ஆரல் -12
சில வருடங்களுக்கு முன்பு..
ஆரோன் அப்பொழுது 12 வது படித்துக் கொண்டிருந்தான்.
நண்பர்களோடு மிகவும் ஜாலியாக சுத்துவாங்க.
ஆரோன், ஷாம் இருவரும் சேர்ந்தால்
சொல்லவே வேண்டாம் அப்படி ஒரு சுட்டித்தனம் செய்வார்கள் இருவரும். ரீனாவும் அதே ஸ்கூலில் தான் படித்துக் கொண்டிருந்தாள்.
இருவருமே வேறு வேறு கிளாஸ். அதனால் அவர்களுடைய சந்திப்பு மிக அரிதாகவே இருக்கும்.
அப்படி இருக்கும் பொழுது அன்று ஒரு நாள் ஆரோனுடைய நண்பர்கள் அவனிடம்,
“டேய் என்னடா எப்ப பாத்தாலும் இப்படி படிச்சிக்கிட்டே இருக்க.. இந்த பீரியட் நம்மளுக்கு ஃப்ரீ தானே வாயேன் சும்மா அப்படியே வெளியே வராண்டாவிற்கு போயிட்டு வரலாம்..” என்று அவனுடைய நண்பர்கள் அழைக்க,
அவனோ “இல்லடா நான் வரல.. நீங்க போங்க..” என்றான்.
ஷாமோ “டேய் இவன் இப்படியெல்லாம் சொன்னா கேக்க மாட்டான் தூக்குங்கடா இவனை..” என்று சொல்ல மற்றவர்களும் அவனுடைய பேச்சைக் கேட்டு, ஆரோனை குண்டுக் கட்டாக தூக்கிக்கொண்டுச் சென்றார்கள். அவர்களுக்கு இப்பொழுது ஃப்ரீ பீரியட் என்பதால் நால்வரும் ஓரிடத்தில் நின்று அங்கு விளையாடும் பெண்களை சைட் அடித்துக் கொண்டிருக்க ஆரோனோ அவர்களுடன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அப்பொழுது ரீனா அவளுடைய தோழிகளுடன் பாத்ரூம் சொல்வதற்காக அவ்வழியே வர ஆரோனுடைய நண்பர்கள் அவளைப் பார்த்து சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவளோ அவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் அங்கு அமைதியாக அமர்ந்திருந்த ஆரோனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
அவனும் அப்பொழுது அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவளோ அவனைப் பார்த்ததும் லேசாக புன்னகைத்தவாறே அவனை விலகிச் சென்று விட, அவனுக்கோ புதுவிதமான உணர்வாக இருந்தது.
அவள் அவனைப் பார்த்து சிரிக்கும் பொழுது அந்த சந்தோஷத்தில் அவன் திளைத்துக் கொண்டிருக்க, அவன் பக்கத்தில் இருந்த அவனது நண்பர்களோ அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பின்பு ரீனாவும், அவள் தோழியும் அங்கிருந்து சென்றவுடன் ஆரோனின் நண்பர்கள் மூவரும் அவனை சூழ்ந்துக் கொண்டார்கள்.
“ ஏன்டா எப்பவுமே நாங்க தான் சைட் அடிக்க வருவோம் நீ யாரையும் கண்டுக்காம இருப்ப.. ஆனா, எங்களை ஒரு பொண்ணுங்க கூட திரும்பி பார்க்க மாட்டேங்குது.. அது சரி வர மாட்டேன்னு சொன்ன உன்ன வம்படியா தூக்கிட்டு வந்தோம்ல எங்களுக்கு தேவைதான்.. ஆனா பொண்ணுங்க எல்லாம் உன்ன தான் பாக்குது.. அப்போ எங்களை எல்லாம் பார்த்தா இளிச்சவாய்ங்க மாதிரி தெரியுதா..?” என்று அவனிடம் கேட்க, அவனோ சிறுப் புன்னகையை அவர்களிடம் உதிர்த்தவன், “அதுக்கெல்லாம் முகராசி வேணும்டா..” என்றவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அதேபோல மறுநாளும் நண்பர்கள் மூவரும் கிளாஸ்ரூமில் இருந்து கிளம்பும்பொழுது ஆரோனை ஒரு பார்வைப் பார்த்தவர்கள்,
“ வேணாம் நீ அங்க வர வேண்டாம். நீ இங்கேயே இரு ராசா..” என்று அவனை அங்கேயே கழட்டி விட்டு அவர்கள் மூவரும் மட்டும் அங்கே சென்றார்கள்.
