Episode – 13
தமயந்திக்கோ, ஒவ்வொரு நாளும் பத்து மணிக்குப் பிறகு உறங்கிப் பழகியதன் விளைவாக,
நேரத்துக்கு தூக்கம் வர மறுக்க,
சற்று நேரம் காலாற தோட்டத்தில் நடந்து விட்டு வரலாம் என எண்ணி வெளியில் வந்தவள் சற்று தூரம் மென்னடை பயின்றாள்.
அவளின் உடல் பலவீனம் காரணமாக, அவளால் தொடர்ந்து நடக்க முடியாது போனது.
ஆகவே, வழமையாக தான் அமரும் கல்லில் அமர்ந்து தன் நினைவுகளில் மூழ்கிப் போனாள் பெண்ணவள்.
வீட்டு நினைவுகள் வாட்ட, பெரு மூச்சுடன் அதனை ஒதுக்கி வைத்து விட்டு வேலைகளில் முயன்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
அவளுக்கு தீரன் வீட்டுக்கு வந்தது, அவன் தன்னைப் பார்த்து, தன்னை நோக்கி வந்தது…. என்கிற எதுவுமே தெரியாது.
தீரனோ, இரு கால்களையும் கல்லின் மீது தூக்கி வைத்துக் கொண்டு குறுகி அமர்ந்து கால்களின் முட்டியில் தலையை சாய்த்து அமர்ந்திருந்தவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனின் கண்களில் அவளின் நிலையைக் கண்டு ஒரு நொடிக்கும் குறைவாக கனிவு ஒன்று உருவாகி மறைந்தது.
அவளின் கவனம் அங்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன்,
குரலைச் செரும, அந்த சத்தத்தில் கனவு உலகில் இருந்து நிஜ உலகிற்கு வந்தவள்,
தலையை நிமிர்த்தி தனக்கு முன்னே நின்ற தீரனைப் பார்க்க,
அவனோ, புருவத்தை சுருக்கி,
மேலிருந்து கீழாக அவளை ஒரு பார்வை பார்த்தவன்,
“என்ன மேடம் தூங்காம இங்க என்ன பண்றீங்க?” என கேட்க,
அதற்கு அவள் பதில் சொல்லாது மெதுவாக எழுந்து நின்றவள்,
அங்கிருந்து நகர எத்தனிக்க,
அவளின் வழியை மறித்து நிற்பது போல, கையை நீட்டியவன்,
“கேள்வி கேட்டா பதில் வரணும். இல்லன்னா எனக்குப் பிடிக்காது.” என உறுமினான்.
அவளோ, அவனைப் பார்க்காது வேறு பக்கம் பார்த்தவாறு,
“தூக்கம் வரல. அதான் கொஞ்ச நேரம் வெளில நடக்கலாம்னு வந்தன்.”
“ஓஹ்…. அப்புறம் என்ன இங்கயே உட்கார வேண்டியது தானே. எதுக்காக என்னைப் பார்த்ததும் எழுந்து போறாய்?”
“………………”
“பதில் இன்னும் வரல….”
“ம்ப்ச்…. இப்போ தூக்கம் வருது.”
