இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 47

4.7
(14)

Episode – 47

தமயந்தி முடிந்த வரையிலும், தனது பக்க காதலை புரிய வைக்க முயன்று கொண்டு இருந்தாள்.

தீரனுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும், அவளுக்கு வேலையே, அவனிடம் தனது காதலை நிரூபிப்பது தான்.

ஆனால், அதற்கு சற்றும் இடம் கொடுக்காது, அவள் நெருங்கினால், பல மடங்கு விலகிப் போனான் தீரன்.

அவளும் விடாது, அவனுக்காக உடைகள் எடுத்து வைப்பது, பிடித்த உணவுகள் சமைப்பது, அவனது கண் படும் படி இருப்பது, ரூமை அவனுக்காக அழகு படுத்துவது என அனைத்தையும் செய்தாள்.

ஆனால் அவற்றைக் கண்டு கொண்டாலும் தீரன் காணாதது போல நகர்ந்து விடுவான்.

அவனின் விலகல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு சென்றதே தவிர கொஞ்சம் கூட குறையவில்லை.

அப்படித் தான் ஒரு தரம், தீரன் வெளியில் சென்று இருக்கும் போது, அவனது கப்பேர்ட்டில் உள்ள ஆடைகள் சிலவற்றை இடம் மாற்றி வைக்கலாம். பழையவற்றை யாருக்கும் கொடுக்கலாம். என முடிவு பண்ணி,

அவனது அலுமாரியை, கிளீன் பண்ண ஆரம்பித்தாள் அவள்.

முடிந்தவரையில் வேகமாக அடுக்கிக் கொண்டிருந்தவளுக்கு, கீழ் இருக்கும் தட்டுக்களை மாத்திரம் தான் அடுக்க முடிந்தது.

மேல் உள்ள தட்டை அடுக்க எட்டி அடுக்க முயன்றவளுக்கு அது முடியாது போகவே,

“தன்ன மாதிரியே அலுமாரியையும் உயரமா வாங்கி வைச்சு இருக்கார். இப்போ என்ன செய்றது எட்டுதே இல்லை.” என புலம்பிக் கொண்டவள்,

அங்கிருக்கும் நாற்காலியை எடுத்து வைத்து அதில் ஏறி நின்று அவனது ஆடைகளை கீழே எடுத்துப் போட்டு அடுக்க ஆரம்பித்தாள்.

தீரன் அங்கு நின்றிருந்தால் கண்டிப்பாக தனக்கு பேசுவான், எதையும் தொடவிட மாட்டான் என்று புரிந்து கொண்டவள்,

அவன் இல்லாத நேரம் பார்த்து தான் அவனது ஆடைகளை அடுக்கிக் கொண்டு இருந்தாள்.

வெளியில் சென்ற தீரனுக்கோ, அன்று வேலை சீக்கிரம் முடிந்து விட வீட்டுக்கு போகலாம் என எண்ணியவனுக்கு மனதிலும் கண்களிலும் மின்னல் போல வந்து போன உருவம் என்னவோ தமயந்தி உடையது தான்.

என்ன தான் அவளைக் கண்டு கொள்ளாதது போல தவிர்த்து வந்தாலும் அவனது மனதிலும் காதல் எக்கச் சக்கமாக புதைந்து கிடக்கின்றது அல்லவா.

அந்தக் காதலை மேலே எழ விடாது செய்ய,

அவன் செய்யும் கடும் பிரயத்தனம் அவன் மாத்திரம் அறிந்ததே.

அவளுக்கு மாத்திரம் அல்ல, காதலில் தனக்கும் சேர்த்து தண்டனை கொடுத்துக் கொண்டு இருந்தான் அந்தக் காதல் காரன்.

தமயந்தியின் சின்னச் சின்ன செயல்களை எண்ணிப் பார்த்தவன்,

ஒரு மென் புன்னகையை சிந்திக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வந்தவன், நேரடியாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல,

அவன் திடுமென வந்து நிற்க கூடும் என எதிர்பாராத தமயந்தி பயந்து போய் “ஆத்தி…. நீங்களா….” கத்தியவாறு கீழே விழ ஆரம்பித்தாள்.

அவள் இப்படி நிற்க கூடும் என எதிர்பாராத தீரன் ஒரு கணம் திகைத்துப் போய் நின்றான்.

