இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15

4.6
(16)

Episode – 15

 

தீரனின் மனதின் ஓரத்தில், “தமயந்தி நல்லவ தான்…. அவ தப்பானவ இல்லை.” என்கிற எண்ணம் உருவாகி இருந்தாலும், 

அவன் அதனை, மனதின் ஓரத்திலேயே கிடப்பில் போட்டு விட்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.

 

ஏதும் ஒரு விடயத்தை ஆராயப் போனால் தானே தெளிவு கிடைக்கும்.

 

இங்கு தீரனோ, அதற்கான சந்தர்ப்பம், நேரம் இருந்தும் வேண்டும் என்றே அவள் விடயத்தை கவனிக்காது விட்டு இருந்தான்.

 

இப்படி இருக்கும் ஒரு நாளில் தான், அவள் பற்றி அவன் எழுப்பி வைத்து இருந்த தவறான விம்பம் ஆட்டம் காணும் தருணம் வந்து சேர்ந்தது.

 

அன்று சனிக் கிழமை, விடுமுறை நாள், வழக்கம் போல ஜாக்கிங் போய் வந்தவன், தமயந்தியை சம்பந்தமே இல்லாமல் இரண்டு திட்டுத் திட்ட,

 

தமயந்தியும், வழமை போல தலையாட்டி விட்டு, தான் தங்கி இருக்கும் வீடு நோக்கிப் போக ஆரம்பித்தாள்.

 

போகும் அவளை சொடக்கிட்டு அழைத்தவன்,

 

“ஏண்டி, உன்ன நான் ஒவ்வொரு நாளும் திட்டுறனே…. உனக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம் சூடு சுரணை இல்லையா?” என சீண்டும் வகையில் கேட்க,

 

அவளோ, ஒரு மென் சிரிப்புடன், 

“நான் தப்பு பண்ணி நீங்க பேசினா…. அடுத்த தடவை வெட்கம், மானம், சூடு, அது என்ன சுரணை…. பார்த்து அத திருத்திக்கலாம். ஆனா காரணமே இல்லாம திட்டுற உங்க கிட்ட, நான் எதுக்கு வெட்கப்படணும், இப்படி தேவையே இல்லாம ஒருத்தர திட்டுறமேன்னு நீங்க தான் வெட்கப்படணும் சார்.” என கூறி முடிக்க,

 

அவள் சொன்னதில் உள்ள உண்மை அவனைச் சுட, 

 

“ஏய் உனக்கு ரொம்ப திமிரடி, என்னையே குத்திக் காட்டுறீயா?” என எகிறினான்.

 

அவனின் எகிறலுக்கு பயம் கொள்ளாது அவனையே நேர் கொண்ட பார்வை பார்த்தவள்,

 

“உண்மைய சொன்னா….கோபம் வரத் தான் செய்யும் என்ன செய்வம் சார்?” என கேட்டு விட்டு,

 

மீண்டும், ஒரு பெரு மூச்சுடன், “ஆனா ஒரு விஷயம் சார், என்னால உங்க பேச்சு, கோபம் எல்லாத்தையும் சமாளிக்க முடியும். ஆனா நீங்க என்னை உரிமையா வாடி, போடின்னு சொல்றத தான் தாங்க முடியல. உங்களுக்கு யாரு அந்த உரிமையைக் கொடுத்தது?” என சற்று எரிச்சல் கலந்த குரலில் கேட்க,

 

தீரனோ, ஒரு கணம் அவளின் பேச்சில் புருவம் சுருக்கியவன், 

 

மறு நொடி, கண்கள் மின்ன, “ஓஹ், அப்போ உனக்கு நான் கூப்பிடுறது பிடிக்கல அப்படித் தானே.  ஆனா எனக்கு அது தான் ரொம்ப ரொம்பஆஆ…. பிடிச்சு இருக்கு. உன்னோட முகத்தில வர்ற எரிச்சல், கோபம், அழுகை எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்பஆஆ…. பிடிச்சு இருக்குடி, அதுக்காகவே கூப்பிடுவன்.” என அழுத்திக் கூறியவன்,

 

ஒரு கேலி சிரிப்பை உதிர்க்க, 

அவளோ, அவனை ஒரு கணம் வெறித்துப் பார்த்து விட்டு, 

 

அங்கிருந்து வேகமாக விலகி சென்றாள்.