“ஓஹ் அப்போ என்னப் பார்த்தா தான் உனக்கு தூக்கம் வருது அப்படித்தானே.” என அவன் தலை சாய்த்துக் கேட்க,
தான் சொன்ன பதிலை வைத்தே தன்னை மடக்கி கேள்வி கேட்பவனை என்ன சொல்வது?, என்ன செய்வது?, எனப் புரியாது வெறித்துப் பார்த்தவள்,
“இந்த நிமிஷம் நான் அதிகமா வெறுக்கிற மனுஷன் நீங்க மட்டும் தான். அது உங்களுக்கும் நல்லாவே தெரியும். அப்புறம் எதுக்கு சார்….” என அவள் வார்த்தையை முடிக்காது அவனை ஒரு பார்வை பார்க்க,
ஒரு கணம் முகம் இறுகிப் போனவன்,
“அதெல்லாம் இருக்கட்டும், ஜூஸ் கொடுத்தா குடிக்க மாட்டேன்…. அப்படி இப்படின்னு ஏதோ நல்லவ வேஷம் போட்டீயாமே?” என கேலியான உதட்டு வளைவுடன் கேட்க,
அவனை தீர்க்கமாக பார்த்தவள்,
“அதுக்கு பெயர் தன் மானம் சார், நடிப்பு இல்லை. அத முதல்ல தெளிவா புரிஞ்சுக் கோங்க. அத விட எனக்கு உங்க பரிதாபம், பாவம், கருணை என்கிற எதுவுமே வேணாம் சார்.” என தெளிவாக கூறியவள்,
நேர் நடையுடன் அவனைக் கடந்து செல்ல,
தன்னைத் தாண்டிச் செல்லும் அவளின் கையைப் பிடித்து இழுத்தான் அவன்.
அவன் அப்படி திடுமென இழுக்கக் கூடும் என எதிர்பாராதவள்,
ஒரு சுற்றுச் சுற்றி அவனின் மீது போய் விழுந்தாள்.
அவனோ, அவளை அணைத்துப் பிடித்தவன், அவள் அதிர்ந்து நோக்கவும்,
“நான் பேசிக்கிட்டு இருக்கும் போதே நீ உன் பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்டி?, நான் பேசி முடிக்கும் வரைக்கும் நீ நின்னு கேட்கணும் புரிஞ்சுதா?” என உறும,
அவளோ, அவனை விட்டு அவசரமாக விலகி நின்றவள்,
“என்னால முடியல, ப்ளீஸ். நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கேன்.”
“ஓஹ்…. அப்படிங்களா மேடம், ஆனா இந்த நிலையிலும் உன் கண்ணுல இருக்கிற திமிர் குறையலயேடி.”
“ம்ப்ச்…. நான் மறுபடியும் சொல்றேன் சார். அது திமிர் இல்ல, தன்மானம்.”
“ம்ப்ச்….நீ சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லி என்ன கடுப்பாக்காத. இப்போ உன்ன விடுறன். ஆனா நாளைக்கு விடியும் போது நீ இங்க வழமை போல உட்கார்ந்து இருக்கணும் புரிஞ்சுதா….?” என அழுத்தமாக கேட்க,
அவளும், அதற்கு மேலும் அவனிடம் போராட விரும்பாது,
“ஆம்.” என்பது போல தலையாட்டினாள்.
அவனும், அவளின் தலையாட்டலை ஒரு வித திருப்தியாக பார்த்துக் கொண்டே,
“போ.” எனக் கூற,
அவனை மனதிற்குள் வறுத்து எடுத்தபடியே சென்றாள் அவள்.
போகும் அவளையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டு இருந்தவனின் மனது, அப்போது தான் சற்று இதம் கண்டது போல இருந்தது.
காலையில் இருந்து, அவனின் மனதில் இருந்த இறுக்கம் இப்போது கடுகளவு கூட அவனின் மனதில் இல்லை.
மனம் இலேசாக, “பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்….” என்ற பாட்டை ஹம் பண்ணிக் கொண்டு உள்ளே சென்றான்.
அந்தப் பாட்டு வரிகள், அவனுக்காகவே எழுதப்பட்டது போல இருந்தது.
அவளைக் கண்டால் தான், அந்த நாள் பொழுது நல்ல படியாக செல்வது போன்ற உணர்வு அவனுக்கு.
அவனின் மனதில் ஏன் அவளைக் காணும் போது மாத்திரம் அத்துணை சந்தோஷம் வருகின்றது? என்ற கேள்வி எழும்பி இருந்தால், ஒரு வேளை அவனின் மனது அவனுக்கு சரியான பதிலையும், பாதையையும் காட்டி இருக்குமோ என்னவோ?….
