Episode – 42
ஆம் தீரன் கூறியது அப்படியான ஒரு விடயம் தான்.
அபர்ணா, பிறந்ததும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் தான்.
ஆனால் பிறக்கும் போதே அவளின் அன்னை இறந்து விட்டார்.
அபர்ணாவிற்கு மூன்று அக்காக்களும், ஒரு அண்ணனும் உண்டு.
மனைவி இறந்ததும், “இவளால தான் சாரோட மனைவி விட்டுப் போனா. இந்தப் பெண் குழந்த பிறந்த நேரம் தான் எல்லாத்துக்கும் காரணம். இவ ஒரு ராசி இல்லாதவ, அதிஷ்டம் கெட்ட குழந்தை, பிறந்த உடனே தாய முழுங்கிட்டா. இத்தன குழந்தைகள் பிறந்த பிறகும் கம்பு மாதிரி இருந்த மனுஷிய இவ கொன்னுட்டா….” இப்படி பல கதைகள் அபர்ணாவை சுற்றி வலம் வர ஆரம்பித்தது.
அன்னையின் இறப்புக்கு ஒன்றுமே தெரியாத குழந்தையை பலிகடாவாக்கி அந்தக் குழந்தையின் பிறப்பை வைத்து விமர்சனம் செய்யும் கூட்டம் இன்னும் இந்த உலகத்தில் ஏராளம் இருக்கத் தான் செய்கிறது.
மற்றவர்களின் வாழ்க்கையை அலசும் கூட்டத்திற்கு பெரிய மனிதனும் ஒன்று தான், சின்னக் குழந்தையும் ஒன்று தான்.
அவர்களின் வாய்க்கு அவல் கிடைத்தால் மட்டும் போதும். அது எந்த அவலாக இருந்தால் என்ன?
இப்படி பல பேர் இருப்பதால் தான் நிறைய குடும்பங்கள் நாசமாகிப் போய்க் கொண்டு இருக்கின்றது.
இங்கும் அதே பழைய பஞ்சாங்க கதை தான் நடந்து கொண்டு இருந்தது.
சும்மா குழந்தை அபர்ணா மீது பழியைப் போட்டுக் கொண்டு இருந்தனர்.
அந்தப் பால் மணம் மாறாத குழந்தை மீது, படு கேவலமாக, மனசாட்சி இல்லாது பழிகளை அடுக்கிக் கொண்டே போக,
எங்கே, இப்படியே போனால், ஒரு வேளை மற்றைய பிள்ளைகளின் மனதிலும் அந்த விஷச் செடி வளர்ந்து, அபர்ணாவை வெறுத்து ஒதுக்கி விடுவார்களோ என அஞ்சிப் போன, அவளின் பாசக்கார தந்தை,
அனைவரும் அறியும் வண்ணம், தனது சொத்துக்களின் அரைவாசியை, அபர்ணா மீது எழுதி வைத்தார்.
அவரின் செயல், பேசிய பாதிப் பேரின் வாயை மூட வைத்தது.
இருந்தாலும், மீதி உள்ளோர் தொடர்ந்தும் பேசிக் கொண்டு இருக்க,
அதற்கு மேலும் அந்த ஊரில் இருக்க வேண்டாம் என முடிவு பண்ணியவர்,
இரவோடு, இரவாக அந்த ஊரை விட்டு, அருகில் இருந்த ஊரிற்கு குடிபெயர்ந்து விட்டார்.
அவர்கள் வந்து குடியேறிய இடம் கோடீஸ்வரன் வசிக்கும் அதே இடம் தான்.
விதியின் சதி அங்கு தான் ஆரம்பம் ஆகியது.
ஏற்கனவே, அந்த பிணம் தின்னிக் கழுகு மனிதன், எப்படி இன்னொரு பெண் குழந்தையை கண்டு பிடிப்பது?, எப்படி சொத்தை இன்னும் பெருக்குவது என எண்ணிக் கொண்டு இருக்க,
சரியாக அவருக்கு வாய்த்தது அந்த வாய்ப்பு.
