Episode – 12
அபர்ணா யாரையும் நிமிர்ந்து பார்க்காது நேரடியாக தனது தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவளின் பின்னே வேக நடையுடன் வந்து சேர்ந்தான் ஆதி.
இருவரையும் கண்ட தலைமை ஆசிரியர்,
புன்னகை முகத்துடன், “ஆதி சார் ப்ளீஸ் உட்காருங்க.” என ஒரு இருக்கையை காண்பித்தவர்,
அபர்ணாவின் புறம் திரும்பி, “உட்காரும்மா அபர்ணா.” என ஆதியின் அருகே இருந்த கதிரையை காண்பிக்க,
“ஆமா பெரிய சாராம் சார்…. இவனுக்கு எல்லாம் மரியாதை தான் ஒரு கேடு.” என முணு முணுத்தாள்.
அவளின் முணு முணுப்பு ஆதியின் காதுகளில் தெளிவாகவே விழுந்தது.
அவனோ, அவள் அமர வேண்டிய கதிரையை இழுத்து தனக்கு இன்னும் நெருக்கமாக போட்டுக் கொண்டவன்,
அவள் முறைத்தபடி அமரவும் இயல்பு போல அவளின் காதருகே குனிந்து,
“உனக்கு என்னோட கேரக்டரும் புரியல, என் செல்வாக்கும் புரியல. புரிஞ்சவங்க சார்னு சொல்றாங்க அதில உனக்கு என்னடி பிரச்சனை?, என்ன சீண்டிப் பார்த்தா…. ஸ்கூல்ன்னும் பார்க்காம, எல்லார் முன்னாடியும் உன்னை கிஸ் பண்ணுவன், அதனால கொஞ்சம் அடக்கி வாசி.” என கூற,
அவனின் பேச்சில் அவனை திகைத்துப் போய்ப் பார்த்தவளை நோக்கி புருவம் தூக்கியவன்,
அர்த்த சிரிப்பு ஒன்றை சிந்தி விட்டு,
தனது பார்வையை தலைமை அதிகாரியை நோக்கி செலுத்த,
அவரோ, “ஆதி சார், நீங்க சொன்னது போல, இங்க இருக்கிற எல்லா டீச்சர்ஸ்ற்கும் சொல்லியாச்சு. யாரும் ஒரு வார்த்தை கூட அவங்கள பத்தி தப்பா பேச மாட்டாங்க. இங்க அவங்க பாதுகாப்புக்கும் எந்தக் குறைவும் வராது.” என தாழ்ந்த குரலில் கூறினார்.
ஆதியும், தாடையைத் தடவிய படி,
“ஓகே ரைட்.” என மட்டும் கூறினான்.
அவரின் பேச்சைக் கேட்ட, அபர்ணா தான் கடைசியில்,
“என்னடா நடக்குது இங்க?” என எண்ணியவாறு இருவரையும் மாறி மாறிப் பார்த்து வைத்தாள்.
தலைமை ஆசிரியரோ, அவளின் குழப்பமான பார்வையைக் கண்டு,
“என்னம்மா, அப்படிப் பார்க்கிறாய்?, ஆதி சார், நேத்தே இங்க வந்து உங்க இரண்டு பேருக்கும் கலியாணம் நடக்கப் போறது தொடக்கம்…. உன்னோட படிப்பு மற்றும் பாதுகாப்பு வரைக்கும் எல்லாம் பேசிட்டுத்தான் போனார்மா. அவருக்கு உன் மேல இருக்கிற அக்கறை இருக்கே…. இங்க யாரும் தன் வருங்கால பொண்டாட்டியப் பத்தி ஒரு வார்த்தையும் தப்பா சொல்லக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டுத் தான் போனார்ம்மா. இங்க இருக்கிற எல்லா டீச்சர்ஸ்சையும், அண்ட் என்னையும் கூப்பிட்டு இதுக்காக ஒரு மீட்டிங்கே வைச்சுட்டார்ன்னா பார்த்துக் கோயன்மா.” என அவர் கூற,
விழி விரித்து, அவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“அப்படியா?” என விழி மொழியிலேயே கேட்க,
வெறுமனே தோளை குலுக்கிக் கொண்டான் அவன்.
