Episode -28
தமயந்தியும், அப்போது தான் குளித்து முடித்தவள்,
“இப்போ எதுக்கு இவரு பேசுறதுக்கு பால்கனிக்கு வர சொல்றார்?, என்ன விஷயமா இருக்கும்?, ஆபீஸ்ல ஏதும் புதுப் பிரச்சனை கிளம்பி இருக்குமோ?, இல்ல வேறு ஏதாச்சும் இருக்குமோ?” என பலதும் எண்ணிக் குழம்பிப் போனவள்,
பால்கனிக்கு வந்து சேர்ந்தாள்.
வந்தவள், இயல்பு போல “என்னாச்சு தீரா இன்னைக்கு எனக்கு குட் மார்னிங் கூட ஒழுங்கா சொல்லல.” என கேட்டாள்.
இப்போது எல்லாம் அவள் அவனுடன் ஒரு நண்பனைப் போல உரையாட ஆரம்பித்து இருந்தாள்.
அதற்கு காரணமும் அவன் தான்.
தானும் தமயந்தி உடன் மிக மிக நெருக்கமாக, மனதுக்கு இதமாக பழக ஆரம்பித்தவன், அவளையும் அப்படியே தன்னுடன் பேச வைத்து இருந்தான்.
இப்போதும் அதே இயல்புடன் தான் அவனுடன் பேசி இருந்தாள் பெண்ணவள்.
ஆனால் அவன் தான், எதிர் மாறாக தனது இயல்பை முற்றிலும் தொலைத்து இருந்தான்.
அதுவரைக்கும், உடல் இறுக வேறு பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தவன்,
அவளின் பேச்சில் கையைக் கட்டிக் கொண்டு, அவளை ஆழ்ந்து பார்த்தான்.
தமயந்தியும், எதுவும் புரியாது, அவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு,
“எதுக்காக இப்போ உங்க முகம் வாடி இருக்கு?, உடம்பு எதுவும் சரி இல்லையா?” என கேட்டவள்,
அவனை நெருங்கி அவனது நெற்றியை தொட்டுப் பார்க்க,
அவனோ, ஒரு கணம் கண்களை மூடித் திறந்தவன்,
மனதிற்குள், “தெரிஞ்சே உன் மனச காயப்படுத்தப் போறன். என்ன மன்னிச்சுடு பேபி. எப்படியும் நீ என்ன வெறுக்கத் தான் போறாய்?, ஆனாலும் பரவாயில்ல. நீ பாதுகாப்பா இருக்கணும் அது தான் எனக்கு இப்போ முக்கியம்.” என எண்ணிக் கொண்டவன்,
அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு,
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. இது வேற விஷயம்.” என சற்று காட்டமாக கூறியவாறு,
பற்றிய அவளது கைகளை விடாது அவளை அழைத்துக் கொண்டு வந்து,
பால்கனியின் கம்பிக்கு அருகில் நிறுத்தி, அவளது தாடையைத் திருப்பி,
கீழே நின்று கொண்டு இருந்தவர்களைப் பார்க்க வைத்தான்.
தமயந்தியோ, “முதலில் யாரு அங்க நிக்கிறாங்க?” எனப் பார்த்தவள்,
தந்தையைக் கண்டதும், “அப்பா….” என கண்களில் கண்ணீர் ததும்ப அழைத்தாள்.
அதோடு அவளின் பார்வை அடுத்து
அபர்ணாவை நோக்கியும் சென்றது.
தங்கையைக் கண்டவளின் உதடுகள் துடிக்க, தொண்டையைத் தாண்டி, பேச்சு வர மறுத்தது அவளுக்கு.
“அபி செல்லம்.” என் மென் குரலில் அழைத்தவளுக்கு, அவளுக்கு அருகே நின்ற ஆடவன் யார் என்கிற குழப்பம் உண்டானது தான்.
கூர்ந்து பார்த்த போது தான், அது தனக்கு பார்த்த மாப்பிள்ளை ஆதி என்பது புரிந்தது.
