விழிகளில் நீருடன் அம்பாய் பாய்ந்து சென்றவள் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் இன்னுழவனைக் கடந்து அவனுக்குப் பின் நின்று கொண்டிருந்தவனின் மார்புக்குள் தஞ்சமடைந்து இருந்தாள்.
இன்னுழவன் திரும்பிப் பார்க்க, அங்கு நின்று கொண்டிருந்தான் நிவர்த்தனன்.
ஆம், மேக விருஷ்டி ஓடிச் சென்று தஞ்சம் அடைந்தது அவளவனிடம் இல்லை. அவள் உடன் பிறந்தவனிடம்.
இப்பொழுது வரை தன் முன் நிற்பவன் தான் தன் மனதிற்கு பாத்தியப்பட்டவன் என அவள் அறியா நிதர்சனம்.
“நிவர்த்தனா…” என அவனை கட்டி அணைத்து அவன் மார்புக்குள் புதைந்து அழுதாள் மேக விருஷ்டி.
தன் சகோதரியை இந்நிலையில் கண்டதும் முற்றிலும் கலங்கி அவளை மேலும் தன்னோடு ஆதுரமாய் அணைத்தவனோ, “அக்கா… என்னாச்சுகா…? ஏன் இப்படி அழுகிற…? காம் டவுன் சிசி…” என்றான் அவள் முதுகு வருடி.
சற்று நேரத்தில் தமையனின் அணைப்பில் அவளது அழுகை கேவலமாக மாறியது.
நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளும் நோக்கில் அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தான்.
சோமசுந்தரம் நிவர்த்தனனை ஆற்றாமை உடன் பார்க்க.. மைதிலி குற்ற உணர்வுடன் பார்த்தார்.
நிவர்த்தனன் கை வளைவுக்குள் மேக விருஷ்டி நிற்க…
“ஓ இவன உன் பொண்ணு இழுத்துகிட்டு போக நினைச்சு தான் அவன் தாலி கட்டாம போயிட்டானா…” நடந்தது தெரிந்தும் மாற்றி திரித்து பேசியவாரு
“உன்ன மாதிரி தான் உன் பொண்ணு இருக்கா சுத்த கேடு கெட்ட குடும்பம்” என தங்கமணி நிவர்த்தனனும் மேக விருஷ்டியும் அக்கா தம்பி என அறியாது வார்த்தையை விட்டார் விஷமமாய்.
அதைக் கேட்டவுடன் கழுத்து நரம்பு புடைக்க “அத்…” என இன்னுழவன் வெடிப்பதற்குள் மேக விருஷ்டியின் கரத்தை அழுத்தி பிடித்து அவர் முன் ஒற்றை விரல் நீட்டி முகமது செஞ்சாந்தாய் சிவக்க “ஏய்… என் அக்காவ பத்தி ஒரு வார்த்தை பேசின… யார் என்ன எல்லாம் பாக்க மாட்டேன் புதைச்சி போட்டு போய்கிட்டே இருப்பேன்” என வெடித்து சிதறி இருந்தான் நிவர்த்தனன்.
தன் முன் நின்ற இனிதுழனியை விலக்கி பார்த்தார் அம்பிகாமா.
“ஓ… செகண்ட் ஹீரோ என்ட்ரி ஆ… பரவால்ல என் பேராண்டி அளவுக்கு இல்லாட்டாலும் இவனும் ஹாண்ட்சம்மு பாயா தான் இருக்கான், நடத்தட்டும் நடத்தட்டும்” என மீண்டும் போனில் பார்வையை பதித்தார்.
எப்பொழுதும் இன்னுழவனின் சீற்றத்திற்கு மட்டுமே அமைதியாகும் தங்கமணி இன்று நிவர்த்தனனின் சீற்றத்தில் விழிகள் நிலை குத்த அதிர்ந்து தான் போனார்.
“ஏய் யாருடா நீ… எங்க வந்து யார மிரட்டுற என சக்திவேல்” வரிந்து கட்டிக் கொண்டு வர…
அவரை பார்த்து திரும்பியவன் “யோவ்… வாய மூடுயா என்ன எகிறிக்கிட்டு வர… வயசானவர்னு பார்க்க மாட்டேன் அடிச்சு பல்ல ஒடச்சிடுவேன்” என வெகுண்டு எழுந்தான் உயிருக்கு உயிரான சகோதரியின் கண்களில் விழி நீரை கண்டவுடன் தன்னிலை இல்லாது.
