இங்கு தாரிக்கா தன்னுடைய வீட்டிற்கு சென்றவள் தோல்வியை ஏற்க முடியாமல் தனியாக கத்தி கதறி அழுது கொண்டிருந்தாள். ‘இந்த பாலாவை நம்பி ஹர்ஷாவை விட்டு வந்து பெரிய தவறு செய்துவிட்டோமே’ என்று அவளது மனம் அடித்துக் கொண்டது. ‘அதிலும் அம்ருதா இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது நான் வாழ வேண்டிய வாழ்க்கைதானே? எப்படி இதை நான் தவற விட்டேன்?’ என்று தாரிக்கவின் மனமோ ஆதங்கத்தில் அலறி கொண்டிருந்தது.
அதே நேரம் யாருக்கும் தெரியாமல் தாரிக்காவின் வீட்டிற்குள் நுழைந்தான் பாலா. அழுது கொண்டிருப்பவளை பார்த்து ‘நீ இப்படி அழறதை பார்த்தா கேஸ்ல தோத்து போய்ட்ட போலயே?’ என்றதும் தாரிக்கவிற்க்கு எரிச்சல் மேலிட்டது.
“நீ எப்படி இங்க வந்த? யாராவது பார்த்திருந்தா என்ன ஆகுறது? ஏன் வந்த?” என்று கேட்க,
“அதெல்லாம் யாரும் என்னை பார்க்கல. அதை பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியவனுக்கு தெரியவில்லை ஏற்கனவே ஒருவர் பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிட்டுவிட்டார் என.
“சரி சொல்லு. உன்னோட விஷயம் என்ன ஆச்சு?
மொத்தமா ஊத்திகிச்சா?”
“வேண்டாம் பாலா.. நானே கடுப்புல இருக்கேன். எதுவும் பேசாத”
“கடுப்பா..? சரி இருந்துட்டு போ.. எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. மொத்ததிக்கும் எங்கயாவது போய் தலை மறைவாகிடலாம்னு இருக்கேன்.உன்கிட்ட இருக்க பணத்தை கொடு” என்றதும்,
“பணமா..?? என்கிட்ட எங்க இருக்கு பணம்? நான் இருக்க நிலைமைக்கு நீ வேற?”
“நான் ஒன்னும் சும்மா கேக்கல. கொஞ்ச காலமா நான்தான் உனக்கு மொத்த செலவையும் பார்த்திருக்கேன். அதை முதல்ல கொடு” என்றதும்,
“முடியாது டா. போயும் போயும் நீ ஒரு ஆளுன்னு உன்னை நம்பி ஹர்ஷாவை விட்டுட்டு வந்தேன் பார்த்தியா? எனக்கு இது தேவைதான். அவன் தகுதி என்ன? உன் தகுதி என்ன?” என்று மனதில் இருப்பதை கொட்ட துவங்கினாள் தாரிக்கா.
“அப்படித்தான்டா பேசுவேன். நல்லா வாழ வேண்டிய என்னுடைய வாழ்க்கையை கெடுத்து நாசம் பண்ணினவனே நீதானே? இப்போ நான் வாழ வேண்டிய வாழ்க்கையை அந்த அம்ருதா வாழ்ந்துட்டு இருக்கா. நான் உன்னை மாதிரி ஒரு ஆள் கூட சேர்ந்து என் வாழ்க்கையை நானே கெடுத்துக்கிட்டேன்.” என்றதும்
பாலாவிற்கு இவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அது புரியாமல் தோற்று போன ஆத்திரத்திலும் ஹர்ஷா, அம்ருத்தா மீதான வன்மத்திலும், கத்தி கொண்டிருந்தவளுக்கு, முன்பு ஆசை காதலானாக தெரிந்த பாலா இன்று ஒன்றுக்கும் உதவாதவனாக தெரிந்தான். பாலாவுக்கோ கோபம் எல்லையை கடக்க இப்போது வந்த காரியம்தான் முக்கியம் என்று எண்ணியவன்,
“இப்படியெல்லாம் பேசாத தாரிக்கா. எனக்கு ஆத்திரமா வருது. பணத்தை கொடு நான் போயிடுறேன். தேவையில்லாம பேசாத” என்றான்.