உடனே, புருவம் சுருக்கி யோசித்தவள், “இவன் என்ன அபர்ணா கையைப் பிடிச்சுக் கொண்டு நிற்கிறான்?, அவளும் அமைதியா நிக்கிறா?” என எண்ணினாலும்,
அவர்களைக் காணும் ஆவலில் தீரனைத் திரும்பிப் பார்த்து விட்டு,
“அப்பா, தங்கச்சி எல்லாம் வந்து இருக்காங்க. அவங்களுக்கு எப்படி நான் இங்க இருக்கிறது தெரியும்?, நீங்க தான் வர வைச்சீங்களா?, நான் போய் அவங்கள உள்ள கூட்டிக் கொண்டு வரேன்.” என ஓடப் போனவளின் கையை இறுக்கமாக வலிக்கப் பற்றி நிறுத்தியவன்,
“மேடம் எங்க போறீங்க?” என கிண்டலாக கேட்டான்.
அது வரைக்கும் மலர்ந்து இருந்த அவளின் முகம் சட்டென மாறிப் போக,
“அப்பா, தங்கச்சி எல்லாரும் வந்து இருக்காங்க…. அதான்….” என இழுக்க,
“அப்போ நான் யாருடி உனக்கு?” என கேட்டான் தீரன்.
அவனது கேள்வியில் குழம்பிப் போனவள்,
“புரியல தீரன். நீங்க என்னோட கணவன். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“இருக்கே…. மை டியர் பொண்டாட்டி. அவங்க உன்ன என்கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிக் கொண்டு போக வந்து இருக்காங்க. அவங்க பார்வையில பார்த்தா இந்த ராட்சசன் கிட்ட இருந்து உன்ன இரட்சிக்க வந்து இருக்காங்க. இன்னைக்கு இல்ல பொண்டாட்டி, அவங்க போன வாரமே, என்னைப் பத்தி முழு டீடெயில்ஸ்சும் கலெக்ட் பண்ணி, பெரும் படை திரட்டி இங்க வர ரெடியானாங்க. அப்போ நீ மிஸ்ஸா இருந்தாய். அது தான் அவங்களுக்கு ஷாக் கொடுக்க உன்னை நான் மிஸஸ் ஆக்கிட்டன். இனி அவங்களால ஒண்ணும் பண்ண முடியாது.” எனக் கூறி கேலிப் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.
“உன்னை இந்த இடத்தில இருந்தும், என்கிட்ட இருந்தும் யாரும் பிரிக்க முடியாது பொண்டாட்டி.” என அவன் கடைசியில் கூறி முடிக்க,
தமயந்திக்கு, அவன் கூறிய கடைசி வரி மூளைக்குள் ஏறவே இல்லை.
எப்போது அவன், அவள் செல்வதைத் தடுக்க திருமணம் செய்ததாக கூறினானோ,
அப்போதே அவளது மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது.
அவன் கூறி முடித்து விட்டு, அவளைப் பார்க்க,
மலங்க மலங்க விழித்தவள், “அப்போ இதுக்காகத் தான் என்ன அவசரமா கலியாணம் பண்ணிக்கிட்டீங்களா?” என கேட்டாள்.
அவளின் கேள்வியில், “இல்ல…. உன்ன நான் உயிரா நினைக்கிறன். எனக்கு வேற வழி இல்லாம, உன்ன பிரிய முடியாமல்த் தான் கலியாணம் பண்னேன் பேபி.” என கூற தீரனுக்கு வாய் வரை வார்த்தைகள் வந்தாலும் முயன்று,
தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன்,
“ஆமா…. அப்படித் தான். நீ இங்க இருந்து போகக்கூடாது என்கிறது தான் என் நோக்கம்.” என கூறினான்.
அவனின் பேச்சில், அவனை வெறுப்புடன் நோக்கியவள்,
“ஓகே, மிஸ்டர் அரி தீரன் உங்க திமிரோட அளவ நீங்க காட்டிட்டீங்க. அப்போ அதுக்கு நான் பதிலடி கொடுக்க வேண்டாமா?, என்னால தாலியைக் கழட்டி வீச முடியாது தான். ஆனா நீங்க கட்டின தாலியோட என்னோட அப்பா வீட்டுல போய் இருக்க முடியும்.” என கூறி விட்டு வெளியே செல்ல எத்தனிக்க,
அவள் தன்னை முழுப் பெயர் சொல்லி அழைத்ததில் இருந்து பேசி முடிக்கும் வரைக்கும் முகம் இறுகிப் போய் நின்று கொண்டு இருந்தவன்,
அவள் செல்ல ஆரம்பிக்கவும்,
“ஓஹ்…. அப்போ உனக்கு உன் தங்கச்சி மேலயும், அவ புருஷன் மேலயும் அக்கறை இல்ல போலவே?” என எகத்தாளம் நிறைந்த குரலில் கேட்க,
அப்படியே அதிர்ந்து போய் பிரேக் போட்டது போல நின்றாள் அவள்.