அவர்களுடைய நேரமோ என்னவோ அந்த நேரம் அங்கு பெண்கள் யாருமே வரவில்லை.
‘என்னடா இது இன்னைக்கு ஒருத்தி கூட இந்த பக்கம் காணோம்..’ என்று புலம்பிக் கொண்டிருக்க,
இங்கு கிளாஸ்ரூமில் தனித்து அமர்ந்திருந்த ஆரோனை அழைத்தது வெளியே இருந்து வந்த ஒரு இனிமையான பெண்ணின் குரல்.
அதில் சட்டென நிமிர்ந்து பார்த்தவன், இனிமையாக அதிர்ந்தான்.
நேற்று பார்த்த அதே பெண் அங்கு வாசலில் நின்றுக் கொண்டிருந்தாள். இவன் “என்ன..?” என்று கேட்க, அவளோ “அது வந்து சார் ரெஜிஸ்டர் இங்கேயே வச்சுட்டு வந்துட்டாங்களாம். அதை எடுத்துட்டு வர சொன்னாங்க.. கொஞ்சம் எடுத்துக் கொடுக்கிறீர்களா..?” என்று கேட்டாள் ரீனா.
அவனும் “சரி..” என்று தலை ஆட்டியவன், அங்கு மேஜையில் இருந்த ரெஜிஸ்டரை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
அவளோ அவனைப் பார்த்து சிறிதாக நகைத்தவள் அங்கிருந்து சென்று விட்டாள்.
வெளியே பெண்களை சைட் அடிப்பதற்காக சென்ற ஆரோனின் நண்பர்களோ.. அங்கு யாரும் வரவில்லை என்று நேராக தங்களது கிளாஸ் ரூம்க்கு வர, அவர்களது கண்ணில் இந்த காட்சி விழுந்துவிட்டது.
அவ்வளவுதான் ஆரோனை சும்மா விடுவார்களா.. மூவரும் திரும்பவும் அவனை ரவுண்டு கட்டி,
“ஏன்டா நேத்து எங்க கூட உன்னை கூட்டிட்டு போனதுனால தான் அந்த பொண்ணுங்க எங்கள பார்க்கலைன்னு
இன்னைக்கு உன்னைய கழட்டி விட்டுட்டு போனா.. அந்த பொண்ணு என்னடான்னா நீ இருக்கிற இடத்துக்கு வந்து இருக்கா.. இது எதற்சையா நடந்த மாதிரி தெரியலையே.. என்னடா நடக்குது இங்க..” என்று ஷாம் கேட்க, அதற்கு பக்கத்தில் இருந்த இன்னொரு நண்பனோ,
“டேய் எனக்கு என்னவோ அந்த பொண்ணு உன்ன ரூட்டு விடுறான்னு தோணுது..” என்று சொல்ல மற்றும் ஒரு நண்பனோ, “ஆமாடா எனக்கும் அப்படித்தான் தோணுது.. அந்த புள்ள இதுவரைக்கும் யாரையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்லைன்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன்.. அப்படிப்பட்ட பிள்ளை நேத்து இவனை பார்த்து சிரிச்சிட்டு போறா.. இன்னைக்கு என்னடான்னா இவன் கிட்ட வந்து பேசிட்டு திரும்பவும் சிரிச்சிட்டு போற ஏதோ சம்திங் சம்திங் நடக்குதடா..” என்றான்.
அதற்கு ஆரோனோ “டேய் சும்மா இருங்கடா.. ஏதோ சார் ரிஜிஸ்டர் மறந்து வைச்சிட்டு போயிட்டாருன்னு வந்து வாங்கிட்டு போறா.. இதுல என்னடா இருக்கு..” என்றான்.