அபர்ணாவின் தந்தை அந்த இடத்திற்கு வந்ததும்,
தனது பிஞ்சு மகளின் ஜாதகத்தை, காண்பித்து ஏதும் பரிகாரங்கள் செய்ய விரும்பினார்.
அதன்படி, அவர் தேடி சென்ற ஜோசியர் வேறு யாரும் இல்லை.
சாட்சாத் கோடீஸ்வரனின் ஆஸ்தான ஜோசியரே தான்.
அந்த மனிதர் அங்கு சென்று ஜாதகத்தை காட்டிய அடுத்த நொடி, கண்கள் பளிச்சிட அவரை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்து விட்டு,
“இந்தக் குழந்தை ஜோகக் காரக் குழந்தை. இது வாழ வேண்டிய இடமே வேறு….” அப்படி இப்படி என வாய்க்கு வந்தது எல்லாம் கூறியவர்,
அபர்ணாவின் தந்தை சற்று சந்தோஷப் படவும், அவரின் முகத்தை வைத்து இன்னும் சில விடயங்களைக் கூறி விட்டு,
“அப்புறம் சார், நீங்க ஊருக்கு புதுசா?, உங்கள நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே. இங்க எங்க தங்கி இருக்கீங்க?, உங்களோட மனைவி என்ன பண்றாங்க?, இந்தக் குழந்தைய தவிர வேற பசங்க இல்லையா உங்களுக்கு?” என கேள்வி மேலே கேள்விகள் கேட்டுக் குடைந்தவர், நல்லவர் போல நடிக்க,
அபர்ணாவின் தந்தையும், மனதில் உள்ள பாரம் நீங்கும் மட்டும், புலம்பித் தள்ளியவர், மடை திறந்த வெள்ளமாக அனைத்தையும் கூறி இருந்தார்.
அவருக்கு யாரிடமாவது தனது கஷ்டத்தை சொல்ல வேண்டும் என்ற உந்துதல். ஜோசியர் தானே…. என எண்ணி அனைத்தையும் கூறி விட்டார்.
ஆனால், அவர் கூறிய விடயங்களில் தனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்ட அந்த கேவலமான, குரூர எண்ணம் கொண்ட ஜோசியர், உள்ளுக்குள் இந்த விடயத்திற்கு எவ்வளவு பணம் வாங்கலாம் என கணக்குப் போட்டுக் கொண்டு இருந்தார்.
இந்த இடத்தில் தான் அபர்ணாவின் தந்தை தவறு இழைத்தார்.
கவலைகளை கூறத் தெரிந்த அவருக்கு யாரிடம் கூறுவது என புரியாது போனது தான், பெரும் பிரச்சனையாகிப் போனது.
நம் வாழ்விலும், நம்மை சுற்றி இருக்கும் பலர் இந்த வகையினர் தான்.
சோகத்தைக் கேட்கிறோம், ஆறுதல் கூறுகிறோம் என கூறி எம்மிடம் நெருங்கி வந்து பேசி, எமது சோகத்தில் குளிர் காய்ந்து விட்டு செல்வார்கள்.
ஆகவே நாம் தான், எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், மனதை தெளிவாக வைத்து இருக்க வேண்டும்.
( இடையில ஒரு குட்டிக் கருத்து மக்காஸ்..)
அபர்ணாவின் தந்தையின் மனம் குளிரும் படி, நாலு வார்த்தைகள் கூறி அனுப்பி விட்ட அந்த ஜோசியர்,
அவர் போனதும், அடுத்த நொடியே போன் பண்ணி, விடயத்தை கோடீஸ்வரனிடம் கூறியவர்,
“சார், இனி உங்க பாடு. விஷயத்தையும் சொல்லிட்டன், ஆளையும் கண்டு பிடிச்சுக் கொடுத்துட்டன். அந்தப் பாப்பாவை உங்க கிட்ட கொண்டு வர்றது இனி உங்க பொறுப்பு. யோசிச்சு காய் நகர்த்துங்க. அவங்க இப்போ தங்கி இருக்கிற வீட்டு அட்ரஸ்….” என அதையும் கூறியவர்,
“சார், அப்புறம்….” என இழுக்க,
“இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லி இருக்கீங்க ஜோசியர். கவனிக்காம விடுவானா? உங்களுக்கு தேவையானது உங்க வீடு தேடி வரும். கவலைப் படாம இருங்க. வேலை முடிஞ்சதும் நானே உங்களுக்கு தகவல் சொல்றேன். இனி அந்த அபர்ணா பாப்பா, அவ சொத்து எல்லாம் இந்த கோடீஸ்வரனுக்குத் தான் சொந்தம்.” என ஒரு வித அழுத்தத்துடன் கூறி விட்டு ஒரு வித எக்காளத்துடன் போனை வைத்து விட்டார்.
