கோகிலா செம்பாவை தேடி அந்த இடத்திற்கே வந்துவிட்டாள். செம்பா நடந்து வருவதை பார்த்தவள் “உன்னை எங்கெல்லாம் தேடுறது, ஏதோ பச்ச பிள்ளையை தொலைத்த மாதிரி, “ஐயோ என் ஆத்தாவை காணும்னு மாமா ஒப்பாரி வச்சிட்டு இருக்கார். நீ இங்கே என்னடி பண்ற? அப்போ எங்க கூட சாமி பின்னாடி கோவிலுக்கு எல்லாம் வரலையா?”….
“ இல்லடி நான் நடந்து வரும்போது பின்னாடி வந்தவங்க, கூட்டத்துல பின்னாடி சேலையில மிதிச்சுட்டாங்க, அது சேலை லேசா அவிழ்ந்த மாதிரி ஆகிடுச்சி, அதான் கொஞ்சம் மறைவா இருக்கிற இடத்துல கட்டிட்டு வந்தேன். அதுக்குள்ள கூட்டம் நகர்ந்துடுச்சி.” என்றாள் உண்மையை மறைத்து…
“சரி புடவையை கட்டிட்டல்ல”
“ஆமா”
“ஆனால், ஏண்டி உன் முகம் இவ்வளவு படபடப்பா இருக்கு, வியர்த்து எல்லாம் கொட்டுது, என்னாச்சு ஏதாவது பார்த்து பயந்துட்டியா செம்பா? பேய், பிசாசு எதுவும் அடிச்சிடுச்சா”
“இல்லடிம்மா, அம்மா அப்பா எங்க இருக்காங்க?”
“கோவில்ல இருக்காங்க வா” என செம்பாவை அழைத்துக் கொண்டு நடந்தாள் கோகி. செம்பா பின்புறம் திரும்பி பார்க்க அவளை பார்த்தபடியே பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தான் சமர்.
அவனின் சோர்ந்த முகத்தை கண்டு பெண்ணவளின் மனமெல்லாம் ரணமாய் வலித்தது. அளவுக்கு அதிகமான காதல் அவன் மீது, காட்ட முடியாத சூழ்நிலை அவளிடம். இதுவரை தன் குடும்பத்திற்கு நிகழ்ந்த அவமானம் போதும், இதற்கு மேலும் அசிங்கத்தை தேடி தர அவள் விரும்பவில்லை. காலம் முழுவதும் அவன் நினைவில் வாழ்ந்து விடலாம் என நினைத்தாள். நிச்சயமாக அவன் வருவான் என்ற நம்பிக்கையும் அளவுக்கு அதிகமாக இருந்தது. நான் மட்டும்தான் அவனை நேசிக்கிறேன் என்ற நினைப்பில் இருக்க, இல்லை என் காதலுக்கு முன்னாடி உன் காதல் பெரியதில்லை என தன் எதிரே கம்பீரமாய் வந்து நிற்கிறான். ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனிடம் பேசும்போதுகூட அவன் முகம் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி நின்றாள். காலங்கள் ஓடிவிட்டதுதான். இருவரிடமும் உடலளவிலும் மனதளவிலும் அதிகமான மாற்றங்கள். இத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அவன் மீது அவள் கொண்ட காதல் கரையவில்லையே. அவனின் “பட்டாசு” என்ற அழைப்பு உயிர் வரை தீண்டிச் செல்கிறது. அதன்பின்தான் அவளுடைய கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன. சத்தியமாய் சமர் இவ்வளவு தூரம் தன்னை விரும்புவான் என அவள் நினைக்கவில்லை. அந்த கயிறை அவள் கழுத்தில் கட்டும்போது கூட அவன் நினைவாகத்தான் கட்டி சென்றானே தவிர, “என் நினைவுகளை சுமந்து கொண்டு வாழ்” என