 

அன்றைய நாள் முழுவதும் வீட்டிலேயே இருந்தவன், போனில் தனது வேலைகளை செய்து கொண்டு இருந்தான்.

 

அவனுக்கு மிகவும் பிடித்த இடமான பால்கனியில் அமர்ந்து, 

 

வேலைகளை செய்து கொண்டு இருந்தவனின் பார்வை,

 

தோட்டத்தில் இருந்த செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டு இருந்த தமயந்தியின் மீது படிந்தது.

 

சாந்தமான முகத்துடன், தண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தவள், 

 

இயல்பாக அந்த வேலைகளில் பொருந்திப் போனாள்.

 

அதே நேரம் தோட்டத்தின் இன்னொரு மூலையில், காய்ந்த சருகுகளை கூட்டி அதற்கு நெருப்பு வைத்து இருந்தனர்.

 

அதற்கு எதிர்ப் புறம், சமையல் செய்யும் பெண் ஒருவரின்  மூன்று வயதுக் குழந்தை பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

 

குழந்தை, தன் பாட்டில் கையில் இருந்த பந்தை தூக்கி எறிந்து விளையாடிக் கொண்டு இருந்தான்.

 

அந்தக் குழந்தையின் மழலை சிரிப்பிலும், குறும்பிலும், கொள்ளை கொள்ளும் அழகிலும் முற்றிலும் தொலைந்து போன தமயந்தி, தன் மனக் காயங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு,

 

சிறு புன்னகை உடன் அந்தக் குழந்தையின் செயல்களைப் பார்த்த வண்ணம் வேலை செய்து கொண்டு இருந்தாள்.

 

அதே நேரம் குழந்தையை தனியே விளையாட விட்டவர்கள், வேலை நிமித்தம் வேறு இடங்களுக்கு சென்று இருக்க, 

 

சுட்டிக் குழந்தையோ, பந்தை எறிந்த வண்ணம் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்தான்.

 

விளையாட்டில் பந்து பின்னால் போன குழந்தை, தன்னை அறியாமலேயே, நெருப்பின் புறம் வந்து இருந்தான்.

 

அடுத்து, அவன் பந்தை எறிய, அது சரியாக நெருப்பின் அருகில் போய் விழுந்தது.

 

அந்த பிளாஸ்டிக் பந்து, நெருப்பின் அருகில் இருந்து உருக ஆரம்பிக்க,

 

“அ….ச்….சோ…. என்…. பா…. ல்….” என கத்தியவன், நெருப்பின் புறம் ஓட, 

 

“அச்சோ…. பாப்பா….” என கத்திய தமயந்தி,

 

குழந்தை நோக்கி ஓடிச் சென்றாள்.

 

அவளின் சத்தத்தில் பால்கனியில் போன் பேசிக் கொண்டு இருந்தவன், 

 

“என்னாச்சு இவளுக்கு நல்லாத் தானே இருந்தா…. எதுக்கு இப்போ இப்படி கத்துறா?” என எண்ணியவாறு,

 

போனை கட் பண்ணி விட்டு, அவள் ஓடும் திசையைப் பார்த்தவனுக்கு, நடக்க இருக்கும் விபரீதம் புரிய,

 

அவனுமே,” ஓஹ் ஷிட்….” என தலையில் அடித்துக் கொண்டு, வேகமாக கீழே இறங்கிச் சென்றான்.

 

அவளின் சத்தத்தில் ஆங்காங்கே வேலை செய்து கொண்டு இருந்தவர்களும், அந்த இடத்திற்கு ஓடி வந்து சேர்ந்தனர்.

 

குழந்தை நெருப்பில் கால் வைக்க முதல், ஓடிச் சென்று அவனை அணைத்து தூக்கி இருந்தாள் தமயந்தி.

 

குழந்தையோ, அவளின் சத்தத்திலும், அந்த நெருப்பின்  சூட்டினால் உண்டான அனல் காற்றிலும், பயந்து போய் அலறி அழ ஆரம்பித்தது.