அடுத்து அபர்ணாவின் குடும்பம் பற்றி முழு விடயங்களையும் ஆராய்ந்து பார்த்தவர்,
அவர்களின் சொத்துப் பற்றிய விடயங்களையும் சேகரித்து இருந்தார்.
கடைசியாக, எப்படி அபர்ணாவை தன்னிடம் கொண்டு வருவது என பிளான் போட்டவர்,
“சே…. எப்போ பாரு கொல பண்ணி போர் அடிக்குது. அந்த அபர்ணா பாப்பா தான் ராசி இல்லாதவன்னு ஊரே சொல்லுதே. அத வைச்சு அவங்க அப்பாக் கிட்ட கொஞ்சம் பேசிப் பார்ப்பம்.” என முடிவு எடுத்துக் கொண்டவர்,
சாத்வீகமானவர் போல, தன்னை மாற்றிக் கொண்டு ஒரு அப்பாவி சிரிப்புடன், அபர்ணாவின் தந்தையிடம் சென்று, நல்லவர் போல ஒரு மாதம் பழக ஆரம்பித்தார்.
அவரும் புது இடம், புது மனிதர்கள் என, பயந்து போய் இருந்தவர், கோடீஸ்வரன் ஆதரவுக் கரம் நீட்ட,
அவரிடம் நன்றாக பேசிப் பழக ஆரம்பித்தார்.
குள்ள நரியின் புத்தி என்றுமே மாறாது என அறியாத அப்பாவி தான் அபர்ணாவின் தந்தை.
அவருக்கு எண்ணம் என்னவென்றால்…. ஒரு பெரிய மனிதன், தன்னிடம் வந்து எந்த பந்தாவும் இல்லாமல் பழகுகிறார் என்பது தான்.
அதனாலேயே அன்பாக அவருடன் பழகினார் அபர்ணாவின் தந்தை.
அடுத்தடுத்த நாட்கள் தன் பாட்டில் ஓடிப் போக,
ஒரு நாள் வீட்டுக்கு வந்த கோடீஸ்வரனுக்கு, அன்பாக விருந்து பரிமாறிக் கொண்டு இருந்த அபர்ணாவின் தந்தையிடம்,
“அப்புறம் நண்பரே, என் காது படவே உங்க கடைசிப் பாப்பா, அபர்ணாவை எல்லாரும் வாய்க்கு வந்தபடி பேசுறாங்க. ராசி இல்லாதவ, கொலை காரி, அம்மாவ முழுங்கினவன்னு…. இந்தப் பெயர் எல்லாம் நம்ம பாப்பாக்கு தேவையா?, அதனால நான் பல தடவ அலசி ஆராய்ஞ்சு யோசிச்சு ஒரு முடிவு பண்ணி இருக்கேன்.”
“என்ன சார் சொல்றீங்க?, எனக்கு புரியல, நீங்க என்ன சார் முடிவு பண்ணி இருக்கப் போறீங்க?, இது எங்க பிரச்சனை, அவ என் வீட்டு குட்டி தேவதை. இது எல்லாம் கொஞ்ச நாள் தான் அப்புறம் அவங்கவங்க தங்களோட வேலைய பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. என் பொண்ணும் வளர்ந்திடுவா. நீங்க என் பாப்பாக்காக பீல் பண்றேதே போதும். வேற எதுவும் தேவை இல்லை.” என கூறி சிரிக்க,
கோடீஸ்வரனோ, “இல்ல…. இல்ல…. அப்படி இல்லை. இந்தப் பேச்சு எல்லாம், உங்க மத்த பிள்ளைகளையும், அவங்க லைப்பையும் பாதிக்கும். எதுக்குங்க இந்த ரிஸ்க் எல்லாம்?”
