Episode – 41
ஒரு மாதம் கழித்து, ஆதியின் காயங்கள் ஆறியதும், அவனது முகத்தில் இருந்த கட்டு அவிழ்க்கப் பட்டது.
அப்போது, அவனது முகத்தில் இருந்த தழும்புகளையும், வடுக்களையும் கண்டு துடித்துப் போனான் தீரன்.
ஆனாலும் முடிந்த வரையும் அதனை வெளிக் காட்டாது மறைத்துக் கொண்டவன், தம்பிக்கு தாயாக மாறிப் போனான்.
ஆதிக்கு கண்ணாடியை காட்டவே அஞ்சிப் போனான் அவன்.
ஆனால் ஆதியோ, பிடிவாதமாக கண்ணாடியை வாங்கிப் பார்த்தவன், ஒரு கணம் கலங்கிப் போனாலும், அடுத்த கணம், அந்த தழும்புகளை வருடிப் பார்த்து விட்டு “எனக்கு என்னோட அப்பா கொடுத்த வாழ்நாள் பரிசு. மறக்க முடியாத ஒரு பரிசு இல்ல….” என கூற,
அவனையே கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்த தீரனுக்கு அவனின் குரலில் இருந்த கோபம், மற்றும் வன்மம் நன்றாகவே புரிந்தது.
அவனது ஆக்ரோஷம், வயதுக்கு பொருத்தமானது இல்லை என எண்ணியவன்,
“ஆதி, இங்க பாரு. இன்னும் ஒரு கிழமையில உனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாம்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. அதனால இத பத்தி அதிகமா யோசிச்சு கவலைப்படாத. சீக்கிரம் உன்னோட முகம் பழையது போல மாறிடும்.” என கூறினான்.
அண்ணனின் பேச்சில் திடமாக இல்லை என்பது போல தலையாட்டியவன்,
“இந்தத் தழும்பு என் முகத்தில இருக்கணும் அண்ணா. அப்போ தான் எனக்கு சில விஷயங்கள் மறக்காது இருக்கும். நான் பெரியவன் ஆனதும் செய்ய வேண்டியவைகளுக்கு இந்த தழும்பு தான் எனக்கு புது உத்வேகத்த கொடுக்கப் போகுது.” என கூற,
அவனின் பிடிவாதம் கண்டு சதா சிவம் கூட ஒரு நொடி அசந்து தான் போனார்.
இரு சிறுவர்களும் தங்களின் செயல்களால் அவரை வியக்க வைத்துக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் இருவரின் பக்குவம் கலந்த வேகம், அவரின் மனதை தொட்டது.
ஆதியின் அருகே வந்து, அவனது தலையை வருடியவர்,
“இங்க பாருப்பா, கொஞ்சம் பொறுமையா இரு. நீ நினைச்சது எல்லாம் செய்ய காலம் இருக்கு, நீ முதல்ல வளரணும். அப்புறமா எல்லாம் பார்த்துக்கலாம். இப்போ உன் முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்.”என கூறினார்.
அவன் அப்போதும் இல்லை என அடம் பண்ண,
கடைசியில் தீரன், “உனக்கு இந்த அண்ணா மேல கொஞ்சமாவது மரியாதை இருந்தா…. இந்த டிரீட்மென்ட்ற்கு ஒத்துக்கோ.” என கூறி விட,
சற்று கலங்கிப் போன ஆதி, யோசித்து விட்டு,
“ஓகே அண்ணா, நான் நீங்க சொன்னது போல டிரீட்மென்ட் ற்கு ஒத்துக்கிறன். ஆனா ஒரு குட்டி வேண்டுகோள் இருக்கு.”
“ம்ம்ம்…. சொல்லு ஆதி.”
“எனக்கு அந்த ஆள் நினைவு தொடர்ந்தும் இருக்கணும்னா…. எரியும் நெருப்பு அணையாம இருக்கணும்னா. ஒரே ஒரு தழும்பு மட்டும் என் முகத்தில தொடர்ந்து இருக்கணும் அண்ணா ப்ளீஸ்.”
