Episode – 05
காரை நிறுத்தியதும் “அதுக்குள்ள வீடு வந்திடிச்சா. இப்பவே நரகம் கண் முன்னாடி தெரியுதே.” என எண்ணியவள்,
மெதுவாக கண்களைத் திறக்க,
அவளின் அருகே அமர்ந்து, அவளையே ஆழ்ந்து பார்த்தபடி, டேஸ்போர்ட்டில் இருந்த துப்பாக்கியை தூக்கிக் கொண்டு இறங்கிய ஆதி,
அங்கே முழங்காலில் மண்டியிட்டு அமர வைக்கப் பட்டு இருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
அந்த நபரின் கைகள் இரண்டு பின்னால் கட்டப் பட்டு இருக்க,
வாயிலும் துணி அடைக்கப் பட்டு இருக்கவே, அசைய முடியாது திமிறியவனின் மறு கன்னத்திலும் அறை கொடுத்தவன்,
அவனிடம், கடுமையாக கை காட்டி ஏதோ பேசினான்.
கோபத்தில் கழுத்து நரம்புகள் புடைக்க அவன் பேசுவதை, காருக்குள் அமர்ந்து அரண்டு போய் பார்த்துக் கொண்டு இருந்தவள்,
“அப்படி அவன் என்ன தான் பேசுகிறான்?” என கேட்க எண்ணி கார்க் கண்ணாடியை இறக்கிய சமயம்,
குறித்த நபரின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து ட்ரிகரை அழுத்தி இருந்தான் ஆதி.
அவனின் செய்கையில் “ஆஆ….” என அலறியவள்,
இறக்கிய கண்ணாடியை மேலே ஏற்றி விட்டு சீட்டில் சாய்ந்து இறுக கண்களை மூடிக் கொண்டாள்.
அவள் தைரியமானவள் தான், துடுக்குத் தனமான குணம் கொண்டவள் தான்,
பேச்சில் வல்லவள் தான், ஆனாலும் அவளுக்குள் நிறைய பயங்கள் இருக்கத் தான் செய்கிறது.
அவள் உண்மையில் மென்மையான மனம் கொண்டவள், வெளி உலகிற்கு மட்டும் தைரியமான பெண்ணாக தன்னைக் காட்டிக் கொள்வாள்.
ஒரு மனிதனை அநாயாசமாக எதுவித சலனமும் இல்லாமல் கொல்பவனைக் கண்டு நடுங்கிப் போனவள் தன்னை அறியாமல் கத்தி இருந்தாள்.
அவளின் சத்தத்தைக் கேட்டவன்,
திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, அலட்டல் எதுவும் இல்லாது அமைதியாக வந்து காரில் ஏறி, மீண்டும் துப்பாக்கியை இருந்த
இடத்தில் வைக்க,
அவனையே வெறித்துப் பார்த்த வண்ணம் சீட்டுடன் ஒட்டியபடி அமர்ந்து இருந்தாள் அபர்ணா.
சற்று முன்பாக அவனது கைகளால் ஒரு கொலையை செய்து விட்டு ஒன்றும் நடவாதது போல இருக்கிறான் என்கிற எண்ணமே அவளின் மூளைக்குள் மீண்டும் மீண்டும் சுழன்று அடிக்க,
அவனோ, “என்னாச்சு உனக்கு எதுக்கு இப்படி பார்க்கிறாய்?, நான் கொலை காரன்னு தான் உனக்கு முன்னமே தெரியுமே. நீ தான் எனக்கு ஏகப் பட்ட பட்டம் வைச்சு இருக்கீயே. அப்புறம் எதுக்கு இந்த ஷாக்?, உன் முன்னாடி நானும் கொஞ்சம் பேர்போர்ம் பண்ணிக் காட்ட வேணாமா?” என கேலியாக கேட்டான்.
வேறு நேரமாக இருந்தால் ஏதும் சொல்லி இருப்பாளோ என்னவோ?, இப்போது எதுவும் கூற முடியாது அமர்ந்து இருக்க,
அவனோ, உறைந்து போய் இருந்தவளை, நிஜ உலகிற்கு கொண்டு வரும் வண்ணம், அவளின் தோளில் தட்டப் போக,
பட்டென்று முழித்துக் கொண்டவள்,
“நோ…. நோ…. இரக்கமே இல்லாம ஒருத்தர கொலை பண்ணிட்டு அதே கையால என்னைத் தொடாதீங்க.” என கத்தினாள்.