“அபர்ணா இப்போ குழந்தை. ஆனா, அவ வளரும் போது இதெல்லாம், அவள ரொம்ப பாதிக்கும். அவ மனச ரொம்ப காயப்படுத்தும். உங்களுக்கே தெரியும். நான் ஏகப்பட்ட சொத்துக்கள் வைச்சு இருக்கேன் .ஆனா, எனக்குன்னு ஒரே ஒரு பெண் வாரிசு தான் இருக்கு. அந்த வாரிசும், என்னோட சொந்த வாரிசு இல்ல.”
“தமயந்தி என்னோட, நண்பன் பொண்ணு, உங்களுக்கு அந்தக் கதை எல்லாம் தெரியும். ஏற்கனவே சொல்லி இருக்கேன் தானே. இப்போ அபர்ணாவையும் எனக்கு தத்துக் கொடுத்தீங்கன்னா. நானே இரண்டு பொண்ணுகளையும் இரண்டு கண்ணுங்க போல பார்த்துப்பன்.”
“இரண்டு பேரும் என் பொண்ணுங்களாவே வளருவாங்க. நீங்க விரும்பினா…. எப்போ வேணும்னாலும் உங்க பொண்ண வந்து பார்த்திட்டு போகலாம். எனக்கும் இரண்டு பசங்க இல்லாத குறை தீர்ந்த மாதிரி இருக்கும். என்ன சொல்றீங்க நீங்க?, உங்களுக்கு வேற பசங்க இருக்காங்க தானே.” என தேன் ஒழுக பேசினார்.
அவரின் பேச்சில், அபர்ணாவின் தந்தை மேலும் குழம்பியதோடு, சற்று கோபம் கூட அவர் மனதில் எட்டிப் பார்த்தது.
பின்னே அவர் கேட்பது அவரின் அன்பு மகளை அல்லவா.
உடனடியாகவே, “முடியாது மிஸ்டர் கோடீஸ்வரன். நீங்க ஏதோ தப்பா நினைச்சுக் கொண்டு கேட்குறீங்க, என்னால என் பொண்ண விட்டுக் கொடுக்கவே முடியாது. உங்க மனசுல அப்படி ஏதாச்சும் எண்ணம் இருந்தா…. இப்பவே அத தூக்கிப் போட்டுடுங்க புரிஞ்சுதா?” என கேட்க,
முகம் சற்று கறுத்துப் போனாலும், உடனே அதனை மாற்றிக் கொண்டவர்,
“ஓஹ்…. ஓகே…. ஓகே…. கூல்…. நீங்க டென்ஷன் ஆக வேண்டாம். நான் ஒரு ஆர்வத்தில கேட்டுட்டன். இனி மேல் கேட்கல. நீங்க அந்த சிக்கன் குழம்ப கொஞ்சம் எடுத்து தாங்க. நல்லா இருக்கு.” என கேட்டு வாங்கி சாப்பிட்டவர் உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ண தேவையான பிளானை அங்கு வைத்தே போட ஆரம்பித்தார்.
சாப்பிட்டு முடித்து, வீட்டுக்கு வந்தவர், தனது ஆட்களை அழைத்து,
“அந்த ஆள் கிட்ட நல்லதா பேசிப் பார்த்தன். அவனுக்கு புரியல. இனி என்னோட சாப்ட் முறைல அவனுக்கு புரிய வைக்க முடியாது.”
“இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு. டேய், இன்னும் ஒரு கிழமை கழிச்சு வர்ற தீபாவளி தான் அவன் குடும்பத்துக்கு கடைசி தீபாவளியா இருக்கணும். வெடிக்கிற தீபாவளி பட்டாசு அவங்க வீட்டையும் சேர்த்து எரிய வைக்கணும். புரிஞ்சுதாடா?” என உறும,
அவரின் ஆட்களும், “இத தான் சார் நாங்களும் முதலே சொன்னம். நீங்க தான் கேட்கல. அவன் குடும்பம் இனி எங்க கையால சாம்பல் ஆகிறத யாரும் தடுக்க முடியாது. நீங்க கவலைப்படாதீங்க சார். வேலைய நாங்க பக்காவா மூடிக்கிறம்.”
