ஆரல் -09
யாரா இருக்கும் அறையின் கதவு பலமாக தட்டப்பட அவளுக்கோ இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் பறந்து போனது.
இப்பொழுது அவளுக்கு இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க,
அந்த கதவின் பின்பக்கத்தில் இருந்து ஆசிரமத்தின் வார்டன் சத்தம் கேட்டது.
“யாரா வெளிய வா மா.. உன்னைப் பார்க்க ஒருத்தவங்க வந்து இருக்காங்க..” என்று அழைக்க, அவளோ நடுங்கியவாறே
“அக்கா இப்போ நான் யாரையும் பார்க்க விரும்பல ..அவங்கள போக சொல்லுங்க..” என்றாள்.
“என்ன யாரா உன்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் உன்ன பாக்க வந்திருக்காங்க.. நீ இன்னைக்கு மத்தியானத்திலிருந்து கிளாசுக்கு வரலையாமே. போன் பண்ணாலும் எடுக்கலைன்னு சொல்லி உன்ன பாக்க வந்திருக்காங்கமா..” என்று சொல்ல,
அவளோ தன்னுடைய பிரண்ட்ஸ் என்றதும் நம்பியவள், சட்டென அறைக்கதவைத் திறந்து வெளியே வர அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
அவர்கள் இருவரும் வெளியே வரும் சமயம் அந்த பெண்மணிக்கு போன் வர அவளோ,
“யாரா நீ போய் பாரு நான் போன் பேசிட்டு வந்துடுறேன்..” என்றவள், அங்கேயே நின்று விட அவளோ தன்னுடைய நண்பர்கள் தானே வந்திருக்கிறார்கள் என்று நினைத்து வெளியே போக, அங்கு ஒரு காரில் நான்கு ஆண்கள் அமர்ந்திருந்தனர்.
யாரா அவர்கள் அருகில் வரவும் அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவன் இவள் அருகில் வந்து,
“என்ன மேடம் உன் பிரெண்ட்ஸ தேடுறியா..? இப்போதைக்கு நாங்க தான் உன் பிரண்ட்ஸ் போலாமா..?” என்று அவளுடைய கையைப் பிடிக்க போக அவளோ சற்று விலகி நின்றவள்,
“யார் நீங்க எதுக்காக என்னோட பிரெண்ட்னு பொய் சொல்லி என்னை கூப்பிட்டீங்க..” என்றாள் .
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உனக்கு போன் வந்திருக்குமே.. நாங்க வருவோம்னு.. இங்க பாரு ஒழுங்கா அடப் பிடிக்காம வந்தேனா உனக்கு நல்லது இல்லைன்னா உன்ன அடிச்சு இழுத்துட்டுப் போக வேண்டியது வரும்..” என்று சொன்னவன் திரும்பவும் அவள் அருகே நெருங்க அவளோ சட்டென சுதாரித்தவள், அவனை பின்பக்கமாக தள்ளிவிட்டு அந்த இருட்டில் அங்கிருந்து வேகமாக ஓடினாள்.
அங்கு கீழே விழுந்தவனோ அவள் அங்கிருந்து ஓடவும் தன்னுடன் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு, அவள் பின்னால் ஓட அவளோ வேகமாக ஓடிச் சென்றாள்.
எவ்வளவு நேரம் ஓடினாலோ தெரியவில்லை.
வெகு நேரமாக ஓடியவள், தன் பின்னால் அவர்கள் வரவில்லை என்று தெரிந்ததும் மூச்சு வாங்க ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல வழிந்து கொண்டிருந்தது.
நடந்ததை அனைத்தையும் நினைத்து பார்த்தவளுக்கோ உடல் ஆட்டம் கண்டது.
தனக்கு ஏன் இப்படி ஒரு சூழல் உருவானது என்று நினைக்க அழுகை மாத்திரம் நிற்கவேயில்லை.
அந்த அரக்கனிடம் மாட்டி அவமானப்பட்டு சாவதை விட இப்பொழுதே தன் உயிரை விட்டு விடுவோம் என்று எண்ணினாள். அப்பொழுதுதான் ஆரோனின் கண்ணில் விழுந்தாள் யாரா.