ஆனால் அடுத்த கணமே, அவள் விழும் முன்னாக தாங்கிப் பிடிக்க அவனது கைகளில் பூமாலையாக விழுந்தாள் அவனது மனையாள்.

கீழே விழ விடாது, கணவன் தாங்கிப் பிடித்து விட்டான் என்கிற நிம்மதி தமயந்திக்கு இருந்தாலும்,

என்ன சொல்லி அவன் பேசப் போகிறான் என எண்ணிப் பயந்து போனவள்,

கண்களை இறுக மூடிக் கொண்டு,

“அச்சோ தயவு செய்து பேசிடாதீங்க. நான் வேணும்னு விழல. பயத்தில கால் தடுமாறி விழுந்திட்டேன்.” என திரும்பத் திரும்ப கூறியபடி இருந்தவளின் செய்கையில்,

அவனுக்குள் கோபம் வருவதற்கு பதில் காதல் தான் அதிகரித்தது.

உள்ளுக்குள் காதல் பெருக்கெடுத்து ஓடியதுடன், மறு புறம் சிரிப்பும் வந்தது அவனுக்கு.

ஒருவாறு சிரிப்பை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவனுக்கு,

காதலை மட்டும் கட்டுப்படுத்த தெரியவில்லை.

அதன் விளைவாய், அவளை அப்படியே, இறுக அணைத்து அவளின் முகம் முழுவதும் முத்தமிட ஆரம்பித்தவன் இறுதியில் இளைப்பாறியது என்னவோ அவளது மென்மையான உதடுகள் மீது தான்.

அவனது செய்கையில் பட்டென்று கண்களைத் திறந்தவள்,

நடப்பது என்னவென உணரும் முன்பாகவே அவளது உதடுகள் அவனிடத்தில் சிறைப் பிடிக்கப் பட்டிருந்தது.

ஆரம்பத்தில் தடுக்க எண்ணியவளும், அவனது கண்கள் சொன்ன செய்தியில், அப்படியே கட்டுப்பட்டு பதில் முத்தம் வழங்க ஆரம்பித்தாள்.

அவளின், ஒத்துழைப்பு அவனை இன்னுமின்னும் காதல் பித்துக்குள் தள்ள,

அவளிடம் முத்தப் பாடம் கற்கும் மாணவன் ஆகிப் போனான்.

அவளும், அவனிடம் இழைந்து கொண்டு நிற்க, அதற்கு மேல் அவனுக்கு என்ன வேண்டும்?

அவளை மேலும் தன்னுடன் இறுக அணைத்து முத்தக் கடலில் முத்துக் குளிக்க முயன்றான் அவன்.

அதற்குள் தன்னை ஓரளவுக்கு நிலைப்படுத்திக் கொண்ட தமயந்தி,

தீரனை தன்னில் இருந்து பிரித்து தள்ளி விட,

வழக்கம் போல அப்போது தான் நனவுலகம் வந்தவன், அவளை அங்கிருந்த சோபாவில் அமர வைத்து விட்டு,

அவளுக்கு முதுகு காட்டி நின்றபடி, “சாரி ஏதோ தெரியாம….” என ஆரம்பித்தவனுக்கு எப்படி அதனை முடிப்பது என புரியவில்லை.

சின்னக் குழந்தை கூட நம்பாது தானே.

அவன் செய்தது தற்செயல் என்றால் யார் தான் நம்புவார்கள்?

அவளுக்கும், உடனடியாக எப்படி ரியாக்ட் பண்ணுவது எனப் புரியவில்லை.

தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்து இருந்தவளுக்கு,

அவனின் தடுமாற்றம் ஒரு வித சுவாரசியத்தை உண்டு பண்ண,

என்ன தான் சொல்லுகிறான் என்று பார்க்க எண்ணி, தனது தயக்கத்தை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு, அவனையே பார்த்து இருக்க,

திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன்,

அவளின் இமைக்காத பார்வையில் சற்று தடுமாறித் தான் போனான்.

நேர் கொண்டு நிற்கும் சிங்கம் அவனையே தனது பார்வையினால் இலகுவாக சாய்த்து விட்டாள் அவள்.