“பேசினா என்னடா பண்ணுவ? கொன்னுடுவியா? உனக்கு அவ்வளவு தைரியம் எல்லாம் இருக்கா? பிச்சைகார பயலே” என்று கூற,
“என்னடி.. விட்டா ரொம்ப பேசுற? நான் கொஞ்சம் நல்லா பேசினதும் கட்டின புருஷனை விட்டுட்டு என்கூட வந்தவதான நீ? என்னமோ பத்தினி மாதிரி பேசுற?”
“என்னடா எப்போ பார்த்தாலும் இதைவே கேக்குற? நீ மட்டும் என்ன யோக்கியமா? அடுத்தவன் பொண்டாட்டிய பேசி பேசியே மயக்கி கூட்டிட்டு வந்தவன் தானே நீ? அதோட விட்டியா? அந்த நிரஞ்சனாகிட்ட தப்பா நடந்துக்க பார்த்துதானே இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிட்டு திரியுற? நான் பத்தினி இல்லைதான். ஆனா நீ என்ன உத்தமனா?” என்றதும்,
ஆத்திரத்தில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூச்சாடியை எடுத்து தாரிக்காவின் தலையிலேயே பலமாக அடித்துவிட்டான் பாலா. அடித்த வேகத்தில் சுருண்டு விழுந்தவள் தான். பேச்சு மூச்சின்றி அப்படியே கிடந்தாள். கோபம் தலைக்கேறி போயிருந்தவன் இதை முதலில் கவனிக்கவே இல்லை.
“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படியெல்லாம் பேசுவ?” என்று ஆத்திரத்தில் அவன் கத்திக் கொண்டிருக்க, மடமடவென உள்ளே நுழைந்தனர் போலீசார். பாலாவோ அதிர்ச்சியில் விழிகள் விரிய பார்க்க, இரண்டு காவலர்கள் அவனை பிடித்து கொள்ள ஒருவர் மட்டும் சென்று கீழே மயங்கி விழுந்து கிடந்த தாரிக்காவை எழுப்ப பார்க்க அவள் எழவே இல்லை.
தலையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருப்பதை பார்த்த காவலரோ உடனடியாக அவளை மருத்துவ மனையில் சேர்த்தார். ஆனால் மருத்துவரோ தாரிக்காவின் உயிர் பிரிந்து விட்டது என்று கூற, பாலாவிற்கோ உச்ச பட்ச அதிர்ச்சி.
பாலாவிடம் தாரிக்கா பற்றி விசாரிக்க அவளுக்கு யாரும் இல்லை என்பதால் வேறு வழி இன்றி ஹர்ஷாவின் குடும்பத்தினரிடமே விடயத்தை தெரிவித்தனர். அவர்களுக்கும் அதிர்ச்சியே. என்னதான் அவள் தங்களுக்கு கேடு செய்தவளாகவே இருந்தாலும் அவளது இறப்பு செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.
உடனடியாக ஹர்ஷாவும் அவன் குடும்பத்தினரும் மருத்துவமனை சென்றவர்கள் அவளது இறுதி காரியத்தை செய்து முடித்தனர். தாரிக்கா செய்த வினை அவளையே சுட்டெரித்தது இன்று.
பாலாவை இழுத்து கொண்டு காவல் நிலையத்திற்கு சென்ற போலீசார் அவன் மீது தடை செய்யப்பட்ட போதை பொருள் உபயோகித்தது, கற்பழிப்பு முயற்சி, கொலை பழி, என மூன்று விதமான வழக்குகளை பதிவு செய்தனர்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு,
வெயில் உச்சியில் இருந்தது. சிறைச்சாலையில் கையில் பெரிய அளவு சுத்தியல் கொண்டு பெரிய கல்லை ஓங்கி ஓங்கி அடித்து இரண்டாக பிளந்து கொண்டிருந்தான் பாலா. அவனது முகத்தில் உடைந்த மண் துகள்கள் பட்டு எரிச்சலை ஏற்படுத்தி கொண்டிருந்தது. கைகளில் சிராய்ப்புகள், அதிலிருந்து எட்டிப் பார்த்த இரத்தம், அதனால் ஏற்பட்ட எரிச்சல் என அவதிக்கு உள்ளாகி இருந்தாலும் கல் உடைப்பதை நிறுத்த முடியவில்லை. அருகில் ஒரு காவலர் பாலாவை கண்கானித்து கொண்டே இருந்தார்.
