இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 23

5
(6)

வீட்டிற்கு வந்த நல்லசிவம், சந்திராவிடம் “என் ஆத்தாவை எங்கே சந்திரா?” என கேட்க “இப்போதாங்க, இரண்டுபேரும்   வேலைக்கு போறாங்க” என்றதும் “சரி” என அமைதியாக  வீட்டில் ஒரு ஓரமாய் படுத்துக்கொண்டார்.

இரவு 7 மணி கடற செம்பா, கோகி இருவரும் வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

“என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு ஏன்டி இவ்வளவு இருட்டா இருக்கு, தெருவிளக்கு எல்லாமே ப்யூஸ் போய்டுச்சா என்ன?

பார்த்தால் அப்படி தெரியலை. யாரோ வேணும்னே ஆஃப் பண்ணி போட்ட மாதிரியே இருக்கு” என்றாள் கோகி.

“உன் மூளை மட்டும் அப்படித்தான் யோசிக்கும்” என செம்பா வண்டியை ஓட்டிக் கொண்டு வர சட்டென்று பிரேக் அடித்து நிறுத்தினாள்.

நிறுத்திய வேகத்தில் செம்பாவின் மீது பலமாக இடித்தாள் கோகி.

“ஆஹ் அம்மா, என்னடி ஏன் நிறுத்துன, என்க, செம்பாவின் நிலை குத்திய பார்வையில், அந்த இடத்தை கோகியும் பார்க்க… அப்போதுதான் தங்கள் முன்னால் நின்றிருந்த காரினை கவனித்தாள் கோகிலா.

“இது யாரடி நடுரோட்டில் காரை நிறுத்தி வச்சது, கரண்ட் இல்லன்னதும் கண்ணு தெரியலை போல, நம்ம மேல இடித்துவிடாமல் ஸ்கூட்டியை அந்த பக்கம் திருப்பு” என்றதும் செம்பா வேறு பக்கம் திரும்ப போக, அந்த கார் அவர்களை போக விடாமல் தடுத்தது.

“செம்பா ஏதோ தப்பா இருக்குற மாதிரி இருக்கு” என கோகி பயம் கொள்ள, “பயப்படாத கோகி எதுவும் ஆகாது” என்று ஸ்கூட்டியை மறுபடியும் வேறு பக்கம் திருப்பப் போக, கார் அவர்களின் பாதையை மறைத்தது, சடசடவென காரிலிருந்து நான்கு, ஐந்து பேர் இறங்கி செம்பாவின் கையை பிடித்து இழுக்க, கோகி தடுத்தாள். அப்போது வண்டியில் இருந்த ஒருவன் “டேய் அந்த பொண்ணு தலைல ஒரு போடு போடுடா” என்றதும் அங்கிருந்து ஒருவன் கட்டையால் கோகி தலையில் ஓங்கி ஒரு அடி வைக்க, அப்படியே மயங்கி சரிந்தால் கோகிலா.

அதை பார்த்த செம்பா “கோகி, கோகி”என சத்தமிட, மயக்கமருந்து தடவிய கைக்குட்டையை அவள்  மூக்கில் வைக்க மயங்கி சரிந்தாள் செம்பா.

“டேய் அவளை சீக்கிரம் தூக்கி வண்டியில் போடுங்கடா, மருது அண்ணா  தோப்புக்கு போகனும். இந்த மருந்து கொஞ்ச நேரம் தான் நிற்க்கும். அதுக்குள்ள நம்ம இவளை அண்ணாகிட்ட ஒப்படைத்தால் மட்டும் போதும். நம்ம வேலை அதோடு முடிந்தது. அதுக்கப்புறம் நடக்கவேண்டியதை அண்ணா பார்த்துப்பார். சீக்கிரம் வாங்கடா” என அந்த கும்பலின் தலைவன் சொன்னதும் செம்பாவை தூக்கி காருக்குள் வைத்தனர். கார் வேகமாக மருதுவின் தோப்பை நோக்கி சென்றது..