இவை அனைத்தையும் கேட்ட ஆரோனோ,
“இங்க பாரு தீர்வு இல்லாத பிரச்சனைன்னு எதுவுமே கிடையாது. அதுக்கு சாவு முடிவு கிடையாது.. உன்ன இந்த பிரச்சனைல இருந்து வெளியே கொண்டு வரது என்னோட பொறுப்பு.. இன்னொரு தடவை சாவ பத்தி நெனச்சு கூட பார்க்காத.. சரி வா ரொம்ப இருட்டிடுச்சு நாம வீட்டுக்கு போய் பேசலாம்..” என்றவன் அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
அவளுக்கும் ஏதோ ஒரு ஊன்றுகோல் கிடைத்து போல அவனை நம்பியவள் அவனுடன் சென்றாள்.
காரை விட்டு கீழே இறங்கியவன், “இறங்கு..” என்று சொல்ல அவளோ கீழே இறங்கியவள், அந்த வீட்டை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ இது என்னோட வீடு தான் வா..” என்று அவன் முன்னே செல்ல அவளும் அவன் பின்னே சென்றாள். அவனுடைய வீடு அழகாகவே இருந்தது.
தயக்கத்துடனே வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள்.
இங்கு அவளை துரத்திச் சென்ற அந்த ரவுடிகளோ அவள் எங்கு தேடியும் கிடைக்காது போக, தன்னுடைய பாஸுக்கு போன் போட, அவனோ இவர்களை கிழித்து எடுத்து விட்டான்.
“ டேய் ஒரு பொண்ண உங்களால தூக்கிட்டு வர முடியல.. எதுக்காக டா இத்தனை பேர் போயிருக்கீங்க.. ரவுடி தொழிலுக்கு லாயக்கில்லாதவங்க.. போய் பிச்சை எடுங்கடா..அந்த பொண்ணு இல்லாம என் முன்னாடி வந்தீங்க நானே உங்கள வெட்டி போட்டுருவேன்.
அவளோட ரேட் என்னன்னு தெரியுமாடா உங்களுக்கு..? அவ போட்டோவ பார்த்து எத்தனை பேர் அவ வேணும்னு கேட்டாங்க தெரியுமா..? அவள பல கோடிக்கு நான் வித்திருக்கேன்.. கைல கிடைச்ச பொக்கிஷத்தை இப்படி நழுவ விட்டு நிற்கிறிங்களே.. ஒழுங்கு மரியாதையா அவளை கூட்டிட்டு வாங்க.. உங்களுக்கு ரெண்டு நாள் டைம் தரேன். அதுக்குள்ள அவ இங்க என் கண்ணு முன்னாடி நிக்கணும்..” என்றான் அந்த மர்ம மனிதன்.
“ சரி பாஸ்.. நாங்க கண்டிப்பா அவளை கண்டுபிடிச்சு உங்க கிட்ட கூட்டிட்டு வருவோம்..” என்றான் அந்த ரவுடி.
ஆரோனோ தன்னுடைய வீட்டிற்குள் வந்தவன் அவளை உள்ளே வரும்படி கூறிவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றவன், இலகுவான இரவு உடையை அணிந்து கொண்டு கீழே வர, அவளோ அவன் போகும் போது எங்கு நின்று கொண்டிருந்தாளோ அங்கேயே இப்பொழுதும் நின்று கொண்டிருக்க அவனோ அவளை கேள்வியாக பார்த்தவாறே,
“ஏய் உன்னை என்ன வெத்தலை பாக்கு வச்சி அழைக்கணுமா..? உள்ள வா..” என்க, அவனுடைய குரலில் அவன் புறம் திரும்பியவள், அவன் அருகே வந்து நிற்க, அவளுடைய கண்களைப் பார்க்க அதுவோ சோர்வாக தெரிந்தன.
பாவம் எவ்வளவு நேரம் அழுதாளோ தெரியவில்லை..
கண்கள் இரண்டும் சிவந்து போய் இருந்தன.
