சென்னையின் புறநகர் பகுதியில் வாழ்ந்து வரும் அம்ருதாவின் குடும்பம் நடுத்தர வர்கத்தை சார்ந்தது. வரவேற்பறை, சமையலறை, இரண்டு படுக்கையறை வசதி கொண்டு சுற்றிலும் சிறியவகை தோட்டம் அமைக்கும் அளவு இடைவெளி விட்டு மதில் சுவர் அமைக்கப்பட்ட சொந்த வீடு.
தந்தை ஆறுமுகம் அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர். அன்னை காவேரி இல்லத்தரசி. தங்கை நிரஞ்சனா கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாள். அம்ருதா எம்.சி.ஏ முடித்து ஒரு ஐ.டி கம்பெனியில் ப்ராஜெக்ட் மேனேஜராக பணிபுரிகிறாள்.
குழந்தை இருப்பதால் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் முறையை தேர்வு செய்தாள். இன்று சில பொருட்கள் வாங்க வேண்டி இருப்பதால் தன் தாயிடம் கூறிவிட்டு தனது குழந்தையை தன் ஒற்றை கரத்தில் தூக்கி கொண்டு முன்பதிவு செய்த ஆட்டோவில் ஏறி சென்றவள், தி.நகர் சென்று இறங்கினாள்.
குழந்தையை சுமந்தபடியே தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி முடித்தவள், குழந்தை உடனே ஐஸ்கிரீம் வேண்டும் என்று அடம் பிடிக்கவே மீண்டும் ஆட்டோவில் ஏறி ரெஸ்டாரண்ட் ஒன்றின் முன்பு வந்திறங்கினாள்.
சூரியன் மறைந்து இரவு படரும் அந்தி பொழுதில் நுழைவு வாயிலின் வலது புறம் ஹர்ஷ மித்ரன் ரெஸ்டாரண்ட் என்ற பெயர் மிகவும் அழகாக, தனக்கே உரிய எழுத்து பாணியில் செதுக்கியப்படி, சுவரில் பதிய வைத்தார் போன்று தங்க நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதுவே பார்ப்பவரை ஈர்க்கும் வண்ணம் அழகாக அமைக்கப்பட்டிருந்தது.
நுழைவு வாயிலை கடந்ததும் நடை பாதையை தவிர மற்ற இடங்கள் யாவும் புல்தரையாகவும், பூச்செடிகளாகவும் ஆங்காங்கே பெரிய அளவு குடைகளுக்கு கீழே, வட்ட வட்டமான மேஜையை சுற்றி நாற்காலிகள் போடப்பட்டிருக்க, அங்கே கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் ஆட்கள் நிறைந்து இருந்தனர்.
உள்ளே அமர்ந்து உண்பதற்கும் ஏற்றார் போன்று பெரிய கட்டிடம் கண்ணாடியாலும், மரப்பலகைகளாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க, அந்த இடமே மனதிற்கு உற்சாகமூட்டும் வகையில் இருந்தது. அம்ருதா ஆத்யாவை அழைத்து கொண்டு உள்ளே செல்ல முற்படும் நேரம்,
“ம்மா.. அங்க பிக் பிக்கா கொதை இதுக்குதுமா.. ப்ளீச் அங்க போலாம்..” என்று ஆசையாக கேட்கவே அம்ருதாவுக்கு மறுக்க மனம் வரவில்லை. அவளது ஆசைக்காக சற்று தள்ளி இருந்த இரண்டு பேர் அமரக்கூடிய நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.
அங்கு வந்த உணவு பரிமாருபவர் அவள் முன் நின்று உணவு பட்டியலை அவளிடம் நீட்ட,
“அங்கிள் எனக்கு பிங்க் கலத் ஐஸ் கீம்” என்று ஆத்யா முந்தி கொண்டு கூற இருவரும் குழந்தையை பார்த்து புன்னகையித்தனர்.
“ஓகே.. பாப்பாவுக்கு பிங்க் கலர் ஐஸ் க்ரீம் கொண்டு வரேன்” என்று அவர் புன்னகையித்த வாறே கூற,
“ஐ… ஜாலி…” என்று குதித்தாள் ஆத்யா.
பிறகு அம்ருதா, “ஒரு ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர்ட் ஐஸ் க்ரீம், அண்ட் ஒன் ஆப்பிள் ஜூஸ்” என்று கூற,
“ஓகே மேம்” என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
சுற்றியும் தனது பார்வையை சூழல விட்டவளுக்கு அந்த இடத்தின் அமைப்பும், இயற்க்கை சூழலும், வேலையாட்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் முறையும் மிகவும் பிடித்து போனது.