காலையில் சொன்னது போல செம்பா வருவதற்காக காத்துக் கொண்டிருந்தான் சமர். அவள் வரும் நேரம் தாண்டி விட செம்பாவின் எண்ணிற்கு அழைத்தான் அழைப்புச் செல்லவில்லை. போன் ஸ்கூட்டி பக்கத்தில் இருந்த ஒரு செடிக்குள் கிடந்தது. “என்ன ஆச்சுன்னு தெரியலையே ஏன் போன் எடுக்க மாட்றாள், சரி நம்மலே நேர்ல போய் பார்க்கலாம்’ என மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வந்தான் சமர்.

அங்கே ரோட்டில் ஒரு ஸ்கூட்டி ஓரமாகக் கிடக்க ‘பைக் ஆக்ஸிடென்ட் மாதிரி இருக்கே’ என பைக்கை அங்கே நிறுத்தியவன், ஸ்கூட்டியை பார்த்ததும் இது பட்டாசு ஸ்கூட்டில்ல என்றவனின் மனம் படபடத்தது.  பட்டாசு‌, பட்டாசு!, என  சத்தமிட, ‘ஒருவேளை விபத்து நடந்து கீழே விழுந்துட்டாங்களோ’ என நினைத்து போன் ஒளியில் சாலையோரம் தேட, அங்கே கோகி தலையில் குருதி வழிய கிடந்தாள். அவளை பார்த்து அதிர்ந்தவன் “கோகி, கோகி” என்னடா நடந்தது” என கன்னத்தில் தட்ட, மெதுவாக கண்களை திறந்தாள்.

“ண்ணா… செம்பா… ண்ணா” என்ற வார்த்தை மட்டுமே வந்தது.

“ உனக்கு எப்படி அடிபட்டத்து கோகி. செ..செம்பா எங்கே? நீ மட்டும் இருக்க என்னாச்சிம்மா?” என கேட்க… முழுவதும் மயங்கும் நிலையில் இருந்த கோகி. “அ..ண்ணா… செ..செம்பா… தோ..தோப்பு.. ம..மருது” இந்த வார்த்தையை மட்டும் திருப்பி திருப்பி சொல்லியபடி இருக்க ஏதோ தவறாக நடந்து இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. கோகியும் முழுவதும் மயங்கவிட்டாள். கோகி இருக்கும் நிலையை கருத்தில் கொண்டு, அவளை தனியாக விட்டுவிட்டு செல்ல முடியாது. என்பதை உணர்ந்தவன் உடனே பாலாவிற்கு அழைத்து இடத்தை கூறி காரை எடுத்து வருமாறு சொன்னான். ஐந்து நிமிடத்திலேயே பாலா அங்கே வந்து சேர, அவனிடம் கோகியை “பத்திரமா, நம்ம வீட்டுக்கு கொண்டு போ, அவங்க வீட்டுக்கு அனுப்ப வேண்டாம். செம்பா இல்லாமல் போனால் எல்லாரும் பயந்துடுவாங்க, அவளை பத்திரமாக இருக்க சொல்லு. வீட்ல இருந்து போன் பண்ணா, முக்கியமான கேஸ் ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு இருக்கோம்னு மட்டும் சொல்ல சொல்லு. அதுக்குள்ள நான் எப்படியாவது செம்பாவை கண்டுபிடிச்சு கூப்பிட்டு வந்துடறேன்” என்றான் சமர்.

“நீ மட்டும் தனியா எப்படி போவ? நானும் வரேன்” என்றான் பாலா.

“கோகியை கூப்பிட்டு, நாங்க தங்கிருக்குற வீட்டுக்கு போ, எனக்கு தேவை என்றால் உடனே நான் உனக்கு போன் பண்றேன். அதுக்கு அப்புறம் நீ வா” என்றவன் உடனடியாக அவன் பைக் எடுத்துக் கொண்டு மருதின் தோட்டத்தை நோக்கி சென்றான்.

முழுவதும் தோட்டக்காடு. அந்த இடமே கும்மிட்டாக இருந்தது. இங்கே யாரும் வந்திருப்பது போல தெரியவில்லை. காரோ பைக்கோ எதுவுமே அந்த இடத்தில் இல்லை. ‘வேறு எங்கும் சென்று விட்டார்களா’ என சந்தேகத்திலேயே அந்த இடத்தை சுற்றி சுற்றி வர, மருதின் குடிசையில் மட்டும் லேசாக விளக்கு எறிவது போல் தெரிந்தது.