“டேய் நிவர்த்தனா… அது என் மச்சான்…” என அவன் அருகில் சோமசுந்தரம் வர…
தடை இறுக்கியவன் “யாரா இருந்தா எனக்கு என்னப்பா. என் அக்கா கண்ணுல கண்ணீர் வர வச்ச யாரா இருந்தாலும் எனக்கு முக்கியமே கிடையாது. அது மட்டும் இல்லாம இவர் மேல கொலை வெறில இருக்கேன்” என்றவன் தனலாய் கொதித்தான்.
“அப்பிடி சொல்லுடா நிவர்த்தனா… எவ்ளோ பேசினாங்க தெரியுமா…” என அவன் அருகில் வந்து நின்றார் மைதிலி.
இதற்கிடையில் இவை அனைத்தையும் கைகளை கட்டிக்கொண்டு சற்று நேரம் மௌனத்தை பாவித்து நின்றான் இன்னுழவன்.
அப்பொழுது அவனுக்கு அலைபேசி வாயிலாக சொல்லப்பட்ட செய்தியில் கல்யாணம் எப்படி நின்று இருக்கிறது என்று அறிந்து கொண்டான்.
ஆம், கல்யாணத்திற்காக கோவிலில் அனைவரும் கூடி இருந்தனர்.
மைதிலி சோமசுந்தரம் மேக விருஷ்டி கோவிலில் தயார் நிலையில் இருக்க, முதலில் ஷாமும் அவரது அம்மாவுமே அவர்களுடன் ஒரு சில உறவினர்களும் கோவிலை வந்தடைந்தனர்.
ஷாமின் அப்பாவும் அவர்களது மற்ற சொந்தமும் அடுத்த காரில் வருவதாக கூறியிருந்தனர்.
ஒரு மணி நேரம் கடந்தும் முகூர்த்த நேரம் நெருங்கும் சமயம் ஆனபோதும் ஷாமின் அப்பாவும் அவர்களது உறவினர்களும் கோவிலில் வந்தடையாமையால் ஐயரோ அவர்கள் வரும் முன் மாலையை மட்டும் மாற்றிக் கொள்ளட்டும் என்று உரைத்தார்.
மேக விருஷ்டி ஷாமும் ஒருவருக்கொருவர் எதிராய் நின்று கையில் மாலையோடு நிற்க, முதலில் மாலையை அணிவிக்க போன ஷாமை பெரும் குரல் அதிரவோடு நிறுத்தி இருந்தார் அவர் அம்மா.
கையில் வைத்திருந்த மாலையை பொத்தென்று கீழே போட்டு அவன் அம்மாவை பார்க்க, “அப்பாக்கு வர வழியில ஆக்சிடெண்ட் ஆயிருச்சு ஷாம். அவர் உயிருக்கு போராடிட்டு இருக்காராண்டா” என கதறினார்.
சோமசுந்தரம் மைதிலியும் அதிர்ந்து நிற்க, ஷாமின் உறவினர்களோ மேக விருஷ்டியை வைத்து இஷ்டத்துக்கு கதை கட்ட ஆரம்பித்தனர்.
இவ வருகைக்கு முன்பு மாமியார் தாலியை பறிக்க பாக்குறா… அபசகுணம், சரியான ராசி இல்லாதவள் அப்படி இப்படி என்று சரமாரியாக வார்த்தைகளால் வதைத்தனர் மேக விருஷ்டியை.
அதை அனைத்தையும் பதட்டத்தில் இருந்த ஷாமின் அம்மாவின் மனதில் கற்பூரமாய் பற்றிக்கொள்ள கல்யாணத்தை உடனடியாக நிறுத்தினார்.
மேலும் அதிர்ந்து மைதிலி அவரின் கரம் பற்றி மகள் வாழ்க்கை குறித்து கேட்க, “உன் பொண்ணு வாழ்க்கை வாழனும் என்பதற்காக ஏன் புருஷன நான் பறி கொடுக்க முடியாது.
என் மகன் உன் பொண்ணு கழுத்துல தாலி கட்ட மாட்டான்.
இந்த ராசியில்லாதவள வச்சு நான் என்ன பண்ண முடியும்.