“கல்லை உடைச்சது வரைக்கும் போதும். உடைச்ச கல்லையெல்லாம் எடுத்துட்டு போய் அங்க கொட்டு போ..” என்றதும் பாலாவிற்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது. உடல் உழைப்பிற்கு பழக்கப்பாடாத உடல் முழுவதும் கடுமையான வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பாலாவின் குற்றங்கள் அனைத்தும் நிரூபணம் ஆனதால் பாலாவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக விதித்து, ஆயுள் தண்டனையும் விதித்து இருந்தார் நீதிபதி.
வெளியில் சுதந்திரமாக சுற்றி திரிந்த போது வராத அறிவு, இன்று சிறைச்சாலையில் கல் உடைக்கும்போது வந்திருந்தது. ‘ஏன்தான் நான் இப்படி புத்திகெட்டு போனேனோ? அடுத்தவன் மனைவி மேல் அசைப்படாமல் ஒழுக்கமாக வாழ்ந்து இருந்தால் இந்நேரம் நானும் குடும்பம், குழந்தை என நன்றாக வாழ்ந்து இருக்கலாமே?’ என்று காலம் கடந்து வருந்தியவன் விழிகளில் இருந்து உருண்டு திரண்டு விழுந்தது உவர் நீர்.
நிரஞ்சனா தன்னுடைய படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் வேலை பார்த்து கொண்டிருந்தாள்.
அம்ருதாவிற்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு வருடம் நிறைவடைந்து இருந்தது. குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு தர்ஷன் என்று பெயர் சூட்டி இருந்தனர்.
ஆத்யா முன்மழலையர் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள். தன்னுடைய தம்பியின் மீது அளவு கடந்த அன்பும், அவ்வபோது கொஞ்சுகிறேன் என்ற பெயரில் வம்பும் செய்து கொண்டு இருந்தாள். இருவரும் சேர்ந்து வீட்டையே ரணகளம் ஆக்கி கொண்டிருந்தனர்.
ஹர்ஷாவின் ரெஸ்டாரண்ட் பெரிய அளவில் பெயர் பெற்றிருந்தது. அம்ருதா உருவாக்கி கொடுத்த இன்டீரியர் டெகரேஷனின் மாதிரி வடிவத்தை பயன்படுத்தி சிறிதும் மாற்றமின்றி அப்படியே உருவாக்கி இருந்தான் ஹர்ஷா. ஒரு மாத காலம் முன்புதான் திறப்பு விழா ஏற்பாடு செய்து அம்ருதாவின் கைகளால் ரிப்பன் வெட்டியவர்கள் திறப்பு விழாவை சிறப்பாக செய்து முடித்திருந்தனர். ரெஸ்டாரண்ட் இப்போது முன்பை விட நிறைய வாடிக்கையாளர்களை பெற்று சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
நள்ளிரவு வேலையில் ஹர்ஷாவின் குடும்பத்தினர் அனைவரும் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தனர். காரணம் இன்று விடியற்காலை நிரஞ்சனாவின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனால் இரவு வேளை கூட பகல் போல கலகலவென இருந்தது.
அம்ருதா புடவை கட்டி, தங்க ஆபரணங்கள் அணிந்து அழகாக தாயாராகி கொண்டிருக்க, ஹர்ஷாவும் வேட்டி சட்டையில் தயாராகி நின்றிருந்தான். அம்ருதாவின் பின்னாலிருந்து வெற்றிடையில் கரம் பதித்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன்,
“தங்கத்தை விட உன் முகம் ஜொலிக்குதே. நீ இரண்டு குழந்தைகளுக்கு அம்மான்னு சொன்னா யாருமே நம்பவே மாட்டாங்க தெரியுமா?” என்று கேட்டிட,
“நீங்க மட்டும் என்னவாம்? ஏதோ நீங்கதான் கல்யாண மாப்பிள்ளை மாதிரி பார்க்க அவ்வளவு அழகா இருக்கீங்களே..!!” என்றதும் அவளை தன்னை பார்க்க செய்தவன்
அவளது கன்னம் இரண்டிலும் தன் கரத்தை பதிக்க, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்தவள்,
‘இவளிடம் அனுமதி கேட்டு கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது’ என்று எண்ணியவன், விலக பார்த்தவளை இழுத்து அணைத்து பட்டென அவளது இதழை கவ்வி கொண்டான்.