 

அந்தக் குழந்தையின் அலறலில், மொத்தப் பேரும் அங்கு கூடி விட்டனர்.

 

தமயந்தியோ, “ஒண்ணும் இல்ல குட்டி. அழக் கூடாது தங்கம். பிள்ளைக்கு ஒன்னும் ஆகலடா செல்லம்.” என பாப்பாவை சமாதானம் செய்ய,

 

அதற்குள் அங்கு வந்த குழந்தையின் அன்னை “என் செல்லமே, உனக்கு ஒண்ணும் ஆகல தானே .” என அழுது கொண்டு குழந்தையை அங்கும் இங்கும் திருப்பி செக் பண்ண,

 

“பயப்பிட வேணாம் அக்கா. பாப்பாக்கு ஒண்ணும் ஆகல.” என கூறி அவரைத் தேற்றினாள் தமயந்தி.

 

அதற்குள், குழந்தையின் அழுகையை நிறுத்த,

 

சிவகாமி அம்மா பாலைக் கரைத்துக் கொண்டு வந்து கொடுக்க,

 

அதுவோ, சமத்தாக பாலை வாங்கி அருந்திக் கொண்டு, அழுத களைப்பில், அன்னையின் தோளில் படுத்து உறங்க ஆரம்பித்தது.

 

குழந்தையின் அன்னையோ, தமயந்தியைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டபடி, 

 

“அம்மாடி, உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீ என்னோட உயிரையே என்கிட்ட காப்பாத்திக் கொடுத்து இருக்காய்மா. பிள்ளை இல்லையேன்னு விரதம் இருந்து, கோவில் கோவிலா ஏறி, தவம் இருந்து பெத்த பிள்ளை அம்மா இவன். இவனுக்கு ஏதும் ஆகி இருந்தா…. நானும் செத்துப் போய் இருப்பன்.” என கூறி அழ,

 

தூங்கிக் கொண்டு இருந்த குழந்தையின் தலையை மெல்ல வருடி விட்ட தமயந்தி,

 

“ஏன்மா, இப்படி பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க?, இதெல்லாம் ஒரு சின்ன உதவிம்மா, குழந்தைக்கு ஒண்ணும்  ஆகல. அது மட்டும் போதும்மா.” என கூறி, அவரை தேற்ற,

 

“நீ ரொம்ப சாதாரணமா சொல்லிட்டாய்ம்மா. இது என் குழந்தை உயிர் சம்பந்தமான விஷயம்மா. அன்னைக்கு ஜூஸ் கொடுக்க வந்த போது, நீ குடிக்கலன்னதும் நான் எப்படி எல்லாம் பேசினன் திமிர்க்காரி, சரியான அகம்பாவம் பிடிச்சவன்னு, ஆனா நீ அத பத்தி எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம, எனக்கு உதவி செய்து இருக்காய்மா. இது ரொம்ப பெரிய விஷயம்மா.” என கூறினார் அவர். 

 

ஆம், அன்று அவள் ஜூஸ் குடிக்க மறுத்ததும், அவளை கண்டபடி பேசிய அதே பெண்ணின் குழந்தையைத் தான் அவள் இன்று காப்பாற்றி இருந்தாள்.

 

அவளுக்கு, அங்கிருந்த அனைவரும், மாறி மாறி நன்றி சொல்ல, அதுவரையும் பார்வையாளராக நின்று கொண்டு இருந்த தீரன்,

 

குரலை செரும, அனைவரின் பார்வையும் அவனின் புறம் போனது.

 

கையைக் கட்டிக் கொண்டு, தமயந்தியைப் பார்த்த வண்ணமே நடந்து வந்தவன், 

 

அவள் அருகில் வந்து அவளின் கையைப் பற்ற, 

 

அவளோ, “என்ன செய்றீங்க நீங்க, கையை விடுங்க.” என அடிகுரலில், அவனுக்கு கேட்கும் படி மட்டும் சீறிய வண்ணம் அவனைப் பார்க்க,

 

அவனோ, அவள் கத்துவதை எல்லாம் காதில் வாங்காது அவளின் முழங்கையை பிடித்து திருப்பி அங்கு உள்ளவர்களிடம் காட்டினான்.