என் குலம் தழைக்கணும், இந்த ராசி இல்லாதவ வந்தா என் குலம் அடியோட அழிஞ்சுரும் டேய் வாடா..” என ஷாமை இழுத்துக் கொண்டு சென்று விட்டார்.
இப்பொழுது தன் அருகில் நின்ற மைதிலியை அனைவரையும் விடுத்து தீயாக முறைத்தான் நிவர்த்தனன். இவை அனைத்திற்கும் முழுமுதற் காரணமே அவர்தானே.
“முதல்ல நீங்க பேசாதீங்க மாம்… இன்னிக்கு என் அக்கா வாழ்க்கை இப்படி எல்லாரும் பேசும் பொருளா மாறுனதுக்கு முழு காரணமே நீங்கதான்” என்றான் குரலில் ஏக்கத்துக்கு கடுமை விரவயிருக்க.
“நிவர்த்து…” மேக விருஷ்டி தடுக்க போக அவளை ஒரே பார்வை தான் பார்த்தான்.
தமையன் பார்வையில் இதழ்களை பசை போட்டு ஒட்டிக்கொண்டாள் மேக விருஷ்டி அவனுடன் நின்று.
கோபத்தோடு நின்றாலும் இதை அனைத்தையும் ரசித்துக் கொண்டுதான் நின்று கொண்டிருந்தான் இன்னுழவன்.
மேலும் நிவர்த்தனன் பேசுவது சரியாக இருப்பதால் மௌனம் காத்தான் சபையின் நடுவே.
நிவர்த்தனனோ விழிகள் குற்றம் சாட்ட மைதிலியை பார்த்தவனாய் “போதுமா மாம்… உங்களோட அவசரம், பயம், பிடிவாதம் இன்னைக்கு என் அக்காவை எந்த இடத்துல கொண்டுவந்து நிப்பாட்டி இருக்கு.
படிச்சு படிச்சு சொன்னேன் இந்த ஷாம்பு பாட்டில் வேண்டாம் வேண்டான்னுட்டு. நீங்கதான் என் அக்காவை எமோஷனல் பிளாக் மெயில் பண்ணி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சீங்க.
சொல்ல கஷ்டமா தான் இருக்கு ஆனாலும் சொல்றேன், நீங்க காதலிச்சி கல்யாணம் பண்ணதுக்கு உங்களுக்கு மகளா பொறந்து அவ இப்ப வர படாத பாடு பட்டுக்கிட்டு இருக்கா.
நீங்க பார்த்து வச்ச மாப்பிள்ளை ஏன் என்னன்னு கூட கேட்காம போய் இருக்கான். இது தான் அவன் லக்ஷணம்.
நல்லவேளை கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இந்த மாதிரி ஆச்சு, கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு சிட்டுவேஷன் வந்திருந்தா என் அக்கா நிலைமை.
இப்ப சொல்றேன் இனிமேல் என் அக்கா வாழ்க்கைல முடிவ அவ தான் எடுப்பா. அதைத் தடுக்க உங்களுக்கோ அப்பாக்கோ எந்த உரிமையும் கிடையாது. மீறி தடுத்தீங்கனா நான் மனுஷா இருக்க மாட்டேன்.” என்றான் தீர்க்கமாக.
“நிவர்த்தனா… என்ன பேசுற நீ… அது நம்ம அம்மா…” என மேக விருஷ்டி குறுகிட
“நீ பேசாம இரு சிசி…” என அவளை அடக்கியவன்,
“போதும் உங்க ஆசைப்படி உங்க கட்டளைப்படி உங்களுக்கு அடங்கி அவ இவ்ளோ நாள் வாழ்ந்திட்டா. இதுக்கு அப்புறமா தான் அவளுக்காக அவளே முடிவெடுத்து வாழட்டும் ப்ளீஸ் நீங்க ஒதுங்கி நில்லுங்க” என தன் முழு ஆதங்கம் அனைத்தையும் கொட்டி தீர்த்து விட்டான் மைதிலி என் மேல் நிவர்த்தனன் சரமாரியாக.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள் அனைவரும் தங்களுக்குள் முணுமுணுத்து பேசிக் கொண்டிருக்க, “போதும் நிறுத்துங்க… ” என அனைவரையும் பார்த்து அடுத்ததாக கத்திய நிவர்த்தனன்,
“அதான் கல்யாணம் நின்னு போச்சு இல்ல.. இன்னும் உங்களுக்கு இங்க என்ன வேலை. தயவு பண்ணி எல்லாரும் இங்க இருந்து கிளம்புங்க ப்ளீஸ். அக்கா வாக்கா நம்ம போலாம்” என மேக விருஷ்டியை இழுத்துக் கொண்டு சென்றான் நிவர்த்தனன்.
