இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 24

4.8
(5)

செம்பாவும், கோகியும்  வீட்டிற்குள் வர சந்திரா, ராசாத்தி மட்டும் வெளியே அமர்ந்து பேசியபடி இருந்தனர். நல்ல சிவத்தை காணவில்லை.

கோகியை பார்த்ததும் “ஏய் என்னடி இது தலையில் கட்டு” என்றார்.

“அதுவா அத்தை தலையில் கட்டுபோட்டா, தங்கநாணயம் பரிசா தர்றதா சொன்னாங்க, அதான் போட்டுருக்கேன்.”

“தங்கத்தை எங்கடி?” என ராசாத்தி கேட்க,

“நீயெல்லாம் தாயா? ஒரு பேச்சிற்கு சொன்னால் உண்மையா கேக்குற?”

“நீதான்டி சொன்ன, கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதிலை சொல்லு” என்றார் ராசாத்தி.

“வேலை முடிந்து வெளியே வரும்போது கால் இடறி கீழே விழுந்துட்டேன். தலையில் அடிபட்டுடுச்சி அத்தை” என்றாள் கோகி.

“பார்த்து வரக்கூடாதா” என சந்திரா சொல்ல,

“தரையை பார்த்து நடக்கனும் மேலே பார்த்து நடந்தால் இப்படிதான் ஆகும்.”

“ம்மா…” என ராசாத்தியை முறைக்க…

“ராசாத்தி சும்மா இரு, பிள்ளைகிட்ட சண்டை இழுக்குறதே உனக்கு வேலையா போய்டுச்சி” என்றதும் இருவரும் அமைதியாகினர்.

“ம்மா அப்பா எங்கே?” என செம்பா கேட்க…

“உங்க அப்பா நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்து படுத்துட்டாருடி”

“சாப்பிட்டாறாம்மா”

“கொடுத்தேன் கொஞ்சம் சாப்பிட்டார். தூக்கம் வருதுன்னு சொல்லி படுத்திட்டார். நீ போய் குளிச்சிட்டு துணிய மாத்திட்டு வாங்க, சாப்பிடுங்க நேரம் ஆயிடுச்சு. வர வர ரொம்ப நேரம் தாண்டி வர்றீங்க, வேற ஹாஸ்பிடல்ல வேலை இருந்தால் பார்க்க கூடாதா?”.

“அம்மா எங்க போனாலும் இப்படித்தான் இருக்கும். ஒரு நாள் முன்ன பின்ன ஆகலாம். எல்லா நாளும் நாங்க லேட்டாவா வர்றோம். அது மட்டும் இல்லாமல், நம்ம ஊரு பக்கத்துல கிளினிக்தான் இருக்கு. வேற ஹாஸ்பிடல் இல்லமா.”

“என்னமோ சொல்றீங்க, படிச்ச புள்ளைங்க பார்த்து நடந்துக்கோங்க” என்றார் ராசாத்தி.”

இரவு மணி 11 தாண்டியது. மெதுவாக எழுந்து அமர்ந்தார் நல்ல சிவம். சந்திரா தூங்கிவிட்டார். செம்பா தூங்காமல் சமருடன் மெஸேஜ்ஜில் பேசிக் கொண்டிருந்தாள்.

நல்ல சிவம் எழுந்து அமர்வதை பார்த்ததும் சமரிடம் பேசிவிட்டு தன் தந்தையிடம் வந்து அமர்ந்தாள்.

“அப்பா சாப்பாடு கொண்டு தரவா” என கேட்ட தன் மகளை வாஞ்சையுடன் பார்த்தவர் “எனக்கு ஒன்னும் வேண்டாம் ஆத்தா எனக்கு பசிக்கலை”

“என்னாச்சுப்பா? ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?”

“தெரியலை ஆத்தா. மனசு ஒரு மாதிரியா இருக்கு,” அப்போது நல்லசிவம் லேசாக நெஞ்சில் கை வைத்து முக சுழிப்பை காட்ட,

“என்னப்பா ஏதாவது பண்ணுதா” என கேட்க…

“ எனக்கு என்னடா பண்ணப்போகுது ஒன்னும் பண்ணலை, இப்படி உட்காரு” என தன் மகளை பார்த்தபடி இருந்தார்.