“என்னடா ஆதி, நீ இப்படி அடம் பண்றாய்?” என தீரன் சலித்துக் கொள்ள,
இடையில் புகுந்த சதா சிவம், “அவன் உனக்காக இறங்கி வர்றான் தானே தீரா. நீ அவனுக்காக விட்டுக் கொடுக்கிறதுல எந்த தப்பும் இல்ல.” என கூறினார்.
அவரின் பேச்சைக் கேட்டவன், “ஓகே அப்பா. ஆதி நீ விரும்பினபடியே செய்திடலாம். ஓகேவா இப்போ நீ ஹாப்பியா?” என கேட்டான்.
அவனும் விரிந்த புன்னகை உடன,
“ஓகே அண்ணா. ரொம்ப ரொம்ப ஹாப்பி.” என கூறினான்.
அதற்கு அடுத்து வந்த கிழமையில், ஆதிக்கு, அவன் விருப்பப் படியே, குறித்த ஒரு தழும்பை மாத்திரம் விட்டு விட்டு மீதிக்கு பிளாஸ்டிக் சர்ஜ்ரி நடந்து முடிந்து இருந்தது.
அதன் பிறகு, இருவரும் பயணத்தை சென்னையில் இருந்து கேரளா நோக்கி, தமது தந்தை சதா சிவத்துடன் ஆரம்பித்தனர்.
அங்கு சென்றதும், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அங்குள்ள ஒரு இல்லத்தில் சேர்த்து விட்டார் சதாசிவம்.
அப்போதும், அவர் அவர்களுக்காக தேடியது என்னவோ, மிகவும் வசதியான ஒரு இல்லம் தான்.
ஆனால் அப்போதும் அதனை திடமாக மறுத்த தீரன், சாதாரணமான ஒரு இல்லத்தில் சேர்த்து விட சொன்னான்.
அவர் எவ்வளவு தூரம் சொல்லியும், அவன் இறங்கி வரவே இல்லை.
அங்கேயே தம்பியுடன் தங்கிப் படித்து, வளர ஆரம்பித்தான்.
இங்கு நிலைமை இப்படி இருக்கும் போது, அந்த ஒரு மாதத்தில், மிஸ்டர் கோடீஸ்வரனின் வாழ்க்கையில் நடந்தவற்றை நாம் ஆராய வேண்டாமா?
கொஞ்சம் அங்கயும் போய்ட்டு வருவம்.
அந்த கிரிமினல் புத்தி உடையவர், தனக்கு ஏற்றது போல கதையை மாற்றிக் கொண்டார்.
ஆம், அனைத்தும் முடித்து விட்டு, சந்தோசமாக வீட்டுக்கு வந்தவர், தனது ஆட்களை தலை மறைவாக சொல்லி விட்டு,
ஒரு மணி நேரம் கழித்து நேராக போலீஸ் ஸ்டேஷன் போய், தனக்கு பின்னால் வந்த தனது நண்பனின் வண்டியைக் காணவில்லை என்றும், போன் பண்ணினாலும் அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை எனவும் கூறியவர், அதோடு சேர்த்து, தனது மனைவி மற்றும் மகன்கள் இருவரும் அந்தக் காரில் தான் வந்ததாகவும் கூறி நீலிக்கண்ணீர் வடிக்க,
அவரின் அழுகையை நம்பியவர்களும், தாங்கள் கண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்தனர்.
அவர்களின் உறுதியைக் கண்ட கோடீஸ்வரனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும், வெளியே விறைப்பாகவே நின்று கொண்டு இருந்தார்.
அடுத்த அரை மணி நேரத்தில், அவர்களின் கார் எரிந்து சாம்பலான செய்தி வந்து சேரவே,
அதனை ஏதோ முதலில் கேட்பது போல, பதறித் துடித்து அழுதார் கோடீஸ்வரன்.
ஆனால் ரிப்போர்ட்டில், மூவர் மட்டுமே இறந்து இருக்கிறார்கள், அவர்களைத் தவிர இரு சிறுவர்களின் உடல்களும் இல்லை என வந்தது. ஆனால் அதனைப் பற்றி கொஞ்சம் கூட அவர் கவலை கொள்ளவில்லை.