“என்னது…. அபர்ணாவுக்கு கலியாணம் முடிஞ்சுதா?” என கேட்டவளின் கால்கள் நடுங்க ஆரம்பித்தது.
அவனோ, உணர்ச்சிகள் துடைக்கப் பட்ட முகத்துடன்,
“யெஸ்…. இங்க பாரு போன வாரம் தான் அவங்க கலியாணமும் நடந்து இருக்கு. அத விட முக்கியம், உன் தங்கச்சிக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகல. இதெல்லாம் நான் போலீஸ்ல சொன்னா எல்லாரும் கம்பி எண்ணனும், அத விட இங்க பாரு…. என்னோட ஆட்கள் உன்னோட அருமை பேமிலிக்கு தெரியாம அவங்கள குறி வைச்சு இருக்காங்க. நான் ஒரு போன் போட்டா போதும், உன்னைத் தேடி வந்தவங்க எல்லாரும் பீஸ் பீஸ் ஆகிடுவாங்க. எப்படி வசதி?” என அசராது கேட்டான்.
“எதுக்காக இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கிறீங்க?, ப்ளீஸ் தீரன் அப்படி எதுவும் பண்ணிடாதீங்க. உங்கள கெஞ்சிக் கேட்குறன்.” என தமயந்தி கை எடுத்துக் கும்பிட,
வேகமாக அவளை நெருங்கி கையை இறக்கி விட்டவன்,
“என்ன பண்றாய் நீ?, எனக்கு நீ செய்ய வேண்டியது எல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். நானே விரும்பித் தான் தீரனைக் கலியாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்லி, அவங்கள நீயே திருப்பி அனுப்பனும். அப்படி செய்தா, உன்னோட பேமிலி மேல சின்ன துரும்பு கூட படாம அவங்க ஊருக்கு போய் சேரலாம். இல்லன்னா…. என்ன நடக்கும்னு நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்ல. எனக்கு ஒண்ணு வேணும்னா நான் அத எப்படியும் நடத்திக் காட்டுவன். அது உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். சோ….” என அவன் இழுக்க,
அவனை விரக்திப் பார்வை பார்த்து விட்டு,
“உங்கள நான் என்னோட அடிமனசுல இருந்து வெறுக்கிறன் தீரன். எனக்கு கடவுள் ஒரு வாய்ப்புத் தந்தா எனக்கு நீங்க பண்றது எல்லாம் நான் கண்டிப்பா திருப்பித் தருவன். நினைவு வைச்சுக் கொள்ளுங்க.” என அழுகையுடன் கூறியவள்,
கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு,
ஒரு முடிவுடன் அபர்ணா, கோடீஸ்வரன் முன்னிலையில் போய் நின்றாள்.
அவர்களோ, ஆளுக்கு ஒரு பக்கமாக வந்து அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு, அவளின் நலம் விசாரிக்க,
உள்ளுக்குள் அழுகை வந்தாலும், வெளியே மென்மையாக சிரித்துக் கொண்டு,
“நான் ரொம்ப நல்லா இருக்கேன் அப்பா. என்னோட புருஷன் என்ன ரொம்ப நல்ல படியாப் பார்த்துக்கிறார்.” என கூற,
“என்னது உனக்கு கலியாணம் ஆயிடிச்சா….” என கோடீஸ்வரன் அதிர்ந்தபடி கேட்க,
அபர்ணாவோ, “அக்கா நீ என்ன சொல்றாய்?”என கேட்டவாறு, தமயந்தியின் கழுத்தை பார்த்தாள்.
கழுத்தில் இருந்த தாலியும், நெற்றியில் இருந்த செந்நிற பொட்டும் அவள் கூறுவது உண்மை என கூற,
அபர்ணாவோ, “அந்த தீரன் பெரிய ரௌடியாமே….