“டேய், அதெல்லாம் சரிடா. ஆனா எனக்கு அந்த குடும்பத்தில, இருக்கிற ஒரே ஒரு ஆளு மட்டும் உயிரோட வேணும்டா.”
“என்ன பாஸ் சொல்றீங்க?, சரி யாரு வேணும்னு சொல்லுங்க. எப்படியும் பெரியவங்களா தான் இருக்கும்.”
“இல்ல, அது தான் இல்லடா. எனக்கு தேவை அந்த குடும்பத்தோட கடைசி வாரிசு. கடைக் குட்டி அபர்ணா தான் வேணும்டா.”
“என்னது….” என அதிர்ந்து போய் அவரின் ஆட்கள் அவரைப் பார்க்க,
அவரோ, “டேய், அந்தக் குட்டிய ரொம்ப சாதாரணமா எடை போடாதீங்கடா. அவ ஒரு தங்க முட்டை இடுற வாத்து. உங்களுக்கு இப்போ என்னால சொல்லிப் புரிய வைக்க முடியாது சொன்னத மட்டும் செய்யுங்க போதும். அந்தப் பாப்பா மட்டும் எனக்கு உயிரோட வேணும் அவ்வளவு தான். மத்தவங்க சாம்பல் கூட யாருக்கும் கிடைக்கக் கூடாது புரிஞ்சுதாடா?, தப்ப தப்பு இல்லாம சரியா செய்து முடிங்க. உங்களுக்கு வேண்டியது வந்து சேரும். ஒரு சின்னத் துரும்பு ஆதாரம் கூட, யார் கைக்கும் கிடைக்க கூடாது. பக்காவா ஒழுங்கா விஷயம் முடிஞ்சு இருக்கணும். அடுத்த கிழமை இதே நேரம் அபர்ணா பாப்பா என் கையில இருக்கணும். அவங்க குடும்பம் இருந்த தடயமே இருக்கக்கூடாது. இது நடந்தே ஆகணும்.” என உறுதியாக கூறியவரின் கண்களில் அப்படி ஒரு ரத்த வெறி தெரிந்தது.
அவருடைய ஆட்களும், “ஓகே பாஸ் நீங்க சொன்னபடியே செய்து முடிச்சிடலாம்.” என கூறி விட்டு விடை பெற்று சென்று விட்டார்கள்.
அடுத்த கிழமை தீபாவளி நாளும் ரொம்ப சந்தோஷமாக விடிந்தது.
அபர்ணாவின் குடும்பத்தினரும் சந்தோஷமாக தீபாவளிக்கு தயாராகிக் கொண்டு இருந்தனர்.
மனைவி இறந்த பிறகு “எதுவும் செய்யக் கூடாது, எனக்கு எதுக்கு கொண்டாட்டம்?” என இருந்தவருக்கு பிள்ளைகளின் ஆர்வத்தையும், சந்தோசத்தையும் தடுக்க முடியாது போகவே அவர்களுக்கு வேண்டியதை வீட்டில் வாங்கி குவித்து இருந்தார் அவர்.
அவர்களுக்காக அந்த நாளை கொண்டாட விரும்பினார் அந்த அன்பான தந்தை.
குழந்தை அபர்ணாவோ கண்களை சிமிட்டிச் சிமிட்டி தனது அண்ணா, அக்கா விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
தனது குழந்தைகளைப் பார்த்துப் பூரித்து போனவரின் கண்களில் மனைவியை எண்ணி சிறு கண்ணீரும் எட்டிப் பார்த்தது.
அவர் கையில் அபர்ணாவை வைத்துக் கொண்டு, மற்ற குழந்தைகள் பாட்டுப் பாடுவதையும், பட்டாசு கொளுத்துவதையும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டு இருந்தார்.