“பெரிசுகளே போய்ட்டாங்க. இந்த கடுகு எல்லாம், எம்மாத்திரம்?, இந்த போலீஸ் எல்லாம் சுத்த வேஸ்ட். எத தான் ஒழுங்கா கண்டு பிடிச்சு இருக்காங்க. இத கண்டு பிடிக்க. ஹ்ம்ம்….” என உள்ளுக்குள் எண்ணிப் பெரு மூச்சு விட்டுக் கொண்டவர்,
வெளியில், “சார் ப்ளீஸ், எப்படியாவது என்னோட பசங்கள காப்பாத்துங்க. என்னோட நண்பரின் மகள் இப்போ என்கிட்ட தான் இருக்கா. அவள நானே வளர்த்துக்கிறன்.” என நல்லவர் போல நாடகம் ஆடி, எல்லாரையும் ஏமாத்தி, தன்னை ஒரு அப்பாவி போல காட்டிக் கொண்டு தப்பித்து கொண்டார் அவர்.
அதோடு, தமயந்தி எனும் பொன் மகள், வளர்ந்து வந்து தனக்காக பண மழை கொட்டப் போகிறாள் என முடிவு செய்தவர், தமயந்தியை தங்கத் தட்டில் வைத்து தாங்க ஆரம்பித்தார்.
அதிலும், அந்தக் குழந்தைக்கு பழைய நினைவுகள் எதுவும் வரக்கூடாது. அவளைப் பொறுத்த வரைக்கும், தான் மட்டும் தான் அவளுக்கு உறவு, தந்தை என நிரூபிக்க, வைத்தியரின் உதவியை நாடி, அதனையும் தனக்கு ஏற்றது போல மாற்றிக் கொண்டார் அவர்.
ஆக மொத்தம் ஒரு பணப் பிசாசு மூலம், மொத்தப் பேரின் வாழ்க்கையும் சிதைந்து போனது.
மறு பக்கம், தனக்கு இருபது வயது வரும் வரைக்கும், இல்லத்தில் வளர்ந்த தீரன், அதற்குப் பிறகு, சதாசிவத்தின் வேண்டு கோளின் படி அவருடன் சென்று தங்கிக் கொண்டான்.
ஒரு கட்டத்தில், சென்னையில் கோடீஸ்வரன் என்ன செய்கிறார்?, அவரின் வளர்ச்சி இப்போ எந்த நிலையில் இருக்கிறது?, அவரை எப்படி வீழ்த்துவது என எண்ணியவன்,
ஆதியின், வக்கீல் படிப்புக்காகவும், கோடீஸ்வரனை கண்காணிக்கவும் என இரண்டுக்கும் சேர்த்து, அவனை சென்னைக்கு அனுப்பி வைத்தான்.
அவனுக்கு சதாசிவத்தை தவிர கிடைத்த இரு நல்ல உறவுகள் தான் பார்கவ் மற்றும் சிவகாமி அம்மா.
சிவகாமி அம்மாவை அவரின் பெயருக்காகவே, தன்னுடன் வைத்துக் கொண்டவன்,
நாட்களின் போக்கில் அவரை தனது அன்னையாகவே நினைத்து பழக ஆரம்பித்தான்.
அவனின் மனதின் ஆழத்தில் எப்போதும் தமயந்தியின் எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.
ஆனாலும் தனது வேலைகளின் நடுவே அவளின் நினைவுகளை முயன்று ஒதுக்கி வைத்தான் அவன்.
ஆதியை சென்னைக்கு அனுப்பியவன், முதலில் அறிய விரும்பிய விடயம் அவளைப் பற்றியது தான்.
ஆனால் சென்னைக்கு சென்ற ஆதி கூறிய விடயங்கள் இன்னும் அவனைக் குழப்பியது.
தமயந்தியை கோடீஸ்வரன் தாங்கு தாங்கு என தாங்குகின்றார் எனவும், அவளும் அவருடன் அப்பா…. அப்பா…. என அட்டாச் ஆக இருப்பதகாவும் கூறினான் அவன்.
அதை விட அவளுக்கு ஒரு தங்கை இருப்பதாக அவன் கூறும் போது தான் அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்தான் தீரன்.