அவளின் பேச்சில் ஒரு கணம் அப்படியே நின்ற அவனது கைகள் அடுத்த நொடி அவளின் கைகளை அழுத்தமாக பற்றி தன்னை நோக்கி இழுத்தது.
அவனின் செய்கையில் அருவெறுத்துப் போனவள், அவனிடம் இருந்து விலக எண்ணி திமிறித் துள்ளி அவனைத் தள்ளி விட்டாள்.
அவனோ, அவளின் எந்த திமிறலையும் கண்டு கொள்ளாது, அவளை தனது அணைப்புக்குள் வைத்து இருந்தவன்,
“இவ்வளவு பட்டும் உன்னோட வாய் மட்டும் குறையல இல்ல?” என கேட்க,
அவளோ, அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தாள்.
“என்னடி பார்வை?” என அவன் மென் சிரிப்புடன் கேட்க,
“ப்ளீஸ், முதல்ல என்னை விடுங்க. எனக்கு இதெல்லாம் பிடிக்கல.” என கூற,
அவனோ, “இனி எல்லாம் பழகிக்கோ வாயாடி.” எனக் கூறி அவளை மேலும் தன்னோடு அழுத்த,
வார்த்தைகள் இன்றி அவளது கண்கள் கண்ணீரை சிந்தியது.
அவளின் கண்ணீரை கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்தவன்,
அவளை விலக்கி அமர வைத்தான்.
அவளோ, மீண்டும் அழுத கண்களுடன் அவனை முறைத்துப் பார்க்க,
“என்ன முறைப்பு வருங்கால பொண்டாட்டி?” என கண் சிமிட்டிக் கேட்க,
“உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா? என்ன மனுஷன் நீங்க?…. இல்ல…. இல்ல…. நீங்க மனுஷனே இல்லை.” என கண்களை துடைத்தபடி கத்தினாள் அவள்.
அவனோ, அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன்,
“தங்கி யூ மேடம். உங்க கண்ணுக்கு நான் மனுஷனா தெரியலன்னா எனக்கு சந்தோஷம் தான். ஏன்னா நான் தான் மிருகம் ஆச்சே. இனி மேல் இந்த மிருகம் கூடத் தான் நீ இருக்கப் போறாய். அத நினைவு வைச்சுக் கொள். ரைட் அப்போ நீ இனிமேல் தங்கப் போற வீட்டுக்கு…. நோ…. நோ…. ஜெயிலுக்கு கிளம்பலாமா மை டியர்?” என எள்ளலாக கேட்டவன் வண்டியைக் கிளப்பினான்.
அபர்ணாவோ, தன் நிலையை எண்ணி நொந்து போனவள் பேச்சு மறந்து அப்படியே சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண் மூடினாள்
ஆதியோ, எந்தக் கவலையும் இல்லாது, அடிக்கடி தனக்கு அருகில் இருப்பவளை ஒரு வித கோணல் சிரிப்புடன் பார்த்தவாறு வண்டியை ஓட்டினான்.
அவளோ, நீ என்ன வேணும் எண்டாலும் பண்ணிக் கொள் என்கிற ரீதியில் அப்படியே அமர்ந்து இருக்க,
“நான் ஒருத்தன் இங்க பக்கத்தில இருக்கேனே, அத பத்தி கொஞ்சமும் கவலைப் படமா நீ கண்ண மூடி நிம்மதியா இருக்கீயா?, இது தப்பாச்சே.” என எண்ணியவன் ஹை டெஸிபலில் பாட்டை அலற விட்டான்.
அதில், “நான்கு பக்கம் காடு இருக்கு எங்கடி போவா…. எந்தப் பக்கம் ஓடினாலும் நானே….” என பாடல் ஒலிக்க,
அந்த பாடல் வரிகளிலும், சத்தத்திலும் எரிச்சலாக கண்களைத் திறந்தவள்,
அருகில் இருந்தவனை உறுத்து விழிக்க,
அவனோ, அவளைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு,
“இன்னும் வாலியும் ஏத்தி வைக்கணுமா?” என கேட்டான்.
அவள் பதிலுக்கு முகத்தை திருப்ப,
காரை பட்டென்று பிரேக் போட்டு நிறுத்தியவன்,
“நான் கேள்வி கேட்டா எனக்கு பதில் வரணுமே தவிர, நீ முகத்தை திருப்பக் கூடாது. புரிஞ்சுதா?”என உறுமினான்.
