ஹர்ஷாவிடமிருந்து விடைபெற்று வீட்டிற்குள் நுழைந்த அம்ருதாவை நெருங்கிய காவேரி, “என்னமா ஆச்சு? பேசினியா? உனக்கு ஓகேவா?” என்று எதிர்பார்ப்புடன் கேட்டிட, “பேசினேன் மா.” என்றவள் அதை தொடர்ந்து அங்கு நடந்தவற்றை கூறி முடித்தாள்.
“சரிடா. புரியுது. நீ யோசிச்சு பதில் சொல்லு. ஆனா என்னோட அபிப்ராயம் என்னன்னா அந்த தம்பி சரியாதான் பேசியிருக்கு. நீ சம்மதம் சொன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்பதோடு ஹர்ஷாவை பற்றின தனது பேச்சை முடித்து கொண்டவர்,
“பாப்பா தூங்கிட்டுதான் இருக்கா. உனக்கு ஆபீஸ் ஒர்க் இருந்தா பாரு. அவ எழுந்தாலும் நான் பாத்துக்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து விலகி செல்ல, நிரஞ்சனா வீட்டிற்குள் வந்தாள்.
அம்ருதாவை பார்க்கவே பிடிக்கலை என்பது போல் முகத்தை திருப்பி கொண்டு அவள் சென்று விட அம்ருதாவின் மனதில் சுருக்கென தைத்தது வலி. அவள் செல்வதையே பார்த்தவளுக்கு காலையில் அவள் பேசியது நினைவில் வர முகம் சுருங்கி போனது.
அன்றைய பொழுது முடிந்து அடுத்த நாளும் தொடங்கி விட ஹர்ஷா தனது உணவகத்தின் வேலைகளை கவனித்து கொண்டே இருந்தாலும் இடையிடையே தனது அலைபேசியையும் எடுத்து பார்க்க தவறவில்லை. ஏனோ மனம் ‘அவள் தன்னை ஏற்று கொள்ள வேண்டும்’ என எண்ணத் துவங்கியது.
‘இது வரைக்கும் நான் இப்படி யோசிச்சதே இல்ல அம்ருதா. உங்க விஷயத்துல மட்டும் நான் ஏன் இப்படி ஆகுறேன்னு எனக்கே தெரியல’ என்றபடியே தனது அலுவலக அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான். நேரம் ஓடி கொண்டே இருக்க ஹர்ஷாவுக்கு மட்டும் ஒவ்வொரு நிமிடமும், நகரவே மாட்டேன் என்பது போல் இருந்தது.
அன்றைய பகல் பொழுது முடிந்து இரவும் தொடங்கி விட ஆனாலும் அவள் அழைத்தபாடில்லை. இனி அவள் அழைத்து பேசுவாள் என்ற நம்பிக்கையும் அவனுக்கு குறைந்து கொண்டே போனது.
இரவு ஒன்பது மணி அளவில் அம்ருதாவின் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் தருணம் “அம்ருதா விஷயம் என்னம்மா ஆச்சு?” என நிரஞ்சனா காவேரியிடம் கேட்க,
“அம்ருதா டைம் கேட்டிருக்கா. யோசிச்சு அவளே முடிவ சொல்லுவா” என்றதும் நிரஞ்சனாவிற்கு தலைக்கு மேல் கோபம் வந்தது.
“ஓ… மேடம் இன்னும் யோசிச்சு சொல்றேன்னு சொல்ற இடத்துல இருக்கிறதா நினைப்பா? உனக்கெலாம் ஒரு வரன் வரதே பெருசு. அதை மேடம் வேண்டாம்னு வேற சொல்லுவீங்களோ?” என்றதும் வலி நிறைந்த பார்வையோடு நிரஞ்சனாவை பார்த்தாள் அம்ருதா.
“என்ன பாக்குற? உன்னோட கடந்த காலத்த பத்தி எல்லா விஷயத்தையும் வந்தவர்கிட்ட சொல்லிட்டியா? நீ சொல்லிருக்க மாட்ட. அப்படி சொல்லி இருந்தாதான் அவரே உன்னை வேண்டாம்னு ரிஜெக்ட் பண்ணியிருப்பாரே. நீ யோசிச்சு சொல்றேன்னு சொல்ற நிலைமையிலா இருந்திருக்கும்?”
என்றதும் ஆறுமுகம் எழுந்து அவள் கன்னத்திலேயே “பளார்.. ” என்று அறைந்துவிட்டார்.
“நானும் பார்த்துட்டே இருக்கேன். வர வர ரொம்ப ஓவரா பேசுற? உன்ன போல அவளும் எங்களுக்கு பொண்ணுதான். அதை மறந்துட்டு உன் இஷ்டத்துக்கு பேசுவியா நீ?” என்றதும் பதறியப்படி அம்ருதா இடையில் வந்தவள்,
“பிரச்சனை வேண்டாம்பா விடுங்க” என்றாள் அவரை சமாதானம் செய்யும் பொருட்டு. ஆனால் நிரஞ்சனாவிற்கு இது மேலும் கோபத்தையே தூண்டியது.