அவர்களோடு சோமசுந்தரம் மைதிலியும் சென்றனர் தலை குனிந்து.
செல்லும் அவர்களை பார்த்து சக்திவேலும் வெற்றிப் புன்னகை சிந்திக் கொண்டார் உள்ளுக்குள்.
சற்று நேரத்தில் மகன் அதற்கு தக்க சன்மானம் கொடுக்க இருப்பதை அறியாது.
அவ்வளவு நேரம் மௌனத்தை கடைபிடித்து நின்ற இன்னுழவன் அதை விடுத்து தன்னை கடந்து செல்லும் அவனின் தேவதையின் கரத்தை பற்றி இருந்தான் அழுத்தத்திலும் அழுத்தமாக.
தன்னோடு இழுபட்டு வந்தவள் தடை பட்டு நிற்க… நிவர்த்தனன், மேக விருஷ்டி இருவரும் ஒரு சேர ஏறெடுத்து பார்த்தனர் தடுத்து நிற்கும் இன்னுழவனை.
இன்னுழவனோ மேக விருஷ்டியை அழுத்த விழிகளுடன் மையலிட்டவன், “இந்தக் கல்யாணம் இப்ப இங்க நடக்கும்” என்றான் மிகவும் தீர்க்கமாக.
அதைக் கேட்டு மேக விருஷ்டி கரு விழிகள் அதிர்ந்து விரிய.. “ஹலோ நீங்க யாரு சார்? என் அக்கா கல்யாண நடக்கும்னு சொல்றதுக்கு முதல்ல அவ கைய விடுங்க” என மற்றொரு கரத்தால் இன்னுழவன் கரம் பற்றியிருந்தான் நிவர்த்தனன்.
“நான் யாருன்னு தெரியனுமா…?இன்னுழவன்.” என கணீர் குரலில் கூறியிருந்தான் பார்வை தன்னவள் மீது இருந்தாலும் பதில் அவளின் தமையனுக்கு செல்லும் வகையில் அழுத்த விழிகளுடன்.
அதைக் கேட்டவுடன் சித்தமும் அதிர தானாக மேக விருஷ்டி மற்றும் இன்னுழவனை பிடித்திருந்த தன் இரு கரங்களையும் விடுவித்திருந்தான் நிவர்த்தனன்.
மேக விருஷ்டியோ தான் காண்பது கனவா நினைவா என்ற நிலையில் பனியாய் உறைந்து நின்றாள்.
இவ்வளவு நாள் முகம் பார்க்காது செவி வழி கேட்டு கற்பனையாய் கண்டவன் இன்று விழி வழியாய் அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் ஆயிரம் மின்னல்கள் வெட்ட விழி முழுவதும் அவனை நிறைத்து விழிகள் அகலாது நின்றாள்.
நிவர்த்தனனை பார்த்து இன்னுழவன் மென்னகை உதிர்க்க…
“இன்னு… எப்பிடி கல்யாணம் அதான் மாப்புள…” என தளர்வுடன் அவன் அருகில் வந்தார் சோமசுந்தரம்.
சக்திவேல் நடப்பவற்றை பார்த்து ஏதும் புரியாது நிற்க, “உங்க பொண்ணோட காதலன், உங்களோட மருமகன் நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன் மாமா” என்றான் பதிலை சோமசுந்தரத்திற்கு கொடுத்து பார்வையை சக்திவேல் மீது பதித்து இம்முறை.
அவ்வளவு நேரம் கலக்கத்தில் கலங்கியிருந்த சோமசுந்தரத்தின் விழிகள் இன்பத்தில் கலங்கின.
“இன்னு… மருமகனே…” என அவன் கரம் சோமசுந்தரம் பற்ற.. “இன்னுழவா… என்ன சொல்ற நீ…” என கத்தியிருந்தார் சக்திவேல்.