அவன் தனக்காக செய்தவைகளை எண்ணி மனதிற்குள் சந்தோஷம் கொண்டவள்,
மறு கணம், “இது எல்லாம் ஏன் செய்ய வேண்டி வந்துது?, இவரோட திமிரால தானே எனக்கு இந்த நிலை, அப்போ இவரு தானே அதுக்கும் சேர்த்து பிராய்சித்தம் செய்து ஆகணும். செய்யட்டும்.
செய்தா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டார்.” என எண்ணி முகத்தை மீண்டும் கடினமாக்கிக் கொண்டாள்.
அவளின் முக மாற்றங்களை ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டு இருந்தவன்,
“இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிர் இருக்க கூடாதுடி பொண்டாட்டி.” என மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
இருவரும் தலைமை ஆசிரியரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு வெளியில் வந்தனர்.
வெளியில் வந்ததும், அபர்ணா “பெரிய நல்லவன் மாதிரி வேஷம் போடாதீங்க. உங்க புத்தி பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.” என கோபமாக கூற,
அவனும் பதிலுக்கு, “ரொம்ப சந்தோஷம்டி சண்டைக்காரி. போய் கிளாஸ் அட்டென்ட் பண்ணு. ஈவினிங் உன்னைப் பிக் அப் பண்ண நானே வரேன்.” என கூறியவன், அவளின் பதிலை எதிர் பாராது சென்று விட்டான்.
************************************************
மறு புறம், தமயந்தி மற்றும் தீரனின் வாழ்க்கையில் எந்த விதமான மாற்றங்களும் இல்லாது போய்க் கொண்டு இருந்தது.
காலையில், அவனுடன் விடியும் அவளின் பொழுதுகள், இரவில் அவனுடனேயே முடிந்து போகும்.
அதே போல, தீரன் மறுத்தாலும் அவனின் நாள் ஆரம்பமாவது என்னவோ, தமயந்தியின் முகத்தில் விழிப்பதில் இருந்து தான்.
அதே போல, அவனின் நாள் முடியும் போதும், இறுதியாக அவன் பார்க்கும் முகம் அவளோடது தான்.
அவனுக்கே, அவளின் முகத்தில் விழித்தால் தான் அந்த நாள் நன்றாக இருப்பது போல் ஒரு உணர்வு.
எவ்வளவு வேலைகள் செய்து களைப்பு இருந்தாலும், சோபை குறையாத அவளின் புன்னகை முகத்தை விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்கள்?
இப்படி இருக்கும் ஒரு நாளில் தான், காலையில் ஜோக்கிங் கிளம்பி வந்தவன்,
வழமையான இடத்தில் தமயந்தியைக் காணாது, குழம்பிப் போய் அவளின் பெயரை சொல்லி அழைத்தான்.
ஆனால் தோட்டத்தில் ஒரு இடத்திலும், அவனின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையும், தமயந்தியைக் காணாது போகவே,
கோபத்தில் உடல் இறுக,
“வர வர என் மேல கொஞ்சம் கூட பயம் இல்லாமல்ப் போச்சுல்ல உனக்கு?, இங்க நான் ஒருத்தன் நின்னு காட்டுக் கத்துக் கத்துறன். ஆனா நீ எதுவுமே தெரியாத மாதிரி வீட்டுக்குள்ள இருக்கீயா?, உனக்கு இன்னைக்கு நான் கொடுக்கிற தண்டனையில நீ இனிமேல் என்னைக் கண்டாலே நடுங்கணும்.” என கறுவிக் கொண்டவன்,
அவளின் வீட்டின் கதவை உடையும் அளவுக்கு தட்டினான்.