சொல்லிச் செல்லவில்லை. இறுதியாக அவன் இந்த ஊரை விட்டு செல்லும்போது சிறு குழந்தை போல ஏங்கி ஏங்கி அழுதவளை சமாதானப்படுத்த, “கட்டாயமாக நான் மறுபடியும் உன்னை பார்க்க வருவேன் பட்டாசு. என் நினைவாக இதை வைத்துக் கொள்” என அவன் கழுத்தில் கிடந்த செயினில் இருந்து டாலரை கழற்றி, அவள் கையில் கட்டி இருந்த கருப்பு கயிறை அவிழ்த்து அதில் டாலரை கோர்த்து அவள் கழுத்தில் கட்டி விட்டான். இன்று வரை அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் செவிப்பறையை மோதி செல்கின்றன. அந்த இறுதி வார்த்தையைத்தான் இன்றுவரை இதயத்தில் பொக்கிஷமாய் பூட்டி வைத்திருக்கிறாள். இப்போது கூட தன் பின்னால் வருபவனிடம் ஓடி செல்ல தூண்டுகிறது மனது. ஆனால், முடியாதே! அடுத்தவர்களுக்காக வாழ வேண்டுமா? இல்லை, தனக்காக தான் வாழ வேண்டுமா? என்ற சூழ்நிலையில், அவள். எவ்வளவுதான் அடுத்தவர்களின் வாயில் அவுலாய் விழுவது, தனக்காக வாழ்கிறேன் என்று ஒருத்தி பெற்றவருக்கு அவமானத்தை தேடி கொடுத்தது போதாதா?, நானும் கொடுக்க வேண்டுமா?, என்ற எண்ணம் ஒரு புறம். “ஏன்டி கஷ்டப்பட்டவங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? பணக்காரர்களை பார்த்துதான் பல்லைக் காட்டுவீங்களே, இல்ல உன் ஆத்தக்காரி, நான் தான் கஷ்டப்பட்டவனை பார்த்து போய் விழுந்து செத்துட்டேன், நீயாவது போய் பணக்காரனை புடிச்சிக்கோன்னு சொல்லி அனுப்பி வைத்தாளா” என பாலாவின் அன்னை கற்பகம் பேசிய வார்த்தைகள் இன்று வரை மனதுக்குள் ஆழமாய் பதிந்து விட்டது. அதனாலேயே சமர் மீது வளர்ந்து நிற்கும் காதலை வெறுக்கிறாள். ஆனால் சமரை வெறுக்கவில்லை. இறுகிய கற்பாறைக்குள் புகுந்து வேர்விடும் செடிகளை போல, அவள் இறுகிய மனதிற்குள் ஆழமாய் நுழைந்து விட்டான் சமரன். விதி வழியது வேண்டாம் என்று விலகிச் சென்றாள் விட்டு விடுமா என்ன? அவனுக்கு அவள் தான் என முடிவு இருக்கையில், அவளால் அதை மாற்ற முடியுமா? வாழ்க்கை பல பாதைகளை கொண்டது. எந்த பாதை நமக்கானது என தீர்மானிப்பதும் அதுவே தான்.
செம்பருத்தி தன் அம்மா அப்பாவிடம் சென்று நின்று கொண்டாள். அதற்குப்பின் சமரை அவள் பார்க்கவே இல்லை. அவள் கண் முன்னே தான் வந்து நின்று இருந்தான். அவனின் பார்வை அவளை விட்டு அகலவே இல்லை. “தன்னை நேசிக்கிறாள்” என்பதை அப்பட்டமாக விழிகளே காட்டிக் கொடுக்கின்றன. ஏன் வெறுக்கிறாள் என்பது புரியவில்லை. சரி இன்னும் கொஞ்ச நாள் இங்கேதானே, இருப்போம். எப்படியாவது அவள் மனதை மாற்றி விட வேண்டும் என்ற எண்ணம். ஆனால், அவளை விட்டு விடும் எண்ணம் துளியும் இல்லை. அவள் தனக்கானவள் என்பதை இதயம் இன்றும் பறை சாற்றுகிறதே.