அதே நேரம் அவர்களுக்கான பரிசுப் பொருட்களுடனும், இனிப்பு பலகாரங்களுடனும் அவர்களை சந்திக்க சென்ற கோடீஸ்வரனோ,
நாவில் தேனொழுக அவர்களுடன் பேசி சிரித்து அவர்களுக்கு பலகாரங்களை தானே ஊட்டியும் விட்டார்.
ஆனால் அந்த நேரம் அவரது மனதில் ஓடிய எண்ணம்,
“இதுதான் உங்களுக்கு நான் கொடுக்கப் போற கடைசிப் பலகாரம். என் கையால கடைசியா சாப்பிட்டுப் சந்தோஷமா செத்துப் போங்க.” என்பது தான்.
இப்படி ஒரு கேவலம் கெட்ட மனிதனை உலகமே கண்டிருக்காது.
அந்த நாளில் அவர்களின் இறப்பிற்கான நேரத்தைக் குறித்து விட்டு அவர்களுடனே சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடும் மனநிலையுடைய மனிதரை என்ன தான் சொல்வது?
மனித இனத்திற்கு அவர் ஒரு தவறான எடுத்துக்காட்டு தான்.
நேரத்தைப் பார்த்தவாறே அவர்களுடன் தானும் சேர்ந்து பட்டாசு கொளுத்தி விளையாடியவர் அபர்ணா பாப்பா தூங்கும் வரை அங்கேயே தான் இருந்தார்.
அபர்ணா தூங்கியதும் அவளுடைய தந்தை, அவளைத் தூக்கிக் கொண்டு சென்று தொட்டிலில் படுக்க வைத்து விட்டு வந்ததும்,
சற்று நேரம் அவர்களுடன் இருந்து உரையாடிய கோடீஸ்வரன் தொட்டில் இருக்கும் அறையை ஒரு தடவை கவனமாக கூர்ந்து பார்த்து விட்டு,
“அப்புறம் நான் கிளம்புறன் நண்பரே. இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என ஒரு வித அழுத்தத்துடன் கூறிவிட்டு வெளியேறி சென்றார்.
வெளியே போனவர், கேட்டைத் தாண்டிய அடுத்த கணமே தனது ஆட்களுக்கு கால் பண்ணி,
அபர்ணா பாப்பா இருக்கும் அறையையும், தொட்டிலையும் குறிப்பிட்டு சொல்லி விட்டு,
செய்ய வேண்டியதை கனகச்சிதமாக செய்து முடிக்குமாறு உத்தரவிட,
அவர்களும், அவர் போனதும், இருட்டும் நேரம் பார்த்து,
அபர்ணாவை மாத்திரம் தூக்கிக் கொண்டு வந்து விட்டு,
மீதியை தங்களது பாசின் கட்டளைப் படியே செய்து முடித்து இருந்தனர்.
வெளியில் இருக்கும் அனைவருக்கும் பட்டாசு வெடித்ததில், தப்பாக மாறி சிலிண்டர் வெடித்து மொத்தக் குடும்பமும் இறந்து போனதாக தகவல் பரப்பப் பட்டது.
அதையே அனைவரும் நம்பினர்.
பெரிதாக ஆராய யாருக்கும் நேரம் இல்லை.
பரிதாபம் மட்டுமே அங்கு நிறைந்து இருந்தது.
அதையும் மீறிப் பேச வந்தவர்களின் வாயையும் தனது பணம் மூலம் அடைத்து விட்டார் கோடீஸ்வரன்.
அதோடு சேர்த்து இறுதிக் குழந்தையின் ராசி தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்கிற கதையும் எக்ஸ்ட்ராவாக கோடீஸ்வரனால் பரப்பப் பட்டு விட,
அந்தக் கொலைகள் யாவும் வெறும் பட்டாசு கேசுடனும், ராசி இல்லாத குழந்தையின் வருகை என்ற பட்டத்துடனும் முடிக்கப்பட்டு விட்டது.
இறந்த ஒவ்வொரு குழந்தைகளின் வலியும், அவர்களின் வாழ்க்கையும் அங்கு மறக்கப் பட்டும், மறைக்கப் பட்டும் போனது தான் கொடுமை.