ஆனால் அப்போதும், உள்ளிருந்து எந்த பதிலும் வராது போகவே,
புருவம் சுருக்கியவன், மீண்டும் இரண்டு முறை வேகமாக தட்டிப் பார்த்தான்.
அப்போதும் எந்த சத்தமும் உள்ளிருந்து வரவில்லை.
அந்த நிலையில் தான், “ஏதோ தப்பா இருக்கே.” என எண்ணிக் கொண்டவன்,
ஓங்கி அந்தக் கதவை உதைத்தான்.
அவனின் வன்மையில் அந்தக் கதவில் முதல் விரிசல் உண்டானது.
அடுத்த நொடி, முன்னிலும் வன்மையாக, வேகத்துடன் உதைந்தான் தீரன்.
அந்த நொடியே கதவு இரண்டாகப் பிளந்தது.
உள்ளே வந்தவன், சுற்றிப் பார்க்க, அந்த குட்டி ஹாலிலும், அதற்கு அடுத்து இருந்த கிச்சனிலும் அவளைக் காணாது போகவே, மேலும் ஒரு முறை சுற்றிப் பார்த்தான்.
அடுக்கி வைச்ச பாத்திரங்கள் அனைத்தும் அப்படியே இருந்தது.
அவன் தேடிப் பார்க்காத ஒரே இடம் அவளின் அறை மட்டும் தான்.
ஒரு கணம் கண்ணை மூடி யோசித்தவன், மறு நொடி அவளின் அறைக்குள் புகுந்து கொண்டான்.
அங்கே அவன் கண்ட காட்சியில், ஒரு கணம் அவனின் இதயம் நின்று துடித்தது.
ஆம், அங்கே குளித்து விட்டு, வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் வந்து இருந்தவள், மயங்கி விழுந்து இருந்தாள்.
அதோடு, அவளிற்கு உதிரப் போக்கும் ஏற்பட்டு இருந்தது.
அப்போது தான், அவளுக்கு அந்த நாள் மாதவிடாய் நாள் போல என எண்ணிக் கொண்டவனுக்கு,
அவளின் பொறுப்பற்ற செய்கையில் ஒரு பக்கம் எரிச்சல் வந்தாலும், மறு புறம் அவளின் பேச்சு மூச்சற்ற தன்மை அவனின் மனதைப் பிசைய,
“ஹ்ம்ம்….” என்ற ஒரு பெரு மூச்சுடன்,
அவளின் அருகே வந்தவன்,
அவளைத் தூக்கி கொண்டு சென்று, ஈரமற்ற இடத்தில் படுக்க வைத்து விட்டு,
அவளின் முகத்தில் நீர் அடித்து எழுப்ப முயல, வெறும் முனகல் மட்டும் தான் அவளிடம் இருந்து பதிலாக வந்தது.
“ம்ப்ச்….” என சலித்துக் கொண்டவன், அவளை அந்த நிலையில் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி கொண்டு செல்ல விரும்பாது,
அந்த விடியல் நேரத்திலும், தனக்கு தெரிந்த பெண் வைத்தியர் ஒருவருக்கு போன் போட்டு, அவரை உடனடியாக கிளம்பி வர சொன்னவன் அவருக்கு தமயந்தியின் நிலையை மேலோட்டமாக எடுத்துக் கூறி,
தேவையானவற்றை வாங்கியும் வர சொன்னான்.
அவரும் அடுத்த, இருபது நிமிடங்களுக்குள் அங்கு வந்து சேர்ந்தார்.
அவர் வரும் முன்பாக, அவன் அவள் அணிந்து இருந்த ஆடைக்கு மேலாக, ஒரு நைட்டியை போட்டு விட்டான்.
வந்த வைத்தியரும், அவளைப் பார்த்து விட்டு, அவள் வீக்காக இருக்கிறாள் என்றும், உதிரப் போக்கு அதிகமாக இருப்பதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறி விட்டு,
அவளுக்கு சில அவசர முதலுதவிகளை அவரே செய்து விட்டு, அவளுக்கு மருந்து ஏற்றி விட்டு சென்றார்.