“எப்படி இது சாத்தியம்?, வேற யாரையும் கலியாணம்….” என தீரன் ஆரம்பிக்க,
“இல்ல பாய், அவருக்கு இன்னொரு கலியாணம் எல்லாம் ஆகல. ஆனா இரண்டு பொண்ணு இருக்கு.” என கூறவும்,
“சே…. அவர் எல்லாம் ஒரு ஆளுன்னு அவருக்கு இரண்டு பொண்ணுங்க. கேட்கவே சிரிப்பா இருக்குடா. உண்மையா இரண்டு பசங்க நாங்க இரண்டு பேர் இங்க இருக்கம். ஆனா டூப்ளிகேட் பொண்ணுங்க இரண்டு பேர் கூடவும் அவர் பாச வாழ்க்கை வாழுறார்.” என கூற,
“அண்ணா, அது பாச வாழ்க்கை இல்ல. வேஷ வாழ்க்கை அண்ணா. நான் எல்லாம் விசாரிச்சு இரண்டாவது பொண்ணு எப்படி வந்தா என்கிற உண்மைய உங்களுக்கு சொல்றேன் அண்ணா.”
“அவரோட தொழில் இங்க கொடி கட்டிப் பறக்குது. மனுஷன் வாழுறார்அண்ணா.”
“ஓஹ்…. இனி அவர வீழ்த்துறதும், அந்த இரண்டு பொண்ணுங்கள காப்பாத்துறதும் தான் நம்ம வேலடா. அவர் கொடி இனி பறக்காது. மொத்தமா மூடு விழா நடத்திடலாம். ஆனா ஆதி, நீ என்ன கேட்காம எந்த முடிவும் தனியாக எடுக்க கூடாது புரிஞ்சுதா?” என எச்சரிக்கையாக கூறியும் இருந்தான் தீரன்.
அதன் பிறகு ஒவ்வொரு தகவல்களாக சேகரிக்க ஆரம்பித்தான் ஆதி.
அவன் சேகரித்து கொடுத்த தகவல்களை வைத்து, தீரன் ஆடிய ஆட்டம் தான் மிகுதி நடந்தது முழுவதும்.
அனைத்தையும் கூறி முடித்தவன், தமயந்தியை ஒரு கணம் ஆழ்ந்து பார்க்க,
அவளோ, கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அங்கே உடைக்கப் பட்டது உண்மைகள் மட்டும் இல்லையே.
இரு அன்பு கொண்ட உள்ளங்களும் அல்லவா.
“தனது பெற்றோரை பிளான் பண்ணி அழித்தவனிடமே இவ்வளவு நாளும் வளர்ந்து இருக்கிறோம். ஏறத்தாழ இருபது வருடங்கள் ஒரு கயவனிடம் ஏமாந்து இருக்கிறோம்.” என எண்ணியவளுக்கு மூச்சு எடுக்கவே சற்று சிரமமாக இருந்தது.
அவளின் நிலையைப் புரிந்து கொண்டவர்கள் போல, அனைவரும் அமைதியாக நின்று கொண்டு இருந்தனர்.
சற்று நேரம் கழித்து, ஒரு கேவல் தமயந்தியிடம் இருந்து வெளிப் பட,
அடுத்த நொடி வெடித்து அழ ஆரம்பித்தாள் அவள்.
அபர்ணா ஓடிச் சென்று அவளைத் தாங்கிப் பிடித்து,
“அக்கா ப்ளீஸ் அழாத.” என சமாதானம் பண்ண,
ஒருவாறு தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள் தமயந்தி.
அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த தீரன், ஒரு கணம் கண்களை மூடித் திறக்க,
ஆதியோ, “அழாதீங்க அண்ணி. இதில உங்க தப்பு எதுவும் இல்ல. அவர பத்தி உங்களுக்கு தெரியாது தானே. ப்ளீஸ் அண்ணி உங்கள நீங்களே வருத்திக் காதீங்க.” என கூற,
அவளும், “ம்ம்ம்….” என கூறியவள்,
தீரனைப் பார்த்து, “அப்போ….” என ஆரம்பித்து மீதியை கேட்கும் முன்பாகவே,
கை நீட்டித் தடுத்து விட்டு, தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தான்.