பொல்லாதவனாமே…. அத விட நாம விசாரிக்கும் போது கூட, உனக்கு போன வாரம் வரைக்கும் கலியாணம் நடந்த மாதிரி எந்த நியூஸ்சும் வரலயே அக்கா. இப்போ எப்படி?”என கேட்க,
“அது…. இவ்வளவு நாளும் எங்க இரண்டு பேரோட ஜாதகப் படி கலியாணம் பண்ணக் கூடாதாம். போன வாரம் தான், அந்த கெட்ட காலம் எல்லாம் விலகிடிச்சுன்னு சொன்னாங்க. அது தான் கலியாணம் பண்ணிக்கிட்டோம்.” என கூற,
அபர்ணாவோ, “அப்போ நீ அவர விரும்பித் தான் அவர் கூட வந்தீயா?, ஆனா அவரப் பத்தி இவர்….” என ஆதியைப் பார்க்க,
அவனோ, தமயந்தியையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
தமயந்தியோ, “என் கதை இருக்கட்டும். நீ எப்படி இவர கலியாணம் பண்ணிக்கிட்டாய் உனக்கு தான் இவர பிடிக்காதே….” என மறு கேள்வி கேட்டாள்.
அக்காவின் கேள்வியில், திகைத்துப் போனவள்,
“இல்ல அக்கா, எனக்கும் போன வாரம் தான் கலியாணம் ஆச்சு. நானும் பிடிச்சுத் தான் கலியாணம் பண்ணிக்கிட்டேன்.”என கூற,
இரு பெண்களுக்கும் இடையில் எதுவும் கூற முடியாது திணறிப் போனார் கோடீஸ்வரன்.
ஆதியோ, ஏதோ உந்த நிமிர்ந்து பார்க்க,
அங்கே அவனையே உறுத்து விழித்தபடி நின்று கொண்டிருந்தான் தீரன்.
ஆதியும், ஒரு கூர் பார்வை ஒன்றை வீசி விட்டு,
தமயந்தியை நோக்கி, “உங்க ஹஸ்பண்ட்ட கொஞ்சம் வர சொல்லலாமே. அவர நாங்க பார்த்திட்டுப் போய்டுவம். எங்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். உங்க அப்பாவும், தங்கச்சியும் கூட சந்தோஷப்படுவாங்க.” என கூறினான்.
அவனது பேச்சு மறுக்க முடியாததாக இருக்கவே,
“ம்ம்ம்…. உள்ள வந்து உட்காருங்க. நான் அவர கூட்டிக் கொண்டு வரேன்.” என்றவள், தீரனை அழைக்க சென்றாள்.
கோடீஸ்வரனோ, “என் பொண்ணு, பெரிய இடத்துல தான் ராணி மாதிரி வாழுறா.” என கூறிக் கொள்ள,
அபர்ணாவோ, நடக்கும் எதுவும் புரியாது ஒரு குழப்பத்துடன் அமர்ந்து இருக்க
,
ஆதியோ, ஒரு வித ஆராய்ச்சிப் பார்வையுடன் அமர்ந்து இருந்தான்.
தமயந்தியோ, தீரனிடம் வந்து நின்றவள்,
“நீங்க சொன்னது போல எல்லாம் சொல்லிட்டேன். அவங்க எல்லாரும் உங்களுக்காக காத்துக் கிட்டு இருக்காங்க வர்றீங்களா?” என கேட்டாள்.
அவள் கூறியதில் சற்று யோசித்த தீரன்,
“ஓகே இன்னும் இருபது நிமிஷத்தில வரேன். நீ போய் வந்த விருந்தாளிங்கள கவனி பொண்டாட்டி.” என்றவன்,
அவள் போனதும், தனது பி. ஏக்கு போன் போட்டு, “இன்னும் இருபது நிமிஷத்துக்குள்ள இங்க இருக்கிறவங்கள கிளம்பப் பண்ணனும். அதுக்கு என்ன செய்யணுமோ செய்ங்க.” என கூறி விட்டு,
போனை கையில் வைத்து சுழற்றிக் கொண்டு, ஒரு வித புன்னகை உடன் அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
தீரனின் மனதில் உள்ளது தான் என்ன?
அவனின் நடத்தைகளுக்கு காரணம் என்ன?
ஏன் அவன் அவர்கள் முன் செல்ல விரும்பவில்லை?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.. 🥰🥰
கொஞ்சம் பெரிய எபி தான் மக்காஸ்….
அடுத்த எபி திங்கள் வரும் மக்காஸ் 😍😍😍
அப்புறம் இந்த கதையில பிளாஷ் பேக் தான் ஹை லைட் அது வந்தா கதை முடியும் தருவாய்னு அர்த்தம் ஓகேவா? 🥰🥰🥰
நம்பி படிக்கலாம் மக்காஸ்.
லைக்ஸ் முப்பது போட்டு வைங்க … திங்கள் டபுள் எபியோட வரேன்.
Intresting sis 💞
நன்றி நன்றிடாம்மா 😍😍😍😍🥰🥰🥰🥰