மருந்து முழுவதுமாக ஏறி முடியும் வரையும், அவளுக்கு அருகேயே அமர்ந்து இருந்தான் தீரன்.
உட்சென்ற மருந்தின் விளைவால், அவள் சற்று தெளிவு அடைந்து கண் விழிக்க ஆரம்பித்தாள்.
அவள் கண் விழிக்கும் போது, கண்டது, காலுக்கு மேல் கால் போட்டபடி அமர்ந்து,
நாடியில் கை குற்றியபடி, அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தவனைத் தான்.
அவனைக் கண்டதும், பயந்து போய், முகம் வெளிறி அவசரமாக எழுந்து அமர்ந்தவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவன்,
“உனக்கு உன்ன ஒழுங்கா பார்த்துக்க தெரியாதா?, உனக்கு தேவையான முக்கிய பொருட்கள் இல்லாம எப்படி உன்னால இருக்க முடிஞ்சுது?, அப்படி…. இப்படி….” என அவன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,
அவனைப் பாவமாக பார்த்து வைத்தாள் அவள்.
அவளின் பார்வையில் அவன் பேச்சை நிறுத்தி விட்டு,
“என்ன பாவம் மாதிரி பார்த்து வைக்கிறாய்?” என அதற்கும் எகிறினான்.
அவளோ, காய்ந்து போய் இருந்த உதடுகளை மெல்ல ஈரம் ஆக்கியபடி,
“எனக்கு இன்னைக்கு பீரியட்ஸ் வர வேண்டிய டேட்டே இல்லை. இன்னும் பத்து நாள் தாண்டித் தான் வரணும். ஓவர் ஸ்ட்ரெஸ் போல, அது தான் இப்படி நடந்திடிச்சு. இது தான் பெர்ஸ்ட் டைம் இது போல நடக்கிறது. இது எனக்கே புரியாம நடந்தது.” என மென் குரலில் கூறி முடித்தவள், சிறு இடைவெளி விட்டு,
அவனின் புறம் பார்க்காது, “எனக்கு தேவையான சனிட்டரி நாப்கின் வாங்கக் கூட எனக்கு இப்போ வசதி இல்லாமப் போச்சு.” என குரல் கமறியபடி கூறி, கண்களில் கண்ணீர் வழிய எங்கோ வெறித்துப் பார்க்க,
ஒரு நொடி அவளையே கூர்ந்து பார்த்துவன்,
“இப்போ உனக்கு தேவையானது இங்கயே இருக்கு யூஸ் பண்ணிக்கோ, இரண்டு நாளைக்கு உனக்கு ரெஸ்ட். ஒழுங்கா ரெஸ்ட் எடு. மறுபடியும் மயங்கி வைக்காத. அப்புறம் உனக்கு என்ன சாப்பாடு அண்ட் ஜூஸ் வருதோ அத வாங்கி ஒழுங்கா சாப்பிடு.” என கடகடவென கூறியவன்,
அவள் அப்படியே அமர்ந்து இருக்கவும், அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறி சென்றான்.
அவன் போனதும் ஒரு பெரு மூச்சுடன் வாசல்ப் பக்கம் பார்த்தவளுக்கு,
மனதிற்குள், வெறும் ஜாக்கெட், பாவாடையுடன் இருந்த கோலத்தில் தீரன் தன்னைப் பார்த்தது, தனக்கு உடை மாற்றி விட்டது…. என அனைத்தையும் எண்ணி மேலும் அழுத்தம் கூடியதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.
அவளுக்கே, குளித்து விட்டு ஆடை மாற்றும் போது தான் தனது உடல் மாற்றமே புரிந்தது.
வழமையாக வரும் வயிற்று வலி கூட, இந்த முறை அவளுக்கு வரவே இல்லை.
ஒரு வேளை அதீத வேலைகளின் காரணமாக, அந்த வயிற்று வலி வந்தது கூட அவளுக்கு தெரியாது போய் இருக்கலாம்.