சற்று மிரட்சியாக அவனைப் பார்த்தவள் தலையை ஆட்ட,
“குட், அப்போ நான் முதல் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு பார்ப்பம்.”
“இல்ல. இதுவே ஜாஸ்தி சவுண்ட் தான். முடிஞ்சா கொஞ்சம் சத்தத்தைக் குறைங்க.”
“ஓஹ்….” என்றவன் அவளின் கூற்றுக்கு மாறாக மீண்டும் சவுண்டை ஏற்றி வைக்க,
அபர்ணாவோ, “இதுக்கு எதுக்குடா என்ன கேட்கணும், நீயே ஏதாச்சும் பண்ண வேண்டியது தானே. சரியான ஹிட்லர், சாடிஸ்ட்.” என மனதிற்குள் திட்டிக் கொண்டவள் வெளியில் அவனை அமைதியாக பார்க்க,
“உன் மைன்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் கேட்குது.” என கூறிக் கொண்டே காரை எடுத்தவன்,
அவள் காதுச் செவிப்பறை கிழியும் படி ஹை டெஸிபலில்பாட்டை அதிர விட்டபடி தான் வண்டியை ஓட்டினான்.
அபர்ணாவிற்கே, “எப்படா உன் வீடு வரும்?” என கத்திக் கேட்க தோன்றியது. அந்தளவு தூரம் அவளை படுத்தி எடுத்தான் அவன்.
ஒரு வாறு ஒரு பெரிய வாசல் முன்பாக கார் நிற்கவும்,
அவள், “ஓஹ்…. வீடு வந்திடிச்சா?” என எண்ணிக் கொண்டவள்,
கேட் திறந்து உள்ளே கார் நுழையவும்,
அந்த இடத்தைக் கண்டு பிரமித்துப் போனாள்.
அப்படி ஒரு அழகான தோட்டத்துடன், கொள்ளை அழகுடன் மிளிர்ந்தது அந்த மாளிகை.
அந்த இடத்தில் கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் ஒரே போல சீருடையில் வேலைக்கு அமர்த்தப் பட்டு இருந்தனர்.
அதே போல தோட்ட வேலை செய்வதற்கென, ஒரே கலர் சீருடையில் பத்திற்கும் மேற்ப் பட்ட நபர்கள் இருந்தனர்.
சுற்றி எங்கும் ஆண்களின் படையாகவே இருந்தது.
“இது தான் உங்க வீடா?” என தன்னையும் மீறி கேட்டு விட்டாள் அவள்.
அவனோ, அவளைக் கூர்ந்து பார்த்து விட்டு,
“ஒரு சின்ன திருத்தம். நம்ம வீடான்னு கேட்கணும். யெஸ் இது தான் நீ இனி தங்கப் போற நம்ம வீடு.” என அவன் கூற,
அவள், பதில் எதுவும் கூறாது மௌனம் ஆகி விட்டாள்.
அபர்ணாவோ, ஆண்கள் படையைப் பார்த்து சங்கடமாக உணர ஆரம்பிக்கும் போதே, கார் வீட்டு வாசலில் நின்றது.
அவளின் முகத்தை வைத்தே, அவளின் எண்ணங்களைப் படித்தவன்,
காரில் இருந்து கம்பீரமாக இறங்கி வந்து,
அவளின் புறம் இருந்த கதவைத் திறந்து அவளை நோக்கி தன் கையை நீட்டினான்.
அவனது செய்கையில், “கண்டிப்பாக நீ என்னோட கையைப் பிடித்து இறங்கியே ஆக வேண்டும்.” என்ற செய்தி மறைந்து இருக்க,
அவனை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்து விட்டு ஒரு பெரு மூச்சுடன்,
அவனின் கையில் தனது கையை வைத்து கீழே இறங்கியவளுக்கு அவளையும் மீறி ஒரு முறை உடல் நடுங்கியது.
