Episode – 38
அப்போது தான் அடுத்த மிகப்பெரிய இடியாக கோடீஸ்வரனின் ஒரு தொழில் மீளவே முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவு நட்டத்தையும் சந்தித்தது.
அந்தத் தொழிலில் பெருமளவான பணத்தை கோடீஸ்வரன் கொட்டி இருக்க,
அந்த தொழிலோ ஆரம்பித்த அடுத்த வருடமே முற்று முழுதாக மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டு இருந்தது.
அதன் மூலம் ஏற்பட்ட நஷ்டமானது அவரை பாரிய சரிவுக்குள்ளும் தள்ளி விட்டது.
அந்த ஒரு தொழிலிலேயே அவர் மிகப்பெரிய அழிவையும், அடியையும் சந்தித்தார்.
அந்த அடியானது அவரது மனதில் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல இருக்கவே,
கடும் கோபத்துடன் ஜோசியரிடம் சென்றவர் நேரடியாக,
“ஏய்ய்…. நீ ஒழுங்கான ஜோசியர் தானே. உன்னால என்னோட மனைவியையும், இரண்டாவது பையனையும் கொலை பண்றதுக்கு நாள் பார்த்து சொல்ல முடியுமா? முடியாதா?, முடியலன்னா சொல்லு நான் வேற யாரையும் பார்த்துக்கிறன்.” என கேட்க,
அவரின் கேள்வியில் ஒரு கணம் உண்மையில் சுய நினைவை இழந்து போய் நின்றார் ஜோசியக்காரர்.
“என்னடா இந்த மனுஷன் இப்படி இருக்கார்?, இத்தனை வருஷத்தில கொஞ்சம் கூடவா அந்தப் பையன் மேல பாசம் வரல?, போற போக்கில என்னையும் சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டார். இது சரி வராது. நாம கொஞ்சம் உஷாரா இருக்கணும். இந்த ஆளு எப்ப என்ன செய்வார்னு தெரியலயே. நம்ம புழப்பு இந்த ஆள் இல்லன்னா எப்படி ஓடும்?, அவரோட மனைவி, மகன் மேல அவருக்கு இல்லாத அக்கறை நமக்கு எதுக்கு?” என மனதிற்குள் பலதும் எண்ணிக் கொண்டு இருந்தார் அவர்.
அவர் யோசனையில் இருப்பதைக் கண்டு அவரின் முன்னால் இருந்த மேசையில் தட்டியவர்,
“பகல் கனவு காணாம எனக்கு ஒரு வழிய சொல்லு ஜோசியரே.” என பல்லைக் கடிக்க,
ஜோசியரும் சற்று யோசிப்பது போல பாவனை செய்து விட்டு, “சரி உங்க மகனோட ஆறாவது பிறந்தநாள் முடிஞ்சு அடுத்த மூணு மாதங்களுக்குள்ள ஒரு நாளுல நீங்க அவங்கள கொலை பண்ணலாம். அதனால உங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் வராது.” என கூறினார்.
அவரின் வார்த்தைகளைக் கேட்டு அப்படி ஒரு சந்தோசம் உண்டானது கோடீஸ்வரனுக்கு.
“துளி அளவு கூட அவள் எனது மனைவி, ஆதி என்னுடைய ரத்தம், என்னுடைய மகவு அவன்.” என அவர் எண்ணவே இல்லை.
அப்படி ஒரு கொடூரமான மனிதனாக அவர் மாறி பல காலம் ஆகி இருந்தது.
தனது மனதை குளிர வைத்த ஜோசியருக்கு, குறித்த பெரிய அமௌன்ட் ஒன்றை கொடுத்து விட்டு வெளியே வந்தவர்,
அடுத்தடுத்த பிளான்களை தன் போக்கில் போட ஆரம்பித்தார்.
அப்போது தான், சரியாக அவரது நண்பன் பரசுராம் போன் பண்ணி கோடீஸ்வரனை சந்திக்க வேண்டும் எனக் கூறி வரச் சொன்னார்.
கோடீஸ்வரனுக்கும் பரசுராமிற்கும் ஒரு நல்ல நட்பு இருந்தது.