“சமர் எங்களை விட்டு நீ எங்க போன?” என அவனிடம் வந்தால் ஆத்மிகா.
அவனிடம் கொஞ்சிய படி பேசிகொண்டிருந்த ஆத்வியை பார்த்ததும் கோகி அன்று சொன்னது, “ஏழைகளே, பணக்கார பொண்ணுங்களா தேடும்போது பணக்காரங்க, எப்பிடி ஏழை பொண்ணுங்களை தேடுவாங்க,. நேரம் போகறதுக்காக நம்ம கிட்ட பேசுவாங்க, வளிவாங்க அவ்வளவுதான் உண்மையான காதல்ன்னு சொல்றது சுத்த பொய்” என்றது நியாபகத்திற்கு வந்தது செம்பாவிற்கு.
இல்லை “என் ஜித்து காதல் பொய்யாய் இருக்காது” என அவள் மனமே அவளுக்கு சொல்லிக் கொண்டது. இதுவரை அவன் அறியாத வண்ணம் அவனை ரசித்துப் பார்த்தவள், இப்போது சுத்தமாக பார்ப்பதை நிறுத்தினாள்.
சமர் ஆத்வியிடம் “ரொம்ப கூட்டமா இருந்தது, அதான் அங்கே நின்றேன்” என்றான்.
“ஓஹ் சரி சமர். அங்கே வளையல் கடை இருக்கு. எனக்கு வளையல் வாங்கி கொடுக்குறியா?”
வித்யா அப்போதுதான் அவளை நன்றாக பார்த்தாள். நேற்று அவள் அணிந்திருந்த வளையல்கள் கையில் இல்லை. கிளம்பும்போதே ஆத்வி நேற்று வாங்குன வளையலை போட்டுக்கோ, நீ கட்டியிருக்குற புடவைக்கு ரொம்ப அழகா இருக்கும் என்றதும் “சரி” என்றாள். ஆனால், அதை அணியாமல்தான் வந்திருக்கிறாள் என்பதை இப்போதுதான் பார்த்தாள். எதற்கு என்ற காரணம் புரிந்தது “சமரின் கையால் வளையல் வாங்கி போட வேண்டும்” என ஆசைப்படுகிறாள்போல என நினைத்துக் கொண்டாள் வித்யா.
செம்பாவை பார்த்தான். “அவளோ,அவள் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்க, சரி போயிட்டு சீக்கிரம் வந்துவிடலாம்” என ஆத்வியை அழைத்து சென்றான் சமர்.
கடைக்கு அழைத்து வந்தவன் “உனக்கு எந்த வளையல் பிடித்து இருக்கோ, எடுத்துக்கோ ஆத்வி” என்க…
அவள் ஒரு வளையலை கைகாட்ட கடைக்காரர் அதை எடுத்து மாட்டிவிட போக, கொடுங்க நானே மாட்டிக்கிறேன் என வாங்கிக் கொண்டாள்.
சமரிடம் வளையலை நீட்ட, “என்ன” என கேள்வியாக அவளை பார்த்தான்.
“ நீயே எனக்கு மாட்டி விடு சமர்” என ஆத்வி சொல்ல
“எனக்கு தெரியாது ஆத்வி. உடைஞ்சிடுச்சினா கஷ்டமாகிடும், நீ அவர்கிட்ட கொடுத்து போடு” என்றதும் ஆத்மி முகம் வாடிவிட்டது
எப்படியும் சமர் போட்டு விட மாட்டான் என தெரிந்ததும் கடைக்காரரிடமே மாட்டி கொண்டு வந்து நின்றாள்.
பாலா அவளை பார்த்து நக்கலாக சிரிப்பது போல இருந்தது. அவனை முறைத்துக் கொண்டு திரும்பி விட்டாள்.
