ஆரல் -02
ட்ராஃபிக் சிக்னலில் நின்ற ஆரோனோ சிக்னல் முடியும் தருவாயில் தன் எதிர்த் திசையில் வந்த ஒரு பெண்ணைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அவனுடைய உதடுகளோ தானாகவே “ரீனா..” என உச்சரித்தன. அவனுடைய காரின் பின்னால் இருந்த பிற வாகனங்கள் ஒலிகளை எழுப்ப அந்த சத்தத்திலும் அவன் சுயநினைவிற்கு வரவில்லை. வெகு நேரமாகியும் அவனுடைய கார் அந்த இடத்தில் இருந்து கிளம்பாமல் இருந்ததனால் பின்னால் இருந்த வாகனத்தில் இருந்தவர்கள் சிலர் கூச்சலிட அங்கே நின்ற டிராபிக் இன்ஸ்பெக்டரோ இவனுடைய காரின் அருகே வந்து கதவைத் தட்ட அப்பொழுதே சுய நினைவிற்கு வந்தான் ஆரோன். “யோவ் சிக்னல் விழுந்து எவ்வளவு நேரம் ஆகுது.. ஒழுங்கா வண்டி எடுக்கறியா..? இல்ல ஸ்டேஷன் கூட்டிட்டு போகவா..?” என்று அந்த இன்ஸ்பெக்டர் ஆரோனைப் பார்த்து கோபமாகக் கத்தினார். அவனும் தான் இருக்கும் சூழலை சுற்றிப் பார்த்தவன் எதுவும் கூறாது அவரிடம் தலையை மட்டும் ஆட்டியவன், தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து வேகமாக கிளம்பினான். ஆனால் அவனுடைய சிந்தனை முழுவதுமே அவன் பார்த்த அந்த பெண்ணின் முகமே தோன்றியது. அந்த பெண்ணோ தன்னுடைய முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டு தன்னுடைய கண்கள் மட்டும் தெரியும் படி ஸ்கூட்டியில் சென்றாள். அவன் கண்ட அந்த கண்கள் தான் அவனை வெகுவாகத் தாக்கியது. “உண்மையிலேயே அது ரீனாதான ச்ச.. ச்ச வாய்ப்பு இருக்காது.. அவதான் என்ன விட்டு போய் எத்தனை வருஷம் ஆகுது..” என்று சொல்லித் தன்னை தேற்றிக்கொண்டாலும் கூட, “ஆனா இத்தனை வருஷமா எனக்கு தோணாதது இன்னைக்கு ஏன் வித்தியாசமா தோணுது.. அவ உயிரோட தான் இருக்கான்னு தோணுது.. ஏன் இப்படி எல்லாம் நடக்குது ஒருவேளை அடிக்கடி ரீனா என் பக்கத்துல இருக்குற மாதிரியும், பேசுற மாதிரியும் தோணும் அதே மாதிரி தான் இன்னைக்கும் அவளை நேர்ல பார்த்த மாதிரி தோணுதா..? ஆமா அப்படித்தான் இருக்கும் நான் தான் கொஞ்சம் உண்மைன்னு நினைச்சிட்டேன். ரீனா ஐ மிஸ் யூ டி.. ஏன்டி என்ன விட்டு போன..” என்று தனக்குள் பேசியவாறே தன்னுடையக் காரை ஆபிஸுக்கு விட்டான். காரை பார்க்கிங்கில் நிறுத்தியவன் மெதுவாக எட்டுக்கள் வைத்து உள்ளே வர, அவனை எதிர்கொண்டான் ஷாம். ஆனால் அவனோ அவனை கண்டு கொள்ளாமல் தன்னுடைய அறைக்குச் சென்று அமர, ஷாமோ “அடப்பாவி இவ்வளவு பெரிய உருவம் முன்னாடி நிற்கிறதக் கூட கண்டுக்காம நீ பாட்டுக்கு போற..” என்று புலம்பியவாறே அவன் பின்னால் சென்று அவன் அறைக்குள் சென்று அவனைப் பார்க்க, அவனோ பேப்பர் வெயிட்டைக் கைகளால் சுற்றி விளையாண்டு கொண்டிருந்தான். அவனையும் அவன் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்த அந்த பேப்பர் வெயிட்டையும் பார்த்தவன் அவனைத் தீயாக முறைக்க அவனோ அவனைக் கண்டு கொள்ளவே இல்லை.. “டேய் ஆபீசுக்கு வர்ற நேரமாடா.. அதுவும் இன்னைக்கு எவ்வளவு பெரிய முக்கியமான மீட்டிங் இருக்குன்னு உனக்கு சொல்லியும் இவ்வளவு லேட்டா வந்திருக்க.. அவங்க எவ்வளவு நேரமா வெயிட் பண்ணினாங்க தெரியுமா..? நீ வராம போகவும் எல்லாரும் என்னை எப்படி பார்த்தாங்க தெரியுமா..? ஏதோ ஒரு வழியா எமர்ஜென்சினு சொல்லி நாளைக்கு மாத்தி வச்சிருக்கேன்… இல்லைன்னா.. எவ்வளவு பெரிய டீல் கேன்சல் ஆயிருக்கும் ஏன்டா இப்படி இருக்க..” என்று