இருவரும் தொழில் முறை நண்பர்கள் என்றாலும், அதையும் தாண்டிய பிணைப்பு இருவருக்குள்ளும் இருந்தது.
பரசுராம் யாருக்கும் தீங்கு நினைக்காத நல்ல உள்ளம் கொண்டவர், கொடை வள்ளல், நேர்மையின் மறு உருவம், சாந்தமானவர், நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்.
தனது நண்பன் மிகவும் நல்லவன் என்ற எண்ணத்தில் தான், அவர் கோடீஸ்வரனுடன் பழகிக் கொண்டு இருந்தார்.
ஆனால் கோடீஸ்வரனோ அவருக்கு, முற்றிலும் நேர் மாறாக, பரசுராமிடம் இருக்கும் சொத்துக்களுக்காகவும் அவரிடம் இருக்கும் பணத்துக்காகவுமே நட்பு பாராட்டினர்.
பரசுராமின் மனைவி பார்வதி, குழந்தை இல்லை என கோவில் கோவிலாக ஏறி இறங்கி,
பத்து வருடங்கள் கழித்து, முதல் முறை கர்ப்பம் தரித்து, அடுத்த ஒரு மாதத்திற்குள் அவருக்கு குழந்தை பிறக்க இருந்தது.
பிறக்கப் போகும் அந்தக் குழந்தையின் பெயரில் தனது சொத்துக்களை எழுதி வைப்பது பற்றிப் பேசுவதற்காகத் தான் பரசுராம் கோடீஸ்வரனை அழைத்திருந்தார்.
அதனைப் பற்றிய அறிவுரைகளைக் கேட்டு, சாதக பாதகங்களை ஆராய்ந்து உரையாடி விட்டு,
உற்ற நண்பனாக இருந்து, சொத்தின் அரை வாசியை தனது மகளின் பெயரின் மீது மாற்றி அமைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார் பரசுராம்.
ஆனால் உற்ற நண்பனே தங்களது உயிரை சொத்துக்காக பறிக்கப் போகிறான் என்பது அப்போது அந்த நல்ல மனிதனுக்கு தெரிந்திருக்கவில்லை.
பரசுராமுடன் பேசிவிட்டு வந்த கோடீஸ்வரன், குள்ள நரிப் புத்தியோடு யோசித்து, பல கணக்குகளை தனக்குள் போட்டுக் கொண்டு பரசுராமுடன் தொடர்ந்தும் நல்லவன் போல நட்புடன் பழகினார்.
ஆனால் அவரின் மனதிற்குள், அனைவரையும் சேர்த்து வைத்துப் பழி வாங்குவதற்கான எண்ணங்களே மேலோங்கி நின்றது.
அந்த நாள் சீக்கிரம் வர வேண்டும் என எண்ணிக் கொண்டு,
வெளியில் அமைதி காத்தார் அவர்.
இப்படி நாட்கள் தன் பாட்டில் ஓடிக் கொண்டு இருக்கும் போது தான் ஐந்து வயது முடிந்து ஆதி தனது ஆறாவது வயதில் காலடி எடுத்து வைக்கும் அழகான நாளும் வந்து சேர்ந்தது.
அந்தப் பிறந்த நாளை கண்டிப்பாக பெரிதாகக் கொண்டாட வேண்டும் என தீரன் ஆசைப்பட்டு, பிடிவாதம் பண்ணி, அதன்படி ஏற்பாடும் செய்து இருந்தான்.
தந்தை என்ற முறையில் கோடீஸ்வரனுக்கும் அவன் அழைப்பு விடுத்திருக்க அவருமே அமைதியாக வந்து கலந்து கொண்டார்.
அவரின் அமைதியைக் கண்டு சிவகாமி அம்மாவே,
“ஒரு வேள மனுஷன் திருந்திட்டாரோ?” என எண்ணிக் கொண்டார்.
ஆனால் அவரின் மனதுக்குள் இருந்த கெட்ட எண்ணங்களை அறிந்த ஒருவர் கோடீஸ்வரன் மாத்திரமே.
ஆதியுடனும் மிகவும் சுமூகமான முறையில் நடந்து கொண்டார் அவர்.