“என்னப்பா அப்படி பாக்குறீங்க?”

“இனிமே என்னால பார்க்க முடியுமா முடியாதோ?” என சிவம் சொல்ல…

“ஏன்ப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க, உங்களுக்கு ஏதாவது பண்ணுதா ஹாஸ்பிடல் போகலாம், வாங்கப்பா” என பதறிய மகளை தோளோடு அணைத்தவர். “எனக்கு ஒன்னும் பண்ணாது. நீ பக்கத்துல இரு போதும்” என்றார்.

  தந்தையும் மகளும் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டு கண்களை திறந்தார் சந்திரா.

“என்னாச்சு, நடு சாமத்துல உட்க்கார்ந்து, அப்பனும் மகளும் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கிங்க” என்றார்.

“அம்மா, அப்பா பேசுறது எனக்கு பயமா இருக்கு, என்னனு கேளுங்க”

“என்னடி சொல்ற” என எழுந்து நல்லசிவத்திடம் வந்தவர் “ஏங்க என்னாச்சி?” என்றார்.

“எனக்கு ஒன்னும் இல்ல சந்திராம்மா, நீ பயப்படாதே”

நல்லசிவத்திற்கு லேசாக இதயத்தின் வலி அதிகமாகியது. பாராங்கல்லை வைத்து அழுத்துவது போல இருக்க, ஆனால் அதை மறைத்தபடியே தன் மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“ஆத்தா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இதை உனக்கு சர்ப்ரைஸா வச்சுக்கணும்னு நினைச்சேன். ஆனால் முடியாது போல இப்பவே சொல்லிடவா?” என ஒரு மாதிரியாக பேச…

“அப்பா முதல்ல ஹாஸ்பிடல் போலாம். அதுக்கப்புறம், நீ என்ன வேணாலும் பேசு” என செம்பா அழைக்க பிடிவாதமாக அமர்ந்தவர். “நீ என் பக்கத்துல உட்க்கார். உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என சொன்னதையே சொன்னார்.

“சரி சொல்லுப்பா, என்ன?” என கேட்க…

“நான் சொன்னா நீ கோபப்பட மாட்டியா ஆத்தா”

“நான் ஏன்ப்பா? உன்மேல கோபப்பட போறேன் என் அப்பா பற்றி எனக்கு தெரியாதா!”

“உனக்கு ரஞ்சியை பிடிக்குமா?”

“என்னப்பா இப்படி கேக்குறீங்க. எனக்கு அம்மாவா இருந்து பாதினால் வளர்த்தவள். அவளை எனக்கு எப்படி பிடிக்காமல் போகும்.”

“இல்லை ரஞ்சி. நம்மளை எல்லாம் அவமானப்படுத்தி ஓடி போயிட்டாளேன்னு உன் மனசுல வருத்தம் இருக்கு தானே”

“வருத்தம் இல்லாம எப்படிப்பா இருக்கும். வருத்தம் இருக்கு. ஆனால், அவ மேல எனக்கு கோபம் இல்லப்பா, அந்த வருத்தம் கூட சம்பந்தமே இல்லாமல் ஏழுமலை மாமா அசிங்கப்பட்டு நின்னாங்கல்ல, அது மட்டும் தான் எனக்கு வருத்தம்” என்றாள் செம்பா.

“ரஞ்சி ஓடி போய்டுவான்னு ஏழுமலைக்கு ஏற்கனவே தெரியும்”

“என்னப்பா சொல்றீங்க?”

“ஆமா ஆத்தா, ரஞ்சி என்கிட்ட இரண்டு நாளுக்கு முன் பேசினாள்”.

“அக்காவா?”