ஷியாம் பொறிந்து தள்ள, அவனோ கூலாக தான் செய்து கொண்டிருந்த வேலையை செய்து கொண்டிருந்தான். வேறென்ன பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தான். ஷாமுக்கோ பிபி அதிகரித்தது. மேசை மீது இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து முழுவதும் அருந்தியவன், டப்பென சத்தம் வரும் வகையில் அந்த டம்ளரை மீண்டும் டேபிள் மேல் வைக்க, ஆரோனோ கையில் சுற்றிக் கொண்டிருந்த பேப்பர் வெயிட்டை நிறுத்தியவன் அவனைப் பார்த்து கூலாக, “இங்க பாரு அதான் நாளைக்கு மாத்தி வச்சிட்டல்ல பிரச்சனை முடிஞ்சது.. ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிற கூல் சின்ன வயசுலயே ஹார்ட் அட்டாக் வந்து போய் சேர்ந்துடாதாடா…இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு..” என்று மிக நிதானமாக சொல்ல, ஷாமோ கொலை வெறியோடு அவன் மேல் பாய்ந்து விட்டான். “ ஏன்டா உன் கூட சின்ன வயசுல இருந்து ஒன்னா இருந்த பாவத்துக்காக காலேஜ் முடிச்சு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக இருந்தவன எனக்கே தெரியாம காண்ட்ராக்ட் போட்டு என்ன உனக்கு பி ஏவா இங்க கொண்டு வந்துட்ட.. சரி நண்பனாச்சே அவன் கூட இருக்கலாம் வேலைக்கு வேலையும் ஆச்சுன்னு உன் கூட இருந்ததுக்கு என்னை எப்படி எல்லாம் பண்ற..” என்று அவனுடன் சண்டை போட அவனும் ஷியாமுடன் இணைந்து சண்டை போட அவர்கள் இருந்த அறையில் இருவருமே உருள ஆரம்பித்தார்கள். வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இந்த சத்தத்தில் சற்று அதிர்ந்தாலும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என்று தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம்ன கழிய இருவருக்கும் டயர்ட் ஆக பிரிந்து ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்தார்கள். “சரி இதோட முடிச்சுக்கலாம் எனக்கும் டயர்டா இருக்கு உனக்கும் டயர்டா இருக்கும்னு நினைக்கிறேன்..” என்று ஷாம் கேட்க, ஆரோனோ ஆம் என்பது போல் அவனைப் பார்த்து தலையை ஆட்ட அதன்பின் அவர்கள் இருவருமே தங்கள் வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டார்கள். இதுவே இவர்கள் இருவருக்கும் வழக்கம். வேலைகளில் இருவரும் மிகச் சரியாக இருப்பார்கள். ஒருவர் இல்லை என்றாலும் இன்னொருவர் அதைச் சிறப்பாக செய்வார்கள் அதே போல் அவர்களுடைய குறும்புத்தனமும் அவ்வப்போது நடக்கும் நண்பர்கள் இருவரும் கேஷுவலாக ஆடை அணிந்து கொண்டு அவர்கள் வார இறுதியில் வழக்கமாக செல்லும் மாலுக்குச் செல்ல ஆயத்தமானார்கள். ஷாம் காரில் உள்ள குட்டி கண்ணாடியைத் தன் பக்கமாக திருப்பிக் கொண்டு தன் தலைக் கேசத்தை வாரியவாறே அருகில் டிரைவர் சீட்டில் அமர்ந்து தன்னை முறைத்துப் பார்த்து கொண்டு இருந்த ஆரோனிடம் “மச்சி இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேன்ல.. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு..” என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருக்க, ஆரோனோ “த்தூ..” என்று அவனை துப்பிவிட்டுக் காரை எடுத்தான். இன்றும் அந்த சிக்னலில் கார் நிற்க “சிட்..” என்று ஸ்டேரிங்கில் குத்தியவாறு அமர்ந்திருக்க, அன்று அவன் இதே சிக்னலில் பார்த்த பெண் அவன் கார் அருகிலே அவளுடைய இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்தாள். “டேய் இந்த சிக்னலை எவன்டா கண்டுபிடிச்சான் சரியான இரிடேட்டிங்..” என்க, அதை கேட்டு பக்கத்தில் இருந்த ஷாமோ, “ஏன்டாஆ எல்லாரும் ஆக்சிடென்ட் ஆகி சாகுறதுக்கா.. ஒரு.. ஒரு நிமிஷம் உன்னால இந்த சிக்னல்ல வெயிட் பண்ண முடியாதா..? கொஞ்ச நேரம் அமைதியா இருடா..” என்று ஷாம் சொல்லிக் கொண்டிருக்க, அவன் சொல்வதைக் கேட்டு அவனை முறைத்து ஜன்னல் பக்கமாகத் திரும்ப அப்பொழுது சரியாக சிக்னல் விழும் நேரம். தனது வண்டியை ஸ்டார்ட் செய்து ஸ்டாண்டை எடுப்பதற்காக அந்த பெண் சற்று இவன் புறமாகத் திரும்ப இவனும் அதே நேரம் அந்த பெண்ணைப் பார்க்க திரும்பவும் அதிர்ந்தான். அன்று பார்த்த அதே பெண். அன்று தன்னுடைய பிரம்மை என்று நினைத்தவன் இன்று மறுபடியும் அதே பெண்ணைப் பார்க்க அவனோ சற்று ஆடித்தான் போனான். அவனுடைய உதடுகள் மீண்டும் “ரீனா..” என்று உச்சரிக்க பக்கத்தில் இருந்த ஷாமோ, “டேய் சிக்னல் விழுந்துட்டுடா.. இவ்வளவு நேரம் எப்படா முடியும்னு சொல்லிக்கிட்டு இருந்த இப்போ அமைதியா இருக்க ஸ்டார்ட் பண்ணு..” என்று ஷாம் சொல்ல, அவனோ அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். ஷாமோ அவனைப் பிடித்து உலுக்க “டேய் ரீனாடா..” என்று அதிர்ச்சியாக உரைத்தன அவனுடைய உதடுகள். “டேய் உனக்கு என்ன பைத்தியமா ரீனா எப்படிடா இங்கே இருக்க முடியும்..” என்று ஷாம் கேட்க, அவனோ “டேய் இங்க பாருடா..” என்று பக்கத்தில் நின்ற அந்த பெண்ணைக் காட்ட, அவளோ ஷாம் பார்ப்பதற்க்கு முன்பே திரும்பியவள், வண்டியை அங்கிருந்து கிளப்பினாள். “எங்கடா இருக்கா ரீனா.. உனக்கு என்ன பைத்தியமா..? உளராம வண்டிய எடுடா சிக்னல் விழுந்துட்டு பின்னாடி இருக்கிறவங்க ஹாரன் வேற அடிச்சுட்டே இருக்காங்க..” என்று சொல்ல முன்னால் சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை பின் தொடரத் தனது வண்டியை வேகமாக ஸ்டார்ட் செய்தான். ஆனால் அவளை நெருங்க முடியவில்லை. அவள் இருசக்கர வாகனம் என்பதால் இருக்கும் இடைவெளியியைப் பயன்படுத்தி முன்னே சென்று விட்டாள். ஆனால் இவனோ காரில் செல்ல முன்னால் நின்ற வாகனங்கள் சென்றால் தானே இவனால் வெகு சீக்கிரமாகச் செல்ல முடியும்.. அதனால் அவனால் அவளை நெருங்க முடியவில்லை. அவனுக்கோ ஆத்திரமாத்திரமாக வந்தது. “டேமிட்..” என்று திட்டியவன் தனது வண்டியின் ஹாரனை மீண்டும் மீண்டும் அழுத்த முன்னால் சென்று கொண்டிருந்தவர்களோ இவனைத் திட்டியவாறே சற்று ஒதுங்கிப் போக இவனோ கிடைத்த இடைவெளியில் வேகமாக காரைக் கிளப்பினான். ஆனால் பரிதாபம் அதற்குள் அந்த பெண் சென்று விட்டாள். “ ஷிட் ஷிட் ஷிட்..” என்று கத்தினான்ஆரோன். ஷாமோ “டேய் என்னடா இப்படி முட்டாள் மாதிரி பண்ணிட்டு இருக்க.. எப்படி டா செத்து போனவ உயிரோட வர முடியும்..” என்று கேட்க, அவனோ சட்டென ஷாமின் கழுத்தை இறுக்கப்பற்றியவன், “டேய் இன்னொரு தடவை என் ரீனா செத்துப் போயிட்டான்னு சொல்லாத.. அவளை இப்பதான் நான் பார்த்தேன் இதுக்கு முன்னாடியும் பார்த்தேன். பட், ஆனா அது என்னோட பிரம்மைன்னு நினைச்சேன். ஆனா, இன்னைக்கு நான் அது பிரம்மைன்னு நினைக்க மாட்டேன். ஏன்னா என் ரீனா உயிரோடு இருக்கா.. அந்த கண்கள் அவளோடது தான் எனக்கு நல்லா தெரியும். என் ரீனாவோட அந்த கண்களை நான் பார்த்தேன் கண்டிப்பா அவளை கண்டுபிடிப்பேன்..” என்று உறுதியாகக் கூறினான் ஆரோன்.
Nice epi sis