 

அப்போது தான் அவளது முழங்கையில், நெருப்புப் பட்டு காயம் உண்டாகி இருப்பது அங்கு உள்ளவர்களுக்கு புரிந்தது.

 

சிவகாமி அம்மாவோ, “என்ன தமயந்திம்மா இது?, பாரு எப்படி காயம் பட்டு இருக்குன்னு.” என பதறியபடி, அவளின் அருகே வந்தவர்,

 

அவளின் கையைப் பற்ற, 

அவளின் மீதான ஒரு ஆழ்ந்த பார்வை உடன் விலகி நின்றான் தீரன்.

 

அதற்குள் அங்கு இருந்த ஒருவர் மருந்தை எடுத்து வர, அதனை வாங்கி சிவகாமி அம்மா அவளுக்கு போட்டு விட்டார்.

 

தமயந்தியோ, “அம்மா இது ஒரு சின்னக் காயம் இதுக்கு போய் ஏன்  இத்தனை தூரம் பதறுறீங்க?” என கேட்க,

 

அவளை, ஒரு பார்வை பார்த்த சிவகாமி அம்மாவோ,

 

“நீ கொஞ்ச நேரம் பேசாம இரும்மா. சின்னக் காயம்னாலும் வலி வலி தானே….” என கூற,

 

அதற்கு மேல் தமயந்தியும் பேச வில்லை.

 

தீரனோ, ஒரு கணம் தமயந்தியின் கையைப் பார்த்து விட்டு,

நிமிர்ந்து அந்தக் குழந்தையின் அன்னையை உறுத்து விழித்தான்.

 

அவனின் கோபம் முழுவதும் கண்களில் தெறித்துக் கொண்டு இருந்தது.

 

அந்தப் பெண்ணோ, எச்சில் விழுங்கியபடி, 

 

“சார்…. இல்ல சார், நான் கவனமாத் தான்….” என ஆரம்பிக்கும் போதே கை நீட்டித் தடுத்தவன்,

 

“குழந்தையைக் கொண்டு வந்தா…. குழந்தையை கவனமா பார்த்துக்கணும்னு சொல்லி இருக்கனா…. இல்லையா?, இங்க குழந்தைகளுக்குன்னு தனி பிளே  ரூம் இருக்குத் தானே. அப்புறம் எதுக்கு இங்க பிள்ளைய வர விட்டீங்க?, ஒரு வேள பிள்ளைக்கு ஏதும் ஆகி இருந்தா….” என அவன் கத்த,

 

அந்தப் பெண்ணோ, தலை குனிந்தபடி, “இனி மேல் இப்படி நடக்காது சார், இந்த ஒரு தடவை மன்னிச்சுடுங்க.” என கெஞ்சினாள்.

 

“இது தான் கடைசி, இனி மேல் குழந்தை விஷயத்தில ரொம்ப கவனமா இருக்கணும். மீறி ஏதும் நடந்தா நான் மனுஷனா இருக்க மாட்டன்.” என எச்சரித்தவன்,

 

சருகுக்கு நெருப்பு வைத்தவர்களையும், ஒரு முறை பேசி விட்டு,

 

முகம் கனிய குழந்தை அருகே சென்று அவனின் தலையை வருடி விட்டு,

 

அனைவரையும் அவரவர் வேலைகளைப் பார்க்க போக சொன்னான்.

 

குறித்த அந்தப் பெண், தமயந்திக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விட்டு குழந்தை உடன் உள்ளே செல்ல, ஏனையவர்களும் தத்தமது இடங்களிற்கு சென்றனர்.

 

அனைவரும் போன பிறகு, தனித்து நின்ற, தமயந்தியின் அருகில் வந்த தீரன், 

 

“நான் நினைச்சது போல நீ கெட்டவள் இல்லை. கொஞ்சமே நல்லவள் தான்.” என மட்டும் கூறி விட்டு சென்றான்.