“ஆமா ஆத்தா. ரஞ்சி கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடியே ஏழுமலைகிட்ட அவள் காதலிக்கிற விஷயத்தை பற்றி பேசி இருக்காள். ஆனால் அவங்க ரெண்டு பேரோட கல்யாண விஷயத்துல, நானும் ராசாத்தியும் ரொம்ப பிடிவாதமா இருக்குறோம்ன்னு தெரிந்ததால், எங்ககிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியாமல் இரண்டு பேரும் இந்த முடிவு எடுத்து இருக்காங்க. ராசாத்திகிட்ட மறைமுகமாக ஏழுமலை “இந்த கல்யாணம் இப்போ வேணுமாம்மா, பிறகு வைக்கலாமே” என பேச, அவரோ “இந்த கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா என்னை உயிரோட பார்க்கமுடியாதுன்னு சொல்ல” அதனால் ஏழுமலை, ரஞ்சிகிட்ட “கல்யாணத்து முன்னாடி நீ விருப்படுறவங்ககூட போய்டு, இதை தவிர வேற உன்னாலயும் க்ஷ, என்னாலயும் எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லி இருக்கான். அதனால வேற வழி இல்லாமல்தான் ரஞ்சி நம்ம வீட்டை விட்டு வெளியே போய் இருக்காள்” என்றார்.

“நம்மகிட்ட ஒருவார்த்தை சொல்லிருக்கலாமேப்பா”

“எப்படிம்மா சொல்ல சொல்ற, நாங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணதுல அதிகமா இழந்தது உங்க அம்மாதான். நான் என் குடும்பத்தோட சேர்ந்துட்டேன். ஆனால் அவளால் இப்போ வரை அவளோட அம்மாகிட்ட கூட பேசமுடியாமல் அவ தவிக்கிற தவிப்பு என் கண்ணால் நான் பார்த்திருக்கேன். அதை பார்த்த ரஞ்சி, எங்ககிட்ட சொன்னால் கண்டிப்பா சம்மதிக்க மாட்டோம்னு நினைச்சி அவ விரும்புனவனோடயே கிளம்பி போய்ட்டாள்.

“அக்கா என்ன சொன்னாலூம் நம்ம பட்ட அவமானம் மறையாதுல்லப்பா”

“அதுக்காக அவளை உங்க அம்மா மாதிரியே தவிக்க விட சொல்றியா ஆத்தா”.

“இதுல நான் சொல்றதுக்கு எதுவும் இல்லப்பா. அத்தை சொல்லனும். நம்மைவிட அதிகமா அவமானப்பட்டது அவங்க தானே.”

“நான் பேசிட்டேன் ஆத்தா. என் தங்கச்சியும் “அவள் பண்ணது தப்புதான் அண்ணா. அவளுக்கு நம்மளைவிட்டால் யார் இருக்காள் வர சொல்லுண்ணாண்ணு சொல்லிட்டாள்” செம்பா.

“உண்மையா அத்தை அக்காவை வர சொல்லிட்டாங்களா”

“ஆமாடா!”

“அக்கா எப்போ வர்றதா சொன்னால் அப்பா.”

“நம்ம எல்லாரையும் பார்க்க அவ புருஷனோடு வர்றதா சொல்லிருக்காள்”.

“அக்காவுக்கு குழந்தை இருக்காப்பா”…

“எல்லாத்தையும் நான் நேர்ல வரும்போது பாருங்கன்னு சொல்லிட்டாள். ஆனால் எப்போ வர்றேன்னு சொல்லலை” என்றவருக்கு நெஞ்சு வலி அதிகமானது.

“ஆத்தா…!”

“என்னப்பா..?”

“நீ மனசார உன் அக்காவை ஏற்றுக்குவல்ல…”

“நான் ஏன்ப்பா அவளை வேண்டாம்னு சொல்ல போறேன். நம்ம வீட்ல ஒரு சந்திரா போதும்ப்பா” என்றவளை அணைத்தவர் “தன் மகளிடம் எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை”

“என்னப்பா..?”

“உன் முகத்துல சிரிப்பை பார்க்கனும் தங்கம்”.

“ப்பா.”