“இனி மேல் இது போல தவறு நடக்காது. நானும் கொஞ்சம் கவனமா இருக்கேன். நீயும் கொஞ்சம் கவனமா….” என ஆரம்பிக்க,

பட்டென எழுந்து நின்றவள், “எனக்கு தாலி கட்டினது நீங்க தானே மிஸ்டர் அரி தீரன். அப்புறம் நான் எதுக்கு உங்க கிட்ட கவனமா இருக்கணும் மை டியர் ஹஸ்பண்ட்?, நான் இப்படித் தான் இருப்பன். நான் என்ன சாமியாரா? உங்கள மாதிரி ஆசைகளை அடக்கிக் கொண்டு இருக்க, எனக்கு குழந்தை குட்டி, எல்லாம் பெத்து உங்க கூட நூறு வருஷம் வாழணும், ரொம்ப ரொம்பஆஆ…. நல்லா வாழணும்….” என கூற,

அவளின் பேச்சில் பல்லைக் கடித்தவன்,

“இவ ஒருத்தி…. எப்போ பாரு கடுப்ப கிளப்பிக் கிட்டு….” என முணு முணுத்து விட்டு,

“உன்ன விட நிறைய ஆசைகளோட, கனவுகளோட திரிஞ்சவன் நான். இப்போ எதுவுமே இல்லன்னு ஆகிப் போச்சு. அப்போ என் மனசு எவ்வளவு வலிச்சு இருக்கும்?, அந்த வலிய நீயும் கொஞ்சம் அனுபவி. அப்போ தான் என்னோட கஷ்டம் புரியும். நான் கண்டத விடவா நீ கனவு கண்டு இருக்கப் போறாய்?,” என கூறியவனின் கண்களில் ஒரு நொடிக்கும் குறைவாக மின்னல் ஒன்று வந்து போனது. அந்த ஒரு நொடி மின்னல் போதும் அவனது ஆசைகளை வெளிக்காட்ட.

அவனது ஒவ்வொரு அசைவுகளையும், உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருந்தாள் தமயந்தி.

அவனின் வலியும், ஆதங்கமும் அவளுக்கும் நன்றாகவே புரிந்தது.

அதனைத் தீர்க்கும் வழி தான் அவளுக்கு புரியவில்லை.

என்ன செய்தால் அவனது கோபம் போகும் எனவும் பெண்ணவளுக்கு தெரியாது போனது.

ஆனால் அவனின் காதல் முற்றாக மறையவில்லை என்பதையும் அந்த நிமிடத்தில் உணர்ந்து கொண்டவளுக்கு அப்படி ஒரு ஆறுதல் மனதில்.

எப்படியாவது அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் அவனது மனதிலிருக்கும் காதலை தோண்டி வெளியில் எடுத்து விட வேண்டும் என எண்ணியவள்,

அதற்கான சந்தர்ப்பங்களை எண்ணிக் காத்துக் கொண்டு இருந்தாள்.

தீரனோ, அனைத்தையும் கூறி முடித்து விட்டு, தமயந்தியை ஒரு முறை உணர்வற்ற பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான்.

தமயந்தியோ, அவனை அடுத்து நெருங்கும் வழி புரியாது யோசித்துக் கொண்டு இருக்க,

அவளின் மனம் உணர்ந்தாற் போல, அவளுக்கு துணைக்கு வந்தார் சிவகாமி அம்மா.

அவரும், நடப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். ஒரு புறம், ஒரு ஜோடி கண்ணால் கதை பேசி சிரித்து விளையாடுவதும், மறு புறம் கண்களில் காதல் வலியுடன் மற்றைய ஜோடி வலம் வருவதும் அவரது கண்களில் இருந்து தப்புமா என்ன?

அனைத்தையும் கூர்ந்து கவனித்தவர், மாலை நேரம் தோட்டத்தில் தனியாக அமர்ந்து இருந்த தமயந்தியிடம் தானே பேச சென்றார்.

“என்னம்மா தமயந்தி, நானும் பார்த்துக் கிட்டே இருக்கேன். உங்க இரண்டு பேரோட முகமும் சரி இல்லையே. சரி சின்னஞ் சிறுசுகள் ஏதோ சண்டை போல…. நீங்களாவே சரி ஆகிடுவீங்கன்னு பார்த்தா…. அப்படி இல்லப் போலயே.” என கேட்க,

சற்று நேரம் அமைதியாக இருந்த பெண்ணவளும், அதற்கு மேலும் அவரிடம் எதையும் மறைக்க முடியாது போகவே,