இதில் பசியின் சோர்வு வேறு அதை கண்டு கொண்டவன்,
“பசிக்குதா..?” என்று கேட்க,
அவளோ இல்லை என்று தலையை ஆட்டினாள்.
“ பசிக்கல..”
“ அதான் உன் கண்ணுலயே தெரியுதே அப்புறம் ஏன் மறைக்கிற.. இங்க பாரு உனக்கு ஓயாம எல்லாம் சொல்லிக்கிட்டே இருக்க முடியாது.. இந்த கண்கள் எப்பவும் என்னை பார்த்து சிரிச்சுக்கிட்டே இருக்கணும்.. அது இப்படி பசியில வாடி போய் இருக்கிறத என்னால பார்க்க முடியாது..” என்று அவன் சொல்ல, அவளோ இருக்கும் பிரச்சனைகளில் இவன் வேறு என்று நினைத்தவள், சலிப்பாக உதட்டை சுழிக்க,
அவனோ “எனக்கு சமைக்க எல்லாம் தெரியாது இப்போ வெளிய ஆர்டர் பண்ணவும் முடியாது நேரம் வேற ஜாஸ்தி ஆயிடுச்சு.. இதோ அங்க இருக்கு பாரு அதுதான் கிச்சன் உனக்கு ஏதாவது சமைக்க தெரிஞ்சதுன்னா போய் எனக்கும் சேர்த்து சமைச்சு கொண்டு வா..” என்று சொன்னவன் டிவியை ஆன் பண்ணி அங்கு உள்ள சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு காதல் பாடல்களை ஓட விட்டான்.
அவளுக்கோ ஐயோ வென்றிருந்தது.
‘தான் எப்படிப்பட்ட பிரச்சனையில் மாட்டியிருக்கிறோம்.. இதோ தனக்கு உதவி செய்கிறேன் என்று அவனுடைய வீட்டிற்கு அழைத்து வேறு வந்திருக்கிறான். அப்படி இருக்கும் பொழுது தான் சாப்பிட வேண்டும் என்றாலும் சமைத்துக் கொள்ள வேண்டுமாம். இதில் அவனுக்கும் சேர்த்து சமைக்க வேண்டுமாம் என்ன கொடுமை இது. இதில் என் கண்கள் வேறு பசியில் வாடக்கூடாது எப்பொழுதும் சிரித்ததாற் போல் இருக்க வேண்டுமாம் நான் என்ன மிஷினா எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதற்கு..’ என்று நினைத்து தன் தலையில் அடித்துக் கொண்டவள்.
அவன் காட்டிய திசையில் இருந்த சமையல் அறைக்குள் நுழைந்தவள் சமைப்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்று தேட ப்ரெட் இருந்தது. அங்கு இருந்த ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தாள். அதில் முட்டை இருந்தது.
இந்த நேரம் வேற எதுவும் சமைத்தால் நேரம் அதிகமாகும் என்று நினைத்தவள் அந்த ப்ரெட்டையும் முட்டைகளையும் சிறுது எடுத்தவள் இருவருக்கும் ப்ரெட் ஆம்லெட் செய்து அவளுக்கும் அவனுக்கும் என இரண்டு ப்ளேட்டில் வைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தவள் அவன் அருகே சென்று அவனை அழைத்தாள்.
“ சார் சார் சாப்பிட வாங்க..” என்றாள்.
அவனோ “என்ன அதுக்குள்ள சமைச்சிட்டியா..?
வாவ் சமையல் நல்லா கத்து வச்சிருப்ப போல இருக்கே..” என்று கூறியவாறே எழுந்தவன், அங்கே டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து அவனுக்கான ப்ளேட்டை எடுத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்தான்.
அவளும் அவனுடன் சென்று அமர்ந்தவள், சாப்பிட்டுக் கொண்டிருக்க,
“இங்க பாரு இந்த பிரச்சினையில இருந்து உன்னை வெளியே கொண்டு வர வரைக்கும், நீ என்னோட பொறுப்பு என்ன கேட்காம நீ எங்கேயும் போகக்கூடாது புரியுதா..?” என்று சொல்ல அவளோ,
“சரி..” என்று தலையை ஆட்டினாள்.
Super sis 💞