ஆரல் -04
ரீனாவின் அறையில் அவளை நினைத்து சுற்றிக் கொண்டிருந்தவன், குளியலறையின் முன்னே கொஞ்சம் சிந்தியிருந்த தண்ணீரில் தெரியாமல் கால் வைக்க அதுவோ வழுக்கி விட நிலை தடுமாறியவன், குளியலறையின் கதவைப் பிடிக்க அதுவோ இலகுவாக திறந்து கொண்டது. அதனால் தடுமாறிய வேகத்தில் அவன் உள்ளே விழ, அவன் இழுப்பது தெரியாமல் உள்ளே இருந்து ஒரு பெண் கதவைத் திறக்க, அவன் விழுந்ததோ அந்த பெண்ணின் மேல். அந்தப் பெண்ணை பார்த்ததும் அவன் அதிர்ந்தான். அதே கண்கள். ரீனாவின் அதே கண்கள். அவன் இதற்கு முன்னர் சிக்னலில் இரண்டு முறைப் பார்த்த அதே கண்கள். “ரீனா..” என்று அவன் அவள் பெயரை உச்சரிக்க, அதற்குள் அவனுக்கு கீழ் இருந்த அந்த பெண்ணோ “ஆ..” என்று கத்தியவள் அவனைத் தன் மேல் இருந்து விலக்கப் போராடினாள். இவனோ தனக்கு கீழ் இருப்பது ரீனா தான் என்று நினைத்தவன், அவள் முகத்தை மறைத்திருந்த அந்த துவாளையை சற்று விலக்கினான். விலக்கியவனுக்கோ மீண்டும் அதிர்ச்சி. அது ரீனா கிடையாது. அன்று அவன் மாலில் எந்த பெண்ணிடம் சண்டை போட்டானோ அதே பெண் யாரா இருந்தாள். இவனுக்கோ குழப்பமாக இருந்தது. மீண்டும் அந்த துவாளையை அவளுடைய கண்கள் மட்டும் தெரியுமாறு மறைத்து வைத்துப் பார்த்தான். ரீனாவின் கண்கள் போலவே இருந்தன அவளுடைய கண்கள். இரண்டு மூன்று முறை அந்த துவாலையை அவள் முகத்தில் வைப்பதும் பின்பு எடுப்பதுமாக இருந்தவன் குழப்பத்தில் ஆழ்ந்தான். அவன் இவ்வளவு பண்ணுவதையும் பொறுமையாக பார்த்து இருந்தவள் அதற்கு மேல் பொறுமை இல்லாமல் அவனுடைய கன்னத்தில் பளார் என்று அறைய, அதில் சுய நினைவுக்கு வந்தவன் சட்டென அவள் மேல் இருந்து எழுந்து கொண்டான். அவனுக்கு இப்பொழுது இரண்டும் கெட்டான் மனநிலையாக இருந்தது. அவளுடைய முகத்தை மறைத்து பார்க்கும்போது ரீனா அவன் கண்களுக்குத் தெரிகிறாள். ஆனால் அந்த துவாலையை எடுத்ததும் யாராவின் முகம் தெரிகிறது. இதில் எது உண்மை என்று குழம்பி போய் நின்று கொண்டிருந்தான். ஆனால் யாராவோ இது எதுவும் தெரியாமல் அவன் தன் மேல் இருந்து எழுந்ததும் அவளும் எழுந்து கொண்டவள், அவனுடைய சட்டையை பிடித்து கேள்வி கேட்கத் தொடங்கினாள். “அறிவில்ல உனக்கு.. பாத்ரூமுக்குள்ள ஆள் இருக்கா இல்லையான்னு பார்த்துட்டு வர்ற ஒரு பேசிக் மேனஸ் இல்ல.. இப்படி வந்து மேல விழுற.. சரி மேல விழுந்தா உடனே எழுந்திருக்க தெரியாதா.. என் மூஞ்சியில துண்டப் போட்டு விளையாண்டுட்டு இருக்க..” என்று எரிச்சலாகக் கேட்க, அவனோ அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். “என்னடா நா உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.. காது கேட்குதா இல்லையா.. என் மூஞ்சியவே பார்த்துட்டு இருக்க..” அவனுக்கோ அவள் திட்டுவது காதில் விழவில்லை. அவள் பேசும் போது அவளின் கண்கள் சுழலுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘எப்படி இந்த கண்கள் என் ரீனா கண்கள் போலவே இருக்கிறது.. அவள் என்னைப் பார்க்கும் போது அவள் கண்கள் இப்படி தான் சிரிக்கும்.. எப்படியே இவளுக்கும் அதே போல் இருக்கிறது..?