“அங்கே போய் பாக்கலாமா இல்லை, வேற இடத்தில் தேடலாமா’ என யோசனையோடு நின்றவன் ‘எதற்கும் அந்த குடிசையை பார்த்துவிட்டு வருவோம்’ என தன் போனின் விளக்கொலியில் அந்த இடத்தை நோக்கி நகர்ந்தான்.

அந்த குடிசையில் இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. ஒரே நிசப்தமாக இருந்தது. சின்ன சின்ன வண்டுகளில் ஒலியும், பட்சிகளின் சத்தம் மட்டுமே அந்த இடத்தில் நிறைந்திருந்தனர். அப்போது யாரோ உள்ளே நடமாடுவது போல சத்தம் கேட்க, ‘உள்ளே ஆள் இருக்கிற மாதிரியே தோணுது, ஒருவேளை நமக்கு தான் பிரம்மையா’ என நினைத்தவன் எதற்கும் கதவை திறக்கலாம் என கதவில் வெளிச்சத்தை பரப்ப, வெளியே பூட்டாமல் உள்ளே பூட்டிருப்பது நன்றாக தெரிந்தது. ‘அப்போ உள்ளே ஆள் இருக்காங்க’ என்பதை உறுதிப்படுத்தியவன் கதவை ஓங்கி மிதித்தான்.

அந்தப் பக்கம் நின்றிருந்த மருது கையில் கட்டையுடன் மூச்சு விடாமல், கதவை திறக்காதபடி பிடித்திருந்தான்.

‘இவன் எப்படி என்னோட இடத்தை கண்டுபிடித்து வந்தான் என்ற குழப்பத்தில்,  மயக்கமாக இருந்த செம்பாவை பார்த்து உன்னை அனுபவிக்காமல் விடமாட்டேன்டி. இன்னைக்கு என்னோட விருந்தே நீதான். முதல்ல இவனுக்கு சங்கு ஊதிட்டு அப்புறம் உன்கிட்ட வாறேன்” என சமரை கொல்லுவதற்கு தயாராக நின்றான் மருது.

“சமர் மிதித்த மிதியில் கதவு திறந்தது. உள்ளே வந்த சமரின் மீது பாய்ந்தான் மருது. அவனை ஒரே தள்ளாத தள்ளி கீழே விழ வைக்க, கீழே கிடந்த அரிவாளை தூக்கி சமரை முறைத்தபடி எழுந்தான் மருது.

சமர் செம்பாவை தேட, மங்கலான அகல்விளக்கு ஒலியில் ஒரு நாற்காலியில் செம்பாவை கை, கால்ளை கட்டி, அவள் சத்தமிடாதவாறு வாயிலும் கட்டு போட்டு வைத்திருந்தனர். இன்னும் மயக்கம் தெரியவில்லை.

மருது சமரை நோக்கி அரிவாளை ஓங்கிக் கொண்டு வர அவன் நெஞ்சிலே எட்டி மிதித்தான் சமர். விழுந்தவன் அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து சமரின் காலில் எரிந்தான். காலில் பட்டதும் சமர் தடுமாறி கீழே விழ, ஓடிவந்த மருது சமரின் கைகளில் கட்டையால் அடித்தான். சமர் லாவகமாக அவன் முகத்தில் ஓங்கி குத்து விட்டவன், கட்டையை அவன் கையில் இருந்து பிடுங்கி, மருதுவின் தலையில் அடிக்க தள்ளாடியபடி கீழே விழுந்தான் மருது. இன்னும் செம்பா மயக்கம் தெரியாமல் இருப்பதை பார்த்தவன். அங்கே தண்ணீர் இருக்கிறதா என பார்க்க ஒரு மண்பானை இருந்தது. அதில் தண்ணியை எடுத்து செம்பாவின் மீது தெளிக்க லேசாக கண்களை சுருக்கி முழித்தாள். எல்லாமே மங்கலாக தெரிய கண்களை கசக்கினாள் செம்பா‌.