“நீ வாய்விட்டு சிரிச்சி, பல வருஷம் ஆகுது. எனக்காக சிரிக்கிரியா”

“ப்பா… ஏன்ப்பா இப்படியெல்லாம் கேக்குற, எனக்கு பயமா இருக்கு” என செம்பா அழ…

“ஏங்க இப்படி கஷ்டபடுத்துறிங்க உங்களுக்கு ஏதாவது செய்யிதா? வாங்க ஹாஸ்பிடல் போலாம்” என சந்திரா சொல்ல… செம்பா உடனே தன் போனை எடுத்து சமருக்கு அழைப்பை விடுத்து உடனடியாக வீட்டிற்கு வர சொல்ல, அவளின் பதட்டம் ஏதோ தவறாக நடக்க போகிறது என்பதை உணர்ந்தவன் பாலாவையும் அழைத்துகொண்டு கிளம்பினான்.

அதற்குள் கோகி, ராசாத்தி வந்துவிட்டனர்.

“ஆத்தா சிரியேன். அப்பா கடைசியாக உன் சிரிச்ச முகத்தை பார்க்கனும்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் உனக்கு நல்ல அப்பனா இல்லை. ஆனால் இனிமே உன் கூடவே இருப்பேன்‌. ஒவ்வொரு நிமிஷமும் உன்னை சுத்தி வருவேன் சிரி ஆத்தா” என்றார் அவரும் சிரித்தபடியே.

சந்திரா கண்ணிர் விட “ஏன் சந்திரா அழற.. என்னால் நீ இழந்தது ரொம்ப அதிகம். எனக்கு என்னைக்குமே ராணி. உன் உண்மையான நேசத்துக்கு முன்னாடி என் காதல் எல்லாம் கால் தூசுக்கு சமம்தான். நான் உன்னைவிட்டு போனாலும் நீ இப்படியேதான் இருக்கனும். எனக்காக இனிமே நீ எதையும் இழக்க கூடாது” சந்திரா சத்தமாக அழ ஆரம்பித்தார்.

“அண்ணே ஏன்னே இப்படி பேசுற. நீயில்லாமல் நாங்க என்ன பண்ணுவோம். வாண்ணே ஹாஸ்பிடல் போலாம். சிவம் வரமாட்டேன் என அடம்பிடிக்க “செம்பா அண்ணணை தூக்கும்மா நம்ம ஹாஸ்பிடல் போகலாம்” என்றார் ராசாத்தி. கோகி, செம்பா இருவரும் தூக்க போகவும் சமர், பாலா இருவரும் உள்ளே வந்தனர்.

சமர் சிவத்தை சோதித்து பார்த்தவன் உடனே அட்மீட் பண்ணணும். ஆபத்தான கட்டத்துல இருக்காங்க. “பாலா காரை ஸ்டார்ட் பண்ணு” என சிவத்தை தூக்க போக அந்த நிமிடமே தன் மகளை மனைவியை பார்த்தபடியே உயிரை விட்டார் சிவம். நான்கு பெண்களும் கதறி அழ அதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. செம்பா “அப்பா நான் சிரிக்கிறேன் பாரு, அப்பா பாருப்பா சிரிக்கிறேன்” என அழ,… சந்திரா சிவத்தின் கையை பிடித்து அவரின் முகத்தை பார்த்தபடி ஏங்கி ஏங்கி அழுதவர், நெஞ்சை பிடித்தபடி அப்படியே சிவத்தின் மீது சாய்ந்தார்‌.

செம்பா அம்மா, அம்மா என எழுப்ப அவரிடம்‌ எந்த அசைவும் இல்லை. தன் கணவனின் கையை கோர்த்தபடி அவருடனே தன் பயணத்தை தொடங்கிவிட்டார் சந்திரா.