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க, யாராவின் சத்தம் அந்த அறையை விட்டு வெளியே ஹால் வரைக்கும் கேட்டது. இவ்வளவு நேரமாக ஆரோன் வாங்கி கொடுத்த சாக்லேட்டை ருசித்துக் கொண்டிருந்த சந்தியாவோ யாராவின் சத்தம் கேட்கவும் தான், “அச்சச்சோ நான் எப்படி மறந்தேன் எதுவும் பிரச்சனையா இருக்குமோ..?” என்று தனக்குள் பேசியவள், வேகமாக அவர்கள் இருவரும் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள். “ஹேய் யாரா யாரா ஒரு நிமிஷம் இருடி என்ன ஆச்சு.. எதுக்கு அண்ணாவை திட்டிக்கிட்டு இருக்க..?” என்று கேட்டாள் சந்தியா. “அண்ணாவா.. இவனை உனக்கு முன்னாடியே தெரியுமா சந்தியா..? இவன் உள்ள வந்ததுமில்லாம என் மேல விழுந்துட்டு என் மூஞ்சில துணியைப் போட்டு விளையாண்டுக்கிட்டு இருக்கான்.. கேட்டா பதிலே பேசாம என் மூஞ்சியவே பாத்துட்டு இருக்கான்..” என்றாள். “ஹேய் ஹேய் யாரா அண்ணா அப்படியெல்லாம் பண்ணி இருக்க மாட்டாரு.. நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கன்னு நினைக்கிறேன் வா நாம வெளியே போய் பேசலாம்.. அண்ணா அண்ணா..” என்று அவனை அழைக்க, சட்டென திரும்பி சந்தியாவைப் பார்த்தான் ஆரோன். “அண்ணா வாங்க வெளிய போலாம்..” என்று சந்தியா கூப்பிட, அவனோ யாராவைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவளோ அவளை வெறிகொண்டு முறைத்துக் கொண்டே அவனைக் கடந்து சென்று ஹாலில் அமர்ந்தாள். ரீனாவின் அம்மா, அப்பா, சந்தியா, ஆரோன், யாரா என அனைவரும் அமர்ந்திருக்க ஆரோனோ ரீனாவின் அப்பாவிடம், “இந்த பொண்ணு யாரு..?” என்று கேட்டான். அதற்கு யாராவோ “நான் யாரா இருந்தா உனக்கு என்ன..?” என்று சண்டைக்கு வர, சந்தியாவோ சட்டென அவளுடைய கையைப் பிடித்து அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில், “கொஞ்சம் பேசாம இருடி..” என்றாள். “ ப்ட்ச்..” என்று சலித்துக் கொண்டவள், வேறு பக்கமாகத் தன் தலையை திருப்பிக் கொண்டாள். ரீனாவின் அப்பாவோ அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார். “இந்த பொண்ணு ஒரு அனாதை ஆசிரமத்துல வளர்ந்த பொண்ணு.. இவளோட பூர்வீகம் வெளிநாடு.. இந்தியாவுக்கு பேமிலியா சுத்திப் பார்க்க வந்திருக்காங்க.. அப்போ எதிர்பாராம ஒரு ஆக்சிடென்ட்ல அந்த பொண்ணோட அப்பா அம்மா இறந்துட்டாங்க.. இந்த பொண்ணு மட்டும் தப்பிச்சிருக்கு.. அதனால ஒரு அனாதை ஆசிரமத்தில சேர்த்துட்டாங்க.. ஆனா அந்த ஆக்சிடென்ட்ல இவளுக்கு கண் பார்வை போயிருச்சு.. இவா அதுக்கப்புறம் அந்த ஆசிரமத்தில இருந்து தான் வளர்ந்தா.. நம்ம ரீனா நம்மள விட்டு போகும் போது இந்த பொண்ணுக்கு ஹார்ட்ல ஏதோ ப்ராப்ளம் வந்து அட்மிட் பண்ணியிருந்தாங்க.. அப்போ ரீனாவ வீட்ல பார்க்கும்போது அவ இறந்துட்ட தான் நினைச்சிருந்தோம் ஆனால் ஹாஸ்பிடல் போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவளுக்கு கொஞ்சம் நெஞ்ச உயிர் ஊசலாடிட்டு இருந்துருக்கு.. ஆனால் பொழைக்க சான்ஸ் இல்லைன்னு சொல்லிட்டாங்க.. அப்பதான் இந்த பொண்ணுக்கு ஹாட் தேவைப்படுகிறதா டாக்டர் சொன்னாரு.. சரி எப்படியும் நம்ம பொண்ணு உயிரோட இருக்க போறது இல்ல.. அட்லீஸ்ட் இன்னொரு உயிர் மூலமாவது அவள் உடல் உறுப்புகளாவது இருக்கட்டுமேனு நினைச்சு தான் நாங்களும் ஒத்துக்கிட்டோம். அதேசமயம் அந்த பொண்ணுக்கு கண்ணும் தெரியாதுன்னு தெரிஞ்சது.. இவங்க ரெண்டு பேருக்கும் எல்லாமே மேட்ச் ஆச்சு ..