 

போகும் அவனின் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்த தமயந்தி, 

 

“இவர் என்ன மேக்கன்னே எனக்கு புரிய மாட்டேங்குது.” என முணு முணுத்து விட்டு, தன் வேலைகளை கவனிக்க சென்றாள்.

 

மீண்டும் பால்கனிக்கு வந்த தீரனுக்கு, மறுபடியும் வேலை செய்ய முடியாது போனது.

 

அவனின் மனமோ, “பிள்ளையைக் காப்பாற்ற போய் இவளுக்கு ஏதும் நடந்து இருந்தா….” என மீண்டும் மீண்டும் கேட்க,

 

“சே…. அவளுக்கு போய் என்னோட மனசு பரிஞ்சு பேசுதே.” என எண்ணிக் கொண்டவனுக்கு அவளின் விடயத்தில் மட்டும் தனது கணிப்புகள் எல்லாம் தவிடு பொடியாகிப் போவது போன்ற ஒரு உணர்வு உருவானது.

 

நெற்றியை நீவிக் கொண்டவன், சற்று நேரம் யோசித்து விட்டு,

 

அடுத்த நொடி, தனது நெருங்கிய நண்பனும், டீடெக்டிவ்வுமான பார்கவ்ற்கு அழைத்தவன்,

 

“மச்சான் எனக்கு அவசரமா உன் உதவி தேவைடா. நான் ஒரு பொண்ணோட போட்டோ அனுப்புறன், அவ எங்க வேலை செய்தா…. என்கிற தகவல் முதல் எல்லாமே அனுப்புறன். அண்ட் இன்னொரு விஷயம் என்றவன், 

தனக்கு தெரிந்த இரு சம்பவங்களையும் கூறி, இதில சம்பந்தப் பட்டவ தான் நான் சொல்ற பொண்ணுடா, நீ கொஞ்சம் அந்தப் பொண்ண பத்தி விசாரிடா. அப்போ எனக்கு சரின்னு தோணினது இப்போ தப்போன்னு தோணுதுடா. அவ விஷயத்தில நான் ஒரு முடிவுக்கு வரணும்னா அதுக்கு உன்னோட உதவி அவசியம்.” என கட கடவென கூறி முடிக்க,

 

அவனின் நண்பனும், “ஓகேடா என்கிட்ட சொல்லிட்டாய் தானே பிரீயா விடுடா. இன்னும் இரண்டு நாளுக்குள்ள, உனக்கு அந்தப் பொண்ணு பத்தி எல்லா டீடெயில்ஸ்சும் கொடுக்கிறன் ஓகேவாடா? என்னோட நண்பன் தன் வாழ்க்கையில முதல் முறை ஒரு பொண்ணப் பத்திக் கேட்டு இருக்கான், இத நான் எப்படி பேசாம சிம்பிளா விட முடியும். நானே இறங்கி கண்டு பிடிக்கிறேன்டா. ஓகே தானே.” என சிறு சிரிப்புடன் கூற,

 

“டேய், போதும்டா, ரொம்ப ஓட்டாத,  போனை வைச்சிட்டு போய் வேலையைப் பாரு.” என புன் சிரிப்புடன் கூறி விட்டு போனை வைத்தான்.

 

அடுத்து தமயந்தியின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்துக் கொண்டு நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தான் அவன்.

 

அவன் மனதில், அவளால் மெல்லிய சலனம் உருவாகி அது இதயம் முழுவதும் படர ஆரம்பித்தது.

 

************************************************

 

மறு புறம், ஆதிக்கு காபி கொண்டு வந்து கொடுத்தவள், தானும் அவனுக்கு அருகில் அமர்ந்து பருகி விட்டு,

 

அவனுக்கு தேவையானவற்றை எல்லாம், பார்த்துப் பார்த்து செய்ய ஆரம்பித்தாள்.

 

அவளின் அருகாமையில் அவன் தான் திணறிப் போனான்.

 

அவளை தனக்கு அருகிலேயே இழுத்து அமர வைத்து, நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவனின் மனம் நச்சரிக்க,

 

அதனை அடக்கி வைக்க படாத பாடு பட்டுப் போனான் அவன்.