அங்கு உள்ள ஆண்களின் நடுவே, ஒரு பெண் தனியாக இருப்பதா என பதட்டம் கொண்டவள்,
தலை குனிந்து நிற்க,
அவளின் காதருகே குனிந்த ஆதியோ,
“இந்த ஆதிய மீறி இங்க இருக்கிற ஒருத்தனும் உன்னைத் தப்பான பார்வை பார்க்க மாட்டான். சோ, நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்ல. முதல்ல அங்க நிமிர்ந்து பார்.” என அதட்ட,
அவளும் அவனின் குரலின் அழுத்தத்தில் முன்னே பார்க்க,
அங்கு இருபதிற்கும் மேற்பட்டபெண்கள், ஒரே நிற சேலையில் அணி வகுத்து நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களில் வயதான பெண்மணி ஒருவர்,
கையில் ஆரத்தி தட்டுடன், முன்னே வந்து,
“எங்க ராஜாக்கு ஏத்த ராணி தான். தம்பியோட உயரத்துக்கு ஏத்தது போல, அவரோட மார்பளவுக்கு இருக்கிறாய்ம்மா. இந்த வீட்டுக்கு வரப் போற மகா லட்சுமிய நாங்க ஆரத்தி எடுக்காம உள்ள வர விட்டுடுவமா?, வாம்மா.” என அன்பாக அழைத்தவர்,
இருவருக்கும் சேர்த்து ஆரத்தி எடுக்க,
“ஏன் பட்டம்மா இதெல்லாம்?, இன்னும் எங்களுக்கு கலியாணம் முடியலயே. அப்புறம் எதுக்கு இந்த சம்பிரதாயம் எல்லாம்?” என சலிப்பாக கேட்க,
அவரோ, “என்னைக்கா இருந்தாலும் இவங்க தான் உங்க மனைவின்னு முடிவு பண்ணித்தானே கூட்டிக் கொண்டு வந்து இருக்கீங்க, நீங்க ஒரு முடிவு எடுத்தா அதில இருந்து மாற மாட்டீங்கன்னு எங்களுக்கு தெரியாதா என்ன? நீங்க சும்மா இருங்க தம்பி.” என கூறி இருவருக்கும் பொட்டு வைத்தவர்,
உள்ளே செல்லும் படி கூற,
அபர்ணாவோ, “இந்த கொலை காரனுக்கு என்ன இத்தனை மரியாதை, பில்ட்அப். ஸ்சப்பா முடியல.” என யோசித்துக் கொண்டு,
அதே யோசனையுடன் எதேர்ச்சையாக இடது காலை எடுத்து முதல் அடி வைக்கப் போக,
பட்டென அவளை கைகளில் தூக்கிக் கொண்டவன், வலது காலை வைத்து உள்ளே சென்றான்.
அவளோ, அவனது செய்கையில் திகைத்துப் போய் அவனைப் பார்க்க,
அவனோ, கண் சிமிட்டி அவளைப் பார்த்துக் கொண்டு,
“நீ என்னைப் பத்தியே யோசிச்சுக் கொண்டு, இடது காலை வைக்கப் போனாய். அது தான் உன்னை நானே தூக்கிட்டன் பேபி.” என ராகம் இழுத்துக் கூற,
அபர்ணாவோ, அவனை முறைக்க முயன்றவள் , அவனின் கண்டிப்புப் பார்வையில் சுற்றி உள்ளவர்களை ஒரு முறை பார்த்து விட்டு, கண்களை மூடிக் கொண்டாள்.
சுற்றி இருந்தவர்களோ, அவளின் கண் மூடலை வெட்கம் என எண்ணிக் கொண்டவர்கள்,
“அந்தக் கடவுளாப் பார்த்துத் தான், இவங்க அக்காவை ஓடிப் போக வைச்சு இருக்கார். நம்ம ஐயாவுக்கு இவங்க தான் நூறு சதவிகிதம் பொருத்தமானவங்க.”என தங்களுக்குள் பேசி, இருவருக்கும் நெட்டி முறிக்க,
கண்கள் மூடி இருந்தாலும், காதுகளில் அவர்களின் வார்த்தைகள் விழ, உடல் இறுகிப் போனவள்,
“நடந்த உண்மை முழுவதும் எனக்கு மட்டும் தானே தெரியும்.” என எண்ணிப் பெரு மூச்சு விட்டுக் கொண்டாள்.
அவளால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் அல்லவா அவள் நிறுத்தப் பட்டு இருக்கிறாள்.
அவளின் உடல் இறுக்கத்தை உணர்ந்தவன், உதட்டை கேலியாக வளைத்துக் கொண்டு, தனது அறைக்குள் கொண்டு சென்று இறக்கி விட்டபடி,
“நீ இப்படி எதுவும் பேச முடியாம வாயை மூடிக்கொண்டு இருக்கிறத பார்க்க எனக்கு அப்படி ஒரு ஆனந்தமா இருக்கு வருங்கால பொண்டாட்டி.” என எள்ளலாக கூறினான்.