அதனால நம்ம ரீனாவோட ஹார்ட்டும் , கண்களும் அந்த பொண்ணுக்கு மாத்தினாங்க.. அந்த பொண்ணு பொழச்சதுக்கப்புறம் நாங்க போய் பார்க்கப் போனோம்.. ரீனாவோட இதயமும் கண்களும் அவளுக்குள்ள இருக்குன்னு அவளுக்கு தெரிஞ்சதுக்கப்புறம் அடிக்கடி இங்கு வந்து எங்களோட இருந்துட்டு போவா.. எங்களுக்கும் நம்ம ரீனாவே எங்க கூட இருந்தது மாதிரி இருக்கும்..” என்றவருக்கோ கண்கள் கலங்கின. ஆம் யாராவிற்கு அந்த ஆக்சிடெண்டில் கண் பார்வை பறிபோனது தான். அப்பொழுது அவளுக்கு ஒரு ஐந்து வயது இருக்கும். வருடங்கள் செல்லச் செல்ல அவளுக்கோ அடிக்கடி உடம்பு முடியாமல் போய்க் கொண்டே இருந்தது. அதன் பிறகு தான் தெரிந்தது அவளுக்கு ஹார்ட் பிராப்ளம் என்று. அந்த தக்க சமயத்தில் தான் ரீனாவின் உடல் உறுப்புகள் அவளுக்கு தானமாக கிடைத்தது. அந்த நன்றி உணர்விற்காக அவள் அடிக்கடி இங்கு வருவாள். ரீனாவின் தங்கை சந்தியாவும் யாராவின் வயதை ஒத்தவள். ஆகையால் இருவரும் நண்பர்களாகவே பழக ஆரம்பித்தார்கள். அதேபோல் இன்று ரீனாவின் நினைவு நாள் என்பதால் காலையில் அவர்களைக் காண வந்திருந்தாள் யாரா. அப்பொழுது அவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க ரீனாவின் தாய் அனைவருக்கும் காபி கலந்து எடுத்துக் கொண்டு வர அவர்கள் நால்வருமே சிரித்துப் பேசிக்கொண்டு கொண்டிருந்தார்கள். அப்பொழுது எதிர்பாராத விதமாக யாரா காபியை அவள் மேல் கொட்டியதால் அதைச் சுத்தம் செய்வதற்காகத்தான் ரீனாவின் அறைக்குச் சென்றிருந்தாள். அப்பொழுதுதான் ஆரோன் வந்து அவள் மேல் விழுந்து இவ்வளவு கலவரமும் நடந்தேறியது. இப்பொழுது ரீனாவின் தந்தை கூறியதை அனைத்தையும் கேட்ட ஆரோனுக்கோ, ‘என்ன என் ரீனாவுக்கு உயிர் இருந்துச்சா..? நான் பார்க்கும்போது அவ இறந்து கிடந்தாலே.. ச்சை அவளோட அந்த கடைசி நேரத்தை கூட நா மிஸ் பண்ணிட்டேனே.. எப்படி இப்படி எல்லாம் நடந்துச்சு.. ஆனா என்னோட ரீனா இன்னொரு பொண்ணு மூலமா வாழ்றாங்கிறத நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு..’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க, இங்கு யாராவோ சந்தியாவிடம், “யாருடி இவரு அப்பா எதுக்கு எல்லாத்தையும் இவங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காங்க..?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கேட்க அப்பொழுது சந்தியா, “யாரா இது ஆரோன் அண்ணா ரீனா அக்காவும் இந்த அண்ணாவும் காதலிச்சாங்க.. ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு லவ் தெரியுமா..? ஆனா என்னன்னு தெரியல அக்கா எதுவுமே சொல்லாம தற்கொலை பண்ணிக்கிட்டா..” என்றாள். ஆரோனோ யாராவைப் பார்த்தவன், “ஒரு நிமிஷம் உன்கிட்ட பேசணும் உள்ள வாரியா..” என்றவன் அவள் பதில் கூறும் முன்பே அவளுடைய கையைப் பிடித்து ரீனாவின் அறைக்குள் அழைத்துச் சென்றான். உள்ளே வந்தவன் கதவை அடைத்து விட்டு எதுவும் சொல்லாமல் அவளை இறுக கட்டியணைத்து அவள் நெஞ்சில் அவன் முகம் புதைத்தான். சட்டென நடந்த விஷயத்தை கிரகிக்க முடியாமல் அதிர்ந்தாள் யாரா.
👌👌👌👌👌👌👌👌👌👌👌செமடா
Supero super sis