அனைத்தையும் கேட்டு நிவர்த்தனனோ, “அப்போ இவர் தான் அப்பாவோட அக்கா பையனா…! இந்த ஊர் தலைவர், சக்திவேல் பையன், அப்பா உருகி உருகி புகழ்ந்தது எல்லாம் இவர் தானா…! ஓ அதானல தான் கல்யாணம் நடக்கலனாலும் நான் மாமா தான் சொன்னாரா… யோவ் கேடி மாமா…” என அதிர்ச்சியுடனும் அகம் மகிழ்ந்தும் நின்றான் எனில்… மேக விருஷ்டி சொல்லவே வேணாடாம்.
ஏற்கனவே அவன் வரவில் ஆடிப் போய் இருந்தவள் இப்பொழுது அவன் பற்றி முழுதும் கூறியவுடன் நினைவுகள் எங்கேங்கோ செல்ல அதிர்ச்சியின் சிகரம் தொட்டு நின்றாள் சிலையாய்.
இன்னுழவனோ சக்திவேலை ஒரு பொருட்டாக கூட மதிக்காதவன், தன்னையே பார்த்து மதியிழந்து நின்று கொண்டிருந்தவள் கரங்களை மேலும் அழுத்தி பிடித்தவனாய்
உடல் வளைத்து மற்றவர்கள் கேட்கா வண்ணம் “பார்வையாலே என்ன சாப்பிட்டது போதும் டி… இப்பிடி பார்த்து வைக்காத உள்ளுக்குள்ள என்னென்னமோ பண்ணுது…” என மணமேடை ஏறினான் மணமாலை சூட மனம் கவர்ந்தவளுடன்.
மேடை ஏறியவன் தன் அருகில் முகமது செவ்வரளியாய் சிவந்து நின்று கொண்டிருந்தவளை தோள் பிடித்து அமர வைத்து அனைவரையும் நேர்க்கொண்டு நிமிர்ந்த பார்வையுடன் பார்த்தவன்,
“உங்க எல்லார் சாட்சியா இன்னைக்கு எனக்கும் என் மாமா பொண்ணுக்கும் கல்யாணம்.” என்றான் சபை நிமித்தம் வணக்கம் வைத்து.
அவன் கூற மைதிலி ஏதோ பேச வர சோமசுந்தரம் மற்றும் நிவர்த்தனன் பார்த்த பார்வையில் நாவடக்கி கொண்டார்.
“எங்கள சந்தோஷமா வாழ்த்துறவங்க இங்க இருக்கலாம். மத்தவங்க வந்த வழிய பார்த்து கிளம்பலாம். ஐயர் நீங்க மந்திரத்த சொல்லுங்க” என அமர்ந்தான் அவனின் தேவதை அருகில் மணமகனாய் இன்னுழவன்.
கோதாவரியோ தான் நினைத்தது போல் நடக்க விருப்பதை கண்டு உள்ள நெகிழ்வுடன் நின்றார்.
“மா… இன்னும் எவ்வளவு நேரம் ஒதுங்கி நிக்க போறீங்க, இது உங்க மகன் கல்யாணம் முன்னாடி வர போறீங்களா எப்பிடி. இதுக்கு தான ஆசைப்பட்டிங்க” என்றான் இன்னுழவன் மாலையை மங்கையவளுக்கு சூட்டி.
விழி நீரை வேகமாக துடைத்தவர் “இதோ… இதோ… வந்துட்டேன் இன்னு…” என அவன் அருகில் வந்து நின்றார்.
“அப்பத்தா…” இன்னுழவன் குரல் கொடுக்க,
“ஐம் ஆளு ரெடி யூவரு பேக்கு பேராண்டி” என நின்றார் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் அம்பிகாமா.
“எங்க எல்லார் மனசுக்கும் பிடிச்ச, ஊர் தலைவர் எல்லாத்துக்கும் மேல எங்க குடும்பத்துல ஒருத்தரான எங்க இன்னுழவன் கல்யாணத்துல நாங்க இல்லாமையா” என ஊர் மக்கள் அனைவரும் அமர்ந்தனர் கல்யாணத்தை காணும் பொருட்டு.
இப்பொழுது ஊர் பெரியவர்கள் முதல் சொந்தகள் வரை மன மகிழ்ச்சியுடன் குடியிருக்க, ஐயர் தாலி இருக்கும் தாம்பூலதட்டை அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வர கோரி நீட்டியிருந்தார்.
நந்தனா அதை கையில் வாங்கிக் கொள்ள, அவளை முகம் இறுக பார்த்தார் தங்கமணி.
நிவர்த்தனன் பேச ஆரம்பிக்கும் பொழுதே அவர்களும் அங்கு வந்து சேர்ந்திருந்தனர்.