ஆனால் அந்த நொடி வரையும், அவனின் மனதில், அந்த மாதிரி எந்தக் கேள்விகளும் உதயமாகவில்லை.
அவளின் மீது, அவனது கட்டுப்பாடுகளையும் மீறி மென் சலனமும், பாசமும் உருவானது உண்மை தான்.
காலம் தான் அவனிற்கு அவனின் உணர்வுகளை புரிய வைக்க வேண்டும்.
*******************************
மறு புறம், ஈவினிங் கிளாஸ் எல்லாம் முடிந்த பிறகு, நண்பிகளுடன் அரட்டை அடித்தபடி வெளியே வந்த அபர்ணா,
அவர்கள் அனைவரும் கிளம்பியதும், சற்று நேரம் யோசித்தவள்,
“மிஸ்டர் கொடுமைக்காரன் வரும் வரைக்கும் நான் ஏன் இங்க நிற்கணும்?, எனக்கு என் பாட்டில போகத் தெரியாதா என்ன?, அவர் சொன்னா நான் கேட்கணுமா?, முடியாது…. முடியவே முடியாது.” என முணு முணுத்து விட்டு,
“அடுத்து என்ன செய்யலாம்?” என யோசித்தவள், முகம் பளிச்சென்று மலர,
புத்தகப் பையை தூக்கிக் கொண்டு, தன் பாட்டில் நடக்க ஆரம்பித்தாள்.
அவள் பாடசாலை வாசலைத் தாண்டும் முன்பாக,
அவளைத் தடுத்த வாட்ச்மென், “அம்மாடி அபர்ணா, எங்கம்மா போறாய்?, உன்ன தனியா எங்கயும் போக அனுமதிக்கக் கூடாதுன்னு, ஆதி சார் சொல்லி இருக்கார்ம்மா.” என கூற,
அப்போது தான் அந்த வாட்ச்மேனைப் பார்த்தவள்,
“இதுக்கு முன்னாடி உங்கள நான் இங்க பார்த்ததே இல்லையே. நீங்க எப்போ வேலைக்கு சேர்ந்தீங்க?” என கேட்டாள்.
“நான் இன்னைக்கு தான் வேலைக்கு வந்தன்மா. அதுவும், உங்களுக்காக மட்டும் என்னை ஆதி ஐயா நியமிச்சு இருக்கார். எனக்கு வேலையே உங்கள பார்த்துக்கிறது மட்டும் தான். அவருக்கு உங்க மேல அம்புட்டுப் பாசம்மா. உங்கள கண்காணிக்க சொல்லி என்னை அனுப்பி வைச்சு இருக்கார். நான் மட்டும் இல்ல, இந்த தெருவில, நிறைய பேர, உங்க பாதுகாப்புக்காக ஐயா வேலைக்கு வைச்சு இருக்கார்.” என கூறவும்,
“ஓஹ்…. அப்படியா?” என்றவள்,
வெளியில் எட்டிப் பார்க்க,
ஆங்காங்கே, புதிதாக பல கடைகள் திடீர் என உருவாகி இருந்தது.
அந்தக் கடைகளுக்கு பொறுப்பாக நின்றவர்களைப் பார்த்தாலே தெரிந்து விடும்.
அவர்கள் யாருமே உண்மையான கடைக்காரர்கள் இல்லை என்பது.
ஒவ்வொருவரும் பத்துப் பேரை, தனியாக புரட்டி எடுப்பவர்கள் போல நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது தான், அவர்கள் எதுக்காக அங்கு புதிதாக கடை போட்டு இருக்கிறார்கள் என்பது அபர்ணாவுக்கு புரிந்தது.
“ஓஹ் இது தான் விஷயமா?” என எண்ணிக் கொண்டவள்,
“அந்த திமிர் பிடிச்சவன், ரொம்ப விவரக்காரன் தான். அவனுக்கு என் மேல நம்பிக்கை இல்லாம, இத்தனை பேரை புதுசா வேலைக்கு சேர்த்து இருக்கான். இவன் மகா கெட்டிக் காரன் தான், கேடி தான்.”