மாதவிடாய் வந்ததும் தான், அதனைப் பற்றி யோசிக்காததும் எந்த விதமான ஆய்த்தங்கள் இன்றி இருப்பதும் அவளுக்கு உறைத்தது.
ஏற்கனவே மனதளவில் பலவீனமாக உணர்ந்தவள், இப்போது இன்னும் குழம்பிப் போனதுடன்,
“நேரம் வேற போகுதே…. அந்த ஹிட்லர் வேற கத்தப் போறார்.” என தீரனை எண்ணி மேலும் தலை சுற்றிப் போனாள்.
முகம் முழுவதும் பயத்தில் வெளுக்க, உடலில் உதிரப் போக்கு வேறு சற்று அதிகமாக இருக்க,
அதற்கு மேலும் தாங்க முடியாது மயங்கி விழுந்தாள் பெண்ணவள்.
இப்போது நடந்தது அனைத்தையும் எண்ணிப் பார்த்தவளுக்கு,
“என்னடா வாழ்க்கை இது?” என்ற எண்ணம் தான் உருவாகியது.
ஒரு பெரு மூச்சுடன், மெதுவாக எழுந்து அமர்ந்தவள், ஆடை மாற்றி வந்து மீண்டும் படுத்துக் கொண்டாள்.
அவளுக்கு இருந்த களைப்பில், அவள் உறங்கியும் போனாள்.
வெளியில் வந்த தீரனோ, ஜாக்கிங் செய்ய முடியாது மனது பிசைய, அங்கே இருந்த கல்லில் அமர்ந்து விட்டான்.
அந்தக் கல் ஒவ்வொரு நாளும் தமயந்தி அமருகின்ற கல் தான்.
அமர்ந்தவனுக்கு அவளின் உதிரப் போக்குத் தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.
அவன் பார்க்காத இரத்த சரித்திரமா?, எத்தனை முறை மனித மிருகங்களை வன் முறையில் வேட்டையாடும் போது, அவனின் முகத்தில், உடலில் குருதி சீறிப் பாய்ந்திருக்கும், குருதி அபிஷேகம் நடந்து இருக்கும்.
அப்போது எல்லாம் அதனை அசால்டாக துடைத்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போகின்றவனுக்கு இன்று அப்படி கடந்து போகவும் முடியவில்லை, அதற்கான காரணமும் தெரியவில்லை.
அதே போல, அவன் அந்தக் காரணத்தை அறிந்து கொள்ளவும், ஆராயவும் சற்றும் விரும்பவில்லை.
ஒருவாறு தன் நினைவுகளை ஒதுக்கி வைத்தவனது கைகள் அவனையும் அறியாது அந்தக் கல்லை வருடியது.
அந்த நாள் பொழுது விடிந்ததே தவிர, அவன் அந்தக் கல்லில் இருந்து எழவும் இல்லை. ஜாக்கிங் செல்லவும் இல்லை.
“சே…. காலையிலேயே எல்லாம் கொலாப்ஸ் ஆகிடிச்சு. எல்லாம் அவளால தான்.” என எண்ணிப் பல்லை கடித்தவன்,
விறு விறுவென வீட்டினுள் புகுந்து கொண்டான்.
அதன் பின்பு நேரம் தன் பாட்டிற்கு ஓட, வேலைக்கு ரெடியாகி வந்தான்.
கீழே வந்தவன், காலை உணவை உண்டு விட்டு, வெளியே வந்தான்.
அப்போது அவனது பார்வை
அவனையும் அறியாது, தமயந்தி தங்கி இருக்கும் வீட்டுப் பக்கம் சென்றது.
அதற்கு மேல் கால்கள் நடை போட மறுக்க,
நெற்றியை வருடியவன், பல்லைக் கடித்து வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டு, சிவகாமி அம்மாவை அழைத்து, அவரிடம் தமயந்தியின் உடல் நிலை பற்றி பொதுவாக கூறி,
அவளுக்கு மூன்று வேளையும் நல்ல உணவுகள், மற்றும் ஜூசும் கொடுக்க சொல்லி விட்டு சென்றான்.