ஆனால், அவனுக்குள்ளோ பட்டாம்பூச்சிகள் பறந்துக் கொண்டிருந்தது.
இப்படியே நண்பர்கள் கலாய்த்துக் கொண்டிருக்க, ஆரோனோ இவர்கள் சொல்வது போல் இருந்தா எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தான். நாட்கள் வெகுவாக சென்றன.
ஒரு நாள் ரீனாவின் கிளாசுக்கும், ஆரோனின் கிளாசுக்கும் பொதுவான ஒரு சப்ஜெக்டை அன்று நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். அப்பொழுது இரண்டு வகுப்பு மாணவர்களும் ஒரே அறையில் தான் இருந்தார்கள்.
அப்பொழுது அந்த ஆசிரியர் ஒவ்வொரு மாணவராக அழைத்து பிளாக் போர்டில் அவர் ஒரு கொஸ்டின் எழுதி வைத்திருக்க அதை முடித்து வைக்க ஒவ்வொரு மாணவராக அழைத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது சில மாணவர்கள் சென்று தங்களுடைய பதில்களை சொல்லிவிட்டு வரும் பொழுது அடுத்ததாக ரீனாவை அழைத்தார் ஆசிரியர்.
அவளோ அவர் அழைத்ததும் வேகமாக எழுந்து சென்றவள், அங்கு மேஜையில் இருந்து கீழே விழுந்து கிடந்த ஒரு துருப்பிடித்த ஸ்க்ரூவில் காலை வைத்து விட்டாள்.
அவள் வைத்த வேகத்திற்கு அந்த ஸ்க்ரூ பாதி அளவு அவள் காலை பதம் பார்த்திருந்தது.
“ஆஆஆ..” என்று கத்தியவாறே அவள் கீழே அமர்ந்து விட அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
அவர்கள் மட்டுமா அங்கு அமர்ந்திருந்த ஆரோணுக்கோ ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
திடுக்கிட்டுப் போனான்.
பின்பு அவள் கத்தவும் ஆசிரியர் வந்து என்ன என்று பார்க்க அப்பொழுது அவள் காலில் அந்த ஸ்க்ரூ இருந்ததை கண்டவர்,
அவளுடைய காலை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
அவளோ அதை எடுக்க விடாமல் வலியில் அலறிக் கொண்டிருந்தாள். அவளுடைய பெண் தோழிகள் இருவர் வந்து அவளை இறுக்கமாக ஆளுக்கு ஒரு பக்கமாக பிடித்துக் கொள்ள, அந்த ஆசிரியரோ அவளுடைய காலை கெட்டியாக பிடித்துக் கொண்டு,
“பசங்களா யாராவது ஒருத்தங்க வந்து இந்த ஆணியை எடுங்க..” என்று கூப்பிட அங்கு இருந்த ஆண் மாணவர்களோ யாரும் முன் வர துணியவில்லை.
அவர்களுக்கு பயமாக இருந்தது.
ஆரோனோ சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு அவளைப் பார்க்க அவளோ வலி தாங்க முடியாமல் இரண்டு கண்களிலும் கண்ணீர் அருவியாக வடிய கத்திக் கொண்டிருந்தாள்.
பின்பு அவனே வேகமாக அவள் அருகே வந்தவன், அவளையும் அவள் காலையும் பார்த்துவிட்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் ச்ட்டென அந்த ஸ்க்ரூவை அவள் காலில் இருந்து பிடுங்கி விட்டான்.
அவளோ மீண்டும் “ஆஆஆ..” என்று பெருங்குரல் எடுத்து கத்தியவள், பாதி மயக்கத்திற்குச் சென்றிருந்தாள்.
ஆரோனோ அந்த ஸ்க்ரூவை எடுத்ததும் அவளுடைய காலில் இருந்து அதிகமாக இரத்தம் வெளியேற அவனுடைய கைகால் அந்த இடத்தை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டான்.
அவனுக்கோ அவள் படும் கஷ்டத்தை பார்த்து மனது ஒரு நிலையில் இல்லை.
இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் அங்கு ஒரு ஆட்டோவை கூட்டி வந்துவிட அவளை தூக்கிக்கொண்டு அந்த ஆட்டோவில் ஏற்றினார்கள்.
அவளுடைய தலை அந்த ஆசிரியரின் மடியில் இருக்க, இவனோ அவளுடைய காலை தன்மடியில் வைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றார்கள்.
இவர்கள் ஹாஸ்பிடல் செல்லும் வழியில் அந்த ஆசிரியர் ரீனாவின் பெற்றோருக்கு அழைப்பு எடுத்து சொல்லிவிட, இவர்கள் வருவதற்கு முன்னரே ரீனாவின் பெற்றோர் அங்கு வந்திருந்தார்கள்.
பின்பு ஸ்ட்ரக்சரில் அவளைக் கிடத்தி உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
அதிக ரத்தப்போக்கின் காரணமாய் அவள் முழுவதும் மயக்கத்தின் வசம் சென்றிருந்தாள்.
உடலும் பலவீனமாக இருக்க குளுக்கோஸ் ஏற்றப்பட்டு அவளுடைய அந்த அடிபட்ட காலுக்கு மருந்துட்டு கட்டு போட்டு இருந்தார்கள்.
மூன்று மணி நேரமாக அவளைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.
இங்கு ஆரோனுக்கோ இருப்புக் கொள்ளவில்லை.
அவள் இருந்த அந்த அறையை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சமயம் அவ்வழியே வந்த நர்ஸ் ஒருவரோ,
“தம்பி சும்மா சும்மா எட்டிப் பார்க்கக் கூடாது.. அப்படி போய் உட்காரு..” என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
இவனுக்கோ கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று அவளைப் பார்த்து விடலாமா..? என்று தோணிய ஆசையை தனக்குள்ளே பூட்டிக்கொண்டு அமைதியாக அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
ஆரல் -13
மூன்று மணி நேரங்கள் கழித்து கண் விழித்தாள் ரீனா.
பின்பு டாக்டர் வந்து அவளை ஆராய்ந்து விட்டு,
“காயத்துக்கு மருந்து போட்டாச்சு.. அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க.. மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை.
இந்த டிரிப்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறமா நீங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போங்க.. காலுல தண்ணி எதுவும் படாமல் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க..” என்றார்.
அதை அனைத்தையும் இவனும் கேட்டுக் கொண்டு அவளை எப்போது பார்க்கலாம் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில் அந்த ட்ரிப்ஸ் முடிந்ததும் அவளை அவளது தந்தை கையில் தூக்கிக்கொண்டு வெளியே வர, அப்பொழுது இவனும் அவளை ஆர்வமாகப் பார்த்தான்.
அவளும் அவனைப் பார்த்தாள்.
ஆனால், எதுவும் சொல்லவில்லை ஆட்டோவில் ஏறியப் பின்னர் அவளின் துப்பட்டா கிழே கிடக்க அதை அழகாக எடுத்து அவள் கையில் கொடுக்க, அவனை தன் அருகில் பார்த்தவள் அவனுக்கு மட்டும் கேட்கும் படி மெலிதான குரலில் “தேங்க்ஸ்..” என்று மட்டும் கூறினாள்.
இவனுக்கோ அதுவே போதும் என்றிருந்தது.
பின்னர் அவளை அழைத்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட, இவனோ அந்த ஆசிரியரோடு மீண்டும் பள்ளிக்குச் சென்றான்.
ஒரு வாரங்கள் கடந்தன.
ரீனா அந்த ஒரு வாரம் முழுவதும் ஸ்கூலுக்கு வரவில்லை.
இவனுக்கு தான் அவளைக் காணாமல் இந்த ஒரு வாரமும் ஏதோ போல் இருந்தது.
முழுவதும் அவள் நினைவாகவே சுற்றிக் கொண்டிருந்தான்.
ஸ்கூல் முடிந்து அவன் வழக்கமாக செல்லும் டியூசன் சென்டருக்கு சென்றிருந்தான்.