“ஆனா நான் கேடிக்கு எல்லாம் கேடிடா. உன் பிளானை உடைச்சு, எப்படி வெளில போறேன்னு பார்.” என கறுவிக் கொண்டவள்,
அந்த வாட்ச்மேனைப் பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு,
மீண்டும் உள்ளே சென்றவள், அப்படியே பின் வாசல் வழியாக வந்து சுவரில் நின்று எட்டிப் பார்க்க,
அங்கும், புதிதாக சில கடைகள் உருவாகி இருந்தது.
“ஆஹா…. எந்தப் பக்கம் போனாலும், இந்த சிடு மூஞ்சி என்னைக் கண்காணிக்க ஆள் போட்டு வைச்சு இருக்காரே. என்ன பண்ண…. விடக் கூடாது. நான் தான் இந்த ஆட்டத்தில ஜெயிக்கணும்.” என நெற்றியைத் தட்டி யோசித்தவள்,
“யெஸ்…..” என கத்திக்கொண்டு, பாடசாலையின் சைக்கிள் பார்க் உள்ள இடத்தின் சுவரை அடைந்து, அங்கிருந்து எட்டிப் பார்த்தாள்.
சுவரின் மறு புறம், வெட்ட வெளிக்காணி ஒன்று இருக்க, ஒரு கணம் எச்சில் கூட்டி விழுங்கியவள்,
மறு கணம் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,
“சரி என்ன வந்தாலும் ஓகே தான். ஏறிக் குதிச்சிட வேண்டியது தான்.” என எண்ணிக் கொண்டவள்,
ஒருவாறு, பெரும் பிரயத்தனம் செய்து, பல குட்டிக் கரணங்கள் போட்டு, அந்த சுவரில் ஏறி விட்டாள்.
ஆனால், மறுபக்கம் இறங்க வேண்டும் என நினைக்கும் போது தான், எப்படி இறங்குவது எனப் புரியாது முற்றிலும் குழம்பிப் போனாள் பெண்ணவள்.
அந்த சுவர் அவள் எண்ணியதை விடவும், சற்று உயரமாக இருந்தது.
சட்டென அதில் இருந்து குதிக்கவும் முடியாது. குதித்தால் கண்டிப்பாக காயங்கள் ஏற்படும். என்ன தான் செய்வது, என மதில் மேலேயே அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தவள்,
இறுதியில், “என்ன ஆனாலும் பரவாயில்லை. ஒன்…. டூ…. த்ரீ…. என சொல்லிட்டு குதிச்சுட வேண்டியது தான்.” என முடிவு எடுத்துக் கொண்டு,
“ஒன்…. டூ….” என கூறி, மதிலில் ஏறி நின்று, ஒற்றைக்காலைத் தூக்கியபடி, இறுக கண்கள் இரண்டையும் மூட,
புயல் வேகத்தில், ஒரு கார் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்து அங்கு மூன்று ரவுண்ட் அடித்து நின்றது.
அந்த சத்தத்தில் ஒற்றைக் கண்ணைத் திறந்து பார்த்தவள்,
அங்கு நின்ற காரைக் கண்டதும்,
“ஆத்தி…. இது சிடு மூஞ்சியோட கார் தானே….” என முணு முணுத்தவள், இரு கண்களும் வெளியே தெறித்து விடும் அளவுக்கு அந்தக் காரை வெறித்துப் பார்க்க,
அதிலிருந்து, படு ஸ்டைலாக கூலிங் கிளாஸ் சகிதம் இறங்கிய ஆதி, கூலிங் கிளாசை கழட்டி வைத்தபடி,
கண்களில் கோபம் கொப்பளிக்க, அவளை நோக்கி வந்தான்.
அவளோ, இமைக்காது அவனையே பார்த்தபடி,
அப்படியே ஒற்றைக் காலைத் தூக்கியபடி நின்று கொண்டு இருந்தாள்.