அவள் கேட்ட ஐஸ் க்ரீமும், ஜூஸ்ம் வந்துவிட இருவரும் பருக தொடங்கி விட ஆத்யா ஆர்வத்தில் துள்ளி குதிக்கையில் ஜூஸ்சை அம்ருதாவின் மீது தட்டிவிட்டாள். அதில் ஜூஸ் முழுவதும் அவள் மீது சிந்தி விட குழந்தையோ பயந்தவள் போல திருதிருவென விழித்தாள்.
“சாஇ ம்மா” என்று பயந்தவாறே கூற,
“சரி பரவால்ல. பாப்பா தெரியாமதான பண்ணினீங்க..” என்றவள் “வா நம்ம இதை கிளீன் பண்ணிட்டு வந்துடுவோம்” என்று அவளை தூக்க போக,
“எனக்கு ஐஸ் கீம் சாப்பிதனும்” என்று எவ்வளவு அழைத்தும் வாராமல் அடம்பிடிக்கவே,
“சரி நீ பத்திரமா இங்கயே இரு அம்மா டூ மினிட்ஸ்ல வந்துடுவேன். இடத்தை விட்டு எங்கேயும் நகர கூடாது” என்று பலமுறை பத்திரம் கூறிவிட்டு திரும்பித் திரும்பி பார்த்தவாறே வாஷ் ரூம் சென்றாள் அம்ருதா.
சுற்றி சுற்றி பார்த்த குழந்தை நாற்காலியை விட்டு தானாக கீழிறங்கி தத்தி தத்தி நடந்தவரே அழகான பூக்கள் இருக்கும் இடத்தை நோக்கி சென்றது. எட்டி எட்டி பார்த்தும் பறிக்க முடியாமல் போகவே அருகில் அலைபேசியில் பேசி கொண்டிருந்த ஹர்ஷாவின் விரலை பற்றி இழுத்தது.
ஒரு மிருதுவான குட்டி கரத்தின் ஸ்பரிசத்தில் ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்தியவன் திரும்பி கீழ்நோக்கி பார்க்க அவனை பார்த்து அழகாக சிரித்தாள் ஆத்யா. அவளது அழகான சிரிப்பில் தன்னை மறந்து பார்த்தவன் உதடுகளும் தானாக விரிந்து கொள்ள, சுற்றிலும் குழந்தையின் பெற்றோரை தேடி தனது பார்வையை சுழல விட்டவன் மீண்டும் குழந்தையிடம் தனது பார்வையை செலுத்தினான்.
அவள் மீண்டும் அவன் விரலை பிடித்து இழுக்க, குழந்தையின் உயரத்துக்கு ஏற்ப மண்டியிட்டு அமர்ந்தவன்,
“என்ன பாப்பா? என்ன வேணும்?” என்று கேட்க
“எனக்கு அந்த பூ ஏணும் அங்கிள்..” என்று தனது கரத்தை நீட்டி அவள் சுட்டி காட்ட அவள் காட்டிய திசை பக்கம் திரும்பியவன் பூவை பறித்து கையில் கொடுத்தான். அழகான சிரிப்புடன் அதனை பெற்று கொண்டது குழந்தை.
“தேங்க் உ அங்கிள்..” என்று சொல்ல,
அவள் விழிகளிலும், பளீர் சிரிப்பிலும், குண்டு குண்டு கன்னத்திலும்,அழகான மழலை பேச்சிலும் ஒரு நிமிடம் தன்னை மறந்து குழந்தையை பார்த்து கொண்டிருக்கும்போது,
“ஆத்யா… இங்க என்ன பண்ற? அம்மா உன்ன எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?” என்று பதறியபடி வந்தாள் அம்ருதா.
நீண்ட நாள் கழித்து இளகிய அவனது முகம் மீண்டும் இருக்கத்தை தத்தெடுத்து கொண்டது.
“இப்படித்தான் குழந்தைய தனியா வெளில விடுவீங்களா? குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன செய்வீங்க? குழந்தைய பெத்துக்கிட்டா மட்டும் போதாது ஒழுங்கா வளர்க்க தெரியணும். கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்கீங்க?” என்று அவன் பேசி கொண்டே போக,
அவளுக்கும் கோபம் வந்தாலும் தவறு தன்னுடையதுதானே என்று பொறுத்து கொண்டு நின்றாள் அம்ருதா. ஆனாலும் அவள் முகத்தில் தெரிந்த கோபத்தை கண்டவன் மீண்டும் திட்ட தொடங்க,
“அங்கிள். அம்மாவ தித்தாதீங்க.. அம்மா பாவம்..” என்று கூற குழந்தையின் குரலில் சற்றே கோபத்தை குறைத்தவன்,
“இனிமேலாவது குழந்தையை ஜாக்கிறதையா பாத்துக்கோங்க” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
அம்ருதாவுக்குதான் அழுகையே வந்து விடும் போல இருந்தது. அவன் குரலில் அத்தனை கடுமை. முகம் இறுகி, அழுத்தமான குரலில் ஒரு ஆறடி ஆண்மகன் தன்முன் நின்று பேசிடவும் ஏனென்றே தெரியாமல் சிறு பிள்ளை போல அழ தயாரானவள் இருக்கும் இடம் கருதி தன்னை கட்டு படுத்தி கொண்டாள்.