 அப்போது சமரின் பின்னால் வந்து கட்டையால் அடித்தான் மருது. திரும்பி பார்த்த சமர் காலால் எட்டி உதைத்து அங்கிருந்த இன்னொரு கட்டையை எடுத்து மருதுவின் தலையிலேயே அடிக்க தள்ளாடியபடி மீண்டும் கீழே விழ போனவன் அங்கே எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கை தட்டிவிட, கீழே விழுந்து உடைந்தது. அதில் இருந்த மண்ணெண்ணெய் எல்லாம் சிந்திவிட லேசாக அந்த இடம்  தீப்பிடிக்க ஆரம்பித்தது. சண்டையிட்டதில் அதை கவனிக்கவில்லை முவரும்.  கட்டையை எடுத்து  மருது எழுந்து ஓடாத வண்ணம் அவன் கால்களிலேயே அடித்தான் சமர்.. வலியில் அலறினான் மருது.

“ஏன்டா நாய்களா!, பொண்ணுங்கன்னா உங்களுக்கு கிள்ளுகீரையா, நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா, பொண்ணுங்க உடம்பை பார்க்காமல் உன்னை, என்னை மாதிரி ஒரு‌ உயிரா பாருங்கடா நாய்களா” என கட்டையால் அவன் முகத்தில் அடித்தவன் “அன்னைக்கு அந்த பொண்ணை கடத்த பார்த்த, இன்னைக்கு என் செம்பாவே கடத்திருக்க, இனிமேலும் உன்னை உயிரோட விட்டால் நான் பிறந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்டும்” என எந்த இடமென பார்க்காமல் அவன் உடல் முழுவதும் கொலைவெறியில் அடியில் வெளுத்தான். முகம் கிழிந்து ரத்தம் வெளியேற, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. அதேநேரம் குடிசை முழுவதும் தீ பரவி அதிகமாகி விட, அதை உணர்ந்த சமர் தன்னை பார்த்துக் கொண்டிருந்த செம்பாவிடம் வந்து, கை கால்களில் இருந்த கட்டுகளை அவிழ்த்து அவளை இழுத்துக் கொண்டு வெளியே வர, மருதோ வெளியே வர நகரகூட முடியாமல் வலியில் உலறி கொண்டு இருந்தான். அப்போதுகூட உயிரை காக்கும் மருத்துவனாய் அவனையும் வெளியே கொண்டு வர நினைக்க, குடிசை மொத்தமும் எறிந்து உள்ளே விழ, சமரால் அதற்குள் போகமுடியாத அளவு தீ கொழுந்துவிட்டு எறிந்தது.

“ஏங்க” என செம்பா சொல்ல வர, “நீ எதுவும் சொல்ல வேண்டாம் செம்பா. அவனை பற்றி எனக்கு எல்லாமே தெரியும். அவனால் சீரழிந்த பொண்ணுங்க அதிகம். போலிஸ்க்கு போனாலும் பணபலம் ஆள்பலத்தை வைத்து சுலபமா வெளியே வந்துடுவாங்க. வந்து மறுபடியும் இதே தவறைதான் செய்வான். திருந்தலாம் மாட்டான்.. பொண்ணுங்கன்னா இவனை மாதிரி ஆளுங்களுக்கு காமத்துக்கு மட்டும்தான்னு நினைச்சுட்டு இருக்காங்க. இவனுங்களாம் இந்த பூமியில் வாழவே தகுதி இல்லாதவனுங்க அதான் கடவுளே அவனுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டார்”, என்றவன் அவள் கையை பிடித்து அந்த இடத்தை விட்டு தள்ளி அழைத்து வரவும். தீ எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள தோட்டக்காரர்கள் எல்லாம் அந்த இடத்தை நோக்கி ஓடி வந்தனர். அவர்களின் கண்ணில் படாதவாறு செம்பாவும் சமரும் ஒரு இடத்தில் மறைந்து நின்று கொண்டனர். பயத்தில் அவனை இறுக்கமாக அணைத்திருந்தாள் செம்பா.