கோவிலில் உச்சிகால பூஜை நடக்க எல்லோரும் சாமி கும்பிட்டு முடித்துவிட்டு கலை நிகழ்ச்சிகளை பார்க்க அமர்ந்தனர். ஆனால், செம்பா காலையில வேலைக்கு போகனும்மா. நீங்க இருந்து நிகழ்ச்சியை பார்த்துட்டு வாங்க, நானும் கோகிலாவும் வீட்டுக்கு போறோம்.
“ஏண்டி கொஞ்ச நேரம் இருந்து பாத்துட்டு போயேன்” என சந்திரா சொல்ல…
“இல்லம்மா நாளைக்கு முதல் தடவை வேலைக்கு போறோம். அங்க போய் தூங்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்”
“சரிடா நீ எல்லாம் சொல்ல வேண்டாம். கொஞ்சமாவது சொல்லு, இல்லன்னா என் தலையே வெடிச்சிடும்”
“என் தேவதையை தேடுறேன்டா”
“தேவதையா? என்ன? இங்கே வந்து உனக்கு பொண்ணு பாக்குறியா என்ன..?”
“ஆமா…. பொண்ணு பாத்துட்டேன், பொண்ணுதான் கொஞ்சம் முரண்டு பிடிக்குது”
“முரண்டு பிடிக்குதா, யாரடா சொல்ற?”
“எல்லாவற்றையும் சொல்லும்போது சொல்றேன்”
“இப்போ சொன்னாத்தான் என்னவாம்?”
“நீ இந்த ஊரு காரன் இல்லை மச்சான், அதனால வேண்டாம் மச்சான், எதுக்கு மச்சான், வீணாக ஏன் மச்சான், பிரச்சனைக்குள்ள போற மச்சான்னு சொல்லிட்டு 1008 மச்சான் போடுவ, அதான் சொல்லல….”
“சரிடா அதை நீயே பாரு. ஆத்விகிட்ட நேராவே உன் மனசுல அவளை பற்றிய எந்த எண்ணமும் இல்லன்னு பேசிட வேண்டியதுதானடா”
“என்ன பேச சொல்ற, நான் அவகிட்ட மறைமுகமாகவே என் மனசுல அவளை பற்றின எந்த நினைப்பு இல்லைன்னு சொல்றேன். அதுவே, புரிஞ்சுக்காம இருக்காள். அவ மனசு கஷ்டப்படக்கூடாது அப்படிங்கற எண்ணத்தில்தான் மறைமுகமாக சொல்கிறேன். நான் என்னடா பண்றது?, சின்ன வயசுல இருந்தே நம்ம கூடவே வளர்ந்துட்டாள். திடீர்னு முகத்தில் அடிக்கிற மாதிரி பேச கஷ்டமா இருக்கு பாலா”
“சரி கேம்ப் முடிஞ்சு போறதுக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணிடுங்க சார்.”..
“சரிடா”
“அப்புறம், நான் இன்னைக்கு நைட்டு இங்கே தான் தங்கனும். நீ ப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வீட்டுக்கு போய்டு சமர்.”
“ஏன்டா?”
“காலைல பால் குடம் எடுக்குறவங்க இன்னைக்கு கோயில்லதான் தங்கனும்”
“சரி அப்போ நானும் உன் கூடவே தங்கிடுறேன்.”
“வேணாம் சமர். நீ இங்கே தங்கிடமாட்ட வீட்டுக்கு போ” உங்களுக்கு துணைக்கு அப்பா வருவாங்க.”
“அப்பாவை ஏன்டா அலைய வைக்கிற? எனக்கு பழக்கபட்ட ஊருதான். நான் பார்த்துக்கறேன்” என நண்பர்களுடன் கொஞ்ச நேரம் கோவிலில் இருந்துவிட்டு கிளம்பினான்.