“கொஞ்சம் இரு நந்தனா…” என அவளை தடுத்து நிறுத்திய இன்னுழவன் தனது சட்டை பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து தாம்பூலத்தில் ஏற்கனவே இருக்கும் தாலியை அகற்றி தான் கொண்டு வந்ததை வைத்தான்.
“இப்ப போய் எல்லார்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வா… ” என்றான் குருநகையுடன்.
“மாமா எல்லாத்துக்கும் ப்ரிப்பேர்டா தான் வந்திருப்பீங்க போல…” நந்தனா நகைக்க, மேக விருஷ்டி அவனை தான் பார்த்தாள்.
“முகூர்த்த நேரம் முடிய போகுது சீக்கிரமா ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்கோ” என ஐயர் உரைக்க, அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்தாள் நந்தனா.
ஐயர் தாலியை கொடுக்க, “அப்பத்தா…” என்றான் இன்னுழவன்.
“நான் எதுக்கு பேராண்டி…” என அம்பிகாமா சற்று தயங்க…
“நீ தந்தா தான் நம்ம குலம் விருத்தி அடையும். நாங்களும் எந்த குறையும் இல்லாம சந்தோசமா செழுமையா இருப்போம்” என்றான் உரக்க.
அதன் பின் மறுபேச்சு ஏது! அம்பிகாமா தாலி எடுத்து கொடுக்க… தாலியை தன் கையில் வாங்கியவன் இப்பொழுதே அவனின் மழை தேவதையை பார்த்தான்.
அவளும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள் காதல் உருக.
“என்னபா… என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா…” புருவம் தூக்கியவன் கேட்க,
“சம்மதமான்னு இப்பிடி தான் கேட்பியா டா… நீ…” என விழிகளால் அவள் தாலியை காண்பிக்க…
அவனோ இதழ் விரித்து சிரித்தவன், “அன்னைக்கும் இன்னைக்கு என்னைக்கும் நீ என்னுடையவ தான் டி…” என அனைவரும் அட்ச்சதை துவ மங்கையவள் விழிகளில் ஈரம் சுரக்க..
அவள் விழி பார்த்து அவன் பார்த்து பார்த்து செய்ய சொல்லிய தாலி வடிவில் மழை துளிக்களுக்கு நடுவில் இன்னுழவன் என்னும் அவன் நாமம் பொறிக்கபட்டிருந்த பொண் தாலியை அனைவரும் சூழல அவளுக்கு அணுவித்திருந்தான் இன்னுழவன்.
தன் தோள் சாய்த்து அவளுக்கு குங்குமம் வைத்தவன் யாரும் காணா அவள் செவியில் இதழ் தீண்ட… அதில் மேனி குறுகுறுத்து சிலிர்த்தவள் அவன் விழி பார்க்க, “என்னபா… ஹாப்பியா…” என்றவனிடம் இல்லை என்னும் விதமாய் தலை அசைத்தாள்.
அதை கண்டு தாராளமாக இதழ் பிரிய சிரித்தவன் தன்னோடு அணைத்து அவள் பட்டு நெற்றி வகிட்டில் அனைவர் முன்னிலையில் அழுத்த இதழ் பதித்தவன், பெருவிரல் கொண்டு விழிநீர் துடைத்து “அங்க மட்டும் போதுமா டி…” என அவளை சிவக்க வைக்க..
“உழவா…” என்றவள் வெட்கத்தில் சிணுங்கி அவன் மார்பில் சாய…
“நம்ம வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் நீ கேட்கவே வேண்டாம் டி… நானே அள்ளி அள்ளி தரேன். அங்க மட்டும் இல்ல… எல்லா…” என வசிகர புன்னகையை அவள் மீது தெளித்து கள்வனாய் பேசி மேலும் அவளை நாணத்தில் சிவக்க வைத்தான்.
சோமசுந்தரம், நிவர்த்தனன், கோத்தாவரி, அம்பிகாமா உட்பட அனைவரும் அவர்களை கண்கள் நிறைவாய் பார்த்து சந்தோஷத்தில் நெகிழ்ந்து நிற்க…
இவ்வளவு நாள் தன் காதலியானவளை முழுதும் தன்னில் ஒரு பாதியாக்கி இருந்தான் இன்னுழவன் அக்னீ சாட்சியாய்.