நீண்ட நேர முத்தத்திற்கு பின்னர் ஆத்யா அப்பாவென அறைக்கு வெளியில் நின்று அழைக்கும் சத்தம் கேட்ட பின்னரே மனமே இன்றி அவளை விட்டு விலகினான் ஹர்ஷ மித்ரன். அம்ருதா சிரித்து கொள்ள, “என் மகளால இப்போ நீ தப்பிச்சுட்ட. சிரிக்கிறியா நீ? இரு உன்னை அப்புறமா பாத்துக்கிறேன்” என்றவன் வெளியில் சென்று ஆத்யாவை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தான்.
தினேஷ், நிரஞ்சனா திருமணத்தை அருகில் இருந்த முருகன் கோவிலில் ஏற்பாடு செய்திருந்தனர். விடியற்காலை பொழுதில் நடக்கும் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் வந்திருந்தினர்.
மணமகன் தினேஷ் ஐயர் கூறும் மந்திரங்களை திரும்ப கூறியப்படி பட்டுவேட்டி பட்டு சட்டையில் அமர்ந்து இருக்க, மணமகள் நிரஞ்சனா பட்டுப்புடவையில் அழகே உருவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நாணத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள். தினேஷின் அருகில் அமர்ந்ததும் இருவர் மனதிலும் நீண்ட காலம் எதிர்பார்த்து காத்திருந்த திருமணத்திற்கான நாள் வந்ததில் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.
மந்திரங்கள் உச்சரிக்கப்பட, மங்கள வாத்தியங்கள் முழங்க, மங்கள நாணை நிரஞ்சனாவின் கழுத்தில் பூட்டி அவளை தன்னுடைய மனைவியாக்கிக் கொண்டான் தினேஷ்.நெற்றியில் குங்குமம் வைத்து தன்னுடைய சரிபாதியாக ஏற்று கொண்ட பின்னர் இருவரும் சேர்ந்து அக்னியை வலம் வந்தனர்.
தினேஷின் பெற்றோர், நிரஞ்சனாவின் பெற்றோர் காலில் விழுந்து மணமக்கள் இருவரும் ஆசி பெற்று கொண்டவர்கள் அடுத்ததாக ஹர்ஷாவின் பெற்றோரிடமும் ஆசி வாங்கி கொண்டனர். ரிசெப்ஷன் ஹர்ஷாவின் ரெஸ்டாரண்ட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நவீன காலத்திற்கு ஏற்ப மேடை அமைத்து, பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, மணமக்கள் இருவரும் மேடையின் மீது நிறுத்தப்பட்டிருக்க, ஆட்டம் பாட்டத்துடன் சொந்தங்கள், நண்பர்களின் முன்னிலையில் மிகப்பெரிய அளவில் சிறப்பாக நடந்தேறியது.
ஹர்ஷாவும், அம்ருதாவும் மணமக்களை விட அழகாக இருந்தனர். இருவரும் பொறுப்பான தாய், தந்தையராக, அன்பான கணவன் மனைவியாக, ஒவ்வொரு நாளும் கூடி கொண்டே இருக்கும் காதலுடன் வாழ்ந்து வந்தனர். மூன்று குடும்பத்தினரும் மேடையில் ஒன்றாக நிற்க, ஆத்யாவை ஹர்ஷாவும், தர்ஷனை அம்ருதாவும் தூக்கி வைத்தபடி, மணமக்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு ஒரு குறையும் இல்லை.
அனைவர் மனதிலும், முகத்திலும் புன்னகை நிறைந்து இருந்தது.
இன்று போல அனைவரும் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்தி இவர்களுடன் சேர்ந்து நாமும் விடைபெறுவோம். கதையுடன் சேர்ந்து பயணித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்..