அவளின் மீது கடுங் கோபம் கொண்டு வந்தவனுக்கே, அவளின் நிலை சிரிப்பை வர வைத்தது.
ஆனாலும், அவள் செய்யத் துணிந்த காரியத்தின் பின் விளைவை எண்ணிப் பார்த்தவனுக்கு, மீண்டும் மனம் கொதி நிலைக்கு சென்றது.
பின்னே, அவன் ஒன்று…. இரண்டு எதிரிகளையா சம்பாதித்து வைத்து இருக்கிறான்.
ஊரில் உள்ள மிகப் பெரிய ரௌடிகளின், பட்டாளமே…. இவனையும் இவன் சம்பந்தப் பட்ட ஆட்களையும், கொன்று கூறு போட,
கழுகுக் கண்களுடன் காத்து இருக்க,
இவளோ, அவர்களிற்கு ஈசி வழி அமைத்துக் கொடுப்பது போல முட்டாள்த் தனமான காரியத்தை அல்லவா செய்யத் துணிந்து இருக்கிறாள்.
“ஒரு வேளை இவளுக்கு ஏதும் ஆகி இருந்தால்….” என எண்ணியவனுக்கு, அந்த நினைப்பின் தாக்கத்தில், உயிர்க் கூடே காலியானது போன்ற ஒரு உணர்வு உண்டானது.
அவனின் இதயம் வெளியே எம்பிக் குதித்து விடும் அளவுக்கு துடிப்பை அதிகரித்தது. அந்த நொடி, அபர்ணா மேல் உள்ள தன்னுடைய நேசத்தை முழுதாக உணர்ந்தவனுக்கு,
அதனை இன்னும் தெளிவு படுத்திக் கொள்ளும் தேவை இருந்தது.
அப்போதைக்கு தன் நினைவுகளை ஒதுக்கி வைத்தவன்,
அவளை உறுத்து விழித்து விட்டு,
“என்ன இப்படியே கொக்கு போல நிக்கிற பிளானா?, பெரிய காதல் வளர்த்தேன் சிம்புன்னு நினைப்பா உனக்கு?, முதல்ல கையையும்,
காலையும் இறக்குடி.” என அதட்டினான்.
அவனின் அதட்டலில் தன் நிலை உணர்ந்தவள், ஒரு வித பயத்தில்,
அப்படியே கால்கள் துவள விழ,
“ஏய்….” என கத்தியவன்,
ஓடி வந்து இரு கைகளிலும் அவளைத் தாங்கிக் கொண்டான்.
அவனது கைகளில் தான் இருக்கிறோம் என உணரவே அவளுக்கு நீண்ட நேரம் எடுத்தது.
“சரி இன்னைக்கு கை, கால்கள் இரண்டும் சிராய்க்கப் போவது உறுதி.” என எண்ணி இருந்தவளுக்கு,
தான் சேப்பாக தான் இருக்கிறோம் என்ற எண்ணம் உருவாக, சற்று நேரம் பிடித்தது.
மெல்ல கண்களைத் திறந்தவள், தன்னையே உறுத்து விழித்துக் கொண்டு இருந்தவனைக் கண்டு,
பதில் சொல்ல முடியாது இருக்க, மெதுவாக அவளை கீழே இறக்கி விட்டவன்,
“உன்னை….” என அவளை அடிக்க கை ஓங்கினான்.