அங்கே இருந்த தண்ணிரை கொண்டு எரிந்த தீயை அணைத்து உள்ளிருந்த மருதுவை வெளியே எடுத்தனர். உடல் எல்லாம் கருகி அகோரமாய் காட்சியளித்தான். அங்கிருந்த சிலர் அவன் காதுபடவே “இவன் பண்ண பாவத்துக்கு இது தேவைதான்” என்க, ஒரு சிலரோ “இதுவே கம்மிதான் பணம் இருக்குற திமிர்ல எத்தனை பெண்கள் வாழ்க்கையை நாசம் பண்ணிருப்பான். அதற்கு சரியான தண்டனை கடவுள் கொடுத்திருக்கிறார்” என்றனர்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து அவனை ஏற்றிக்கொண்டு செல்ல, ‘சமருக்கு நன்றாகவே தெரியும் அவன் உடல் முக்கால்வாசி தீயிலேயே வெந்துவிட்டது. அவன் உயிர் பிழைப்பது கஷ்டம். இப்படிப்பட்டவர்கள் பூமிக்கு பாரமாய் வாழ்வதைவிட இல்லாமல் இருப்பதே நல்லது’ என நினைத்துக் கொண்டு அங்கிருந்து செம்பாவை பத்திரமாக அழைத்து சென்றான்.

செம்பா இன்னும் அந்த பயத்தில் இருந்து வெளியேவரவில்லை சமரின் கரங்களை இறுக்கமாக பிடித்திருந்தாள். மருதுவின் அலறல் சத்தம் அவள் காதில் கேட்பது போலவே இருந்தது.

சமர் வீட்டிற்கு அழைத்து வர, கோகி செம்பாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள்..

“கோகி உனக்கு ஒன்னும் இல்லையே” என அவள் கட்டுப்போட்ட தலையை செம்பா மெதுவாக வருட, “எனக்கு ஒன்னும் இல்லடி, அண்ணா காப்பாத்திட்டாங்க உனக்கு ஒன்னும் இல்லல்ல” என கோகி கேட்க

“எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லபடியா வந்துட்டேன்” என்றாள்

“பாலா ஸ்கூட்டி எங்கே?” என சமர் கேட்க கோகுல் ஸ்கூட்டியை கொண்டு வந்து விட்டான்.

“செம்பா ஸ்கூட்டியில் போய்டுவல்ல, இல்லை நான் கொண்டு விடவா?” என சமர் கேட்டதும்…

“ நான் போய்டுவேன்” என்றாள்.

“அப்புறம் அங்கே நடந்த விஷயத்தை” என சமர் சொல்ல வர…

“வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லனுமா அண்ணா” என்ற கோகியின் தலையில் கோகுல் மெதுவாக தட்ட:வலியில் “ஆஹ்” என்றவள்.

“ஏன்டா என்னை அடிச்ச?” என கோகுலிடம் சண்டைக்கு செல்ல…

“தலையில் கட்டு போட்டும் நீ அடங்கலை. அவனுங்க உன் வாயிலையே அடிச்சிருக்கனும்.”

“யோவ் நீ ரொம்ப பேசுற?”

“யாரு நானா? நீதான் எப்பவும் முந்திரிகொட்டை மாதிரி நடந்துக்குற. இருக்குற இடத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கனும். சமர்‌ என்ன சொல்ல வரான்னு கேட்டுட்டு பேசு” என்ற கோகுலை அவளால் முடிந்த மட்டும் முறைத்தாள்”.

“வீட்ல இதை பத்தி எதுவுமே பேச வேண்டாம். அன்னைக்கு உன்னை கடத்தினது கூட மருதுதான். அது எங்களுக்கு அடுத்த நாளே தெரிஞ்சிருச்சு. இப்போ அவனோட வாழ்க்கை கிட்டத்தட்ட முடிஞ்சிருக்கும். இதை நீங்க வீட்ல சொல்லி வீட்ல உள்ளவங்களை எல்லாம் பயம் காட்ட வேண்டாம். சரியா, இனிமே மருதுன்னு ஒருத்தன் இல்லை. அவனால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை. நீங்க ரெண்டு பேரும் பத்திரமா வீட்டுக்கு போங்க” என அனுப்பி வைத்தான் சமர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

1 thought on “இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 23”

  1. அருமை சகோதரி…
    ஐய்யோ கோகி தங்கமே love you di pattu♥️♥️♥️♥️👄😊😊😊

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!