அவரின் அந்த மாற்றம் அனைவருக்கும் சற்று நிம்மதியைக் கொடுத்தது என்னவோ உண்மை தான்.
அதன் பிறகு அடிக்கடி, தானாகவே, வீட்டுக்கு வந்து அவர்களுடன் சேர்ந்து உணவருந்தி சிரித்துப் பேச ஆரம்பித்தார் அவர்.
முதலில் சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்த சிவகாமி அம்மாவே, தனது சந்தேகத்தை தூக்கி தூரப் போடும் அளவுக்கு இருந்தது அவரின் நடிப்பு.
“முழுசா மனம் திருந்திட்டார் போல. என்ன இருந்தாலும் அவரும் மனுஷன் தானே.” என எண்ணி கணவனுடன் சிரித்துப் பேச தொடங்கி விட்டார் அவர்.
அவரும் இளகிய மனம் கொண்ட பெண்ணல்லவா.
ஆதியும் ஆரம்பத்தில் தந்தையை விட்டு ஒதுங்கி இருந்தவன்,
அவர் சிரித்துப் பேசவும் மெல்ல மெல்ல அவருடன் ஒட்டிக் கொண்டா ன்.
தீரனுக்கு தான் அவரது அதிரடி மாற்றத்தை சட்டென ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு கண்காணிக்கும் பார்வையை அவரின் மீது வைத்திருந்தாலும் அவனுமே சுமூகமாக அவருடன் பழக ஆரம்பித்தான்.
இப்படி அவர் பழக ஆரம்பித்து மூன்று கிழமைகள் கழித்து ஒரு காலை வேளையில் பரசுராமிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது.
அவர்களின் மகாலட்சுமி, குட்டி இளவரசி, பூமகள் பூமியில் உதித்து விட்டாள் என கூறுவதற்கான அழைப்புத் தான் அது.
சந்தோஷமாக, “தனக்கு மகள் பிறந்திருக்கிறாள், அவளுக்கு தமயந்தி என்று பெயர் வைக்கலாமென முடிவு பண்ணி இருக்கிறேன்.” என கூறியவரின் பேச்சில் கண்கள் பளபளக்க சிரித்துக் கொண்ட கோடீஸ்வரன்,
அடுத்த நாளே மனைவியையும், பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சென்று அழகான பூக் குவியலைப் போல இருந்த பெண் குழந்தை தமயந்தியைப் பார்த்து விட்டு வந்தார்.
அழகான ரோஜா பூப் போல இருந்த குழந்தையைக் கண்டதும் தீரனின் கண்களில் புதிதான ஒரு வித கனிவும், உதடுகளில் மென் கீற்றுப் புன்னகையும் உருவாகி மறைந்தது.
அதன் பின்பு, சரியாக ஒன்றரை மாதங்கள் கடக்கும் வரைக்கும், அனைவரின் வாழ்க்கையும் தெளிந்த நீரோடை போலத் தான் சென்றது.
அதற்கு வந்த அடுத்த கிழமை பரசுராம், தான் ஏற்கனவே பிளான் பண்ணிய படி சொத்தை தனது குட்டி இளவரசியின் பெயருக்கு எழுதி வைத்ததோடு, அந்த சொத்து அவளின் பதினெட்டு வயதிற்கு பிறகு அவளது முழு உரிமை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த சொத்துப் பதிவு கோடீஸ்வரனின் சாட்சி கை எழுத்துடன் நன்றாகவே நடந்து முடிந்தது.
அதே கிழமையின் வார இறுதி நாளில், பரசுராம் குடும்பத்தை, தமது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்து இருந்தார் கோடீஸ்வரன்.
அவரின் அழைப்பை ஏற்ற, பரசுராமும் ஞாயிற்றுக் கிழமை நாளில் கோடீஸ்வரனின் வீட்டிற்கு குடும்பமாக சென்று விருந்து உண்டு மகிழ்ந்தார்.
அந்த நிகழ்வின் மூலம், பார்வதிக்கும், சிவகாமி அம்மாவுக்கும் அப்படி ஒரு நட்புறவும் உருவாகி இருந்தது.