அவரும் தீரனை ஒரு பார்வை பார்த்து விட்டு, “சரி தம்பி.” என்றவர்,
காலை உணவை அவளுக்காக தானே கொண்டு சென்று கொடுத்தார்.
அவளும் உண்ண ஆரம்பிக்க, அவளையே இமைக்காது பார்த்தவர்,
“அம்மாடி, தம்பி இங்க இருக்கிறவங்க எல்லார் மீதும் அக்கறை காட்டுவார் தான். அது அவரோட இயல்பும்மா. ஆனா முற்று முழுதா வெறுக்கிறேன்னு சொன்ன ஒருத்தர் மீது தம்பி இவ்வளவு அக்கறை காட்டுறது புதுசா இருக்கும்மா. அதுவும் தம்பியோட குணத்துக்கு இது கொஞ்சம் கூட செட் ஆகாத விஷயம்.”
“ம்ம்ம்ம்…. அதை ஏன்மா உண்மையான அக்கறைன்னு எடுத்துக்கிறீங்க?, தன்னால தான் இத்தனையும் நடந்தது என்கிற மனிதாபிமானம் கூட இருக்கலாம் தானே.” என ஒரு விரக்திப் புன்னகை உடன் கூறினாள் தமயந்தி.
அவளின் பேச்சில் மென் புன்னகை புரிந்தவர்,
“அம்மாடி, என் அனுபவம் எத்தனை வருஷம்னு தெரியுமா உனக்கு?, எனக்கு ஒருத்தரின் பார்வையை வைச்சு அவங்க மனசுல உள்ளத கண்டு பிடிக்க முடியாதா என்ன?, அந்த வகையில சொல்றேன், தீரன் தம்பியோட கண்ணுல உனக்கான தவிப்ப நான் கண்டேன்மா. அப்படிப் பார்த்தா…. தம்பி உன்னை மன்னிக்க ஆரம்பிச்சு இருக்கார்ன்னு நினைக்கிறன். அதோட அவருக்கு உன் மேல ஒரு விருப்பமும் உருவாகி இருக்கு….” என அவர் கூறி முடிக்க முதல்,
உண்டு முடித்த தட்டை எடுத்துக் கொண்டு எழும்பியவள்,
“அம்மா, நான் சாப்பிட்டு முடிஞ்சுது. இருங்க தட்ட கழுவிட்டு தரேன்.”என அவரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவள்,
மனதிற்குள், “அந்த ஹிட்லராவது எனக்கு பாவம் பார்க்கிறதாவது….”என எண்ணிக் கொண்டாள்.
அதற்கு மேல் சிவாகாமி அம்மாவும் எதுவும் பேசாது, அவளின் தலையை வருடி விட்டு,
“நீ ஒரு வேலையும் செய்யாம ரெஸ்ட் எடும்மா.” என கூற,
அவளும், “சரி அம்மா.” என கூறி விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அதன் பின்பு நேரம் தன் பாட்டில் ஓட அவளுக்கு டைமுக்கு ஜூசினை கொண்டு வந்து ஒரு பெண் கொடுத்து விட்டுப் போக,
“வேணாம்.” என திடமாக மறுத்தவள்,
“என்னைப் பார்த்துக்க எனக்கு தெரியும். எனக்கு எந்த விதமான சலுகைகளும் வேணாம், அது எனக்கு தேவையும் இல்லை. இத போய் உங்க ஐயாக்கிட்ட சொல்லுங்க.” என்றவள்,
அந்தப் பெண்ணை போகச் சொல்ல,
அந்தப் பெண்ணோ, “இவ பெரிய திமிர்க்காரி போல, இவளுக்கு போய் நம்ம ஐயா பாவம் பார்க்கிறார். செய்றது வீட்டு வேலை. ஆனா திமிரைப் பாரேன் இவளுக்கு.” என தெளிவாக முணு முணுத்து விட்டு செல்ல,
அந்தப் பேச்சில் ஒரு முறை கண்களை மூடித் திறந்தவள்,
“இதெல்லாம் சகஜம் தான்.” என்பது போல புன்னகைத்து விட்டு தன்னால் முடிந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
அந்தப் பெண்ணின் மூலம் செய்தி ஏனையவர்களுக்கு பகிரப் பட்டு,
அந்த செய்தி தீயாய்ப் பரவி, இலகுவாக வேலையில் இருந்த தீரனின் காதுகளுக்கும் போய் சேர்ந்தது.