பிறகு தனது குழந்தையை தூக்கி கொண்டு விருவிருவென அந்த இடத்தை விட்டு கிளம்பியவள், போகும் வழி எங்கும் அவன் முகமும் அவன் குரலும் என திரும்ப திரும்ப அவன் கடுமையான முகமே நினைவில் வர இன்றைய பொழுதே நிம்மதியே இல்லாமல் போனது அவளுக்கு.
வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஹர்ஷ மித்ரனை அவன் தாய் கீர்த்தனாவும் தந்தை பார்த்திபனும் தடுத்து நிறுத்தினர்.
“இன்னைக்கு நீ இந்த பொண்ணு போட்டோவை பார்த்தே ஆகணும். நீ பாத்துட்டு வேண்டாம்னு சொன்னா நாங்க வற்புறுத்தல. ஆனா ஒரு முறைக்கூட பார்க்காம சொன்னா எப்படி?” என்று அவன் தாய் கேட்க,
“இப்போ என்னம்மா உங்களுக்கு? தினமும் இதே பேச்சு. ஃபோட்டோவை பார்த்துட்டு வேண்டாம்னு சொன்னா, அப்போ உங்களுக்கு ஓகேதான? சரி கொடுங்க” என்றான். அவன் பேச்சில் சற்றே கோபமடைந்த பார்த்திபன்,
“ஹர்ஷா.. பார்க்கும் முன்னாடியே இப்படி சொன்னா எப்படி?” என்று கேட்க,
தலையை இடவலமாக அசைத்தவன், “எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றபடியே நகர முயல,
“இருப்பா. ஒரு முறை பார்த்துடு” என்று அவனிடம் பெண்ணின் சுயவிவரம் அடங்கிய புகைபடத்தை நீட்டினார் அவன் அன்னை.
அப்பெண்ணின் புகைப்படத்தை பாத்தவன் சற்றே கோபமான குரலுடன்,
“இந்த பொண்ணுக்கு இருந்தா ஒரு இருபது, இருபத்தியொரு வயசு இருக்குமா?” என்று கேட்கவும்
“இருபத்தி ஒன்னு” என்றார் அவன் தாய்.
“என்னம்மா பண்றீங்க? எனக்கு முப்பத்தி ஒரு வயசாகுது. அதுவும் அந்த பொண்ணுக்கு கல்யாணம் கூட ஆகல. எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொன்னாலும் அழுது ஆர்ப்பாட்டம் பண்றீங்க? சரி என்னவோ பண்ணுங்கன்னு விட்டா இப்படி ஒரு பொண்ண காட்டுறீங்க?” என்றதும்,
“பொன்ணு பார்க்க அழகா லட்சணமா இருந்தாடா..” என்று கூறி கொண்டிருக்கும்போதே, போதும் என்பது போல் அவன் கரத்தை உயர்த்தியவன்
“நான் இனி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா அவளுக்கும் இது செகண்ட் மேரேஜ்ஜாதான் இருக்கணும். என்கிட்ட கல்யாணம் ஆகாத இதுபோல வயசு வித்யாசம் உள்ள பொண்ணை காட்டாதீங்க” என்றவன் “இனிமேல் பொண்ணு பாக்குறேன் அது இதுன்னு வந்து நிக்காதீங்க” என்றுவிட்டு விருவிருவென தன் அறைக்கு கிளம்பிவிட்டான்.
அன்றைய தினம் முழுவதும் அம்ருதாவுக்குதான் மனம் புலம்பி கொண்டே இருந்தது. ‘என் குழந்தைதான் எனக்கு எல்லாமேன்னு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். இவன் என்ன தெரியும்னு இப்படி பேசினான்? ச்சே..’ என்று நினைத்தவள்,
எவ்வளவுதான் தன் எண்ணங்களை மாற்ற முயன்றாலும் அந்த ஆளுமையான கம்பீர குரல் தன் காதுக்குள்ளேயே கேட்பது போல் இருக்க சுழலுக்குள் சிக்கியதை போல மீள முடியாமல் சிக்கி தவித்தாள் அம்ருதா.