அவன் அடித்து விடுவான் என பயந்து கண்களை இறுக மூடியவள்,
அவன் அடிக்கவில்லை என்றதும், கண்களைத் திறக்க,
ஓங்கி அவளுக்கு அருகில் இருந்த சுவரில் குத்தியவன்,
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடி?, நான் அவ்வளவு சொல்லியும் கேட்க கூடாதுன்னு நினைச்சு இங்க வந்து ஏறி நிக்கிறாய்?, இப்போ மட்டும் நான் வராமல் போய் இருந்தா…. என்ன ஆகி இருக்கும்?, கை, கால் எல்லாம் அடி பட்டு மயங்கி இருந்து இருப்பாய், அல்லது எங்கயும் போய் என் எதிரிங்க கையில மாட்டி சிக்கி சின்னாபின்னம் ஆகி, காணாப் பிணம் ஆகி இருப்பாய்.” என அவன் உறும,
வழமை போல அவனின் உறுமலில் பதட்டம் வந்தாலும்,
அதற்கும் மேலாக , கேவலமாக அவனிடம் மாட்டிக் கொண்டதை எண்ணி எரிச்சல் கொண்டவள்,
“நீங்க செய்த பாவம் இப்போ என்னையும் சேர்த்து துரத்துது.
எல்லாம் என் நேரம், உங்க கிட்ட இருக்கிறத விடவா எனக்கு ஆபத்து வரப் போகுது?,என் நலனைப் பத்தி நீங்க கவலைப்படுறீங்களா?, சைத்தான் வேதம் ஓதுற மாதிரி இருக்கு, நீங்க சொல்ற கதை?, சும்மா உருட்டாம கிளம்புங்க. எனக்கு என்னைக் காப்பாத்திக்கத் தெரியும்.” என்றவள்,
அவளின் பேச்சில், கடுப்பாக நின்று இருந்தவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு,
கீழே இருந்த பேக்கை எடுத்து, அவனின் முகம் முன்னே பிடித்து மண்ணை ஸ்டைலாக ஊதி விட்டு,
தன் பாட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள்.
ஆதியோ, “குள்ளக் கத்தரிக்காய் போல இருந்து கொண்டு என்ன எல்லாம் பேசுறா?, இவள….” என பல்லைக் கடித்துக் கொண்டவன்,
அவளையே பார்த்து தலையைக் கோதிக் கொண்டு காரை நோக்கிப் போக,
திடுமென, அந்தக் காணியின் வாயிலின் வழியாக, ஐந்திற்கும் அதிகமான கார்கள் தொடர்ச்சியாக அணி வகுத்து வர ஆரம்பித்தது.
அந்தக் கார்களின் அணி வகுப்பில் பயந்து போன அபர்ணா,
ஆதியை திரும்பிப் பார்க்க,
அவனோ, முதுகில் இருந்த துப்பாக்கியை எடுத்து லோட் பண்ணிக் கொண்டு,
“அபர்ணாஆஆ….” என கத்திக் கொண்டு அவளை நோக்கி ஓட,
அவளும் பயந்து கொண்டு, அவனை நோக்கி வேகமாக ஓடி வந்தாள்.
ஆதி, அபர்ணாவைக் காப்பானா?
தீரன், தமயந்தி மனதை முற்றிலும் புரிந்து கொள்ளும் நாள் வருமா?
மறைந்த உண்மைகள் மீண்டும் துலங்கம் நாள் வருமா?
ஹாய் மக்காஸ்.. 🥰🥰 தாரதி அடுத்த எபியோடு வந்தாச்சு 😍. நீங்க எல்லாரும் என்னைத் திட்டுறது புரியுது. எபி லேட், ஒழுங்கா எபி வரல, கதை மறந்துடும் போல இருக்கு…. இப்படி நீங்க சொல்றது, பேசுறது எல்லாம் நியாயம் தான். என்ன செய்றது. சின்ன வேலையா வெளியூர் போக வேண்டிய நிலை மக்காஸ்.
இனி ஒழுங்காக எபிகள் வரும்.. உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு என்னை மன்னிச்சு கதையைப் படிங்க மக்காஸ் 😍😍 படிச்சிட்டு இரண்டு கருத்தும் சொல்லிட்டுப் போங்க 😍😍😍
தீரன் 💖 தமயந்தி
ஆதி💖 அபர்ணா வந்தாச்சு.
நாளைக்கு கண்டிப்பா எபி உண்டு 😍😍
Interesting sis