“அப்பா என்னை அடிச்சாலும் பரவால்ல. சமாதானம் பண்றேன்னு நீ இடையில வராம இருந்தா மட்டும் போதும்.
உன்னாலதான்டி வீட்ல இருக்குற எல்லாருக்கும் கஷ்டம். உன்னையும் ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்தா அவன்கூட போய் தொலைய வேண்டியது தானே? இங்கயே இருந்து ஏன்டி இப்படி எங்க உயிரை வாங்குற?” என்று சொல்லி முடிக்கவும், காவேரி அவள் கன்னத்தில் அறையவும் சரியாக இருந்தது.
“அம்மா ப்ளீஸ்..” என்று அம்ருதா குறுக்கிடவும் நிரஞ்சனாவின் விழிகள் தீயாக அவளை முறைத்தன.
“இப்போகூட எப்படி முறைக்கிறா பாரு. இவள..” என்று மீண்டும் அடிக்க போக, அன்னையின் கரத்தை தடுத்து பிடித்தவள் அவரை தனது அறைக்குள் அழைத்து சென்றாள்.
நிரஞ்சனாவோ தன் தந்தையையும் முறைத்து பார்த்தவள் கோபமாக தனது அறைக்குள் சென்று அறைக் கதவை பூட்டி கொண்டாள். அவள் தந்தை ஆறுமுகத்திற்கோ இன்னும் மனம் அமைதி அடையவில்லை.
“என்னை விடு அம்ரு… இன்னைக்கு அவளை நான் சும்மா விடுறதா இல்ல. என்ன பேச்சு பேசுறா அவ?” என்றதும்
“விடுங்க மா. பிரச்சனை வேண்டாம்” என சொன்னதையே சொல்லி கொண்டிருந்தாள் அம்ருதா. பதற்றம் தொற்றி கொண்டது அவளுக்கு. வெளி ஆட்கள் பேசுவதை பற்றியெல்லாம் கவலையே படாதவளுக்கு ஏனோ குடும்பதிற்குள் நடக்கும் பிரச்சனைகளை மட்டும் தாங்கும் திடம் மனதில் இல்லாமல் போனது.
இதற்க்கு அந்த ஹர்ஷாவையே திருமணம் செய்து கொண்டு சென்று விடலாம் என்ற எண்ணமும் கூட வந்து போக. என்ன செய்வதென்று புரியாமல் இருந்தாள் அம்ருதா.
இங்கு ஹர்ஷாவோ அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தனது அறைக்குள் சென்றவனுக்கு இரண்டு நாட்கள்தான் அவள் முடிவெடுக்க நேரம் கேட்டிருந்தாள் என்றபோதும் இன்று அம்ருதாவின் பதிலுக்காக தவம் கிடந்தவனுக்கு இந்த இரண்டு நாட்களையே இயல்பாக கடத்த முடியவில்லை.
இறுதியாக ஒரு முறை தனது அலைபேசியை எடுத்து பார்த்த போதும் அவளிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போகவே அதில் ஏமாற்றம் அடைந்தவன்,
‘சரி அவங்களுக்கு விருப்பம் இல்லை போல. இனிமேலும் நாம எதிர்பார்த்து வெயிட் பண்றது வேஸ்ட்’ என்று முடிவெடுத்து அலைபேசியை மேஜையின் மீது வைத்து விட்டு குளிக்க சென்ற நேரம் அம்ருதா அழைப்பை ஏற்டுத்தி இருந்தாள்.
அழைப்பு ஏற்கப்படவில்லை என்றதும் மறுமுனையில் இருந்த அம்ருதாவுக்கும் என்னவோ போல் இருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் அழைத்து விட்டாள். இப்போது அதை நினைத்து சற்று பதட்டமாகவே இருந்தது.
குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் மடி கணினியில் தனது வேலைய பார்க்க துவங்கி விட்டான். நேரம் இரவு பண்ணிரெண்டை தொட்டுவிட அப்போதுதான் தனது வேலைகளை முடித்தவன் ஃபோனை எடுத்து பார்த்ததும் அம்ருதா அழைத்திருப்பது தெரியவே,
‘எப்படி கவனிக்காமல் போனோம்?’ என்று தனது நெற்றியிலேயே அறைந்து கொண்டான்.
‘இவ்வளவு நேரம் ஆகிடுச்சே. திரும்ப கால் பண்ணவும் முடியாது’ என்று எண்ணியவன், ‘ப்ச்… மறுபடியும் காலைல வரைக்கும் வெயிட் பண்ணனுமா?’ என்று பெருமூச்சு விட்டப்படியே மெத்தையில் சரிந்தவனுக்கு தூக்கம்தான் தொலைதூரமாகி போனது.
இங்கு அம்ருதாவும் பல விதமான சிந்தனைகளில் உழன்றவள் நேரம் கழித்தே உறக்கத்தை தழுவினாள்.