அவனோ, வேலைகளில் பிஸியாக இருந்தவன், போனில் அவர்கள் சொன்னதைக் கேட்டதும்,
பார்த்துக் கொண்டு இருந்த பைல்களை தூக்கி மேசையில் போட்டு விட்டு,
சுழல் நாற்காலியில் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டு, நெற்றியை நீவிக் கொண்டவன்,
“ம்ம்ம்…. ஓகே அவ சாப்பிடலன்னா யாரும் வற்புறுத்த வேண்டாம். உங்க வேலைகளைப் பாருங்க. நான் வந்து அவ கிட்ட பேசிக்கிறன்.” என கூறியவன்,
போனை வைத்து விட்டு சற்று நேரம் கண் மூடி அமர்ந்து இருந்தான்.
அவனின் மனமோ, “இந்த நிலையிலும் அசையாத தன்மானத்தோட இருக்காளே. இவ எப்படி….” என எண்ணியவன்,
தன் எண்ணங்கள் போகும் பாதை அறிந்து, “நோ…. நோ….” என் வாய்க்குள் முணு முணுத்து விட்டு,
மனதைக் கட்டுப் படுத்தி, அடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.
இரவு வேலைகளை முடித்து வந்தவன், காரில் இருந்து இறங்கி, வீட்டுக்குள் செல்லும் முன்பாக,
அவனின் பார்வை அவனையும் அறியாது தோட்டத்தின் புறம் சென்றது.
அங்கு அவன் எதிர் பார்த்தது போலவே தமயந்தி அமர்ந்து இருந்தாள்.
அவன் அன்று, அதிசயமாக எட்டு மணிக்கே வீட்டுக்கு வந்து இருந்தான்.
அதன் காரணம்…. அது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.
அவளையே பார்த்து இருந்தவன்,
சிறிது நேரம் கழித்து தலையைக் கோதிக் கொண்டு, வீட்டு வாசல் நோக்கி நடை போட்டான்.
வீட்டு வாசலில் கால் வைத்தவன், என்ன நினைத்தானோ…. மீண்டும் திரும்பி தமயந்தி இருக்கும் இடம் நோக்கி சென்றான்.
அபர்ணா, மற்றும் ஆதியின் சண்டை இன்னும் தொடருமா?
ஆதிக்குள் அரும்பிய காதல் மொட்டு மலராக மலருமா?
தீரன் மனதில் தமயந்தி பற்றி உள்ள எண்ணங்கள் வெளி வருமா?
அடுத்த பதிவில் பார்க்கலாம் ❤❤❤
கண்டிப்பா லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ் ❤❤❤
நாளைக்கு கண்டிப்பா எபி வரும் மக்காஸ் ❤❤
கொஞ்சம் வேலைகளில் மாட்டிக் கொண்டேன். இந்தக் கிழமையும் எபி கொஞ்சம் லேட்டா வரும் மக்காஸ்… அட்ஜஸ்ட் கரோ 🥰🥰🥰
மறக்காம லைக்ஸ் கொடுங்க 😍😍😍
பெரிய எபி வந்தாச்சு மக்காஸ்..
இரண்டு எபிகள் ஒரே எபியா வந்து இருக்கு மக்காஸ் 🥰🥰🥰🥰
Super sis 💞