அவனையே முறைத்துப் பார்த்தவள்,
“எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ பார்த்துக்கிறன்.” என விரலை நீட்டி எச்சரிக்க,
அவளின் விரலைப் பிடித்து முறுக்கியவன்,
“யார்கிட்ட விரலை நீட்டிப் பேசுறாய்?, ஒழுங்கா இருக்கணும் இது என்னோட கோட்டை. இங்க எனக்கு தெரியாம எதுவும் நடக்காது. கொஞ்சம் எனக்கு மரியாதைக் குறைவு வர்ற மாதிரி நீ நடந்துக் கிட்டா…. உன்ன இங்கயே வெட்டிப் புதைச்சுடுவன்.” என கூறி அவளின் விரலை இன்னும் நெருக்க,
வலி பொறுக்க முடியாது, கண்ணீர் விட ஆரம்பித்தாள் அவள்.
அவனோ, அவளின் கண்களை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்து விட்டு,
அவளின் விரலை அழுத்தி விடுவிக்க,
“சே…. கொஞ்சம் கூட மென்மையே தெரியாதவன் போல, விரலை உடைச்சிட்டான்.” என முணு முணுத்தவள்,
அந்த அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு,
“எனக்கு தனி அறை வேணும். உங்க கூட எல்லாம் என்னால தங்க முடியாது.” என சிடு சிடுப்பாக கூற,
அவனோ, “உனக்கு கன்னத்துல அறை வேணும்னா இலவசமா தரேன். ஆனா தங்க தனி அறை மட்டும் கிடைக்காது. நான் எங்க இருக்கிறனோ, இனி நீயும் அங்க தான் இருக்கணும். நான் என்ன சொல்றனோ அதன் படி தான் நீ நடக்கணும். அதுக்கு ஏத்த மாதிரி உன்னை நீயே மாத்திக்கோ.
இல்லன்னா நான் என் ஸ்டைல்ல மாத்த வேண்டி வரும்.” என அழுத்தமாக கூறியவன்,
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. ஒரு மணித்தியாலம் கழிச்சு வரேன்.” என கூறி விட்டு செல்ல. வாழ்க்கை போகும் பாதை எதுவென புரியாது முற்றிலும் கலங்கிப் போய் அங்கிருந்த சோபாவில் தலையைப் பிடித்துக் கொண்டு தொப்பென அமர்ந்தாள் அபர்ணா.
இன்னொரு பக்கம், தமயந்தி உடன் ஊருக்கு கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு,
அவளைக் காண வந்தான் தீரன்.
அவளோ, கால்களை குறுக்கி படுத்து தூங்கி இருக்க,
“ஓஹ்…. மேடம் தூங்கிட்டாங்க போல.” என முணு முணுத்தவன், அவளின் அருகே வந்து கையைக் கட்டியபடி நின்று,
“தமயந்திஈஈஈஈ….” என சற்று அழுத்தமாக அழைக்க,
அவனின் குரலில் பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள் அவள்.
அவனின் குரல் தான் அவளின் மூளையில் மூலை முடுக்கெல்லாம் பதிந்து போய் இருக்கே. ஒரு முறை அழைத்ததுமே, மூளைக்குள் அலாரம் அடிக்க உடனே எழுந்து அமர்ந்து விட்டாள் அவள்.
அவளின் மருண்ட விழிகளைக் கண்டவன், ஒரு முறை அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு,
“என்ன மேடம் இவ்வளவு ஷாக் கொடுத்தும் நிம்மதியா தூங்குறீங்க போல.” என கேட்டு சிரிக்க,
அவளோ, அவனின் கேலி சிரிப்பில், அவனை வெறித்துப் பார்த்து விட்டு,
“நிறைய மனப் பாரங்கள் இருந்தாலும், மூளை சோர்வடைஞ்சு தூக்கம் வரும் சார்.” என விரக்தியாக கூறினாள்.
“டீச்சர் அம்மா இல்ல, அது தான்
எனக்கே பாடம் எடுக்குறீங்க, இருக்கட்டும் பார்த்துக்கிறேன்.”