ஒருவரின் பணத்தாசைக்காக வாழ வேண்டிய இளம் சிட்டுக்களின் வாழ்க்கை கருக வைக்கப் பட்டது. அதுவும் சாதாரணமாக அல்ல கொடூர பிளான்களின் மூலம்.
அபர்ணாவைத் தூக்கிக் கொண்டு வந்தவர் கொஞ்ச நாள் யாருக்கும் தெரியாது வேறு இடத்தில் அவளைக் கொடுத்து வளர்த்தார்.
அவள் வளர்ந்து ஒரு வயது முடிந்ததும்,
தன்னுடன் அழைத்துக் கொண்டவர்,
தமயந்தியை வளர்த்தது போலவே பழைய நினைவுகள் எதுவும் வராத வண்ணம் சில மருந்துகளைக் கொடுத்து இருவரையும் அக்கா, தங்கை எனக் சுட்டிக் காட்டியதோடு,
அவர்கள் இருவருக்கும் தானே தான் தகப்பனார் எனவும் குறிப்பிட்டு வளர்த்து தனது திட்டத்தை சரியாக நிறைவேற்றிக் கொண்டார்.
கோடீஸ்வரன் எனும் ஒரு தனி மனிதனின் பணத்தாசையால் பல உயிர்கள் அநியாயமாக காவு வாங்கப் பட்டது.
நியாயங்கள் சில நேரங்களில் உறங்கிப் போகும்.
ஆனால் காலங்கள் கடந்தாலும் உரு மாறி மறைந்து போகாது.
ஒரு நாள் வெளியே வந்தே ஆகும்.
செய்த பாவங்கள் காலங்கள் தாண்டினாலும் கரைந்து போகாது.
இன்னுமின்னும் பாவ கணக்கு ஏறிக் கொண்டே தான் போகும்.
கண்டிப்பாக அதற்கான காலம் வரும் போது பெரிதாக வெடித்து வெளியே வரும்.
அப்போது உண்டாகும் பாதிப்பு பாவம் செய்தவர்களை முற்றாக நசுக்கி அழித்து விடும்.
அது தான் இங்கும் நடந்து கொண்டு இருந்தது.
எங்கோ ஆரம்பித்த கதை, முடிவுரைக்காக தீரன் மற்றும் ஆதியிடம் வந்து இருக்கின்றது.
அனைத்தையும் கூறி முடித்த தீரன், அபர்ணாவைப் பார்க்க, அவளோ, வெறித்த கண்களில் இருந்து கண்ணீர் வழிய அமர்ந்து இருந்தாள்.
அவளின் வலி புரிந்தாலும், எதுவும் கூற முடியாது அனைவரும் அமைதி காத்தனர்.
தமயந்தி, மாத்திரம் அபர்ணாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
இருவருக்கும் தனிமை கொடுத்து, ஆண்கள் இருவரும் அமைதி காத்தனர்.
சற்று நேரம் போனதும், இருவருக்கும் முன்னாடி இரண்டு ஆண்களும் ஜூஸ் அடங்கிய குவளையை நீட்டினர்.
தமயந்தியும், அபர்ணாவும் ஒருங்கே நிமிர்ந்து பார்த்த பார்வையில் முதல் முறை தன்னவர்கள் மீதான காதல் பொங்கி வழிந்தது.
தீரனின் காதலும், ஆதியின் காதலும் சரி என்றுமே மாறாது.
இரு பெண்களும் இனியாவது அதனை உணர்வார்களா?
தீரன், தமயந்தியை மன்னிப்பானா?
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
இந்த எபியுடன் பிளாஷ் பேக் முடிஞ்சுது மக்காஸ்….
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். இன்னும் சில எபிகள் தான் இருக்கு..
படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க மக்காஸ் 😍😍
லேட் எபிக்கு மன்னிச்சு.. இனி எபிகள் ஒழுங்கா வரும் மக்காஸ்…
மறக்காம படிச்சிட்டு கருத்து சொல்லுங்க மக்காஸ்
Super and intresting sis
நன்றி நன்றிடாம்மா 💖💖💖💖🥰🥰🥰
Superb nd interesting epiiii ❤️❤️❤️❤️❤️
Long waiting for the episodes