சிறிது நேரத்தில் அவனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
வேறென்ன அவனுடைய ரீனா தான் அங்கு வருகைத் தந்திருந்தாள்.
புதிதாக அந்த டியூஷன் சென்டருக்கு அவள் சேர்ந்திருந்தாள்.
அவளுடைய அப்பாவுடன் கலர் டிரஸ்சில் வந்திருந்தாள்.
அதைப் பார்த்தவனுக்கோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு வாரம் அவளைக் காணாமல் தவித்தவனுக்கோ இன்று அதுவும் அவளை கலர் டிரஸ்ஸில் பார்க்க புதிதாகப் பூத்த ரோஜா பூப் போல அழகாக மிளிர்ந்தாள்.
அவனுடைய கண்களோ எதேர்ச்சியாக அந்த டியூஷன் சென்டரில் படிக்க வரும் அவனை போன்ற மற்ற ஆண் பசங்களையும் பார்வையிட்டது.
அங்கு அவன் மட்டுமல்ல அவனைப் போல இன்னும் கொஞ்ச பசங்களும் அழகாகத் தான் இருந்தார்கள். அவனுடைய மனசாட்சியோ தன்னவளை யாரும் தூக்கிட்டு போயிடுவார்களோ.. என்ற அச்சத்தை அவனுக்கு அந்த நொடி பரப்பியது.
ரீனாவின் காலில் அடிபட்டிருந்ததால் அவள் காலை நொண்டியவாறே உள்ளே வந்து அவளுக்கான ஒரு இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.
இவனோ அவளை முழுவதுமாக பார்வையால் வருடியவன், அவளிடம் பேச வேண்டும் என்று துடியாய் துடித்தான்.
அதற்குள் அங்கு டியூசன் மாஸ்டர் வந்து பாடத்தை நடத்த அவனுக்கோ அந்த சில மணி நேரம் கண நேரமாக கடந்து கொண்டிருந்தன.
எப்போது அவளிடம் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தான்.
அங்கு டியூஷன் மாஸ்டரை ஒருவர் அழைக்க அவர் சென்று விட்டார். அவனுக்கோ சிறிது நேரத்தில் அவனுக்கான நேரம் கிடைத்து விட மெதுவாக ரீனா அமர்ந்திருக்கும் பெஞ்சின் ஓரத்தில் அமர்ந்து சரிந்தவாறே அவள் அருகே சென்றவன், “ ரீ ரீனா.. இப்ப எப்படி இருக்க..?” என்று கேட்டான்.
அவளோ “ம்ம்..” என்று மட்டும் மெல்லிய குரலில் உரைத்தாள்.
அவனோ “சரி..” என்று தலையாட்டி விட்டு மீண்டும் அவளிடம் பேச போக அதற்குள் அங்கு டியூஷன் மாஸ்டர் வரும் சத்தம் கேட்க மீண்டும் அவன் இடத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டான்.
மறுநாள் ஸ்கூலுக்கு வந்துவிட்டாள் ரீனா.
அவளை ஒரு வாரம் கழித்து மீண்டும் பார்த்ததில் அவளுடைய தோழிகள் அவளை சூழ்ந்து கொண்டார்கள்.
அவள் காலை நொண்டியவாறே நடக்க அவளுடன் யாராவது ஒரு தோழி கூடவே இருக்கோ இங்கு ஆரோனுக்கோ அவளிடம் பேச வாய்ப்பே கிடைக்கவில்லை.
நாட்கள் கடந்தன.
அந்த சமயத்தில் லைட்டிங் பேனா என்று ஒன்று புதிதாக வந்திருக்க, அனைத்து மாணவர்களும் அதை வாங்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது ஆரோனோ அந்த லைட்டிங் பேனாவை வாங்கியவன் ரீனாவிடம் கொடுப்பதற்கு எண்ணினான்.
அன்று ஸ்கூல் முடிந்து மாலை தான் அவனால் அந்த பேனாவை வாங்க முடிந்தது.