“சீக்கிரம் எழுந்து வா, நம்ம இடத்துக்கு கிளம்ப எல்லாம் ரெடியா இருக்கு.”என தகவலாக கூறியவன்,
முன் செல்ல, பெரு மூச்சுடன் எழுந்தவளுக்கு இன்னும் கால்கள் நிலை கொள்ள முடியாது தடுமாறியது.
அவள் தடுமாறி மீண்டும் விழப் போக, ஓடி வந்து தாங்கிப் பிடித்தவன்,
“ம்ப்ச்…. எப்போ கடைசியா சாப்பிட்டாய்?, நீ என்ன சின்னக் குழந்தையா?, உன்னை உனக்கு பார்த்துக் கொள்ளத் தெரியாதா?”என அதட்ட,
அவளோ கண்களை தட்டித் தட்டி அவனை விழித்துப் பார்த்தாள்.
“சரியான இம்சைடி நீ.” என அவளை அங்கிருந்த கதிரையில் அமர வைத்தவன்,
வெளியே சென்று விட்டு, சற்று நேரம் கழித்து, உள்ளே வந்தவனின் கைகளில் உணவுத் தட்டு ஒன்று இருந்தது.
சாப்பாட்டு தட்டை அவளிடம் நீட்டியவன்,
“சீக்கிரம் சாப்பிடு கிளம்பணும் லேட் ஆகிடுச்சு.” என கூற,
அவளோ, குனிந்த தலை நிமிராது தட்டை வாங்கிக் கொண்டவள்,
உணவை உண்ணாது அளைந்து கொண்டு இருக்க,
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு அவளின் எண்ணம் புரிந்தது போலும்,
“உன்ன கொல்லணும் என்கிற முடிவுக்கு நான் இன்னும் வரல. அதுக்கு இன்னும் காலம் இருக்கு. அப்படி கொல்றதுன்னாலும் கூட, இப்படி சில்லித் தனமா எல்லாம் விஷம் வைச்சுக் கொல்ல மாட்டன்.”
“நேரடியா சாகப்போறவங்க கண்ணைப் பார்த்து, வலிக்க வைச்சுக் கொல்லுவன். அவங்க கண்ணுல மரண பயத்த காட்டித் தான் கொல்லுவன்.” என கூறியவன்,
தாடையைத் தடவியவாறு,
“இருந்தாலும் சந்தேகம்னு ஒண்ணு வந்தா தீர்த்து வைச்சிடணும் இல்ல.” என கூறியவாறு,
பட்டென்று தட்டினை பறித்து தான் உண்ண ஆரம்பித்தான்.
இரண்டு வாய்கள் உண்டு விட்டு, மிகுதியை அவளிடம் நீட்டி,
“விஷம் எல்லாம் இல்ல சாப்பிடு. என் எச்சில் சாப்பாடு தான் உனக்குன்னு எழுதி வைச்சு இருக்கு.” என வன்மமாக கூற,
அவளோ, அந்த தட்டை வாங்காது, கண்ணீர் வழிய அமர்ந்து இருக்க,
“நீயா சாப்பிடலன்னா…. நானா ஊட்ட வேண்டி வரும். என்ன அழுதாலும் இந்த சாப்பாட்டை நீ சாப்பிட்டுத் தான் ஆகணும்.” என கூற,
வேறு வழி இல்லாது அவன் கூறிய படியே, கை நடுங்க உணவுத் தட்டை வாங்கி கண்ணீர் வழிய உண்ண ஆரம்பித்தாள் தமயந்தி.
தமயந்தியை தீரன் எங்கு கூட்டிச் செல்லப் போகிறான்?
அபர்ணா, ஆதி வீட்டில் எப்படி இருக்கப் போகிறாள்?
ஆண்கள் இருவரின் போக்கும் போகும் பாதை என்ன?
அடுத்த பதிவில் பார்க்கலாம்..
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் ❤❤❤❤
மன்னிச்சு மக்காஸ் கொஞ்சம் வேலைகளில் மாட்டிக் கொண்டேன். அதனால தான் இந்த கேப். இனி தொடர்ந்து எபிகள் வரும்…கண்டிப்பா உங்க சப்போர்ட் கொடுங்க 🥰🥰🥰🥰
உங்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் தான் பூஸ்ட் மக்காஸ்…. கண்டிப்பா லைக்ஸ் கொடுங்க மக்காஸ் ❤❤❤❤❤
Super sis