ஹர்ஷா வழக்கம் போல் நேரமே எழுந்தவன் தன்னுடைய வழக்கமான உடற்பயிற்சியை செய்து முடித்து, குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தான். நேரம் எட்டை தொட்டிருக்க இதற்கு மேலும் பொறுமை இல்லை என அம்ருதாவின் எண்ணிற்கு அழைத்து விட்டான்.
இரவு வெகு நேரத்திற்கு பிறகே உறங்கியவள் இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. அதில் யார் என்று பாக்காமலேயே அழைப்பை ஏற்று காதில் வைத்து “ஹலோ…” என்று சொல்ல,
அவளுடைய கரகரப்பான குரலிலேயே அவள் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறாள் என்பது அவனுக்கு நன்றாக புரிந்தது.
“சாரி.. தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றுதும் சட்டென விழிகளை திறந்தவள் யார் என்று பார்க்கும் போதுதான் அது ஹர்ஷாவின் அழைப்பு என்பது தெரிந்தது. சட்டென எழுந்து அமர்ந்தவள்,
“அ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல. சொல்லுங்க” என்றாள்.
“நீங்கதான் சொல்லணும் அம்ருதா, என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” என பட்டென்று கேட்டுவிட ஒரு நிமிடம் தினறியவள்,
“அது… வந்து…” என்று பதில் சொல்ல தடுமாறியவள், பிறகு நன்றாக மூச்சை இழுத்து விட்டு, தைரியத்தை வரவழைத்து கொண்டு, “எனக்கு சம்மதம் மிஸ்டர் ஹர்ஷா” என்றாள்.
இங்கு ஹர்ஷாவின் அதரங்களோ மகிழ்ச்சியில் விரிந்தன. “சரி அம்ருதா. அப்போ.. நான் என் பேரன்ட்ஸ்சோட உங்க வீட்டுக்கு வந்து பேசவா?” என்று கேட்டதும்
“ம்ம்.. சரி… பாப்பா எழுந்துட்டா நான் அப்புறம் பேசுறேன்” என்றவள் பட்டென அழைப்பை துண்டித்து விட்டு உறங்கி கொண்டிருக்கும் தன் குழந்தையை பார்த்தாள்.
அவனுடைய ஆளுமையான குரலை கேட்டாலே மனம் பதற்றத்தை தத்தெடுத்து கொள்கிறது. அடுத்து பேசவே அச்சம் கொண்டவளாக பொய்யான காரணம் கூறி அழைப்பை துண்டித்து விட்டாள். மனம் இன்னும் அந்த உணர்விலிருந்து வெளி வராமல் இதய துடிப்பு வேகமாக அடித்து கொண்டது.
அம்ருதாவின் சம்மதத்தில் ஹர்ஷாவின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசமாக இருந்தது. தனது அறையை விட்டு வெளியேறி, படியிறங்கி கீழே வந்தவன் உணவு மேஜையில் முன்பு அமர்ந்து உண்டு கொண்டிருக்கும் பெற்றோருடன் தானும் சேர்ந்து கொண்டான்.
உணவை உண்டபடியே எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சிந்தித்தவன், அலைபேசியில் இருந்த அம்ருதாவின் புகைப்படத்தை எடுத்து தன் அன்னையிடம் காட்டினான்.
“அம்மா இவங்க பேரு அம்ருதா. நான் இவங்களை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்” என்றதும் கீர்த்தனாவின் முகத்திலோ அளவற்ற மகிழ்ச்சி. எத்தனையோ நாட்கள் எதிர்பார்த்த விடயமாயிற்றே.
அமுருதாவின் புகைப்படத்தை பார்த்தவர் “பொண்ணு ரொம்ப அழகா இருக்காப்பா” என்றார். தனது கணவன் பார்த்திபனிடமும் அம்ருதாவின் புகைப்படத்தை காட்ட,
“அதுக்கு முன்னாடி நான் இன்னொரு விஷயம் சொல்லணும்.” என்றதும் என்ன என்பது போல் இருவரும் அவனை பார்க்க,
“அம்ருதாவுக்கு ஒரு குழந்தை இருக்கா. அவ பெயர் ஆத்யா. எப்படியும் இரண்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன்” என்றதும் இதுவரையிலும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த கீர்த்தனாவின் முகம் அப்படியே கோபமாக மாறி போனது.
“என்ன சொல்ற ஹர்ஷா? குழந்தை இருக்கா?” என புருவம் இடுங்க கேள்வியாக பார்த்தார்.
“ஆமாம் மா. குழந்தை இருக்கு” என்று அவன் மீண்டும் சாதாரணமாக கூற,
இதை கீர்த்தனாவாள் ஏற்று கொள்ளவே முடியவில்லை. “அப்போ இந்த பொண்ணு வேண்டாம் ஹர்ஷா, வேற பொண்ணை பார்க்கலாம்..” என்றதும் உணவு தட்டிலிருந்த ஹர்ஷாவின் கரம் அசைவின்றி அப்படியே நின்றது.