அதை அவளிடம் கொடுப்பதற்குள் அவள் வீட்டிற்குச் சென்று விட்டாள். மறுநாள் அவளிடம் அதை கொடுத்து விடலாம் தான்.. ஆனால், அதற்குள் அவனுக்கு பொறுமை இல்லை. எப்படியாவது இன்றைக்கு அவளிடம் அந்த பேனாவை கொடுத்து விட வேண்டும் என்று எண்ணியவன், இரவு அனைவரும் தூங்கிய பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தான்.
தன்னுடைய நண்பர்கள் பட்டாளத்தையும் அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டிற்குச் சென்று விட்டான்.
ரீனாவோ தன் குடும்பத்துடன் உணவை உண்டு விட்டு அவளுடைய அறைக்கு வந்தவள் கொஞ்ச நேரம் படித்துக் கொண்டிருந்தாள்.
பின்பு தூக்கம் வர இரவு உடையை மாற்றுவதற்காக கதவைப் பூட்டிவிட்டு அவளுடைய உடையை அவிழ்க்க அப்பொழுது அவளுடைய அறையின் ஜன்னல் கதவு லேசாகத் தட்டப்பட்டது.
இரவு வெகு நேரம் ஆகி இருந்தது.
இந்த இரவு நேரத்தில் ஜன்னல் கதவு தட்டும் சத்தத்தில் பயந்துப் போனாவள் சற்று அமைதியாக அந்த ஜன்னல் கதவை வெறித்துப் பார்க்க, மீண்டும் கதவு தட்டப்பட்டன.
அவ்வளவுதான் அரண்டுபோன ரீனாவோ உடனே “ஆ ஆ..” என்று கத்தி அவளுடையத் தந்தையை அழைக்க, பேனாவை கொடுக்க வந்த ஆரோனோ அவள் போட்ட சத்தத்தில் திடுக்கிட்டான் ‘சோலி முடிஞ்சி..’ என்று நினைத்தவன் கீழே விழுந்து செந்தட்டி செடியில் உருண்டவன், தலைத் தெரிக்க ஓடி விட்டான்.
பாவம் கீழே விழுந்தவனுக்கு தெரியவில்லை தான் எதில் விழுந்தோம் என்று.
சிறிது தூரம் சென்ற பின்பே அவனுடைய உடல் அரிக்கத் தொடங்கியது.
நண்பர்களின் அருகே சென்றவன் தன்னுடையக் கைகளால் தன் உடலை சொரிந்துக் கொண்டே இருந்தான்.
அவர்களோ “என்னாச்சுடா.. ஏன் இப்படி தலைத் தெரிக்க ஓடி வர்ற.. குடுத்துட்டியா.. இல்லையா..?” என்று கேட்க,
அவனோ “போடா.. நீ வேற..நான் ஜன்னல் கதவைத் தட்டவும் அவா கத்தி அவங்க அப்பாவ கூப்டுட்டா.. பயத்துல நான் கீழ விழுந்து ஓடி வந்து இருக்கேன்..” என்று சொறிந்து கொண்டே சொல்ல,
ஷாமோ “சரிடா ஏன் இப்படி வடிவேல் கையில செங்கல் வச்சி உரசுன மாதிர இப்படி சொரிஞ்சிக்கிட்டு இருக்க..” என்று கேட்க, அப்பொழுதே அவன் விழுந்த இடத்தை நினைவு கூர்ந்தவன்,
“ஒருவேளை நான் விழுந்த இடத்தில செந்தட்டி இருந்துருக்குமோ அதான் உடம்பு ஃபுல்லா அரிக்குதாடா..?” என்று கேட்க,
நண்பர்கள் கூட்டமோ விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கியது.
“ ஏன்டா ஏதோ இன்னைக்கு கொடுக்கலைன்னா.. அவகிட்ட இந்த பேனாவைக் கொடுக்கவே முடியாது என்கிற மாதிரி நைட்டோட நைட்டா எங்களை எழுப்பி கூட்டிட்டு வந்து கொடுக்க வந்த..
ஆனா பாவம் உன் பிளான் நடக்காம போச்சு..” என்று கூற,
ஆரோனோ தன் நண்பனை முறைக்க,
“சரி சரி வா காலையில தான் அவ ஸ்கூலுக்கு வருவால்ல..