அதே போல சிவகாமியம்மா பரசுராமை அண்ணா என்று அழைத்ததுடன்,
தமயந்தியை தீரனிடம் சுட்டிக் காட்டி,
“தீரா, நீ வளர்ந்ததும் இவளைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பாரு எவ்வளவு கியூட்டா இருக்காடா. இப்பவே சொல்றேன் அண்ணா, இவ என்னோட மூத்த பையனுக்கு தான்.” என கூற,
பரசுராமும், “நீ சொன்னா ஓகே தான் தங்கச்சி. அவங்க முதல்ல வளரட்டும்மா. அப்புறம் பார்த்துக்கலாம்.” என பதிலுக்கு கூறி முடித்தார்.
அவரின் பேச்சை பார்வதியும், ஏற்றுக் கொண்டார்.
தீரனுக்கு அன்னையின் பேச்சில் முதலில் சிரிப்பு வந்தாலும்,
அவரின் புன்னகை நிறைந்த முகத்திலும், பூரிப்பிலும் தானும் மகிழ்வு கொண்டவன்,
அவருக்காக மாத்திரம் தலையாட்டி வைத்தான்.
ஆனாலும், அவனது மனதிற்குள் அன்னையின் வார்த்தைகள் அப்பொழுதே ஊடுருவிச் சென்று ஆழமாக பதிந்து போய் இருந்தது.
ஒரே ஒரு நொடி மாத்திரம், அந்தக் குழந்தையைக் கூர்ந்து பார்த்தவன்,
தலையை உலுக்கி விட்டு ஆதியுடன் நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தான்.
இப்படித்தான் அந்த விருந்துப் பொழுது முழுவதும் கழிந்தது.
அவர்களுக்குள் ஆழ்ந்த பிணைப்பு ஒன்றும் உருவாகி இருந்தது.
கோடீஸ்வரன் எதிர்பார்த்ததும் அதனைத் தானே.
அவரின் எண்ணப் படியே தான் அனைத்தும் நடந்து கொண்டு இருந்தது.
அடுத்தடுத்த நாட்களும் இப்படியே நகர்ந்து போக, சரியாக மூன்று வாரங்கள் கடந்ததும்,
தமயந்தியை, குல தெய்வ கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும், அங்கு முதலாவது மொட்டை போட வேண்டும். என பரசுராம் ஆசைப்பட்டதுடன், அந்த நிகழ்வுக்கு, கோடீஸ்வரன் குடும்பத்தையும் அழைத்தார்.
“இப்படி ஒரு நாள தானே நான் எதிர் பார்த்தன்.” என மனதிற்குள் கறுவிக் கொண்டவர்,
கொடூரமான பிளான் ஒன்றையும் போட்டு முடித்தார்.
அவரைப் பற்றி எதுவும் அறியாத அப்பாவி குடும்பம், அந்த ட்ரிப்பிற்கான பிளானை, அவ்வளவு சந்தோஷத்துடன் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள் யாருக்கும் தெரியாது, தீரனையும், தமயந்தியையும் தவிர மீதி உள்ள அத்தனை பேரையும் கொல்லும் திட்டத்தை பக்காவாக போட்டு முடித்து இருந்தார் கோடீஸ்வரன்.
தம்முடன் கூட இருக்கும் ஒரு நய வஞ்சகனால், தமக்கு உயிர் ஆபத்து வரப் போகின்றமையை அறியாமல், அந்த நாள் முடிவதற்குள் தமக்காய் மரண தூதன் காத்து இருப்பதை அறியாமல், மிகுந்த சந்தோசத்துடன் அந்தப் பயணத்தை ஆரம்பித்து இருந்தனர் பரசுராம் குடும்பத்தினர்.
அவர்களுக்கு காத்து இருக்கும் ஆபத்து என்ன?
தீரனுடன், ஆதியும் சேர்ந்து எப்படி தப்பினான்?
தமயந்தி மாத்திரம் எப்படி கோடீஸ்வரன் கைகளில் சிக்கிக் கொண்டாள்?
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
அடுத்த எபியுடன் பிளாஷ் பேக் முடிஞ்சுடும் மக்காஸ்….
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ்.
படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க..
Super sis 💞
நன்றி நன்றிம்மா 😍😍😍😍😍💖💖💖