 

அபர்ணாவோ, எந்த மன தடுமாற்றமும் இன்றி அவனுக்கு உதவி செய்தவள்,

 

பாடசாலைக்கு கிளம்பி வரும் போது தான் பிரச்சனை ஆரம்பம் ஆனது.

 

அவள் ரெடியாகி வரவும், அதுவரையும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன்,

 

“மேடம் எங்க கிளம்பிட்டீங்க?” என கேட்டான்.

 

அவளும், அவனைப் போலவே “பார்த்தா தெரியல, ஸ்கூல்ற்கு தான்.” என கூறியவள் புத்தகப் பையை எடுக்க பட்டென்று எழுந்து வந்து அதனைப் பறித்து எடுத்தவன்,

 

“இனி மேல் நீ ஸ்கூலுக்கு போக கூடாது.” என அழுத்தமாக கூறினான்.

 

அவனின் செய்கையில் ஒரு கணம் திகைத்து விழித்தவள்,

 

அடுத்த நொடியே, அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்து, 

 

“என்ன விளையாடுறீங்களா?, இப்போ தான் கொஞ்சம் நல்லவரா நடந்துக்கிறீங்களேன்னு நினைச்சன். இதோ மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியாச்சுப் போல.” சிடு சிடுக்க,

 

“நீ என்ன சொன்னாலும் சரி, என்ன நினைச்சாலும் சரி, கத்தினாலும் சரி, என் முடிவில எந்த மாற்றமும் இல்ல.” என அவன் பதிலுக்கு கத்த,

 

அவளோ, அவனைக் கண் கலங்க பார்த்தவள்,

 

“என் அப்பாவ கடன் காரனா மாத்துனீங்க, என் குடும்பத்த என்கிட்ட  இருந்து பிரிச்சீங்க, அப்புறம் என்ன உங்க இஷ்டத்துக்கு ஆட்டிப் படைச்சீங்க, இப்போ எனக்கு இருக்குற ஒரே ஒரு சந்தோஷம் என் படிப்பு மட்டும் தான். கடைசியா அதையும் பறிக்கப் பார்க்குறீங்க….” என கூறி அவள் அழ,

 

அவனோ, “உனக்கு என்னடி ஆச்சு?, எதுக்குடி இப்போ இப்படி புலம்பித் தள்ளுறாய்?, நான் எங்கடி உன்ன படிக்க வேணாம்னு சொன்னன்.” என அவன் அவளைக் கூர்ந்து பார்த்துக் கேட்க,

 

அவளோ, முற்றிலும் குழம்பிப் போய், 

 

“என்ன நீங்க மாத்தி மாத்திப் பேசுறீங்க?, இப்போ தானே ஸ்கூல் போக வேண்டாம்னு சொன்னீங்க?”

“ஆமா, இப்பவும் சொல்றன், நீ ஸ்கூலுக்கு போக முடியாது. ஆனா படிக்கலாம்.”என கூற,

 

அவளுக்கு ஏதோ புரிவது போல இருக்கவே,

 

“எனக்கு கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றீங்களா?” என சற்று அமைதியாக கேட்க,

 

அவனும், அவளின் கையைப் பற்றியவன், 

 

“சொல்றது என்ன காட்டுறேன் வா.” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தான்.

 

குழப்பத்துடன் அவனுடன் இழுபட்டு வந்தவள், 

 

அங்கே கூடியிருந்தவர்களை கண்டு தலை சுற்ற, 

 

“என்ன இதெல்லாம்?” என விழி விரித்துக் கேட்டபடி ஆதியைப் பார்த்து விழித்தாள்.

 

அவள் அப்படி யாரைக் கண்டு இருக்கக் கூடும்?

 

தமயந்தி பற்றிய உண்மைகள் தீரனுக்கு தெரிய வருமா?

 

அவனின் மன மாற்றம் நிலைக்குமா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

கண்டிப்பா உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ்..

 

கதையில் இனி வரும் எபிகளில் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பிக்கும்.

 

அடுத்த எபி நாளைக்கு வரும்.

 

பெரிய எபி போட்டு இருக்கேன்.. லைக்ஸ் ப்ளீஸ் 😍😍

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!