அப்பவே கொடுத்துடு..” என்று இன்னொருவன் சொல்ல அவர்கள் அனைவரும் மீண்டும் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றார்கள்.
மறுநாள் ஸ்கூலுக்கு வந்த ஆரோன் ரீனாவின் கிளாசுக்கு சென்றுப் பார்க்க அங்கு ஒரு சில மாணவர்கள் மட்டும் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள்.
இவனோ அவள் இருக்கும் டேபிள் பக்கம் சென்றவன் எப்பொழுதும் போல ஓரத்தில் அமர்ந்து அவள் அருகில் சறுக்கிக்கொண்டு வந்து அமர்ந்தான்.
அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்கும் முன் அவளுடைய கையைப் பிடித்தவன் அவன் கையில் வைத்திருந்த பேனாவை கொடுத்து “இதை வச்சுக்கோ..” என்றான்.
“எனக்கு எதுக்கு இது..?” என்றாள் ரீனா.
“அதெல்லாம் தெரியாது இது உனக்குத் தான் நீ வச்சுக்கோ..” என்றவன்,
“ஆமா நேத்து நைட்டு உங்க வீட்ல என்ன நடந்துச்சு..?” என்று கேட்டான்
எதுவும் தெரியாதது போல,
அவளோ இவனை ஆச்சரியமாகப் பார்த்தவள்,
“அது எப்படி உங்களுக்கு தெரியும்..?” என்று கேட்டாள்.
சற்று தடுமாறியவன்,
“ஹான்.. எல்லாம் தெரியும் ஸ்கூலுக்கு வந்ததும் பேசிகிட்டு இருந்தாங்க.. அதான் கேட்டேன்..” என்றான்.
அவளோ அவனை சந்தேகமாகப் பார்க்க, இதற்கு மேல் இங்கு இருந்தால் தானே மாட்டிக் கொள்வோம் என்று நினைத்தவன் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான் ஆரரோன்.
இங்கு ஆரோனின் நண்பர்கள் கூட்டமோ ஒரு காதல் கடிதம் எழுதி அதில் பெயர்களை மற்றும் மாற்றிவிட்டு ஆளுக்கு ஒரு காதல் கடிதத்தை கையில் எடுத்துக்கொண்டு அவர்கள் விரும்பும் பெண்ணிற்கு கொடுக்க ஆயத்தமானார்கள்.
அப்பொழுது ரீனா அவள் தோழியுடன் தண்ணீர் குடிக்க மாடி ஏறிச் சென்று கொண்டிருக்க, அதை பார்த்துக் கொண்டிருந்த இவர்களோ ஆரோனை ஊக்குவித்தார்கள்.
“இதுதான் சரியான நேரம் சும்மா எவ்வளவு நான் தான் பார்த்துக் கிட்டே இருப்ப இந்த லெட்டரை கொண்டு போய் கொடு.. ரெண்டுல ஒன்னு தெரிஞ்சுக்கலாம்.. அவ உன்ன லவ் பண்றாளா.. இல்லையான்னு..” என்று அவர்கள் கூற, இவனுக்கோ பயமாக இருந்தது.
ஆனாலும் அவள் தன்னை விரும்புகிறாளா என்று தெரிந்து கொள்ள அவனுக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது.
“ சரி..” என்று ஒத்துக் கொண்டவன் அந்த காதல் கடிதத்தை வாங்கிக் கொண்டு ரீனாவை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.
அவனுடனே இரண்டு நண்பர்களும் வந்து கொண்டிருந்தார்கள்.
“சரிடா நீங்க ரெண்டு பேரும் இங்கேயே வெயிட் பண்ணி யாரும் வராங்களானு பாருங்க..நான் அதுக்குள்ள ரீனா கிட்ட இத கொடுத்துட்டு வந்துடுறேன்..” என்றவன் ரீனாவின் அருகில் சென்று “ரீனா இந்தா இத புடி..” என்று அவள் கையில் திணித்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டான்.
Super sis 💞