“தமயந்திய வளர்க்கும் போது, அவர் புதுசா ஆரம்பிச்ச தொழில் ஒன்னு, அமோகமா செல்ல ஆரம்பிச்சு இருக்கு. அதனைத் தொடர்ந்து, அவர் தொட்ட தொழில்களில் எல்லாம், அவருக்கு வெற்றி தான் கிடைச்சுது.”
அதனை, அவர் தமயந்தியால் வந்த அதிஷ்டம் என எண்ணினார். அவருக்கு ஜிங் ஜாக் போடத் தான் ஒரு ஜோசியர் இருக்காரே.
அவரும், “ஆமா தமயந்தியால வந்த அதிஷ்டம் தான்.” என உறுதியாக கூறி விட,
அதற்கு பிறகு கோடீஸ்வரனைக் கேட்கவும் வேண்டுமா?.
தலை, கால் புரியாது, சந்தோஷத்தில் திளைத்தவர்,
தமயந்தியைக் கொண்டாட ஆரம்பித்தார்.
உண்மையில், அவர் மனைவி, பிள்ளைகளை இழந்ததும், நண்பனின் மகளை தன் மகள் என கூறி வளர்ப்பதும் தான் அவருக்கு பரிதாபத்தையும், நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது.
அதனாலேயே ஆர்டர்கள் அவரைத் தேடித் தேடி வந்தது.
அதோடு, அவரின் பிள்ளைகளின் இறந்த உடல்கள் கிடைக்கவில்லை என போலீஸ் கேஸ் நடந்து கொண்டு இருந்ததால், அவரால் பழையபடி, அடிக்கடி தனது பங்களாவிற்கு செல்ல முடியாது போனது.
ஆகவே ஆடம்பர செலவுகள் குறைந்தது.
வருமானமும் பெருக ஆரம்பித்தது.
இலாபமும் பெருகியது.
இது தான் நடந்த விடயம்.
ஆனால் அந்த முட்டாள் தான் ஜோதிடத்தில் மூழ்கி இருந்தாரே. அதற்கு பிறகு எப்படி மூளை வேலை செய்யும்?
இப்படி இருக்கும் போது தான், இரண்டு வருடங்கள் கழித்து,
வழக்கம் போல, கோடீஸ்வரன் ஜோசியம் கேட்கப் போகும் போது, அந்த ஜோசியர் புதுசா ஏதும் சொல்ல வேண்டும் என எண்ணி,
“இன்னும் ஒரு பெண் குழந்தையை இப்படி நீங்க தத்தெடுத்து வளர்த்தால் நீங்க தான் இந்த இடத்தில நம்பர் ஒன் பணக்காரன்.” என கூறியதோடு,
அந்தக் குழந்தை என்ன ராசி, என்ன நட்சத்திரத்தில் இருக்க வேண்டும் எனவும் கூறி முடித்து விட,
சாத்தான் மூளை கொண்ட கோடீஸ்வரன், மறுபடியும் பிளான் போட ஆரம்பித்தார்.
ஆமாம், அடுத்து அவர் சல்லடை போட்டு தேடி எடுத்த பெண் குழந்தை பொக்கிஷம் தான் அபர்ணா.
“அதுவும் சும்மா இல்ல….” என கூறிய தீரன்,
சற்று இடைவெளி விட்டு, சொன்ன செய்தியில் அபர்ணா மொத்தமும் அதிர்ந்து போய் எழுந்து நின்றாள்.
அப்படி தீரன் என்ன சொல்லி இருப்பான்?
இனி தமயந்தி மற்றும் அபர்ணா இருவரும் எடுக்கப் போகும் முடிவு என்ன?
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
அடுத்த எபியுடன் பிளாஷ் பேக் முடிஞ்சுடும் மக்காஸ்….
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். இன்னும் சில எபிகள் தான் இருக்கு..
படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க மக்காஸ் 😍😍
அனைவருக்கும் இனிய முன் கூட்டிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்காஸ்.
வரப் போகும் புது வருடம் உங்கள் அனைவருக்கும் பயன் தரும் புதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
நல் எண்ணங்கள் யாவும் ஈடேற வேண்டும்.
அனைத்துக்கும் சேர்த்து அன்பான வாழ்த்துக்கள் மக்காஸ்.
Super sis 💞