செம்பாவிற்கு என்ன நடந்தது என புரியவே சில நிமிடங்கள் எடுத்தது. ஒரே நேரத்தில் தாயையும் தந்தையையும் பறிகொடுத்துவிட்டு அவள் முகத்தில் தெரிந்த கலக்கம் சமரின் மனதை பிசைந்தது. அவள் அருகில் சென்று ஆறுதல் சொல்லகூட முடியாமல் தள்ளி நின்றவனின் மனம் வெதும்பியது. பாலாதான் செம்பாவை சமாதானம் படுத்தினான். கோகி ஒருபுறம் ராசாத்தி ஒருபுறமென அழுதபடியே இருந்தனர். யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்லமுடியாத நிலை. ராசாத்திக்கே தன் அண்ணனைவிட சந்திராதான் எல்லாம். கணவனின் தங்கையாக நினைக்காமல் உடன்பிறந்த சகோதரியாக நினைத்து வாழ்ந்தவர். இன்று இருவரும் ஒரே நேரத்தில் தங்களை விட்டு சென்றதை நம்பமுடியாமல் கலங்கி போய் இருந்தனர்.

விஷயம் கேள்விபட்டு குகன், பாலாவின் நண்பர்கள் ஊரில் சிலர் வந்துவிட்டனர். ஊரில் உள்ளவர்கள் சடலங்களை எடுப்பதற்கான வேலையில் இறங்கினர்.

செம்பாவின் மனதை இருளாக்கி சூரியன் மெல்ல உதயமானான். வீடு முழுவதும் அழுகை சத்தமாய் இருக்க… வாசலில் வந்து நின்றனர் நாராயணன், சோலையம்மாள் இருவரும். காலையில்தான் விஷயத்தை பாலா அவர்களிடம் கூறினான். தெரிந்ததும் வீட்டில் இருந்து கிளம்பினர். கற்பகம் வரவில்லை.

சோலையம்மாள் நடக்க முடியாமல் வந்தவர். தன் மகளின் சடலத்தை கண்டு மயங்கி விழுந்தார். அவர் முகத்தில் தண்ணிர் தெளித்து எழுப்பி வைக்க, “ஐயோ என் தங்கமே ஒரே பொண்ணுணு தரையில் நடக்கவிடாமல் செல்லம் கொடுத்து வளத்தேனே. இப்படி என்னை விட்டு இடையில் போறதுக்கா. என் தங்கமே, பெத்த வயிறு பத்தி எறியிதே, நான் இருக்கேனே நீ என்னை விட்டு போய்ட்டியே, என் ராசாத்தி என்கிட்ட பேசலைன்னாலும் என் கண்ணுமுன்னே இருக்கியேன்னு நினைச்சேனே, இப்படியே என் வாயில் மண்ணை அள்ளி போட்டு நீ போய்ட்டியே’ என ஒப்பு வைத்து அழ நாராயணன் அங்கேதான் நின்றிருந்தார். அவர் மனதிலும் அதுதான் ஓடியது. வெளியே எங்கே பார்த்தாலும் கற்பகம் இல்லையென்றால் அவளை பார்த்து சிரித்து “நல்லாயிருக்கியா” என கேட்பார் நாராயணண். அதற்கு சிரித்தபடியே பதில் சொல்லிவிட்டு செல்வார், ஒருநாளும் சிரிப்பு இல்லாமல் பார்த்தது இல்லை. இன்று தன் தங்கை இல்லை என்பதை அவரால் தாங்கமுடியவில்லை. ஆண்பிள்ளை என்பதால் அழ முடியாமல் நின்றார் நாராயணண்.

அழுது அழுது ஓய்ந்து ராசாத்தியின் மடியில் படுத்திருந்தாள் செம்பா. சிவத்தின் உறவினர்கள் தான் எல்லா வேலையும் பார்த்தனர்.

மாலையும் கையுமாக ஊர் ஆட்கள், உறவினர்கள் வந்து கொண்டிருக்க, அப்போது ஒரு கார் வந்தது. அங்கிருந்தவர்கள் அந்த காரை பார்க்க, அதிலிருந்து இறங்கினாள் ரஞ்சி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

1 thought on “இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 24”

  1. செம்பா ரஞ்சியை மண்ணித்தாளும் நான் அவளை மன்னிக்க மாட்டேன்😡😡😡

    இப்படி ஒரே நாளில் சிவம் – சந்திரா மரணத்தை எதிர் பார்க்கவில்லை 😭😭😭😭😭….

    சிவத்திற்கு நெஞ்சு வலி வற காரணம் கற்பகம்😡😡😡😡

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!