதி.
அவளது கையைப் பிடித்து முன்னால் இழுத்தெடுத்து “அவ்வளவு ஈஸியா தூக்கிப்போட்டு விட முடியாது அதிம்மா! ஏன்னா அவ்வளவு கனமா இருக்கு உங்க ஞாபகங்கள். அதை தூக்கிப் போடுவது ஒரு பக்கம் இருந்தாலும் உங்களை என் கிட்ட இருந்து ஒரு இன்ச் தள்ளி வைக்கக் கூட யாராலையும் முடியாது. அவ்வளவு நெருக்கமா என் உயிரோடு ஒட்டி உறவாடிட்டு இருக்கீங்க” அவள் கண்களைப் பார்த்து கூறினான் காளை.
“அன்னைக்கு நான் அப்படி நடந்துக்கிட்டது தப்பு தான். அதுவும் அத்தனை பேர் முன்னாடி ஹர்ட் பண்ணது மிகப் பெரிய தப்பு. சாரிங்கிற ஒற்றை வார்த்தையால அந்த பாவத்தைக் கழுவிட முடியாது உதய். எனக்குத் தெரியும் நான் ரொம்பத் தப்பானவ. அதான் அப்பாம்மா அண்ணா அண்ணினு எல்லோருமே என் கூட இருக்கப் பிடிக்காமல் என்னை விட்டுப் போயிட்டாங்க” கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவளது கண்களில் சிறு தூசு விழுந்தால் கூட தாங்காதவனால் அவள் கண்ணீர் விடுவதைத் தாங்க முடியுமோ??
“அழாதீங்க! இப்படி எல்லாம் பேசக்கூடாது. நீங்க பண்ணதை நான் தப்பாவே நினைக்கல. ஏதோ மனக் கஷ்டத்தில் அப்படி பேசிட்டிங்க. தெரிஞ்சே யாரையும் இம்மியளவு கூட நீங்க காயப்படுத்த மாட்டீங்க. சோ ஃபீல் பண்ண வேண்டாம்” அவளது கண்ணீரைத் துடைத்து விட நீண்ட கைகளை பட்டென இழுத்துக் கொண்டான்.
அவனது உள்ளம் உணர்ந்து அவன் கையைப் பிடித்து தன் கண்ணீரைத் துடைத்து விட்டாள் அதியா. அவள் செய்கையில் வியப்பாய் நோக்கினான் ஆணவன்.
“என்ன பார்க்குற? முன்னெல்லாம் விலகி விலகிப் போறவ இப்போ ஒரேடியா மாறி நெருங்கி வராளேன்னு பாக்குறியா? உண்மைதான். ஒருத்தன் நம்ம பக்கத்துல இருக்கும்போது அவங்க அருமை தெரியாது. விலகிப் போனால், பிரிவு வந்தால் தான் அந்த உறவோட மதிப்பு புரியுது. இந்த பிரிவு எனக்கு உன் காதல அப்படியே மண்டையில அடிச்சு சொல்லுச்சு. இப்படிப்பட்ட ஒருத்தன் லைப்ல கிடைக்கவே மாட்டான்னு சொல்லுச்சு. என் மனசு உனக்காக மட்டுமே துடிச்சது” அவனைக் காதலுடன் பார்த்தாள் அவள்.
அவளது வார்த்தைகளில் உச்சி முதல் உள்ளங்கால் வரை மின்சாரம் பாய்ந்திட நின்றான் வர்ஷன். “இதயா! உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா? என் நம்பிக்கையைப் பொய்யாகாமல் எனக்கே எனக்காக வந்துட்டீங்களா?” ஆனந்தமும் ஆச்சரியமுமாக வினவினான் வேங்கை.
“ம்ம்ம்! இந்த வர்ஷனுக்காக, அவனை உயிரா நேசிப்பதற்காக, அவனுக்காகவே வாழறதுக்காக வந்துட்டா உன் இதயா. சந்தோஷமா? இப்போ சந்தோஷமா டா?” உணர்ச்சிகளின் உச்சத்தில் மிதந்தாள் ஊர்வசியவள்.
சந்தோஷத்தில் வார்த்தைகள் வர மறுத்தன அவனுக்கு. தலையை மேலும் கீழுமாக ஆடியவனைக் கண்டு “இப்போ நிஜமாவே நீ தான் பொம்மை மாதிரி இருக்கே. அந்த பொம்மையை அப்படியே மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு டைட்டா ஹக் பண்ணி, போதும் போதும்னு சொல்லுற அளவுக்கு முத்தம் கொடுக்க தோணுது” என்றாள் மாது.
“எது தோணினாலும் அதை சட்டுன்னு செஞ்சிடறது என் ஸ்டைல்” இதழ் கடித்துக் கூறினான் வர்ஷன்.
“இட்ஸ் கரக்ட்! அதையே நானும் என் ஸ்டைலா மாத்திட்டேன்” என்று சொல்லிச் சிரித்த, “ஐ லவ் யூ! ரியல்லி ரியல்லி ஐ லவ் யூ வர்ஷ்” என சந்தோஷமாய் சத்தமிட்டுக் கூறியவாறு ஓடி வந்து அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள் வர்ஷனின் காதல்ப் பெண்ணவள்.
நிலவு தோன்றும்….!!
✒️ ஷம்லா பஸ்லி