“எல்லாம் என்னோட தப்புத் தானே அம்மா. அவர பிழை சொல்லி ஒண்ணும் ஆகப் போறது இல்ல. அவரோட கோபத்தை எப்படி குறைக்கிறதுன்னு தான் எனக்கு புரியல அம்மா. அவர நான் உயிருக்கு உயிரா விரும்புறேன். ஆனா அவர் இப்போ விலகிப் போறார். அப்போ நான் அவர புரிஞ்சுக்கல. இப்போ அவர் என்ன புரிஞ்சுக்கல அவ்வளவு தான்.” என ஒரு வித பெரு மூச்சுடன் கூற,

அவளின் தலையை மென்மையாக வருடி விட்டவர்,

“கோபமும் சரி, காதலும் சரி, மோதலும் சரி, எல்லாம் நாம வெளிக் காட்டுறது நமக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட தான். ரொம்ப உரிமையானவங்க கிட்ட தானே கோபத்தையும் காட்ட முடியும்?, வேறு யார் கிட்டயும் காட்டவும் முடியாது. நீ தம்பியோட இடத்தில இருந்தும் கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா. காலா காலமா தீரன் தம்பி வலியை மட்டும் தான் அனுபவிச்சு இருக்கார். அவர் தன்னோட வலிக்கு மருந்தா நினைச்சது, நினைக்கிறது உன்ன மட்டும் தான்.”

“உன் மேல அவர் உயிரையே வைச்சு இருக்கார்ம்மா. அதனால வந்த கோபம் தான்மா இது. உனக்கு புரியாததாம்மா?” என கேட்டவருக்கு,

“புரியுது.” என்பது போல, தலையை ஆட்டியவள்,

அவரை கண் கலங்கிப் பார்க்க,

அவரும் வாஞ்சையுடன் புன்னகைத்து விட்டு,

“அம்மாடி, முயற்சி செய்தால் முடியாதது என்ற ஒன்று இல்லவே இல்ல. எல்லாம் முடியும்னு நம்பும்மா. உன் காதல் அவனை மாற்றும். அவனுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு நபர் அவங்க அம்மா. அவங்க நினைவுகள, தீரன் தம்பி அந்த ரூமுக்குள்ள பூட்டி வைச்சு இருக்கார். அந்த நினைவுகள, நீ கொஞ்சம் வெளில கொண்டு வரப் பாரும்மா. அந்த செய்கை உனக்கு ஏதும் நல்ல மாற்றத்த கொண்டு வரலாம். யோசிச்சுப் பாரும்மா. உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல.” என கூறி விட்டு சென்றார் அவர்.

அவர் போனதும் சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தவளுக்கும் அவர் கூறியது சரி என்று தோன்றவே,

சரியாக மூன்று நாட்கள் கழித்து , தீரன் வெளியில் போனதும்,

சிவகாமி அம்மா, மற்றும் அபர்ணாவின் உதவியுடன், அந்த ரூமைத் திறந்து, அங்கிருந்தவற்றை தூசு தட்டி எடுத்து, தூய்மைப் படுத்தி, அடுக்கி வைத்ததோடு மட்டும் அல்லாது, அவரின் ஒரு போட்டோவை எடுத்து வெளியில் ஹாலில் மாட்டி அந்த போட்டோவுக்கு மாலையும் போட்டு, பொட்டும் வைத்திருந்தாள்.

அன்று மாலை கணவனின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்து இருந்தாள் பெண்ணவள்.

அவனும் வந்தான் தான். அன்னையின் போட்டோவையும் பார்த்தான் தான்.

ஆனால் அவள் எண்ணியது போல அவன் சந்தோஷம் கொள்ளவும் இல்லை. அவளைப் பாராட்டவும் இல்லை. பதிலுக்கு அவள் மீது அவன் கொண்ட கோபம் பல மடங்காக மாறிப் போனது.

அவன் அப்படி கோபம் கொள்ளக் காரணம் என்ன?

அவனது கோபத்தின் விளைவு எப்படி இருக்கும்?

அதனை எப்படி தமயந்தி எதிர் கொள்ளப் போகிறாள்?

அடுத்த எபி நாளைக்கு கண்டிப்பா வரும் மக்காஸ் 😍😍😍

கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். இன்னும் இரண்டு எபிகள் மட்டும் தான் இருக்கு..

படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க மக்காஸ் 😍😍

மறக்காம படிச்சிட்டு கருத்த சொல்லுங்க மக்காஸ். கதை முடிய இரு நாட்கள் மட்டும் தான் தளத்தில் இருக்கும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 47”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!